Monday 11 July 2011

முத்துக்குவியல்-8

சென்ற 10 நாட்களில் அவசர வேலைகளாய் தஞ்சை சென்று திரும்பி வந்தேன். இந்த பத்து நாட்களில் யோசிக்க வைத்த, பயப்படுத்திய, மனதைக் கலங்க வைத்த சில நிகழ்வுகளை இங்கே முத்துக்குவியலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கலங்க வைத்த நிகழ்வு:


என் ஆடிட்டரைப்பார்க்கப் போயிருந்தேன். எனக்காக காத்திருந்த அவரை அவரது அலுவலகத்தில் பார்க்க நுழைந்த போது, அவர் தனது காரை வெளியே எடுத்துக்கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் ‘ கொஞ்சம் லேட் ஆனதும் கிளம்பி விட்டேன்.. சாரிம்மா’ என்றார். அவரது முகம் முழுக்க சோர்வு. ‘பேத்தி என்னை விட்டு நகருவதில்லை. தேடிக்கொண்டிருப்பாள் என்னை” என்றார். என் மனது அவரின் பெரும் சோகத்தை நினைத்து கனமாகிப்போனது. இரண்டு வருடத்திற்கு முன், அவரது மருமகன் காரில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, மதுரை அருகே விபத்தாகி மரணமடைந்தார். அதுவும் அவரது மகன் திருமணத்திற்கு முதல் நாள்! வாழ்த்தச் சென்ற என்னைப்போன்ற பலர் அனுதாபங்களைத் தெரிவிக்க வேண்டியதாகி விட்டது. கணவரை இழந்த அவரது மகள், இங்கேயோ திருமண வேலைகள், எப்படியிருந்திருக்கும் அந்தச் சூழ்நிலை! அதற்கப்புறம் நடந்தது தான் சகிக்க முடியாததாகி விட்டது. சென்ற வருடம் அதே நாளில், அதே இடத்தில் அவரது மகளும் மகனும் வந்து கொண்டிருந்த போது, ஓட்டுனரின் வேகம் போதவில்லை என்று அவரை பின்னுக்கு உட்கார வைத்து, அவரது மகள் மிக அதிக வேகத்தில் ஓட்ட, கார் மரத்தில் மோதி, விபத்துக்குள்ளானது. மகனுக்கு காயங்கள் எதுவுமில்லை. ஓட்டுனர் அந்த இடத்திலேயே மரணமடைய, இரத்த வெள்ளத்தில் இவரது மகளே காரை ஓட்டிக்கொண்டு  [ இவர் ஒரு மருத்துவர்]], மருத்துவமனைக்குச்சென்றிருக்கிறார். கால்களிலும் கைகளிலும் அறுவை சிகிச்சை உடனே செய்தும் உள்ளுக்குள்ளேயே குடல்கள் எல்லாம் நசுங்கியதால் விபரம் உணர்ந்து மறுபடியும் சிகிச்சை தருவதற்குள் மரணமடைந்து விட்டார். ஒரு பொறுப்புள்ள மருத்துவர், அதுவும் தன் கணவர் இறந்த விதத்தைக்கூட நினைத்துப்பார்க்காமல் அவசரமாக செயல்பட்ட விதம், அவருடைய உயிரை மட்டுமல்லாது தவறு எதுவுமே செய்யாத அவரது ஓட்டுனரையும் அல்லவா பலி கொண்டு விட்டது? அரசாங்கம் ஆங்காங்கே அதிக வேகம் அதிக ஆபத்து என்பதைப் பலவிதமாக எழுதி வைக்கத்தான் செய்கிறது. அப்படி இருந்தும் என்ன பயன்?

அவரின் இரண்டு குழந்தைகளும் இப்போது தாத்தாவுடன்.. ;இன்னும் எத்தனை நாட்கள் இருப்பேன் என்று தெரியவில்லை’ என்று பேசும் அவரின் கண்களில் தெரிந்த வலி இப்போதும் என் மனதைக் கலங்கச் செய்கிறது.

