Monday, 29 October 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!-பகுதி-4!!


அடுத்த நாள் "டிட்லிஸ்" மலை உச்சிக்குப் பயணம். இந்த மலை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது. நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு கேபிள் கார்களில் பயணித்து மலை உச்சியை அடைய வேண்டும்.
மகனும் பேரனும் டிட்லிஸ் மலை அடிவாரத்தில்!! பின்னால் கேபிள் கார்கள் மிதந்து கொண்டிருக்கின்றன! 
 
முதல் கேபிள் காரிலும் இரண்டாவது கேபிள் காரிலும் நாங்கு பேர்கள் மட்டுமே ஏறலாம். நகர்ந்து கொண்டே இருக்கும் கேபிள் காரில் மின்னல் போல ஒரு விநாடியில் ஏறி அமர்வது தான் சிரமமாக இருந்தது.
கேபிள் கார்!
முதல் கேபிள் காரில் பயணம் செல்லும்போது இரு பக்கங்களிலும் பச்சைக் கம்பளம் விரித்தது போல பசுமை.
கேபிள் காரில் நானும் என் மகனும்!
மேலே ஏற ஏற, இரண்டாவது கேபிள் காரில் பயணித்த போது வெள்ளைப்பனியால் இரு பக்கங்களும் முழுவதுமாக மூடிய பனிப்பாறைகள், பனி மூடிய மரங்கள்!!
பனியால் மூடிய மலை!
சில நூறு கேபிள் கார்கள் அங்கும் இங்குமாக மிதந்து கொண்டு சென்றவாறே இருந்தன. அதில் உலக நாடுகள் அனைத்தின் கொடிகளும் பறந்தன. அதில் நம் இந்தியக் கொடியையும் பார்த்த போது மனதில் பெருமிதமும் மகிழ்வும் ஏற்பட்டது!!
போகும் வழியில் பனியால் மூடிய கட்டிடம்!
மூன்றாவது சற்று பெரிய கேபிள் கார் பயணம்! 30 பேர் அதில் பயணித்து இன்னும் மேலே ஏறினோம். நான்காவதாக நாங்கள் பயணித்த கேபிள் கார் 360 டிகிரி சுற்றும் வசதி கொண்டது. இது போன்ற வசதி உலகில் வேறெங்கும் இல்லை என்று வழிகாட்டி சொன்னார். பயணங்கள் முடிந்து டிட்லிஸ் மலை உச்சியில் இறங்கினோம்! டிட்லிஸ் கடல் மட்டத்திலிருந்து 3020 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மலைஉச்சியில் ஐஸ் மழையை குனிந்தவாறே சமாளிப்பது என் மருமகள்!
உணவு விடுதிகளும் ஸ்விட்சர்லாந்து நாட்டின் உடைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதியாக ஒரு ஃபோட்டோ ஸ்டூடியோவும் எல்லோரும் அமைதியாக அமர்ந்து ஓய்வெடுக்க ஒரு பெரிய கட்டிடமும், கட்டிடத்தி    ற்கு வெளியே போய் பனிக்கட்டிகளுடன் விளையாட பனி கொட்டிக்கொண்டேயிருக்கும் ஒரு திறந்த வெளியும் இருக்கின்றன! அங்கே நம்ம ஊர் நடிகர்கள் புகைப்படங்கள் இருப்பது ஆச்சரியமாக இருந்தன!
சில மணி நேரங்கள் கழித்து கீழே இறங்கி பேருந்தில் பயணித்து மீண்டும் மதியம் ஒரு இந்திய உனவு விடுதியில் வட இந்திய உணவு சாப்பிட்டு சில மணி நேரப்பயணங்கள் செய்து ஜெனீவா சென்றடைந்தோம்.
ஜெனீவா லேக்!
ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கும் ஜுரா மலைத்தொடருக்கும் இடையே அமைந்துள்ள ஜெனீவா ஸ்விட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய நகரம் என்பதோடு, உலகத்தின் அமைதித் தலைநகர் எனஅழைக்கப்படுவதும் இது மட்டுமே. Red Cross, United Nations இவற்றின் முக்கிய தளங்களாக விளங்குவது ஜெனீவா.  
உடைந்த நாற்காலி!
உடைந்த நாற்காலி
5.5 டன்கள் எடையுள்ள மரத்தால் செய்யப்பட்ட இந்த நாற்காலி 12 மீட்டர் உயரம் உடையது. போர்களாலும் அணுசக்தியாலும் வெடிகுண்டுகளாலும் பாதிக்கப்படும் வாழ்க்கை இது போலத்தான் இருக்கும் என்பதை நினைவூட்ட ஜெனீவா நகரின் நாற்சந்தியில் இது வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் மட்டும் பயணம் செய்ய புதுமையான ஆட்டோ!
தொடர் மழைத்தூறலினால் சில முக்கிய இடங்கள் தவிர்க்கப்பட்டு, இரவு ஒரு நல்ல ஹோட்டலில் தங்கிய பிறகு, மறு நாள் கிளம்பி பாரிஸ் சென்றடைந்தோம்.    

