Sunday, 31 May 2015

ஊறுகாய் மகாத்மியம்!

வெய்யில் காலம் வந்தாலே ஊறுகாய்கள், வடகங்கள், வற்றல் வகைகள் என்று வருஷம் முழுவதும் வைத்துக்கொள்ள வீட்டுக்கு வீடு பெண்கள் எல்லோரும் அவற்றைத்தயார் செய்வதில் எப்போதும் ஈடுபடுவார்கள்.
 [ இப்போது அப்படிப்பட்ட நிலைமை வீட்களில் இருக்கின்றனவா?] 

சின்ன வயதில் அரிசி மாவில் செய்யப்படும் கூழ்வடகங்களை பெரியவர்கள் செய்ய ஆரம்பிக்கும்போது, அதற்கான கூழ் கிண்டி வைக்கும்போதே ஒரு கிண்ண‌த்தில் அதை எடுத்துப்போட்டுக்கொண்டு ருசிக்க ஆரம்பிப்போம். அது அத்தனை ருசியாக இருக்கும். அப்புறம் அதில் கூழ்வடகங்கள் பிழிந்து காயவைக்கும்போது காய்ந்தும் காயாமல் இருக்கும் அவற்றில்ல் சில எடுத்து வாயில் போட்டு சுவைப்பது தனி சுகம்.

பிப்ரவரி, மார்ச்ச் மாதங்களிலேயே குடமிளகாய்களை சிறியதாய் பார்த்துப் பார்த்து வாங்கி அவற்றை தயிரில் போட்டு குடமிளகாய் வற்றல் தயாரிக்கும் வேலைகள் ஆரம்பிக்கும். வீடு முழுவதும் தயிரில் தோய்ந்திருக்கும் குடமிளகாய் வாசனை ஆளைத்தூக்கும். அப்புறம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாவடுகள் சீசன் ஆரம்பிக்கும். குண்டு மாவடுகளில் சுவை அதிகமா, நீள‌ மாவடுகளில் சுவை அதிகமா என்று விவாதங்கள் நடக்கும். தஞ்சையில் பூச்சந்தை என்று ஒரு இடம் இருக்கிறது. எப்போதும் விடியற்காலையில் அங்கு போய் இளசாக குட்டி குட்டி மாவடுகள் வாங்கி வந்து உடனேயே நீர் மாவடு போட்டு விடுவது வழக்கம். மாவடு வர ஆரம்பிக்கும்போது, கிலோ 100 ரூபாய்க்குக் கூட விற்கும். அதற்கெல்லாம் மனம் அஞ்சுவதில்லை. மாவடு ஊறுகாய் போட்டால் தான் மனம் திருப்தி அடையும். பெரிய கல்சட்டியில் போட்டு முழுவதும் தயாரான பிறகு, அதை ஜாடிகளில் மாற்றி, பின் இங்கு வருகையில் அதை ஃபிரிட்ஜில் வைத்து வருவது என்று இன்றைக்கும் இந்தப்பழக்கம் தொடர்கின்றது.

இந்த தடவை மார்ச்சிலேயே இங்கு வந்து விட்டதால் மாவடுகளை மிஸ் பண்ணி விட்டேன்!!
இப்போது மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது. இங்கிருந்து கொண்டே மாங்காய்களுக்கான பெருமூச்சு தொடர்கின்றது. இங்கு, [துபாய், ஷார்ஜா ] கேரளத்து மாங்காய்கள் மே மாத வாக்கில் வர ஆரம்பிக்கும். அது மிகவும் சுவையாக இருக்கும். [என்ன இருந்தாலும் நம் கிளிமூக்கு மங்காய்களுக்கு கிட்டே வர முடியாது!] அவற்றை வாங்கி வெந்தய மாங்காய் ஊறுகாய் போடுவது வழக்கம். இப்போதும் போட்டு விட்டேன்.  
  
