Friday, 23 August 2019

முத்துக்குவியல்- 54!!!

ஆச்சரிய முத்து:

இங்கே அமீரகத்தில் இந்த பாலைவன நாட்டில் நல்ல மழை!  இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? பசும் சோலையாக இருந்த நம் பூமி வரண்டு சூட்டுக்காற்றில் தவிக்கிறது. பாலைவனமாய் சுட்டுப்பொசுக்கிய இந்த பூமி இப்போது மழையால் குளிர்கிறது, அதுவும் ஏப்ரல் மாதத்தில்!



அதிக மழையைப் பெறுவதற்காக இங்கே ' கிளவுட் சீடிங் ' முறையில் விமானங்கள் மூலம் வானில் ரசாயனப்பவுட்ர்கள் தூவப்படுகின்றன. செயற்கை முறையில் ரசாயனப் பவுடர் தூவப்பட்டு ஒரு சில வாரங்களில் அதிக மழைப்பொழிவைப் பெற முடியும். கடந்த ஆண்டு ஒரு வாரத்தில் நான்கு நாட்களுக்கு கிளவுட் சீட்ங் செய்யப்பட்டது. இதன் பலனாக கூடுதலாக 20 சதவிகிதம் சென்ற ஆண்டு மழைப்பொழிவு கிடைத்தது. இந்த ஆண்டு ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை 88 தடவை கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளது.

இசையின்ப முத்து:

தியாகராஜ சுவாமிகள் பற்றி கர்நாடக சங்கீதம் அறிந்த அனைவரும் அறிவார்கள். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இவர் பிறந்தது திருவாரூர் என்றாலும் வளர்ந்ததும் இசையறிவு கொண்டதும் சமஸ்கிருதம் கற்றதும் திருவையாற்றில்! பல அபூர்வமான ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றியிருப்பதும் ஒரே ராகத்தில் பல கீர்த்தனை இயற்றியிருப்பதும் இவரின் அரிய திறமை. தன் தாய்மொழியான தெலுங்கிலும் வடமொழியிலும் மட்டுமே கீர்த்தனைகள் இயற்றிருக்கிறார்.



இந்த திறமையை கேள்விப்பட்டு தஞ்சை மன்னர் சரபோஜி தன் அரண்மனைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று ஆசை கொண்டார். ஆனால் தியாகராஜர் அதை மறுத்து ' ' நிதிசால சுகமா ' என்ற கல்யாணி ராக கீர்த்தனையை உருவாக்கி இசைத்தார். ' செல்வம் சுகம் தருமா அல்லது ராமன் சன்னதியில் சேவை செய்வது சுகமா?' என்ற அர்த்தத்தில் தொடங்கும் இந்த கீர்த்தனை!

இவரின் 'எந்தரோ மஹானுபாவலு' அழியாப்புகழ் பெற்றது! அதன் அர்த்தமோ அதையும்விட புகழ் பெற்றது! ' அன்பால் உயர்ந்த பக்தர்களுக்கு முன்னால் இந்த அடியேன் எங்கே? ' என்பது தான் இந்த வரியின் அர்த்தம்! இந்த கீர்த்தனை பல பாடகர்கள் குரலில், இனிமை வழிந்தோட கேட்டு ரசித்திருக்கிறேன். வயலினின் உருகலில் நானும் உருகியிருக்கிறேன். புல்லாங்குழலின் தேடலில் மெய்மறந்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் நாதஸ்வர இசையில் ஸ்ரீராக ராகம் குழைந்து மயங்கியதை ரசித்தபோது மனமும் அந்தக்குழைவில் மயங்கிப்போனது. நீங்களும் ரசிக்க இணைத்திருக்கிறேன் இங்கே! கேட்டு ரசியுங்கள்!


மருத்துவ முத்து:

பொதுவாய் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் சிலர் அவற்றை ஒழிக்க சீத்தாபழ விதைகளை அரைத்துத் தலையில் தடவுவதுண்டு.



நிச்சயம் பேன் தொல்லை ஒழிந்து விடும். ஆனால் அவ்வாறு சீத்தா பழ விதைகளை அரைத்து தலையில் தடவுவது ஆபத்து என்று அறிவித்திருக்கிறது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம். கண் வலி, கருவிழி பாதிப்பு, கண்ணீர் வடிதல், உறுத்தல், பார்வை மங்குதல் போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சொல்லியுள்ளது நிர்வாகம்.

ரசித்த முத்து:

அறுபது சொல்வது அனுபவ நிஜம்.
அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்.
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள்.
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம்.
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை.

