Wednesday, 23 March 2016

சிறுதானிய இட்லி!!!

உணவே மருந்து என்று ந‌ம் முன்னோர்கள் கூறினார்கள்.

ஆனால் பலவித நோய்களில் பாதிக்கப்படுகின்ற இன்றைய தலைமுறையின் வாழ்வு மருந்துகளே உணவு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் ந‌ம் பாட்டன், முப்பாட்டன் காலத்தில் பயன்படுத்திய சிறு தானிய உணவுகள் இப்போது மீண்டும் மக்களின் வாழ்க்கையில் நுழைந்திருக்கின்றன! இது பரவலான விழிப்புணர்வின் தாக்கம் என்று கூட சொல்லலாம். மீடியா, பத்திரிகைகள் சிறு தானிய உணவுகளை வரவேற்று எழுதும் ஆய்வுகளும் சமையல் குறிப்புகளும் இந்த முன்னேற்றத்திற்கு பெரியதொரு காரணம் என்றும் சொல்லலாம்.

பல வருடங்களுக்கு முன்னர் கிராமத்தில் வசித்த என் சினேகிதி வீட்டிற்குச் சென்றபோது, அவர் இரவு உணவிற்கு கம்பங்களியும் நாட்டுக்கோழிக் குழம்பும் தக்காளி சட்னியும் சமைத்திருந்தார். அதன் ருசி நாக்கிலேயே தங்க, அனைவரும் ஒரு பிடி பிடித்தோம். அப்புறம் இரவு முழுவதும் வயிற்றில் கல்லைக் கட்டி வைத்தது போல ஒரு அசெள‌கரியம். அப்புறம் தான் தெரிந்தது இரவு நேரத்தில் கம்பை, அதுவும் அதிகம் சாப்பிடக்கூடாதென்பது. கோழியும் அத்தனை சீக்கிரம் செரிக்ககாது! ஆக, பல நன்மைகள் அடங்கியிருந்தாலும் எப்போது எந்த அளவு சாப்பிட வேண்டுமென்பதில் தான் அவற்றின் பலன் இருக்கிறது!


ராகி பல மடங்கு கால்சியத்தையும்,

கம்பு இரும்புச்சத்து, புரதத்தையும்,

சோளம் வைட்டமின்களையும்.


வரகு நார்ச்சத்துக்களையும் தாது உப்புக்களையும்,



சாமை இரும்புச்சத்தையும்,


திணை பாஸ்பரஸ், வைட்டமின்களையும்


குதிரைவாலி மிக அதிக இரும்புச்சத்து, நார்ச்சத்தையும்

தன்னுள்ளே கொண்டிருக்கின்றன.  இவற்றோடு அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ள அரிசியையும் அதிக அளவில் புரதமும் பாஸ்பரஸும் உள்ள கோதுமையையும்  சுழற்சி முறையில் நாம் உண்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுப்பதுடன்  , சர்க்கரை நோய், கொழுப்பு இவை குறைவதுடன் கான்ஸர் நோய் வராமலும் தடுக்கின்றன. 

அதனால் தினமும் சிறுதானியங்களை ஏதேனுமொரு வடிவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல பலன்களையும் வலிமையையும் கொடுக்கும். சிறு தானியங்களை எண்ணெயில் பொரித்து சாப்பிடும்படியான உண‌வுகளாக சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து உண்ணும் உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு வகைகள் செய்து உண்பது நல்லது. இப்போது சிறுதானிய இட்லி செய்யும் விதத்தைப் பார்க்கலாம்!



சிறுதானிய இட்லி

தேவையானவை:

சாமை‍ ஒரு  கப்
வரகரிசி ஒரு கப்
கம்பு ஒரு கப்
திணை ஒரு கப்
இட்லி அரிசி ஒரு கப்
முழு உளுந்து ஒரு கப்
வெந்தயம் ஒரு ஸ்பூன்
தேவையான உப்பு

செய்முறை:

உளுந்தையும் வெந்தயய‌த்தையும் கழுவி ஒன்றாக ஊற வைக்கவும். மற்ற‌ தானியங்களை கழுவி ஒன்றாய் ஊற வைக்கவும். 5 மணி நேரம் ஊறிய பின்பு முதலில் உளுந்தை நன்கு அரைத்தெடுக்கவும். பிறகு தானியங்களை மிருதுவாக  அரைத்தெடுத்து உளுந்து மாவு, உப்பு கலந்து 8 மணி நேரம் புளிக்க விடவும். வழக்கமான  இட்லி செய்வது போல சிறுதானிய இட்லிகளை வேக வைத்து எடுக்கவும். 

