Sunday, 25 September 2011

எது நியாயமான தீர்ப்பு?

“என்ன நடேசா, ஊருக்குக் கிளம்புகிறாயே, உன் அப்பாவுக்கு என்ன வாங்கப் போகிறாய்?”

ஆட்கள் வேலை செய்வதை கவனித்து நடந்து கொண்டிருந்த
நான் சட்டென்று நின்றேன். தொழிலாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பக்கத்து அறையிலிருந்து தான் அந்த கேள்வி வந்தது. நடேசன் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் என்னையும் பற்றிக்கொண்டது.

“ அவருக்கா? இரண்டு விஸ்கி பாட்டில்கள் தான் வாங்கிப்போக வேண்டும்.”

என் மனதில் தீக்கங்குங்கள் விழுந்த மாதிரி தகித்தது.

“ என்னடா இப்படி சொல்கிறாய்? இந்த வேலையே அவர் முதலாளியிடம் சொன்னதால்தானே கிடைத்தது?”

“ அவரால் ஒன்றும் இந்த வேலை கிடைக்கவில்லை. என்னைப் பார்த்து, என் திறமையைப் பார்த்து வேலை கொடுத்தார்கள்”

அதிர்ந்து போன மனது மெல்ல சம நிலைக்கு வந்தது. ஆனாலும் கசப்பு மட்டும் தொண்டையை விட்டு நீங்காமலேயே இருந்தது.. அதற்கப்புறம் சில மணி நேரம் ஆகியும்கூட சரியாகவில்லை.

நடேசன் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். உடம்பில் சதை போட்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன் தன் தந்தையுடன் என்னிடம் வேலைக்காக வந்து, பயந்த முக பாவங்களுடன் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த தோற்றம் நினைவுக்கு வந்தது. அந்த பய பக்தியோ, மருளும் முகமோ இன்றில்லை. சம்பாதிக்கும் காசும், அந்தக் காசில் ஊறிய உடம்பும், அந்த உடம்பினால் வந்த அலட்சியமும் அவனை நிறையவே மாற்றியிருந்ததை உணர முடிந்தது. இவன் என்றில்லை, இந்தப் பாலைவனத்துக்கு வேலை தேடி அலையும் எல்லோருமே சொல்லும் முதல் வார்த்தையே, ‘ எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன். எப்படியாவது துபாய்க்குக் கூட்டிக்கொண்டு போங்கள்’ என்பது தான். காசும் உடம்பும் நன்றாகத் தேறியதும் ‘ உங்களால்தான் நான் இங்கு வந்தேனா? எனக்குத் திறமையிருந்தது, உழைத்து முன்னுக்கு வந்தேன்’ என்ற வசனத்தை இங்கு பரவலாகக் கேட்கலாம். உலகத்தில் வேறெந்த இடத்தையும் விட, இந்தப் பாலைவனத்தில் தான் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள் அதிகம்!

இவனுடைய அப்பா ராமன் என் முன்னாள் மாணவராக இருந்தார். கிராமத்தலைவரின் மகன் அவர். நல்லொழுக்கங்களும் பணிவுமாய் இருந்தவர் அவர். காலச் சுழற்சியில் அவரைப் பல வருடங்களாக நான் பார்க்க முடியாமல் போயிருந்தது. பார்க்காமலிருந்தாலும் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட செய்திகள் எதுவுமே நன்றாக இல்லை.
குடிபோதையில் நிலை தடுமாறிக்கொண்டிருந்த அவரைப் பார்க்கவும் பிறகு விருப்பமில்லாமல் போயிற்று!

அப்புறம் சில வருடங்கள் கழித்து, அவரின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி மிகவும் துன்பப்படுவதை அறிந்ததும் மனம் இளகிப் போயிற்று.

அவரை வரச்சொல்லி, அவருடைய மகனுக்கு ஒரு வேலை போட்டுத் தருவதாகச் சொன்னேன். மிகுந்த சந்தோஷத்துடன் தன் மகனைக் கூட்டி வந்து அறிமுகம் செய்தார்.

