Tuesday, 30 September 2014

முத்துக்குவியல்-31!!

மருத்துவ முத்து:

என் சினேகிதி ஒருவர் என் வீட்டில் தங்கும்போதெல்லாம் வெந்நீரை அடிக்கடி எடுத்து சுடச்சுட, ரசித்து ரசித்து குடிப்பார்.  நான் அதைப்பார்த்து சிரிக்கும்போதெல்லாம் வெந்நீரின் மகிமைகளை எடுத்துச் சொல்வார். அவர் சொல்வதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மைதானென்பது எனக்கும் தெரியும். என்றாலும் இப்படி ரசித்து ரசித்து குடிப்பது அபூர்வம் என்று நினைத்துக்கொள்வேன். இதோ, உங்களுக்கும் வெந்நீரின் நற்பயன்களை எழுதி விட்டேன்!!
வெந்நீரின் நன்மைகள்:
எண்ணெய் பலகாரங்கள், இனிப்பு சாப்பிட்டால் சில சமயங்களில் நெஞ்சு கரிக்கும். அப்போது ஒரு தம்ளர் வெந்நீரை மெதுவாக குடித்தால் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய் விடும்.
காலையில் சரியாக மலம் கழிக்கவில்லையென்றால் வெந்நீரை குடியுங்கள். உடன் பயன் கிடைக்கும்.
உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனக்கல்கண்டு கலந்து குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய் கசப்பும் மறைந்து விடும்.
உடல் வலிக்கு நல்ல வெந்நீரில் குளித்து இந்த சுக்கு கலந்த வெந்நீரைக் குடித்து படுத்தால் நன்கு தூக்கம் வருவதுடன் வலியும் மறைந்து விடும்.
அதிகம் தூரம் அலைந்ததனால் ஏற்படும் கால்வலிக்கும் வென்னீர் தான் தீர்வு. பெரிய பிளாஸ்டிக் வாளியில் பொறுக்குமளவு சூடான வெந்நீர் கொட்டி உப்புக்கல் போட்டு அதில் கொஞ்ச நேரம் பாதங்களை வைத்து எடுங்கள்.
காலில் இருக்கும் அழுக்கைப்போக்க வெந்ந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதங்களை வைத்து எடுங்கள்.
மூக்கில் அடைப்பு ஏற்பட்டால் வெந்நீரில் சில சொட்டுக்கள் நீலகிரித்தைலம் விட்டு முகர்ந்தால் தீர்வு கிடைக்கும்.
வெய்யிலில் அலைந்து விட்டு வந்து உடனே ஐஸ் தண்ணீர் அருந்துவதைக்காட்டிலும் சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது தான் தாகம் தீர்க்கும் நல்ல வழி.

குறிப்பு முத்து:

சாதத்தில் எறும்புகள் வந்து விட்டால்:
ஒரு சிறு கிண்ணத்தில் சீனியைப்போட்டு சாதத்தின் மீது வைத்தால் எறும்புகள் சாதத்தை விட்டு நக்ர்ந்து சீனியை மொய்க்க ஆரம்பித்து விடும்.

வருத்தப்பட வைத்த முத்து:

இரு மாதங்களுக்கு முன் நடந்தது இது. சென்னை ஏர்ப்போர்ட்டில் எனது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறும்போது அந்த சம்பவம் நடந்தது. எனக்கு முன்னால் தனது உடமைகளுடன் சென்றவர் ஒரு சிகிரெட்டை எடுத்து பற்ற‌ வைத்துக்கொண்டு தீக்குச்சியை தூக்கி எறிந்தார். சற்று அருகில் நின்று கொன்டிருந்த போலீஸ்காரர் உடனே அருகில் வந்தார். ' ஏர்ப்போர்ட் உள்ளே சிகிரெட் பிடிக்கக்கூடாதென்று உனக்குத் தெரியாதா?' என்று கேட்டதும் உடனே சிகிரெட் பிடித்தவர் அதை அணைத்தார். போலீஸ்காரர் அதற்கப்புறமும்  விடவில்லை. ' நீ தூக்கியெறிந்த தீக்குச்சியை எடுத்து இதோ இந்தக்குப்பைக்கூடையில் போடு' என்றார். அவரும் வாயைத்திறக்காமல் கீழே கிடந்த தீக்குச்சியை எடுத்து குப்பைக்கூடையில் போட்ட பிறகு தான் அந்த போலீஸ்காரர் அவரை விட்டார். பார்த்துக்கொண்டிருந்த எனக்குத்தான் மிகவும் வருத்தமாக இருந்தது. வெளி நாட்டில் வசிக்கிறோம். அங்குள்ள சட்ட திட்டங்களை மதிக்கிறோம். அவற்றை மீறுவதற்கு பயப்படுகிறோம். பயந்து கொண்டாவது அவற்றைப் பின்பற்றுகிறோம். அங்குள்ள பொது இடங்களில் குப்பைகள் போடாமல் அதற்கென்றே வைத்திருக்கும் குப்பைத்தொட்டியில் போடுகிறோம். இங்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம் நாடு என்பதாலா? அல்லது குப்பைகள் எல்லா இடங்களிலும் இல்லாமலேயாவா இருக்கிறது என்ற அலட்சியத்தாலா?










