Wednesday, 31 October 2018

துபாயில் ஒரு விருந்து!!!


கடந்த 28ந்தேதி எங்களின் நாற்பத்தி நாலாவது திருமண நாள்!

பேரன், பெயர்த்தியுடன் நாங்கள்!
மகன் இங்குள்ள ' நஸிம்மா ராயல் ' என்ற ஐந்து நட்சத்திர விடுதிக்கு மதியம் உணவிற்கு அழைத்துச்சென்றார். இதுவரை இங்கிருக்கும் எத்தனையோ ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளுக்கு உணவருந்த சென்றிருக்கிறோம். ஆனால் இப்படியொரு சுவையை, பரிமாறப்பட்ட அத்தனை உணவுகளிலும் நான் ருசித்த‌தில்லை.
நஸிம்மா ராயல் ஹோட்டல்
பொதுவாய் ஒவ்வொரு உணவு விடுதிக்கும் ஒர் தனிப்பட்ட சிறப்பு அடையாளம் உண்டு. என் மகன் கல்லூரியில் படிக்கும் பருவத்தில் இந்த நாட்டின் தலைநகரான அபுதாபியில் 'ஹில்டன் ஹோட்டலில்' வந்து 

ice tea
நுழையும் அனைவரும் அருந்தும் விதத்தில் ஒரு பெரிய தங்க நிற குடுவையில் தெளிவான டீ இருக்கும். சர்க்கரை, புதினா இலைகள், எலுமிச்சம்பழ சாறு, இஞ்சி துருவல்கள் கலந்து ஐஸ் கட்டிகளுடன் ஐஸ் டீ நம்மை வரவேற்கும். அந்த சுவையை நான் எந்த ஐஸ் டீயிலும் ருசித்ததில்லை.

சார்ஜாவில் ரயின்போ ஸ்டீக் ஹெளஸ் என்ற ஒரு உணவு விடுதி இருக்கிறது. அங்கு வழங்கப்படும் சாலட் வகைகளை நான் எந்த ஐந்து நட்சத்திர உணவு விடுதியிலும் பார்த்ததில்லை. 

MUTHABAL SALAD
அதிலும் அரேபிய சாலட் 'முத்தபல்' என்ற ஒன்று அத்தனை சுவையுடன் இருக்கும். அது வேறு ஒன்றுமில்லை. சுட்ட கத்தரிக்காய் விழுதுடன் அரைத்த எள் விழுதை ஒரு குறிப்பிட்ட அளவில் கலக்க வேண்டும். கடந்த 40 வருடங்களாக நான் இதன் அடிமை!

இப்படி ஒவ்வொரு உணவு விடுதியிலும் ஒரு குறிப்பிட்ட உணவு வகை மற்ற எல்லா உணவு வகைகளையும் தூக்கி அடிக்கும். ஆனால் இந்த உணவு விடுதியில் அனைத்து உணவு வகைகளும் அபுதமான சுவையுடன் இருந்தன. அதோடு வகை FUSION உணவு வகைகள் அதாவது பழைய உணவுக்குறிப்புடன் புதிய சில மாற்றங்கள் செய்வது., உதாரணத்திற்கு பால்கோவாவுடன் சோன் பப்டியைக்கலப்பது, சோளே பட்டூராவை குட்டி குட்டி பட்டூராக்களாக, அதுவும் கீரை கலந்து, மசாலா கலந்து செய்வது இப்படி செய்யும் மாற்ற்ங்களை அதிக ருசியுடன் வழங்குவது இந்த உணவு விடுதியின் சிறப்பு.

உணவு விடுதியின் பெயர் த்ரேசிந்த். இந்திய உணவு விடுதி. உலகின் மிக உயர்ந்த கட்டிடமான பூர்ஜ் கலிஃபா இருக்கும் சாலையில் இந்த நஸ்ஸிம்மா ஹோட்டல் அமைந்துள்ளது. 


பல வகை மெனு இருக்கின்ற்ன. நாம் விரும்பினவற்றை தருவிக்கலாம். அல்லது குறிப்பிட்ட செட் மெனுக்களை ஆர்டர் பண்ணலாம். அசைவம் அல்லது சைவம், complimentary starters, starters from the chef, juices, main course,  desserts  என்ற வகையை அடக்கியது ஒருவருக்கு 2500ரூ. 16 வகைகளை கொண்ட இன்னொரு செட் மெனு ரூ 4500லும் 7500லும் இருந்தது. நான் முதலாம் வகையையே தேர்வு செய்தேன். முக்கிய காரணம் உணவு ஹெவியாக வேண்டாம் என்பது.

ஆர்டர் செய்ததும் முதலில் ஒரு மண் குடுவையை நடுவில் வைத்து அதில் சில ஐஸ் கட்டிகளைப்போட்டு சில திரவங்களை ஊற்றினார் பரிமாறுபவர். 