ஜுன் மாதம் ஊருக்குச் செல்லவிருப்பதால் மனம் இப்போதே மாங்காய்களுக்காக காத்திருக்க ஆரம்பித்து விட்டது. கிளி மூக்கு மாங்காய்களை நல்லதாய் கெட்டியாய் தேர்ந்தெடுத்து மாங்காய்த்தொக்கு, வெந்தய மாங்காய்,  ஆவக்காய் ஊறுகாய்கள் தவிர மாங்காய்களை அரிந்து இந்த சுக்கு வெய்யிலில் வற்றல் போடும் வேலையும் ஆரம்பித்து விடும். மாங்காய்களை குறுக்காக விரல் நீளத்திற்கு அரிந்து துண்டுகள் போட்டு உப்பு நீரில் கலந்து நன்றாக காய வைத்தால் மாங்காய் வற்றல் தயாராகி விடும். மயிலாடுதுறைப்பக்கம் தண்னீரில் மாங்காய்த்துண்டுகள் போட்டு, உப்பும் போட்டு, ஒரு கொதி வந்ததும் தண்ணீரை முழுவதுமாக வடித்து, மாங்காய்த்துண்டுகளை சுக்கலாகக் காய வைத்து எடுப்பார்கள். அவையும் மிகவும் சுவையாக இருக்கும். இந்த வற்றல்கள் வருடக்கணக்கில் கெடாது இருக்கும். வேண்டும்போது சில வற்றல்களை எடுத்து வென்னீரில் போட்டு வைத்தால் அவை சில மணி நேரங்களில் மிருதுவாகி விடும். பின் அவற்றை வற்றல் குழம்பில் போட்டு  உபயோகிப்பது வழக்கம். சீசன் இல்லாத நேரங்களில் என் மாமியார் அப்படி ஊறவைத்த மாங்காய்த் துண்டுகளில் ஊறுகாய் போட்டு ஜாடியில் நிறைத்து வைப்பார்கள். அத்தனை சுவையாக இருக்கும். சீக்கிரமே ஜாடி காலியாகியும் விடும்!!

ஒரு முறை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உணவருந்தச் சென்றிருந்தோம். அப்போது பரிமாறிய மாங்காய் ஊறுகாய் அப்படியே அசத்தி விட்டது. மாங்காய்த்துண்டுகளில் கலோஞ்சி விதைகள் தூவி, சீனிப்பாகு ஊற்றியிருந்தார்கள். அதன் சுவை மயக்க, உடனேயே சமையல் நிபுணரை அழைத்து, பாராட்டி, அதன் செய்முறையையும் வாங்கி செய்து பார்த்து விட்டேன். சுவை அத்தனை அற்புதம்!

இதற்கெல்லாம் அப்புறம் தான் கடாரங்காய், நார்த்தை, எலுமிச்சை, நெல்லி ஊறுகாய்கள். கடாரங்காய், நார்த்தையில் வெல்லம் சேர்த்து செய்யும் ஊறுகாய்கள் மிக மிக ருசியாக இருக்கும்.  கடாரங்காய் ஊறுகாய் எப்போதும் வீட்டில் இருக்கும். எலுமிச்சை மட்டும் தான் கடைசி லிஸ்ட்டில் இருக்கும்.

இங்கு பெரும்பாலும் வருடம் முழுவதும் நெல்லிக்காய்க்ள் கிடைக்கும். சில சமயங்களில் மாங்காய் இஞ்சியும் நிறைய கிடைக்கும். இப்போது வரப்போவது மாங்காய் இஞ்சி தக்காளி ஊறுகாய்!!

மாங்காய் இஞ்சியைப்பற்றி சில வார்த்தைகள்!



மாங்காய் வாசத்துடன் இஞ்சி சுவையுடன் இஞ்சி போன்ற தோற்றத்திலிருப்பதால் மாங்காய் இஞ்சி என்று பெயர்  அமைந்திருக்கிறது. இதில் உடலுக்குத்தேவையான அத்தனை தாதுப்பொருள்களும் விட்டமின்களும் இருக்கின்ற‌ன. அதனால் அடிக்கடி மாங்காய் இஞ்சியைச் சேர்ப்பது உடம்புக்கு நல்லது. முக்கிய‌மாக  வயிற்றுக்கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. இது வாயுவை நீக்கி, கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, குடலில் நிறைந்திருக்கும் நச்சுப்பொருள்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது. இதன் துருவல்களைக்கொண்டு சாதத்தில் சேர்த்து சாப்பிடுவதும் சிறு துண்டுகள் செய்து எலுமிச்சை ரசம் கலந்து உப்பு சேர்த்து சாப்பிடுவதும் மிகவும் நல்லது.

