இந்த முறை வலைத்தளத்திற்கும் எனக்குமிடையே ஒரு
இடைவெளி விழுந்து விட்டது.
42 வருடங்களுக்குப்பிறகு இதுவரை ஷார்ஜாவிலிருந்த
நாங்கள் துபாய்க்கு குடி பெயர்ந்தோம். மகனின் வர்த்தக அலுவலகம் துபாயில் என்பதால் இந்த
மாற்றம்.
இட மாற்றம், அதனால் ஏற்பட்ட தற்காலிக நெருக்கடிகள்
என்று பல நாட்கள் இணைய வசதியின்றி அதிகப்படியான வேலைப்பளு. ஒரு வழியாக, இணையத்தொடர்பு,
தொலைக்காட்சியின் உயிர்ப்பு, என்று நிமிரும்போது தஞ்சைக்குக் கிளம்பி விட்டோம்!
துபாய் ஒரு தனி எமிரேட், ஷார்ஜா ஒரு தனி எமிரேட்.
ஒவ்வொரு எமிரேட்டிற்கும் தனித்தனி சட்ட திட்டங்கள் என்பதால் முறைப்படி தொலைத்தொடர்பை
நீக்கி, பல்லாண்டு கால டெபாஸிட்டை திரும்பப்பெற்று, திரும்ப துபாயில் தொலைத்தொடர்பிற்கு
பணம் கட்டி மறுபடியும் தொலைத்தொடர்பு பெறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது!
எங்களுக்கு 42 வருடங்கள் என்றால் என் மகனுக்கு
40 வருடங்கள் ஷார்ஜாவில் வாழ்க்கை கழிந்து விட்டது. பழகிய இடங்கள், இத்தனை வருடங்களாக
பழகிய நண்பர்கள், மருத்துவம் பார்த்த மருத்துவ நண்பர்கள், கூடவே வரும் நிழல் போன்ற
நினைவுகள் அனைத்தையும் பிரிந்து புதிய இடத்திற்கு வந்து விட்டோம்.
இத்தனைக்கும் ஷார்ஜாவிலிருந்து துபாய் 15 கிலோ
மீட்டர் தூரம் தான். எப்போது வேண்டுமானாலும் ஷார்ஜாவிற்கு வந்து கொள்ளலாம் தான். ஆனாலும்
மனம் கனமாகி விட்டது எங்கள் வீட்டை விட்டுக் கிளம்பிய போது. என் மகனுக்கும் அதே மாதிரி
உணர்வுகள்!
sharjah |
அப்போதெல்லாம் ' திரைகடல் சென்று திரவியம் தேடு என்று ஒளவையார்
சொன்னது போல் பொருள் தேட, தன் இல்லத்தை வளப்படுத்த ஏராளமானோர் கடல் கடந்து பொருள் தேடி
தன் குடும்பத்தையும் தன் சுற்றத்தையும் வளப்படுத்தினார்கள். என் தாத்தா காலத்தில் பர்மா,
ரங்கூன், மலேயா நாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டினார்கள். சட்டப்படி ஐக்கிய அரபுக்குடியரசில்
நுழைய முடியாதவர்கள் கள்ளத்தோணியில் வந்ததும் பசிக்காக நடுக்கடலில் கையில் கிடைத்த
தோல் பொருள்களையெல்லாம் சாப்பிட்டதுமான கதைகளைக்கேட்டிருக்கிறோம். நாளடைவில் கடுமையான
சட்ட திட்டங்களினாலும் காவல் கண்காணிப்புகளினாலும் இவையெல்லாமே அழிந்து போனது!
' 1971ல் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு
ஏழு எமிரேட்ஸ்களும் இணைந்து ஐக்கிய அரபுக்குடியரசான பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து நாங்கள்
ஷார்ஜாவில் நுழைந்தோம்.
எங்கு நோக்கினாலும் மணல் படுக்கைகள். சோனா பஜார்
என்று சிறு கடைகள் அடங்கிய சிறு சிறு தெருக்கள் இருக்கும். அங்கு தான் புடவைகள், நகைகள்
வாங்கும் வழக்கமிருந்தது. பெண்கள் பிரச்சினைகளுக்கென்று எந்த இந்திய மருத்துவரும் அப்போது
கிடையாது. ஒரு சூடான் நாட்டு மருத்துவப்பெண்மணியிடம் தான் செல்லுவோம்.