 









 

Tuesday, 23 September 2014

அவ்வையார்!!!

திருவள்ளுவருக்கு நிகராக கருதப்படுபவர் ஒளவையார். 'ஞானக் குறள்கள்' பலவற்றை எழுதியதுடன் அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் போன்ற அழியா முத்துக்களைத்தந்தவர் அவர்.
உண்மையில் நாடு அறிந்த ஒளவையார் மூவர். சமய ஒளவையார் இருவர்.
சங்க கால அவ்வையார் ஒருவர். இவர் பாலையைப்பாடியவர். அதியமானுடன் வாழ்ந்தவர். தகடூர் மன்னன் அதியமானிடம் பேரன்பு கொண்டவர். நீண்ட நாள் வாழும் வகையில் தான் பெற்ற நெல்லிக்கனியை தான் உண்ணாது அவ்வையார் நீண்ட நாள் வாழ வேன்டும் என்று அதியமான் தன் நண்பர் அவையாருக்குக்கொடுத்ததாக வரலாறு. இந்த நெல்லிக்கனியின் பெருமை அறியாது உண்டு, அதன் பின் அதன் பெருமை அறிந்து, அதிய‌மானைப்புகழ்ந்து அவ்வையார் பாடிய‌ பாடல் புறநானூற்றில் இடம் பெற்றிருக்கின்றது. இவர் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களைப் பாடியுள்ளார். இவை சங்க கால இலக்கியமான எட்டுத்தொகையில் அடங்குகின்றன. போரொன்று நடவாதிருக்க, அதியமானின் விருப்பதிற்கிண‌ங்கி தொண்டைமானிடம் தூது சென்றவர். "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்'
என்று திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான்
பக்தி நூல்களில் முதல் நூலாகக் கருதப்படும் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார்.
சமய அவ்வையார் சோழ நாட்டினர் என்றாலும் பாண்டிய நாடு, சேர நாடு என்று எல்லா நாட்டினரும் வணங்கப்பட்டவராக  இருந்தார். மூதுரை, கொன்றை வேந்தன், ஆத்திச்சூடி, நல்வழி போன்ற பல நூல்களை எழுதியவர்.



சங்க கால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். இரண்டாவது அவ்வையார் பக்தர்களுடன் வாழ்ந்தவர். மூன்றாவது அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்து குழந்தைகளுக்காக பல நூல்களை இயற்றியவர். நான்காவது அவ்வையார் தான் 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா? என்று முருகன் வினவிய கதையில் இடம் பெற்றவர். இவர் தனிப்பாடல்கள் பலவற்றை எழுதியவர்.
நம் தமிழகத்தில் அவ்வைக்கு பல இடங்களில் கோவில்கள் உள்ளன. தஞ்சையை அடுத்துள்ள‌ திருவையாற்றில் உள்ள‌ அவ்வை கோவில் மிகவும் பிரசித்தமானது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துனை வேந்தர் அவ்வை நடராசன் அவர்கள் தலைமையில் அவ்வை கோட்டம் நிர்மாணித்து அதனுள் அவ்வை கோவிலையும் கட்டினர். கிழக்கு நோக்கி அமைந்துள்ள‌ இந்த ஆலயத்தில் கருவறையும் விமானமும் இணைந்து 15 அடியில் கம்பீரமாக நிற்கிறது. கருவறையில் இரண்டே காலடி உயரத்தில் வலது கையில் செங்கோலும் இடது கையில் ஓலைச்சுவடியும் கொண்டு கம்பீரமாக அவ்வையார் நிற்கிறார்.
நெல்லிக்கனி பிரசாதத்துடன் தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது.
அவ்வையை வணங்கினால் படிப்பு வரும், திருமண‌ம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் உலவுவதால் பெண்கள் கூட்டத்திற்கு பஞ்சமில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் திரண்டு வருகிறது.

