Saturday, 22 September 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!


பகுதி-1:
என் மகன் ரொம்ப நாளாகவே எங்கள் எல்லோரையும் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு அழைத்துச் சென்று சுற்றிக்காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். என் கணவருக்குத்தான் அதற்கான நேரத்தை அத்தனை சீக்கிரம் ஒதுக்க முடியவில்லை. ஒருவழியாக ஆகஸ்ட் இறுதியில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றிப்பார்க்க கிளம்பலாமென முடிவு செய்தோம். அப்படியே பிரான்ஸ் நாட்டிலும் 2 நாட்கள் சுற்றிப்பார்க்கத் திட்டம் போட்டுக் கிளம்பினோம். ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்கள், பனிக்குல்லாய்கள், கையுறைகள், காலுறைகள், காலணிகள் எல்லாம் சேகரித்துக்கொண்டு கிளம்பினோம்.
என் மகன் ஸ்விட்சர்லாந்தில் தான் பட்டப்படிப்பும் பட்ட மேற்படிப்பும் முடித்ததாலும் பிரஞ்சு மொழி கற்றிருப்பதாலும் முதலில் தனியாகவே பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைத்தோம். ஆனால் Cox and kings, Make my trip, SOTC போன்ற நல்ல டிராவல் கம்பெனிகள் மூலம்  கிளம்பினால் நிச்சயம் அவர்களே ஒரு வேளையாவது இந்திய உணவிற்கு வழி செய்து விடுவார்கள் என்பதால் எம் மகன் Make my trip மூலம் இந்த சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். இருப்பினும் முதலில் நாங்கள் ஸ்விட்சர்லாந்தின் முக்கிய நகரமான ஜூரிக் [ ZURICH ] சென்று இரு நாட்கள் சுற்றிப்பார்த்து விட்டு, அதன் பிறகு டிராவல் கம்பெனி வகுத்திருக்கும் சுற்றுப்பயணத்திட்டத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணினோம். அதனால் துபாயிலிருந்து நேரடியாக ஆகஸ்ட் மாதம் 28ந்தேதி மதியம் ஜுரிக் சென்றடைந்தோம்.
ஸ்விட்சர்லாந்து நாட்டைப்பற்றி சில வரிகள்..
ஸ்விட்சர்லாந்து நாடு மேற்கே பிரான்ஸ், கிழக்கே ஆஸ்திரியா, வடக்கே ஜெர்மனி, தெற்கே இத்தாலி நாடுகளை எல்லைகளாய்க் கொண்ட ஒரு சிறிய ஐரோப்பிய நாடு.
இந்த் நாட்டில் CANTONS என்றழைக்கப்படும் 26 மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் நம் இந்தியா போலவே தனி கோர்ட், தனிக்கொடி, தனி தலைநகரம், என்று அதிகாரங்கள் எல்லாமுமே தனிப்பட்ட முறையில் உள்ளன. இந்தக்கூட்டமைப்பின் அதிகாரத் தலைமையிடம் பெர்ன் நகரமாக இருந்தாலும் வர்த்தகத் தலைமையிடங்களாக ஜூரிக், ஜெனிவா நகரங்கள் இருக்கின்றன. இந்த நாட்டிற்கென்று தனியான மொழி எதுவும் இல்லை. ஜெர்மனி நாடு அருகே இருக்கும் பகுதிகள் ஜெர்ம்ன் மொழியைப் பேசுகின்றன. இத்தாலி அருகே இருப்பவையின் பேச்சு வழக்கு இத்தாலியாக உள்ளது. பிரான்ஸ் அருகே இருக்கும் ஜெனீவாவில் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் அதிகம்.
பூகோள ரீதிப்படி, இந்த நாடு 60 சதவிகிதம் ஆல்ப்ஸ் மலைத்தொடர், 30 சதவிகிதம் சமவெளி, 10 சதவிகிதம் ஜுரா மலைத்தொடர்கள் என்று அமைந்திருக்கிறது. மலையிலிருந்து அருவிகள் பல ஆறுகளாய் ஏரிகளில் வந்து கொட்டுவதால் நிறைய இடங்களில் ஏரி நீரை அப்படியே குடிக்கலாம், அத்தனை சுத்தமானது என்கிறார்கள்.
விமான நிலையத்தில் உள்ளே நுழைந்ததும் அதி வேக ரயிலில் ஏறி வேறொரு பகுதிக்கு வந்து தான் நம் பாஸ்போர்ட்கள் பரிசீலிக்கப்பட்டு, நாம் வெளியே வர முடிகிறது.

