Friday, 30 April 2010

இல்லத்தில் ஒரு மருந்தகம்!





பகுதி-1

அன்றாடம் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் தானியங்கள், மசாலாப்பொருள்கள், பழங்கள் எல்லாமே சிறந்த மருந்து பொருள்கள்தான். இவைகளை வைத்து, நம் உடலில் தோன்றும் சிறு சிறு கோளாறுகளுக்கு மருத்துவரிடம் போகாமல் நாமே நிவாரணங்களை செய்து கொள்ள முடியும். இவை போக நாட்டு மருந்துகள் எனப்படும் அரிசித் திப்பிலி, கண்டத் திப்பிலி, ஓமம், சித்தரத்தை, அதிமதுரம், வால் மிளகு, போன்றவை கண்கண்ட பொக்கிஷங்கள். இவற்றை சிறு சிறு அளவில் [ 50 கிராம் போல] வாங்கி சுத்தம் செய்து சமையலறையின் ஒரு ஷெல்ஃபில் வைத்துக்கொண்டால், தலைவலி, சளி, ஜுரம், உடல் வலி, வயிற்றுப்போக்கு, தலைவலி, இவற்றையெல்லாம் நாமே சரி செய்து விடலாம். உடலுக்கும் நல்லது. பணமும் மிச்சமாகும்.


இந்த மாதிரி மருத்துவ முறைகள் எல்லாம் தற்போது புழக்கத்தில் மிக மிகக் குறைந்து வருகிறது. சமீபத்தில் ஊரில் மளிகைச் சாமான்கள் வாங்கும்போது, கடைக்காரர் ‘இந்த காலப்பெண்கள் கொசுத்தொல்லைக்குக்கூட கொசுவர்த்தி காயில்கள்தான் வாங்கி உபயோகித்து, அதை சுவாசிப்பதால் குழந்தையின் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறார்கள். நம்ம சாம்பிராணியை விட ஒரு சிறந்த கொசுவர்த்தி இருக்கிறதா என்ன?” என்று குறைப்பட்டுக் கொண்டார். அது நூற்றுக்கு நூறு உண்மை.


இங்கே நம் வீட்டில் இருக்கும் பொருள்களைக்கொண்டே சில மருத்துவக் குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.

1. தொடர்ந்த வயிற்றுப்போக்கிற்கு:

ஒரு டம்ளர் சூடான டீ டிகாஷனில் ஒரு மூடி எலுமிச்சை சாறை கலந்து சிறிது தேனும் கலந்து குடிக்கவும். தினமும் இரு முறை குடிக்கலாம்.

2. நீர்க்கடுப்பிற்கு:

வெய்யில் காலங்களில் அதிக உஷ்ணத்தால் சிறு நீர் அதிகம் பிரியாது அதிக எரிச்சலுடன் வெளியேறும். அந்த மாதிரி சமயங்களில் உளுந்து மிகக் கண்கண்ட மருந்து! ஒரு பிடி உளுந்தைக் கழுவி ஒரு சொம்பு தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்துக் குடித்தால் குடித்த சில நிமிடங்களிலேயே எரிச்சல் அடங்குவதையும் தாராளமாக சிறு நீர் பிரியத் தொடங்குவதையும் காணலாம். ஒரு சொம்பு நீர் காலியானதும் அதே உளுத்தம்பருப்பிலேயே மறுபடியும் இன்னொரு தடவை நீர் ஊற்றி ஊறிய தண்ணீரைக் குடிக்கலாம்.

3. வயிற்றுப்பொருமல், வாயு முதலிய சங்கடங்களுக்கு:

சுக்கு 2 ஸ்பூன், ஓமம் 2 ஸ்பூன், மிளகு 2 ஸ்பூன், சீரகம் 2 ஸ்பூன், ஒரு பட்டாணி அளவில் பெருங்காயத்துண்டு-இவற்றை வெறும் வாணலியில் இலேசாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும். பெருங்காயத்தை மட்டும் சிறிது எண்னெயில் வறுத்துக் கொண்டு மற்ற பொருள்களுடன் சேர்த்துப் பொடிக்கவும். தினமும் சாப்பிட ஆரம்பிக்கும்போது ஒரு கை சூடான சாதத்தில் சிறிது நல்லெண்னெய் ஊற்றி இந்தப்பொடி ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிடவும். அதன் பின் மற்ற உணவுப்பொருள்களை சாப்பிடலாம்.

