Wednesday, 28 November 2018

கானல் நீர்!!!

சென்ற மாதம் நண்பர் வீட்டில் ஒரு நிகழ்வு!  மனதை மிகவும் காயப்படுத்திய நிகழ்வு. வெளி நாட்டு வாழ்க்கை பற்றி கில்லர்ஜி சில நாட்களுக்கு முன்னெழுதியிருந்தது அது போன்ற பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்த ஆரம்பித்தது. அதற்கு முன் இங்கு மழையிலும் சில்லென்று உறைய வைக்கும் குளிர் காற்றிலும் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரம் கடும் உழைப்பில் கரைந்து கொண்டிருக்கும் நம் மக்களைப்பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டும்..

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கானல் நீராய் பாலைவனமாய் இருந்த இந்த நாடு கடந்த 40 வருடங்களில் மாட மாளிகையும் அழகு கோபுரங்களுமாய் தகதகக்கிறது. ஆனாலும் அன்றிலிருந்து இன்று வரை குடும்பத்தைக்காக்க, எல்லாவற்றையும் துறந்து ஆண்கள் இங்கே வேலை தேடி வருவது மட்டும் நின்றபாடில்லை. இப்போதெல்லாம் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களின் படிப்பிற்கேற்றாற்போல வேலைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இங்கே வேலைக்கு கூலித்தொழிலாளர்கள் காலை ஐந்து மணியிலிருந்து தங்களது தொழிற்கூடங்களுக்கு அழைத்துச்செல்ல வரும் பேருந்துகளுக்காக அங்கங்கே காத்து நிற்பார்கள். அப்போதெல்லாம் எங்களின் உணவகம் அவர்களுக்காகவே காலை ஐந்து மணிக்கு திறக்கப்பட்டு சுடச்சுட இட்லியும் சாம்பார், வடையுமாய் காத்திருக்கும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வடை அல்லது இட்லியைப்போட்டு அதன் மீது சாம்பாரை ஊற்றி வாங்கிச்செல்வார்கள். வெளியே வாங்கும் சாப்பாடு கட்டுபடியாகாதவர்கள் ஒருத்தருக்கொத்தர் முறை போட்டுக்கொண்டு ஒருத்தர் சமைப்பது, இன்னொருத்த‌ர் பாத்திரங்கள் கழுவுவது, இன்னொருத்தர் காய்கறிகள் அரிந்து தருவது என்று நாட்களை கடத்துவார்கள். வெள்ளிக்கிழமையானால் தாய் நாட்டுக்கு உறவுகளை அழைத்துப்பேசுவதும் அழுவதும் கலங்குவதும் எப்போதுமே நடக்கும். அப்போதெல்லாம் மொபைல் கிடையாது என்பதால் உறவுகளை தமிழ்நாட்டுக்கு அழைத்துப்பேசுவதற்கும் அத்தனை சீக்கிரம் தொட ர்பு கிடைக்காமல் தாவு தீர்ந்து விடும்.
இதில் எத்தனையோ சோகங்கள்! எத்தனையோ கண்ணீர்த்திவலைகள்!! எத்தனையோ பிரச்சினைகள்!!முதலில் குறிப்பிட்டிருந்த படி, சில நாட்களுக்கு முன் எங்கள் நண்பர் வீட்டில் ஒரு சோகம். கணவர் வெளி நாட்டில் வேலை செய்து குடும்ப‌த்தைக் காப்பாற்றிக்கொண்டு, பொருளாதார நிலையால் ஊருக்குக்கூட சில வருடங்களாகவே போகாமலிருந்தார். மனைவி எப்போதும்போல அவர் அனுப்பும் பணத்தில் சிக்க‌னமாக செல்வு செய்து கொண்டு, குழந்தைகளை படிக்க வைத்து, பாதுகாத்துக்கொண்டிருந்தார். கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொன்டிருந்த மூத்த பெண் திடீரென்று ஒரு நாள் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. பதறி, அழுது, பல நண்பர்களை வைத்து தேடியதில் அந்தப்பெண் தன் மனதுக்குப்பிடித்தவனுடன் சென்று விட்டது தெரிந்தது. இவர்கள் வீடு வசதியான, கெளரவமான வீடு என்பதால், கீழ் நிலையில் இருந்த அவனுடைய குடும்பம் யோசனை செய்து பெண்ணுக்குத்தாலி கட்டி, காவல் நிலையத்துக்கும் சென்று பாதுகாப்பும் செய்து கொண்டது. ஒரே ஊர் வேறு! இவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று அழுது, முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விடுகிறோம் என்று வீட்டுக்கு அழைத்துப்பார்த்தும் அந்தப்பெண் வர மறுத்து விட்டது. ' என்னைப்பொறுத்த வரை என் பெண் செத்து விட்டது' என்று பெண்ணின் தாயார் அழுத அழுகை நினைவை விட்டு மறைய‌ மறுக்கிறது. வெளி நாட்டில் வாழும் தந்தையோ அவளை நான் தலை முழுகி விட்டேன் என்று சொல்லி அழுகையோடு ஃபோனை வைத்து விட்டார். மூன்று நான்கு முறை அந்தப்பெண்ணின் தாயாரிடம் இங்கிருந்து கூப்பிட்டு பேசிய போதும் அவரின் குமுறலுக்கும் அழுகைக்கும் வார்த்தைகளால் என்னால் ஆறுதல் படுத்த முடியவில்லை. பெற்றோர் தன் மீது வைத்த பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் அருமையாக வளர்த்த பெண் கொடுத்த விலை இது!

