சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் உபகரணங்கள் நம் வாழ்க்கையில் எந்தெந்த விதங்களில் விளையாடுகின்றன என்பதை ஒரு புத்தகத்தில் விரிவாகப்படித்த போது மனம் அதிர்ந்து போயிற்று. ஓரளவு இந்த பிளாஸ்டிக் உபகரணங்கள் எந்த அளவு ஆபத்தை விளைவிக்கின்றன என்பது தெரியுமென்றாலும் அதை விரிவாகப்படித்தபோது அவற்றை எல்லோரும் அறிய இங்கே விரிவாகக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணமே இந்த பதிவு!!
நாம் காலை எழுந்து பல் துவக்குவதிலிருந்து
இரவு பால் குடிப்பது வரை எங்கும் எதிலும் பிளாஸ்டிக் தான். நாம் உபயோகிக்கும் அனைத்துமே தற்போது பிளாஸ்டிக்
மயமாகி விட்டது. நம் வாழ்க்கையில் அது நிரந்தரமாகக் கலந்து பின்னிப்பிணைந்து இருக்கும்போது
அதைப்பற்றிய விழிப்புணர்வு நமக்கு இருந்தால் மட்டுமே நம் உடலிலும் வாழ்க்கையிலும் பிளாஸ்டிக்கால்
ஏற்படும் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளமுடியும்!
பிளாஸ்டிக் பொருள்களில்
சூடான உணவை வைக்கும்போது பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனம் நம் உடலில் கலந்து விடுகிறது.
இப்படி ஒவ்வொரு நாளும் தெரிந்தோ தெரியாமலோ ரசாயனங்கள் நம் உடல் உறுப்புகளை தாக்கி பலவித
நோய்களுக்கும் குறைபாடுகளுக்கும் நம்மை ஆளாக்குகின்றன.
தாலேட்ஸ் என்னும் பொருளைப்பயன்படுத்தி
பிளாஸ்டிக் உருவாக்கப்படுகிறது. இது தான் பிளாஸ்டிக் பொருள்களை வளைக்கவும் மென்மையாக்கவும்
செய்கிறது. இதில் ஏழு வகை தாலேட்ஸ் அபாயகரமானவை. தாலேட்ஸ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைப்பயன்படுத்துவதால்
ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு, குழந்தைகளுக்கு மார்பக வளர்ச்சி, கருச்சிதைவு, குறைப்பிரசவம்,
ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் வருகின்றன.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு
பிளாஸ்டிக் பொருள்களிலும் அதன் கீழ்ப்புறம் முக்கோண வடிவத்துள் ஒரு எண்ணைப்பொறித்திருப்பார்கள்.
அந்த எண்னை அடிப்படையாகக்கொண்டு அந்த பிளாஸ்டிக் பொருள் எந்த மூலக்கூற்றை அடிப்படையாகக்
கொன்டு தயாரிக்கப்பட்டுள்ளது, அதை எத்தனை நாட்களுக்குப்பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து
கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்
பாட்டில் அல்லது பிளாஸ்டில் டப்பாவின் கீழ்ப்புறம் எண் 1 என்று அச்சிடப்பட்டிருந்தால்
அது ' பெட்' என்று சொல்லப்படும் ' பாலிஎத்தின் டெரிபதலேட்' என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை.
பொதுவாய் தண்ணீர், ஜூஸ் போன்றவை இந்த பாட்டிலில்தான் அடைக்கப்பட்டு வருகிறது. இந்த
பாட்டில்களை ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும். நாள்பட பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.
இந்த வகை பிளாஸ்டிக் தானாகவே சிதையும் தன்மை கொண்டது. அதனால் இந்த வகை பாட்டில்களில்
‘ crush the bottle after use ‘ என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.
முக்கோண வடிவின் உட்புறம்
2 என்ற எண் இருந்தால் இந்த வகை பிளாஸ்டிக் ' ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன்' என்ற மூலக்கூறால்
செய்யப்பட்டவை என்று அர்த்தம். ஷாம்பூ பாட்டில்கள், பெளடர் டப்பாக்கள் இந்த வகையைச்
சேர்ந்தவை.
முக்கோணத்தினுள் 3 என்ற
எண் 'பாலிவினை குளோரைடால்' உருவாக்கப்பட்டவை. மேஜை விரிப்புகள், விளையாட்டுப்பொருள்கள்
இதனால் உருவாக்கப்பட்டவை.
முக்கோணத்தினுள் 4 என்ற
எண் இருந்தால் அவை லோ டென்சிட்டி பாலிஎத்திலீனால் உருவாக்கப்பட்டவை. இதை எப்போது வேண்டுமானாலும்
அழித்து மீண்டும் உருவாக்கலாம். பிளாஸ்டிக் கப், நியூஸ் பேப்பர், கடைகளில் கொடுக்கப்படும்
கவர்கள் போன்றவை இவற்றால் உருவாக்கப்பட்டவை.
