Monday 14 February 2011

வடிகால்

25 வருடங்களுக்கு முன் சிறு கதைகள் பல இதழ்களில் எழுத ஆரம்பித்த சமயம். ஆனந்த விகடனுக்கு முதன் முதலாக அனுப்பப்பட்ட இந்த சிறுகதை உடனடியாக வெளியானதுடன் ஆசிரியரின் பாராட்டையும் பெற்றுத்தந்தது மறக்க முடியாத மகிழ்வான அனுபவம். மற்ற‌ சிறுகதைகளினின்றும் இச்சிறுகதை எனக்கு தனியான மகிழ்வைக்கொடுத்தது. காரணம் இச்சிறுகதையின் கதாநாயகி 70 வயது முதிர்ந்த, இலையுதிர்காலத்தில் நின்று கொன்டிருந்த ஒரு முதியவள். வழக்கம்போல் ரசித்து கருத்துக்களை என் அன்புத் தோழமைகள் அனைவரும் எழுதுவீர்கள் என எதிர்பார்த்து இதை இங்கே வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

வாழ்க்கையில் வடிகால்கள் பலவிதம். இந்தப்பதிவுகள் எழுதுவதும் வலைப்பூக்களில் பங்கு கொள்வதும்கூட ஒரு வித வடிகால்தான் மனதிற்கு! கண்ணீர் சிந்துவதும், கவிதைகளும் கதைகள் எழுதுவதும், மற்ற‌வர்களை ஆனந்தப்படுத்திப்பார்ப்பதும்-‍ இப்படி உலகத்தில் பல வித வடிகால்கள் மனிதர்களுக்கு இருக்கின்றன!

இந்த வ‌டிகாலும் ஒரு முதியவளுக்குக் கிடைத்த நெஞ்சார்ந்த நிறைவு என்று கூட சொல்லலாம்!

இனிமேல் கதை தொடர்கின்றது!!  

