Thursday, 21 May 2020

முத்துக்குவியல்-56!!!!


அசத்தும் முத்து:


டெனித் ஆதித்யா என்னும் 16 வயது தமிழக மாணவர் சாதனைகள் படைத்திருக்கிறார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கணினி பயில ஆரம்பித்தவர் இந்த பதினாறு வயதில் 35 computer applications முடித்திருப்பதுடன் 6 மொழிகளையும் கற்றுத்தேர்ந்திருக்கிறார்.
19 கண்டுபிடிப்புகளுக்கு  சொந்தக்காரராய் இருப்பதுடன் 17 சர்வ தேசீய விருதுகளையும் 10 தேசீய விருதுகளையும் 10 மாநில விருதுகளையும் பெற்றிருக்கிறார். 3 கின்னஸ் சாதனைகளுக்கு முயன்றவர். ஒரு கின்னஸ் சாதனையை தன் வசம் வைத்திருப்பவர்.
5 நிறுவனைங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு.

வாழையிலை யை வெட்டி விட்டால் சாதாரணமாக 3 நாட்களில் வாடி விடும். 3 ஆண்டுகள் வரை வாழையிலை வாடாமல் காக்கும் அறிவியல் தொழில் நுட்பத்தை இவர் தன் 11வது வயதில் கண்டு பிடித்தார். இவர் கண்டுபிடிப்பால் வாழையிலையின் உறுதித்தன்மையும் நெகிழ்வுத்தன்மையும் அதிகரிக்கும். இதைக்கொண்டு தட்டுகளும் குவளைகளும் செய்யலாம் என்கிறார். இதில் வேதியல் பொருட்கள் பயன்படுத்துவதில்லை என்பதால் இந்த வாழையிலைகள் ஆரோக்கியமானவை மட்டுமல்ல, மலிவானதும் கூட. மேலும் பிளாஸ்டிக் பிரச்சினைக்கு இதுவே சரியான தீர்வு என்கிறார் இவர். இதற்கு இவர் காப்புரிமை பெற்றிருக்கிறார். இந்த கண்டு பிடிப்பிற்காக 2 தேசீய விருதுகளையும் 7 சர்வ தேச விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் ‘ innovation scholar’ விருதை முதன்முறையாக பெற்றவரும் இவரே. 45 நாடுகளுக்கு இவர் சென்றுள்ளார். ஐந்து சர்வதேச அறிவியல் நிகழ்வுகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார்.
தகவல் முத்து:
பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகக் காவல் துறையை அழைக்க தங்கள் கைபேசிகளில் `KAVALAN SOS APP' (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை சார்பில் தொடர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் தமிழக காவல்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவலன் SOS கைபேசி செயலியை அறிமுகப்படுத்தினார். இந்தச் செயலியை வைத்திருந்தால் பொதுமக்கள், தங்களுக்கு ஒரு பிரச்னை ஏற்படும் போது காவல்துறையைத் தொடர்புகொள்ள 100 என்ற எண்ணை டயல் செய்ய  வேண்டாம். இந்தச் செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் போதும். உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று சம்பவ இடத்துக்குக் காவல்துறை ரோந்து வாகனம் விரைந்து வரும். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஆப்கள் அவர்களுக்கு அவசர காலங்களில் உதவிகரமாக இருக்கும். பெண்கள் அல்லது வயது முதியவர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும்போது தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் காவலன் SOS செயலியில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க முடியும். உடனடியாக ஜி.பி.எஸ். மூலம் நாம் இருக்கும் இடத்தை காவல்துறை அறிந்துகொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவும் வகையில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்த பிறகு, அப்ளிகேஷனை ஓபன் செய்தால், பயனாளர்களின் வசதிக்கேற்ப ஆங்கிலம் / தமிழ் என்று இரு மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொழியைத் தேர்வு செய்த பிறகு, ரிஜிஸ்டர் என்ற பட்டனை அழுத்த வேண்டும். ரிஜிஸ்டிரேஷன் (registration) என்ற பக்கத்தில், பயனாளர்கள் தங்கள் அலைபேசி எண், பெயர், மாற்று அலைபேசி எண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பின் நெக்ஸ்ட் (NEXT) பட்டனை அழுத்த வேண்டும். அதைத்தொடர்ந்து, பயனாளர் முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்து சைன் அப் (sign up) என்ற பச்சை நிற பட்டனை அழுத்தினால் காவலன் செயலி பயன்படுத்தத் தயாராகி விடும். பயனாளர்கள் ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பிறகு செயலியை எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். செயலியில், பயனாளர்கள் ஆபத்தில் இருக்கும் போது மூன்று நபர்களுக்குத் தகவல் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் வசதியும் இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் தங்களுக்குப் பிரச்னை ஏற்படும் போது, அவசரத்தில் காவல்துறையை அழைப்பதற்குச் செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் SOS என்ற பட்டனை ஒரு முறை தொட்டாலே அழைப்பவரின் இருப்பிடம் ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று விடும்.
அழைப்பவரை உடனடியாக திரும்ப அழைக்கும் வசதி காவல் கட்டுப்பாட்டறையில் உள்ளது. மேலும், அழைப்பவரின் அந்த நேர இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் ரியல்டைம் டிராக்கிங் வசதியும் உள்ளது. அழைப்பவரின் இருப்பிடத் தகவல் மற்றும் வரைபடம் இந்தச் செயலியில், பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்குத் தானாகவே பகிரப்படும். காவலன் Kavalan SOS app பட்டனைத் தொட்டவுடன் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து அலைபேசி கேமரா தானாகவே 15 விநாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும். அதிர்வுத் தூண்டல் (shake trigger) வசதியின் மூலமும் தொடர்பு கொள்ளலாம். இணைய இணைப்பு இல்லாத (Data not available) இடங்களிலும் கூட தானியங்கி எச்சரிக்கை (Auto SMS Alert) மூலமாகச் செயல்படும். 