Wednesday, 16 March 2016

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

எப்போதோ எங்கோ படித்தேன் ' நாமெல்லாம் எந்த அளவிற்கு அதிர்ஷ்டசாலி' என்ற இந்த கட்டுரையை! மண்டையில் அடிப்பது போலிருந்தது இதிலிருக்கும் உண்மைகள்! கிட்டத்தட்ட
 ' உனக்கும் கீழே உள்ள‌வன் கோடி, நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' என்ற கண்ண‌தாசனின் உரைநடை உருவாக்கம் என்று கூட சொல்லலாம்! இதைப்படிப்பதால் உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில்கூட மாறுதல்கள் ஏற்படலாம்!

இனி இது உங்கள் பார்வைக்கு!

நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

உண்ண உணவும் உடுத்த உடையும் வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள‌ 75 சதவிகித‌ மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்!

வங்கியில் பண‌மிருந்தால் அவ்வாறு உள்ள‌ 8 சதவிகித மக்களில் நீயும் ஒருவ‌ர். ஏனெனில் உலகில் உள்ள‌ 80 சதவிகித மக்களுக்கு வங்கிக்கணக்கே இல்லை!

உன்னிடம் கணிப்பொறி இருந்தால் அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மக்களில் நீயும் ஒருவர்.

நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் உன்னால் மொபைலில் பேச முடிந்தால், அவ்வாறு வாய்ப்பே இல்லாமலிருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்!

நோயின்றி புத்துணர்வுடன் காலையில் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி!

பார்வையும் செவித்திறன், வாய் பேசாமை போன்ற எந்தக்குறைபாடும் இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உலகில் உள்ள‌ 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை உனக்கு அமைந்துள்ள‌து என்பதை அறிந்து கொள்!!

உன் பெற்றோரைப்பிரியாமல் அவர்களுடன் நீ இருந்தால் துன்பத்தை அறியாதவன் நீ என்பதைப்புரிந்து கொள்.

தாகம் எடுத்தால் குடிப்தற்கு உனக்கு தண்ணீர் கிடைக்கிறதா? உலகம் முழுமையும் சுமார் 100 கோடி மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் கிடைப்பதில்லை என்பதை நீ அறிவாயா?

உலக அறிவு பெற்று இந்த செய்தியை உன்னால் படிக்க முடிகிறபோது, உலக முழுமையும் எழுழுதப்படிக்கத்தெரியாத 80 கோடி மக்களுக்குக்கிடைக்காத கல்வி உனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்!

இணையத்தில் இதை உன்னால் படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களையும் விட நீ மேலானவன்!!

நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும் தொழில் நுட்பங்களையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அதைப்பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, இந்த அளவு நல்லவைகளை கைவரப்பெற்றிருக்கும் நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி!

வீண் கவலைகளை விட்டு விட்டு, அந்தக் கவலைகளை காரணம் காட்டி குமைந்து நிற்பதை அடியோடு விட்டு, நான் எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலி என்ற உணர்வோடு இயன்றவரை அடுத்தவர்களுக்கு உதவுங்கள்!!
 

Tuesday, 8 March 2016

வலிகளும் வாழ்க்கையும்!!

கடந்த 20 நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. வெளி நாட்டில் இருக்கையில் மரணங்கள், விபத்துக்கள், திருமணங்கள் என்று விசாரித்தல்களுக்கும் பிரயாணங்களுக்கும் செல்வது தவிர்க்கப்பட்டு விடும். நம் சார்பாக யாராவது ஒரு உறவினர் இவை அனைத்திற்கும் சென்று மொய் எழுதுவதையும் சாங்கியங்கள் செய்வதையும் செய்து வந்து விடுவார்கள். எப்போது ஊருக்கு வருகிறோமோ அப்போது சென்று விசாரித்தால் போதும். ஒரு வகையில் இது தப்பித்தல் என்றாலும் சில சமயங்களில் அதுவே நிம்மதியாக இருக்கும். ஆனால் ஊரில் இங்கே இருக்கும்போது இவை எதிலிருந்துமே தப்பித்து விட முடியாது. மனது துக்கத்தில் அலை மோதுவதையும் தவிர்க்க முடிவதில்லை.

