Sunday, 26 August 2012

முத்துக்குவியல்கள்

முத்துக்குவியல்களிலிருந்து  இரண்டு அதிசய முத்துக்களும் ஒரு மருத்துவ முத்தும் ஒரு ரசித்த முத்தும் ஒரு குறிப்பு முத்தும் இன்றைக்கு சிதறுகின்றன:
முதலில் அதிசய முத்துக்கள்!!
 
கிளியின் தோழன் குரங்கு!!

கொலம்பியா நாட்டில் இந்த அதிசயம் நடக்கிறது. நீலம் மற்றும் தங்க நிறமான பெண் கிளியுடன் குரங்கிற்கு நெருக்கமாக சினேகம் ஏற்பட்டு விட, தினமும் அந்தக் கிளி தன் முதுகில் குரங்கை ஏற்றிக்கொண்டு நகரை வலம் வருகிறது. கொலம்பியா நாட்டின் அகஸ்டன் நகரில் இந்த காட்சியை நாம் காணலாம். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குரங்கு ஒரு போதும் தவறிக்கீழே விழுந்ததில்லை!!
 
12 வயது சிறுவனுக்கு ரூ 82000 சம்பளம்!!
மலேஷிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவன் ஆதி புத்ர அப்துல் கனி. இவன் 3ஆம் வகுப்பு வரை தான் படித்தவன். அதற்கு மேல் படிப்பு ஏறவில்லை. ஆனாலும் இயற்பியல், வேதியல், கணிதம், பொறியியல், உயிரியல் போன்றவற்றில் அபிரிதமான அறிவைப்பெற்றிருக்கிறான். அவனுடைய தாயாரின் மருந்துக்கம்பெனி இப்போது அவனது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவனது அபார ஞானத்தைப்பற்றி அறிந்த மலேஷிய கல்லூரிகள் இவனை பகுதி நேர விரிவுரையாளராக அழைக்கின்றன. இவனும் அதை ஏற்றி விரிவுரையாளராக பணி புரிகின்றான். தன் ஒரு மணி நேர விரிவுரைக்கு 82000 ரூ ஊதியம் பெறுகின்றான்!!
மருத்துவ முத்து:
பித்தம் தணிய:
இளநீரில் பனங்கல்கண்டு சேர்த்து அருந்தலாம்.
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து அருந்தலாம்.
 

நெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து அருந்தலாம்.
தேனில் ஊறிய பேரீச்சம்பழம் பித்தம் தெளிய வைக்கும்.
மோரில் இஞ்சி சாறு விட்டு அருந்தலாம்.

ரசித்த முத்து:

உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும்போது அறிவு வெளியே போய் விடும்.
குறிப்பு முத்து:
 

வாழை இலைகள் கெடாமலிருக்க:
அவற்றை நியூஸ் பேப்பரில் சுற்றி, ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் ஒரு வாரத்திற்கு நன்றாக இருக்கும்.