எண் 5 குறிக்கப்பட்ட பொருள்கள்
பாலி புரோபைலீனால் உருவாக்கப்பட்டவை. இது எல்லாவற்றையும் விட சிறந்தது. ஐஸ்க்ரீம் கப்,
ஸ்ட்ரா போன்ற பொருள்கள் இந்த வகை மூலக்கூறால் உருவாக்கப்பட்டவை.
எண் 6 கொண்டு குறிக்கப்பட்ட
பொருள்கள் பாலிஸ்ட்ரீன் என்ற மூலக்கூறால் ஆனவை. இந்த பிளாஸ்டிக் பொருள்கள் மிகவும்
ஆபத்தானவை. பிளாஸ்டிக் ஸ்பூன், கப், போர்க் முதலியவை இந்த வகையைச் சார்ந்தவை.
என் 7 குறிக்கப்பவை பாலிகார்போனைட்
பைஸ்பினால் என்ற மூலக்கூறால் செய்யப்பட்டவை. இந்த பிளாஸ்டிக் பொருள்களை நீண்ட நாட்கள்
பயன்படுத்தினால் கான்ஸர், இதய நோய் வரலாம். இப்போது பிரபலமாக இருக்கும் டிபன் பாக்ஸ்கள்
இந்த மூலக்கூறால் ஆனவையே. அதனால் அதை அடிக்கடி மாற்றுவது நல்லது.
பிளாஸ்டிக் டப்பாக்களின்
அடியில் 1, 2, 5 என்று குறியீடுள்ளவை உணவுப்பொருள்கள் வைப்பதற்காக தரமாகத் தயாரிக்கப்பட்டவைகளே.
அவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது. வண்ணம் கரையாது. மற்ற
எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு மிகவும்
ஆபத்தை உண்டாக்கும். இதில் உணவுப்பொருள்கள் வைத்தால் அவற்றில் விஷம் ஏறி ஆபத்தை விளைவிக்கும்.
எண் குறியீடு இல்லாத பிளாஸ்டிக் பொருள்களை வாங்கவே வாங்காதீர்கள்.
நல்ல பிளாஸ்டிக் என்கிற
ஒன்று கிடையவே கிடையாது. பிளாஸ்டிக்கை மோசமானது, மிக மோசமானது என்றே வகைப்படுத்த முடியும்.
ஒரு லட்சம் சிந்தெடிக் கெமிக்கல்கள் பிளாஸ்டிக்கில் உள்ளன. அதில் ஆறாயிரத்தை மட்டுமே
இதுவரை ஆய்வு செய்துள்ளார்கள். மீதம் உள்ளவை என்ன தீமைகளை ஏற்படுத்தும் என்பதை இதுவரை
கண்டு பிடிக்கவில்லை.
பொருளாதாரத்தில் வளமாக உள்ள,
சத்தான உணவு உண்பவர்களின் இரத்தத்தை ஆய்வு செய்தபோது, அதில் 275 வகையான ரசாயனங்கள் இருந்திருக்கின்றன.
அவர்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?
எந்த பிளாஸ்டிக் பொருளாக இருந்தாலும் அதில், 1,000 பி.பி.எம் வரைதான் தாலேட்ஸ் கலந்திருக்க அனுமதி உள்ளது. ‘பாக்பேக்’ எனும் பைகளில் குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன்களை அச்சிட்டு, அதன் முன் வடிவத்தில் தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் இந்தப் பொம்மையைப் பயன்படுத்தும்போது, வாயில்வைக்க வாய்ப்பு உள்ளது. எனவே தாலேட்ஸ் பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட பைகளைத் தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள் குளிக்கும் வாட்டர் டப்பில் ரப்பர் வாத்துகளை நீந்தவிடுவது உண்டு. குழந்தைகளைக் குளிக்கவைக்க பெற்றோர் செய்யும் யுக்தி இது. இந்த வாத்து பொம்மையில் 1,400 பி.பி.எம் தாலேட்ஸ் கலக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான பொருள்களை
வாங்கும்போது [BPA FREE], [ PHTHALATES
FREE], [ P.V.C FREE] என்று குறிப்பிட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும். அவெனில் சமைக்க
எவ்வளவு பெரிய பிராண்டாக இருந்தாலும் பிளாஸ்டிக்கைப்பயன்படுத்தக்கூடாது.
கண்ணாடி பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டிற்கு வாங்கும் தண்ணீர் பாட்டிலின் எண் 2, 4 , 5 என்று அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.