4. சிறுநீரகக் கல் தோன்றி வலியுடன் அவதிப்படுபவர்களுக்கு:

ஒரு கப் வாழைத்தண்டு துண்டுகளை சிறிது நீரில் மிக்ஸியில் அரைத்துப் பிழிந்து மோர், சிறிது உப்பு, 1 ஸ்பூன் எலூமிச்சை சாறு கலந்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் வலி அடங்குவதுடன் 15 நாட்களில் கற்கள் கரைந்து சிறு நீருடன் வெளியேறும். இந்த வலி இருப்பவர்கள் மட்டன், பால், ப்ளம்ஸ் பழம் இவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

5. சளி, இருமல், தொண்டை வலிக்கு:

சித்தரத்தை, வால் மிளகு, அதிமதுரம், மிளகு, அரிசித்திப்பிலி இவை அனைத்தும் வகைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் ஒன்று பாதியாய் அடித்து வைத்துக்கொள்ளவும். 3 கடுக்காய்களை தோலை மட்டும் நீக்கி இந்த மருந்து பொள்களுடன் சேர்த்து, பனங்கல்கண்டு அரை கப், தண்ணீர் 3 கப் சேர்த்து கொதிக்கவிடவும். கஷாயம் பாதியாக சுண்டும்போது இறக்கவும். தினமும் இரு வேளை கால் கப் சூடாகக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.







Wednesday, 28 April 2010

பிரியமான விருதுகள்!!


விருதுகள் வழங்கிய சகோதரி கிருஷ்ணவேணிக்கு என் இதயங்கனிந்த நன்றி!

இதில் கீழுள்ள ராணி விருதை

சகோதரிகள் கெள்சல்யாவிற்கும் பிரபாவிற்கும்,
கீழுள்ள ராஜ விருதை
சகோதரர்கள் குமார், மோகன்குமார், அஹமது இர்ஷாத் ஆகியோருக்கும்,
கீழுள்ள ‘சிறந்த உணவு வலைத்தளத்திற்கான’ விருதை
சகோதரி ஆசியாவிற்கும்
அன்புடன் பகிர்ந்தளிக்கிறேன்!

Thursday, 22 April 2010

அன்பென்பது.. .. ..

அன்பென்பது தண்மை என்று புலவர் சொன்னார்- ஆனால்
                   அதுவும் தணலாய் சுட்டது சில நேரம்!

                   அன்பென்பது அழகென்று அறிஞர் சொன்னார்-ஆனால்
                   அதுவும் சிதைந்து அழிந்தது சில நேரம்!

                    அன்பென்பது மலரென்று கவிஞர் சொன்னார்-ஆனால்
                    அதுவும் சருகாய் உதிர்ந்தது சில நேரம்!

                    அன்பென்பது உண்மையென்று கற்றோர் சொன்னார்-ஆனால்
                     அதுவும் பொய்யாய்க் கரைந்தது சில நேரம்!

                    அன்பென்பது தெய்வமென்று பெரியோர் சொன்னார்-ஆனால்
                    அதுவும் சிலையாய்ப் போனது சில நேரம்!

                    அன்பென்பது அமுதமென்று சிலர் சொன்னார்-ஆனால்
                     அதுவும் விடமாய்ப்போனது சில நேரம்!

                    அன்பென்பது இசையென்று பலர் சொன்னார்-ஆனால்
                    அதுவும் ஸ்ருதி கலைந்து போனது சில நேரம்!

                    அன்பென்பது யாதென்று அலைந்து நின்றேன்!
                    அறிந்தபோது உனர்ந்தபோது அசந்து நின்றேன்!

