Monday, 30 March 2015

முத்துக்குவியல்-35!

படித்து ரசித்த முத்து:

திருமணத்தில் எதற்காக கல்கண்டும் சந்தனமும் மலர்களும் வைக்கப்படுகின்றன?

கசக்கினாலும் மணப்பேன்என்று சொல்வதற்கு மலரும்,



கடித்தாலும் இனிப்பேன் என்று சொல்வதற்கு கல்கண்டும்



கரைந்தாலும் நறுமணம் தருவேன் என்று சொல்வதற்கு சந்தனமும்



வைக்கப்படுகின்றனவாம்.  இப்படி இறையன்பு சொல்லியிருக்கிறார்!

தகவல் முத்து

மாமியார் கிணறு மருமகள் கிணறு!



 விசித்திரமான பெயருடன் அழைக்கப்படும் ஒரு பெரிய கிணறு மண்ண‌ச்சநல்லூர் அருகே திருவள்ளாரை என்ற கிராமத்தில் உள்ளது. ஸ்வஸ்திக் சின்ன வடிவில் நான்கு புறமும் படிக்கட்டுக்கள்  அமைக்கப்பட்டு கிணற்றின் தரைம்மட்டம் வரை இறங்கிச் செல்ல இந்தக் கிணற்றில் வசதி உள்ள‌து. நான்கு திசைகளிலும் படிக்கட்டுகள் இருப்பதால் மாமியார் ஒரு பக்கம் போனால் மருமகள் இன்னொரு பக்கம் அவருக்குத் தெரியாமல் போகலாமாம். மாமியார் குளிப்பது மருமகளுக்குத் தெரியாது. மருமகள் குளிப்பது என்று கிராம மக்கள் வேடிக்கையாகப் பேசுகிரார்கள். உண்மையில் இதுபோல் ஸ்வஸ்திக் வடிவ குளம் தமிழ் நாட்டில் வேறெங்குமில்லை. பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆட்சிக்காலத்தில் கம்பன் அரையன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது முழுவதும் கல்லால் ஆன இந்தக் கிணறு. தற்போது குளத்தில் தண்ணீர் இல்லையென்றாலும் கிணற்ரைச் சுற்றிலும் அழகான மரங்கள் வளர்க்கப்பட்டு, தொல்பொருள் இலாகாவினரால் சுற்றிலும் வேலி போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது

மருத்துவ முத்து:

ப்ளூ பெரி பழம் ரத்தக்கொதிப்பிற்கு சிறந்த நிவாரணி. இந்தப்பழத்தில் அதிகமக இருக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு ரத்த நாளங்களை விரித்து ரிலாக்ஸ் பண்ணுவதே இதற்குக் காரணம்.
பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர்க்குழாய்களில் வருகிற‌ தொற்று நோய்க்கு காரணம் சிறுநீரகப்பாதையில் ஈ கொலி என்னும் பாக்டீரியா அதிக அளவில் இருப்பது தான் இதற்குக்காரணம். இந்தப்பழம் சிறந்த‌ ஆன்டிபயாடிக் மருந்தாக செயல் பட்டு இந்த பாக்டீரியாவை அழித்து விடுகிறது.
அதனால் ப்ளூ பெரி பழங்களை தினமும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

அசத்திய முத்து:

கோயமுத்தூர் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது.

அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே
.
கோவையில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் , தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள், தனி நபர்கள் , மருத்துவர்கள், உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே, தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவரான‌ சாந்தி கியர்ஸ் திரு. பி.சுப்பிரமணி அவர்கள் தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.

அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில :

1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)

2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)

3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.

4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய்

5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.
மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளிக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி செண்டர் , ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்.

இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை.
http://www.shanthisocialservices.org/index.html

Sunday, 22 March 2015

புதிய இல்லம்!!

கிட்டத்தட்ட 15 நாட்களாக இணையத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. கட்டப்பட்டிருந்த புதிய இல்லத்திற்கு குடி பெய‌ர்ந்து இணையத்தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள இத்தனை நாட்கள் பிடித்தது. கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக்கட்டிப்பார் என்ற பழமொழியின் அர்த்தத்தை அனுபவப்பூர்வமாக இத்தனை நாட்கள் உணர்ந்தோம். அதற்குத்தனியே பதிவு போடுவதற்கு வேண்டிய அனுபவங்கள் ஏராளமாக இருக்கின்றன. இடையே ஏற்பட்ட தவிர்க்க முடியாத அயல்நாட்டு பயணங்கள், உற்ற உறவுகளின் மறைவுகள் புதிய இல்லத்திற்கு குடி பெயர்வதைத் தள்ளிப்போட்டபடியே இருந்தன. இடையிடையே அமீரகம் விரைவில் திரும்புமாறு பேரனின் அழைப்பு வேறு! புதிய இல்லத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தையும் சரிப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன் நடந்த புதுமனை புகுவிழாவிற்கு பதிவுலகச் சகோதரர்கள் தமிழ் இளங்கோ, கரந்தை ஜெயக்குமார், அவரின் இல்லத்தரசி, சகோதரி கிருஷ்ணப்ரியா வருகையும் அன்பளிப்பும்  தந்து சிறப்பித்தார்கள். சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் சகோதரர் தமிழ் இளங்கோ மூலம் பரிசுப் பொருள் அனுப்பியிருந்தார்கள். புதிய இல்லத்தின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!



சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களுடன்!
சகோதரர் ஜெயக்குமாருடனும் அவர் தம் துணைவியாருடனும்!
மேல் கூரையில் சுதை அலங்காரம்!
என் சமையலறை என் ரசனையில்!
வரவேற்பறையின் ஒரு பகுதி!
முகப்பில் கதவின் மேல் மரவேலைப்பாடுகள்!
 
மயில் வடிவில் கதவின் கைப்பிடி!
 

Sunday, 8 March 2015

பெண்ணே நீ வாழ்க!

ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்ததிலிருந்து இரவு வரை பெண் என்பவள் உழைக்கிறாள். அது 20 வயது இளம் பெண்ணாக இருந்தாலும் சரி, நடுத்தர வயது பெண்மணியாக இருந்தாலும் சரி அல்லது 70 வயது முதிர்ந்த பெண்மணியாக இருந்தாலும் சரி, அவள் ஏதாவது ஒரு விதத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறாள்! தன் பெற்றோருக்காகவும் தன் கணவன், குடும்பத்திற்காகவும் அவள் உழைக்க என்றுமே தயங்குவதில்லை. இது காலம் காலமாக இயந்திர கதியில் நடப்பது தான் என்றாலும் இந்த உழைப்பிற்குப் பின்னால்  உறுதியான மனமும் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கின்ற துணிவும் ஒரு பெண்ணுக்கு தன்னாலேயே வந்து விடுகிறது. அதன் உந்து சக்தி அவள் மிகவும் நேசிக்கும் அவளின் குடும்பம் தான். ரிக் வேதத்தில், பெண்ணை எல்லாவற்றுக்கும் மேலான சக்தியாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் முன் காலத்தில் முழுமையான அர்ப்பணிப்பு இருந்தது. தன்னலம் கருதாத மேன்மை இருந்தது. இப்போது அப்படியில்லை. காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படத்துவங்கி விட்டன. உழைப்பதில் சுயநலம் வந்து விட்டது. ஏன் பிறருக்காக உழைக்க வேண்டும் என்ற கேள்விகள் தோன்றி விட்டன.
பெண் மனதளவில் காருண்யம் நிறைந்தவளாக‌ இருந்தாள். இப்போது அந்தக் காருண்யத்தில் கணக்கு வழக்குகள் தோன்றி விட்டன.

கேள்விகள் தோன்றாத அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பங்கள் நிறைந்த காலத்தில் ஆண் மகன் குடும்பத்திற்குத் தலைவனாக இருந்தாலும் பெண் என்பவள் அவனுக்கும் அவன் குடும்பத்தார்க்கும் அடங்கியே இருந்திருந்தாலும் பெண்கள் மத்தியில் தன் குணத்தாலும் தன் உழைப்பாலும் அன்பாலும் அவள் கம்பீரமாகவே இருந்தாள்.




இப்போது சுய சம்பாத்தியமும் சுதந்திரமும் பெண்களுக்கு நிறையவே இருக்கின்றன. அனைத்து வேலைகளையும் கணவனும் பகிர்ந்து செய்கிறான். மனைவி சமைத்தால் கணவன் பாத்திரங்கள் கழுவுவது, மனைவி துணிகள் துவைத்தால் கணவன் துணிகளைக் காயப்போடுவது என்று இன்றைய இளந்தலைமுறைகளின் இல்லங்கள் பலவற்றில் நடக்கிறது. ஆனால் அன்றைய வாழ்க்கையின் அமைதியும் சிரிப்பும் புரிதலும் இன்று இருக்கிறதா என்றால் நிறைய இல்லங்களில் அவை இல்லவே இல்லை என்பது தான் விடையாகக் கிடைக்கிறது.  என் மகனுடன் படித்தவர்களில் பதினோரு இளைஞர்கள் திருமணமாகி ஒரு வருடத்திலேயே மணவிலக்கு பெற்று விட்டார்கள் என்று நான் அறிந்தபோது அதிர்ந்து போனேன்.

 என் பாட்டியின் தகப்பனார் தன் மகள் புகுந்த வீட்டிற்குச் சென்ற போது ' நான் உனக்கு அணிவிக்கும் நகைகள் என் கெளரவத்திற்காக போடுவது. ஆனால் அவை யாவும் உன் கணவனுக்குச் சொந்தமானது. உன் கணவன் கேட்டால் நீ புன்னகையுடன் அவற்றைக் கழற்றித்தர வேண்டும்' என்று சொன்னாராம்! இப்போது நகைகளுக்காகவே எத்தனை சண்டைகள், பிரிவினைகள் நடக்கின்றன!