அமைதி முத்து:

சென்னையில், தி.ந‌கரில் உள்ள ஒரு நான்கு நட்சத்திர விடுதியில் வரவேற்பு பகுதியில் இருந்த சிலை இது. பார்க்கும்போதே மனதில் அமைதி பிறந்தது.


Wednesday, 7 August 2019

ஒரு விபத்தும் சில ஆச்சரியங்களும்!

முதலில் விபத்து பற்றி எழுதுகிறேன். கம்போடியாவில் ஒரு கோவிலைப்பார்க்க ந‌டந்து கொண்டிருந்த போது அந்த தளம் சரியில்லாத பாதையில் எது தடுக்கியது என்று தெரியவில்லை, திடீரென்று ஒன்றும் புரியாமல் மின்னல் வேகத்தில் தலை குப்புற விழுந்தேன். அந்த ஒரு கணம் விழும்போதே, பிடித்துக்கொள்ள எதுவும் அருகில் இல்லாமல் நான் தவித்தது மட்டும் தான் நினைவில் உள்ளது. சற்று அருகில் நடந்து வந்து கொண்டிருந்த என் கணவரும் வழிகாட்டியும் ஓடி வந்து என்னைத்தூக்கிய போது தான் கால் பயங்கரமாக வலித்தது புரிந்தது. இடது கால் கட்டை விரல் ச‌ற்று பெயர்ந்து முழுவதுமாக வீங்க ஆரம்பித்திருந்தது. அதற்குள் கோவில் அருகே வந்து விட்டதால் நான் வெளியே அமர்ந்து கொண்டு, என் கணவரையும் வழிகாட்டியையும் கோவிலைப்பார்க்க சொல்லி அனுப்பி விட்டேன். எப்போதும் கையில் வைத்திருக்கும் மூவ் ஆயின்மெண்ட் எடுத்து தடவிக்கொண்டு, குளிர்ந்த travel wipe-ஐ எடுத்து ஒத்தடம் கொடுத்ததில் வலி சற்று குறைந்தது. மறுபடியும் காரில் ஏறி உணவுண்ண தமிழ் உணவகத்திற்குச் சென்றோம். அங்கே, உணவகத்தின் உரிமையாளரிடம் காயத்தைக்காட்டி, சிகிச்சைக்கு எங்கே போவது என்று விசாரித்தோம்.

நாங்கள் இருந்தது கம்போடியாவின் பழமையான, புராதன நகரமான சியாம் ரீப். இங்கு கம்போடிய மொழி பேசும் ம்ருத்துவர் தான் கிடைப்பார் என்றும் அது நமக்குப்புரியாது என்றும் ஆங்கிலம் பேசும் மருத்துவமனைகள் கிடையாது என்றும் கூறி முதல் உதவிக்காக ஆங்கிலம் பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பார்மஸிக்கு அனுப்பி வைத்தார். நாங்கள் மறுநாள் வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற ஹோஸ்மின் சிட்டி நகருக்கு செல்வதால் அங்கு ஆங்கிலம் பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய மருத்துவமனைகள் இருப்பதாகவும் மேலும் தகவல்கள் சொன்னார். அவர் சொன்னபடியே, பார்மஸி சென்று முதல் உதவி பெற்றுக்கொண்டு எங்கள் ஹோட்டலுக்கு திரும்பினோம். தொலைபேசியில் பேசியபோது எங்கள் மகனும் வியட்நாமில் மருத்துவ உதவி பெறுவது தான் நல்லது என்று சொல்ல, மறுநாள் கம்போடியாவில் சக்கர நாற்காலியின் உதவியுடன் விமானம் ஏறினோம்.



அன்று மாலை ஹோஸிமின் நகரின் ஒரு பொது மருத்துவமனைக்குச் சென்றோம். விபத்து பற்றி தெளிவாகக் கேட்டறிந்த அவர்களின் கனிவு என்னை அசத்தியது. பல்லைக்கடிக்கும் ஆங்கிலத்தில் மருத்துவப்பெண்மணியும் ஊழியர்களும் பேசி விசாரித்ததும் என் அனைத்துத் தகவல்களையும் அறிந்த விதமும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பின் எக்ஸ்ரே எடுக்க அந்தப்பிரிவின் தலமை மருத்துவரே வந்தார். என்னை அவரே சக்கர நாற்காலியில் அமர வைத்து அவரே தள்ளிக்கொண்டு சென்றார். விரலை பல முறை பல விதத்தில் எடுக்க வேண்டியிருந்த‌தால் ஒரு சில முறைகள் அதற்காக sorry கேட்டுக்கொண்டார். மறுபடியும் அவரே சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவரின் அறைக்கு வெளியே விட்டுச் சென்றார்.