Monday, 22 October 2012

டெங்கு காய்ச்சல்!!

ஸ்விட்சர்லாந்து பயணத்தின் நடுவே சிறிய இடைச்செருகல்! சில முக்கியமான மருத்துவ விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்த சிறு இடைவெளி! பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, இதைப்படிக்கும் பார்வையாளர்களுக்கும் இந்த செய்திகள் உதவியாக இருக்க வேண்டும் என்பது தான் இதை எழுதுவதன் தலையாய நோக்கம்! தஞ்சையிலிருந்து தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
சமீபத்திய தஞ்சைப்பயணம் இடையறாத மின்வெட்டிற்கிடையே பற்பல சோதனைகளைக் கொடுத்தது. எங்கும் பரவிக்கொண்டிருக்கும் ‘டெங்கு காய்ச்சல்’ பலருக்கும் பரவி அச்சத்தையும் உடல் வேதனையையும் கொடுக்கத்தவறவில்லை. இந்த காய்ச்சல் தஞ்சை, நாகை, மதுரை, மாவட்டங்களில் அதிகம். இரத்தப் பரிசோதனைக்கூடங்கள் மிகவும் பிஸியாக இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ரத்தப் பரிசோதனைக்கூடத்திலும் ஒவ்வொரு அளவு! [அந்த வேதனையை தனிப்பதிவாகத்தான் எழுத வேண்டும்!] என் தங்கையின் கணவருக்கு இந்த டெங்கு காய்ச்சல் பாதித்து அவரை படுக்கையில் தள்ளிய போது தான் இந்த நோயைப்பற்றிய சில தகவல்கள் கிடைத்தன.