‘ இவன் உங்களுக்கு உண்மையாக இருப்பான். என்றைக்கு உங்களுக்கு இவனால் வருத்தம் வருகிறதோ, அன்றைக்கு அவனைத் திருப்பி அனுப்பி விடுங்கள் ’ என்றார்.

அவன் இங்கு வந்த நான்கு வருடங்களில் குடும்பம் நிதான நிலைக்கு வந்தது. வயிறார சாப்பிட முடிந்தது.

அப்புறமும்கூட ராமனுக்கு குடிப்பழக்கம் குறையவில்லை என்று அறிந்த போது என்னுள் சீற்றம் அதிகரித்தது. அடுத்த முறை பார்த்த போது சொன்னேன்.

‘ உனக்கு ஐம்பது வயதாகப்போகிறது. திட்டியோ, அறிவுரை சொல்லியோ பிரயோசனம் ஏற்படப்போவதில்லை. உனக்கு என்னுடைய அன்பு நிலைக்க வேண்டுமானால் இந்தப் பழக்கத்தை உடனேயே நிறுத்து. முடியவில்லையென்றால் இனி இங்கே என்னை வந்து பார்ப்பதை நிறுத்தி விடு!’

பேசாமல் தரையையே பார்த்துக்கொண்டிருந்த ராமன், சில நிமிடங்களில் சொன்னார்:

’ இனி குடிக்க மாட்டேன்’!

அதற்கப்புறம் அவருடைய மனைவியும் ஃபோன் செய்து, ‘ இவர் குடிப்பதையும் குடித்து விட்டு வந்து என்னை அடிப்பதையும் நிறுத்தி விட்டார். இந்த நல்ல செய்தியை என் மகனிடமும் சொல்லி விட்டேன். இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் நீங்கள் தான் என் வீட்டில் விளக்கேற்றி வைத்திருக்கிறீர்கள்’ என்று நாத்தழதழுக்க சொன்னபோது மனதில் நிறைவு ஏற்பட்டது.

அப்புறமும்கூட, பண விஷயங்களையோ, சேமிப்பைப்பற்றியோ தன்னிடம் எதுவும் மகன் சொல்வதில்லை என்றும் தன் அம்மாவிடம்தான் எல்லாவற்றையும் சொல்லிப்பகிர்வது வழக்கம் என்றும் ராமன் சொல்லியிருக்கிறார்.

இப்போது எப்படி இந்த விஷயத்தை சொல்வது? கையிலேயே பார்த்துப் பார்த்து வளர்ந்த பிள்ளை, காசைப்பார்த்ததும் மாறியதை எப்படி சொல்வது?
மனசு வலிக்கும் என்றாலும் சொல்லாமல் மறைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

மறுபடியும் ஊருக்குச் சென்ற போது ராமனை வரவழைத்து செய்தியைச் சொன்னேன். வலியினால் முகம் சிறிது சுருங்கிப் போனாலும் அதற்கப்புறம்தான் அவரின் இதயக்கபாடம் மெல்ல மெல்லத் திறந்தது.

திருமணம் ஆனதிலிருந்தே மனைவி எதற்குமே ஒத்துப்போகாமல் இருந்தது, அவளால் சகோதரர்களை, பெற்றோரைப் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றது, ஆத்திரமும் அசிங்கமுமாய் குடும்ப வாழ்க்கை பலர் முன்னிலையில் சந்தி சிரிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பல முறைகள் அடிக்க நேர்ந்தது, அதற்கும் அவள் திருந்தாதைப் பார்த்து, வேதனைகளை மறக்க சில சமயங்களில் குடிபோதையில் இறங்கியது – என்று வேதனையான அவரது வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெல்ல அவிழ்ந்தன.

