Wednesday, 24 July 2013

மீன் குழம்பு!!


அசைவத்தில் நிறைய பேருக்கு மிகவும் பிடித்தது மீன் குழம்பு தான். தஞ்சைப் பக்கத்தில் கடல் மீன் குழம்பில் போட மாட்டார்கள். குறவை, ஜிலேபி கெண்டை இப்படி பல வகைகள் இருந்தாலும் குளத்தில் பிடித்து சுத்தம் செய்த விரால் மீன் தான் தஞ்சை ஸ்பெஷல் மீன் குழம்பு!! அதுவும் கிராமங்களில் இரவு நேரம் தான் மீன் பிடித்து வருவார்கள். அந்த நேரம் அம்மியில் மிளகாய் அரைத்துப்போட்டு சுடச்சுட மீன் குழம்பு பல வீடுகளில் தயாராகிக்கொண்டிருக்கும். இப்போது விரால் மீன் கிலோ 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
 


புதுப்புளியைக்கரைத்து ஊற்றி மாங்காய்த்துண்டுகள், அதுவும் ஒட்டு மாங்காய்த்துண்டுகள் செங்காயாகப் போட்டு தயாரிக்கப்படும் மீன் குழம்பு அலாதி ருசியாக இருக்கும்! சிலர் தேங்காய் அரைத்துச் சேர்ப்பார்கள். அதுவும் தனிச்சுவையாக இருக்கும். மண் சட்டியில் தான் கிராமங்களில் மீன் குழம்பைத் தயாரிப்பார்கள். மீதமிருக்கும் குழம்பை மறு நாள் வைத்து சாப்பிடுவது அத்தனை ருசி என்பார்கள்!!
நான் இங்கு எழுதும் குறிப்பு தேங்காய் போடாதது!  

இனி சமையலறைக்குச் செல்லலாம்!

தேவையானவை:

மீன் துண்டுகள்-10
புளி- ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவு
மிளகாய்த்தூள்- 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தூள்- 1 ½ மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணெய்- கால் கப்+ 1 ஸ்பூன்
வெந்தயம்- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
மாங்காய்த்துண்டுகள்-5
நறுக்கிய சிறிய வெங்காயம்- 1 கப்
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப் 

செய்முறை: 

புளியை போதுமான நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைக்கவும்.
அதில் தூள்களைப்போட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்னையை ஊற்றி சூடாக்கவும்.
வெந்தயத்தைப்போட்டு அது பொரிய ஆரம்பித்ததும் வெங்காயத்தையும் கறிவேப்பிலையையும் போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளியை மஞ்சள் தூளுடன் சேர்த்துப் போட்டு அது நன்கு குழைந்து மேலே எண்ணெய் தெளியும் வரை வதக்கவும்.
இப்போது தூள்கள் கலந்த புளி நீரை ஊற்றி மாங்காய்த்துண்டுகள் சேர்த்து போதுமான உப்பும் போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு தண்ணீராகவும் இல்லாமல் கெட்டியாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.
மாங்காய்த் துண்டுகள் முக்கால் வாசி வெந்ததும் மீன் தூண்டுகள் சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.
மீன் வெந்ததும் குறைந்த தீயில் சில வினாடிகள் வைக்கவும்.
மீதமிருக்கும் 1 ஸ்பூன் எண்ணெயைப்பரவலாக ஊற்றவும்.

சுவையான மீன் குழம்பு தயார்!!

 

Monday, 15 July 2013

முத்துக்குவியல்-21!!!

பாதித்த முத்து:

மல்லிகை மகள் மாத இதழில் வந்த இந்த செய்தி என்னை பிரமிக்க வைத்ததுடன் மனதையும் மிகவும் பாதித்தது.

கேரளாவைச் சேர்ந்தவர் சுனிதா. 15 வயதில் குடிசைவாழ் குழந்தைகளுக்கு டியூஷன் எடுப்பதிலும் அங்குள்ள பெண்களுக்கு எழுத்தறிவு தருவதுமாக தன் இளம் பிராயத்தை மகிழ்வோடு கழித்தவர்.



அவரின் இந்த செயல் பிடிக்காமல் அந்தக் குடிசைவாழ் ஆண்கள் சிலரால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியவர். அதோடு நில்லாமல் அவர்களின் கடுமையான தாக்குதலுக்கும் இரையானதால் இப்போது கூட அவருக்கு வலது காது கேட்பதில்லை.இடது கையை வளைக்க முடியாது. இப்படி பாதிப்புக்கு ஆளான பெண்கள் பொதுவாய் மனதளவில் சித்திரவதைப்பட்டு நரக வேதனையடைவார்கள். இவர் மனதிலும் கோபம் பொங்கியெழுந்தது. ஆனால் மற்றவர்களைப்போல அல்ல. ‘ நான் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்? துனிச்சலாக வெளியே வந்தேன். தவறு செய்தவர்கள் தான் ஓடி ஒளிந்தார்கள்!’ என்கிறார் இவர்.

