அவர்களுடைய வலைத்தளத்தில் ‘ A WORLD WITHOUT
BORDER ‘ என்னும் வாசகம் அமைந்திருக்கும். அது உண்மை தான்!
ஒவ்வொரு ஸ்டாலையும் உலகின் ஒவ்வொரு நாட்டு மக்களும் ரசித்து அனுபவிப்பதுடன்
அந்தந்த நாட்டு பொருள்களையும் வாங்கிச் செல்வார்கள்!!
சென்ற
வருடம் வழக்கம்போல அக்டோபரில் குளோபல் வில்லேஜ் திறந்தது. இந்த வருடம் ஏப்ரலில் மூடியது.
ஒவ்வொரு வருடமும் 90க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ஸ்டாலை பிரம்மாண்டமாக, அசத்தும்
அழகுடன் வடிவமைப்பது வழக்கம். அதே போல ஒவ்வொரு வருடமும் புதுமையான நிகழ்வுகளும்
பொழுது போக்கு அம்சங்களும் கூடுதலாய் அமைந்திருக்கும். எப்போதும் இந்திய ஸ்டால்
நம் நாட்டின் புகழ் பெற்ற ஏதேனும் கோட்டைவடிவிலே தான் அமைந்திருக்கும்! இங்கே 200க்கும்
மேற்பட்ட உணவகங்கள் பல நாடுகளின் உனவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும். வாருங்கள், ஒவ்வொரு நாட்டையும் பார்க்கலாம்.
இந்தியாவும் லெபனானும் எதிர் எதிரே-நடுவே கால்வாய்
செளதி அரேபியா
ஈரான் ஸ்டாலின் வெளிப்பக்கம்
ஈரான் ஸ்டால் நுழைவாயில்-உள்ளே கடைகள்!!
எகிப்து, பஹ்ரைன், துருக்கி
தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் கால்வாய்களின் இரு புறமும் கடைகளும் கால்வாயிலேயே மிதக்கும் கடைகளும் உண்டு. இங்கும் அதே ஸ்டைலில் floating market அமைத்திருக்கிறார்கள். நுழைவாயிலில் இருக்கும் அலங்காரம் இது!!
ஒரு பகுதி நாடுகளின் படங்களைத்தான் இத்துடன் இணைத்திருக்கிறேன். இவற்றை
பார்த்து, கடப்பதற்கே மூன்று மணி நேரம் ஆனதுடன் உடலும் களைத்து விட்டது. எந்த தடவையுமே
அனைத்து நாடுகளையும் பார்த்ததில்லை. அடுத்த குளோபல் வில்லேஜ் தொடங்கி விட்டது. இந்த
தடவையாவது நிறைய நாடுகளைப்பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!!
மலேஷியா, இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் நாடுகளை பார்ப்பதற்கு ROAD OF ASIAவில் நுழைய வேண்டும்!!
கேரளாவின் 28 வயது இளைஞர் ரஞ்சித். கேரளாவின் காசர்கோடு பகுதியின் மலைக்கிராமம்
தான் அவரின் சொந்த ஊர். அவரின் தந்தை தையல்காரர், அம்மா தினக்கூலி. பூச்சு
கூட இல்லாத செங்கல் கொண்ட சுவர், ஓடுகள் வேயப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே இருக்கும் ஓட்டையால் மழையில்
வீடு ஒழுகாமல் இருக்க பொத்தப்பட்டிருக்கும் தார்ப்பாய், கதவில்லாத வாசல்.
இது தான் தான் ரஞ்சித்தின் வீடு. அந்த வீடு தான் ரஞ்சித்தின் பயணத்தை ஆரம்பித்து
வைத்துள்ளது.