உடனேயே நுரையுடன் வாசனையுடன் உள்ளிருந்து வழிந்தது புகை! இது வாசனை தெரபியாம். வரவேற்கும் விதமும் கூட! முகம், கைகள் துடைக்க குளிர்விக்கப்பட்ட துண்டுகள் வந்தன.

அதன் பின் முதல் வகை ஸ்டார்ட்டர் பிளேட் வந்தது. உணவு வகைகளை விளக்கிச் சொல்லி சென்றார்கள். 


வெண்டைக்காய் சிப்ஸ், பானி பூரி, வெள்ளரி ரோல்ஸ், தக்காளி சாலட், சில மாறுதல்களுடன் குஜராத்தின் டோக்ளா அதில் இருந்தன.


அதன் பின் அசைவம், சைவம் அடங்கிய அடுத்த ஸ்டார்ட்டர் பிளேட் வந்தது. வறுத்த ரால், பனீர் கோப்ஃதா, காலிஃபிளவர் 65, கறி மசாலா வந்தன.

சாப்பிட்டு முடிந்ததும் ஒரு முறை மேசையை சுத்தம் செய்தார்கள். ஒரு செயற்கையான குட்டி மரத்தைக் கொண்டு வைத்தார்கள். 



மறுபடியும் வாசனையும் புகையுமாக இருந்தது. 

எலுமிச்சம்பழ மூடியில் உறைய வைக்கப்பட்ட பெரி பழச்சாறு!
அதனடியில் எலுமிச்சை மூடியில் பெரி பழங்களின் சாறை ஊற்றி உறைய வைத்திருந்தார்கள். இது வாயை சுத்தம் செய்வதற்காக என்று விளக்கம் கொடுத்தார்கள்!


அதன் பின் மெயின் கோர்ஸ் வந்தன. பட்டர் சிக்கன், சோளே பட்டூரா, மட்டன் தேங்காய் வறுவல், ரொட்டிகள், நான்கள், சாதம் அவற்றில் அடக்கம்.

உண்டு முடித்ததும் மறுபடியும் கைகளைத்துடைக்க சூடான துண்டுகள் கொண்டு வந்து தந்தார்கள்.

கடைசியாக இனிப்பு வகைகள். சின்னச் சின்ன சாக்கலேட் உருண்டைகளின் மீது COFEE DESSERT சோழி வடிவத்தில் வந்தன.


இன்னொரு மரப்பெட்டியில் ஏலக்காய்கள் படுக்கை மீது புகழ் பெற்ற குஜராத் இனிப்பான பேதா’ [ PETHA] வந்தன. கூடவே பழங்கள் கலந்த 




புட்டிங். இணையாக ஒரு பெரிய தட்டில் பால்கோவா போன்ற இனிப்பின் மீது தூவப்பட்ட சோன்பப்டி!

இதில் அனைத்து உணவு வகைகளும் அதிக ருசியுடன் இருந்தன என்பது தான் இந்த விடுதியின் ஸ்பெஷாலிட்டி. அதன் பின் வீட்டிற்கு வந்து இந்த விடுதியைப்பற்றி படித்துப் பார்த்தால் அப்படி புகழுரைகள்! இங்கே ஒரு முறை வந்து சாப்பிட்டிருக்காவிட்டால் நீங்கள் துபாயில் இருப்பதில் அர்த்தமேயில்லை என்று கூட ரசிகர் கூட்டம் சொல்லியிருந்தது! ஆனால் அந்த புகழுரையை இந்த விடுதி நிரூபித்துக்கொண்டிருக்கிறது!!
 

Tuesday, 2 October 2018

முத்துக்குவியல்-52!!!

தன்னம்பிக்கை முத்து:

மாளவிகா ஐயர்! இவரது கதை இரத்த‌த்தை உறைய வைப்பதாக இருக்கிறது. 13 வயதில், இஞ்சினியராக இருந்த தந்தையுடன் ராஜஸ்தானில் பிகானீர் நகரத்தில் வாழ்ந்திருந்த இவரின் பள்ளிப்பருவம் ஒன்பதாம் வகுப்பு வரை இனிமையாக கழிந்திருக்கிறது.