பயமுறுத்திய நிகழ்வு:




இந்த தடவை பயணத்தின்போது, விமானம் திருச்சியில் தரையிறங்குவதை அறிவித்த அடுத்த விநாடி என் பேரக்குழந்தை துடித்து அழ ஆரம்பித்து விட்டது. என் மகன், என் மருமகள் கைகளுக்கோ, என் கைகளுக்கோ அடங்காமல் துடிக்க ஆரம்பித்து விட்டது. அப்புறம்தான் விமானப் பணியாளரின் மூலம் சிறு குழந்தைகளுக்கு விமானம் மேலே ஏறும்போதும் கீழே இறங்கும்போதும் ஏற்படும் காற்றழுத்தத்தால் காது அடைக்கும்போது தாங்க முடியாத வலி ஏற்படுமெனத் தெரிந்தது. அவர் கொடுத்த பஞ்சை காதில் அடைத்தால் குழந்தை அதை எடுத்து வீசி எறிந்து விட்டு அழுகிறது. சீட் பெல்ட் அணிந்த நிலையில் எழுந்திருக்க முடியாது, நாங்கள் அந்த 20 நிமிடங்கள் பட்ட அவஸ்தையும் அனுபவித்த பயமும் மறக்க முடியாதது. அந்த சமயத்தில் தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தையொன்று இறந்து விட்டதால், தாய்மார்கள் அப்போது தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என்றும் அறிவித்தார் அந்தப் பணியாளர். விமானத்தின் சக்கரங்கள் தரையைத் தொட்ட அடுத்த விநாடி குழந்தை அழுகையை நிறுத்தி விட்டது. கடந்த 35 வருடங்களாக தொடர்ந்து விமானப்பயணங்கள் செய்து வரும் நான் ஒரு போதும் இந்த மாதிரி பயத்தை அனுபவித்ததில்லை. திரும்ப வரும்போது, விமானத்தில் ஏறியதுமே, நான் விமானப்பணியாளரிடம் சென்று இதைப்பற்றி சொல்லி, இந்த மாதிரி நிலைமையில் இன்னும் என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுத்து குழந்தையின் வலியைத் தவிர்க்கலாம் என்று விசாரித்தேன். விமானம் கிளம்பும்போதும்கூட இந்த மாதிரி ஏற்படுவதுண்டு என்றும் அதற்கு முன்னாலேயே குழந்தைகளுக்கு ஏதேனும் தின்பதற்குக் கொடுத்தால், அதை மென்று கொண்டிருக்கும்போது, காதில் வலி ஏற்படாது என்றும் குழந்தை தூங்கும்போதே காதில் பஞ்சை வைத்து விட வேண்டுமென்றும் அந்தப் பணியாளர் சொன்னார்.

வெளியே வந்து இருக்கையில் அமர்ந்த சில விநாடிகளிலேயே விமானம் ஏர் பாக்கெட்ஸ் நடுவே போக இருப்பதால் சீட் பெல்ட்டை அணியச் சொல்லி அறிவிப்பு வந்தது. சில விநாடிகள் அல்லது சில நிமிடங்கள் இப்படியும் அப்படியுமாக விமானத்தில் ஆட்டமிருக்கும். உடனேயே ஒரு குழந்தை காதில் ஏற்பட்ட காற்றழுத்தத்தைத் தாங்க முடியாமல் கதறி அழ ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கதறி அழ, எல்லோரும் அனுதாபத்துடன் பார்க்க, தனியாக வந்த அந்தப் பெண்மணி அந்தக் குழந்தையுடன் போராட்டமே நடத்தினார். விமானப்பணியாளர் சொன்னதை நானும் அவரிடம் சொன்னேன் என்றாலும், எதையுமே முன்னதாகச் செய்யாததால் குழந்தை எந்த உனவையும் ஏற்க மறுத்து விட்டதுடன் காதில் வைத்த பஞ்சையும் பிடுங்கி எறிந்து விட்டது. ஒரு வழியாக விமானம் சம நிலையில் பறக்க ஆரம்பித்ததும் குழந்தை அழுகையை நிறுத்தி உறங்க ஆரம்பிக்க, அந்தப் பெண்ணினால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை.

இதை எழுதுவதன் நோக்கமே, விமானத்தில் பயணம் எதிர்காலத்தில் முதன் முதலாக செய்யவுள்ள பெற்றோருக்கு இது உதவும் என்பதால்தான். அதோடு, இவைகளைத் தவிர, வேறு ஏதேனும் வழி முறைகள் இருந்தாலும் இங்கே அன்புத் தோழமைகள் என்னுடன் பகிர்ந்து கொண்டால் அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

யோசிக்க வைக்க நிகழ்வு:



சமீபத்தில் ஒரு மகளிர் இதழில் படித்த நிகழ்வு இது. உண்மை நிகழ்ச்சியும் கூட.

அம்மா தன் பெண் குழந்தையை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று, “தினமும் சாமியிடம் ‘ நான் இன்றைக்கு எந்த தப்பு செய்திருந்தாலும் மன்னிச்சுடு சாமி’ என்று சொல்லி கும்பிட்டுக்கொள். சாமி எந்த தப்பு செய்தாலும் உன்னை மன்னித்து விடுவார்” என்றாராம்.