முன்பெல்லாம், அதாவது 50 வருடங்களுக்கு முன்னால் மொபைல், தொலைபேசிகளின் அதிகப்படியான புழக்கங்கள் இல்லாத காலத்தில், ஊரில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சினைக்கும் உடனடியாக வெளிநாட்டிலிருந்து வீடு திரும்ப முடியாது. என் கணவரின் மூத்த சகோதரர் அரேபியாவிலும் [ அப்போதெல்லாம் அனைத்து அரபு நாடுகளும் சேர்ந்து அரேபியா என்றழைக்கப்பட்டது ] அடுத்த சகோத‌ரர் அஸ்ஸாமிலும் வேலை செய்து கொண்டிருந்த போது அவர்களின் தந்தை [ என் மாமனார் ] இறந்து போனதற்கு, அவர்களின் முகத்தினை க‌டைசியாகப் பார்க்க‌க்கூட வர முடியவில்லை. வீட்டுக்குக் கடமையாற்ற செல்ப‌வர்கள் அடிக்கடி கொடுக்கும் விலை இது!

முன்பு எங்கள் உண‌வகத்தில் மூன்று வேளையும் சாப்பிட ஒரு த‌மிழ் நண்பர் வருவார். இங்கே துறைமுகத்தில் நல்ல‌தொரு வேலையில் பல வருடங்களாக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் வேலையை விட்டு விட்டு ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்லிச் சென்றார். சில மாதங்கள் சென்ற பின் என் கணவ‌ரின் இளைய சகோதரரிடம்  'உங்கள் சகோதரரின் உண‌வகத்தில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டு சொல்லுங்கள் ' என்று சொல்லியிருக்கிறார். அதன் காரணத்தையும் என் கணவரின் சகோதரரே சொன்னார். இங்கே பாலைவனத்தில் மழையிலும் வெயிலிலும் குளிரிலும் சம்பாதித்த பணத்தையெல்லாம் தன் மனைவி பெயரில் நிலமாகவும் ஆபரண‌ங்களுமாக வாங்கி சேமித்து விட்டுத்தான் அவர் ஊருக்குச் சென்றிருக்கிறார். சென்றதுமே அவரின் மனைவி ' நான் வேறு ஒருத்தரை இனி வாழ்நாள் முழுவத‌ற்குமாக சார்ந்து விட்டேன். என் பெயரில் இருக்கும் சொத்துக்கள் அனைத்தும் இனி எனக்கே சொந்தம் ' என்று சொல்லி விட, அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்ட அவர் மறுபடியும் சாதாரண நிலைக்குத் திரும்பவே அதிக நாட்கள் பிடித்ததாம். நாங்களும் அதிர்ச்சியில் உறைந்து போனோம்! இது மனைவி மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கு கணவன் கொடுத்த விலை! அதே போல ஒற்றையாய் தனிமையில் குடும்பத்தை கவனித்துக்கொண்டு கணவனுக்காக ஒரு தவம் செய்வது போல மனைவி காத்துக்கொண்டிருக்க, வெளி நாட்டில் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் ஆண்களின் கதைகளும் தொடர்ந்து கொன்டு தானிருக்கிறது!

மனைவியின் அன்பு, கணவனின் அக்கறை, குழ‌ந்தையின் மழலை, பெற்றவர்களின் பாசத்தவிப்பு, குடும்பம் என்ற குதூகலம், ஆசுவாசம்  என்று இவை அத்தனையையும் புறந்தள்ளினால் தான் பொருளாதார நிலை மேம்படும் என்றால் எல்லாவற்றிலிருந்தும் விலகிப்போக வேண்டியிருக்கிறது என்பது தான் நிதர்சனம்! அதுவரை இந்த அத்தனை சந்தோஷங்களும் கானல் நீர் தான்!!