‘ பிள்ளைகள் இல்லாத போது தான் என்னிடம் சண்டை போடுவதெல்லாம். நான் கோபத்தில் அடிக்க நேரும்போது, பிள்ளைகளை வரவழைத்துக் காண்பிப்பாள். குடித்து விட்டு கிடக்கும்போது, பிள்ளைகளை அழைத்து வந்து காண்பிப்பாள். இப்படிச்செய்தே சிறு வயதிலிருந்தே என்னிடம் அவர்களை ஒட்டாமல் செய்து விட்டாள். எனக்கும் இது இப்போதெல்லாம் பழகி விட்டது. மனைவியின் அன்பு, பிள்ளைகளின் பாசம் இதெல்லாம் இல்லாமலேயே வாழப்பழகி விட்டேன். ..”

மேலும் தலை குனிந்தவாறே பேச ஆரம்பித்தார்.

“ உங்களிடம் இதையெல்லாம் நான் எப்போதோ சொல்லியிருப்பேன். உங்களிடம் சில மணி நேரங்கள் இருக்கும்போது தான் மனம் நிம்மதி என்ற ஒன்றை அனுபவிக்கிறது. அப்போது போய் இந்தக் குப்பைகளை சொல்வதற்கு மனம் வந்ததேயில்லை. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. உண்மையிலேயே நான் நல்லவன் என்றால் இதற்குள் எனக்கு மரணம் வந்து நிம்மதியைத் தந்திருக்க வேண்டும்.. ..”

அந்த வேதனை மிகுந்த கண்களைப் பார்த்தபோது எனக்கும் மனம் வலித்தது.

“ பைத்தியம் போலப் பேசாதே. நாம் விரும்பும் போதெல்லாம் மரணம் வருவதில்லை. நம்மால் ஏதோ ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றிருக்கிறது. அதனால் தான் மரணம் வரவில்லை என்று நினைக்கப் பழகு.. துன்பங்களைத் தாங்க மன வலிமை தான் முக்கியமே தவிர, குடிப்பதோ, மரணிப்பதோ அதற்குத் தீர்வாகாது.”

மெதுவாகப் படியிறங்கிச் செல்லும் ராமனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடேசனின் நினைவு வந்தது. கூடவே ‘நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா’ என்ற புகழ் பெற்ற பாடலும் நினைவுக்கு வந்தது. .பெற்ற தந்தையையே துச்சமாக மதித்து, கேவலமாகப் பேசும் நடேசனை- அந்த நிமிடமே வேலையை விட்டு அனுப்ப மனம் துடித்தது. செய்நன்றி கொன்றதற்கு அது தான் சரியான தண்டனை என்று தோன்றியது. அதே சமயம், ராமனையும் சேர்த்து அந்தக் குடும்பம் இன்று மூன்று வேளையும் ஒழுங்காக சாப்பிடுவதும் நினைவுக்கு வந்தது. எது சரியான தீர்ப்பு என்று எனக்குப் புரியவில்லை!

Monday, 19 September 2011

முத்துக்குவியல்கள்!!

முத்துக்குவியல்களில் இந்த முறை வித்தியாசமான, வியப்பளிக்கும் விசித்திரமான தகவல்கள் இடம் பெறுகின்றன. தகவல்கள் அடங்கிய இடுகையை அளிக்கும் முன் ஒரு நல்ல செய்தி!

இரண்டு இடுகைகளுக்கு முன் ஒரு இந்தியப்பெண், இங்கு விஷப்பூச்சி கடித்து கோமாவில் விழுந்திருப்பதாக தெரிவித்திருந்தேன். அந்தப் பெண் தற்போது கோமாவிலிருந்து எழுந்து விட்டார். முழுவதும் குணமாகி சில நாட்களுக்கு முன் தான் மருத்துவ மனையிலிருந்து வெளியேறியுள்ளார். பிரார்த்தனை செய்து, நலம் விசாரித்த அன்புத் தோழமைகள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி!