தையல்காரராக பணிபுரிந்த ராமச்சந்திரன் நாயக்கிற்கும், கிராமப்புற வேலை
உத்தரவாத திட்டத்தின் கீழ் தினசரி கூலித் தொழிலாளியாக இருந்த பேபி ஆர்
என்பவர்களுக்கு பனதூரில் உள்ள கேலபங்காயத்தில் பிறந்தார் ரஞ்சித். மராத்தி
பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் 5 ஆம் வகுப்பு வரை
மட்டுமே படித்திருந்தனர். இருப்பினும், கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்திருந்ததால், ரஞ்சித்தை
வெல்லாச்சலில் உள்ள பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்காக அரசு நடத்தும்
மாதிரி குடியிருப்புப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். அரசுஉதவியால் பள்ளிப்படிப்பை முடித்த பின்
கல்லூரியில் பொருளாதாரப்பிரிவில் பி.ஏ சேர்ந்தார். இனி அவரின் மொழியில்.....
“ வீட்டில் இருக்கும் நிலைமையின் காரணமாக கல்லூரி சென்று படிப்பை
தொடர்வது கடினம் என்பதை உணர்ந்த நேரம் அது. குடும்பத்திற்கு உதவுவதற்காக படிப்பை
நிறுத்துவது தொடர்பாகக் கருதி கொண்டிருந்தபோது எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம்
இருந்தது.
பனத்தூரில் உள்ள பி.எஸ்.என்.எல் தொலைபேசி பரிமாற்றத்தில் இரவு
காவலாளி வேண்டும் என்ற வேலை விளம்பரம் ஒன்றைக் கண்டேன். அதற்கு விண்ணப்பித்த எனக்கு ‘அதிர்ஷ்டவசமாக’, வேலை கிடைத்தது.
நான் அங்கு ஒரு காவலாளியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். நான் இளநிலை மற்றும்
முதுநிலைப் பட்டம் பெறும் நாட்கள் வரை அந்த வேலையை பார்த்தேன். தினமும், காலையில் மாணவன், இரவில் வாட்ச்மேன்.
இது தான் அப்போது எனது வாழ்க்கை. ஆரம்பத்தில் வேலைக்குச் சேரும்போது எனது சம்பளம்
மாதத்திற்கு ரூ.3,500 என்றாலும், ஐந்தாம் ஆண்டில் அது மாதத்திற்கு ரூ.8,000 ஆக உயர்ந்தது. நான்
பகலில் படித்தேன், இரவில் வேலை செய்தேன்.
நான் இளநிலைப் படிப்பில் சேர்ந்த செயின்ட் பியஸ் எக்ஸ் கல்லூரி
எனக்கு மேடைகளில் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தது என்றால், இந்த உலகம்
இன்னுமும், இந்த இடத்தை தாண்டியும் இருக்கிறது என்பதை முதுநிலை படிப்பு
படித்தால் என்ன பயன் என்பதை செண்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் கேரளா எனக்கு
கற்றுத்தந்தது.
அந்தப் படிப்பினையால் ஐஐடி மெட்ராஸ் என்ற பெரிய உலகத்தை அடைந்தேன்.
ஐஐடி ஒரு விசித்திரமான இடம். அங்கு சேர்ந்தபோது ஒரு கூட்டத்தின் நடுவில் தனியாக
இருப்பதைப் போல முதல்முறையாக உணர்ந்தேன். என்னால் இனி இங்கு இருக்க முடியாது என
என் மனம் என்னிடம் அடிக்கடி சொல்லத் தொடங்கிய காலகட்டம். சென்னைக்கு வருவதற்கு
முன்பு, நான் மலையாளத்தில் மட்டுமே பேசப் பழகியவன் நான். அதனால் அங்கு நான்
பேசக்கூட பயந்தேன். அதனால் பிஎச்டியை கைவிட முடிவு செய்தபோது தான் எனது வழிகாட்டி
டாக்டர் சுபாஷ் சசிதரன் என் முடிவு தவறு என்பதை எனக்கு உணர வைத்தார். ஒருமுறை மதிய
உணவிற்கு என்னை வெளியே அழைத்துச் சென்று தோல்வியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அதை
எதிர்த்து ஒரு முறை போராடத் தூண்டினார். அப்போதிருந்து, வெற்றிபெறவும், அதற்கான
போராட்டத்தை தொடரவும் முடிவெடுத்தேன். சுபாஷ் சாரின் மாணவர்கள் பலர் முதன்மையான
நிறுவனங்களில் பணிபுரிந்தனர். நானும் அந்த இடங்களுக்குச் செல்ல விரும்பினேன்.