த்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் இந்த ஊமைப்பாட்டி தட்டுமுட்டு சாமான்களுடனும் அந்த இரட்டை பீரோவுடனும் வந்து இந்த பூட்டிய வீட்டைத் திறந்தபோது ஊரே அதிசயமாய்ப் பாட்டியைப் பார்த்தது. அவள் யார், அதற்கு முன் எங்கேயிருந்தாள், குழந்தைகள், குடும்பம் உள்ள‌வளா-எதுவுமே யாருக்கும் இதுவரை தெரிந்ததில்லை. கேட்டாலும் பாட்டி பதில் எதுவுமே சொல்லாமல் ஒரே வரியில் தான் யாருமற்ற அனாதை என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுவாள்.
அந்த வீட்டில் ஊமைப்பாட்டிக்கு இருந்த ஒரே சொத்து அடுப்பிற்கு அருகாமையில் இருக்கும் அந்த இரட்டை பீரோதான். அவை நிறைய தமிழும் ஆங்கிலமுமாய் புத்தகங்கள். அவற்றில் ஏதாவதொன்றை எடுத்துப்படித்துக்கொண்டு அடிக்கடி வெளியுலகை மறந்து போவாள் பாட்டி. இட்லி சுடும் நேரங்களைத் தவிர பெரும்பாலும் இந்த சாய்வு நாற்காலிதான் அவள் உலகம்.
இட்லி வாங்க வருபவர்களிடம் எதுவும் பேசாது, சிரிக்காது, மெளனமாகவே காசை வாங்கிக் கொண்டு உள்ளே போய், தையல் இலையில் வைத்துக்கட்டிக் கொண்டு வந்து தருவாள். சுத்தமான மல்லிகைப்பூப்போன்ற அந்த இட்லி, கடந்த பத்து வருடங்களாய் தரம் மாறாத ருசியுடன் இருந்ததால், நல்ல பெயருடனும் மதிப்புடனும் பாட்டியின் இட்லி வியாபாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.
பாட்டியின் கம்பீரமான-அமைதியான சிரிக்காத முகமும்-இந்த எழுபது வயதிலும்கூட முழுவதும் நரைக்காத தலைமுடியும் அவளை மிகவும் மரியாதைக்குரியவளாக வாழச் செய்து கொண்டிருந்தன. எப்போதோ-எந்த குழந்தையோ வைத்த ‘ஊமைப்பாட்டி’ என்ற பெயரும் நிலைத்துப்போயிற்று. அவளும் அதை மெளனமாகவே ஏற்றுக்கொண்டாள்.
ஆனால்.. .. ..
கடந்த ஒரு வாரமாக ஊமைப்பாட்டியின் வீடே மாறியிருந்தது. அந்த வீட்டின் நடு மையத்தில் தொங்கிக்கொண்டிருந்த துணித்தூளியில் அன்றலர்ந்த மலர் போன்ற ஒரு குழந்தை உறங்க ஆரம்பித்திருந்தது. பிறந்து சில மாதங்களே ஆகியிருந்த அந்தக் குழந்தைக்காக பாட்டிக்குப் படிக்கும் நேரமும் குறைந்து போய், கொல்லைப்புறமிருந்த கிணற்றிலிருந்து நீரையிறைத்து பிள்ளைத்துணிகளை அலசும் வேலைகள் தினமும் பல முறை ஏற்பட்டன.
அந்தக் குழந்தை யாரென்ற கேள்விக்கு ஊமைப்பாட்டி ஒரே வரியில் பதிலளித்தாள்.
“ என் பெண் வயிற்றுப் பேத்தி!”
உண்மையில் அந்தக் குழந்தையை ஒரு நாள் ஊரையடுத்திருக்கும் மாரியம்மன் கோவிலுக்குப் போகும் வழியிலுள்ள இலுப்பைத்தோப்பில், அந்தி வேளையில் ஊமைப்பாட்டி கண்டெடுத்தாள். அதுவும் மனதைத் தாக்கும் சூழ்நிலையில். பக்கத்திலுள்ள மரத்தில் நாகல் பழ நிறத்தில் கிழிந்த அழுக்கு ஆடையில் எண்ணெய் காணாத முடியுடன் ஒரு பெண் கயிற்றில் தொங்கிக் கொண்டிருக்க.. .., வெளியுலகின் அவலங்களோ, அசிங்கங்களோ தெரியாத அந்தக் குழந்தை அழுது கொண்டிருப்பதைப்பார்த்ததும் பல வருடங்களுக்குப்பிறகு அவள் மனது கலங்கிப்போயிற்று. இற‌ந்ததன் மூலம் தன் வாழ்வின் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடிவு கண்ட அந்தப்பெண், தன் குழந்தைக்கு மட்டும் எந்த விடிவையும் காண்பிக்காமல் ஏன் தனியே விட்டுச் சென்றாள்?
தாயின் நிறத்துக்குச் சம்பந்தமே இல்லாமல்-ரோஜா நிறத்துடன் அவளை உற்று நோக்கிய அந்தக் குழந்தையின் முகம் அவளின் எழுபது வருட வாழ்க்கையின் வெறுமையையும் நெஞ்சத்துத் துன்பங்களையும் ஒரே நிமிடத்தில் குபீரென நினைவுக்குக் கொண்டு வந்தது. உறுதியால் மடிந்த உதடுகளுடன் அந்தக் குழந்தையைக் கையிலெடுத்தாள். மலடி என்று எத்தனையோ பேர் சுட்ட ஆறாத ரணங்களுக்கு அந்தக் குழந்தையின் மென்மை இதமாக இருந்தது.
‘ எங்கோ குப்பை மேட்டில்-அதையாகவோ-முறையற்றோ-எந்த ஜாதியிலோ பிறந்து-சமுதாய‌த்தில் எள்ளி நகையாடும் நிலையில் விழவிருந்த ஒரு குழந்தையை-அல்லது கத்திக் கத்தியே கவனிப்பாரற்று சாகவிருந்த இந்தக் குழந்தையை நான் காப்பாற்றுகிறேன்’
அவள் நினைவுகள் உன்னதமானவை. கூடவே அவை அன்பில்லாத கொடுமையினாலும்-யாருமற்ற வரட்சியினாலும் ஏற்பட்டவை. எழுபது வருடங்களுக்குப் பின் புதியதாக ஒரு துணை-அதுவும் இந்த மண்ணின் வஞ்சகமும் சூதும் தெரியாத பச்சிளம் மழலையொன்று கிடைத்ததும் அந்த ஒரு நிமிடத்தில் பாட்டியின் வாழ்வே மாறிப்போனது.
 