குழந்தைகள் அமரும் பெரிய வண்டி
விமான நிலையத்திற்கு வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கு நிலவிய அமைதியும் எளிமையும் ஆச்சரியத்தைத் தந்தது. ஸ்விட்சர்லாந்தின் மிக நீளமான, பெரிய விமான நிலையம் என்பதற்கான சுவடே இல்லை. ஒரு நிமிடம் துபாய் விமான நிலையம் ஞாபகத்துக்கு வந்தது. ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் அலங்கார விளக்குகளும் அலை மோதும் கூட்டமுமாய் எந்நேரமும் தகதகக்கும் துபாய் விமான நிலையம்!!

சாலைகள் எங்கும் இடையே செல்லும் டிராம் வண்டிகள்
விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததுமே முதல் பிரச்சினை ஆரம்பமாகியது. குழந்தை இருப்பதால் எந்த டாக்ஸியும் எங்களை ஏற்ற மறுத்தது. குழந்தையை ஏற்றுவதற்கென்றே, அதற்காக தனி ஸீட் பொருத்தப்பட்டு பெரிய கார்கள் இருக்கின்றன. அதில் தான் செல்ல வேண்டும் மீறி ஏற்றிச் செல்வது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் என்றும் உடனடியாக அபராதம் கட்ட வேண்டும் என்றும் சொன்னார்கள். ஒரு வழியாக க்யூவில் நின்று வரிசைப்படி மிகப்பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு பெரிய காரில் ஏறி எங்களுக்காக ரிஸர்வ் செய்திருந்த ஹோட்டலைச் சென்றடைந்தோம்.
அடுத்த ஆச்சரியம் எங்களுக்காக அங்கே காத்திருந்தது. பொதுவாக உலகெங்கும் உள்ல நட்சத்திர ஹோட்டல்களில் நாம் ரிசப்ஷனில் அனைத்து formalities ஐயும் முடித்த பின் நம் சாமான்களை அங்குள்ள ட்ராலியில் வைத்து bell boy அல்லது concierge நம் அறைக்குத் தள்ளி வருவார்கள். ஆனால் இங்கே ஸ்விட்சர்லாந்து ஹோட்டலில் நம் பெட்டிகளை நாமே தான் நம் அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது பெரும்பாலும் எல்லா ஹோட்டலிலும் அமுலுக்கு இருந்தது. இது மட்டுமல்ல, நிறைய ஒழுங்கு முறைகள், எளிமை, உழைப்பு எல்லாமே இங்கு காணக்கிடைக்கின்றன! சைக்கிளில் எல்லா இடங்களுக்கும் பரவலாக இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் செல்கிறார்கள்.

அம்மாவும் பிள்ளையுமாய் சைக்கிளில்!!
எல்லா இடங்களுக்கும் எளிதாகப் போய் வர ட்ராம் இருக்கின்றன. மற்றபடி எல்லாமே சிறிய கார்கள் தான்.

பூச்செடிகள் நிரம்பியிருக்கும் பால்கனிகள்
காரில் பயணம் செய்கையில் எல்லாம் வயதானவர்கள் தங்கள் வீட்டை ஒட்டடை அடிப்பது, பெயிண்ட் அடிப்பது முதலிய வேலைகளைச் செய்வதைப்பார்த்தேன்.

தொடரும்.. .. .

Sunday, 16 September 2012

அசத்திய குறும்படங்கள்!!