சுத்தமான நீர் தேங்கிக் கிடக்கையில் கொசுப்புழுக்கள் அதில் உற்பத்தியாகி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அந்தக் கொசு கடித்தாலோ அல்லது ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபரைக் கடித்து பின் வேறு ஒரு நபரைக் கடித்தாலோ, ஆர்த்ரோபோட் என்கிற வைரஸ் கிருமி உடம்பில் நுழைந்து உடம்பெல்லாம் ஒரிரு நாட்களில் பரவி, அவருக்கு டெங்கு காய்ச்சல் உண்டாகிறது. கடுமையான காய்ச்சல், கண்களில் வலி, தலை வலி, எலும்பில் வலி, வாந்தி என்று பாடாய் படுத்துகிறது. ரத்தத்தில் அணுக்கள் குறையக் குறைய மூக்கு, சிறுநீர்ப்பாதை, பற்கள், என் உறுப்புக்களில் ரத்தக்கசிவு உண்டாகி, மூளை செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு என்று கடைசியில் பாதிப்பு ஏற்பட்டு மரணம் உண்டாகிறது. இதைக் குணப்படுத்துவதற்கான தனிப்பட்ட மருந்துகள் இல்லையென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். என் தங்கையின் கணவருக்கு எந்த வித அறிகுறியும் இல்லாமல் அனல் போல திடீரென்று காய்ச்சல் ஏறியது. மருத்துவர் உடனேயே அவரை இரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார். பொதுவாய் இரத்தத்திலுள்ள ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை ஒவ்வொருத்தருக்கும் ஒன்றரை லட்சத்திலிருந்து 4 லட்சம் வரை இருக்க வேண்டுமாம். டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக அதிகமாக ப்ளேட்லெட் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது. மிகவும் குறைந்து விட்டால் மூளையில் பாதிப்பு, உயிருக்கு ஆபத்து என்பதெல்லாம் நிகழ்ந்து விடும். என் தங்கை கணவருக்கு ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு வந்ததும் அவரை மருத்துவ மனையில் அட்மிட் ஆகச் சொல்லி விட்டார்கள். 80 வரை அவருக்கு இறங்க ஆரம்பித்தபோது, அவருக்கு ஊசிகளும் ஏற்றி சலைன் ஏற்றி பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். 50ற்கும் கீழ் இறங்கினால் புது இரத்தம் செலுத்துவது மட்டுமே உயிருக்கு பாதுகாப்பானது என்று சொல்லியிருந்தார்கள். நல்ல வேளையாக அந்த நிலைக்குச் செல்லாமலேயே, அவருடைய ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக ஏற ஆரம்பித்து ஒன்றரை லட்சத்துக்கு அருகில் வந்ததும் அவரை டிஸ்சார்ஜ் செய்தார்கள். இடையே என் மகனும் மருமகளும் கூகிளில் ஆராய்ந்து பப்பாளி இலைச்சாறு டெங்கு காய்ச்சலை குணமாக்குகிறது என்று எழுதப்பட்டிருப்பதாக எங்களிடம் சொன்னார்கள். நாங்களும் அதை உடனேயே சொல்லச் சென்றால் அங்கு எல்லோருமே பப்பாளி இலைச்சாறை குடித்துக்கொண்டிருப்பதைப்பார்த்ததும் ஆச்சரியமாகப் போய் விட்டது.

வெறும் வயிற்றில் ஒரு பப்பாளி இலையை அரைத்து அந்த சாறை மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். 2 அல்லது 3 ஸ்பூன் சாறு கிடைக்கும். காலையும் மாலையும் இப்படி குடித்து வரவேண்டும். இது டெங்கு காய்ச்சலை குணமாக்குகிறது.

இது தவிர பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் அதிகம் அலையாமல் இருப்பது டெங்குக் காய்ச்சலில் விழாமல் தப்பிக்க உதவும். காய்ச்சிய தண்ணீர் அதிகம் குடிப்பதும் பழங்கள் அதிகம் உண்பதும் அயர்ச்சியாக இருக்கும் உடம்பிற்கு தெம்பை ஏற்படுத்தும்! டெங்கு காய்ச்சல் குணமானதும் உடம்பு முழுவதும் களைப்பாக இருக்கும். அந்த நேரத்தில் அதிகம் நடமாடுவதே ஆபத்தாய் முடியும். பொதுவாய் இதன் பாதிப்புகளிலிருந்து மீண்டவர்களுக்கு இரத்த அழுத்தப்பரிசோதனையை அடிக்கடி செய்து மானிட்டர் பண்ணிக்கொண்டிருக்க வேண்டும். குறைவான இரத்த அழுத்தம் திடீரென்று பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

அனைவரும் இந்த மாதிரி மரண வேதனை தரும் அனுபவங்களை கொஞ்சம் கூட அனுபவிக்கக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்!!!