Kavalan SOS app செயலி மிகவும் அவசர நிலையில் இருக்கும் பெண்கள், முதியோர்கள் மற்றும் குடிமக்களின், பாதுகாப்புச் செயலியாக 24 மணி நேரமும் இயங்குவதால் இந்த வசதியை தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகரக் காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்திவருகிறது.
காவலன் SOS செயலியைப் பெற: 
ஆண்ட்ராய்டு: https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kavalansos
ஐ-போன்களில் காவலன் செயலியைப் பெற: https://itunes.apple.com/in/app/kavalan-sos/id1388361252?mt=8
மேலே குறிப்பிட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி, ஸ்மார்ட் போன்களில் காவலன் SOS செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கசப்பு முத்து:
எங்கள் பொறியாளர் நேற்று தாமதமாக வந்தார். ஒரு துக்கத்துக்கு போய் வந்ததாகச் சொன்னார். இறந்தது அவர் நண்பராம். நல்ல வேலையிலிருந்தவர். மனைவி, ஒரு மகன் இருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்தே மதுவிற்கு அடிமையானவர். உற்றவர்களின் புத்திமதி, தனக்கிருக்கும் பொறுப்புகள், உடல் பாதிப்புகள் எதுவுமே அவரை பயமுறுத்தவோ, திருத்தவோ முடியவில்லையாம். குடல்கள் நிறைய இடங்களில் வெட்டப்பட்டும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லையாம். லாக் டவுன் நேரத்தில் மது கிடைக்காமல் தவித்து விட்டாராம். டாஸ்மாக் மீண்டும் திறந்தவுடன் முதல் ஆளாய் சென்று வாங்கிக் குடித்திருக்கிறார். ரத்தம் வாயிலிருந்து வழிய ஆரம்பித்ததும் ‘ எப்படியும் சாகத்தான் போகிறேன். இன்னும் கொஞ்சம் குடித்து விட்டு சாகிறேன்’ என்று அனைவரையும் எதிர்த்துப்பேசி, கெஞ்சி, மேலும் குடித்து இரத்தம் வழிய வழிய இறந்து போனாராம். எப்படிப்பட்ட குடிகாரனாக இருந்தாலும் மரணம் அருகில் வந்து விட்டது தெரிந்தால் ஒரு பயம் வந்து விடும். அதைக்கண்டு கூட பயப்படாத மது வெறியர்கள் பற்றி என்ன சொல்வதென்று புரியவில்லை!
இசை முத்து
இந்தப் பாட்டு கொஞ்ச நாட்களாக மனதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கிறது. எங்கே சென்றாலும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது. சிலர் இந்தப்பாட்டை முன்னாலேயே கேட்டிருக்கலாம். திரைப்படப்பாடல்தான் என்றாலும் முதிர்ச்சியான ஒரு இளைஞர் பாடும்போது அது வேறு விதம். அதையே ஒரு சிறிய குழந்தை பாடும்போது மெய் சிலிர்க்கிறது. கண்ணீர் கசிகிறது!! அந்தப்பாடல் வரிகள் அற்புதம். இந்த மாதிரி வரிகளை ஒரு அருமையான இசையில் இனிமையான குரலில் கேட்கும்போது, மனம் மயங்கி விடுகிறது. அதை விட்டு வெளியில் வந்தாலும் மனது அதை விட்டு வெளியில் வர மறுக்கிறது.
நீங்களும் கேட்டுப்பாருங்கள்.