                    அன்பென்ற தண்மைதான் மழலைதன் விரல் தொடுகை!
                    அன்பென்ற உண்மைதான் மழலைதன் புன் சிரிப்பு!

                     அன்பென்ற அழகுதான் மழலைதன் தளிர் நடை!
                     அன்பென்ற கடவுள்தான் மழலைதன் குளிர்ப்பார்வை!
                     அன்பென்ற மலர்தான் மழலைதன் எழில்முகம்!

                     அருஞ்சுவைக் கற்கண்டும் அருமருந்தும் தோற்குமே
                     அன்பென்ற அமுதமாம் அழகு மழலைப் புன்சிரிப்பில்!

                  
அன்பென்பதற்கு பல இலக்கணங்களுண்டு. அரச காலப் புலவர்கள் முதல் இன்றைய கவிஞர்கள் வரை அன்பைப்பற்றி பாடாத பாடல்கள் இல்லை. அதை செவிப்புலன் அற்றவர் கூட கேட்க முடியும். குரலிழந்தோர்கூட பேச முடியும். பார்வையிழந்தோர்கூட பார்க்க முடியும். அன்றைய காலத்தில் அன்பை முன் வைத்துத்தான் திரைபப்டங்கள், நாவல்கள், பாடல்கள் தோன்றின. காதலும் பாசமும் நட்பும் உண்மையான அன்பையும் சத்தியத்தையும் பிரதானமாக வைத்து வளர்ந்தன. இன்றைக்கு எல்லாமே முன்னணியில் நிற்கின்றன, உண்மையான அன்பைத்தவிர!

சிறு வயதில் பெற்றோர் பாசம், பள்ளி வயதில் ஆசிரியரிடம் அன்பு, இளம் வயதில் காதல், அதன்பின் குழந்தையிடம் பாசம்-இப்படி வலைப்பின்னல்களாய் அன்பு ஏதாவது ரூபத்தில் நம்மை பின்னிப் பிணைந்து மனதின் ஈரத்தைக் காத்துக்கொண்டேயிருக்கிறது. ஆனால் பல வருடங்களின் வாழ்வியல் அனுபவங்களுக்குப் பின்னாலும் அன்பின் இலக்கணம் முழுமையாகப்புரிவதில்லை. இதயத்தின் தேடலுக்கு மனதில் எழுந்த பதில் சிறு முயற்சியாக, கவிதையாக இங்கே வெளிப்பட்டிருக்கிறது!

படத்திற்கு நன்றி தமிழாக்கம் வலைத்தளத்திற்கு!

Saturday, 17 April 2010

கண்ணாடி ஓவியம்-2

இதுவும் கண்ணாடி ஓவியத்திற்கான கலர்களை வைத்து அவுட்லைன் வரைந்து அதன் பிறகு ஆயில் கலர் போல ஷேட்ஸ் கொடுத்திருக்கிறேன். ஓவியத்தை அரை மணி நேரத்திற்குள் வரைந்து முடித்து விட்டாலும் நகைகள் வரைய நேரம் பிடித்தது.

Tuesday, 13 April 2010

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


என் ‘முத்துச்சிதறலுக்கு’ வருகை தந்து கருத்துரைகளும் வழங்கி வரும் என் அன்பு சகோதர, சகோதரியர்க்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


ரஸ மலாய்

சமையல் பகுதியில் முதன்முதலாக ‘ரஸ மலாய்’ என்னும் இனிப்புடன் ஆரம்பிக்கிறேன். இதில் பல வகைகள் இருக்கின்றன. ரிக்கோட்டா சீஸ் வகையை உபயோகித்தும் ரஸ மலாய் செய்யப்படுகிறது. ஆனால் எல்லா வகைகளையும் விட இந்த பக்குவம் மிகவும் சுவையானது மட்டுமல்ல, சுலபமானதும்கூட. என் நெருங்கிய உறவினரிடம் இதை நான் 30 வருடங்களுக்கு முன்னர் கற்றுக்கொண்டேன். இதன் சுவை அறிந்த பின், நான் மற்ற ரஸ மலாய் வகைகளிடம் போனதேயில்லை.