Sunday, 19 August 2012

உயிர் காக்கும் மருத்துவம்


மறுபடியும் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை முறைகள் தொடர்கின்றன.. .. ...
பகுதி-2
இரத்தக்குழாய்களின் அடைப்புகளை கரைத்து இரத்தத்தை சீராக பாய வைக்க:
இன்னொரு நண்பரின் உண்மைக்கதை. மூன்று இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதய மருத்துவரின் பரிசோதனைகளுக்குப்பிறகு, உடனடியாக அவர் அறுவை சிகிச்சையை [ CARONARY BY PASS SYRGERY ] மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயந்த அவர், ஒரு நலம் விரும்பி சொன்னதைக் கேட்டு, AMWAY’S NUTRILITE GARLIC HEART CARE- மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஒரு மாதத்திலேயே அவரின் உடல் நலம் முன்னேற்றமடையத் தொடங்கியிருக்கிறது. ஒரு சில மாதங்களிலேயே அவருடைய இரத்தக்குழாய்களில் அடைப்புகள் சுத்தமாக நீங்கி விட்டன. மருத்துவர் மறுபடியும் அனைத்து பரிசோதனைகளையும் செய்து பார்த்து, அவருக்கு  இரத்தக் குழாய்களில் அடைப்புகள் சுத்தமாக நீங்கி விட்டன என்றும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறி விட்டார்.
அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறகு அவர் இது போல செய்தது தவறு என்றாலும், பொதுவாக, அனைவருமே தினம் ஒரு காப்சூல் எடுத்துக்கொள்ளுவது,  வருமுன் காப்பதற்கு சமானம்’ என்பது என் கருத்து. பூண்டின் மகிமை பற்றி மேலும் அறிய கீழுள்ள link-ஐப் படிக்கவும்.
உயர் அழுத்தம் அதிகமானால், அதைக் குறைக்க:
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் எல்லோருக்கும் 120/80 இருக்க வேண்டும். மேலுள்ளது SYSTOLIC PRESSURE என்பதையும் கீழுள்ளது DIASTOLIC PRESSURE என்பதையும் அனைவரும் அறிவோம். சில வருடங்கள் முன்னால், வயது ஏற ஏற, SYSTOLIC PRESSURE 140 வரை இருக்கலாம் என்று மருத்துவர்களே சொல்லி வந்தார்கள். ஆனால், பல ஆய்வுகளுக்குப்பிறகு, தற்போதெல்லாம் இளையவர்களானாலும் சரி, முதியவர்களானாலும் சரி, 120/80 என்று இருப்பது தான் சரியானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சென்ற வருட இறுதியிலிருந்து எனக்கு SYSTOLIC PRESSURE 150 வரை ஏற ஆரம்பித்தது. இதய மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் மாத்திரைகளின் எண்ணிக்கை தான் உயர்ந்ததே தவிர, நார்மலுக்கு SYSTOLIC PRESSURE வரவில்லை. சென்ற மாதம் நான் தஞ்சையிலிருந்த போது, சக பதிவரும் என் சகோதரருமான திரு. ஹைஷ் தில்லியிலிருந்து பேசிய போது, என் பிரச்சினையை அறிந்து அதற்கு ஒரு யோகா சிகிச்சையைக் கற்றுத் தந்தார். இதை செய்ய ஆரம்பித்து, ஒரு வாரத்திலேயே, குறைந்த அளவு மாத்திரைகளுடன் என் SYSTOLIC PRESSURE நார்மலுக்கு வந்தது. இந்த யோகா சிகிச்சையை நான் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்து வருகிறேன். என் உயர் இரத்த அழுத்தம் 125/75 என்று இருக்கிறது. நாளடைவில் மாத்திரைகளை மேலும் மருத்துவர்கள் குறைத்து விடுவார்கள் என்றும் என் சகோதரர் சொன்னார். 90 சதவிகிதம் அனைவருக்கும் இந்தப்பிரச்சினை உள்ளது என்பதால் இணையத்தின் வாயிலாக அனைவருக்கும் இது பயன்பட வேண்டுமென்று இந்த சிகிச்சை முறையைப்பற்றி எழுதுகிறேன்.
இதற்கு நாம் வடக்கு திசை நோக்கி சம்மணங்கால் போட்டு அமர வேண்டும். கைகளை சாதாரணமாக மடியில் வைத்துக்கொண்டு, இடுப்பை இடமிருந்து வலமாக [clock wise] மெதுவாக சுற்ற வேண்டும். இது போல 21 தடவைகள் செய்ய வேண்டும். பின் வலமிருந்து இடமாக [Anti clockwise] 21 தடவைகள் சுற்ற வேண்டும். மறுபடியும் 7 தடவைகள் இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும்.
