தங்கையின் திடீர் மறைவினால் தஞ்சை வந்ததிலிருந்து இன்னும் அது தொடர்பான சில பிரச்சினைகளும் வலியும் அலைச்சலும் சரியாகவில்லை. ஒரு முறை எல்லோரும் கூடிப்பேசிக்கொண்டிருந்த போது வலிகள் பற்றிய பேச்சு வந்தது. மன வலிகளும் சரி, உடல் சார்ந்த வலிகளும் சரி, எல்லாமே கொடிய அனுபவங்கள் தான். சில அனுபவங்கள் நம்மை பதப்படுத்துகின்றன. சில வலிகள் நம்மை பயமுறுத்தி பலவீனமாக்குகின்றன.
‘ஒரு மனிதனுக்கு அன்பான உறவுகளும் சுகமான நட்புகளும் ஆயிரம் இருக்கலாம். ஆனால் வலி என்று வரும்போது அதை அவன் மட்டுமே அனுபவித்தாக வேண்டும்’ என்று சமீபத்தில் பாரதி பாஸ்கர் சொன்னது நினைவுக்கு வந்தது.. எத்தனை யதார்த்தமான உண்மை இது?
40 வருடங்களுக்கு முன் துபாயில் இருந்த ஒரு நண்பர் ஒருவர் ஒருமுறை பல்வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது நானுமே பல்வலியால் மருத்துவரிடம் சென்று கொண்டிருந்தேன். நாங்கள் எல்லோரும் ஒரு விழாவில் சந்தித்துப்பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார், “ எல்லா வலிகளையும்விட பல்வலி தான் கொடுமையானது, மனோவும் அதை ஒத்துக்கொள்வார்கள் “ என்றார். சமீபத்தில் ஸ்ரீராம் அவர்கள் பல்வலியைப்பற்றி எழுதியிருந்ததைப்படித்த போது இதெல்லாம் ஞாபகம் வந்தது.
பல்வலியைப்பற்றிப்பேசும்போது பல் மருத்துவர்களைப்பற்றியும் பேசியாக வேண்டும்.
துபாய் வந்த ஆரம்ப வருடங்களில் [ 48 வருடங்கள் முன்பு ] பல்வலிக்காக ஒரு அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். கூடவே குடும்ப நண்பர் ஒருவரும் வந்திருந்தார். மருத்துவர் அதற்கான உயரமான ஸீட்டில் உட்கார வைத்து பரிசோதனை செய்யும்போது அவருக்கு திடீரென்று வெளியே செல்ல வேண்டி வந்தது. ‘இதோ வந்து விடுகிறேன்’ என்று வெளியே சென்றார். அப்போது எங்கள் குடும்ப நண்பர் ‘ இப்படித்தாம்மா ஒரு டாக்டர் வெளியே சென்று திரும்ப உள்ளே வந்ததும் இடது பக்கம் எடுக்க வேண்டிய பல்லுக்கு பதிலாக வலது பக்கம் எடுத்து விட்டார்’ என்று சொன்னதும் நான் உடனேயே ஸீட்டிலிருந்து குதித்து வெளியே சென்று விட்டேன். அப்புறம் எல்லோரும் மறுபடியும் உள்ளே செல்ல அழைத்தும் நான் திரும்பப் போகவேயில்லை!
இன்னொரு மருத்துவர். முன் பற்கள் இரண்டிலும் வலி என்று சினேகிதியின் சிபாரிசில் அவரிடம் சென்றேன். பரிசோதனை செய்து விட்டு பற்கள் மிகவும் வீணாகி விட்டன என்றும் அறுவை சிகிச்சை தான் செய்ய வேணும் ‘ என்று சொல்ல பயந்து போனேன். பின் மிகவும் திறமையானவர் என்று பரிந்துரைக்கப்பட்ட இன்னொரு வட இந்திய மருத்துவரிடம் சென்றேன். அவர் பரிசோதனை செய்து விட்டு ‘ ஒன்றுமில்லை, இது சாதாரண இன்ஃபெக்ஷன்’ என்று சொல்லி முன் பற்களுக்கு சிகிச்சை செய்தார். 25 வருடங்களுக்குப்பிறகும் முன் பற்களில் எந்தப்பிரச்சினையும் இல்லை. பற்களில் எந்த பிரச்சினை என்றாலும் அவரிடம் தான் சென்று கொண்டிருக்கிறேன். நல்ல மருத்துவர் கிடைத்ததால் நான் பிழைத்தேன். தவறான சிகிச்சை எடுத்துக்கொள்ள நேர்ந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்!
ஒரு முறை ஊரிலிருந்து வந்திருந்த முறுக்கைக் கடித்த போது கடவாய்ப்பல் குறுக்கே இரண்டாக உடைந்து விட்டது. வலி பொறுக்க முடியவில்லை. நல்ல பல் உடைந்து விட்டது. ஆனால் அதை அப்புறப்படுத்தியே ஆக வேண்டிய நிலையில் நிறைய மருந்துகளும் ஊசிகளும் எடுத்துக்கொண்ட பின்பு தான் அதை பலவந்தமாக பிடுங்குவது போல நீக்கினார்கள்! இப்படியும் ஒரு பல் வலி பிரச்சினை!
என் சினேகிதி ஒருத்தரின் கணவர் சற்று முரட்டுத்தனமானவர். மனைவியை தாங்குவார். மனைவியின் உடல் நலத்தை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். ஆனால் அவரது உடல் நலத்தை சிறிதும் கவனிக்க மாட்டார். நாம் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு ஒரு நாளிரவு கடுமையான பல் வலி ஏற்பட்டது. தாங்க முடியாமல் நண்பருடன் மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பரிசோதித்து விட்டு அதிர்ச்சியுடன் எழுந்து விட்டார். ‘ கடுமையான இதயத்தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. காப்பாற்றுவது கஷ்டம் என்று மருத்துவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் சினேகிதியின் கணவர் கீழே சரிந்து இறந்து போனார். மரணம் பல் வலியிலும் வரும் என்ற உண்மை மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.
இன்னொருத்தர்-தெரிந்தவர் செயற்கை பற்களை பொருத்திக்கொண்டிருந்தார். வேண்டிய போது பற்களை நீக்கி அருகில் வைத்துக்கொள்வார். வேண்டும்போது அவற்றை மீண்டும் பொருத்திக்கொள்வார். ஒரு நாளிரவில் தூக்கக்கலக்கத்துடனிருந்த போது, பற்களை எடுத்து பொருத்திக்கொள்ள முனைந்த போது, ஒரு பல் தூக்கக்கலக்கத்தில் நழுவி உள்ளே போய் மூச்சை அடைத்து உடனேயே மரணம் எய்தி விட்டார்.
ஒரு மருத்துவர் பரிசோதித்து விட்டு பல்லை எடுக்க வேண்டும் என்று சொன்னால்கூட இன்னொரு பல் மருத்துவரிடம் சென்று second opinion கேட்பது இன்றைய காலத்தில் அவசியமாகி விட்டது.
பல்வலிக்கு ஒரு கை வைத்தியம். பல் வலி இருக்குமிடத்தில் ஒரு துண்டு
நார்த்தங்காய் உப்பு ஊறுகாயை வைத்து பற்களால் அமிழ்த்தி அப்படியே தூங்கி விட வேண்டும். காலை வலி சுத்தமாக நீங்கியிருக்கும். இலேசான சூடுள்ள வென்னீரால் வாயை கொப்புளிக்க வெண்டும்.
வலிகள் இல்லாத வாழ்க்கைக்கு பிரார்த்தனை செய்வோம்!!