என் கணவருக்கு நடுக்கடலின் நடுவே கப்பலில் ஒரு
வாரம் வேலை, ஒரு வாரம் ஓய்வு. கடலின் நடுவில் 20000 அடிக்கும் மேலான ஆழத்திலிருந்து
எடுக்கப்பட்ட க்ரூட் ஆயில் இந்தக்கப்பலுக்கு ராட்சசக்குழாய்களின் வழியே வரும். அதன்
அளவை அளந்து அங்கேயே சேமித்து வைப்பதிலும் பின் அங்கிருந்து வெளியே ஏற்றுமதி செய்யும்
பணியிலும் என் கணவர் பொறுப்பு அதிகாரியாக இருந்தார்கள்.
கிடைக்கும் ஊதியத்தை என் கணவரும் அவரின் சகோதரர்களும்
அப்படியே ஊருக்கு அனுப்பி விடுவார்கள். மீதியிருக்கும் சொற்ப பணத்தில் தான் குடும்பம்
நடக்கும்.
இப்படியே 13 வருடங்கள் வேலை செய்த பிறகு ஒரு உணவகத்தின்
உரிமையாளராக மாறினார்கள்.
உறவு முறை பெண்களுக்கு திருமணங்கள், கல்வி வசதி,
பையன்களுக்கு படிப்பிற்கான செலவு, அரபு நாட்டில் வேலைகள் வாங்கித்தருதல், இப்படி உறவுகளுக்காக
என்றால் முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல் என்று செய்ததும் செய்து
வருவதும் மன நிறைவுக்காக!! என் கணவர் உணவகம் நடத்த ஆரம்பித்த பின் நிறைய ஏஜென்சிக்காரர்களால்
ஏமாற்றப்பட்டு, நடுத்தெருவில் விடப்பட்டு விழித்துக்கொண்டு நிற்கும் தமிழர்களை மற்ற
மாநிலத்தவர்கள் எங்கள் உணவகத்தில் கொன்டு வந்து விடுவார்கள். அவர்களுக்கு சாப்பாடு போட்டு, எங்கள் பணியாளர்களின்
விடுதியில் தங்க வைத்து, பாஸ்போர்ட், விசா என்று எதுவுமே இல்லாமல் தவிக்கும் அவர்களுக்கு
இந்தியன் கான்ஸ்லேட் மூலம் தற்காலிக பாஸ் வாங்கிக்கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதும்
நிறைய நடக்கும். என் கணவரும் அவரைச் சார்ந்த சில தமிழர்களும் சேர்ந்து திடீரென்று மரணித்தவர்களை
பத்திரமாக தாய்நாட்டுக்கு அனுப்புவது, நோயுற்றவர்களுக்கு சிகிச்சை எடுக்க உதவுவது,
வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் என்று அவ்வப்போது ஏற்படும் இயற்கைப்பேரிடர்களினால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக பணமும் ஆடைகளும் வசூலித்து இந்திய பிரதம மந்திரியின் நிவாரண
நிதிக்கு அனுப்புவது என்று எத்தனை எத்தனை அனுபவங்கள்!!
DUBAI |
இயந்திர மயமான வாழ்க்கையில் பாலைவனச்சோலை மாதிரி
ஷார்ஜா கிரிக்கெட் வந்தது. ஷார்ஜா, துபாயில் வசித்த இந்தியர்களெல்லாம் இந்திய வீரர்களுக்கு
ஆதரவாக வந்து குவியும் காட்சி அற்புதமாயிருக்கும்!! அவர்களின் கைத்தட்டலால் ஷார்ஜா
ஸ்டேடியமே கிடுகிடுத்துப்போகும்! நானும் என் கணவரும், சில சமயம் என் மகனும் தவறாமல்
கிரிக்கெட் மாட்ச் ஒவ்வொன்றையும் போய் ரசித்து விட்டு வருவோம்!
வாழ்க்கையில் காட்சிகள் மாறுவது போல, பாலைவனம்
மெல்ல மெல்ல சோலை வனமானது. கடல் நீர் குடிநீரானது. இந்த 40 வருடங்களில் அங்கே ஏற்பட்டிருக்கும்
கல்வி வளர்ச்சியும் வானளாவிய கட்டிடக்கலையும் செல்வ வளர்ச்சியும் மருத்துவ வசதிகளும்
பசுமையும் பிரமிக்கத்தக்கது.
ஷார்ஜா ஒரு அமைதியான அமீரகம். பாதுகாப்பான, சுதந்திரமான
வாழ்க்கையில் இது வரை பிரச்சினைகள் இருந்ததில்லை. இந்த அமைதியான வாழ்க்கையை விட்டு,
பரபரப்பான துபாய் வாழ்க்கைக்கு இனி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் !