முதல் முத்து:


TOWER OF SILENCE
 ஜோரோஸ்ட்ரியன் எனப்படும் பார்சி சமூகத்தினரின் பூர்வீகம் ஈரான். அங்குள்ள இஸ்லாமியர் அளித்த தொல்லைகள் காரணமாக மேற்கிந்தியாவில் 10- ஆம் நூற்றாண்டில் குடியேறியவர்கள். மும்பையில்தான் இவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

மரணமெய்திய ஒரு பார்சி இனத்தவரது இறுதிச் சடங்கு முறை நம்மை நடுங்க வைக்கிறது. அவர்கள் இறந்த உடலை எரிக்கவோ, புதைக்கவோ செய்யாமல், அந்த உடலிலிருந்து தலைமுடி, நகங்களை நீக்கி விட்டு, அந்த உடலை பாலில் குளிப்பாட்டி TOWER OF SILENCE என்ற குன்று போன்ற இடத்தில் வைத்து விடுகிறார்கள். அங்கு தயாராக இருக்கும் கழுகுகள் அந்த உடலை கண நேரத்தில் தின்று விடுமாம். நீர், காற்று, நெருப்பு, பூமி- இவை புனிதமான மூலங்கள் என்பதால் அவை களங்கப்படக்கூடாது என்று இப்படி செய்கிறார்களாம்.

மும்பையில் சி.எஸ்.டி அருகில் உள்ள Tower of Silence கட்டடம் 3 அடுக்குகளாய் பிரிக்கப்பட்டு, முதல் அடுக்கில் ஆண்களையும் இரண்டாம் அடுக்கில் பெண்களையும் மூன்றாவதில் குழந்தைகளையும் வைப்பார்களாம்.

பார்சி இனத்திலிருந்து வேறு மதத்தில் திருமணம் ஆனவர்களுக்கு இங்கு அனுமதி கிடையாது. சமீபத்தில் மரணம் அடைந்த கோத்ரெஜ் உடலும் இப்படித்தான் வைக்கப்பட்டதாம். ரத்தன் டாட்டா கூட பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர்தான்.

இரண்டாம் முத்து:

உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் இருப்பது நெய்வேலியில்தான். 10 அடி உயரமும் எட்டரைஅ டி அகலமும் 2420 கிலோ எடையும் கொண்ட இந்தச் சிலை பஞ்ச லோகத்தால் ஆனது. இக்கோவிலில் பக்தர்களின் மனக்குறையைத் தீர்க்கவென்று மனு நீதிப்பெட்டி ஒன்றும் ஆராய்ச்சி மணியொன்றும் உள்ளது. மனக்குறைகளை அல்லது விருப்பங்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதி மனு நீதிப் பெட்டியில் போட்டு விட்டு, பிறகு ஆராய்ச்சி மணியை அடித்தால் நினைத்த காரியம் நிறைவேறும் அல்லது குறைகள் உடனேயே தீரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மூன்றாம் முத்து:





வாகனப்புகையால் சுற்றுப்புற சூழ்நிலை பாழடைவதைக் கணக்கில் கொண்டு ஜெர்மனி ‘ டிபி ஸ்கூட் ’ என்ற மின்சாரத்தால் இயங்கும் மின் ஸ்கூட்டர் தயாரித்துள்ளது. 1000 வாட் மின்சாரப் பயன்பாடு உள்ள இது 132 செ.மீ அகலமும் 32 செ.மீ அகலமும் 62 செ.மீ உயரமும் கொண்டது. தேவைப்படும்போது கையில் எடுத்துச் செல்லலாம் என்பதுடன் செல்ஃபோன் போல எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் செல்ல வெறும் 7 காசு தான் செலவாகிறதாம்!

நான்காம் முத்து:

ஆந்திர மாவட்டம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பூலரேவு என்னும் கிராமத்தில் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த மீனவர்கள் வசிக்கிறார்களாம். இவர்கள் வழக்கப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பெரிய பந்தல் போட்டு எல்லோரது வீட்டுத் திருமணங்களையும் அங்கே இரவு நேரத்தில் நடத்துவது வழக்கமாம். மணமகனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரித்து, மணமகள் மனமகனுக்கு தாலி கட்டி மூன்று முடிச்சுகள் போட்டு திருமணம் செய்கிறார்!!