மாங்காய் இஞ்சி ஊறுகாய்


தேவையானவை:

மாங்காய் இஞ்சி தோல் சீவிய துன்டுகள்- ஒரு கப்
தக்காளியை ஒன்று பாதியாய் அரைத்தது- ஒன்றரை கப்
பொடியாக நறுக்கிய சிறு பூண்டுகள்- ஒரு கைப்பிடி
நல்லனெண்ணெய் -அரை கப்
பொன்னிறமாக வறுத்த வெந்தயம்- ஒரு ஸ்பூன்
பொரித்த பெருங்காய்த்துண்டுகள்- அரை நெல்லி அளவு
மிள‌காய்த்தூள் -ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
தேவையான உப்பு
எலுமிச்சம்பழம் -ஒன்று
கடுகு -ஒரு ஸ்பூன்

செய்முறை:

வறுத்த சாமான்களைப் பொடித்துக்கொள்ள‌வும்.
மாங்காய் இஞ்சித்துண்டுகளை துருவிக்கொள்ள‌வும்.
நல்லெண்ணையை ஒரு வாணலியில் கொட்டி குறைந்த தீயில் சூடாக்கவும்.
கடுகைப்போட்டுப் பொரிந்ததும் மாங்காய்த்துருவலை பூண்டு, மஞ்சள் தூளுடன் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து தீயை சற்று அதிகமாக்கி சமைக்கவும்.
தக்காளி நன்கு வெந்து தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பித்ததும் மிள‌காய்த்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்துக்கிளறவும்.
சில நிமிடங்கள் கழித்து பொடித்த தூள்கள் சேர்த்துக் கலக்கவும்.
சுவையான மாங்காய் இஞ்சி ஊறுகாய் தயார்!

குறிப்பு:

தக்காளியின் தன்மையைப்பொறுத்து சில சமயம் மிளகாய்த்தூள் சற்று அதிகமாகத் தேவைப்படலாம். சுவைத்துப்பார்த்து, சற்று கூடுதலாக மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ள‌லாம்.
படங்கள்: கூகிள்

 

Monday, 18 May 2015

அதிகாரம் அல்ல, அன்பு....!!!

அதிகாரம் அல்ல, அன்பு...
.
இது திரு. சோம.வள்ளியப்பன் எழுதிய புத்தகம். இது ஒரு சுய முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்கள் அடங்கியது என்று பொதுவாகச் சொல்லலாமே தவிர, உள்ளே புகுந்தால் அனுபவங்களும் அனுபவங்களூடே கிடைத்த விழிப்புணர்வும், சிந்தனைக்களஞ்சியங்களும் அறிஞர்கள் சொல்லி வைத்த அற்புதமான உண்மைகளும் ஒரு பொக்கிஷக்குவியலாக நம்மை பிரமிக்க வைக்கிறது! 



முதல் கட்டுரை சபை நாகரீகம் பற்றியது. பொதுவாகவே மேடைப்பேச்சுகள் எல்லாமே சுவாரஸ்யமாக அமைவதில்லை. எங்கள் குடும்ப நண்பர் ஒருத்தர், மேடையில் அடிக்கடி பேசுவார். கணீரென்ற குரலில் அவர் பேச ஆரம்பித்தாலே ஆயிரம் பேர் கூடியிருந்தாலும் அப்படியே சப்தங்கள் அடங்கிப்போய் அரங்கமே நிசப்தத்தில் அமிழும். அருவி போல தமிழ் கொட்டும் போது கூட்டம் அப்படியே அமர்ந்திருக்கும். ஒரு சிலரால் மட்டுமே இது போல கூட்டத்தினரை தன் வசமாக்கத்தெரிகிறது.

அதை விட்டு, கூட்டத்திற்கு சம்பந்தமில்லாதவற்றைப்பேசுவது, தனக்குக்கொடுத்த நேரத்தைப்புறக்கணித்து, யார் ரசிக்கிறார்கள், யார் ரசிக்கவில்லை என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது, சற்றும் இங்கிதமே இல்லாமல் சபையினரை ஒரு வழி பண்ணும் மேடைப்பேச்சாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களைப்பற்றித்தான் திரு.வள்ளியப்பன் ' சபை அறிந்து பேசு', சமயம் அறிந்து பேசு, பேசாதிருந்தும் பழகு என்கிறார். எத்தனை அழகான, ஆழமான பொருள் கொண்ட வரிகள்!

