சர்க்கரை நோயின் தாக்கம் உடலின் பல உறுப்புகளை நாளடைவில் பாதிக்க ஆரம்பித்தாலும் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் சிறுநீரகத்தை பல விதங்களிலும் கடுமையாக தாக்க ஆரம்பிகிறது. சிறுநீரகங்கள் சுருங்க ஆரம்பிக்கின்றன. சிறுநீர்ப்பை, சிறுநீர்த்தாரைக்களில் அடிக்கடி தொற்றுக்கள் ஏற்படுகின்றன. நமது சிறுநீரகங்களில் மில்லியன் கணக்கான நெஃப்ரான்கள் உள்ளன. இந்த நெஃப்ரான்கள் தான் நம் உடம்பில் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையை செய்கிறது. எனவே சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இந்த நெப்ரான்கள் கழிவுகளை வடிகட்டும் செயல்திறனை இழக்கின்றன. நாளடைவில் சிறுநீரில் புரதம் வெளியேற ஆரம்பிக்கும்.
இந்த புரதம் கழிதல் சிறுநீரக பாதிப்பால் தான் வந்ததா அல்லது சர்க்கரை நோயை தவிர்த்து பிற நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். அதிக அளவில் வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளுதல், தொண்டை வலி போன்றவற்றாலும் புரதம் கழிதல் வரும். கண்டு கொள்ளாமலோ, கண்டு பிடிக்காமலோ இருந்தால் 4-வது நிலையில் ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும், 5-வது நிலையை அடையும்போது யூரியா கிரியேட்டின் மிகவும் அதிகரித்து விடும். உடலில் தங்கி இருக்கும் அசுத்தங்கள் வெளியேற முடியாமல் தங்கி விட நேரும் போதுதான் கிரியேட்டின் உடலில் அதிக அளவில் இருக்கும். இது கடுமையான சிக்கல்களை உருவாக்கி விடும். சிலருக்கு சர்க்கரை நோய் உடலில் இருக்கிறது என்று கண்டு பிடிக்கும்போதே இந்த புரதமும் சிறுநீரில் வெளியேறிக்கொண்டிருக்கும். நிறைய மருத்துவ மனைகளில் இந்த குறைப்பாட்டை கண்டு கொள்வதில்லை. சர்க்கரை நோய்க்கு மட்டுமே மருந்துகள் தருகிறார்கள். அதனால் நோயாளிக்கு தன் மிகப்பெரிய பிரச்சினை தெரிவதில்லை. வருடக்கணக்கில் இது தெரியாமலேயே இருந்து தாமதமாக யாராவது ஒரு மருத்துவரால் தெரிய வரும்போது புரதம் அதிகமாக வெளியேறும் நிலை வந்திருக்கும்.
நானும் ஒரு சிறுநீரக மருத்துவரிடமும் கேட்டிருக்கிறேன், “ மருத்துவ பரிசோதனைகளில் புரதம் அதிகமாக வெளியேறுகிறது என்று இருக்கும்போது அதை ஏன் நீங்கள் நோயாளிகளிடம் சொல்லுவதில்லை? “என்று! அதற்கு அந்த மருத்துவர் சொன்னார் “ நீங்கள் படித்திருக்கிறீர்கள், அதனால் நீங்கள் கேட்கிறீர்கள். நாங்கள் அதைப்பற்றி சொல்கிறோம். ஆனால் பொதுவாக நோயாளிகளிடம் இதையெல்லாம் நாங்கள் சொல்லுவதில்லை. “ என்றார். எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இன்னொரு மருத்துவர் கிரியாட்டினினும் யூரியாவும் சரியான நிலையில் இருக்கும் வரை நாங்கள் புரதம் வெளியேறுவதைப்பற்றி கவலைப்படுவதில்லை. எப்போது கிரியாட்டினின் இரண்டு பாயிண்டுக்கு மேல் போகிறதோ அப்போது தான் நாங்கள் மருத்துவம் செய்ய ஆரம்பிப்போம் “ என்றார். அதையே துபாயின் புகழ் பெற்ற சிறுநீரக மருத்துவரும் ஆமோதித்தார். துபாயிலுள்ள என் குடும்ப மருத்துவரும் “ இந்தப்பிரச்சினைக்கு மருத்துவ உலகில் ஆரம்ப நிலையிலேயே இதை குறைப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ சிகிச்சை கிடையாது என்பது தான் உண்மை! “ என்றார்.
ஒரு சர்க்கரை நோயாளிக்கு மருத்துவ பரிசோதனையில் புரதம் வெளியேறுவது தெரிய வரும்போது, மருத்துவர் நோயாளிக்கு புரதம் வெளியேறும் அளவைப்பொறுத்து எந்த அளவு அவர் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும், எவற்றையெல்லாம் அவர் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறுதல் மிகவும் அவசியம். அதிர்ஷ்ட வசமாக, எல்லா சர்க்கரை நோயாளிகளுக்கும் புரதம் வெளியேறுவதில்லை. சிலருக்கு மட்டுமே புரதம் வெளியேறுகிறது. ஜீன்ஸ் காரணம் என்கிறார்கள். வலிக்கான மாத்திரைகளில் பாரசிட்டமால் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அலோபதியில் புரதம் கழிதல் நோயுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட அளவு புரதம் எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறார்கள். அசைவ உணவுகளில் அதிக சதவிகிதம் புரதம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு அவற்றையும் எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறார்கள். ஆனால் சித்த வைத்தியத்தில் அசைவ உணவுகளை அறவே அனுமதிப்பதில்லை. காளான் உணவுகளைக்கூட அவர்கள் மறுக்கிறார்கள். புரதம் வெளியேறும் அளவினை கணிக்க 24 hours urine test செய்வதுண்டு. 24 மணி நேரங்களில் வெளியேறும் சிறுநீரை சேமித்து கொடுக்கச் சொல்வார்கள். பரிசோதனை சாலையில் அந்த சிறுநீரில் எவ்வளவு புரதம் வெளியேறி இருக்கிறது, குறித்த அளவிற்குட்பட்டு இருக்கிறதா, அல்லது எந்த அளவு அதிகமாயிருக்கிறது என்று கணக்கிடுவார்கள். ஆனாலும் அளவுக்கு அதிகமாக வெளியேறும் புரதத்தை குறைக்க எந்த மருத்துவமும் கிடையாது. அதனால்
சர்க்கரை நோயாளிகள் தான் இதில் கவனமாக இருக்க வேண்டும். வருடம் ஒரு முறையாவது மேற்சொன்ன பரிசோதனையும் கூடவே சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட பொட்டாஷியம், சோடியம், கிரியாட்டினின், யூரியா இவற்றுக்கான அளவுகளை பரிசோதனை செய்து சரி பார்த்துக்கொள்வதும் நல்லது.