தமிழகத்தில் நாகர்கோவில் நெல்லை சாலையில் முப்பந்தல் என்னும் இடத்திலும் நாகர்கோவிலிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள பூதப்பாண்டியிலும் நாகை மாவட்டம் துளசியாப்பட்டிணத்திலும் அவ்வை கோவில்கள் அமைந்துள்ள‌ன. குமரி மாவட்டத்தில் ஒரே தாலுகாவில் மூன்று கோயில்கள் இருக்கின்றன. இங்குள்ள தோவாளை தாலுகாவில் ஆண், பெண் பாகுபாடின்றிப் பலரது பெயரும்கூட அவ்வையார்தான்! அவ்வை மூதாட்டியை தெய்வமாக்கி, நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் நாஞ்சில் நாட்டில் இருந்து வருகிறது. இதற்கு அவ்வை நோன்பு என்று பெயர். ஆரல்வாய்மொழி - பூதப்பாண்டி சாலையில் உள்ள தாழாக்குடியை அடுத்து ஒரு அவ்வையார் அம்மன் கோயில் உள்ளது. இதற்கு நெல்லியடி அவ்வை என்று பெயர். அழகியபாண்டியபுரம் பக்கத்தில் உள்ள குறத்தியறை மலைச்சரிவில் உள்ள குடைவரைக் கோயிலையும் அந்தச் சுற்றுவட்டார மக்கள் அவ்வையார் அம்மன் கோயில் என்றே சொல்கிறார்கள். இந்தச் கோயில்களில் எல்லாம் ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் கூடி, கூழும் கொழுக்கட்டையும் படைத்து வழிபடுவார்கள்.

தமிழுக்குத்தொண்டு செய்த அவ்வையாரை நம் பெண்கள் இன்னும் தெய்வமாகப்பாவித்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

Thursday, 11 September 2014

நார்த்தங்காயும் பல்வலியும்!!

பொதுவாய் கசப்புத்தன்மை சிறிது கொண்ட நார்த்தங்காய் எனக்குப் பிடிக்கும். நார்த்தங்காயில் உப்பு ஊறுகாய், மிளகாய்த்தூள் போட்ட ஊறுகாய் செய்வதுண்டு. நார்த்தங்காயை சற்று பெரிய துன்டுகளாய் அரிந்து வேக வைத்து, மிளகாய் அரைத்துப்போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி உப்பும் சேர்த்து செய்யும் ஊறுகாய் அத்தனை ருசியாக இருக்கும். தயிர் சாதத்திற்கு அமிர்தமாய் ருசிக்கும். இதைத்தவிர நார்த்தங்காய் ஜூஸ் எடுத்து, சிறிது எலுமிச்சை சாறும் வெல்லமும் அல்லது சீனியும் கலந்து குடிப்பது வழக்கம். எலுமிச்சை சாதம் போல நார்த்தங்காய் சாதமும் நன்றாக இருக்கும்.



மற்ற‌படி, அதன் மருத்துவப்பயன்கள் சிலவற்றையும் அறிந்திருக்கிறேன். ஆனால் ரொம்பவும் வித்தியாசமாக ஒரு பலனை சமீபத்தில் தான் அறிந்தேன்.

20 வருடங்களுக்கு முன் வெளி வந்த ஒரு பழைய புத்தகத் தொகுப்பில்  படிக்க நேர்ந்த ஒரு மருத்துவக்குறிப்பு இது. பல்வலிக்கு பல மருத்துவக்குறிப்புகள் படித்திருக்கிறேன். இது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.

நகரத்தில் வாழ்ந்த ஒரு பெண்மணி, கிராமத்திற்குச் சென்றபோது பல்வலி வர, அங்குள்ள‌வர்கள் சொன்ன கை வைத்தியம் இது. உடனேயே வலியும் போய் பற்களும்  வலியில்லாமல் வலுவுடன் இருப்பதை உணர்ந்து அடுத்தவர்களுக்கும் பயன்பட எழுதிய விபரம் இது.

முன்பெல்லாம் உப்பு நார்த்தங்காய் போட்டு வீட்டில் பீங்கான் ஜாடியில் ப்த்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். வருடம் முழுவதும் கெடாமல் இருக்கும்.