Tuesday, 16 October 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!-பகுதி-3

மறு நாள் எங்கள் ஹோட்டலில் காலை உணவை முடித்த பிறகு, இண்டர்லாக்கன் என்ற நகர் வழியாக ஜுங்ஃப்ரா என்ற மலையின் உச்சியிலுள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணத்தை ஆரம்பித்தோம்.


எங்கள் ஹோட்டல் அறையின் ஜன்னலிலிருந்து
பொதுவாகவே ஸ்விட்சர்லாந்து நாட்டில் கடல் மட்டத்திற்கு 13000 அடிக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குன்றுகள் இருக்கின்றன. பெரும்பாலான மலைகளில் கேபிள் கார்கள், ரயில்கள் வசதிகள் இருக்கின்றன. பனிச்சறுக்குதல், மலை ஏறுதல் பொதுவாக எல்லா மலைகளிலும் எப்போதுமே வெளிநாட்டுப் பயணிகளால் புகழ் பெற்றிருக்கின்றன.





ஹோட்டலின் உள்ளே பார்த்து ரசித்த, பிரமித்த சில ஓவியங்கள்!


இண்டர்லாக்கன் [INTERLAKEN ] நகரம் அழகிய ஏரிகளாலும் ஓடைகளாலும் நீர்வீழ்ச்சிகளாலும் சிறு மலைகளாலும் சூழப்பெற்றது. கவிஞர்களாலும் ஓவியர்களாலும் பாடகர்களாலும் அலங்கரிக்கப்பட்டது இந்த மலைப்பிரதேசம்!


இண்டர்லாகன் நகரை நெருங்கும்போது


குட்டி குட்டி கடைகள் அங்கங்கே ஷாப்பிங் செய்ய இருக்கின்றன. அதனருகே உள்ளது ஐரோப்பாவின் புகழ்பெற்ற மலை ஜுங்ஃப்ரா.[ JUNGFRAU]. கடல் மட்டத்திலிருந்து 3454 மீட்டர் [13647 அடி] உயரமான இந்த மலை Valais, Bern என்ற இரு நகரங்களுக்கிடையே ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கம்பீரமாக நிற்கிறது. இது ஐரோப்பாவின் சிகரம் என்றழைக்கப்படுகிறது. இந்த மலை உச்சியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் ஐரோப்பாவின் மிக உயர்ந்த ரயில்வே ஸ்டேஷனாகும். இரண்டு பகுதிகளாக இதற்கு பயணம் வகுக்கப்பட்டிருக்கிறது.

ஜுங்ஃப்ராவிற்கு முதல் கட்ட ரயில் பயணத்தின்போது எழில் கொஞ்சும் பசுமை!

முதல் பகுதி பனி படர்ந்த புல்வெளி, பின் பசுமையான குன்றுகளிடையே பயணிக்கிறது. பின் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அடுத்த ரயிலில் பயணிக்க வேண்டும். இது முழுவதுமாக பனி மூடிய சிகரங்களிடையே உச்சிக்குச் செல்கிறது.

ஜுங்ஃப்ராவிற்கு இரண்டாம் கட்ட ரயில் பயணத்தின்போது பனி படர்ந்த மலைகள்!

அதிசய வைக்கும் ஐஸ் குகை!



ஐஸ் குகையில் அழகிய ஐஸ் சிற்பம் அருகே என் மகனுடன் என் கணவரும் பேரனும்!!
மலை உச்சியில் இறங்கியதும் ஐரோப்பாவிலேயே உயரமான ரயில்வே ஸ்டேஷன் ஒரு நான்கு மாடி கட்டிடமாக நம்மை வரவேற்கிறது. சிறிய உணவகம், காப்பி, தேனீருக்கென தனி ஸ்டால், அதன் பின்னர் சிறு சிறு கடைகள், தொடர்ந்து ஜுங்ஃப்ரா நிர்மாணம் ஆன விபரங்கள், ஐஸ் குகை, ஐஸ் சிலைகள் என்று ஒரு தனி வழிப்பாதைப்பயணம் என்று அசத்துகிறது!

