Monday, 30 June 2014

வாழைப்பூ வடை!!

ரொம்ப நாட்களுக்குப்பிறகு ஒரு சமையல் குறிப்பு.

வடைகளில் பலவிதம் இருக்கின்றன. பருப்பு வகைகள் சேர்த்து வடை, காய்கறிகளில் வடை, கோழி, கறி என்று அசைவ வகைகளில் வடை என்று ருசிகரமாகச் செய்ய பல குறிப்புகள் இருக்கின்றன. ஒரு மாறுதலுக்காக இங்கே வாழைப்பு வடை செய்யும் குறிப்பு வருகின்றது.

அத‌ற்கு முன் வாழைப்பூ பற்றி சில வரிகள்.




வாழைப்பூவில் மருத்துவ குணங்கள் அதிகம். வாழைப்பூ இரத்தமூலம், வெள்ளை, உதிரக்கடுப்பு, இருமல், கை கால் எரிச்சல், நீரிழிவு இவைகளை நீக்கும். இதைப் பொரியலாகவோ அல்லது பயத்தம்பருப்புடன் அல்லது துவரம்பருப்புடன் சேர்த்துக் கூட்டாகவோ செய்து சாப்பிட்டால் உஷ்ணபேதி,இரத்தமூலம், சீதபேதி இவை சரியாகும். சமையலில் இதை கூட்டாக, பொரியலாக, உசிலியாக செய்து சாப்பிடுவது மட்டுமல்லாது அடை, வடை இப்படி பலகாரங்களாகச் செய்தும் சாப்பிடலாம்.

இப்போது வாழைப்பூ வடை பற்றிய குறிப்பு:

வாழைப்பூ வடை:


தேவையானவை:

ஆய்ந்த வாழைப்பூ இதழ்கள்‍‍ 2 கப்
கடலைப்பருப்பு‍ அரை கப்
துவரம் பருப்பு அரை கப்
வற்றல் மிளகாய் 4
சோம்பு 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
பூண்டிதழ்கள் 8
கொத்தமல்லி இலை அரை கப்
கறிவேப்பிலை சில இலைகள்
தேவையான உப்பு, வடை பொறிக்க எண்ணெய்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
 
செய்முறை:

வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லி, வாழைப்பூவை இவைகளை பொடியாக அரியவும்.

பருப்பு வகைகளை வற்றல் மிளகாயுடன் போதிய நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு நீரை அறவே வடித்து, சோம்பு, தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பூண்டு, கொத்தமல்லி சேர்த்து மஞ்சள் தூளும் சிட்டிகை உப்பும் சேர்த்து குழைய வதக்கி ஆற வைக்கவும்.
பிறகு அரைத்த பருப்புக் கலவையுடன் சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும்.

உருண்டைகள் செய்து, அவற்றை வடைகளாகத்தட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரிக்கவும்.

சுவையான வாழைப்பூ வடை தயார்!!


Saturday, 21 June 2014

முத்துக்குவியல் 28!!!

ரசித்த முத்து:

மறுபடியும் ஒரு சிறந்த பாடல்:

ஒளவையாரின் புகழ் பெற்ற பாடல் இது. இதன் பொருள் எத்தனை அருமையாக இருக்கிறது!

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

பொருள்:

வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.




மருத்துவ முத்து:

கால் ஆணிக்கு:
ஒரு மஞ்சள் கிழங்கு, ஒரு துண்டு வசம்பு, 10 கிராம் கற்பூரம், மருதாணி இலைகள் ஒரு கை இவற்றை நன்றாக அரைத்து கால் ஆணி உள்ள‌ இடத்தில் வைத்து 10 நாட்கள் தொடர்ந்து கட்டு போட்டு வந்தால் குணமாகும்.





சந்தேக முத்து:

இளநீர் குடித்து, அதைத்தொடர்ந்து நொங்குகள் சாப்ப்பிடுவது வயிற்றுக்கு ஆகாது என்று நெருங்கிய நண்பர் சொன்னார். அது உணமையா?

சிறந்த முத்து:

" சிறு பிள்ளைகளைப்போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே மிகப்பெரியவர் ஆவார்"
-  இயேசுநாதர்-

தகவல் முத்து:

நூல்கோல் அதிகம் அடிக்கடி சாப்பிடுவது இன்சுலின் அதிகம் சுரக்க உதவும்.

அருமையான முத்து:

உயிரினங்களை ஆறு வகையாக தொல்காப்பியர் பிரித்திருக்கிறார்:

ஓரறிவு   உள்ளவை:   புல், மரம் போன்றவை நகராது.
ஈரறிவு    உள்ளவை:   சிப்பி சங்கு போன்றவை நகரும்.
மூவறிவு  உள்ளவை:  கரையான், எறும்பு பறக்க முடியாது.
நாலறிவு  உள்ளவை:  வண்டு பறக்கும்.
ஐந்தறிவு  உள்ளவை:  மிருகம்.  கண்டு, கேட்டு, உன்டு வாழும். ஆனால் பேச முடியாது.
ஆறறிவு  உள்ளவை:   மனிதன்.  கண்டு, கேட்டு, உண்டு வாழ்வதோடு, நன்மை எது, தீமை எது  என்று தெரிந்து கொள்ளக்கூடிய பகுத்தறிவு உள்ள‌வன்.

Tuesday, 10 June 2014

தேவை- வருகையும் வாழ்த்துக்களும்!!

ரொம்ப நாட்களாகவே நம் ரசனைப்படி ஒரு வீட்டைக்கட்ட வேண்டுமென்ற கனவு அடி மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு சமீபத்தில் தான் உருவம் கொடுக்க ஆரம்பித்தோம்.


அதனாலேயே வலைத்தளத்தில் பதிவேற்றுவதும் நண்பர்களின் வலைத்தளங்களில் பின்னூட்டமிடுவதும் தொடர்ச்சியாக செய்ய முடியாதிருந்தது. நம் உணர்வுகளைப்பகிர்வதும் நண்பர்களின் உணர்வுகளில் பங்கெடுத்துக்கொள்வதுமான இனிமையை சில நாட்களாக இழந்திருப்பதால் மனதில் ஒரு வெற்றிடம் இருப்பது கூட உண்மை!

வெளிநாட்டு வாழ்க்கையிலிருந்து சற்று விலகி, தஞ்சை மண்ணை சுவாசித்துக்கொண்டே கடந்த டிசம்பரிலிருந்து வீட்டை கட்ட ஆரம்பித்தோம். வீடு எண்பது சதவிகிதம் முடிந்த நிலையில்
வருகிற 12ந்தேதி வியாழனன்று 
தஞ்சை, ரஹ்மான் நகர் முதலாம் குறுக்குத்தெருவில்
புதிய இல்லத்திறப்பு விழா நடைபெறுகிறது.

எந்த நல்ல விசேடங்களுக்கும் முதன்மையான இனிமையான நிகழ்வு என்பது  நல்லுள்ள‌ங்களின் அன்பு வருகைகளும் இனிய வாழ்த்துக்களும் தான்!!



வருகை தாருங்கள்! மனம் மகிழ்வோம்!
வாழ்த்துக்களில் உள்ளம் குளிர்வோம்!!

அன்பு சகோதரி

மனோ சாமிநாதன்
தஞ்சை.