அதற்கு அந்தக் குழந்தை, “நாம் தப்பு செய்து விட்டு மன்னிச்சுடு என்று கேட்டால் சாமி என்னம்மா செய்யும்? அதை விட, நான் தினமும் தப்பு செய்யாமல் காப்பாத்து சாமி’ என்று வேண்டிக்கலாமே?” என்று சொன்னதைக் கேட்டு அசந்து போனாராம் அம்மா. நானும் அசந்துதான் போனேன். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை என்று தோன்றியது.

குழந்தைகள் என்றுமே மிகத் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நாம் தான் எப்போதுமே குழம்பியிருக்கிறோம்!

படங்களுக்கு நன்றி: கூகிள்

40 comments:

ராமலக்ஷ்மி said...

மூன்றுமே அவசியமான பாடங்களாக.

வேகம் விவேகமன்று.

விமானத்தில் குழந்தை அழுததன் காரணம் புதிதாக அறிகிறேன்.பலரும் முன் எச்சரிக்கையாக இருக்க உதவும்.

குழந்தை பிரமிக்க வைத்து விட்டாள் எங்களையும்.

பகிர்வுக்கு நன்றி.

A.R.ராஜகோபாலன் said...

மனமும் மதியும் ஒருங்கே நிறைந்த பதிவு , ஆயினும் அனைத்தும் முன்னெச்சரிக்கையை சார்ந்தே இருந்தது இன்னும் சிறப்பு , நன்றி அம்மா பகிர்ந்ததற்கு

வெங்கட் நாகராஜ் said...

முத்து - 1: வேகம் விவேகமானது அல்ல என்பதற்கு இது உதாரணம்.

மற்ற இரண்டும் நல்ல தகவல்கள்...

பகிர்வுக்கு நன்றி.

தமிழ் உதயம் said...

விபத்து மனிதர்களின் உருவத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் உருமாற்றிவிடும். நாம் தான் விழிப்புணர்வுடன் செயல் படவேண்டும். பிறகு வருந்தி என்ன புரியோஜனம்.ழ்க்கையையும் உருமாற்றிவிடும். நாம் தான் விழிப்புணர்வுடன் செயல் படவேண்டும். பிறகு வருந்தி என்ன புரியோஜனம்.

CS. Mohan Kumar said...

முதல் நிகழ்வு வருந்த வைக்கிறது

குழந்தைகளுக்கென்ன.. எனக்கே விமானத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் காது வலிக்கும். முன்னரே பஞ்சு வைத்து கொள்வேன்

அஸ்மா said...

நல்ல பகிர்வுகள் மனோ மேடம்! அதிக வேகம் மட்டுமில்லாமல், ட்ரைவிங் முறையும் இந்தியாவில் சரியாக ஃபாலோ பண்ணப்படுவதில்லை. முதல் நிகழ்வு ரொம்ப மனதுக்கு கஷ்டமாக இருந்தது :( இறைவன் அவர்களுக்கு உதவி செய்யட்டும்.

இரண்டாவது நிகழ்வு நான் பலமுறை அனுபவித்தது. 2008 லிருந்துதான் அந்த பயங்கர காது வலியிலிருந்து தப்பிக்க கற்றுக் கொண்டேன். வலி எடுக்க ஆரம்பித்த பிறகு கண்டிப்பாக காதில் பஞ்சை வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் மேலும் அது சித்திரவதைதான்! அதனால்தான் குழந்தைகள் பஞ்சை பிடுங்கி எறிந்திருக்கிறார்கள். இதுபற்றி ஒரு பதிவு எழுதி வைத்துள்ளேன். விரைவில் போடுகிறேன் மேடம்.

Geetha6 said...

மேடம் நல்ல தகவல்.

vanathy said...

மனதை கலங்கச் செய்யும் பதிவு முதலாவது பதிவு.
குழந்தைகள் விமான பயணத்தில் அழாமல் இருக்க - என் மகன் 4 மாச குழந்தையாக இருந்த போது தவிர்க்க முடியாத ஒரு பயணம். பயந்துட்டே தான் போனேன். விமானத்தில் ஏறியதும் பக்கத்தில் இருந்த ஒரு ஆண் சொன்னார், குழந்தையின் வாயில் pacifier யை வையுங்கள் அழவே அழாது என்று. நாங்களும் அவ்வாறே செய்தோம். என் மகன் அழவே இல்லை. அதோடு என் கணவர் நெஞ்சோடு குழந்தையை அணைத்துப் பிடிக்கும் வண்ணம் பெல்ட் போட்டு இருந்தார். என் மகன் நல்லா வேடிக்கை பார்த்துட்டே இருந்தார். இதை மற்றவர்களும் ட்ரை பண்ணலாம்.

