இதை எழுத ஆரம்பிக்கும்போது ' கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்' பாடல் நினைவுக்கு வருகிறது. இப்போதெல்லாம் எந்த கல்யாண வீட்டில் சாப்பாடு நன்றாக இருக்கிறது?
சுவை என்பது நாவின் ருசி நரம்புகளுக்குப் புரிவது. அதுவே, அந்த சுவையில் உணவை அளிப்பவர் மனதின் அன்பும் அக்கறையும் தெரிகிறபோது அந்த சுவை பன்மடங்காகத்தெரியும். அதனால் தான் தன் அம்மாவின் கைப்பக்குவத்தை எந்த மகனும் வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை
சமைப்பவன் கலைஞன் என்றால் அதை ருசித்து சாப்பிடுபவன் மகா கலைஞன் என்று ஒரு இதழில் படித்தேன். ர்சித்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதை சமைத்தவர்களை மனந்திறந்து பாராட்டும் மனம் எத்தனை பேருக்கு இருக்கிறது?அதில் மனம் சுருங்கிப்போகும் பெண்களில் ஏராளமானோர் ஏதோ சமைத்தோம் ஏதோ பரிமாறினோம் என்பதைத்தான் தன் வாழ்க்கையில் செய்கிறார்கள்.
மறக்கமுடியாத சுவை கொண்ட உணவுகளை நம் வாழ்நாளில் சில சமயங்களில் பார்த்திருப்போம். ஒவ்வொருத்தருக்கும் அது சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மாறுபடுகிறது. பல வருடங்களுக்கு முன்நான் தாய்மையுற்றிருந்த சமயம் எங்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு, நகரின் மையப்பகுதியில் என் அம்மா ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். எட்டாம் மாதம் நடந்து கொண்டிருந்த போது, 1977ம் வருடம் அது, தஞ்சைப்பகுதியில் பலத்த புயல் அடிக்க ஆரம்பித்திருந்தது. மின்சாரமில்லை. ஊரெங்கும் வெள்ளக்காடாக இருந்தது. அந்த வீட்டுக்காரம்மா, என் அம்மா சமையல் செய்யும் வரை காத்திராமல் என்னை அழைத்துச் சென்று அமர வைத்து நிறைய தயிர் ஊற்றி பிசைந்த சாதமும் புளியும் வற்றல் மிளகாயும் சேர்த்து அரைத்து செய்திருந்த நார்த்தங்காய் ஊறுகாயும் தருவார்கள். அன்போடு அளித்த அந்த தயிர் சாதத்தின் சுவையை என்னால் எப்போதுமே மறக்க முடிந்ததில்லை.
என் புகுந்த வீடான கிராமத்தில் என் மாமியார் பொங்கல் அன்று சர்க்கரை பொங்கலும் வெண் பொங்கலும் காய்கறி குழம்பும் தன் பிள்ளைகளுடன் பெரிய பானைகளில் செய்வார்கள். வெண் பொங்கல் பச்சரிசியும் பசும்பாலும் தேங்காய்த்துருவலும் சிறிது உப்பும் சேர்த்து செய்வார்கள். இரவு அந்த வெண் பொங்கலில் நீர் ஊற்றி வைத்து விடுவார்கள். கிராமம் என்பதால் கட்டித்தயிருக்கு பஞ்சமில்லை. காலையில் அந்த சாதத்தில் பசும்பாலில் உறைய வைக்கப்பட்ட தயிர் கலந்து மீதமிருக்கும் குழம்பை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது தனி சுகம்.
தஞ்சாவூரில் எங்களுக்கு ஒரு பழைய வீடு இருந்தது. பின்னால் கிணறும் பக்கவாட்டில் முருங்கை, கொய்யா, தென்னை, நெல்லி மரங்களுடன் கீரைப்பாத்திகளுமிருக்கும். கீழ் வீட்டில் வாடகைக்கு விட்டு விட்டு, மேல் வீட்டில் நாங்கள் குடியிருந்தோம். ஒரு சமயம் வெளியே போய் விட்டு திரும்பும்போது அவர்களை அழைக்க யாரையும் காணவில்லை. கிணற்றுப்பக்கம் பேச்சுக்குரல் கேட்டதூ. அங்கே சென்று பார்த்தால் கீழே குடியிருந்தவரின் அம்மாவும் அப்பாவும் ஊரிலிருந்து வந்திருந்தார்கள் போலிருக்கிறது, இருவரும் இலை வடாம் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். அந்த பெரியவருக்கு 85 வயதிற்கு மேலாம். அவரின் மனைவிக்கு 80 வயதிருக்கும். கணவர் இலை வடாம் மாவை சிறு சிறு தட்டுகளில் வட்டமாக எழுத, அவரின் மனைவி சுறுசுறுப்பாக அவற்றை ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்து தாம்பாளத்தில் பரப்புகிறார். [ பிறகு அவற்றை வெய்யிலில் காய வைக்க வேண்டும்.] என்னைப்பார்த்ததும் எனக்கு ஒரு நாற்காலி போட்டு அமர வைத்து பேசியவாறே தங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்கள். ஒருவர் மீது மற்றவர் காட்டிய அக்கறையும் பகிர்ந்து கொண்ட புன்னகைகளும் அவர்களின் சுறுசுறுப்பும் இருவருக்குள்ளும் இருந்த புரிதலும் என்னை கட்டிப்போட்டன. இலை வடாமை அவர்கள் தயாரிப்பதைப்பார்ப்பதை விட அவர்களையே நான் ரசித்துக்கொண்டிருந்தேன். சில நாட்களில் பொரித்த இலை வடாம்கள் எனக்கு கொண்டு வந்து தந்தார்கள். அவை அத்தனை ருசி!
என் சினேகிதி ஒருவர் மணத்தக்காளிக்கீரையும் சின்ன வெங்காயமும் நிறைய போட்டு நல்லெண்ணையில் அருமையாக ஒரு புளிக்குழம்பு செய்வார். சுடு சாதத்தில் ஊற்றி நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அத்தனை ருசியாக இருக்கும். பொதுவாய் மணத்தக்காளி கீரையில் என் மாமியார் சாறு செய்வார்கள். ரசம் மாதிரி இருக்கும் அது ரொம்பவும் ருசியாக இருக்கும். அதைத்தவிர கூட்டு செய்வேன். ஆனால் புளிக்குழம்பு இந்த மாதிரி செய்ததில்லை. என் சினேகிதியிடம் கற்ற பிறகு அடிக்கடி செய்ததில் அது மிகவும் புகழடைந்து விட்டது.
என் பாட்டி நாக்கடுகு துவையல் செய்வார்கள். பிரமாதமாக இருக்கும். இப்போது நாக்கடுகு கிடைக்குமா என்பது தெரியவில்லை.
இப்படியெல்லாம் நம் வாழ்க்கை முழுக்க பல விதமான ருசிகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. சில ருசிகளைத்தந்தவர்கள் காற்றோடு கலந்து விட்டாலும் ருசிகள் மனதில் அப்படியே தேங்கி நின்று விட்டன!