சமீபத்தில் குடும்ப நண்பரின் மனைவிக்கு சிறுநீரகத்தொற்று ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அதுவே அதற்கு காரணம் என்று கூறி அவரை வழக்கமாய் பரிசோதிக்கும் மருத்துவர் தொடர்ந்து மருந்துகள் தந்தார். இரண்டு மாதமாக அவற்றை எடுத்துக்கொண்டும் இந்த பிரச்சினை சரியாகவில்லை. ரொம்பவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். யதேச்சையாக இன்னொரு சினேகிதியிடம் பேசிக்கொன்டிருந்த போது, அவர் இவரிடம் ' எதற்கும் நீ வழக்கமாய் சர்க்கரை நோய்க்கென்றும் அதைத்தொடர்ந்து விட்டமின்கள் எடுக்க வேண்டியும் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை நிறுத்திப் பாரேன்' என்று சொல்ல, சினேகிதியும் அது போல செய்ய ஒரே நாளில் அந்த இரண்டு மாதப்பிரச்சினை நின்றதாம். பிறகு சினேகிதி வேறொரு மருத்துவர் தந்த பழைய மாத்திரையே சர்க்கரைக்காக சாப்பிட ஆரம்பித்தாராம். அதன் பிறகு பல நாட்களாகியும் அவருக்கு பழைய பிரச்சினைகள் ஏற்படவில்லை!
இதைப்பற்றி ஒரு உறவினரிடம் பேசிக்கொன்டிருந்த போது, ' இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நல்ல மருந்துகளுடன் போலி மருந்துகள் கலந்து விற்பனைக்கு வருவது சர்வ சாதாரணமாகி விட்டது.' என்று மேலும் அதிர்ச்சி அளித்தார். இப்போதைய ஊழல் நிறைந்த உலகில் மருந்துகள் எடுக்கும் விஷயத்தில் self analysis, self monitoring அவசியத்தேவைகளாகி விட்டன!
மருத்துவரும் சமூக ஆர்வலருமான புகழேந்தி மருத்துவர்களிடம் எப்படி அணுக வேன்டும் என்று கூறியிருந்த பல தகவல்களை ஒரு மாத இதழில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
தனக்கு பரிந்துரைக்கப்படுகிற மருந்துகளில், சோதனைகளில் எதெல்லாம் தேவையானது, எதெல்லாம் அவசியமில்லாதது, விலை குறைவான மருந்துகள் இருக்கின்றனவா, மருந்துகளின் சாதக, பாதகங்கள் என்னென்ன என எல்லாவற்றையும் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டியது நோயாளியின் உரிமை. சரியான பதில் கிடைக்கா விடில் போராட வேன்டும் என்று சொல்கிறார் இவர்.
இவர் தன் அம்மாவை அறுவை சிகிச்சைக்காக ஒரு கண் மருத்துவ மனைக்கு கூட்டிசென்றிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு படிவ்த்தில் அவரை கையெழுத்து போடச் சொன்னார்கள். ' எதிர்பாராத வகையில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதற்கு மருத்துவர்களோ, மருத்துவமனை நிர்வாகமோ பொறுப்பல்ல என்று எழுதப்பட்டிருந்தது. மருத்துவர் சொல்கிறார்..' மயக்க மருந்து கொடுக்கும்போது இரண்டு விதங்களில் பிரச்சினைகள் வரலாம். மயக்க மருந்தின் அளவை சரியான அளவில் கொடுத்து, நோயாளின் உட்ல் நிலை அதற்கு ஒத்துக்கொள்லாமல் போனால் அது மருத்துவ புறக்கணிப்பில் வராது. ஆனால் மயக்க மருந்தின் அளவைக் கூட்டிக்கொடுத்து, அதனால் பிரச்சினை வந்தால் அதற்கு யார் காரணம்? மருத்துவமனையின் கவனக்குறைவு தானே காரணம்? சரியான அளவுதான் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு இருக்கிற்து என்பதற்கு என்ன ஆதாரம்?
அந்த வரிகளை அந்த படிவத்திலிருந்து நீக்குமாறு இவர் வாதாடியும் மருத்துவ மனை ஒத்துக்கொள்ளவில்லையாம்.