சமீபத்தில் படித்த-ரசித்த பழமொழி:

பெண்-

காதலனுக்கு கைப்பாவை.
கணவனுக்கு உடைமை.
குழந்தைக்கு ஒரு விளையாட்டு பொம்மை!

படங்களுக்கு நன்றி: கூகிள்





Monday, 12 September 2011

இல்லத்திற்கு பயனளிக்கும் குறிப்புகள்!

குறிப்பு முத்துக்கள் பக்கம் வந்து ரொம்ப நாட்களாகின்றன. அன்றாடம் புழங்கும் விஷயங்களில் நமக்குத் தெரியாமல் எத்தனையோ நல்லவையும் தீயவையும் கலந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டறியவும் நல்லன அல்லாதவற்றை நீக்கவும் சில உபயோகமான வழிகள் இங்கே!

குறிப்பு முத்து-1

கரப்பான் பூச்சிகளைக் கொல்ல ஒரு எளிய முறை இருக்கிறது. நான் மட்டுமல்ல, நான் சொல்லி பலரும் இந்த வழியைப்பின்பற்றி வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்.

போரிக் பவுடர் 1 பங்கு, கோதுமை மாவு 4 பங்கு, சீனி ஒரு பங்கு எடுத்துக்கொண்டு, இவற்றுடன் பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகள் செய்யவும். கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்தில், நிலைகளின் மேல் என்று மூன்று நான்கு உருண்டைகள் போட்டு வைக்கவும். என்ன காரணமோ தெரியவில்லை, இதைப்போட்டு வைத்த பிறகு கரப்பான் பூச்சிகள் அத்தனையும் மறைந்து விடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேவைப்பட்டால் உருண்டைகள் புதியதாய் செய்து மாற்றவும்.

பின் குறிப்புகுழந்தைகள் கையில் படாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

குறிப்பு முத்து-2



பல் தேய்க்கும் பிரஷ்ஷை வாரம் ஒரு முறை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு வைத்து எடுத்தால் பிரஷ்ஷிலுள்ள பாக்டீரியாக்கள் அழியும்.

குறிப்பு முத்து-3

ஒரு துணியை சிறிது வேப்பெண்ணெயில் தோய்த்து அலமாரி, சாமான்கள் வைக்கும் பீரோக்களை வாரம் ஒரு முறை துடைத்து வந்தால் எறும்புகள் மொய்க்காது.

குறிப்பு முத்து-4


வீட்டைக் கழுவி டெட்டால் தெளித்ததும் உடனே மின் விசிறியை இயக்ககூடாது. கிருமிகள் அழிய தரையிலுள்ல ஈரம் தானாகவே தான் காய வேண்டும்.

குறிப்பு முத்து-5

பெட்ரோல் பங்க் அருகே கைபேசியை உபயோகப்படுத்தக்கூடாது. கைபேசியிலுள்ள பாட்டரிக்கு பெட்ரோலில் தீயை உண்டாக்கும் அளவு சக்தியிருக்கிறது. அதாவது கைபேசி ‘ 5 வாட் ’ அளவு மின்சார சிக்னலை வெளிப்படுத்தக்கூடியதாம்.

குறிப்பு முத்து-6


வீட்டில் வெள்லை அடித்தாலோ அல்லது பெயிண்ட் பூசினாலோ அந்த வாசம் நிறைய நாட்களுக்குப் போகாது. இரண்டு மூன்று வெங்காயங்களை நறுக்கி வைத்து அறையின் கதவை மூடி வைத்தால் ஒரே நாளிலேயே அந்த வாசம் மறைந்து விடும்.