எக்ஸ்ரே என் விரலுக்கு எந்த வித பாதிப்புமில்லை என்று சொன்னதால்  மருத்துவர் எழுதிக்கொடுத்த மாத்திரை, மருந்துகள் கொண்ட பேப்பருடன் அங்கிருந்த பெண் ஊழியர் இன்னொரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் பணத்தை கட்டியதும் எல்லா விபரங்களும் அடங்கிய ஒரு ஃபைல், மற்றும் பணம் கட்டிய ரசீது, மருத்துவரின் என்னைப்பற்றிய குறிப்பு அனைத்தும் தந்தார்கள். இதெல்லாம் கொடுத்து இன்ஷூரன்ஸ் claim பண்ணலாம் என்று அவர்கள் சொன்னதும் ஏற்ப‌ட்ட வியப்பு இலேசில் குறையவில்லை!

எக்ஸ்ரே ஒன்றுமில்லை என்றாலும் இந்த விபத்து நடந்து இன்று 8 மாதங்கள் கடந்து விட்ட போதிலும், என் இடது கால் கட்டை விரலில் இன்னும் கொஞ்சம் வலி, மரத்துப்போன தன்மை இருந்து கொண்டு தானிருக்கிறது!

எந்த நாட்டிற்கு சென்றாலும் தேவையான மருந்துகள் அடங்கிய ஒரு மெடிக்கல் கிட் எடுத்துச் செல்ல வேண்டியது மிக அவசியம். நான் எப்போதுமே உள்ளூர் சென்றாலும்கூட இந்த மெடிக்கல் கிட் எடுத்துச் செல்வதுடன் எனக்கான மாத்திரைகள் இரண்டு செட் எடுத்து செல்வேன். ஒன்று கைப்பையிலும் மற்றது பெட்டியிலும் இருக்கும். ஒன்று தொலைந்தாலும் இன்னொன்று காப்பாற்றும்! ஆனால் இந்த அனுபவத்தில் எந்த ஊர் சென்றாலும் உள்ளூரோ, வெளியூரோ, அங்கிருக்கும் இந்திய மருத்துவர்கள் லிஸ்ட், ஆங்கிலம் அறிந்த மருத்துவ மனைகள் விபரங்களும் எடுத்துச்செல்ல வேன்டும் என்பதை புரிய வைத்தது! [ சில சமயங்களில் கூகிள் உதவி கூட கிடைக்காது!]

கடந்த 4 மாதங்களாக இருமலும் தொண்டைப்புண்ணுமாக இருந்ததால் தஞ்சையில் ஒரு மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டதில் அவர் எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். முன்பு போலில்லாமல் எக்ஸ்ரே ஃபிலிம் 10 நிமிடங்களிலேயே கிடைத்து விட்டது. மருத்துவர் பார்த்து விட்டு நுரையீரலில் சளி கொஞ்சம் தங்கியிருப்பதாகச் சொல்லி  மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார். என் உறவினரான மற்றொரு டாக்டர் அந்த எக்ஸ்ரேயைப்பார்த்து விட்டு, 'எக்ஸ்ரே அவ்வளவு க்ளியராக இல்லையே' என்று சொல்லி மேலே பேசவில்லை. மறுபடியும் நான் எப்போதும் செல்லும் பெண் மருத்துவரிட்ம் காண்பித்தபோது, அவர் உடனேயே ' எக்ஸ்ரே சரியாக இல்லை. நீங்கள் 4 மாதங்களுக்குப்பின் அங்கேயே [ நான் வசித்து வரும் துபாய் நகரில் ] ஒரு எக்ஸ்ரே எடுத்து விடுங்கள்' என்றார்! எனக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை.

ஒரு நிமிடம்  வியட்நாம் அனுபவம் மனத்திரையில் ஓடியது. இத்தனைக்கும் பல போர்களால் பாதிக்கப்பட்டு, இப்போது தான் அடி மட்டத்திலிருந்து முன்னேறி வரும் ஒரு ஏழை நாடு அது. ஊரும் மொழியும் புரியாத இடத்தில்கூட கண்கூடாகப்பார்த்த தொழில் மரியாதை நம் பிரம்மாண்டமான இந்தியாவில் இல்லையே!