Monday, 31 December 2012

புதியதோர் உலகம் செய்வோம்!!



சென்ற முறை நான் ஊருக்குப்போயிருந்த போது உறவுக்காரக்குழந்தை
[ எட்டு வயது ]தன் அப்பா, அம்மாவுடன் வீட்டுக்கு வந்திருந்தது. பேச்சு வாக்கில் ' உன் ஊர் எது?' என்று கேட்டேன். சற்று நேரம் யோசித்து விட்டு தன் அம்மாவின் ஊரான மயிலாடுதுறையைச் சொன்னது. பக்கத்திலிருந்தவர்கள் ' உன் ஊர் உன் அப்பாவின் ஊர் தான். அம்மாவின் ஊர் இல்லை' என்று சொன்னார்கள். குழந்தை உடனேயே பட்டென்று ' அம்மாவின் வயிற்றில்தான் நான் பிறப்பதற்கு முன்னால் இருந்தேன். அதனால் அம்மாவின் ஊர்தான் என் ஊர். நான் என்ன அப்பாவின் வயிற்றிலா இருந்தேன்?' என்று கேட்டது!

மனசு என்னவோ வேதனையில் வலித்தது. அவர்கள் சிரிப்பில் என்னால் மனப்பூர்வமாய் கலந்து கொள்ள முடியவில்லை. குழந்தைகள் இப்போதெல்லாம் குழந்தைகளாய் வளர்க்கப்படுவதில்லை.
அவர்களின் அளவுக்கு மீறிய பேச்சு, வயதுக்கு மீறிய செயல்கள் எல்லாம் பெற்றோரால் ரசிக்கப்படுகின்றன. ஊக்குவிக்கப்படுகின்றன. அதனால் குழந்தைகள் மனதிலிருந்த வெகுளித்தனம் காணாமல் போய் அங்கே முதிர்ச்சி வந்து விடுகிறது.



அந்தக் காலத்தில் குழந்தைப்பேறு பற்றியோ, திருமண உறவு பற்றியோ, தாய்மையடைவதைப்பற்றியோ எதுவுமே தெரியாமல் திருமண வயது வரை பெண்கள் வளர்க்கப்பட்டார்கள். மனதில் வெகுளித்தனம் நிறைய இருந்தது. ஒப்பனை இல்லாமலேயே பெண்கள் அழகாயிருந்தார்கள். குடும்பத்திற்கு எது முக்கியமோ அது மட்டுமே அவர்களுக்கு போதிக்கப்பட்டது. அந்த போதனைகள் பின்னால் புகுந்த வீட்டு நலனும் உறவுகளும் ஆலமரமாக செழிக்க உதவி செய்தது.

எங்கள் குடும்ப நண்பர் வீட்டில் 15 வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் அவர்களின் பெண் குழந்தைகள் அம்மாவுக்கு இணையாக தலை குளித்து அடுப்படியில் எங்களுக்காக இடியாப்பம் பிழிவார்கள். தேங்காய் துருவி சட்னி செய்வார்கள். அந்த மாதிரி காட்சிகளை இப்போது  எங்குமே பார்க்க முடிவதில்லை!

அன்றைக்கு எங்கள் வீட்டில் என் கணவரின் நண்பர் பெண் சாப்பிட வந்திருந்தார்கள் தன் கணவருடனும் சகோதரி குடும்பத்துடனும். பேச்சு வாக்கில் இன்றைய குழந்தைகள் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு கணினியும் மொபைலில் விளையாட்டுமாய் அடுத்த தலைமுறையினரின் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குத் தயாராகி வருவதைப்பற்றி பேச்சு எழுந்தது. அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் சொன்னார், ' நீங்கள் ஏன் அடுத்த தலைமுறை வரை போகிறீர்கள் ஆன்டி? இதோ என் பெண்டாட்டிக்கு ஏதாவது சின்ன வயது சந்தோஷங்கள் இருந்ததா என்று கேளுங்கள். சென்னையில் வளர்ந்த பெண்! கொடுக்காப்புள்ளிகூட தெரியாது. நாவல் பழம் தெரியாது. சாப்பிட்டதில்லை! நாங்கள் எல்லாம் சண்டை போட்டுக்கொண்டு பறிப்போம். தெருதெருவாய் தேடிப்பிடித்து சாப்பிடுவோம்!' என்றார்.



