Wednesday, 14 December 2011

பறக்கத் துடிக்கும் பழுத்த இலைகள்!!

முதியோர் நலன் பற்றி நிறைய கருத்துரைகளும் அலசல்களும் ஏற்கனவே பத்திரிகைகளிலும் வார இதழ்கள், மாத இதழ்களிலும் ஏராளமாக வந்து விட்டன. முதியோர் இல்லங்களைப்பற்றியும் பல விதக் கருத்துக்கள், சோகங்கள் என்று எல்லாவற்றையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதிலிருந்து சற்று விலகி, இன்றைக்கு முதியோர்கள் தங்களின் மக்களுக்காக எந்த அளவு சுமைகளை தங்கள் தள்ளாத வயதிலும் சுமக்கிறார்கள் என்பதைப்பற்றியும் சொல்ல நிறைய இருக்கின்றன. சில சமயங்களில் அவர்களின் வேதனைகளைப் பார்க்கையில் மனது ரத்தக் கண்ணீர் வடிக்கின்றது. ஒரு ஆணாக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, வயது முதிர முதிர, அவர்களின் உடல் தளர ஆரம்பிக்கிறது. முன்போல வேலைகள் செய்ய முடியாமல் உடலின் பல பாகங்களிலும் பல வித நோய்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. மனம் சோர்வடைய ஆரம்பிக்கிறது. சாய்ந்து கொள்ள தோள்கள் தேடி, மனம் தவிக்க ஆரம்பிக்கிறது. ஆனால், அன்போ, அக்கறையோ, ,சினேகிதமோ எதுவுமே கிடைக்காமல், இன்னும் அதிகமான சுமைகளும் பொறுப்புகளும் மனதையும் உடலையும் அழுத்த, தனிமையில் வேதனையை அனுபவிக்கும் பழுத்த இலைகள் எத்தனை எத்தனை!!





சமீபத்தில் எங்கள் குடும்ப நண்பர் வீட்டிற்கு வந்திருந்தார். 80 வயதைத் தாண்டியவர் அவர். 30 வருடங்களுக்கு முன்பே மனைவியை இழந்தவர். இரண்டு மகன்களும் ஒரு மகளும் அவருக்கு. மகளுக்கு நல்ல இடத்தில் திருமணமாகி விட, மகன்களில் மூத்தவருடன்தான் இவர் இருக்கிறார். இரண்டாம் மகன் மன வளர்ச்சி குன்றியவர். மூத்த மகனுக்கு இரண்டு மகள்கள். மருமகள், மகன் இருவருக்குமே அதிகமான சர்க்கரை அளவு. 15 வருடங்களுக்கு முன் எங்கள் இல்லத்தில் கீழ்த்தளத்தில் குடியிருந்தார். விடியற்காலை மருமகள் எழுவதற்கு முன்பேயே, வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளித்து, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருப்பார். இந்த வேலையை முடித்து விட்டு, மருமகளை எதிர்பார்க்காமல் தன் இளைய மகனுடன் தெருவோரத்திலுள்ள டீக்கடைக்கு நடந்து சென்று காப்பி குடித்து வருவார். சில சமயங்களில் சீக்கிரம் எழுந்து விட்டால், நானே காப்பி கொடுத்து விடுவேன். என்னை தான் பெறாத மகள் என்று அடிக்கடி சொல்லுவார். அதிக சர்க்கரையால் அவதியுறும் அவர் தன்னைப்பற்றி கவனிக்க முடியாமல், எப்போதும் அடுத்தவருக்காக ஏதாவது உதவி செய்து கொண்டே தான் இருப்பார். துணையின் அவசியம், அன்பு, தோழமை எல்லாமே வயது ஏற ஏற அதிகமாகி விடுகிறது. இவரோ, அந்தத் துணையும் இல்லாமல், தனது உடல் வேதனைகளையும் கவனித்துக்கொண்டு, வீட்டிலிருப்போரையும் கவனிக்க வேண்டிய நிலைமையிலிருக்கிறார்.

அவரின் மூத்த மகன் வேறு ஒரு திருமணமான பெண்ணிடம் தொடர்பு கொண்ட போது துடித்துப்போய் மகனை வெறுத்தே விட்டார். அந்தப் பெண்ணை அப்புறப்படுத்த சாம, தான, பேத, தண்டம் என்ற பல வழிகளையும் கையாண்டு அது வெற்றி பெற்றதும்தான் அமைதியடந்தார். அதற்கப்புறம் இவரின் மகன் அதிக அளவு சர்க்கரையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் அவரைச் சென்று பார்க்காமலேயே இருந்தார். அந்த அளவு வெறுப்பு மனதில் படர்ந்து விட்டது. வயதுக்கு வந்த இரு பெண்கள் வீட்டில் இருக்கையில் அவர்களின் தந்தை இப்படி தலை குப்புற விழுந்த விதம் அவரைப் பாதித்து விட்டது. அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் அந்தப் பெண்ணுக்காக தன் மகன் வட்டியுடன் வாங்கியிருந்த கடனை இவர் கஷ்டப்பட்டு அடைத்தார். தன் முதல் பேத்திக்கு நல்ல வரனாகப்பார்த்து திருமணம் செய்வித்து, பிரசவம்வரை பார்த்து விட்டார். தன் இரண்டாம் மகனுக்கு, தன் பென்ஷன் பணமும் சேர வேண்டி, அதற்கான உயிலும் எழுதி வைத்து விட்டார். ‘எப்போது அழைப்பு வருமோ, யாருக்குத் தெரியும்?’ என்று அடிக்கடி சொல்லுவார்.

சமீபத்தில், இவரின் முதல் மகன் மறுபடியும் படுக்கையில் விழுந்து விட்டார். வி.ஆர்.எஸ் வாங்க நிறைய முயற்சி செய்தும் அது முடியாமலேயே போய் விட்டது. அதற்கு தான் பட்ட சிரமங்களை என்னிடம் எடுத்துச் சொல்லி, ‘ வி.ஆர்.எஸ் கிடைக்காததும் ஒரு வகையில் நல்லது தான். வேலை பார்க்கும்போதே இறந்து போனால், என் மருமகளுக்காவது பென்ஷன் கிடைக்குமல்லவா?’ என்று வேதனையுடன் சொன்னபோது, இனம் புரியாத வலி ஒன்று மனதை ஆக்ரமித்தது.

இந்த வயதில் மகனின் அன்பும் மருமகளின் பணிவிடையும் பேரன் பேத்திகளின் கொஞ்சலும் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.. அவருக்கான தேவைகளை அக்கறையுடன் கவனிக்க அன்பான உறவுகள் அருகிலிருக்க வேண்டும். அதற்கு நேர்மாறாக இவரின் வாழ்க்கை அமைந்து விட்டது.

ஊருக்கு வரும்போதெல்லாம், என்னால் முடிந்த அளவு அவருக்கு ஆறுதல் தரும் விதமாய் பேசிக்கொண்டிருப்பேன். அடிக்கடி சமைத்துக் கொடுப்பேன். தன் இரு கரங்களாலும் என்ன்னையும் என் கணவரையும் தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கும்போது, கோடிச் செல்வங்களும் இதற்கு ஈடாகாது என்று மனம் மகிழ்வடையும். ஆனால் அவரது வேதனைகள் எதால் தீரும்?

உதிரக்காத்திருக்கும் பழுத்த இலைகள் அனுபவித்துக்கொண்டிருக்கும் சோதனைகள் தொடர்கின்றன..

படங்கள் உதவி: கூகிள்