ணி பத்தாகியிருந்தது. யாரோ வெளியில் அழைக்கும் குரல் கேட்டதும் கதவைத் திறந்த பாட்டி ஆச்சரியப்பட்டாள்.
இரு வெள்ளைக்காரர்கள்-ஆணும் பெண்ணுமாய் கெள‌ரவத் தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.
 
“ ப்ளீஸ்..பி ஸீட்டட்”

அவர்கள் அதிசயித்துப்போனவர்களாய் அங்கிருந்த கல் திண்ணையில் அமர்ந்தார்கள். தன்னை ஜார்ஜ் என்றும் தன் மனைவியை ரோஸரினா என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டவர் தொடர்ந்து சொன்னார்.

“ நாங்கள் இந்த ஊர் மலையிலுள்ள கோவிலைப்பார்க்க வந்தோம். தாமதமாக வந்ததால் காலையில் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. விசாரித்தபோது இங்கு இட்லி கிடைக்கும் என்று சொன்னார்கள்”

பாட்டி உள்ளே சென்று இட்லிகளும் தேங்காய்ச் சட்னியும் தையல் இலைகளுடன் கொண்டு வந்தாள். இருவரும் ரசித்து சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டிருக்கையில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டதும் ரோஸரினா சட்டென்று திரும்பிப் பார்த்தாள். பாட்டி குழந்தையை சமாதானப்படுத்தியவாறே தூக்கி வந்தாள்.

“இது யார் பாட்டி?”
“ இறந்து போன என் பெண்ணின் குழந்தை”
“பாட்டி! இந்தக்குழந்தையை இந்த வயதில் உங்களால் வளர்க்க முடியுமா? என்னிடம் கொடுத்து விடுங்களேன்.”
“என்னது?”
கேட்ட மாத்திரத்திலேயே மனது பதறிப் போயிற்று. கையிலிருந்த வைரங்களை யாரோ தட்டிவிட்டது போல சிந்தனை குழம்பிப்போனது.
[தொடர்கின்றது...........]

50 comments:

Asiya Omar said...

மனோ அக்கா 25 வருடங்களுக்கு முன்பே இத்துணை அருமையான எழுத்து நடையுடன் எழுதிய நீங்கள் தொடர்ந்து எழுதியிருந்தால் பெரிய எழுத்தாளர் என்ற பெயரில் உலா வந்திருப்பீர்கள் என்பது திண்ணம்.கதை ஆழமான கருத்துடையது,தொடருங்கள்..அதுவும் ஆனந்த விகடனில் அறிமுகம் என்றால் சும்மாவா?வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

ஸாதிகா said...

அக்கா,அருமையான நெஞ்சத்தினை நெகிழ வைத்த கதை.மிகவும் சஸ்பென்சாக தொடரும் போட்டு விட்டீர்கள்!!சீக்கிரம் அடுத்த பாகத்தினை போடுங்கள்.

apsara-illam said...

ஆஹா மனோ அக்கா..,முற்றிலும் மாறுபட்ட ஒரு முதுமை தாயினை கருவாக கொண்ட கதையை கொடுத்துள்ளீர்களே... நன்றாக மிகவும் சுவாரஸ்யமாக இருக்கு..ஆனால் அதுக்குள்ள தொடரும் போட்டுடீங்களே.... இனி காத்து கொண்டிருக்க வேண்டியதுதான்...
நல்ல கதைக்காக காத்திருப்பதும் ஒரு வித த்ரில் தான் இல்லையா அக்கா...
உங்கள் எழுத்து விருந்துக்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றேன்.
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அப்சரா.

எல் கே said...

காதல்

பத்மநாபன் said...

வெறுமையையும், பணியில் நேர்மையோடும் இருந்த பாட்டியின் வாழ்வை எடுத்து சொல்லிய விதம் உணர்வுபூர்வமாக இருந்தது. மாமணியான குழந்தையின் வரவு ஆறுதல் பல அளித்த நேரத்தில் அக்குழந்தையை கேட்பது , பாட்டிக்கு வாழ்வாதரப் போராட்டம் தான்...அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்பு கூடிவிட்டது...

raji said...

கதையைப் படிக்கும் பொழுதே மனம்
இளகுகிறது.
தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்

Menaga Sathia said...

சுவராஸ்யமா இருக்கு,சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்கள்...

குறையொன்றுமில்லை. said...

மிக, மிக அருமையான கதை வாழ்த்துக்கள்.