இந்த சம்பவத்திற்குப்பின் மேலும் இவர் சோஷியாலஜி, சைக்காலஜி படிப்புகளைத்தொடர்ந்து முடித்து டாக்டர் பட்டமும் பெற்றவர். அவரின் பெற்றோர்கள் ஹைதராபாத் நகரில் கால் ஊன்றியிருந்ததனால் அங்கேயிருந்து அவரின் புரட்சி ஆரம்பித்தது! ‘ அணையாத நெருப்பு’ என்ற அர்த்தம் கொண்ட ‘ பிராஜ்வாலா’ என்ற அமைப்பை பாலியல் தொழில் செய்யும் பெண்களின் புனர் வாழ்விற்காக நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் இதுவரை 8000 சிறுமிகளை மீட்டிருக்கிறார். 17 பள்ளிகளை இந்தப் பெண்களுக்காக இவர் நடத்தி வருகிறார். இவரின் கணவர் இவருக்கு உதவியாக கரம் கோர்த்திருக்கிறார்.

அவர் வேதனையுடன் சொல்வது.. ..

“ உலகிலேயே மிக அதிகமாகக் கடத்தப்படுவது பொன்னோ, போதைப்பொருளோ அல்ல. பெண்கள் தான் அதிகம் கடத்தப்படுகின்றார்கள். வயிற்றிலிருக்கும் பிள்ளையை ‘ பிறந்ததும் விற்று விடுகிறேன்’ என்று உத்தரவாதம் சொல்லி அட்வான்ஸ் வாங்கிக்கொள்ளும்ம் அளவு வறுமையிலிருக்கும் பெண்கள் இந்த தேசத்தில் வாழ்கிறார்கள். இரண்டு மூன்று வயதிலேயே பெண்கள் கடத்தப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த ஐந்து வயது குழந்தைகளை நானே மீட்டிருக்கிறேன். இந்தத் தொழில் செய்யும் உலகம் எவ்வளவு பரந்து பட்டது என்று தெரிந்தால் திகைத்துப்போவீர்கள். பெண்கள், தரகர்கள், குண்டர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று இந்த நெட்நொர்க் மிகவும் பெரியது!  நம் கண்ணுக்கு முன்னே ஏதாவது அநியாயம் ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால் மெளனமாக பார்த்துக்கொண்டிருக்காதீர்க்ள். மெளனமாக இருப்பவர்கள் அதை ஆதரிப்பவர்கள் என்று தான் அர்த்தம். பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஏதாவது செய்யுங்கள்!”

இவரைப்பற்றியும் இவரது சேவைகளைப்பற்றியும் அறிந்து கொள்ள:

http://www.prajwalaindia.com/founders.html

குறிப்பு முத்து:



வாழையிலையை சுருட்டிக்கட்டி படுக்க வைக்காமல் செங்குத்தாக நிறுத்தி வைத்தால் வாழை இலை பழுக்கவே பழுக்காது! 

சிரிக்க வைத்த முத்து:

இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டது:

முதலாம் மாணவன்:

எங்க வீட்டுத்தென்னை மரத்தில் ஏறிப்பார்த்தால் ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியிறாங்கடா!

இரண்டாம் மாணவன்:

மரத்து உச்சியிலிருந்து அப்படியே கையை விட்டு பாரேன். மெடிக்கல் காலேஜ்  பொண்ணுங்க எல்லாம் தெரிவாங்க!

மருத்துவ முத்து:



சதா மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

படங்கள் உதவி: கூகிள்

 

Monday, 8 July 2013

வலி!! -பகுதி-3!!

பகுதி-3!!
நல்ல, நிம்மதியான வாழ்க்கை முறைகள் மட்டுமே ஒரு மனிதனுக்கு உடலால் ஏற்படும் துன்பங்களை சமாளிக்கும் வல்லமையைத் தருகின்றது. அவற்றில் உடற்பயிற்சிகள், உணவுப்பழக்கங்கள், தினசரி பழக்க வழக்கங்கள், நல்ல உணர்வுகள் மட்டுமே முக்கிய அங்கம் வகிக்கின்றன.

தவறான உணவுப்பழக்கங்களே நோய்களுக்கு முழு முதல் காரணமாகி விடுகிறது.