இப்படியே கடைசி பக்கம் வரை நான் ரசித்த கருத்துக்கள் இங்கே!

 உண்மையான பெரிய மனிதர்களுக்கு அடுத்தவர்கள் தன்னை அங்கீகரிகக் வேன்டுமென்ற எதிர்பார்ப்பு இருப்பதில்லை. எல்லா இடங்களிலும் எதையும் அவர்கள் மனம் அமைதியாக ஏற்றுக்கொள்கிறது. அவர்கள் மனதளவில் உண்மையான பெரிய மனிதராகவே வாழ்கிறார்கள்.

சிலர் குளித்து உடை உடுத்தும்போதே ' நான்' என்ற கவசத்தை அணிந்தே தான் வெளியே வருகிறார்கள். இந்தக் கவசத்தை அவர்கள் கழற்றுவதேயில்லை. அதைத்தான் தன் பலம் என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். மிகப்பெரிய அறிவாளிகள் அப்படியில்லை. அவர்கள் யாரையும் மட்டம் தட்டுவதோ, தாங்கள் மேதைகள் என்று பறை சாற்றுவதோ கிடையாது. நிறைகுடங்களுக்கு எப்போதுமே தன்னைப்பற்றி எந்த சந்தேகமும் இருப்பதில்லை.

அமைதியும் மெளனமும் சில சமயங்களில் மிகப்பெரிய பலம். பேச்சைக் குறித்து கேட்பதையும் கவனிப்பதையும் அதிகப்ப‌டுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள்.




வாழ்க்கையில் சிலவற்றைப் பார்க்கத் தவறுகிறோம். சில சமயங்களில் வண்ணக்கண்ணாடிகள் மாட்டிக்கொன்டு அவற்றின் வழியாகவே வெளியுலகைப் பார்க்கிறோம். சிலரைப்பற்றி நமக்கு பல வருடங்களாக தவறான கணிப்பு இருக்கலாம், துரோகம் செய்பவராக, நமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கெடுதல் செய்பவராக! அவர்களை ஒரு மாற்றுப் பார்வை பார்த்தாலென்ன? ஒரு மறு பரிசீலனை செய்து பார்த்தாலென்ன? இதனால் கூட மன அழுத்தமோ, சில பிரச்சினைகளோ குறையலாம். மனம் இலகுவாகலாம்.

மற்றவர்கள் நம்மை சரியாகப் புரிந்து கொள்ளாமல் போவதற்கு நாம் தான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறோம். நாம் நினைப்பதில் எது முக்கியம், எது முக்கியமில்லாதது என்பதை நமக்குச் சுற்றியுள்ளவர்களும் புரியுமாறு நாம் எப்போதுமே உணர்த்த வேன்டும். பிடிக்கிறதா, இல்லையா? அங்கீகரிக்கிறோமா, இல்லையா என்பதை வாய்மொழியால் மட்டுமல்ல, உடல் மொழியாலும் உரையாடல்கள் மூலமாகவும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

தெரிந்து கொள்ளாமல் செய்யும் பாராட்டோ, விமர்சனமோ ஏற்புடையது அல்ல. FEED BACK ஒரு பொறுப்புள்ள செயல். அதை சரியாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. சொல்லும்போது நல்லனவற்றுடன் தொடங்க வேண்டும். முதலில் நல்ல விஷயங்களை அழகாக, விரிவாகச் சொல்ல, பின்னால் சொல்லக்கூடிய குறைகளும் ச‌ரியான முறையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

அன்பும் நம்பிக்கையும் ஒரு வழிச்செயல்பாடு அல்ல. கொடுத்தால்தான் திரும்பக் கிடைக்கும். கொடுப்பதை விட கூடுதலாகவே கிடைக்கும்.

பலவற்றையும் அவசரம் அவசரமாகச் செய்வதா? அல்லது ஒன்றிரண்டை மட்டும் நிதானமாகச் செய்வதா? மனதில் வாங்காமல் மேலோட்டமாகச் செய்வதா? அல்லது உள்ளார்ந்து உணர்ந்து செய்வதா? செய்வதை ர‌சிப்பதா? அல்லது எதையும் வேகமாக செய்து முடிப்பதா?
எது வாழ்க்கை?

