Saturday, 2 April 2016

அந்த நாள் ஞாபகம்!!

 
திரு.மோகன்ஜி சொன்னது போல ஒவ்வொருத்தரும் தன் இளம் வயதில் தன் மனதுக்கு இனியவற்றை பொக்கிஷங்களாக சேகரிக்கிறார்கள்! சிலருக்கு அழகழகாய் குட்டிக்குட்டியாய் பொம்மைகள், சிலருக்கு சில கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள் என்று இந்த வ‌ரிசை நீண்டு கொண்டே போகும். அந்த வரிசையில் இங்கே எனது சில ஓவியங்கள்!!

மிகச் சிறிய வயதிலேயே என் பெற்றோர் எனக்கு கர்நாடக இசையை கற்க வைத்தார்கள். ஆனால் இசையுடன், இசையை விடவும் ஓவியம் வரைவதிலே தான் மனம் ஆழ்ந்து போனது. ஏதாவது காகிதத்தில் வரைந்து பார்க்க முயன்றதெல்லாம் வயது ஏற ஏற வண்ண‌க்கலவைகளில் மனம் அமிழ்ந்து போக ஆரம்பித்தது. எண்பதுகளில் அனுப்பிய ஓவியங்களை எல்லாம் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்தன. அப்போது வெளியான பல ஓவியங்களில் சில உங்கள் பார்வைக்கு!

1980களில் ஆனந்த விகடனில் என் சிறுகதை முதன் முதலாக வெளி வந்த போது, தனியாக நான் அனுப்பியிருந்த இந்த ஓவியத்தையும் வேறொரு சிறுகதைக்காக தேர்ந்தெடுத்து வெளியிட்டார்கள். அதன் பிறகு என் ஓவியங்கள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன... 
குங்குமத்தில் வெளி வந்த ஓவியம் இது!
இதுவும் கூட குங்குமத்தில் வெளியானது தான்!
இது மங்கையர் மலரில் வெளியானது!
இது தேவியில் வெளியானது!
 
என் இளமைக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த திரு நடராஜன் வரைந்த ஓவியத்தைப்பார்த்து வரைந்தது இது!
சாவியில் ஒரு ஓவியப்போட்டி வைத்தார்கள்! என் ஓவியம் முதல் பரிசு பெற்றது! பெரும்பாலும் என் ஓவியங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொன்டிருந்த காலம் அது! எல்லாமே சில வருடங்கள் தான்! வலது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட விபத்து என் ஓவிய ஆர்வத்திற்கு தடை போட்டு விட்டுத்தான் ஓய்ந்தது!