பல் வலியின் போது, எந்தப் பல் வலிக்கிறதோ அந்த பல் முழுவதும் படுவது போல ஒரு உப்பு நார்த்தங்காய் துன்டை அமுக்கி வைத்துக்கொன்டு அப்படியே படுத்துறங்கி விடலாம். காலை வலி இருக்காது.காலை எழுந்ததும் வாய்க்கொப்பளித்து விட்டு உப்பு கலந்த வெதுவெதுப்பான வெந்நீரில் வாயைக்கொப்பளிக்க வேன்டும். இது போல 3 நாட்கள் செய்து வந்தால் நார்த்தையிலிருக்கும் உப்பும் கசப்பும் பல்வலிக்குக் காரணமான பூச்சிகளைக் கொன்று பற்களை முன்னை விட வலுவானதாக மாற்றி விடுகிறதாம்.

துபாயிலுள்ள என் உறவினருக்கு இந்த விஷயத்தைச் சொன்னேன். அடுத்த வாரமே அவர்கள் ஃபோன் செய்து, தனக்கு திடீரென்று பல்வலி வந்ததாகவும், இந்த வைத்தியத்தை செய்ததுமே பல்வலி காணாமல் போய்விட்டதாகச் சொன்னதும் எனக்கு ஏதோ அவார்ட் கிடைத்தது போல அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
உப்பு நார்த்தங்காய் செய்யும் விதம்:
நார்த்தங்காயை கழுவி துடைத்து, சுருள் சுருளாக நறுக்கவும். தனியாக வராமல் ஸ்பிரிங் போல் வரவேண்டும்.
கல் உப்பை சுருளுக்குள் திணித்து, 3 நாட்கள் அப்படியே ஜாடியில் போட்டு வேடு கட்டி வைக்கவும். தினமும் குலுக்கி மட்டும் விடவும்.
நான்காம் நாள் தண்ணீரிலிருந்து (உப்பு கரைந்து தண்ணீராக இருக்கும்) எடுத்து காயை மட்டும் வெய்யிலில் காய வைக்கவும்.
மாலையில் திரும்ப எடுத்து, அந்த தண்ணீருக்குள் போட்டு குலுக்கி வைக்கவும்.
இது போல் தண்ணீர் வற்றும் வரை செய்யவும்.
பிறகு வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும். மேலே உப்பு பூத்து விடும். அப்போது எடுத்து ஜாடியில் எடுத்து வைத்துக் கொண்டால் வருடக்கணக்கில் கெடாமல் இருக்கும்.





நார்த்தங்காயின் மருத்துவ பலன்கள்:

இந்த ஊறுகாயில் ஒரு துண்டெடுத்து உப்பை நன்கு கழிவிய பின் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குண‌மாகும்.
நார்த்தங்காயை எந்த விதத்திலும் உணவில் சேர்த்துக்கொண்டால் ரத்தம் சுத்தமாகும்.
பசியைத்தூன்டும்.
வாயுக்கோளாறை நீக்கும்.
அடிக்கடி ஏப்பம் வருவதுடன் இது சீரணமாக நெடு நேரமாகும். ஆனால் நார்த்தங்காயின் மருத்துவப்பலன்கள் அதிகம்.

புகைப்பட உதவி: கூகிள்

 

Monday, 1 September 2014

முத்துக்குவியல்-30!!!

குறிப்பு முத்து:

அயர்ன் பாக்ஸில் பழுப்பு நிறக்கறை இருந்தால்:



ஈரத்துணி கொன்டு சோடா மாவை ஒத்தி எடுத்து அந்தக் கரையைத்துடைத்தால்  கறை முழுவதுமாக நீங்கி விடும்.

சிரிக்க வைத்த முத்து:

சமீபத்தில் படித்தது இது! எப்படியெல்லாம் யோசித்து எழுதி சிரிக்க வைக்கிறார்கள் என்று தோன்றினாலும் படித்ததும் புன்னகைக்க்காமல் இருக்க முடியவில்லை!! நீங்களும் படித்து ரசியுங்கள்!




நம்மோட ரெண்டு கண்களுக்கும் உள்ள உறவு உங்களுக்குத் தெரியுமா?
ரெண்டும் ஒண்ணை ஒண்ணு பாத்துக்காது.
ஆனால்
ரெண்டும் ஒன்றாகத்தான் பார்க்கும்.
ஒன்றாகத்தான் சிமிட்டும்.
ஒன்று சேர்ந்து தான் கண்ணீர் விடும்!ஒரேபக்கம் தான் பார்க்கும்.
ஒரே நேரம் தான் கண்கள் மூடித்தூங்கும்!
இரு கண்களுக்கும் உள்ள உறவு அந்த அளவு ஆழமாக வேரோடிய உறவு!
ஆனால்...
ஒரு பெண்ணைப்பார்த்தால் மட்டும் ஒண்ணு மட்டும் தான் கண்ணடிக்கும்.. மற்றது சும்மா இருக்கும்!
இதிலிருந்து ஒரு விஷயம் தெள்ளத்தெளிவா தெரியுது...