மறுபடியும் வேறொரு சமயம் இவர் தன் அம்மாவை வேறொரு மருத்துவ மனைக்குக்கூட்டி சென்றிருக்கிறார். சிறு நீரக செயல்பாட்டை கண்டுபிடிக்க யூரியா, இரத்தம் மற்றும் கிரியாட்டினின் என்ற சில பரிசோதனைகளைச் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். சிறுநீரக செயல்பாட்டை எல்லாவற்றையும் விட கிரியாட்டினின் தான் துல்லியமாகத் தெரிவிக்கும். எதற்கு மற்ற பரிசோதனைகள் அனாவசியமாக என்று இவர் கேள்வி கேட்டிருக்கிறார். பதில் கிடைக்காமல் போகவே புகார் எழுதிப்போட்டிருக்கிறார்.
இவர் மேலும் சொல்கிறார்....
'போலியோ சொட்டு மருந்து கொடுத்தால் போலியோ வராது என்று விளம்பரபப்டுத்துகிறார்கள். போலியோ மருந்து கொடுத்தாலும் போலியோ வரும். அதற்குப்பெயர் ' வாக்ஸின் ட்ரைவ்டு போலியோ! இதைப்பற்றி யாரும் சொல்வதில்லை.
எல்லா தடுப்பூசி மருந்துகளிலும் 'தியோமெர்சல்' என்கிற ஒரு ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்படுகிறது. அதன் விளைவால் ஆட்டிஸம் வருவதாக அமெரிக்காவில் அதை தடை செய்து விட்டார்கள். இந்தியாவிலோ அப்படி எந்தத் தடையும் இல்லை. '
இவரின் மருத்துவ நண்பரிடம் உடல் முழுக்க தடிப்புகளால் அவதியுற்றிந்த ஒரு குழந்தையை கொன்டு வந்து காண்பித்தார்களாம். இவர் நண்பர் அந்தக் குழந்தை குனமாவதற்கு நான்கு மாத்திரைகள், ஒரு ஊசி, ஒரு ஆயிண்மெண்ட், ஒரு சோப் என்று பரிந்துரைத்தாராம். மருத்துவர் சொல்கிறார், 'மருத்துவரான எனக்கு அந்தக்குழந்தையின் பிரச்சினைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் போதும் என்று தெரியும். மாத்திரையால் தான் குணமானது என்று தெரியாமல் அந்த சோப்பும் ஆயின்மெண்டும் காரணம் என்று நினைப்பார்கள், அது தான் வணிக தந்திரம்!'
இன்னொரு மருத்துவ நண்பர், அவருடைய பேஷண்டிடம் [ அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொன்டவர்] அவரின் உணவுக் குழாயில் எரிச்சல் என்ற பிரச்சினைக்கு டாக்டர் இஸிஜி செய்யச் சொன்னாராம். பொதுவாக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் தருவார்களாம். அதன் விளவு தான் அந்த எரிச்சல். அதற்கு சாதாரண மருந்து போதும். நண்பரிடம் அது பற்றிக்கேட்ட போது அவர் சொன்னாராம், நான் தனியார் மருத்துவ மனையில் வேலை பார்க்கிறேன் அவர்கள் அதிக செலவு செய்து இஸிஜி மெஷின் எல்லாம் வாங்கிப்போட்டிருக்கிறார்கள். நான் இஸிஜிக்கு எழுதிக்கொடுக்க வில்லையென்றால் என்னை வேலையை விட்டு தூக்கி விடுவார்கள்!'
மக்கள் எவ்வளவு பாவம் பாருங்கள்!!
' வைரஸ் காய்ச்சலுக்கு ஆண்டி பயாடிக் மருந்து தரக்கூடாது. ஆனால் இங்கே எல்லா விதக்காய்ச்சலுக்கும் அது தான் தரப்படுகிறது. மலிவான, சாதாரண மருந்திலேயே குணமாகக்கூடிய நோய்களுக்கு அதிக விலையுள்ள மருந்துகளும் அதிக செலவு உள்ள சிகிச்சைகளும் தரப்படும் கொடுமையும் இந்தியாவில் தான் நடக்கிறது.' என்று குமுறும் இவர் ' மருத்துவருக்கும் நோயாளிக்குமான இடைவெளி நிரப்பப்பட வேன்டும். மருத்துவத்தில் வணிக நலன் தூக்கி எறியப்பட்டு மக்கள் நலன் முதன்மையாக்கப்பட வேன்டும்., கேள்வி கேட்கும் அறிவை மக்கள் வளர்த்துக்கொள்ள வேன்டும், எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவர்கள் மனசாட்சிக்கு பயந்து நடக்க வேன்டும், மருத்துவப்படிப்பும் சட்டமும் சொல்கிற ' மருத்துவம் உயிரைக்காக்கும் பணி' என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.' என்றெல்லம் ஆணித்தரமாகக்கூறுகிறார்.