இமா க்றிஸ் said...

தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

GEETHA ACHAL said...

ஆஹா..அருமையாக இருக்கின்றது...அடுத்தது என்ன ஆச்சு...குழந்தையினை பாட்டி அவளிடம் கொடுத்துவிட்டாங்களா...

ஷர்புதீன் said...

:)
வருகையை பதிவு செய்ய ..

middleclassmadhavi said...

சீக்கிரம் தொடருங்க! :)

குறையொன்றுமில்லை. said...

அருமையான கதை, வாழ்த்துக்கள்.

Nila said...

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது மனோ அக்கா.அடுத்தபகுதி எப்ப வரும் என மிக்க ஆவலாக இருக்கிறது.
இந்தமாதிரி நீங்க எழுதிய சிறுகதைகளை அவ்வப்போது வெளியிடலாமே அக்கா.இது என் சிறு விண்ணப்பமே.
"மற்றவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்துவதும் ஒரு வடிகால்தான்."
என்பது என் கருத்து.

'பரிவை' சே.குமார் said...

அம்மா...
இதற்கு முன் உங்கள் வலைப்பூவில் சிறுகதை படித்திருக்கிறேனா என்று ஞாபகமில்லை... ஆனால் இந்தக் கதை உங்களை ஒரு தேர்ந்த எழுத்தாளராகக் காட்டுகிறது. அருமையான நடையில் அழகான கதை...

சிறுகதையை தொடரும் என்று போட்டு தொடர்கதையாக்கியது மட்டுமில்லாமல் எப்போது தொடரும் என்ற ஆவலையும் எங்களுக்குள் விதைத்து விட்டு இருக்கிறீர்கள்...

தொடரும் போடாமல் தொடர்ந்திருக்கலாம்... அவ்வளவு அருமை... சீக்கீரம் அடுத்த பதிவைப் போடுங்கள்...

நன்றி,

ADHI VENKAT said...

பாட்டி அந்த குழந்தையை கொடுத்து விடுவாரா!
அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

அன்பு ஆசியா!

உங்கள் மனந்திறந்த பாராட்டு மனதுக்கு இதமளித்தது. நான் முன்பே சொன்ன மாதிரி, என் கை விரலில் ஏற்பட்ட அந்த விபத்து, என் ஆர்வத்தை நசுக்கி விட்டது! அப்புறம் கதை எழுதுகிற ஆர்வம் மறுபடி பிறக்கவேயில்லை. பதிவுலகில் நுழைந்த பிறகு தான் முன்பே மரணமடைந்த ஒன்று உயிர்ப்படைந்திருக்கிறது! உங்கள் பாராட்டுக்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி ஸாதிகா! அடுத்த பதிவுடன் இந்த சிறுகதை முடிந்து விடும். உங்களின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறேன்!

மனோ சாமிநாதன் said...

உங்களின் பாராட்டும் விரிவான அலசலும் என்னை உற்சாகப்படுத்துகிறது அப்ஸரா! அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு மகிழ்வான நன்றி ராஜி!!

மனோ சாமிநாதன் said...

உங்களின் விரிவான கருத்தும் பாராட்டும் மகிழ்வையளித்தது சகோதரர் பத்மநாபன்!! தங்களுக்கு இதயங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார்!

நான் இது வரை என் சிறு கதைகளை என் வலைப்பூவில் வெளிடிட்டதில்லை. இப்போதுதான் அந்த ஆர்வம் பிறந்திருக்கிறது. உங்களைப்போன்ற அன்புத் தோழமைகளின் பாராட்டு, என் ஆர்வத்தை மேலும் ஊக்குவிக்கும் சக்தியாக மாறும்!! பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!!

Kanchana Radhakrishnan said...

சுவராஸ்யமா இருக்கு.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

'தொடரும்' என்கிற வார்த்தைக்கான அர்த்தம் ..... அந்த பாட்டிக்கும் குழந்தைக்குமான உறவு தொடரும் என்பதுதானே? என் ஊகம் சரிதானா என்றறிய ஆவலாய்க் காத்திருக்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, பல்வேறு தனித்திறமைகளும் தனித்தன்மையும் கொண்ட, நம் மனோ சுவாமிநாதன் அவர்கள் அந்தக் காலத்திலேயே, அதுவும் ஆனந்த விகடனில் முதன் முதலாக சிறுகதை எழுதி வெளியிட்டு பாராட்டும் பெற்றவர் என்ற புதிய & இனிய செய்தி, என் காதில் தேன் பாய்ச்சுவதாக உள்ளது.