வாழ்க்கையில் கற்க வேண்டும். கிடைக்கும் சந்தர்ப்பங்களையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உடன் சக மனிதர்களுடன் வாழ வேன்டும். அவர்கள் வாழ உதவவும் வேண்டும். நம் வெற்றியில் நியாயம் இருக்க வேண்டும். மற்றவர்களின் மதிப்பையும் அன்பையும் பாராட்டையும் வேண்டாதவர்கள் இல்லை. அது சும்மா வருமா? அந்த விதம் நடந்து கொள்ள‌ வேன்டும்.

எல்லோரும் மனிதர்கள். ஆசாபாசம் உள்ளவர்கள். அவர்களை அவர்களாகவே பார்ப்பவர்களிடம், அவர்களைப் புரிந்து கொள்பவர்களிடம் எவருக்கும் அன்பு பிறக்கிறது. தனது ஆசையை நிறைவேற்ற முயல்பவர்களிடம் பாசம் வருகிறது. தன் தரப்பு நியாயங்களை உணருபவர்களுக்காக எதையும் செய்யலாம் என்ற முனைப்பு வருகிறது. எல்லா உறவுகளிலும் இந்த எதிர்பார்ப்பு, பிரதி அன்யோன்யம் உண்டு. மனைவி கணவனையும்  கணவன் மனைவியையும் மாமியார் மருமகளையும் மாணவன் ஆசிரியரையும் முழுமையாக புரிந்து நடக்கும்போது அங்கே முழு நம்பிக்கையும் அன்பும் வளர்கிறது. அதிகாரம் அல்ல, அன்பு. விரட்டுதல் அல்ல, புரிந்து கொள்ளுதல். இவை ஒத்துழைப்பையும் அதன் மூலம் வெற்றியையும் நிச்சயம் தரும்.

 

Saturday, 9 May 2015

முத்துக்குவியல்-36!!

மருத்துவ முத்து:

உடம்பில் தோன்றும் மருக்களை நீக்க:

கட்டிப்பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து அது பசை போல ஆனதும் தினமு அதை மருவில் தடவி வந்தால் சிறிது நாட்களில் அந்த மரு மறையும்.



குறிப்பு முத்து:

முன்பெல்லாம் குளிர்ந்த நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்றும் சூடான நீரில் தேன் கலந்து சாப்பிட்டால்  உடல் மெலியும் என்றும் கூறுவதுன்டு. உண்மையில் சூடான பொருள் எதிலுமே தேனைக்கலந்து சாப்பிடுவது விஷத்தை சாப்பிடுவதற்கு சமம் என்று ஆயுர்வேதக்கல்லூரி முதல்வர் கூறுகிறார். தேனை சாதாரண வெப்ப நிலையில் சாப்பிடுவதே சிறந்தது என்று சொல்லும் இவ்ர் க்ரீன் டீயில் தேனைக்கலப்பது, மெலிய வேண்டும் என்று வெந்நீரில் தேனைக் கலப்பது என்கிற பழக்கலாம் அழித்தொழிய வேண்டிய பழக்கங்கள் என்று அறிவிறுத்துகிறார்!



பப்பாளி:

ஸ்லீ எனப்படும் அரிய வகை நோயையும் நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றையும் வராமல் காக்கும் தன்மையுடையது. சக்தி மிக்க ஆன்டி ஆக்ஸிடென்ட்களான விட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கெரோட்டீன் போன்ற்வைகளையும் த‌ன்னுள் அடக்கிய பழம் இது! இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் மற்றும் நார்ச் சத்தினைத் தருகிறது. பப்பாளியிலுள்ள‌ ஒரு வித என்ஸைம்கள் ம‌லச்சிக்கல் முதல் குடல் புண் வரை வயிற்றுப்பிரச்சினைகளை உடனயடியாகக் குறைத்து விடும் ஆற்றல் கொண்டவை இவை. பப்பாளியில் உள்ள‌ நார்ச்சத்து ' கோலன்' பகுதியிலுள்ள புற்றுநோய் உருவாக்கும் செல்களை கட்டுப்படுத்துகிறது. பழம் மட்டுமல்லாது, கொட்டைகளையும் கடித்து மென்று உமிழ்நீரை சேர்த்து விழுங்கினால் உடலில் உள்ள கெட்ட‌ நீர் வடிந்து விடும்.  பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். பப்பாளியிலுள்ல' கார்பின்' இருதயத்திற்கும் 'ஃபைப்ரின்' ரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன. குழந்தைகளுக்கு அடிக்க்டி கொடுத்து வர, உடல், எலும்பு, பற்கள் வலிமையுடன் வளர்ச்சி பெறும். கல்லீரல் நோய்களை பப்பாளி சரி செய்ய வல்லது.