வடக்கு நோக்கித்தான் அமர வேண்டும். காலை சூரிய உதயத்திற்குப்பின்னும், மாலை சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும். வயிறு காலியாக இருக்க வேண்டும். தண்ணீரோ அல்லது காப்பியோ குடித்து விட்டு செய்யலாம். தரையில் உட்கார முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். முக்கியமான விஷயம், இடுப்பை மட்டும்தான் அசைத்து சுற்ற வேண்டும். அதன் கீழ் தொடைகளோ, கால்களோ அசையக்கூடாது. மிகச் சுலபமான இந்தப்பயிற்சி செய்ய ஒரு சில நிமிடங்கள்தான் தேவைப்படும்.
சர்க்கரை நோயிலிருந்து விடுபட:
இந்த விஷயத்தை மீள் பதிவாக மறுபடியும் எழுதுகிறேன், இது வரை இந்த விபரம் தெரியாதவர்களுக்கு பயன்படும் என்பதற்காக:
சட்டீஸ்கர் மாநிலத்திலிருக்கும் துர்க் என்னும் நகரத்திலுள்ள ஜும்மா மசூதியில் இதற்காக ஒரு மருந்து தருகிறார்கள். இங்கு சென்று முதல் நாளே ஒரு நபருக்கு 35 ரூபாய் என்று பணம் கட்டி முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தொகை ஒட்டகப்பாலுக்கு என்று கூறப்படுகிறது. மருந்து காலை 7.30 மணியிலிருந்து மதியம் 11 மணி வரை தருகிறார்கள்.
மறுநாள் காலை எழுந்து காலைக்கடன்களை முடித்து தண்ணீர்கூடக் குடிக்காமல் ஜும்மா மசூதி 7 மணியளவில் செல்ல வேண்டும். முன்பதிவு நம்பர்படி சுமார் 50 நபரக்ளை அழைத்து அமரச் செய்து, உள்ளங்கையில் சூரண மருந்தைக்கொட்டி அதனை ஒரு பெரிய டம்ளரில் கொட்டி அதில் ஒட்டகப்பாலை ஊற்றி சூரண மருந்து தீரும்வரை குடிக்கச் செய்கிறார்கள். குடித்த பிறகு ஒரு வாய்த் தண்ணீர் மட்டும் குடிக்க வைத்து உட்கார வைக்கிறார்கள்.
இந்த மருந்துக்கு கட்டணமாக ஒவ்வொருத்தரிடமிருந்தும் 120 ரூபாய் பெற்றுக்கொள்கிறார்கள்.
அவர்கள் கூறும் அறிவுரைகள்:
மருந்து சாப்பிட்டதிலிருந்து 4 மணி நேரம் வரை தண்ணீர், உணவு, புகை பிடிப்பது என்று எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
4 மணி நேரம் கழிந்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் இனிப்பு, உனவு எல்லாவற்றையும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.
மருந்து குடித்த பின் ஊறும் உமிழ்நீரைத் துப்பக்கூடாது.
வீட்டுக்குச் சென்ற பின் சர்க்கரை அளவு அதிகமாகத் தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் அதுவரை பயன்படுத்தி வந்த மருந்துகளை சாப்பிட்டு அதன் பின் நிறுத்தி விட வேண்டும்.30 நாட்களுக்குப்பிறகு இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரையின் அளவு நிச்சயமாகக் குறைந்து நார்மல் அளவிற்கு வந்திருக்கும்.
இன்சுலின் எடுப்பவர்கள் மட்டும் இந்த மருந்தை இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
குறிப்பு:
சென்னை செண்ட்ரலிலிருந்து துர்க் நகரத்திற்கு கோர்பா எக்ஸ்பிரஸ் வாரம் இரு முறையும் விலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறையும் செல்கிறது.
இது சம்பந்தமான தகவல்களுக்கு:
Baba’s address: SHEIK ISMAIL, Jamia masjid Street, Jawahar Chouk, DURG
Call: 09826118991, 09424107655 between 6.00pm to 7.30 pm.
நன்னலத்துடனும் மகிழ்வுடனும் அனைவருமிருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
பின் குறிப்பு:
இந்தத் தொடர் எழுதக் காரணமாக இருந்த என் சினேகிதிக்கு ஆஞ்சியோகிராம் செய்யவிருந்ததாக எழுதியிருந்தேன் அல்லவா? அது தான் anti climax ஆகிப்போனது. ஆஞ்சியோகிராம் செய்த பின், படபடக்கும் இதயத்துடன் இருந்த அவரின் பிள்ளைகளிடம் மருத்துவர் சொன்னது, “ எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு இரத்தக்குழாய் ஒரு இடத்தில் சிறிது வளைந்துள்ளது. அது தான் அடைப்பு போலத் தோன்றியுள்ளது!!”