ஆதங்கங்கள் இன்றைய வாழ்க்கை முறையைப்பற்றி நிறைய இருக்கின்றன. எப்படி சுற்றுப்புற சூழ்நிலைகளும் சுகாதாரக்குறைவுகளும் புற வாழ்க்கையைப்பாதிக்கிறதோ, அதே போல தற்கால வாழ்க்கை முறையில் நிறைய விஷயங்கள் நம்மை, முக்கியமாக நம் எதிர்கால வாரிசுகளின் அக வாழ்க்கையைப் பாதிக்கின்றன.

இந்த இயந்திரத்தன்மை விடுத்து, நல்ல விஷயங்களையும் நல்ல பழக்க வழக்கங்களையும் ரசித்து அவர்கள் வாழ வேண்டும்! நம் எதிர்கால மன்னர்கள் அன்பும் கருணையும் கொண்ட அறிவுப்பூர்வமான புதியதோர் உலகம் சமைக்க வேண்டும்!

ஆரோக்கியமான,
அல்லல்களற்ற,
அனைத்து இனிமைகளும் அடங்கிய புதியதோர் உலகம் நாளை பிறக்கவிருக்கும் புத்தாண்டில்
அனைவருக்கும் கிடைக்க,


அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


 

 

 

 

Monday, 24 December 2012

முத்துக்குவியல்கள்!!

அசத்திய முத்து!

 

ஜப்பான் நாட்டின் நிஸான் நிறுவனம் தற்போது சுற்றுப்புறச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனத் தயாரிப்பில் அக்கறை செலுத்தி வருகிறது. சிறிதும் புகையைக் கக்காத மின்சார எஞ்சின்களை கார்களில் பொருத்தி வருகிறது. அந்த வரிசையில் எட்டாவது மின்சார எஞ்சின் காரை தயாரித்துள்ளது. இதற்கு பிவோ-3 என்று பெயர். டோக்கியோவில் வாகனக் கண்காட்சியில் இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நம்மிடம் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன் மூலம் இந்தக் காரை இயக்க முடியும். உலகின் பல முன்னணி நகரங்களில் தானியங்கி பார்க்கிங் வசதிகள் உள்ளன. இந்த வளாகத்திற்குள் வந்த பின் நாம் காரை விட்டிறங்கிச் சென்று விடலாம். இந்த கார் தன்னிடம் உள்ள G.P.S வசதியைப் பயன்படுத்தி காலியாக உள்ல இடத்தில் தானே சென்று நின்று விடும். பிறகு எந்த இடத்தில் நிற்கிறது என்பதை மெஸேஜ் மூலம் நமக்கும் தெரிவித்து விடும். நாம் வேலையை முடித்து திரும்பும்போது நாம் இருக்கும் இடம் தேடி இந்தக் கார் வந்து விடும்!!!

நாவூறச் செய்த முத்து!!


புத்தகத்தில் படித்த செய்தி இது.

நாஞ்சில் நாட்டில் எல்லோரது வீட்டிலும் அடுப்புக்கு நேர் மேலே கருப்பட்டியறை’ என்ற ஒரு அறை இருக்கும். அதற்குள் கருப்பட்டியை வைத்து மூடி விடுவார்கள். அன்றாடம் அடுப்பின் கதகதப்பில் கருப்பட்டி நன்கு உலர்ந்து மேல் பகுதி கருத்துப்போயிருக்கும். நான்கைந்து மாதங்கள் கழித்து உடைத்துப்பார்த்தால் உள்ளே மஞ்சள் நிறத்தில் இருக்கும். சாப்பிட்டால் சுவை நரம்புகளை சுண்டி இழுக்கும்.
யாரேனும் நாஞ்சில் நாட்டு நண்பர்கள் இது பற்றி மேலும் விபரங்கள் தெரிவித்தால் நன்கிருக்கும்!

ரசித்த முத்து:

மழை நீர் உயிர் நீர்
அணை நீர் பயிர் நீர்
இலை நீர் தேனீர்
பதநீர் நலநீர்
குலை நீர் இளநீர்
மது நீர் கண்ணீர்!!!


உபயோகமான முத்து!

