Tuesday, 21 April 2015

என்றும் எப்போதும்!!

நேரமின்மைக்கு ஆயிரம் காரணங்கள் இருந்த போதிலும் கிடைத்த 3 மணி நேர அவகாசத்தில் நான் பார்க்க விரும்பிய ஒரு திரைப்படத்தை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். முக்கிய காரணம் தொண்ணூற்றுகளில் நான் மிகவும் ரசித்த நடிகை மஞ்சு வாரியர்  14 வருடங்கள் இடைவெளிக்குப்பின்னர் கதாநாயகியாக இதில் நடித்திருந்தது தான்!




இது ஒரு மலையாள திரைப்படம். தலைப்பு 'என்னும் எப்போழும்'
[ என்றும் எப்போதும்] ஆங்கிலத்தில் அதன் கீழ்  ' ANY TIME, ALL THE TIME! 'என்று போடுகிறார்கள்.

தெளிவான திரைக்கதை. கொடூரமான மன உணர்வுகளுடைய கணவனிடம் 2 மாதங்களே வாழ்ந்து, அதற்கு மேல் முடியாமல் விவாகரத்தும் வாங்கி விடுகிறாள் கதாநாயகி தீபா. அந்த 2 மாத வாழ்விற்கு அடையாளமாகப்பிறந்த ஏழு வயது மகளுக்காகவே வாழ்கிறாள். அநியாயங்களைத் தட்டிக்கேட்கும் குணமுள்ள அவள் வழக்கறிஞராக வாழ்க்கையைத்தொடர்ந்தாலும், இன்னும் வலிக்கும் மன உணர்வுகளுக்கு வடிகாலாக தனக்கு மிகவும் பிடித்தமான நாட்டியப்பயிற்சியையும் கூடவே தொடர்கிறாள்!

காதாநாயகனுக்கு தன் அம்மாவைப்போன்ற ஒரு பெண்ணைத்தேடுவதிலேயே திருமணம் செய்து கொள்கிற வயதைத் தாண்டி போயும் கூட அதைப்பற்றிய அக்கறையில்லாமல் இருக்கிறான். தினமும் நெற்றியில் சந்தனம் வைப்பது கூட அவன் தன் அம்மாவின் நினைவாகத்தான் வைக்கிறான். ஒரு முறை சொல்வான், ' என் அம்மா என் கோபத்தைக்குறைக்கத்தான் அந்த சந்தனத்தை நெற்றியில் இடுவார்கள். சந்தனத்தின் குளிர்ச்சி கோபத்தைக்குறைக்கிறதாம். அம்மா இறந்த பிறகு சந்தனத்தின் குளிர்ச்சியும் குறைந்து விட்டது ' என்று! இளம் வயதில் குத்துச்சண்டை வீரனாக, இன்னுமே இசையை நேசிப்பவனாக இருந்த போதிலும் வாழ்க்கையில் சுவாரசியமற்று, மற்றவர்கள் பார்வையில் ஒரு ஒழுங்கற்றவனாக, சோம்பேறியாக வாழும் அவன் ஒரு மகளிர் பத்திரிகையில் ரிப்போர்ட்டராக பணி புரிகிறான்.



இவன் அலுவலகத்தில் இவனின் குணங்களுக்கு அனைவரும் ஒத்துப்போகிறார்கள், சீஃப் எடிட்டரும் கூட! ஆனால் வெளிநாட்டில் படித்து தலமைப்பொறுப்பையேற்பதற்காக வரும் அவரின் பெண்ணோ, கதாநாயகனின் ஒழுங்கீனத்தையும் குறைகளையும் ஏற்க மறுக்கிறாள். இவனை எப்படியாவது அலுவலகத்திலிருந்து வெளியேற்ற விரும்பி, சமீபத்தில் ஒழுங்கற்று கிடந்த சாலைக்காக மறியலில் ஈடுபட்ட தீபாவை பேட்டி எடுத்து வருமாறு அனுப்புகிறாள்.

அவனின் ஒழுங்கீனமான அணுகுமுறையால்  தீபா அவனுக்கு பேட்டி கொடுக்க நிர்தாட்சண்யமாக மறுத்து விடுகிறாள். அவன் நெற்றியில் தீற்றியிருக்கும் சந்தனக்கீற்று கூட 'சகிக்கவில்லை' என்று அவளைச் சொல்ல வைக்கிறது!