4 ஆண்டுகளில் பிஎச்டியை முடித்தேன். கடந்த அக்டோபரில், ஐ.ஐ.எம்-ராஞ்சியில்
உதவி பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தேன். அதன்படி பணியில் சேர்த்துள்ளேன். நான்
செய்த முதல் விஷயம் என்னவென்றால், என் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கு ஒரு வீடு கட்ட கடன் வாங்க விண்ணப்பித்தேன்.
இந்த கடன் கிடைப்பதற்கு முன்பாகவே ஐ.ஐ.எம்-ராஞ்சியில் உதவி பேராசிரியர் பணி
கிடைத்தது. பனத்தூர் மலைப்பகுதியில் இருந்து தொடங்கியது என்னுடைய இந்த பயணம்.
குடிசையில் இருந்து ஐஐஎம் ராஞ்சி வரையான இந்த பயணம் அவ்வளவு சுலபமானதாக இருந்துவிட
வில்லை. ஆம், இந்தப்பயணத்தில் என்னுடன் சேர்ந்து என் பெற்றோர்களும்
பாதிக்கப்பட்டனர். எங்களுடையது போலவே ஆயிரம் குடிசைகள் இருக்கின்றன. அந்த
குடிசைகளில் இருந்த பல கனவுகள் தொடங்குவதற்கு முன்பாகவே மடிந்துள்ளது. இனி அப்படி
நடக்க கூடாது. இனி இதுபோன்ற குடிசைகளில் இருந்து பல வெற்றிகரமான கதைகள்
வரவேண்டும். எல்லோரையும் சுற்றி இடிந்து விழுந்த சுவர்கள் இருக்கலாம். அதை கண்டு
பயந்து உங்களின் கனவை காண்பதை நிறுத்தாதீர்கள். நீங்கள் காணும் கனவு ஒருநாள்
நிச்சயம் நனவாகும். சுயவிளம்பரத்துக்காகவோ, பெருமைக்காகவோ இதனை நான் பதிவு செய்யவில்லை. என்னுடைய வாழ்க்கை
பலருக்கு உத்வேகத்தை அளிக்கும் என நண்பர்கள் கூறியதால், எனது பயணம், எனது வரிகள் இது
ஒரு நபரின் கனவுகளுக்காவது உத்வேகம் கொடுக்கும் என்பதால் இதனை பொதுவெளியில்
பதிவிட்டேன், “
எனக் கூறியிருக்கிறார் ரஞ்சித்.
மருத்துவ முத்து:
தொண்டை சளிக்கும் எப்போதும் தொல்லை குடுக்கும் தொண்டை
கரகரப்பிற்கும் ஒரு எளிய மருத்துவம் இருக்கிறது!
நாட்டு
மருந்து கடைகளில் கண்டங்கத்திரி பொடி கிடைக்கும். அதை அரை ஸ்பூன் எடுத்து அது கரையும்
வரை சிறிது தேன் கலந்து கிளறி நாக்கில் வைத்து சப்பி சப்பி சாப்பிட வேண்டும். காலை,
இரவு ஆகாரத்திற்குப்பின்
தண்ணீரெல்லாம் குடித்து முடித்து பிறகு இது போல செய்தால் தொண்டையிலே இந்த மருந்து தங்கி
நிற்கும். இரண்டு வேளகளிலேயே நிறைய குணம் தெரியும்.
இசை முத்து:
தொண்ணூறுகளில் வெளி வந்த மலையாள திரைப்படம் ‘ மழையெத்தும் முன்பே’. இந்தப்படத்தில் மிக இனிமையான
ஒரு பாடல்! ‘ எந்தினு வேறொரு சூர்தோயம்?’ என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை ஜேசுதாஸும் சித்ராவும் அத்தனை இனிமையாக பாடியிருப்பார்கள்.
சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த இந்த பாடலை பலரும் பல மேடைகளில் பாடியிருக்கிறார்கள்.
இது மலையாள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய பாடல். பாடலை ரசித்து கேட்பீர்கள் என்று நினைக்கிறேன்!!