இந்தக் கதையின் ஆரம்பமே வித்யாசமாக உள்ளது. மிகவும் படித்தவளான அந்தப் பாட்டி தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்களால் தன்னை வாய் பேசாதவள் போல் ஆக்கிக்கொண்டு மெளனமாக வாழ்வதுடன், தானே உழைத்து தன் சொந்தக் காலில் நிற்கிறாள். தனக்கு சொந்த பந்தங்கள் பல இருந்தும் அனாதை என்று ஒரு வித வெறுப்புடன் கூறிக் கொள்கிறாள்.

அனாதை மற்றும் ஊமை வேடம் போட நினைத்த அவளிடம், நிஜமாகவே அனாதையாக, இப்போது ஒரு பச்சிளங் குழந்தை வேறு சேர்ந்துள்ளது.

வயதான அவளுக்கு உடலில் சற்று தெம்பு குறைந்துள்ள போதிலும், உள்ளத்தில் அந்தக் குழந்தைக்காகவாவது, மீண்டும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றதொரு வைராக்கியம் தெரிகிறது.

அடுத்த பகுதியில் சமூக அவலங்களுக்கு சாட்டையடி தருவாளோ என்னவோ .... பார்ப்போம்.

ஓவியம், பல்வேறு அனுபவங்கள், கை வைத்தியம், சமையல் பகுதி என ஏற்கனவே வலைப்பூவைக் கலக்கி வரும் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள், சிறந்த சிறுகதைகளும் நமக்குத் தந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கத் தயாராகி விட்டார்.

அன்புடன் அவரை வரவேற்று மகிழ்வோம். அனைவர் சார்பாகவும் சிறந்ததொரு சிறுகதைச் சிற்பிக்கு என் பாராட்டுகளும், அன்பான வரவேற்புகளும் கூறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

20.02.2011 ஞாயிறு அன்று திருச்சிக்கு விஜயம் செய்யும் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்களை வருக! வருக!! வருக!!! என வாழ்த்தி வரவேற்க காத்திருக்கும், ஒரு சில பிரபல வலைப்பூ எழுத்தாள நண்பர்களுடன், அடியேனும்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்ன மேடம் இது? ஸ்வாரஸ்யமான மெகாத் தொடரில் திடீரென்று ஒரு விளம்பரம் வந்தது போல்!
எனக்கு என்னவோ ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன்..ஒரு வீடு..ஒரு உலகம் ..’ ஞாபகம் வந்து விட்டது திடீரென்று!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சுவராஸ்யமா இருக்கு.... தொடருங்கள் வாழ்த்துக்கள்

ஹைஷ்126 said...

அன்பு அக்கா மிக அருமையான கதை, அடுத்த பகுதி எப்போது? என் சிறு வயதில் குமுதம் கடையில் வாங்கி அங்கேயே நின்று படித்துவிட்டுதான் வீட்டுக்கு வந்து என் அம்மாவிடம் கொடுப்பேன். அந்த நினைவு மீண்டும் வந்து விட்டது!

வாழ்க வளமுடன்

புதிதாக திறந்த உணவகம் சிறப்பாக மேன்மெலு வளர தியானிக்கிறேன்.

Mrs.Mano Saminathan said...

அன்புள்ள இமா!

நீன்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் வருகை என்னை மிகவும் மகிழ்வித்தது! உங்களின் அன்புக்கருத்துக்கு என் இனிய நன்றி!!

Mrs.Mano Saminathan said...

அன்பு கீதா! ரொம்ப நாட்களுக்குப்பின் இங்கே உங்கள் வருகை! மகிழ்ச்சியுடன் உங்களது கருத்துக்கு என் அன்பு நன்றி!!
உங்களின் ஊகம் சரியானதா என்று திங்களன்று தெரிந்து விடும்!!

Mrs.Mano Saminathan said...

முதல் வருகைக்கு என் அன்பு நன்றி சகோதரர் ஷர்புதின்!!

Mrs.Mano Saminathan said...

உற்சாகப்படுத்தியதற்கும் ஊக்குவித்தலுக்கும் இனிய நன்றி மாதவி!!

Mrs.Mano Saminathan said...