தீபாவின் மறுப்பு அவனுக்கு எரிச்சலை கொடுத்தாலும் தொடர்ந்து அவளை கவனித்து வந்ததில் அவளின் நேர்மை, கருணை, தைரியம் இவற்றால் அவன் ஈர்க்கப்படுகிறான். தீபாவின் குழந்தைக்கு அவன் கண்ணெதிரே விபத்து நடக்கும்போது பதறியடித்து அவளை மருத்துவமனையில் சேர்த்து கவனிக்கிறான். விபத்தில்லாமல் குழந்தையைப் பாதுகாக்கத் தவறியதாகச்சொல்லி தீபாவின் கணவன் தன் வழக்கறிஞரின் மூலம் குழந்தையை அதிரடியாகத் தூக்கிச் செல்லும்போது செய்வதறியாது தவிக்கும் தீபாவின் கண்ணீர் அவனைக் கலங்கடிக்கிறது.  தனியாய் தளர்வுடன் வீட்டுக்குத் திரும்பும் தீபாவிற்கு இரவு முழுவதும் வெளியிலேயே காரில் சாய்ந்தவாறு காவல் காக்கிறான் அவன். தீபாவின் குழந்தைக்கு நடந்த விபத்து தற்செயலானது அல்ல என்று கண்டு பிடிக்கும் அவன், விபத்து உண்டாக்கிய ஓட்டுனரைகண்டுபிடித்து, விபத்தை உண்டாக்கியது தீபாவின் கணவனின் வக்கீல்தான் என்ற உண்மையையும் அதிரடியாய் வெளிக்கொண்டு வந்து, கோர்ட்டில் நீதிபதி இனி குழந்தை தீபாவிடம் தான் இருக்க வேன்டும் என்ற தீர்ப்பிற்கும் தீபாவின் இழந்த புன்னகையை மீட்டெடுத்ததற்கும் காரணமாகிறான் அவன்!



தீபாவையும் அவளின் மகளையும் அவர்கள் வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்லும்போது, தீபா அவனிடம் பன்னகைத்தவாறே கேட்கிறாள்' இதெல்லாம் எதற்காக எனக்குச் செய்தீர்கள்?' என்று! அவன் ' தெரியவில்லை. உங்களின் நேர்மை, தைரியம் காரணமாக இருக்க்லாம். குழந்தையிடம் நீங்கள் காட்டிய பாசம் கூட காரணமாக இருக்கலாம். என் அம்மாவின் குணங்கள் உங்களிடம் நிறைந்திருப்பதைப்பார்த்தேன். அதுவும் காரணமாக இருக்கலாம்.  தெரியவில்லை எனக்கு! உங்களிடம் பேட்டி எடுக்கத்தான் உங்களை சுற்று சுற்றி வந்தேன். ஆனால் இப்போது அதெல்லாம் எனக்கு நினைவிலேயே இல்லை' என்கிறான் அவன். அவள் சிரித்தவாறே ' ' நாளை நீங்கள் பேட்டி எடுக்க வரலாம்' என்கிறாள். மறு நாள் முழுவதும் சினேகமும் புரிதலும் சிரிப்புமாக அவர்களிடையே பேட்டி தொடர்கிறது. இரவு அவனை தொலைபேசியில் அழைத்துக்கேட்கிறாள் அவள்.

' நீங்கள் ஏன் இப்பொதெல்லாம் நெற்றியில் சந்தனம் இடுவதில்லை?'
அவன் சொல்கிறான் ' அது சிலருக்குப் பிடிக்கவில்லை'!
அவள் புன்னகைத்தாவாறே சொல்கிறாள். ' இல்லை, எனக்குப்பிடித்திருக்கிறது! '
திரைப்படம் இங்கே முடிவடைகிறது!

விரல்கள் கூட தொடாமல் படத்தின் கடைசி வரியில் தான்  அழகாய்க் காதல் பிறக்கிறது! மலையாளத் திரையுலக சூப்பர் ஸ்டார்களான மஞ்சு வரியருக்கும் மோகன்லாலுக்கும் இந்த கதாபாத்திரங்கள் அல்வா சப்பிடுவது போல! இரண்டு பேரும் அனாயசமாக நடித்திருக்கிறார்கள்!  மிகவும் ரசித்துப்பார்த்தேன் இந்தப்படத்தை! முடிந்தால் நீங்களும் பார்த்து ரசியுங்கள்!