வேகமாய் தினமும் பறந்து செல்லும் இயந்திர நிமிடங்களுக்கிடையே, சில நல்ல ரசனைகள், சில நல்ல விஷயங்கள், சில அன்பான உள்ளங்கள், சில நல்ல செயல்கள் தான் நம்மை இந்த இயந்திரத்தன்மை அப்படியே இயந்திரமாக்காமல் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
நல்ல ரசனைகள் என்பதில் ஜீவனுள்ள திரைப்படங்கள், நம்மையே மெய்மறக்கச் செய்யும் விதமாக அமைந்த இசை, படித்து முடித்த பிறகும் வேறெங்கும் நம்மை நகர விடாமல் ஓரிரு நிமிடங்கள் நிக்ழ்காலத்தினின்றும் வேறுபடுத்தி அப்படியே அடித்துப்போடும் புதினங்கள்- இவை எல்லாமே அடக்கம். அந்த வரிசையில் சென்ற வாரம் நான் பார்த்த சில குறும்படங்களும் சேர்ந்து விட்டன!
கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ‘ நாளைய இயக்குனர்’ என்ற நிகழ்ச்சி சில வருடங்களாகவே ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. திறமையான இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும், தேடிக்கண்டு பிடிக்கும் நிகழ்ச்சி தான் இது. பிரபலமான இயக்குனர்கள் நடுவர்களாக அமர்ந்திருக்க, ஒவ்வொரு வாரமும் அன்றைய சிறந்த குறும்படங்கள் தேர்வாகி, திறமையான இயக்குனர் அறிவிக்கப்படுவார் வெற்றி பெற்றவராக! நாளாக நாளாக, எண்ணிக்கைகள் வடிகட்டப்பட்டு, குறுகி, சிறந்த குறும்படங்கள் ஃபைனலுக்கு தேர்வாகும். பிறகு மெகா ஃபைனல். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 2 லட்சம், ஒன்றரை லட்சம், ஒரு லட்சம் என்று பரிசுத்தொகைகள் பிரபலங்களால் தரப்படுகின்றன.
நான் எப்போதும் இந்த நிகழ்ச்சியை கவனித்ததில்லை என்பதை விட, இந்த நிகழ்ச்சிக்கு அத்தனை முக்கியத்துவம் தந்ததில்லை என்பதுதான் உண்மை. கால அவசரங்களால் வேறு ஏதேனும் வேலைகளை கவனிக்கவே சரியாக இருக்கும். யதேச்சையாக, இந்த நிகச்சியின் மெகா ஃபைனலுக்கு வந்த ஒரு குறும்படத்தைப் பார்க்க நேர்ந்தது. மிக நுணுக்கமான உணர்வுகளைப் பிரதிபலித்த அந்தக் குறும்படம் என்னை அப்படியே அசத்தி விட்டது. பொறுத்திருந்து அஹனால் காத்திருந்து அதற்கடுத்த வாரமும் மற்ற இரு குறும்படங்களையும் பார்த்து முடித்தேன். இளைஞர்களின் திறமை, கற்பனாசக்தி, அதை விஷுவலாக, நுணுக்கமான கலையழகுடனும் பல வித மன உணர்வுகளுடனும் கொண்டு வந்து நம்மை அசத்தும் விதமாய் நிதர்சன வாழ்க்கையைப் பிரதிபலித்த புத்திசாலித்தனம்- நான் நிறைய வாரங்களை, ஏன் வருடங்களைக்கூட சில நல்ல ரசனையான விஷயங்களை ரசிப்பதில் தவற விட்டு விட்டேன் என்பதை உணர்ந்தேன்!!
முதல் குறும்படம்:
தலைப்பு:
புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்.