சென்ற‌ மாத இறுதியில் ஒரே சமயத்தில் இரு பெரும் நிகழ்வுகள். முதலாவது என் கணவரின் நண்பர். கல்லூரி பருவத்திலிருந்து நட்பைத் தொடர்ந்து வ‌ருபவர். சில வருடங்களுக்கு முன் இதயத்திலிருந்த அடைப்பிற்காக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டவர். அதன் பின் தொடர்ந்த சில வருடங்களில் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டு இடது கை, கால் மற்றும் பேச்சுத்திறனை இழந்து தீவிர சிகிச்சைக்குப்பின்னர் பல மாதங்கள் கழித்து அவருக்கு ஓரளவு பேசவும் கை, காலை இயக்கவும் முடிந்தது. 4 மாதங்களுக்கு முன்னால் தான் மனைவியுடன் எங்கள் இல்லம் வந்து தங்கியிருந்தார். இரவு சாப்பிட்டதும் ' மாத்திரைகள் எடுத்துக்கொண்டீர்களா?' என்று கேட்டேன். ' நான் எந்த மாத்திரையும் எடுத்துக்கொள்ள்வதில்லையே?' என்று அவர் சொன்னதும் அப்படியே திகைத்து நின்று விட்டேன் ஒரு நிமிடம்!

' நீங்கள் இதுவரை செய்து கொண்ட சிகிச்சைகளுக்காக வாழ்நாள் முழுவதும் நீங்கள் மருந்துகள் எடுத்துக்கொண்டல்லவா இருக்க வேண்டும்?' என்று கேட்டதும் ' எதுவுமே எடுக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லவில்லையே ' என்று சமாளித்துப்பேசினார். டாக்டர் சொன்ன மருந்துகளை அது வரை எடுக்காமல் அலட்சியம் செய்திருக்கிறார் என்று புரிந்தது. அவரின் மனைவிக்கும் எதுவும் புரியவில்லை. இருவருமே நிறைய படித்தவர்கள். அதுவும் இவர் இந்திய விமானியாக பணியாற்றியவர். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இத்தனை அனுபவித்தும் உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கும் அவரிடம் ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை. அப்புறம் எச்சரிக்கை செய்தும் உடனடியாக சென்னை சென்றதும் மருத்துவரைப்பார்க்க வேண்டும் என்ற வற்புறுத்தல்களுமாக என் பேச்சை முடித்தேன்.

ஆனால் அவைகளுக்கு எந்த வித பலன்களும் இல்லை. என் எச்சரிக்கைகளை ஊருக்குத்திரும்பியதும் கிடப்பில் தூக்கிப்போட்டு விட்டார்கள். இதய மருத்துவர் யாரையும் சந்திக்கவேயில்லை. இப்போது சென்ற மாத இறுதியில் கன்னியாகுமரி அருகே, கோவிலுக்குச் சென்று வெளியே வரும்போது மயங்கி விழுந்தவர் வலது பக்கம் பாதிக்கப்பட்டு நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறார். 15 நாட்களாக நினைவு திரும்பவில்லை. இதன் முடிவென்ன என்பதும் தெரியவில்ல்லை. மகன்களும் மனைவியும் ஏதும் புரியாமல் நிற்கிறார்கள்!

அடுத்த நிகழ்வு என் சினேகிதியின் கணவரின் மறைவு! கணையத்தில் புற்று நோய் ஏற்பட்டு அது நுரையீரலுக்கும் பரவி விட்டதால் காப்பாற்ற முடியாத நிலை. 6 மாதங்களுக்கு முன்பே அவர் இனி பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டதால் அவருக்கு இது புற்று நோயின் தாக்கம் என்று சொல்லாமல் ஒரு சாதாரண கட்டி என்பது போல சொல்லி ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைத்து வாழ்ந்திருக்கிறார் என் சினேகிதி! ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய துக்கத்தை மனதில் புதைத்து, உள்ளுக்குள்ளே அழுது கொண்டு,  சிரித்தவாறே 'உங்களுக்கு ஒன்றுமில்லை' என்று கணவரிடம் சொல்லிக்கொண்டு வாழ்ந்திருந்த என் சினேகிதிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் வராமல் இன்னும் அவற்றைத்ச்தேடிக்கொண்டேயிருக்கிறேன்!

இந்த சோகங்களிலிருந்து கொஞ்சம் மீள்வதற்காக வலைப்பக்கம் வந்தால் அங்கே திருமதி.ராஜராஜேஸ்வரியின் மறைவுச் செய்தி!
 
முன்பெல்லாம் வாழ்க்கையில் அவ்வப்போது வலிகள் வரும். ஆனால் இப்போதோ வலிகளே வாழ்க்கையாக இருக்கிறது! அதுவும் முதியவர்களை விதம் விதமாக இந்த வலிகள் தாக்குகின்றன!
தியானம், நல்ல சிந்தனைகள், சிறிது உடற்பயிற்சி, நாவடக்கம் [ உணவு விஷயத்திலும் வார்த்தைகளின் கட்டுப்பாட்டிலும்], மன உறுதி இவற்றைக்கொண்டு இந்த வலிகளை சமாளிக்க முயற்சி செய்வோம்!!!