செய்யத் தேவையான பொருள்கள்:


பால் பவுடர் [full cream]- 1 1/4 கப்+20 டீஸ்பூன்
மைதா மாவு- 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர்- 1 டீஸ்பூன்
சீனி- 8 மேசைக்கரண்டி
குங்குமப்பூ- ஒரு சிட்டிகை
மெல்லியதாக சீவிய பாதாம் பருப்பு- 1 மேசைக்கரண்டி
மெல்லியதாக சீவிய பிஸ்தா- 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பவுடர்- அரை டீஸ்பூன்
எண்ணெய்-1 மேசைக்கரண்டி
முட்டை-1
தண்ணீர் - 4 கப்
செய்முறை:

1 1/4 கப் பால் பவுடர், பேக்கிங் பவுடர், மைதா மூன்றையும் மூன்று முறை சலிக்கவும்.
எண்ணெய், முட்டை கலந்து பிசையவும்.
சில சமயம் முட்டை பெரியதாய் அதிக நீர்ப்பசையுடன் இருந்தால் பிசையும் மாவு கொழகொழவென்று போகலாம்.
அந்த மாதிரி சமயத்தில் மேலும் சிறிது பால் பவுடர் சேர்க்கலாம்.
பிசைந்த மாவு கிளாஸ் போல பளபள்ப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
சிறிய அரை நெல்லிக்காய் அளவு உருண்டைகள் செய்யவும்.
உருண்டைகள் உருட்டும்போது கைகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காமல் உருட்டவும்.
மீதி பால் பவுடரை தண்ணீரில் கரைத்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்கும்போது குங்குமப்பூவையும் சீனியையும் சேர்க்கவும்.
இப்போது ஐந்து உருண்டைகள் கொதிக்கும் பாலில் போடவும்.
உருண்டைகள் உடனேயே வெந்து மேலெழும்பி வரும்.
உடனேயே ம்றுபடியும் ஐந்து உருண்டைகள் போடவும்.
இதுபோல அனைத்து உருண்டைகளும் பாலில் போட்டு வெந்து மேலெழும்பியதும் சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஏலப்பொடியை தூவி மெதுவாக கலக்கவும்.
பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்புகளைத் தூவி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து நன்கு குளிர்ச்சியடைந்ததும் பரிமாறவும்.

Wednesday, 7 April 2010

முதுமை!


இன்றைய இளம் பெண்களுக்கு!

காலச்சுழற்சிகளில் வசந்த காலம் மறைந்து இலையுதிர்காலத்தில் உடல் வலிமை, மன வலிமை குறைந்து ஆயிரம் ஏக்கங்களுடனும் வலிகளுடனும் தன் நாட்களை கழிக்கும் முதியவர்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பங்களாய் வாழ்ந்த காலத்தில் முதுமையிலும் குடும்பத்தில் அவர்களுக்கு பங்கிருந்தது. ஆக்கப்பூர்வமான சிறுசிறு வேலைகள் உற்சாகத்தைத் தந்து அவர்கள் மனதை பாதுகாத்தன. பேரக்குழந்தைகள் அவர்களுக்கு பாரமாக இருந்ததில்லை. ஆனால் இன்றோ, மகன் மருமகள் தத்தம் பணிகளுக்குச் செல்வதால் அவர்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது அவர்களுக்கு முழு நேர கடமையாகி விடுகிறது. வயதின் சுமை, பல வருட உழைப்பு இவைகளெல்லாம் தினசரி வேலைகளை சுவாரஸ்யமே இல்லாததாக ஆக்கி விடுகின்றன. இன்னுமே உழைப்பா, இனியும் ஓய்வில்லையா என்ற கேள்விகளும் சார்ந்திருத்தலும் அவர்களை தளர வைத்து விடுகின்றன.