குறிப்பு முத்து-7

பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து விடும். அதைத் தவிர்க்க, தேங்காய் எண்ணெய் பாட்டிலில் சில துளிகள் விளக்கெண்னெய் விட்டு வைத்தால் தேங்காய் எண்ணெய் உறையாது.

குறிப்பு முத்து-8

கத்தி துருப்பிடித்திருந்தால் அந்தக் கத்தியை ஒரு வெங்காயத்தினுள்ளே அழுத்தி 24 மணி நேரம் வைத்திருக்கவும். அதன் பிறகு, சில தடவைகள் முன்னும் பின்னுமாக கத்தியை வெங்காயத்தினுள்ளேயே அசைத்து பின் வெளியே எடுக்கவும். துருவெல்லாம் நீங்கியிருக்கும்.

குறிப்பு முத்து-9

வெள்ளி சாமான்கள் வைத்திருக்கும் பெட்டியில் சில கற்பூர வில்லைகலைப் போட்டு வைத்தால் அவை நிறம் மாறாது.

குறிப்பு முத்து-10

காஸ் அடுப்பில் வைக்கும் வெந்நீர் சீக்கிரம் சூடாக அதனுள் ஒரு கிண்ணம் அல்லது ஒரு தம்ளரைப்போட்டு வைக்கவும்.
[ இது ஒரு மாத இதழில் படித்தது. ]



Monday, 5 September 2011

அனுபவங்கள் தொடர்கின்றன!

சென்ற மாதமும் இந்த மாத ஆரம்பத்திலுமாக ஆச்சரியம் அளித்த, வலி கொடுத்த, கலங்க வைத்த, அனுபவங்களாகவே தொடர்ந்து வந்து கொன்டிருக்கின்ன.

முதலில் ஆச்சரியமும் வலியுமான அனுபவம்:

சென்ற வாரம் இறுதியில் வலைச்சர ஆசிரியர் பணிக்காக அதன் ஆசிரியர் என்னைக் கேட்டிருந்தார். அதற்கு முன்பே சில மாதங்களுக்கு முன், திருமதி. லக்ஷ்மி வலைச்சர ஆசிரியர் பணிக்காகக் கேட்டபோது தொடர் பிரயாணங்களாக நான் தஞ்சைக்கும் ஷார்ஜாவிற்கும் அலைந்து கொன்டிருந்ததால் என் இயலாமையைச் சொன்னேன். மறுபடியும் வலைச்சர ஆசிரியரே கேட்டபோது மறுபடியும் மறுக்க முடியாத என் இயலாமை. காரணம், என் வலது கை மோதிர விரலுக்குக் கீழே ஒரு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதற்கு TRIGGER FINGER என்று பெயர். எல்லோருடைய கையிலும் விரல்களுக்குக் கீழே எலும்பு முட்டுக்கள் இருக்கும். அந்த எலும்பு முட்டுக்கள் மீது ஒரு சிலிண்டர் போன்ற அமைப்பினுள்ளே தான் நரம்புகள் செல்கின்றன. எனது மோதிர விரலின் அடியில் இருக்கும் அந்த சிலிண்டர் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளுக்குள் ஒரு பட்டாணி போல வீங்கியிருக்கிறது. அந்த விரலை லேசில் மடக்க முடியாது. மடக்கும்போது அதிக வலி இருக்கிறது. திரும்பவும் மடக்கிய விரலை நிமிர்த்தும்போது மற்ற விரல்களைப்போல இலகுவாக நிமிர்த்த முடியாது. இந்த விரல் மட்டும் ஸ்ப்ரிங் போல படாரென்று நிமிர்கிறது. இதனால்தான் இதற்கு TRIGGER FINGER என்று பெயர்.



