Friday, 19 July 2019

முத்துக்குவியல்-53!!!!

அசத்தும் முத்து:

சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொள்ளாச்சி நிகழ்வுகளுக்கிடையே மறு அறிவிப்பாக இங்கு படித்த ஒரு செய்தி, நம் நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இருந்தால் எப்ப‌டியிருக்கும் என்று என்னை கனவு காண வைத்தது. கனவு தான்!!!

இந்த நாட்டில், அமீரகத்தில் பெண்களை அவமதித்தாலோ, அவர்கள் அறியாமல் புகைப்படம் எடுத்தாலோ, அவர்கள் தாராளமாக காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். குற்றம் செய்தவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் 5 லட்சம் திரஹமும்[ நம் பணத்துக்கு  1 கோடி ]அபராதமாக விதிக்கப்படும். குற்றம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் உடனேயே நாடு கடத்தப்படுவார்கள். சென்ற ஆண்டு 70 பேர்கள் இந்தக்குற்ற்த்தின் அடிப்படையில் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

கவிதை முத்து:

சொல்நயமிக்க இந்த சிலேடைக்கவிதையை ரசியுங்கள்1

தலைவியைச்  சந்திக்க காத்திருக்கிறான்
தலைவன் .தாமதமாக வந்த அவள் சொன்னாள்:



''வெட்டியதால் சாகவில்லை.
வெட்டாதிருந்தால் செத்திருப்பேன்.
செத்ததால் சாகவில்லை.
சாகாதிருந்தால் செத்திருப்பேன்.''

தலைவனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் விளக்கம் சொன்னாள்:
வரும் வழியில் இருட்டில் பாழும்கிணறு ஒன்று இருந்தது தெரியவில்லை.
அப்போது மின்னல் வெட்டியதால் நான் விழாமல் தப்பித்தேன்.சாகவில்லை.மின்னல் வெட்டாதிருந்தால் நான் செத்திருப்பேன்.
சிறிது தூரம் வந்தபின் ஒரு பாம்பை மிதித்து விட்டேன்.நல்ல வேளை.அது ஒரு செத்த பாம்பு.அதனால் நான் சாகவில்லை.அது சாகாதிருந்தால் நான் செத்திருப்பேன்.

சாதனை முத்து:

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டைச் சேர்ந்தவர் ஐரீன் ஓஷியா. இவருக்கு வயது 102.



இவரது 67 வயது மகள் 10 வருடங்களுக்கு முன் மோட்டார் நியூரான் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அந்த நோயைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய பொருளீட்டுவதற்காகவும் இந்த வயதிலும் 14000 அடி உயரத்திலிருந்து விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். இதன் மூலம் மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் செய்த பெண்மணி என்ற பெருமையைப்பெற்றிருக்கிறார். தன் 100-வது பிறந்தநாள் முதல் ஒவ்வோர் ஆண்டும் விமானத்திலிருந்து குதித்து வருகிறார்.

மழலை முத்து:

நாளை என் பெயர்த்தியின் பிறந்த நாள்!



எங்கள் வீட்டு இளவரசி விஹானாவிற்கு நாளை இரண்டு வயது பூர்த்தியாகிறது! நான் தஞ்சையில் இருப்பதால் குழந்தையின் சிரிப்பை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்! நலமும் மகிழ்வும் என்றும் விஹானாவின் வாழ்க்கையில் தொடர வேண்டும்!!

பெருமித முத்து:

கம்போடியாவைப்பற்றி நான் முன்னர் எழுதியிருந்தபோது, காஞ்சியை ஆண்ட பல்லவப்பேரரசுக்கும் கம்போடியாவை ஆண்ட கைமர் பேரரசுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த நாட்டு கலாசார இயக்குனர் மார்ன் சொப்ஹீப் இதைப்பற்றி சொல்லியிருப்பது மேலும் நம்மை பெருமைப்படுத்துகிறது.

ராஜேந்திர சோழன்
பல்லவ சோழ மன்னர்களின் வரலாறு கம்போடியாவின் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாகக்கொண்டு வரவிருப்பதாகவும் அத்துடன் திருக்குறளை மொழி பெயர்த்து அதனையும் பள்ளிகளில் பாடத்திட்டமாகக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லியுள்ளார்.

முதலாம் சூர்யவர்மன்
கம்போடியாவின் மன்னராக இருந்த முதலாம் சூர்யவர்மனுக்கு நெருங்கிய நண்பராக இருந்த சோழ மன்னர் ராஜேந்திர சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு ராஜேந்திர சோழனுக்கு சிலை திறக்கப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்கவிருப்பதாகவும் உலகெங்கும் பல்வேறு தலைமைப்பொறுப்புகளில் இருக்கும் இருப த்தைந்தாயிரம் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் சொல்லியிருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் பெருமையளிப்பதாக இருக்கிறது!!