அன்று தான் அந்த பதிமூன்று வயது சிறுமியின் வாழ்வில் விதி விளையாடியது. அன்று அவள் அணிந்திருந்த ஜீன்ஸில் சின்னதாக ஒரு கிழிசல் இருந்தது. ஃபெவிகால் வைத்து அந்தக் கிழிசலை ஒட்டிய மாளவிகாவுக்கு ஒரு கனமான இரும்பால் அதைத் தட்டி சமன்படுத்தினால் ஒட்டியது தெரியாது என்று தோன்றியது. கனமாக ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டே சென்ற போது தெருவில் ஒரு இரும்புக் குண்டு போல ஏதோ தெரிந்திருக்கிறது. அந்தக் குண்டு வெடிகுண்டு என்று மாளவிகாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பகுதியில் இயங்கி வந்த வெடிகுண்டுக் கிடங்கு ஒன்று சில காலத்திற்கு முன் தீக்கிரையாகி அதன் பொருள்கள் அந்தப் பகுதியெங்கும் சிதறிக் கிடந்தன. அவை செயலிழந்தவை என்று கருதியதால் அப்பகுதி மக்கள் அவற்றிற்குப் பெரிய முக்கியத்துவம் தரவில்லை.
மாளவிகா எடுத்த வெடிகுண்டு செயலிழக்காத வெடிகுண்டு. அவள் அதை எடுத்து ஒட்டிய ஜீன்ஸில் பலமாகத் தட்டிய போது அது வெடித்தது. அந்த இடத்திலேயே மாளவிகா தன் இரண்டு கைகளையும் இழந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் பலத்த சேதத்திற்கு உள்ளாயின. வெளியே ஓடி வந்த அவளுடைய தாய் “என் குழந்தையின் கைகள் எங்கே?” என்று கதறியது தான் அவள் மயக்கம் அடைவதற்கு முன் கேட்ட கடைசி வார்த்தைகள்.
அதிகமாய் ரத்தம் வெளியேறி இருந்த, கைகள் இல்லாத, கால்கள் உடலில் இருந்து அறுபடும் நிலையில் உள்ள அந்தச் சிறுமி பிழைப்பாளா என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு இருந்தது. பிழைத்தாலும் ஒரு காய்கறியைப் போல தான் அசைவற்று முடங்கி இருக்க வேண்டி இருக்கும் என்று பார்த்தவர்கள் நினைத்தார்கள்.
அடுத்ததாக செயற்கை உயிர் மின்சாரக் கைகள் (Bio-Electric Hands) அவளுக்கு சென்னையில் பொருத்தப்பட்டன. அவற்றையும் பயிற்சிகள் மூலமாகவே அவளால் பயன்படுத்த முடியும் என்கிற நிலை. அதையும் சலிக்காமல் செய்த மாளவிகா அந்தக் கைகளைக் கொண்டு மெல்ல எழுதவும் கற்றுக் கொண்டாள். ஆரம்பத்தில் மிகப் பெரியதாகத் தான் அவளால் எழுத்துக்களை எழுத முடிந்தது.



இதற்குள் இரண்டாண்டு காலம் ஓடி விட்டது. மகள் தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறாளே என்று பெற்றோர் ஆறுதல் அடைந்தனர். ஆனால் மாளவிகா அதில் திருப்தி அடையவில்லை. அவளுக்கு அவளுடைய பள்ளித் தோழி ஒருத்தியின் தொடர்பு போன் மூலம் இருந்து கொண்டே இருந்தது. பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால் அதற்கு மும்முரமாகப் படித்துக் கொண்டிருப்பதாக அந்தத் தோழி தெரிவித்தாள்.
மாளவிகாவுக்கு தானும் அந்தப் பொதுத் தேர்வை எழுத வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. அதை அவள் தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருந்த மகள், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புப் பாடங்களை இது வரை தவற விட்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு மூன்று மாதங்களில் தயாராக முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தாலும் மகளின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போட அவர்கள் விரும்பவில்லை.
இது போல் உடல் ஊனமுற்றவர்கள் சொல்லச் சொல்ல எழுத அரசு ஆட்களை நியமித்து தேர்வு எழுத அனுமதிப்பதால் அவளை அவளால் முடிந்த வரை படிக்க மட்டும் சொன்னார்கள். மூன்று மாதங்கள் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மாளவிகா படித்தாள். வீடு வந்த பிறகும் மாலையும் இரவும் விடாப்பிடியாகப் படித்தாள்.
மாளவிகா தேர்வு எழுதினாள். எட்டாம் வகுப்பு வரை சாதாரண மாணவியாக இருந்த மாளவிகா இத்தனை குறைபாடுகளுக்கு மத்தியில் தேர்வெழுதி மாநில அளவில் ரேங்க் வாங்கியது தான் தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி. கணிதம் மற்றும் அறிவியலில் சதமடித்த அவள் ஹிந்தித் தேர்வில் 97% எடுத்து மாநிலத்தில் ஹிந்தியில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள். பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியாளர்கள் எல்லாம் அவள் வீட்டுக்கு ஓடி வந்த போது மாளவிகா பெருமகிழ்ச்சி அடைந்தாள் என்றாலும் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எல்லாம் முடிந்தது என்று ஊர் நினைத்த வேளையில் தங்கள் மகள் சாதித்துக் காட்டியதில் அவர்கள் மனம் நிறைந்து போனது. அதன் பின் மாளவிகா ஒன்றன் பின் ஒன்றாகப் பல சாதனைகள் புரிந்தாள்.
அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது மாளவிகாவை குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வரவழைத்து பாராட்டி இருக்கிறார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற மாளவிகா யார் உதவியும் இல்லாமல் தானே பயணங்கள் செய்கிறார். இன்று உலகநாடுகள் பலவற்றிற்குச் சென்று பேசும் அளவு உயர்ந்திருக்கிறார். பல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் நடனம் கூட ஆடி பார்வையாளர்களை பிரமிக்கவும் வைத்திருக்கிறார். அழகாக உடைகள் உடுத்துவதில் ஆர்வம் உள்ள அவர் உடல் ஊனமுற்றவர்களுக்கான ஆடைகள் விளம்பரத்திலும் இன்று மிளிர்கிறார்.
இன்று உடல் ஊனமுற்ற குழந்தைகள் பலருக்கும் ஒரு மகத்தான வழிகாட்டியாக நாட்டில் வலம் வரும் அவர் அது போன்ற எத்தனையோ குழந்தைகளிடம் தானும் நிறைய கற்க இருப்பதாக உணர்ந்து கற்று வருவதாகவும் பணிவாகச் சொல்கிறார்.