Tuesday, 13 November 2018

ரசித்த திரைப்படம்!!!

சமீபத்தில் ஒரு தமிழ்ப்படத்தை மிகவும் ரசித்துப்பார்த்தேன்!
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் இப்ப‌டி சில படங்கள் தலைகாட்டும்… அந்த படங்களை பார்க்கிறவர்களில் ஒரு சிலராவது  தங்கள் கடந்த கால இளம் வயது வாழ்க்கையைத் திரும்பி பார்க்க வைக்கும்… அப்படி ஒரு படம்தான் விஜய்சேதுபதியும் த்ரிஷாவும் நடித்திருக்கிற 96!


ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவுக்கும், ராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதிக்கும் பள்ளிப் பருவத்தில் ஏற்படும் காதல், பிரிவு, என்று நகரும் படம், திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயான திரிஷாவும் திருமணம் செய்துகொள்ளாமல் தனது காதல் நினைவுகளோடு வாழும் விஜய் சேதுபதியும் சந்திக்கும் போது, தனது காதல் உணர்வுகளை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல், அதே சமயம் அதை மறைக்கவும் முடியாமல் ஜானு தவிக்க, அதே நிலையில் விஜய் சேதுபதியும் இருந்தாலும், திரிஷா வேறு ஒருவடைய மனைவி என்ற எல்லைக் கோடு இருப்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு அவர்களின் காதல் வலியை படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்பத்துவது தான் ‘96’ படத்தின் கதை.

94 முதல் 96 வரை, பத்தாம் வகுப்பு பயின்ற ராமச்சந்திரனும் ஜானகி பெயர் இருப்பதால் எஸ்.ஜானகி பாடலை பாடும் பள்ளி வயது த்ரிஷாவான ஜானுவும் அந்த வயதிற்கே உரிய பசுமையான காதலில் மிதக்கிறார்கள். அது காதலென்பது அவர்களுக்கே புரியாத உணர்வாக இருக்கிறது. ஒரு முறை ஜானு நிறைய நாட்கள் விடுமுறையில் இருக்கும்போது தான் ராமச்சந்திரன் அதை உணர்கிறான். அவனுடைய காதல் பக்தியாக இருக்கிறது. ஆழமாக அழுத்தமாக இருக்கிறது. பேசாமலும் சரியாக நிமிர்ந்து கூட பார்க்காமலிருந்தாலும் தயக்கமாக தடுமாறி அவன் பேசும்போது, துள்ளலும் சிரிப்பும் மலர்ந்த முகமுமாக இருக்கும் ஜானு அவனிடம் மனதால் நெருங்குகிறாள்.



விடுமுறையில் அனைவரும் இருக்கும் போது ராமச்சந்திரன் குடும்பச்சூழ்ல் காரணமாக வேறு ஊருக்குப்போக நேருகிறது. அடுத்த வருடம் புது வகுப்பில் அவனைக்காணாது தவிக்கும் ஜானுவுக்கு, நண்பர்கள் மூலம் அவன் ஊரை விட்டுச் சென்று விட்டது தெரிந்து துடிக்கிறாள். தன்னை சரிப்படுத்த முயற்சி செய்து கொண்டவாறே, பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியிலும் கால் பதித்து, தந்தையின் வற்புறுத்தலில் இன்னொருவனின் மனைவியாகி சிங்கப்பூருக்குச் செல்கிறாள்.

பயண ஓளிப்படக் கலைஞராக இருக்கும் விஜய் சேதுபதி (இராமச்சந்திரன்), ஒரு கல்லூரியிலும் ஒளிப்படம் தொடர்பான வகுப்பு எடுக்கிறார். தன்னுடைய மாணவர்களை ஒளிப்படம் தொடர்பான பயணச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, கொள்ளிடத்தில் வெள்ளம் என்பதால் தஞ்சை வழியே பயணப்பட நேரிடுகிறது. விடியற்காலை வெளிச்சத்தில் தஞ்சை அவரின் சிறு வயது நினைவுகளை மனதின் ஆழத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறது. தான் படித்த பள்ளியை ஒவ்வொரு அங்குலமாக பார்த்து ரசிக்கிறார்.




தன் கூட பழகிய நண்பர்களை வாட்ஸ் அப் மூலம் ஒன்று சேர்த்து மூன்று மாதம் கழித்து ஒரு தேதியில் சந்திப்பதாக முடிவு செய்கிறார். எல்லோரும் அந்த நாளன்று சென்னையில் சந்திக்கிறார்கள்.