வயதான் தாய். இரண்டு மகன்கள். மூத்த மகன் மேடை தோறும் ‘ ஒரு நல்ல குடும்பம் எப்படி இருக்க வேண்டும்’ என்பதைப் பேசிப் பேசி கைத்தட்டல்கள் எப்போதும் வாங்குபவர். புகழ் பெற்றவர். இந்த நிலையில் அவரின் தந்தை இறந்த ஒரு மாதத்தில் தாய்க்கு உடல் நலம் சரியில்லாததற்காக மருத்துவரிடம் செல்லும்போது, அவரின் தாய் மூன்று மாத கர்ப்பிணி என்பதையும் அதை அகற்றுவது கூட உயிருக்கே தீங்கு விளைவிக்கும் என்பதையும் அறிய நேரிடும்போது அவர் துடித்துப்போகிறார். மேடையில் பேசும் வசனங்கள் மறந்து போகின்றன. தகப்பனின் புகைப்படத்தை வீசி எறிகிறார். கூனிக்குறுகி, வெட்கி நிற்கும் தாயை தீக்கங்குகளாய் வார்த்தைகளைக் கொட்டி இன்னும் கண்ணீருடன் கூனிக்குறுக வைக்கிறார். தாயைத் தனியறையில் வைத்து வெளியே தாழ்ப்பாள் போடுகிறார். யாராவது வீட்டு வாசல் கதவைத் தட்டினால் அந்த அம்மாவே அறைக்குள் போய் கண்ணீருடன் ஒளிந்து கொள்கிறார். இருந்தாலும் மனைவியிடம் பேசும்போது கொஞ்சம் மனசாட்சி எட்டிப்பார்க்கிறது.
‘ என் அம்மா பாவம்டி!. கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தது ’ என்கிறார். மனைவியோ இகழ்வாக மேலும் பேசி, வெளியூரிலிருந்து மாப்பிள்ளை சில நாட்களில் வீட்டுக்கு வந்தால் மிகவும் கேவலம் என்று சொல்லி அந்த அம்மாவை எங்காவது கொண்டு விட்டு வரச் சொல்லுகிறாள். இவரும் காரில் அம்மாவை வைத்துக்கொண்டே, அனாதை ஆசிரமங்கள், தொண்டு நிறுவனங்கள் என்றெல்லாம் சென்று, மகன் என்றும் தூரத்து உறவு என்று சொல்லிச் சொல்லி தாய்க்கு ஒரு இடம் கேட்டும் அன்று முழுவதும் இடம் கிடைக்காமல் சோர்ந்து போகிறார். இறுதியில் ஊரின் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றுக்குச் சென்று, அம்மாவிடம் ‘ பாத்ரூம் போவதானால் போய் வா அம்மா’ என்கிறார். அம்மா அழுதவாறே ‘ ஏண்டா, நான் போனதும் என்னை அப்படியே விட்டு விட்டு போவதற்காகத்தானே இப்படி சொல்லுகிறாய்? ‘ என்று கேட்டு உடைந்து அழுகிறார். ‘ ‘என்னை விட்டு விட்டு போய் விடு’ என்று அழுகிறார். மகனும் அழுது கொண்டே ஒரு பையை எடுத்து கட்டு கட்டாய் பணம் அதன் மேல் வைத்து விட்டு காரை எடுத்துச் செல்லுகிறார்.
இடையில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து, குழந்தையில்லாத ஒரு தாய்க்குப் பரிசாக கொடுத்து விட்டு அம்மா மறைகிறார் என்பதை விஷுவலாக காண்பிக்காமல் இறுதிக்காட்சியில் மறைமுகமாய் காண்பிக்கிறார் இயக்குனர்.
பல வருடங்கள் கழித்து அந்த மகன் வழக்கம்போல கைத்தட்டல்களுடன் ஒரு மேடையில் பேசுகிறார்.
“ கடவுள் எங்கே, கடவுள் எங்கே என்று மனிதன் எதற்குத் தேடுகிறான்? ஒவ்வொருத்தன் வீட்டிலேயே இரண்டு தெய்வங்கள் குடியிருக்கின்றன. ஒன்று அவனைப்பெற்றெடுத்த அவன் அம்மா. இரண்டாவது, அவனே பெற்றெடுத்த அவனின் குழந்தை! “ என்கிறார். கைத்தட்டல் காதைப் பிளக்கிறது. கூட்டம் முடிந்து கிளம்பும்போது, ஒரு இளம் பெண் ஓடி வந்து, தன் குழந்தை அவருக்குப் பரிசு கொடுக்க விரும்புவதாகச் சொல்லுகிறாள்.