அசத்தும் முத்து:

புற்று நோய் மற்றும் கொடிய நோய்களால் தாக்கப்பட்டு, அதற்கான மருத்துவ செலவுகளை செய்ய இயலாது தவிக்கும் நோயாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது மிலாப் என்னும் கூட்டு நிதி திரட்டும் தளம். [https://milaap.org/ ] பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு உதவும் ஆன் லைன் திட்டம் இது. நோயாளிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் நன்கொடைக்கான இன்ஷூரன்ஸ் உருவாக்குவது, ஆன்லைனில் க்ரவுட் ஃஃபண்டிங் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, டிஜிட்டல் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு அவர்கள் சார்பாக நிதி திரட்ட ஆட்களை நியமித்தல் போன்ற முயற்சிகளையும் மிலாப் மேற்கொள்ளுகிறது.
இதுவரை மிலாப் தளத்தில் மட்டுமே மருத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்காக 150 கோடி திரட்டப்பட்டுள்ளது.

தகவல் முத்து:

வெளியூர் சென்றிருக்கும் உங்கள் உறவினர் தன் பர்ஸ் ஏ.டி.எம் கார்டு உள்பட அல்லது கைப்பையைத் தொலைத்து விட்டால் சாப்பிடவோ, தங்கவோ, பயணிக்கவோ வழியில்லாத நிலையில் அவர் எப்படியாவது அருகிலுள்ள ஒரு பெரிய போஸ்ட் ஆபீஸ் சென்று உங்களுக்கு ஃபோன் செய்தால் போதும், நீங்கள் அவருக்கு உதவி செய்ய முடியும்.

நீங்களும் உங்கள் பகுதியிலுள்ள பெரிய போஸ்ட் ஆபீஸிற்கு செல்ல வேண்டும். அங்குள்ள இ.எம்.ஒ என்ற ஃபாரத்தை வாங்கி எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதை எழுதி பூர்த்தி செய்து, அந்த பணத்தை அங்கே செலுத்தினால் உங்களிடன் சீல் செய்யப்பட்ட ஒரு கவரை தருவார்கள். அதில் ஒரு டிஜிட்டல் எண் இருக்கும். அதை வெளியூரில் தவித்துக்கொண்டிருக்கும் உங்கள் உறவினருக்கு மெஸேஜ் செய்தால் போதும். அவர் அந்த எண்ணை அந்த போஸ்ட் ஆபீஸில் சொல்லி தன் ஃபோடோ ஐ.டி ஐ காண்பித்து பணத்தைப்பெற்றுக்கொள்ள முடியும். பெரும்பாலோனோர் தங்கள் மொபைலில் போட்டோ ஐ.டி யை வைத்துக்கொள்வதல் பிரச்சினை இல்லை.

சங்கீத முத்து:

காலஞ்சென்ற பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது குரலில் ஒலித்த ' மரணத்தை எண்ணி' பாடலையும் ' உள்ளத்தில் நல்ல உள்ளம் ' பாடலையும் கேட்டு ரசிக்காதவர்கள் மிகவும் குறைவு. அந்தப்பாடலை இன்றைய பாடகர் முகேஷ் தன் கம்பீரக்குரலில் இங்கு பாடுகிறார்! கண்கலங்கி கண்ணீர் வழிய அனைவரும் ரசிக்கும் காட்சி நம்மையும் நெகிழ வைக்கிறது. நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்கள்!!