எல்லோருக்கும் பிரியமான ஜானுவும் சிங்கப்பூரிலிருந்து தனியே வருகிறாள். அனைவருட‌னும் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தாலும் ராமச்சந்திரனைத்தேடி ஜானுவின் கண்கள் அலைகின்றன. ஜானு வந்து விட்டாள் என்பது தெரிந்ததும் தனியே போய் தயக்கமாக நின்று கொண்டிருக்கும் ராமச்சந்திரன் அவளே வந்து பேசும்போது தயக்கமாகப்பேசுவதும் காதலை வெளிகாட்டாமல் அடக்கி வைப்பதும் பம்முவதுமாய் அதே பத்தாம் வகுப்பு மாணவனைத் திரும்பவும் கொன்டு வருவது ரசனையான காட்சி!

விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பு சற்று நம்மை வியக்க வைக்கிறது.

தான் விரும்பியவன் இன்னமும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதை நினைத்து அவனுக்கு பெண் பார்க்க துடிப்பதும்  வீட்டுக்கு கூப்பிடும் விஜய் சேதுபதியை பார்த்து  ‘இந்திர லோக மேனகை,ஊர்வசி,ரம்பைகளை அதே டிரஸ்சில் அனுப்பினாலும் அவங்களை பத்திரமா பாத்துப்படா நீ’ என தன் காதலன் மீதான நம்பிக்கையை சொல்வதும் கடைசியில் பிரிவை தாங்க முடியாமல் உடைந்து அழுதுவதும் அத்தனை அழகு. திரிஷா என்கிற கதாபாத்திரத்தை மறந்து, ஜானுவாகவே தெரிகிறார்.

40-ஐ தொடும் ஆண் மகன் தன் காதலியைப் பார்த்து படும் வெட்கம், ‘தனக்கானவனை தவறவிட்டுவிட்டோமே’ என்கிற ஒரு கட்டத்தில் கதறி அழும் திரிஷாவின் தவிப்பு,  பள்ளிப் பருவத்தில் இயல்பாக மலரும் தோழமை, உள்ளுக்குள்ள் குமுறும் காதலை மனதின் ஆழத்தில் ஆழ்த்தி இன்னொருவன் மனைவி என்ற மரியாதையுடன் நடத்தும் ராமச்சந்திரனின் கண்ணியம், தன் வீட்டில் அவளின் சிறு சிறு பொருள்களை பொக்கிஷமாக பாதுகாத்து வ்ருவதை வெகுளித்தனத்துடன் அவளிடம் காண்பிக்கும்போது ஏற்படும் நெகிழ்வு, என பார்த்துப் பார்த்து இழைத்திருக்கிறார் இயக்குநர்.




விஜய்சேதுபதி - த்ரிஷா ஒன்றாகக் கழிக்கும் அந்த இரவு தான் படத்தின் பலம். பள்ளியில் பலமுறை விஜய்சேதுபதி கேட் டும் ஒருமுறைகூட பாடாத ‘யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே’ பாடலை விஜய் சேதுபதியின் வீட்டில் அந்த இரவில் த்ரிஷா பாடும் தருணமும், அப்போது விஜய்சேதுபதியின் பரவசமும் ரசனையானவை.

இவர்களின் பின்னணி பள்ளி பருவக் காட்சிகளில் வரும் ஆதித்யா (எம்.எஸ். பாஸ்கரின் மகன்) மற்றும் கௌரி கிஷன் இவர்களின் நடிப்பும் அருமை. 96 காதல் கதை என்பதால் அடிக்கடி வரும் இளையராஜாவின் பாடல்கள் 35 வயதைக் கடக்கும் அனைவரையும் பள்ளி பருவத்திற்கே அழைத்துச் செல்கிறது.

பழைய காதலியுடன் அந்த ஒருநாள் இரவுப் பொழுது. கரணம் தப்பினாலும் விரசமாகிவிடும். ஆனால் எந்த நெருடலும் இல்லாமல், எல்லை தாண்டாமல், எந்த சினிமாத்தனமும் இல்லாமல் மன உணர்வுகளை வைத்தே காட்சிப்படுத்தியதில் நம்மையும் நெகிழ்த்தி, அழகாய் நிமிர்ந்து நிற்கிறது மொத்த படமும்.

ராம், ஜானு, அவர்களின் கதை, இசை என எல்லாமுமாக சேர்ந்து நினைவுகளை கிளறிவிடுவதால் நமக்கும் கடந்தகாலத்திற்கு ஒரு நடை போய்விட்டு வந்த அனுபவம் நேர்கிறது.