அவர் அந்தக் குழந்தையின் உயரத்துக்கு அமர்ந்து ‘ என்ன கிஃப்ட் அது? கொடும்மா! என்கிறார். அந்தக் குழந்தை மெதுவாய் அவர் பல வருடங்களுக்கு முன் அவர் தன் தாயிடம் கொடுத்த அதே பையையும் பணக்கட்டையும் அவரின் கரங்களில் வைக்கிறது.
திகைத்துப்போய் அவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே விழியோரங்களில் கசியும் கண்ணீரைத் துடைத்தவாறே அந்தக் குழந்தை திரும்பச் செல்கிறது.. .. ..
அந்த அவலமான தாய்க்கு, தனக்குப்பிறந்த குழந்தையை, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடியாதவளிடம் கொடுக்க முடிகிற காருண்யம் இருக்கிறது. மேடையில் அன்பைப்பற்றி பேசும் புலமை இருக்கிற மனிதனுக்கு, தன்னைப் பெற்ற தாயிடம் பொழிவதற்கு மனசில் அந்த கருணை மழை இல்லை!! 
இரண்டாவது குறும்படம்:
தலைப்பு:
 ‘ ஆ’
கிராமத்து நாவிதர் அவர். தன் மகன் ஆங்கிலப்பள்ளியில் படிக்க வேண்டும், அவன் பேசுகிற ஆங்கிலத்தில் கிராமமே அசந்து போக வேண்டும் என்று கனவு காணுபவர். கொஞ்சம் பணத்தைத் தேத்திக்கொண்டு, சென்னையில் நல்ல ஆங்கிலத்தைக் கற்பிக்கும் பள்ளி எது என்று விசாரித்துக்கொண்டு மகனை சென்னைக்கு அழைத்துச் செல்லுகிறார்.
போகிற வழியில் மகனிடம் பேசிக்கொண்டே செல்கிறார்.
“ தம்பி, நீ நல்லா இங்கிலீஷ் படிச்சா சாமி உனக்கு எல்லாம் நல்லதே செய்யும்!"
மகன்: ‘ ஏம்பா, சாமிக்கு தமிழ் தெரியாதாப்பா?’
சென்னையில் ரயில்வே ஸ்டேஷனில் படிகளில் ஏறி நடக்கும்போது, தாடியும் மீசையும் பரட்டைத்தலையுமான ஒரு பிச்சைக்காரன் அந்த வழியே நடப்பவர்களிடம் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பான். ஒருத்தன் காலி தண்ணீர் பாட்டிலை அவன் பக்கத்தில் போட்டு விட்டு போனதும் அதில் தண்ணீர் இல்லையென்று கண்டு பிச்சைக்காரன் நொந்து புலம்புவான். இதைப்பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுவன், தன் அப்பாவிடம் ஐஸ்கிரீம் கேட்பான். அப்பா ரொம்பவும் யோசித்து, கையில் இருக்கிற காசை எல்லாம் கணக்கு பார்த்து, ‘ ஏம்பா, உனக்கு ஜுரம் இருக்குப்பா, ஐஸ்கிரீம் வேண்டாம்பா!’ என்பார்.
மகன் உடனேயே, ‘ஏம்பா, ஐஸ்கிரீம் வாங்க காசு இல்லையா?’ என்று கேட்டதும் தந்தையால் பொறுக்க முடியாமல் ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். அவன் அதை வாங்கி ஓடிச்சென்று அந்த பிச்சைக்காரனிடம் தருவான்.