ஏழிலைக்கிழங்கு:



மரவள்ளிக்கிழங்கு,  ஆல் வள்ளிக்கிழங்கு, கப்பக்கிழங்கு என்றழைக்கப்படுவதுடன் ஏழிலைக்கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது.
100 கிராம் கிழங்கில் 160 கலோரி  ஆற்றல் கிடைக்கிறது. விட்டமின் கே நிறைந்ததுள்ளது இதில் சுக்ரோஸ் என்னும் சர்கரைச் சத்து அதிகமாகவும் அமைலேஸ் என்னும் சர்க்கரைச் சத்து கணிசமாகவும் உள்ளன. கொழுப்புச்சத்து குறைவாகவும் புரதச் சத்து அதிகமாகவும் நிறைந்துள்ளது. குளூடன் இல்லாத புரதச்சத்து உள்ளதால் குளூடன் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை மருந்துப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். அத்துடன் அல்சீமர் என்னும் ஞாபகமறதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது. 100 கிராம் கிழங்கில் 271 மில்லி கிராம் பொட்டாசியமும் நிறைந்திருக்கிறது. இது இதயத்துடிப்பு சீராவதற்கும் ரத்த அழுத்தம் சரியாக இருக்கவும் உதவுகிறது.


 

Sunday, 16 December 2012

ஒரு நாள் நீங்களும் மூப்படைவீர்கள்!!

ஒரு பதிவு எனக்கு ஈமெயிலில் வந்தது. ஆங்கிலத்தில் வந்ததை தமிழில் ஓரளவு அழகாக சொல்ல முயன்றிருக்கிறேன். இது ஒரு மருத்துவர் தன் பார்வையில் சொல்வதாக அமைந்திருக்கிறது. படித்து முடிந்ததும் உணர்வுகள் நெகிழ்ந்து மனம் கனமானது! அந்த மருத்துவர் சொல்வது போலவே எழுதியிருக்கிறேன். படிக்கும் நீங்களும் நிச்சயம் நெகிழ்ந்து தான் போவீர்கள்!

மூப்பு என்பது சாதாரண விஷயமல்ல! அது வரை மின்வேகத்துடன் நம் கட்டளைக்குப் பணிந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புகள் மெல்ல மெல்லத் தளர்வடைய ஆரம்பிக்கும். அது வரை அனுபவித்திராத வியாதிகள் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து வந்து தாக்கும். அந்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் உடலோடு சேர்ந்து மனமும் தளர ஆரம்பிக்கும். உற்சாகம் இழக்கும். அந்த இரண்டு தாக்குதல்களும் ஒன்றுமேயில்லை என்று நினைக்கும்படி செய்ய ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டுமே சக்தி உண்டு.

பாரதி ‘ துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடி!’ என்று அன்றே எழுதியிருப்பது போல அன்பை விட சிறந்த மருத்துவம் வேறெதுவுமில்லை.

பெண் குழந்தையானாலும் ஆண் குழந்தையானாலும் அவரவர் உலகத்தில் வாழ வேண்டியவர்கள். அவர்கள் சிறகுகள் முளைத்து உயரே உயரே பறக்கப் பறக்க, அவர்களின் அன்பு கிளைகள் விட்டு பரந்து விரிகிறது. கடைசி வரை இந்த அன்பை நெஞ்சில் சுமந்து கருணையும் அக்கறையுமாய் கணவனும் மனைவியும் ஒருத்தருக்கொருத்தர் அமைந்து விட்டால் அதை விட வேறு சொர்க்கம் தேவையில்லை.



அப்படி அமைந்த ஒரு கணவனின் உணர்வுகள் இவை!!!

இனி மருத்துவர் பேசுகிறார்.. ..

“ அன்று காலை எனக்கு சிறிதும் ஓய்வில்லை. சுமார் எட்டரை மணி அளவில் அந்த வயோதிகர் வந்தார். 80 வயதான அந்தப் பெரியவர் தன் கட்டை விரலில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு ட்ரெஸ்ஸிங் செய்ய வந்திருந்தார். அவர் முகத்தில் பரபரப்பும் அவசரமும் தெரிந்தன. 9 மணி அளவில் தனக்கு ஒரு முக்கியமான காரியம் உள்ளதாகவும் சீக்கிரம் தன்னை கவனித்து அனுப்பி விட முடியுமா என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

நானே அவரை கவனித்து, காயத்திற்கு மருந்து போட்டு முடிக்கையில் ‘ எதனால் இந்த பரபரப்பு, வேறு யாராவது மருத்துவரிடம் செல்ல வேண்டுமா ’ என்று கேட்டேன். அவர் அதை மறுத்து விட்டு, தான் ஒரு மருத்துவமனைக்குச் சென்று தன் மனைவியுடன் அங்கே சாப்பிட வேண்டும் என்றும் தான் இன்னும் காலையுணவு அருந்தவில்லையென்றும் தெரிவித்தார்.