அன்பு என்பது இப்போது வியாபாரமாகி விட்டது. காருண்யம் என்பது அனாதை இல்லங்கள், மறு வாழ்வு மையங்கள் மட்டும் என்றாகி விட்டது. எல்லா அளவு கோல்களையும் பணம் ஒன்றே தீர்மானிக்கிறது. முழுமையான அன்பும் கருணையும் அக்கறையும் ஆதரவும் இல்லாமல் இல்லங்கள் இயந்திர கதியில் இயங்குகின்றன. இந்த நிலை மாற வேண்டும்.

பெண்ணே, அது உன் கையில் தான் இருக்கிறது! நீ பூரண‌மானவள். உன்னதமானவள்!  சக்தியின் இருப்பிடமாகிய நீ அன்பு காட்டுவதில் பாரபட்சம் இனி வேண்டாம்! மூத்தோரிடம் கருணை காட்டு. உன்னால் ஆதரவற்றோர் இல்லம் பெருக வேண்டாம்! இல்லறத்தில் பிரச்சினைகளும் வாக்கு வாதங்களும் சகஜம். அதில் விட்டுக்கொடுத்தல், பொறுமை என்ற மந்திரங்களை எப்போதும் உச்சரித்தால் அதன் பின் ஜெயிப்பதென்னவோ நீ தான்!

பெண்ணே நீ வாழ்க!

Tuesday, 3 March 2015

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை!!

கடந்த வாரம் உறவினர் மரணம் பற்றி எழுதியிருந்தேன். அதற்கு முன்னதாயும் அதற்குப்பின்னும் அலைச்சலகள், மனம் சரியின்மை என்று 25 நாட்கள் ஓடி விட்டன. கனமான எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளி விட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுவது போல எதையாவது எழுதலாமா என்று நினைத்ததும் மனதில் வந்து நின்றது இன்றைக்கு செய்த ஒரு பலகாரம் தான்!

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வடை, புளிக்குழம்பு, கூட்டு என்று செய்யலாம். ஆனால் அடை செய்வது எளிதானது மட்டுமல்ல, மிகவும் சுவையானதும் கூட!

முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கைப்பற்றி சில வார்த்தைகள்!

சர்க்கரை வள்ளிக் கிழங்கில்  மிகமிகக் குறைந்த அளவே கொழுப்பும் ஆனால் நிறைய அளவு நார்ச்சத்தும் உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாகவே உயர்த்தும்.




எனவே நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவு உண்ணலாம். மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் - நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.

நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது
.
கையில் எடுத்தால் கிழங்கு கனமாக, கெட்டியாக இருக்க வேண்டும். தோல் புள்ளி  எதுவும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். நுனியில் சுருங்கி இருந்தால் பழசு என்று அர்த்தம்.  வாங்கியதும் மண் படிந்திருந்தால் தோலை கழுவ‌க் கூடாது. ஈரம், கிழங்கை சீக்கிரம் கெடுத்துவிடும். உபயோகிக்கும் முன் சுத்தம் செய்தால்  போதும். வாங்கியதுமே பயன்படுத்தி விடவேண்டிய காய்கறி இது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால்  காய்ந்து போய் ருசியும் குறைந்துவிடும்.

இனி சமையல் குறிப்பு!!

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை


தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி- 1 கப்
பச்சை மிளகாய்- 2
இஞ்சி -சிறு துண்டு
சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை வேகவைத்து , துருவியது -1 கப்
தேங்காய்த்துருவல்- கால் கப்
பொடியாக அரிந்த பெரிய வெங்காயம்- 1
பொடியாக அரிந்த கொத்தமல்- கால் கப்
கறிவேப்பிலை சிறிது
தேவையான உப்பு

செய்முறை:

இட்லி அரிசியை நான்கைந்து மணி நேரம் ஊறவைத்து பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து மையாக கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்குகளை தோலுடன் நன்கு கழுவி இரன்டு மூன்று துண்டுகளாய் வெட்டி தண்ணீர் சேர்க்காது ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் 2 விசிலுக்கு வேக வைக்கவும்.
சூடு குறைந்ததும் வள்ளிக்கிழங்குகளை எடுத்து, தோலுரித்து கிழங்குகளை துருவிக்கொள்ள‌வும். துருவிய கிழங்கு, வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தும் அரைத்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்துப் பிசைந்து சின்ன சின்ன அடைகளாகத் தட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
திருப்பிப்போடும்போது சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ள‌வும்.
இலேசான தித்திப்புடன் மிகச் சுவையாக இருக்கும் பலகாரம் இது!