இசைப்பிரியர்கள் கேட்டு ரசிப்பத‌ற்கு  இந்தத் திரைப்படத்திலிருந்து
இங்கே ஒரு பாடல்!



 

Thursday, 9 April 2015

எதைத்தான் சாப்பிடுவது?

வர வர எந்தெந்த உணவுப்பொருள்கள் சாப்பிடுவது நல்லது, எப்படி சாப்பிட்டால் நல்லது, எப்படி சாப்பிட்டால் கெடுதலானது என்பதை எத்தனை படித்தாலும் குழப்பமே மிஞ்சுகிறது!
ரொம்ப நாளாக இதைப்பற்றி எழுத நினைத்திருந்தேன். சமீபத்திய சில அனுபவங்கள் இந்தப் பதிவை இப்போதே எழுத வேன்டுமென்ற முனைப்பை அதிகரித்து விட்டன.



சமீபத்தில் ஒரு மருத்துவர் சொன்னார், ' ஆப்பிள் அதிகமாக உண்ணுங்கள், அனால் கவனம் இருக்கட்டும். தோலை நீக்கி உண்ணுங்கள். ஆப்பிள் பழங்களின் பளபளப்பு அதிகரிக்க ஒரு வித மெழுகு தடவுகிறார்கள்' என்று!! முன்பெல்லாம் மருத்துவர்கள் தோலோடு ஆப்பிளை சாப்பிட வேண்டுமென்று சொன்னது போய்  இன்று இப்படி! இன்னொரு மருத்துவர் சொன்னார், ' வாழைப்பழங்களில் மலைப்பழம் தவிர எதையும் உண்ண வேண்டாம், மற்ற பழங்கள் சூடு வைத்து பழுக்க வைக்கப்படுகின்றன, அவை உடம்புக்கு கேடு ' என்று! மாம்பழங்களில் ஏற்கனவே இந்த பிரச்சினைகள் இருக்கிறது! சமீபத்தில் ஒரு தகவல் அதிர்ச்சியைத்தந்தது. தர்பூசணி பழத்தில் எரித்ரோசின் பி என்னும் ஒரு சிகப்பு நிறமியை ஊசி மூலம் ஏற்றினால் பழத்தின் உட்புறம் நல்ல சிவப்பாக மாறுகிறதாம். வட இந்தியாவில் இப்படி தற்பூசணியை விற்கிறார்கள். இந்த பழத்தை சாப்பிடுவது புற்று நோயை உண்டாக்கும் என்று சமூக உரிமை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தமிழகத்திலோ ஊசி மூலம் நிறமிகளை ஏற்றுவதில்லை. அதற்கு பதிலாக பழத்தை வெட்டி அதன் மேல் நிறமிகளை தடவுகிறார்கள். இனி தர்பூசணியை தைரியமாக வாங்கி சாப்பிட முடியாது. இன்னும் அன்னாசி, மாதுளை பற்றி ஒரு தகவலும் வரவில்லை.



முன்பெல்லாம் முட்டை வாங்கி வரும்போது அதில் சிறிய விரிசல்கள் இருந்தாலும் அதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. கவனமாக அந்த முட்டையைக் கழுவி வேக வைத்து சாப்பிட்டு விடுவோம். ஆனால் இப்போதோ முட்டை வாங்கும்போது மயிரிழை போன்ற சிறு விரிசல் தென்பட்டால் அந்த முட்டையை வாங்கி உபயோகித்து விட வேண்டாம் என்று படித்தேன். காரணம் டைஃபாயிட் முதலிய நோய்களை உண்டாக்கும் 'சல்மோனெல்லா' என்ற பாக்டீரியா அந்த வெடிப்பில் இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறதாம்!

இறைச்சியிலும் ' ஈகொலி' என்ற பாக்டீரியா இருக்கிரதாம். நல்ல கொதி நிலையில் அவை சமைக்கப்படாவிடில் அவை உடலுக்குள் ந்ழைந்து கெடுதி செய்யும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம். இதைப்பற்றி சகோதரர் சாமானியனும் எழுதியிருந்தார்.  நானும் ஒரு விருந்தினர் இல்லத்தில் இதை சாப்பிடப்போய் வயிற்றுப்போக்கும் வலியுமாக உடல் நலம் கெட்டு விட்டது. ப்ரிசோதனையில் ஈ கொலி  பாக்டீரியாவின் பாதிப்பு என்றார்கள். 15 நாட்களுக்கு மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்.