அவர் மனைவிக்கு என்ன ஆனது என்று கேட்டதும் தன் ம‌னைவிக்கு ‘அல்ஜீமர் [ALZHEIMER’S] நோய் பாதித்திருப்பதாகச் சொன்னார். கடந்த கால நினைவுகள், உறவுகள் எல்லாம் மெல்ல மெல்ல மறந்து போகும் கொடிய நோய் அது! மேலும் பேசிய போது ‘ சிறிது நேரம் தாமதமானால் அவர்கள் மனது பாதிப்படையுமா ’ என்று நான் கேட்டதற்கு, அவர் ‘ தன் மனைவிக்கு இப்போது தன்னை யாரென்றே தெரியாது என்றும் கடந்த 5 வருடங்களாக தன்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை’ என்றும் சொன்னார். நான் அப்படியே அதிர்ந்து போனேன். ‘ உங்களை இப்படி அவர்கள் மறந்திருந்தும் நீங்கள் தினமும் காலை எப்படி இது போலச் செல்கிறீர்கள்?’ என்றேன். அவர் சிரித்தவாறே என் தோளைத் தட்டிக் கொடுத்தார். ‘அவளுக்குத்தான் என்னை யாரென்று தெரியாதே தவிர, எனக்கு அவளை யாரென்று தெரியுமல்லவா?’ என்று கேட்டு மறுபடியும் புன்னகை செய்தார்!!



திரண்டு வந்த கண்ணீர்த்துளிகளை நான் மிகுந்த சிரமப்பட்டுத்தான் அடக்கினேன்.

அன்பு என்பது உடல் சார்ந்ததோ, காதல் சார்ந்ததோ இல்லை. எது எப்படி இருக்கிறதோ, அல்லது எது இனிமேல் எப்படி இருக்குமோ, அல்லது எது எப்படி இருந்ததோ அத்தனையையும் அன்பிற்குரியவர்களுடன் அப்படியே ஏற்றுக்கொள்வது தான் உண்மையான அன்பின் அடையாளம்!

மிக மிக மகிழ்வாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, எல்லாமே சிறந்ததாக அமைந்திருக்கும் என்று அர்த்தமில்லை. அவர்களுக்கு எது கிடைக்கிறதோ, அதை மிக சிறப்பானதாக செய்து கொள்கிறார்கள் என்பது தான் உண்மையான அர்த்தம்! வாழ்க்கை என்பது  எப்படி புயலை சமாளிக்க வேண்டும் என்பதல்ல. எப்படி அடர்ந்த மழையிலும் மகிழ்வுடன் நடனமிட முயல வேண்டும் என்பது தான்!


 

Monday, 10 December 2012

சோள இட்லி

இன்றைய சமையல் முத்தாக நான் தேர்ந்தெடுத்திருப்பது சோள இட்லி. பொதுவாய் புழுங்கலரிசியை ஊறவைத்து நம் பக்கத்தில் இட்லி சுடுவது வழக்கம். இதைத்தவிர சேமியா இட்லி, ரவா இட்லி, ஜவ்வரிசி இட்லி வகைகள் நடைமுறைப்பழக்கத்தில் இருந்து வருகின்றன. சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு கேழ்வரகு இட்லி, கோதுமை இட்லி, கோதுமை ரவா இட்லி செய்து தருவது வழக்கமாயிருக்கிறது. அந்த வரிசையில் வருவது தான் சோள இட்லி.


இந்த மக்கா சோள முத்துக்கள் படத்திலுள்ளது போல காட்சியளிக்கும். சோயா பீன் தானியத்தை விட சிறியதாக இருக்கும். கம்பு, கேழ்வரகு போல நார்ச்சத்து மிகுந்தது. கோதுமையில் சப்பாத்தி செய்யும்போது இதையும் க‌லந்து செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயுள்ள‌வர்களுக்கு மிக நல்லதொரு உணவு இது! ஆங்கிலத்தில் JOWAR என்றும் ஹிந்தியில் SORGHUM என்றும் அழைக்கப்படுகிறது!