தொடரும்.. ..!!

Monday, 1 October 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!


பகுதி-2
இன்னொரு மிகப் பெரிய ஆச்சரியமான விஷயம் எங்குமே உயரமான, தகதகக்கும் கட்டிடங்களை ஜுரிக்கில் நான் பார்க்க இயலவில்லை. எங்குமே பழைய கட்டிடங்கள் தான். வீடுகள் எல்லாம் மரங்கள், கொடிகள் சூழ அமைந்திருக்கின்றன! பால்கனிகள் தோறும் தொட்டிகளில் வித விதமான மலர்ச்செடிகளை வளர்க்கிறார்கள்!!
மரங்களுடன் வீடு

சற்று மங்கலான வெளிச்சத்தில் ஜூரிக் ஏரி
மறு நாள் ஒரு டூர் பஸ்ஸில் ஜுரிக் சுற்றிப்பார்த்தோம். ஜூரிக் ஏரி மிக அழகு. அடிக்கடி பனியால் உறைந்து போகும் இந்த ஏரி கடைசியாக பனியாய் உறைந்து போனது 1963-ல்!! 3 கிலோ மீட்டர் அகலமும் 49 கிலோ மீட்டர் நீலமும் கொண்டது இந்த அழகிய ஏரி. இதைச் சுற்றி பல இடங்கள் பொதுமக்கள் நீந்துவதற்காக உள்ளன. 

கணவரும் மகனும் மருமகளும் பேரனுடன். இந்த இடத்தில் தான் உலகின் அத்தனை செல்வங்களும் பூமிக்கடியில் கொட்டிக்கிடக்கிறதாம்!
ஜூரிக் ஏரியின் இன்னொரு தோற்றம்!
ஜூரிக் நகரின் ரயில்வே ஸ்டேஷன்!!
 குழந்தைக்காக zoo சென்றோம். குழந்தையின் உடல் நலம் சரியில்லாததால் சுற்றிப்பார்ப்பதை அதன் பிறகு தள்ளிப்போட்டு விட்டு மறு நாள் பிரயாணத்திற்கான ஆயத்தங்களை செய்ய ஆரபித்தோம்.
மறு நாள் டிராவல் கம்பெனியின் மூலம் சக பிரயாணிகள் விமான நிலையத்தை வந்தடைய, அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு குளு குளு மிதவை பஸ்ஸில் ஸ்விட்சர்லாந்தின் மிக முக்கியமான நகரமான லுசெர்ன் [Lucerne]என்னும் மலையடிவார நோக்கி பிரயாணம் செய்ய ஆரம்பித்தோம். இந்த நகரைச் சுற்றிப்பார்த்து விட்டு, shopping செய்து விட்டு, இரவு மலையடிவாரத்திலுள்ள எங்கெல்பெர்க்[ Engel berg ] என்ற சிறு நகரை அடைந்து அங்குள்ள ஹோட்டலில் தங்குவதாகத் திட்டம்.
ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஆரம்பமாகிறது ..!!
 வழி நெடுக மரத்தினாலான பெரிய,பெரிய வீடுகள். அப்பார்ட்மெண்ட் போல பல குடியிருப்பு வசதிகள் கொண்ட , ரொம்பவும் சாதாரணத்தோற்றத்துடன் பல மாடி வீடுகள். பச்சைப்பட்டை விரித்தாற்போல  தென்பட்ட சமவெளி கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்க, உலகப்புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கள் கூடவே பயணிக்க ஆரம்பித்தது. 
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் இன்னொரு முகம்!!
ஆல்ப்ஸ் மலையின் பிரமாண்டமும் அழகும் கம்பீரமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவாறு நம்மை ஆட்கொள்ள ஆரம்பித்தது!! அதன் பசுமையும் அமைதியும் தூய்மையும் இதற்கு முன் பல கவிஞர்கள் எழுதிய பாடல்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தன!!
தொடரும்...!!!