Thursday, 7 May 2020

முகங்கள்-3!!!

அந்தப் பெரிய மருத்துவமனையின் புகழ்பெற்ற இதய மருத்துவரைப்பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருந்தேன். நல்ல கூட்டம். மருத்துவர் வரிசைப்படி சில நோயாளிகளைப்பார்ப்பதும் நடுநடுவே எக்கோ கார்டியோக்ராம்,  டி.எம்.டி செய்ய அருகிலிருந்த வேறொரு அறைக்கு செல்வதுமாக இருந்தார். மணி மதியம் ஒன்றைத் தாண்டியது, திடீரென்று மருத்துவர் வெளியே சென்றார். அருகிலிருந்த வயதான பெண்மணி என் தேடுதலைப்பார்த்து ‘ மருத்துவர் வெளியே போயிருக்கிறாராம். வருவதற்கு 2 மணியாகுமாம்’ என்றார்.

நான் அப்போது தான் அந்தப் பெண்மணியை சரியாக கவனித்தேன். நெற்றியில் குங்குமம் இல்லாமல், சற்றே வெள்ளி நரைகளுடன் முகத்தில் கவலையுடன் காணப்பட்டார் அவர். அருகே ஒரு இளம் பெண். மென்னகையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘ ஏம்மா, உங்களுக்கு உடம்பு ஏதும் சரியில்லையா?’ என்று கேட்டேன்.
அவர் அதே கவலையுடன் விவரித்தார்.

‘ எனக்கு ரொம்ப நாட்களாக நெஞ்சில் வலியிருக்கிறதம்மா. ‘பளிச் பளிச்சென்று ‘ சில சமயம் அதிகமாகவே வலிக்கும். இப்போதும் அப்படியே தானிருக்கிறதம்மா. ‘

‘ இதற்கு முன்னால் வேறு இதய மருத்துவரை பார்த்திருக்கவில்லையா?’ என்று நான் கேட்டதும், ‘  ஆறு மாதம் முன்பு தான் பார்த்தேம்மா. இதயத்தில் எந்தப்பிரச்சினையும் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் இந்த வலி வரும்போது பயமாகி விடுகிறது. அதனால் தான் இந்த டாக்டர் பெரிய இதய நிபுணர் என்று சொன்னார்கள். அவரிடமும் காட்டி விடுவோம் என்று வந்தேன்..’ என்று சொன்னவர் தன் அருகிலிருந்த பெண்ணை சுட்டிக்காட்டி, ‘ இவளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி விட்டால் அப்புறம் கவலையில்லை. அதனால் தான் என் உடம்பை இப்படியெல்லாம் கவனித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. ‘ என்றார் பெருமூச்சு விட்டபடி.

‘வேறு குழந்தைகள் இல்லையா?’ என்று நான் கேட்டேன்.

‘ இவளுக்கு மூத்தவளுக்கு நாலு வருஷங்களுக்கு முன் தான் கல்யாணம் பண்ணிக்கொடுத்தேன். என் கணவர் இருந்தவரைக்கும் பிரச்சினையில்லாமல் இருந்தது அவர் தாசில்தாராக இருந்தார். இவளையும் எம்.பி.ஏ படிக்க வைத்து விட்டேன். வேலைக்குப்போகிறாள்..’ என்றார்.

நான் ஆறுதலாக பேசியபடி அவருக்கு தைரியம் சொன்னேன்.
‘ கவலைப்படாதீர்கள். முன்பேயே உங்களுக்கு இதயத்தில் பாதிப்புகளில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் இந்த டாக்டரும் அதைத்தான் சொல்லப்போகிறார், பாருங்கள். எனக்கென்னவோ நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் தான் பிரச்சினையிருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்கள் அடிக்கடி பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வாழைக்காய் இதெல்லாம் சாப்பிடுவீர்களா’ என்று கேட்டேன்.

அவர் பதில் சொல்லுமுன்பே அந்த பெண் ‘ ஆமாம் ஆண்ட்டி, அம்மாவுக்கு இதெல்லாம் ரொம்ப இஷ்டம். அதுவும் தினமும் சாம்பார் செய்யணும். கடலைப்பருப்பு சுண்டல் ரொம்ப இஷ்டம்!’ என்று சொல்லி சிரித்தது.