அசத்தல் முத்து:

சமீபத்தில் படித்தது. எலுமிச்சம்பழத்தை குறுக்காக வெட்டி அதில் ஐந்தாறு கிராம்புகளை சொருகி கொசுக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் வைத்தால் கொசு திரும்ப அந்த இடத்திற்க்கு வ‌ரவே வராதாம்!

புன்னகைக்க வைத்த முத்து:

அந்தமானில் உள்ள ஒரு பழங்குடியினரில் உள்ள ஒரு விசித்திரமான பழக்கம்! அவர்களில் யாராவது மறுமணம் செய்து கொள்ள விரும்பினால் அது இடுகாட்டில் தான் நடத்தப்படுமாம்! காரணம் இறந்து போன முதல் மனைவியின் ஆசி அங்கு தான் கிடைக்குமாம்!




அசர வைத்த முத்து:

யதேச்சையாக நடிகர் திலகத்தின் ஓவியத்தை கூகிள் தேடுதலின் போது பார்த்து அசந்து போனேன். வரைந்த ஓவியர் பற்றி ஜீவா என்ற பெயர் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. வண்னங்களின் கலவை எத்தனை அற்புதம். முகத்தில் உயிரோட்டம் ததும்புகிறது. ஒரு சிலருக்கு மட்டுமே இப்படி அனாசயமான வண்ண‌த்தீற்றல் கைவரப்பெறும். ஜீவாவுக்கு என் வாழ்த்துக்கள்!

Friday, 1 May 2015

வண்ணத்துப்பூச்சிகள்!!!

என் தங்கையும் அவரின் கணவரும் ஊரிலிருந்து வந்து இங்கே 10 நாட்கள் தங்கிச் சென்றார்கள். 25 வருடங்கள் இங்கிருந்து விட்டு, பெண்ணின் மருத்துவக்கல்விக்காக ஊருக்குச் சென்று விட்டார்கள். பல இடங்களை சுற்றிப்பார்க்கையில், கடந்த 14 வருடங்களின் இடைவெளியில் ஐக்கிய அமீரகம் ரொம்பவே மாறிவிட்டதை ரசித்துப்பார்த்தார்கள். சமீபத்தில் துபாய் அருகே உள்ள MIRACLE GARDEN-ஐ ஒட்டி திறக்கப்பட்ட ' வண்ணத்துப்பூச்சிகள் அரங்கத்திற்கு' அவர்களை அழைத்துச் சென்றோம்.

இந்த வண்ணத்துப்பூச்சிகள் தோட்டம் பற்றிய சில தகவல்கள்:

INDOOR BUTTERFLY GARDEN என்ற வகையில் இது உலகிலேயே பெரியதும் சிறந்ததுமாகும்.
பெரிய வண்ண‌த்துப்பூச்சிகள் தோட்டம் என்ற வகையில் இது உலகிலேயே இரண்டாவது பெரிய தோட்டமாக விளங்குகிறது. [ முதலாவது மலேஷியாவில் உள்ளது]
இதற்குள் ஒன்பது அரங்குகளும் வண்ண‌த்துப்பூச்சிகள் மியூசியமும் உள்ளன.
ஒவ்வொரு அரங்கிலும் பல நாடுகளிலிருந்தும் வர‌வழைக்கப்பட்ட 24 வகை வண்ண‌த்துப்பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன‌.
மொத்தத்தில் ஏற்த்தாழ 35000 வண்னத்துப்பூச்சிகள் குளிரூட்டப்பட்ட இந்த அழகிய அரங்குகளில் செடிகள், கொடிகளுக்கிடையே பறந்து கொண்டிருக்கின்றன!
இந்த அரங்குகளின் அருகில் மிகப்பெரிய மலர்த்தோட்டமும் ரசிப்பதற்கு இருக்கிறது!
மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்று வயது வரை குழந்தைகளுக்கும் அனுமதிக்கட்டணமில்லை.

இங்கு சென்ற் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்:



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
என் சகோதரியின் கையில் ஒரு வண்ண‌த்துப்பூச்சி அமர்ந்திருக்கிறது!