Sunday, 12 August 2012

உயிர் காக்கும் மருத்துவம்


பகுதி-1
சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது, என் நெருங்கிய சினேகிதி பல மாதங்கள் இடைவெளிக்குப்பிறகு என் வீடு வந்து சில வாரங்கள் தங்குவதாக இருந்தது. இருவருமே மறுபடியும் ஏற்படப்போகும் அந்த சந்திப்பை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, என் சினேகிதி ஃபோன் செய்து, நெஞ்சில் அதிக கனமும் அழுத்தமும் அடிக்கடி ஏற்படுவதாகவும் வலது கையில் வலி அவ்வப்போது ஏற்படுவதாகவும் சொன்னார். நான் உடனேயே அவரின் குடும்ப டாக்டரிடம் சென்று வரச்சொன்னேன். கிலம்புவதற்கு முன் அந்த வேலையையும் முடித்து விட்டால் நிம்மதியாக வரலாம் என்ற எண்ணத்தில் என் சினேகிதியும் அவரின் குடும்ப மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் பல பரிசோதனைகள் செய்து, முடிவில் ECGயில் ஒரு சிறு வித்தியாசம் தென்படுவதாகச் சொல்லி, ஒரு இதய மருத்துவரிடம் செல்லச் சொல்ல, அன்று முழுவதும் என் சினேகிதி திட்டமிட்டவாறு வர இயலவில்லையே என்று அழுது தீர்த்தார். அவரை சமாதானப்படுத்தி, இதய மருத்துவரிடம் உடனேயே போகச் சொன்னேன். அங்கும் எல்லா சோதனைகளை மேற்கொண்ட பிறகு, stress Test  [ Treadmill] -ல் ஒரு சிறு வித்தியாசம் தெரிவதாகச் சொல்லி ஆஞ்சியோகிராம் செய்யச் சொல்லி ஒரு குண்டைத்தூக்கிப்போட்டார்கள். அதைப்பற்றிச் சொன்னதும் எனக்கும் மிகக் கவலையாகப் போனது.
என் சினேகிதி அதிக மனக்கஷ்டங்களுக்காளானவர். அதோடு, பொருளாதார ரீதியில் அடித்தட்டில் இருப்பவர். இன்றைய நிலவரப்படி, இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளுக்கு மாற்றுப்பாதை [ by pass surgery] அமைக்க சில லட்சங்கள் செலவாகின்றன. அதை உறுதிப்படுத்தும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய 8000 ரூபாயிலிருந்து 20000 ரூபாய் வரை மருத்துவ மனைகள் நிர்ணயிக்கின்றன. அதிக செலவில்லாமல் இதய அறுவை சிகிச்சை செய்ய ஏதாவது வழிகள் இருக்கின்றனவா என்று நண்பர்கள், மருத்துவர்களுடன் ஆராய்ந்ததில் சில உயிர்காக்கும் மருத்துவ முறைகள் பற்றி அறிய நேரிட்டது. நோயால் அவதிப்படுபவர்கள் உடல் பிரச்சினைகளிலிருந்து மீள்வதற்கு நான் அறிந்து கொண்ட இந்த மருத்துவ முறைகளை இந்தப்பதிவு மூலம் பகிர்ந்து கொள்கிறேன். 

இதய அறுவை சிகிச்சை இன்றி இரத்தக்குழாய்களின் அடைப்புகளள நீக்குதல்: 

நாகர்கோவிலில் உள்ள ஒரு மருத்துவ மனையில் மருந்துகள் மூலம் மட்டுமே இரத்தக்குழாய்களிலுள்ள அடைப்புக்களை நீக்குகிறார்கள். இதய அறுவை சிகிச்சையின்றி அங்கே மருத்துவ சிகிச்சை எடுத்து குணம் அடைந்த நண்பரின் தகவல் இது. ஆனால் இதய அறுவை சிகிச்சையை விட சற்று கூட செலவாகும் என்பதும் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது அதன் வீரியம் அதிகமாயிருக்குமென்றும் சொல்கிறார்கள்.




விபரங்களுக்கு கீழ்க்கண்ட LINK-ஐப் பார்க்கவும்.  


செலவின்றி இதய அறுவை சிகிச்சை செய்ய:

பொருளாதார நிலையில் மிகத்தாழ்ந்திருப்பவர்களுக்கு பெங்களூரிலுள்ள SATHYA SAI MEDICAL INSTITUTE-ல் இலவசமாக இதய அறுவை சிகிச்சை உள்பட அனைத்து மருத்துவ சிகிச்சைகள் செய்கிறார்கள்.

அதன் LINK இதோ! 
இரத்தத்தின் சர்க்கரை அளவைத் துல்லியமாகக்கண்டறிய:
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் 60 லட்சத்துக்கு மேலானோர் இந்த சர்க்கரை நோயின் பாதிப்பில் உள்ளார்கள். இந்த நோயின் தாக்கத்தை, இரத்தத்தில் அதன் வீரியத்தைக் கண்டுபிடிக்க பல மருத்துவக் கண்டு பிடிப்புகள் அவ்வப்போது தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் ‘ ஐ ப்ரோ 2 சிஜி எம்’ என்ற பதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த நேரத்தில் ஒரு நோயாளிக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு எப்படி எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இந்தக் கருவி உதவி செய்கிறது.:
சர்க்கரை நோயாளிகளின் வயிற்றுப்பகுதியில் இந்தக் கருவி 72 மணி நேரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தக் கருவி உடலின் சர்க்கரை அளவைப் பதிவு செய்யும். ஒரு நாளைக்கு சுமார் 288 முறைகள் அது போல பதிவு செய்யும். இதன் மூலம் ஒரு நோயாளியின் உடலில் எந்தெந்த நேரத்தில் சர்க்கரையின் அளவு கூடுகிறது, எந்தெந்த நேரத்தில் சர்க்கரையின் அளவு சரியாக உள்ளது என்பதை ஆய்வு செய்ய முடியும். அதற்கேற்ப ஒரு மருத்துவரால் சரியான மருத்துவம் அளிக்க முடிகிறது. 72 மணி நேரங்கள் கழித்து அந்தக் கருவியை அகற்றி அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை கணினியில் ஏற்றி, பின் பேப்பரில் ப்ரிண்ட் செய்து அந்த அறிக்கையை மருத்துவரிடம் காண்பித்து நாமே ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும். மிகவும் லகுவான இந்தக் கருவியைப் பொருத்தியிருப்பதே ஒரு நோயாளிக்கு சுமையாகத் தெரியாது என்பது இந்தக்கருவியின் சிறப்பு. இதைப்பொருத்திக்கொண்டே நம்து வழக்கமான எல்லா வேலைகளையும் நாம் செய்து கொள்ள முடியும். இதை உடலில் பொருத்துவது மட்டும் ஒரு மருத்துவர்தான் செய்ய வேண்டும்.