R. Gopi said...

முதல் நிகழ்வு ரொம்பவே வருத்தத்தை வரவழைக்கிறது:-(

இரண்டாவதுநிகழ்வு: எனக்கும் காதை அடைக்கும்

Yaathoramani.blogspot.com said...

வழக்கம்போல் பயனுள்ள தரமான பதிவு
மூன்று முத்தான செய்திகளையும்
மனதில் ஏற்றிகொண்டுவிட்டேன்
தொடர வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

மூன்றுமே அவசியமான பாடம்.

ஸாதிகா said...

மூன்றும் நல்ல படிப்பினை ஊட்டும் அனுபவங்கள் அக்கா.

ADHI VENKAT said...

முதல் நிகழ்வு மனதை கலங்க வைத்து விட்டது.

மற்ற நிகழ்வுகளில் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

Kanchana Radhakrishnan said...

நல்ல தகவல்.பகிர்வுக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

இந்தியா சென்றால், (பத்திரமாகத்) திரும்பி வரும்வரை கலங்கடிப்பது இந்த சாலைப் பயணங்கள்தாம்.

விமானப் பயணம் - சிறிய வயதில், ஃப்ளைட் டேக் ஆஃப், லேண்டிங் சமயத்தில், பணிப்பெண் தட்டு நிறைய மிட்டாய் கொண்டுவந்து விளம்புவார். அதைக் கொத்தாக எடுத்து, வாயில் போட்டு மென்றுகொண்டே இருந்ததால், பாதிப்பு தெரிந்தது இல்லை. இதுக்காகவே அப்படி கொடுத்தாங்கபோல? ஆனா, இப்போ அப்படியெல்லாம் எதுவும் தர்றது இல்லை.

கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்களிடம் மட்டுமாவது, விமானப் பணிப்பெண்கள் இதுகுறித்து முன்பே அறிவுறுத்தலாம்.

பத்மநாபன் said...

மித வேகம் மிக நன்று என்பதை ஒவ்வோரு முறை வண்டி எடுக்கும் பொழுதும் உறுதி எடுத்து கொள்ளவேண்டும்...

விமான பயணத்தில் காதடைப்பு பெரியவர்களுக்கே வலியோடு அசௌகரியமாக இருக்கும்..குழந்தைகளுக்கு எது பிரச்சினை என்றே தெரியாமை வேதனைதான்..பஞ்சு சிறந்த தீர்வு...

vidivelli said...

இடையில் கலங்க வைப்பதும் ,நெகிழவைப்பதுமான வாசிக்கத்தூன்டுகின்ற பதிவு..

அழகான கதை,,
வாழ்த்துக்கள்...


உங்கள் கருத்தை எனது வலைப்பூவும் எதிர்பார்க்கிறது ...
http://sempakam.blogspot.com/

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது போல இந்த மூன்று செய்திகளுமே முன்னெச்சரிக்கை பதிவுகள்தாம்! கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் ராஜகோபாலன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பார்ந்த‌ நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! கவனமில்லாத அவசரங்கள் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையையே மாற்றுவதுடன் அவர்களைச் சார்ந்தவர்களையும் மிகுந்த சோகத்துக்குள்ளாக்கி விடுகிறது! கருத்துக்கு அன்பு நன்றி தமிழ் உதயம்!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

விபத்துகள் ஒவ்வொன்றும் வயிற்றைக் கலக்குகின்றது. விமானப் பயணம் - எனக்கும் இது போல் காதலி அடைத்து வழியில் துடித்திருக்கிறேன். அச்சமயம் மூக்கையும் வாயையும் இறுக்க மூடிக் கொண்டு காற்றை வெளியே விட முயற்சித்தால் அது காது வழியாக வெளியேறும்போது அடைப்பு சரியாபும் என எனது சக பயணி சொன்னார். அது போல் செய்ய சரியாயிற்று.

மனோ சாமிநாதன் said...

ஏற்ற இற‌க்கங்களின் போதும் மிக உயரத்தில் பறக்கும்போதும் நமக்கே காது அடைப்பது சகஜம் தான் மோகன் குமார்! ஆனால் சிறு குழ‌ந்தைக‌ளுக்கு வலி அதிகம் இருக்கும் என்று சொல்லுகிறார்கள்! அதனால் குழந்தை துடிதுடிப்பதும் அடங்காமல் புரள்வதும் மிகுந்த பயத்தைத் தருகிறது!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி அஸ்மா!