பக்கத்தில் தான் அந்தப் பள்ளிக்கூடம் இருக்கும். ஒரு வழியாக, அங்கே உள்ள பியூனை பணம் கொடுத்து சரிகட்டி, மகனை வெளியே விட்டு விட்டு, உள்ளே தந்தை செல்வார். பிரின்ஸ்பாலிடம் தான் படித்தவன் என்று காண்பித்துக்கொண்டு, ஒரு வழியாக சமாளித்த பின், அவர் கொடுக்கும் அப்ளிகேஷன் ஃபாரத்தைப்பார்த்தவருக்கு அதிர்ச்சியாக இருக்கும்! எல்லா கேள்விகளுமே ஆங்கிலத்தில் இருக்கும் அந்த பேப்பரைப்பார்த்ததும் அவர் கண்களில் கண்ணீர் வழியும்! கலங்கிப்போய் வெளியே வந்தவர், தன் மகன் அதே பிச்சைக்காரன் முதுகில் ஏறி விளையாடுவதைப்பார்த்ததும் ஆத்திரத்தோடு ஓடிச் சென்று அவனை தாறுமாறாகத் திட்டியவாறே அடிக்க ஆரம்பிப்பார். பிச்சைக்காரன் உடனேயே கோபமாக ஆங்கிலத்தில் கத்துவான். அவர் அதுவரை தான் ஆராதித்த ஆங்கிலம் அந்த பிச்சைக்காரனிடமிருந்து வெள்ளமாக வெளிவருவதைப்பார்த்து அப்படியே திகைத்துப்போனவர், நெகிழ்ந்து போய் அவனை அமர வைத்து, ஒரு சமர்ப்பணம் போல தன் நாவிதர் வேலையைச் செய்து அவனின் தாடி, மீசை, பரட்டைத்தலையை அகற்றுவார். அடுத்த காட்சியில் அவர் மகன் அவரின் கிராமத்துப்பள்ளியில் தரையில் அமர்ந்து தமிழ் படிப்பதாக படம் நிறைவடைகிறது!!
மூன்றாவது குறும்படம்:
இதன் தலைப்பு மறந்து விட்டது. இது ஒரு வித்தியாசமான காதல் கதை. மரணம் சம்பவிக்கும் வீடுகளில் பறையடித்து வெட்டியான் வேலை பார்க்கும் ஒரு இளைஞனுக்கும் ஒப்பாரிப்பாடல்களை ஆராய்சி செய்ய வந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே காதல் நுழைகிறது.
ஒப்பாரி இசை, பறையடிப்பு, துக்கத்துக்கு வந்தவர்களிடையே தொடர்ந்த புலம்பல்கள் பின்னணியில் அவர்கள் பார்வைப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன.
மரணமடைந்தவரைக் குளிப்பாட்டி, ஆடை அணிவித்து தலையில் துண்டைக்கட்டி முடிச்சு போடும்போது, அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போடுவது போல அவனுக்குத் கற்பனையில் தோன்றுகிறது.
இடையே, ஒரு இறப்பு நடந்த வீட்டில் நடக்கும் அத்தனை யதார்த்த நிகழ்வுகளையும் சிறிது நகைச்சுவை கலந்து அசத்தலாகக் காட்டுகிறார் இயக்குனர்.
கதாநாயகனின் நண்பன் சொல்கிறான், ‘ எப்படி நீங்கள் இருவரும் இனி சந்திக்க முடியும்? இப்படி ஏதாவது ஒரு மரணம் சம்பவித்து, அங்கே இருவரும் பார்த்துக்கொண்டால் தானுண்டு!’ என்கிறான்!
துக்கம் நேர்ந்த வீட்டிலிருந்து இறந்தவர் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்ற பிறகு வீடு முழுவதையும் கழுவி விடுவார்கள். இறந்தவரின் மனைவி யாரையோ திட்டிக்கொண்டே வேகமாக வந்தவர் சறுக்கி விழுந்து அதே கூடத்தில் இறந்து போகிறார்.
மறுபடியும் அதே நாயகன், நாயகி அதே காதல் பார்வைகளுடன் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது!
குறிப்பு:
இந்த குறும்படங்களில் முதலாவதாய் உள்ள ‘ புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’ என்ற படத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. இரண்டாவது, மூன்றவது பரிசு பெற்றவைகளை நான் சரியாக கவனிக்க முடியவில்லை.