ஒரு பெண் நினைச்சா எந்த உறவையும் வெட்டி எறிஞ்சிட முடியும்!!


அபாய முத்து

:
சிகிரெட்டில் புற்று நோயை வரவழைக்கக்  கூடிய 43 காரணிகள் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது தற்போது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை காட்மியம், பூச்சிக்கொல்லி மருந்தான டி.பிடி தயாரிக்கப்பயன்படும் பென்சீன், கழிவறை சுத்தம் செய்யப்பயன்படும் அம்மோனியா, இறந்த உயிரினங்களை பாதுகாக்கப் பயன்படுகிற பார்மால்டிஹைடு, மற்றும் விஷ வாயுக்கள், காற்றை மாசுபடுத்தும் துகள்கள் போன்றவை உள்ளன!!

புகைப்பட முத்து:

நாங்கள் ஷார்ஜாவில் பல வருடங்களாக எங்கள் உண‌வகத்திற்காக காய்கறிகள் வாங்கிக்கொண்டிருக்கும் கடையிலிருந்து ஒரு விசேஷ நாளில் அதன் நிறுவனர் எங்கள் இல்லம் வந்து கொடுத்த பழ வகைகள் இவை!!

பழங்களுடன் என் கணவர்
வருத்தப்பட வைத்த முத்து:

சமீபத்தில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பேசிக்கொன்டிருந்த போது, பேச்சு இன்றைய பாடத்திட்டங்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் நடைமுறைகள், குழந்தைகளின் படிப்பு சுமைகள் பற்றி சரமாரியாய் அவரவர் தங்களின் அபிப்பிராயங்களை சொல்லிக்கொன்டிருந்தோம். பேச்சுக்கிடையே சமீப காலத்தில் ஒரு ஆசிரியை ஸ்கேலால் அடித்து ஒரு பையனுக்கு கண் பார்வை பிரச்சினை ஆனதைப்பற்றிய செய்தி விவாதமாக வந்தது. அப்போது அங்கு அமர்ந்திருந்த, அரசுப்பள்ளியில் பணி செய்கிற என் உறவுப்பெண்மணி  சொன்னார். ' மன அழுத்தம் எல்லோருக்கும் இருக்கிறது. நாங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் முன் அவர்களுக்கு கவுன்சிலிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாடத்தில் கவனம் இல்லாத ஒரு மாணவனை தினமும் பார்க்க நேர்ந்தால் அவனை தனியே கூப்பிட்டு விசாரித்து, அவன் மனதிலுள்ள‌தை வெளியே வரவழைத்து, ஆறுதல் அளித்து, உற்சாகத்தை ஏற்படுத்தி அவனை பாடங்கள் படிப்பதில் உற்சாகத்துடன் செயல்படுத்தும்போது நாங்கள் களைப்படைந்து விடுகிறோம். நாங்களும் காலை 4 மணிக்கு எழுந்து சமைந்து, வீட்டில் பெரியவர்களை கவனித்து, எத்தனையோ கிலோ மீட்டர்கள் பயணித்து பள்ளிக்கு வருகிறோம். என் சினேகிதி ஒரு நாள் வகுப்பில் பாடம் சொல்லிக்கொண்டிருந்த வேளையில் எதற்கோ ஸ்கேலை எடுத்தாராம், உடனே ஒரு பையன் எழுந்து ' என்ன டீச்சர், ஜெயுலுக்கு போக ஆசையாக இருக்கிறதா?' என்று கேட்டானாம். இத்தைகைய மாணவர்களை எப்படி சமாளிப்பது?'  என்றார். எங்களுக்கு உடனேயே பதில் சொல்ல முடியவில்லை!!

மருத்துவ முத்து:

உடம்பில் தோன்றும் மருக்களை நீக்க:

கட்டிப்பெருங்காயத்தை நீரில் ஊறவைத்து அது பசை போல ஆனதும் தினமு அதை மருவில் தடவி வந்தால் சிறிது நாட்களில் அந்த மரு மறையும்.