ஒரு ஹிந்திப் படம். பெயர் நினைவில்லை. அமிதாப் பச்சன் நடந்து போகும்போது சற்று தடுமாறுவார். அருகில் இருந்த மகன் அவரைத் தாங்கி உதவும்போது அமிதாப் அந்த உதவியை மறுப்பார். அப்போது அந்த மகன் ‘ நான் சின்னப் பையனாக இருந்தபோது இப்படி தடுமாறியபோது நீங்கள்தானே என்னை நடை பழக்கி என்னை தடுமாறாமல் நடக்க வைத்தீர்கள். அதை இப்போது நான் உங்களுக்குச் செய்யக் கூடாதா?’ என்று கேட்பார். இந்த அன்பும் அக்கறையும் பரிவும் ஒவ்வொரு மகனிடமும் மருமகளிடமும் இருக்குமானால் இன்றைக்கு முதியோர் இல்லங்கள் பெருகியிருக்கத் தேவையில்லை.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு முதியோர் இல்லத்திற்குச்சென்று அங்குள்ள அனைவருக்கும் உணவளித்தபோது மனம் அப்படியே கனத்துப் போனது. எத்தனை வலி அந்த கண்களில்! அந்த இல்லத்தில் அவர்களை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்தான். அடிக்கடி போவதால் அதைப்பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் கவனிப்பும் வேளாவேளைக்கு சாப்பாடும் மட்டும் அவர்களுக்கு இந்த வயதில் போதுமா? கருணை மட்டும் அவர்களுக்கு மன நிறைவைத் தந்து விடுமா?அவர்களின் மன வலி எதனால் போகும்? தன் ரத்த உறவுகளின் அன்பான கவனிப்பினால்தானே போகும்? இது ஏன் இன்றைய இளம் ரத்தங்கள் நிறைய பேருக்கு புரிவதில்லை? வயதாக வயதாக, ஒரு சிறு குழந்தையின் மனமும் உடலுமாக, உடல் குறுகி, நோய் பெருகி தள்ளாட்டமாய் நடக்கையில் அவர்கள் நெஞ்சில் தேன் வார்ப்பது எது? அவர்களின் பிள்ளைகளின் அன்புதானே?

உட்கார்ந்து நலம் விசாரித்து, அன்பும் அக்கறையுமாக பேசக்கூடிய மகன்கள் இன்றைக்கு குறைந்து வருகிறார்கள். தலைமுறை இடைவெளியை மதிக்கத் தெரிந்த இளையவர்கள் இன்று பெரும்பாலும் அருகிவிட்டார்கள். சுயநலம், அவசர யந்திரத்தனமான வாழ்க்கை, இதெல்லாம் தன்னைப் பெற்று வளர்த்தவர்களையே மறக்க வைக்கிறது.

ஒருமுறை எங்கள் குடும்ப நண்பர் என்னிடம் ‘நீங்களெல்லாம் மஞ்சள் குங்குமத்துடன் போய்ச்சேர வேண்டும் என்பீர்கள்! அது எத்தனை சுய நலம்! இத்தனை வருடங்கள் உங்களையே சார்ந்து வாழப் பழகி விட்டோம். எங்களுக்கு உடல் நலமில்லாது படுக்கையில் சாய்ந்தால் திருமணமாகிச் சென்று விட்ட மகளும் துடைத்து விட முடியாது. மருமகளும் செய்ய முடியாது. ஆனால் நாங்களே இல்லாமல்போனால்கூட, அவர்களால் உங்கள் உடம்பை துடைக்கவும் வாந்தி எடுத்தால்கூட அருவருப்பிலாமல் செய்யவும் முடியும்’ என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

இங்குதான் நான் இன்றைய இளம் பெண்களிடம் வருகிறேன்.