Friday, 7 September 2012

சாம்பார் சாதம்:


செவிக்கும் அறிவுத்திறனுக்குமான அலசல்களுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் சற்று இடைவேளை கொடுத்து, வள்ளுவரின் வாக்குக்கேற்ப சிறிது வயிற்றுக்கும் ஈவதற்கு என்ன விருந்து படைக்கலாம் என்று யோசித்தபோது, மிகவும் ருசிகரமான ‘ சாம்பார் சாதத்தை அளிக்கலாம் சமையல் முத்தாக ‘ என்று தோன்றியது.
சாம்பார் சாதத்திற்கான குறிப்பு கொடுக்கும் முன் அதைப்பற்றி சில வரிகள்.. ..
சூடான சாதத்தில் உருக்கிய நெய்யூற்றி, மணமணக்கும் சாம்பாரை ஊற்றிப் பிசைந்து சாப்பிடுவதல்ல சாம்பார் சாதம். அதற்காக தனியாக மசாலாப்பொருள்கள் தயார் செய்து காய்கறிகளுடன் கலந்து வேக வைத்து, தனியே வேகவைத்த பருப்பும் அரிசியும் நெய்யுடன் கலந்து செய்வதே சாம்பார் சாதம். சிலர் சாம்பார் சாதத்தில் எல்லா விதமான காய்கறிகளும் கலப்பார்கள். முள்ளங்கி சாம்பார் நிறைய பேருக்கு பிடிக்கும். ஆனால் அது சாம்பாரின் ஒரிஜினல் மணத்தை சற்று மாற்றி விடும். கத்தரிக்காய் காய்க்கு காய் ருசி மாறுபடும். சரியான ருசியான கத்தரிக்காய் அமையா விடில் சாம்பாரின் ருசி குறைந்து விடும். முருங்கைக்கீரைக்கும் முருங்கைக்காய்க்கும் கூட அப்படிப்பட்ட குணம் இருக்கிறது. காரட், பலாக்கொட்டை, வெண்டைக்காய், முதலிய காய்கள் சாம்பாரின் ருசியை அதிகரிக்கும். பச்சை கொத்துமல்லி கிள்ளிப்போடுவது கூட, ஜனவரி மாதம் கிடைக்கும் குட்டையான கொத்துமல்லியென்றால் சாம்பாரின் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இனி சாம்பார் சாதம் பற்றிய குறிப்பு:
 
சாம்பார் சாதம்:
தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 கப்
துவரம்பருப்பு- 1 கப்
வெங்காயம்-1
சின்ன வெங்காயம்- 1 கை
பொடியாக அரிந்த தக்காளி- 1 கப்
கீறிய பச்சை மிளகாய்-4
பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்
சிறிய பிஞ்சு கத்தரிக்காய்-4
புளி- 2 நெல்லிக்காயளவு
தேவையான உப்பு
எண்ணெய்-3 மேசைக்கரண்டி
நெய்- 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- சில இலைகள்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்
உருளைக்கிழங்கு [ சற்று பெரியது]-1
காரட் [ சற்று பெரியது]-1
பொன்னிறமாக கால் ஸ்பூன் எண்ணெயில் வறுத்துப்பொடிக்க வேண்டிய பொருள்கள்:
வெந்தயம்- 1 ஸ்பூன், கடுகு- அரை ஸ்பூன், மிளகாய் வற்றல்-8, தனியா விதை- 4 ஸ்பூன், கடலைப்பருப்பு- 2 ஸ்பூன், பொட்டுக்கடலை- 2 ஸ்பூன், மிளகு- 8, பெருங்காயம்- 2 பட்டாணியளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு, காரட்டை சற்று பெரிய துருவலாக துருவிக்கொள்ளவும்.
வறுப்பதற்கான சாமான்களை வறுப்பதற்கு முன், கால் ஸ்பூன் எண்ணெயில் முதலில் பெருங்காயத்தை வறுத்து எடுத்துக்கொண்டு, அதன் பிறகு மற்ற சாமான்களை வறுத்தெடுத்து அதன் பின் பொடிக்கவும்.
அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி, 6 கப் நீர் ஊற்றி குக்கரில் 6 விசில் வரை நன்கு வேகவைக்கவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
எண்ணெயை ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளியையும் கொத்தமல்லி, சிறிய துண்டுகளாய் அரிந்த கத்தரிக்காய்கள் இவற்றைப்போட்டு மஞ்சள் தூளும் சேர்த்து கறிவேப்பிலையும் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து மசியும் வரை நன்கு வதக்கவும்.
அதன் பின் காரட், உருளைத்துருவல்கள் சேர்த்து ஒடு பிரட்டு பிரட்டவும்.
புளியைக்கரைத்து ஊற்றி சிறிது உப்பும் சேர்த்து வேக வைக்கவும்.
மசாலா சற்று கெட்டியானதும் வெந்த சாதம், உருக்கிய நெய் சேர்த்து, போதுமான உப்பும் சேர்த்து, குறைந்த தீயில் அனைத்தும் சேரும் வரை ஐந்து நிமிடங்கள் கிளறவும்.
கமகமக்கும் சாம்பார் சாதம் தயார்!!
இதற்கு தொட்டுக்கொள்ளவென்று தனியாக எதுவும் தேவையில்லை. அருமையான ஊறுகாய், அப்பளம், வற்றல்கள் போதும்.