சீக்கிரம் இது பற்றி பதிவு போடுங்கள்! அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கீதா!

Unknown said...

முதல் நிகழ்வு மனதை மிகவும் கலங்கடித்து விட்டது அம்மா.
இரண்டாவது நிகழ்வு , நான் அனுபவித்ததை அப்படியே
நீங்கள் எழுதியுள்ளது போலுள்ளது. போன வாரம்தமிழ்நாட்டிலிருந்து
டெல்லிக்கு வருகையில் எனது ஒன்றரை வயது பையனும் இதே போல
அழுது தீர்த்துவிட்டான். ரொம்ப கஷ்டமாக இருந்தது அவன் தூங்கும் வரை.
மூன்றாவது நிகழ்வு சூப்பர். இந்தக் காலக் குழந்தைகள்தான்
எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள்?

ஆதி மனிதன் said...

விமான பயணத்தின் போது இது போல் சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனைகள் ஏற்படுவது இயல்புதான் (எனக்கு கூட ஒரு சமயம் விமானம் திடீரென்று கீழ் நோக்கி இறங்கியபோது தலையே வெடித்துவிடும் போல் தலைக்குள் வலி ஏற்பட்டது). இதை தவிர்க்க மிகவும் சிறிய குழந்தையாக இல்லாத பட்சத்தில் குழந்தைகளுக்கு தூக்கம் வரக்கூடிய சிரப்புகளை(Syrup) கொடுத்துவிடுவார்கள். குழந்தை தூக்கத்தில் இருப்பதால் அவர்களுக்கு இந்த காதடைப்பு பெரிதாக தெரியாது.

இது சரியா தவறா என எனக்கு தெரியாது. ஆனால் சில டாக்டர்களே இதை பரிந்துரை செய்வதை கேட்டிருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

யோசனைக்கு அன்பு நன்றி வானதி! நானும் சில குழந்தைகள் pacifier உபயோகிப்பதைக் கண்டேன். மிகச் சிறு குழந்தைக்கு அது ரொம்பவே நல்ல ஐடியா!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்கப்புறம் வருகையும் கருத்தும் மகிழ்வைத்தந்தது கோபி! பெரியவர்களுக்கு நிச்சயமாக காதை வலிக்கும்தான். நம்மால் பொறுத்துக்கொள்ள‌ முடிகிறது. சின்ன குழந்தைகளை சமாளிக்கும் விதம்தான் தெரியவில்லை.

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துக்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

அன்பான பின்னூட்டத்திற்கு இனிய நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி காஞ்சனா!

மனோ சாமிநாதன் said...

சரியாக எழுதியிருக்கிறீர்கள் ஹுஸைனம்மா! பட்ஜெட் விமான சேவைகள் வந்த பின்னர் விமானப்பயணங்களில் தரம் நிறையவே தாழ்ந்து விட்டது. முன்பெல்லாம் சாக்கலேட்டுடன் காதில் வைத்துக்கொள்ள பஞ்சும் தருவார்கள். இப்போது குழந்தைகள் வீல் வீலென்று அழுதாலும் சரி, கேட்டாலும் சரி, உடனே பஞ்சு கூட ‌கொண்டு வந்து தருவதில்லை!

மனோ சாமிநாதன் said...

யோசனைக்கும் கருத்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் பத்மநாபன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி விடிவெள்ளி!

மனோ சாமிநாதன் said...

காதை ப்ளோ பண்ணுவதும் ஒரு வழி வித்யா! ஆனால் அடிக்கடி அப்படி பண்ணுவதும் காதில் பிரச்சினைகளை உண்டாக்கும்! கருத்துக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இப்பதிவிற்கு ஓட்டளித்து, தங்களையும் இண்ட்லியில் இணைத்துக்கொண்ட தோழமைகள்
RVS, Sriramandhaguruji, Sura, Vengat Nagaraj, Padmanaban,

அனைவருக்கும் அன்பு நன்றி!!

Jaleela Kamal said...

முதல் நிகழ்வு, மிகவும் மனதை பாதித்த்து. இப்ப வெக்கேஷன் போனா ரோடில் நடப்பதே பெரிய விஷியமா இருக்கு முழுவது வானகங்கள் தான்..

ஏர்போட் பற்றி நிறைய அனுபவங்கள் இருக்கு மனோக்கா எழுத, அதுவும் குழந்தைகளை வைத்து கொண்டு ரொம்ப கழ்டம் தான்..