"மற்றவர்களின் திறமைகளை ஊக்கப்படுத்துவதும் ஒரு வடிகால்தான்."
என்பது என் கருத்து."

சரியான கருத்து தான் ரமா! பாராட்டிற்கும் இனிய கருத்துக்கும் இதயங்கனிந்த நன்றி! அவ்வப்போது என் சிறு கதைகளை இங்கே வெளியிடுவதாகத்தான் இருக்கிறேன்!

Mrs.Mano Saminathan said...

கருத்துக்கு இனிய நன்றி ஆதி! திங்களன்று உங்களின் கேள்விக்கு விடை தெரிந்து விடும்!!

Mrs.Mano Saminathan said...

கருத்துக்கு அன்பு நன்றி காஞ்சனா!!

Mrs.Mano Saminathan said...

கருத்துக்கு அன்பு நன்றி சகோதரர் லக்ஷ்மி நாராயண‌ன்!!

Mrs.Mano Saminathan said...

தங்களின் இனிய கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! ஆனால் இத்தனை பாராட்டுக்களுக்கும் நான் தகுதியானவள்தானா என்ற சந்தேகம் வருகிறது எனக்கு! ஆனாலும் தங்களின் ஊக்குவிப்பு என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்தி தரமான நல்ல படைப்புக்களை வழங்கச்செய்கிற சிற‌ந்த தூண்டுகோலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் மறுபடியும் என் உளமார்ந்த இனிய நன்றிகள் பல!!

Mrs.Mano Saminathan said...

அன்பான கருத்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி!
தொடர்ந்து அதிகமாக எழுதினால் சில சமயங்களில் படிப்பவர்களுக்கு போர் அடிக்கலாம். அதனால்தான் நடுவே சிறு இடைவெளி!!

Mrs.Mano Saminathan said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பிரஷா!!

Mrs.Mano Saminathan said...

நீன்ட நாட்களுக்குப் பிறகு உங்களின் வருகை எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது அன்புச் சகோதரர் ஹைஷ்! தங்களின் இனிய வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் என் மனங்கனிந்த நன்றி!! நாளை மறு நாள் இந்தச் சிறு கதையின் முடிவுப்பகுதியை வெளியிட்டு விடுவேன். தங்களின் கருத்தை மறுபடியும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

RVS said...

அடுத்த பார்ட் எப்போ மேடம்! ஆவலுடன்.... ;-)

மோகன்ஜி said...

மனோ மேடம்... வார்த்தைகள் உங்களுக்கு கட்டுப் பட்டு ஊழியம் புரிகின்றன. தாமதமாய்ப் படித்ததால்,இப்போது தான் பின்னூட்டம். தொடருங்கள். நிறைய பதியுங்கள்..வாழ்த்துக்கள்!

சிவகுமாரன் said...

அடடா
என்ன ஒரு அருமையான கதைப்போக்கு.
வடிகால் வைரக் கல்லாய் ஜொலிக்கிறது.
அருமை மேடம்

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் இனிய நன்றி சகோதரர் RVS!
கதையின் இரண்டாவது பகுதியை இன்று வெளியிட்டு நிறைவு செய்து விட்டேன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் மிக அருமையான பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் மோகன்ஜி!!

மனோ சாமிநாதன் said...

'வைர‌க்கல்' என்று புகழாரம் சூட்டி என் 'வடிகாலுக்கு' கிரீடம் அணிவித்திருக்கும் சகோதரர் சிவகுமாரனுக்கு என் இதயங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இந்தப்பதிவில் தங்களை இணைத்த அன்பு உள்ள‌ங்கள் OLM1971, Gopikashok, Janavin, karthik VLK, Asiya, Sriramanandaguruji, Badmanaban, venkatnagaraj, KovaitoDelhi, Kurinji, Shruvish, RDX, Tharun, makizh, Vivek, hihi12, Balak, Jolleyjegan, MRVS, easylife, idugaiman, Bhavan, Kiruban, Madhisudha
அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி!!

Jaleela Kamal said...

மிக அருமையான மனதை தொடும் கதையாக இருக்கு, தலைப்பும் அருமை, இதோ அடுத்த பகுதி போய் படிக்கிறேன், நேரமில்லாத்தால் பாதி படிச்சிட்டு இப்ப தான் மீதி படிச்சி முடித்தென்.