ஒரு மாத இதழில் படித்த இந்த செய்தி என்னை மிகவும் பாதித்தது. அனைவரும் இந்த செய்தி தரும் எச்சரிக்கைகளால் விழிப்புணர்வு பெற வேன்டுமென்றே இங்கே இதை எழுதுகிறேன்.
அதிர்ச்சியடைய வைத்த முத்து:
அமெரிக்காவில் கடந்த ஜுன் மாதம் 29 வயது இளைஞன் தன் படுக்கையறையில் ஏராளமான தீக்காயங்களுடன் இறந்து கிடந்திருக்கிறான். போலீஸ் ஒரு தடயமும் இல்லாமல் மூளையைப்போட்டு கசக்கிக் கொண்டு காரணம் தேடியிருக்கிறது. கடைசியில் இந்த மரணத்துக்கு அவன் உபயோகித்த லாப்டாப்பே காரணம் என்று கண்டு பிடித்தனர்
.
அந்த இளைஞன் தனது மெத்தையில் நீண்ட நேரம் லாப்டாப்பை வைத்து உபயோகித்திருக்கிறான். லாப்டாப்பின் அடியில் இருக்கும் cooling fanஆல் லாப்டாப்பிலிருந்து வெளியே வரும் அதிக பட்ச வெப்பத்தை வெளியே தள்ளி லாப்டாப்பை கூலாக வைத்திருக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் தாங்க முடியாத உஷ்ணத்தால் லாப்டாப் தீப்பிடித்து மெத்தை என்பதால் சுலபமாகப் பரவி அந்த இளைஞனின் உயிரைப்பறித்து விட்டது.
தமிழ்நாட்டின் கணினி நிறுவனர் சொல்வது:
லாப்டாப்பில் ஐஸ் கூல் டெக்னாலஜி என்ற ஒன்று இருக்கிறது. அதாவது லாப்டாப்பின் CPU-உடன் இந்த கூலிங் ஃபான் இணைக்கப்பட்டு இருக்கிறது. லாப்டாப் இயங்க ஆரம்பிக்கும்போது இந்த ஃபான் சுற்ற ஆரம்பிக்கும். இது லாப்டாப்பின் வெப்பத்தை வெளியே அனுப்பி வெளியே இருக்கும் குறைந்த காற்றை லாப்டாப்பிற்குள் அனுப்புகிறது. ஆனால் மெத்தை மாதிரி இடங்களில் லாப்டாப்பை பயன்படுத்தும்போது மெத்தைக்கும் லாப்டாப்பிற்கும் இடையே காற்றை வெளியேற்ற இடம் இருக்காது. அதனால் வெப்பம் அதிகம் ஏறி லாப்டாப் வெடிக்கிறது.
ஒரு போதும் மெத்தை, தலையணைகளுக்கிடையில் லாப்டாப்பை வைத்து உபயோகிக்காதீர்கள். குழந்தைகள் லாப்டாப்பை பயன்படுத்தும்போது இரண்டு மடங்கு ஜாக்கிரதையாக இருக்க வெண்டும். குழந்தைகள் இதில் விளையாட்டுக்களை விளையாடும்போது லாப்டாப்பின் பயன்பாடு 100 சதவிகிதம் ஆகி எளிதில் சூடாகி விடும். எனவே லாப்டாப்பில் விளையாட உங்கள் குழந்தைகளை அனுமதிப்பது நல்லதேயில்லை.
எச்சரிக்கைகள்:
லாப்டாப்பை தொடையில் அதிக நேரம் வைத்து உபயோகிப்பதும் நல்லதல்ல. ஜீன்ஸ், பெர்முடாஸ் போன்ற உடைகள் வெப்பத்தை அதிகபப்டுத்தக்கூடியவை.
லாப்டாப் பயன்படுத்தும் அனைவருமே கூலிங் பாட் என்ற சாதனத்தை வாங்கி பொருத்திக்கொள்வது நல்லது. இது லபடாப் அதிகம் சூடாவதை தவிர்க்க உதவும். லாப்டாப்பை மரத்தினால் ஆன பலகையில் வைத்து உபயோகிப்பது ரொம்பவே நல்லது.
சிரிக்க வைத்த முத்து:
மருமகள் தன் ஊருக்குப்போயிருந்த போது, என் மருமகளின் அப்பா பக்கத்தில் யாரோ இறந்து விட்டதை தன் மகளிடம் வந்து சொல்ல, அதைப்பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, என் மூன்று வயது பேரன் ஆர்வம் தாங்காமல் என்ன செய்தி என்று நச்சரிக்க, என் மருமகள் சட்டென்று எதுவும் சொல்லத்தெரியாமல் ‘ அவர் மேலே போய்ட்டாராம்’ என்று சொல்ல, என் பேரன், ' மேலேன்னா, அவர் ஃப்ளைட் ஏறி மேலே துபாய் போயிட்டாரா?' என்று கேட்க அந்த துக்க செய்தி கொடுத்த பாதிப்பையே இவர் பேச்சு மறக்கடித்து எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்து விட்டது!
தகவல் முத்து:
X48C:
எதிர்காலத்தில் எல்லா வகையிலும் பயன்படுத்தக்கூடிய பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. போயிங் விமானத்துடன் இணைந்து X48C என்ற மாடல் முக்கோண விமானத்தை தயாரித்துள்ளது. பின்னர் இதனை விரிவுபடுத்தி பல விமானங்களை தயாரிக்க உள்ளது. சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
உளவு விமானத்தைப்போல இந்த விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கைகள் இருக்காது. மாறாக அதிக இருக்கைகள், மற்றும் அதிக எரிதிறன் கொண்டதாக இருக்கும். அதிக சரக்குகளையும் இதில் ஏற்றிக்கொண்டு செல்ல முடியும். முக்கோண வடிவம் என்பதால் எளிதில் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லக்கூடிய திறமை வாய்ந்தது.
அடுத்த 15 ஆண்டுகளில் மிகச் சிறந்த பயணிகள் விமானமாக இருக்கும் என்பதுடன் ராணுவப்பயன்பாட்டுக்கும் மிக அதிக அளவில் பயன்படுமென்றும் நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.