உங்களை எப்படி உங்கள் பெற்றோர் அருமை பெருமையாக வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்கிறார்களோ, அதே மாதிரிதான் உங்கள் கணவரைப் பெற்றவர்களும் சீரும் சிறப்புமாக வளர்த்து தங்கள் மகனை உங்கள் கையில் ஒப்படைக்கிறார்கள். உங்கள் பெற்றோர் உங்களைப் பிரிந்த போது அவர்களுக்கு எந்த அளவு மன வலி இருந்ததோ, அதே அளவு உங்கள் கணவரைப் பெற்றவர்களும் மன வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் இன்னும் கொடுமை, அவர்கள் மகனுடன் அருகிலேயே இருந்தாலும், மனதால் அவனைப் பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த விலகல் மகனுக்குத் திருமணம் செய்யும் ஒவ்வொரு தாயுன் தந்தையும் அனுபவிப்பதுதான். படித்தவர்களும், அனுபவமடைந்தவர்களும், அதிக சகிப்புத்தன்மை உடையவர்க்ளும் இந்த விலகலை சமாளித்துக் கொள்கிறார்கள். பக்குவமற்றவர்களாலும் அனுபவம் குறைந்தவர்களாலும் திடீரென்று வந்த இந்த விலகலை சீரணித்துக்கொள்ள முடிவதில்லை.

நீங்கள் எப்படி இப்போது உங்கள் குழந்தையை சீராட்டி வளர்க்கிறீர்களோ, அதே மாதிரிதான் அவர்கள் 30 வயது வரை தங்கள் மகனை வளர்த்து உங்களிடம் ஒப்படைக்கிறார்கள். அதுவரை இருந்த நெருக்கம், மனம் திறந்த பேச்சு, பகிர்தல் எல்லாமே திடீரென்று குறையும்போது அந்த மாமியாரால் அதை சமாளிக்க முடியாமல் திணறுகிறாள். தோழமைக்கு நேரம் குறையும்போது மாமனாருக்கோ மகனின் விலகல் சோர்வைக் கொடுக்கிறது. கோபம், ஆங்காரம், போட்டி, பொறாமை, பாதுகாப்பின்மை, கொந்தளிப்பு-இதெல்லாம் உருவாகுவது இப்படித்தான்.

இதன் காரணமாக அவர்கள் வார்த்தைகளை வீசி இறைப்பதையும் கோபத்தில் கொந்தளிப்பதையும் குறைகள் எதற்கெடுத்தாலும் கண்டுபிடிப்பதையும் நான் நியாயமென்று சொல்ல வரவில்லை. பாதுகாப்பின்மையென்ற உணர்வினால் அவர்கள் செய்கிற தவறுகளை நீங்கள் மன்னிக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் செய்கின்ற தவறுகளை கண்ணீருடனோ அல்லது மென்மையாகப் பேசியோ அவர்களை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுவரை வளர்ந்த இடத்திலிருந்து ஒரு செடியை அப்படியே வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைப்பதுபோல, புதிய இடத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்த உங்களுக்கு கடுஞ்சொற்களும் அலட்சியப்போக்கும் நிச்சயம் காயப்படுத்தும்.

ஆனால் மனித இதயம் அளவற்ற கருணையால்தான் முழுமை அடையும். உங்களுக்கு மன வலிமையும் உடல் வலிமையும் அதிகம். அவர்களை சிறு குழந்தையாக எண்ணி உங்களின் உள்ளத்துக் கருணையெல்லாவற்றையும் அவர்களிடம் காண்பியுங்கள். ஒரு தாயாக அவர்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள். உள்ளம் குளிர அவர்கள் சிரிக்கும் சிரிப்பு உங்களை பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வைக்கும். குடும்பம் ஒரு கோவிலாக இருந்தால் முதியோர் இல்லங்கள் எப்படி பெருகும்? ஆதரவு யாருமே இல்லாது போனவர்களுக்குத்தான் முதியோர் இல்லங்கள். ரத்தமும் சதையுமாக பெற்ற மக்கள் இருப்பவர்களுக்கு அல்ல.

படத்துக்கான நன்றி விக்கிபீடியாவிற்கு!!



Friday, 2 April 2010

கண்களில் கனவு!

இதுவும் வாட்டர் கலரில் நான் வரைந்த ஓவியம்தான். ஆனால் முந்தையதைப்போலல்லாமல் நிறைய ஷேட்ஸ் இதில் உபயோகித்திருக்கிறேன்.