இதற்குக் காரணம் ஏதுமில்லை என்று டாக்டர் சொன்னார். வயது ஏற ஏற சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்படுமென்றும் இது பெரும்பாலும் மருந்தினாலும் பிஸியோதெரபியினாலும் குணமாகாது என்றும் இந்தியாவில் இதற்கென ஒரு Steroid Injection போடுவார்கள் என்றும் அதில் குணம் ஏற்படாவிட்டால் அறுவை சிகிச்சை செய்து அந்த சிலிண்டரில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வார்கள் என்றும் கூறினார். கடந்த 8 மாதங்களில் 5 முறைகள் தஞ்சை சென்று வந்துள்ளதால் மறுபடியும் ஒரு பிரயாணத்தை நினைத்தாலே அயர்வாயிருக்கிறது. மருத்துவரும் சிறிது நாட்களுக்கு மருந்துகளும் பிஸியோதெரபியும் எடுத்துக்கொள்ளச் சொன்னதால் அது போல சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த சமயம் தான் எனக்கு மீன்டும் வலைச்சர அழைப்பு வந்தது. ஆச்சரியம் என்னவென்றால், 25 வருடங்களுக்கு முன்பு, ஆனந்த விகடன் ஆசிரியர் எனக்கு ஒரு சிறுகதையை இங்கு அனுப்பி, அதற்கு ஓவியம் வரைந்தனுப்பச் சொன்னபோது இப்படித்தான் வலது கை ஆள்காட்டி விரலில் வேறு ஒரு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இப்போது அதே போல் வேறு ஒரு அழைப்பு வரும்போது அதே போல ஒரு பாதிப்பு, அதுவும் அதே வலது கையில்! இரண்டாவது அழைப்பை மறுக்க இயலாமல் தயக்கத்துடன் தான் ஒத்துக்கொண்டேன். ஓரளவு மனநிறைவுடன் செய்திருந்தாலும் கடைசி நாள் வலியினால் விடைபெறுதலைக்கூட என்னால் எழுத முடியவில்லை. இன்னும் நான் நினைத்திருந்த நண்பர்களை அறிமுகம் செய்ய முடியவில்லை. அதனால் அறிமுகம் ஆகாத தோழமைகள் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்!

கலங்க வைத்த அனுபவம்:

இது என் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி சொன்ன தகவல். இங்கே பொதுவாக விடுமுறை நாட்களில் எல்லா இனத்தவர்களும் பார்க், உணவகங்கள் என்று இரவு 12 மணி வரை நேரத்தை மகிழ்ழ்சியாகக் கழிப்பது வழக்கம்தான். அதுவும் அரேபியர் இல்லங்களில் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள யாராவது இந்திய பெண்ணோ, அல்லது வெளி நாட்டுப் பெண்களோ குழந்தைகள் கூடவே இருப்பார்கள். அது மாதிரி குழந்தையை கவனித்துக்கொண்டிருந்த ஒரு இந்திய பெண்ணுக்கு விளக்கைச் சுற்றிக்கொன்டிருந்த ஒரு பூச்சி பறந்து வந்து கடித்திருக்கிறது. அடுத்த நாள் அடிபட்ட இடத்தில் வீக்கமும் ஜுரமும் வந்திருக்கிறது. என்ன, ஏது என்று நிதானிக்கும் முன் அந்தப் பெண்மணி கோமாவில் விழுந்து விட்டாராம். நாலைந்து நாட்களாகியும் அதே நிலையில்தான் இருக்கிறாராம். இந்தப்பூச்சியைப்பற்றி தகவல் சொல்லி, இரவு நேரம் பார்க் போன்ற மரங்கள் சூழ்ந்த, பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கச் சொல்லி தொலைக்காட்சியில் செய்தி வந்ததாகவும் சொல்கிறார்கள். அமீரக நண்பர்கள் யாருக்கேனும் இது பற்றிய தகவல்கள் தெரிந்தால் எழுதுங்கள். மற்றவர்களுக்கும் இது பயன்படும். குடும்பத்திற்காக, உறவுகளைப்பிரிந்து வந்து, இங்கு வீடு வீடாகப் போய் வேலை செய்யும் பெண்கள் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள். அது போன்ற நிலையில் இருக்கும் அந்தப் பெண்ணை நினைத்தால் மனம் கலங்குகிறது!