முன்பொருமுறை ஒரு அதிர்ச்சியான தகவல் படித்தேன். ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் எழுதியிருந்தார். திடீரென்று உடல் நலம் குன்றிய ஒரு மூதாட்டியை சோதனை செய்ததில் அவர் கண்களிலும் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களிலும் புழுக்கள் தென்பட்டதாம். அந்த மூதாட்டியிடம் விசாரித்ததிலும் ஆராய்ச்சி செய்ததிலும் பன்றியின் கழிவுகள் கிடந்த இடத்தில் விளைந்த கத்தரிக்காயை அவர் சமைத்து சாப்பிட்டதாகத் தெரிந்தது. நல்ல கொதிநிலையில் கத்தரிக்காய் சமைக்கப்பட்டிருந்த போதிலும் அந்த புழுக்களின் முட்டைகள் அழியவில்லை. அவை நம் உடலில் வளர்ந்து இப்படியெல்லாம் பரவுகிறது. ஒரு பெரிய அறுவை சிகிச்சை மூல்ம் அந்த பாட்டியின் உயிரைக் காப்பாற்றிய அந்த மருத்துவர், ' பெண்களே, காய்கறிகளை சமைக்குமுன் ஒரு தடவைக்கு நான்கு தடவைகள் நன்கு அலசி கழுவி சமையுங்கள் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நல்லெண்ணையில் பாமாயில் கலப்பதாக முன்பு செய்தித்தாள்களில் படித்தேன். முன்பு இட்லிமாவு விற்பனையில் கலக்கப்படும் நீர் சுகாதாரமற்றதாக இருப்பதால் விரைவில் பாக்டீரியா அதில் பரவுகிறது என்று மாத இதக்ழில் வெளிவந்த செய்தியை என் பதிவில் நான் பகிர்ந்திருந்தேன். ஒரு முறை என் வீட்டில் தங்கியிருந்த உறவுப்பெண்மணியின் குழந்தைக்காக பசும்பால் விற்பனை செய்கிறவரை தேடிப்பிடித்து விலை கேட்டபோது, கொஞ்சம் தண்ணீர் விட்ட பால் அதிகக விலை என்றும் அதிக நீர் கலந்த பால் சகாய விலைக்குக் கிடைக்கும் என்றும் கூசாமல் சொன்னார்.



மரத்தூள், குதிரைச்சாணம், புளியங்கொட்டை என்றெல்லாம் டீத்தூளில் கலப்படம் செய்யப்படுகிறது! பெட்ரோல் தயாரிக்கப்படும்போது கடைசியாக திரவம் போல மீதமாகும் மினரல் ஆயில் மற்ற சமையல் எண்ணெய்களுடன் கலக்கப்படுகிறது!

அரிசி வகைகளில் ருசியில்லை. பொன்னி பச்சரிசி கிலோ 54 ரூபாய்க்கு விற்கிறது. வாங்கி சமைத்தால் ருசியேயில்லை. முன்பெல்லாம் சீரகச் சம்பாவில் பிரியாணி செய்தால் வீடே மணக்கும். இப்போதோ அதில் எந்த ருசியுமில்லை. கேட்டால் உரம் போட்டு வளர்ப்பதால் அப்படி என்கிறார்கள். இலங்கையிலிருந்து இங்கு [ துபாய்] இறக்குமதியாகும் சிகப்பரிசியைத்தான் இப்போது சமைத்து உண்கிறோம். ருசியில் குறைவில்லை என்பதோடு வயிற்று பிரச்சினைகள் எதுவும் இருப்பதில்லை!
இப்படி காய்கறிகள், அரிசி, பழங்கள், இறைச்சி, மளிகை சாமான்கள் எல்லாவற்றையுமே இப்போதெல்லாம் தைரியமாக உபயோகிக்க முடியவில்லை! எதைத்தான் சாப்பிடுவது என்று பல சமயங்களில் புரிவதில்லை!!