‘ என்னம்மா, அதெல்லாம் சாப்பிட்டால் இப்படியாம்மா நெஞ்சு வலிக்கும்?’ என்று அந்த அம்மா வெள்ளந்தியாகக் கேட்டார்.

‘ நமக்கு வயதாகிறதல்லவா? உடம்பு முன்போல இதையெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் ஜீரணம் பண்ணாது. அத்தனையும் வாயுவாக உடம்பில் அப்படியே தங்கும்’ என்று நானும் சிரித்தேன்.

அப்புறம் சொன்னேன், ’ டாக்டர் தன் சோதனைகளில் உங்களுக்கு ஒன்றும் இல்லையென்று சொல்லி விட்டால், வீட்டுக்குப்போனதும் இந்த உணவுப்பொருள்களையெல்லாம் நிறைய குறைத்து விடுங்கள். தினமும் 3 ஏலக்காய்களை அவை சக்கையாக போகுமளவு மென்று அதன் சாறை விழுங்குங்கள். இந்த வலி ஓடிப்போய் விடும். தினமும் அரை ஸ்பூன் சுக்குப்பொடி போட்ட மோர் இரண்டு வேளைகளாவது குடியுங்கள். ‘

அப்புறமும் அரை மணி நேரத்திற்கு அந்த இதய மருத்துவர் வராததால் அந்த அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சாப்பிடச் சென்றேன். திரும்பிய போது அவர்கள் சோதனைகளை முடித்து விட்டு மீண்டும் டாக்டரை பார்க்க அமர்ந்திருந்தார்கள்.

என்னைப்பார்த்ததுமே என் கைகளைப்பிடித்துக்கொண்டு, ‘ தெய்வம் போல வந்து நல்ல வார்த்தைகள் சொன்னீர்கள் அம்மா. எனக்கு இதயத்தில் எந்தப்பிரச்சினையுமில்லை என்று இவரும் சொல்லி விட்டார்’ என்றார்.

‘ அப்புறமென்ன, வீட்டிற்கு போனதும் நிம்மதியாகத்தூங்குங்கள். நான் சொன்னபடி தினமும் ஏலக்காய், சுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றேன்.



அவர் என் கைகளை விடாமல், ‘அம்மா, உங்களிடம் ஒரு விஷயம் மறைத்து விட்டேன். எனக்கு ஒரு மகன் இருக்கிறானம்மா. அவன் தான் மூத்தவன். ஒரு பெண்ணைக் காதலித்தவன் அவளையே கல்யாணம் பண்ணிக்கொண்டு எங்கோ போய் விட்டான். எங்கிருக்கிறான் என்பதும் எனக்குத்தெரியாது’ என்றார்.

அவர் விழிகளோரம் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

அந்தக்கண்ணீரைப்பார்த்ததும் எனக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை. எத்தனை வலி, எத்தனை ஏக்கம் அந்தக்கண்களில்!! இளைய மகளுக்கான பொறுப்பை தைரியமாக தோள்களில் சுமப்பவருக்கு, ஆசையாய் வளர்த்த மகன் கட்டறுத்துக்கொண்டு போய் எங்கோ இருந்தாலும் அந்த துரோகத்தை இன்னும் விழுங்க முடியவில்லை!

‘ விடுங்கம்மா. உங்களை அடியோடு மறந்து சென்றவரைப்பற்றி ஏன் நினைத்து கலங்குகிறீர்கள்? உங்கள் பெண் தான் மகனுக்கு நிகராக உங்களை இத்தனை அன்போடு கவனித்துக்கொள்கிறாளே?’ என்று ஆறுதலாக சொல்ல முயன்றேன்.

‘ பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையம்மா அவன்! ‘

அந்த தாயின் ஏக்கத்தைப்பார்த்தபோது பதில் சொல்ல என்னால் முடியவில்லை.

நான் தஞ்சை வந்த பிறகு, அவரிடமிருந்து நான்கு நாட்கள் கழித்து எனக்கு ஃபோன் வந்தது.

‘ அம்மா, நீங்கள் சொன்ன வைத்தியத்தில் எனக்கு நெஞ்சு வலியே இப்போதெல்லாம் இல்லையம்மா’ என்று சந்தோஷத்துடன் பேசினார்.

மனசில் நிறைவு ஏற்பட்டாலும் அந்தக் கலங்கிய விழிகள் தான் என் முன்னே தெரிந்தன!