நம் உணவுப்பழக்கத்தில் அனைத்து உணவும் சரிவிகிதமாக இருக்கும்படி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள் மற்றும் அதிக இனிப்பில்லாத பழங்கள் சேர்க்கப் பழக வேண்டும். உணவு குறைத்து உண்டு 40 நிமிடங்களுக்குப்பிறகு பழங்கள் உண்பது உடலுக்கு வேண்டிய் சத்துக்களைத் தரும். சாப்பிட்ட உடனேயே பழங்கள் அல்லது இனிப்புகளை உண்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் நாம் உண்ணும் உணவிலுள்ள அமிலங்கள் ஜீரணமாவதற்கு முன்பேயே பழங்களை உடனே உண்ணும்போது அதிலுள்ள சத்துக்கள் எல்லமே நீர்த்துப்போய் விஷமாக மாறி விடுகிறது.  
முதிர்ந்த வயதில் இருப்பவர்கள் குறைந்த அளவு கொழுப்புள்ள புரதம் நிறைந்த, மீன், பயறுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான அப்பளம், ஊறுகாய், சாஸ், கெட்சப் இவைகளை உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பொதுவாகவே உணவுப்பொருள்களில் உப்பைக் குறைத்து சாப்பிடுவது நல்லது. கல்லீரல் வீணாவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று துரித உணவு கடைகளுக்குச் சென்று கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுவது. இதை தவிர்க்க வேண்டும், முக்கியமாக இன்றைய தலலமுறைகள் துரித உணவுகளைத் தவிர்க்கவேண்டும். Palm oil, தேங்காய் எண்ணெய், நெய் இவற்றில் கரையாத, முழுமையான கொழுப்பு அதிக சதவிகிதத்தில் உள்ளதால் இவற்றை சமையலில் உபயோகிக்காமல் இருப்பது நல்லது
.
சாப்பிட்ட பின் எக்காரணம் கொண்டும் உடனேயே படுக்கக்கூடாது. உள்ளே சென்ற உணவு ஜீரணிக்காமலேயே பல தொந்தரவுகளைக் கொடுக்கும். உடல் உப்புவதும் தொந்தி விழுவதும் இந்தக் காரணங்களால் தான். இரண்டு மணி நேரம் அமர்ந்து புத்தகங்கள் படிப்பதையோ, எழுதுவதையோ செய்யலாம். இந்த சிறிய எளிதான பயிற்சி உணவை ஜீரணிக்க வழி செய்கிறது.

சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது நல்லதேயில்லை [ விக்கல் ஏற்பட்டாலொழிய!] நாம் உண்ணும் உணவு நீர்த்துப்போய் அதன் சக்திகள் விரயமாகின்றன. அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி என்னும்போழுது, யோகாசனங்கள் செய்வது மிகவும் நல்லது. நல்ல ஒரு ஆசிரியரிடம் கற்ற பின்னர் தான் செயல்படுத்த வேண்டும். முடியாதவர்கள் நடைப்பயிற்சியை தினமும் செய்யலாம்.

அப்புறம் பழக்க வழக்கங்கள்.  நம்மை சுத்தமாக வைத்துக்கொள்ளல், அவசரமின்றி நிதானமாக எந்த செயலையும் செய்வது, மற்றவர்களுக்கு கூடிய வரை உதவுவது, இன்முகத்துடன் பழகுவது-இதெல்லாம் நம்மை நாமே நிதானப்படுத்திக்கொள்ள உதவும். எதையுமே திட்டமிட்டுக்கொண்டு நேரம் முறையாக வகுத்துக்கொண்டு செயல்படுத்தும்போது, மேற்கூறிய பழக்க வழக்கங்களெல்லாமே சாத்தியமாகின்றன. புதிய நோயாக மருத்துவர்கள் சொல்லும் STRESS நம்மைப் பாதிக்காமல் இருக்கும்.

நோயென்று வரும்போது அலட்சியப்படுத்த வேண்டாம். சின்ன சின்ன வலிகளையும் பிணிகளையும் நாம் கை மருத்துவத்தாலேயே சரி செய்து கொள்ள முடியுமென்றாலும் வித்தியாசமான வலி எதையும் நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் நேரம் காலம் பார்க்காமல் சென்று விடுங்கள். முன்பே ஒரு புகழ் பெற்ற தொடரில் ஒரு மருத்துவர் எழுதியிருந்தார், ‘உங்களுக்கென்று ஒரு FAMILY DOCTOR-ஐ  வைத்துக்கொள்ளுங்கள். சிறு சிறு உடல நலக்குறைவுகளை அவரே சரி செய்து விடுவார். பிரச்சினை சற்று பெரியதாக இருந்தால் அவரே அதற்கான மருத்துவரிடம் செல்ல வழி நடத்துவார்.’ என்று!! இது ஒரு சிறந்த புத்திமதி! நானும் இதை கடைப்பிடித்து வருகிறேன்.

உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகள், துணைவருக்கு அறுவை சிகிச்சை அல்லது மோசமான உடல் நலக்குறைவு ஏற்கனவே ஏற்பட்டிருந்தால் அது சம்பந்தமான குறிப்புகள், முக்கியமான ஸ்கான் போன்றவைகளின் நகல்கள் இவை அடங்கிய ஃபைல் அவசரத்திற்கு உடனேயே எடுக்கும் இடத்தில் வைப்பது மிக நல்லது. முக்கியமான விபரங்களை கணினியில் அவ்வப்போது புதுப்பித்து பல நகல்களை எடுத்து என் மகனின் கார், எங்கள் கார், என் கைப்பைகள், ஊரிலும் என் கைப்பை இவற்றில் வைத்திருக்கிறேன். பிரச்சினை வரும்போது உடனேயே மருத்துவரிடம் காண்பிக்கவும் அவர் உடனடியாக முடிவெடுத்து வைத்தியம் ஆரம்பிக்கவும் இது வெகுவாக உதவும். பிரச்சினைகள் தீவிரமாக இருந்தால் நம் பதட்டத்தில் விபரங்களை முழுமையாகச் சொல்ல மறந்து விடுவோம். அப்போது இது கண் கண்ட மருந்தென உதவும். இந்தக்குறிப்பில் விபரங்களுடன் உங்கள் இரத்த க்ரூப் விபரம், விலாசம், தொலைபேசி எண்கள் பதிவது நல்லது. மருந்துகள் ஒவ்வாமை இருந்தால் அவற்றின் பெயர்களளயும் குறிப்பது மருத்துவர்களுக்கு மிக உதவும். இந்தியாவிலும் இங்கும் பல மருத்துவர்கள் இதற்காக என்னை பாராட்டியிருக்கிறார்கள்.

கடைசியாக நல்ல வார்த்தைகள். இதற்கு முன் எத்தனையோ அனுபவங்கள் இருந்தாலும் கடந்த அனுபவம் என்னை நிலை குலைய வைத்த நேரத்தில் முகமறியாத, முன் பின் பழகாத எத்தனையோ பேர் அந்த மருத்துவ மனையில் தானாக வந்து என் கைகளைப்பிடித்துக்கொண்டு ‘ குணமாக ஆரம்பித்து விட்டாரா உங்கள் கணவர்? கடவுள் தான் காப்பாற்றினார் ! ’ என்று சொல்லி மகிழ்ந்தார்கள்! பல அரேபியப் பெண்ண்மணிகள், பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்கள், தாதியர் என்று இப்படிச் சொன்னவர்களின் வார்த்தைகள், அவை தந்த இதம் உடம்பாலும் பணத்தாலும் செய்யும் உதவிகளை விடவும் மேலானது. மனதுக்கு நம்பிக்கையையும் நெகிழ்வையும் தரக்கூடிய வல்லமை படைத்தவை அவை. சில இந்தியப் பெண்கள் அடிக்கடி குணமடைந்து கொண்டிருக்கும் நோயாளிகள் நிரம்பிய வார்டிற்கு வந்து ஒவ்வொரு படுக்கையாக சென்று அவர்களின் நோய் பற்றி விசாரித்து, ‘ கவலைப்படாதீர்கள், குணமடைந்து விடுவார்கள்’ என்று சொல்லி, தட்டிக்கொடுத்துச் செல்கிறார்கள். அவர்களின் ஆறுதல் மொழிகள் மருந்துகளை விடவும் பலம் வய்ந்தவை. முன் பின் தெரியாத யார் யாரோ அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறி,
‘ என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள், செய்து தருகிறோம் அம்மா’ என்று கூறிய வார்த்தைகள் வலியால் துவண்டு போன மனதை மயிற்பீலி கொண்டு தடவிய இதத்தை அளித்தன!

இதற்கு கொஞ்சம் அக்கறையும் கொஞ்சம் கருணையும் மட்டும் தான் வேண்டும். யாராயிருந்தாலென்ன? வார்த்தைகளுக்கா பஞ்சம்? ஒத்தடம் கொடுப்பது போன்ற இனிய வார்த்தைகளைக்கூறவும், இதம் தரும் கருணையைக் காட்டவும் நம் எல்லோராலும் முடியும்தானே?