காய்ந்த சோள முத்துக்களையும் புழுங்கலரிசியையும் ஊற வைத்து அரைத்துச் செய்வது தான் இந்த சோள இட்லி. முறையாகச் செய்தால் நம் வழக்கமான இட்லியைக்காட்டிலும் மிருதுவாக இருக்கும். இதற்குப் பக்கத்துணை சாம்பாரை விட, தேங்காய் சட்னியையும் விட, தக்காளிச் சட்னி, வெங்காய்ச்சட்னி, காரச்சட்னி வகைகள் தாம் பொருத்தமாக இருக்கும்!!



சோள இட்லி

செய்யத் தேவையான பொருள்கள்:

காய்ந்த மக்காச்சோள முத்துக்கள்- 1 கப்
புழுங்கல் அரிசி- 1 கப்
முழு உளுந்து- 1 கப்
வெந்தயம்- 1 ஸ்பூன்
தேவையான‌ உப்பு

செய்முறை:

உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து போதுமான நீரில் ஊற விடவும். பொதுவாய் உளுந்து 1 மணி நேரம் ஊறினால் போதுமானது.
அரிசியையும் சோளத்தையும் தனித்தனியாக போதுமான நீரில் ஊற வைக்கவும்.
இரண்டுமே 6 மணி நேரம் ஊற வேண்டும்.
இட்லிக்கு அரைப்பது போல முதலில் உளுந்தை பூக்க பூக்க அரைத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு அரிசி, சோளம் இரண்டையும் நன்கு அரைக்கவும்.
பின் இரண்டையும் உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
காலியில் சுடச்சுட இட்லிகளை வேக வைத்து எடுக்கவும்.
மிருதுவான, ருசியான சோள இட்லி தயார்!!

Monday, 3 December 2012

காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்!!

என் சகோதரர் அனுப்பிய சில அரிதான புகைப்படங்களைப் பார்த்தபோது இங்கே அனைவருடனும் பகிர்ந்து கொள்ள‌ வேண்டுமென்று தோன்றியது. குறைந்த அளவு வசதிகளும் நுணுக்கங்களும் இருந்த அந்தக் காலத்திலேயே கருப்பு வெள்ளையில் இந்த புகைப்படங்களை எல்லாம் எத்தனை அழகுடனும் திறமையுடனும் எடுத்திருக்கிறார்கள்! நம் நாட்டின் சரித்திரங்களையும் உலக செய்திகளையும் அழகாகச் சொல்லும் இந்தப்புகைப்படங்கள் பிரமிப்பை உண்டாக்கி விட்டன என்று தான் சொல்ல வேன்டும்!!


இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி!
டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது
1932 ஆண்டில் மகாத்மா காந்தியும் நேதாஜியும்!
பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லை ஆப்கானிஸ்தான் பார்டர் அருகே!
கல்கத்தாவில் ஹெளரா பாலத்தருகே கல்கத்தா பஸ் ஸ்டேஷன்!
 
1983ல் கிரிக்கெட்டில் உலகக்கோப்பை வென்ற பின் இந்திய அணியை இந்திரா காந்தி பாராட்டியபோது!
1947 ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த போது டாக்காவிலிருந்து கல்கத்தா சென்ற‌ கடைசி ரயில்!
ஹிந்தித் திரையுலகின் அன்றைய சூப்பர் ஸ்டார்கள் திலீப் குமார், ராஜ் கபூர், தேவ் ஆனந்த்!!
1942ல் உலகப்போர் சமயத்தில் தாஜ்மஹால் மூங்கில், வைக்கோல் புதர்களால் மூடப்பட்டு குண்டுகள் விழாதவாறு இப்படித்தான் பாதுகாக்கப்பட்டது! இந்தப்புகைப்படத்தில் DOME மட்டும் மூடப்பட்டிருக்கிறது. முழுவதும் மூடப்பட்ட தாஜ்மஹாலை படம் எடுக்க அரசு அன்று புகைப்பட நிபுணர்களை அனுமதிக்கவில்லை! அதன் பின்னர், 1971ல் இந்தியா பாகிஸ்தான் போர் சமயத்தில் ஒரு பச்சைத்துணியால் தாஜ்மஹால் போர்த்தப்பட்டது.