தொடரும்:





Sunday, 5 August 2012

வாழ்க்கையென்னும் விசித்திரம்!!


வாழ்க்கை பல ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் தன்னகத்தே கொண்டது என்பதை மறுப்பதற்கில்லை தான்! ஆனால் நம்பவே முடியாத சில நிகழ்வுகள் பற்றி கேள்வியுறும்போது, நம்மையும் அறியாமல் மனம் ஆச்சரியத்தில் அமிழ்ந்து விடுகின்றது. சில கேள்விகளுக்கு பதில்களும் கடைசி வரை கிடைப்பதில்லை. சில சமயங்களில் எதை விட்டு விலகுகிறோமோ, அது தான் விரும்பி வந்தடைகிறது! விரும்பிப்போகும்போது ஒரேயடியாக விலகிப்போகின்றது!
சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது, என் சினேகிதி சொன்ன உண்மைக்கதை மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. ஒரு விதத்தில் இதுவும் விரும்பிப்போகும்போது விலகுவதும் விலகிப்போன பின் விரும்பி வருவதுமான கதை தான்!
30 வருடங்களுக்கு முன்பு:
தஞ்சையிலிருந்த கண்ணையன் குடும்பமும் கோவையிலிருந்து சிவப்பிரகாசத்தின் குடும்பமும் முன் பின் அறிமுகம் ஆனவர்களில்லை. தெரிந்தவர்கள் வாயிலாக கண்னையன் குடும்பத்தைப்பற்றிய விபரங்கள் சிவப்பிரகாசத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. தன் மூத்த மகனுக்கு கண்ணையனின் ஒரே பெண்ணைத் திருமணம் செய்யலாம் என்ற ஆசையுடன் கண்ணையனின் வீட்டுக்கு உறவினர்களுடன் சென்று பெண்ணைப் பார்த்தார். பெண்ணைப் பிடித்து விடவே பேச்சு வார்த்தை ஆரம்பமானது. நிச்சயம் மட்டும் சீக்கிரமே நடத்தி விடலாமென்றும் திருமணத்தை நான்கு மாதங்கள் கழித்து நடத்தலாமென்றும் கண்ணையன் அபிப்பிராயப்பட்டார். அதை சிவப்பிரகாசம் ஒத்துக்கொள்ள நிச்சயம் சிறப்பாக நடந்தேறியது.
திருமணத்திற்கு 2 மாதங்கள் இருக்கையில் தன் எதிர்கால மருமகள் கோவையிலேயே ஒரு நல்ல வேலையில் சேர்ந்திருப்பதை யார் வாயிலாகவோ அறிந்த சிவப்பிரகாசம்  அதிர்ந்து போனார். கண்ணையனை அழைத்து ‘ இந்த விபரத்தை எப்படி என்னிடம் மறைத்து வைத்தீர்கள் ’ என்று கோபத்துடன் கேட்க, அப்போது பதிலேதும் சொல்லாத கன்னையன் இரண்டு நாட்களிலேயே வீட்டுக்கு வந்து, நிச்சயம் செய்தபோது அணிவித்த நகைகள், புடவை எல்லாவற்றையும் திரும்பக் கொடுத்து, ‘இப்படி கேள்வி கேட்கும் குடும்பம் தன் பெண்ணுக்கு வேண்டியதில்லை. இந்த நிச்சயதார்த்தம் இத்துடன் முறிந்து விட்டது’ என்று சொல்லிப்போனார்.

சிவப்பிரகாசம் மன வேதனையை ஒதுக்கி வைத்து வேறு ஒரு பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து அந்தக் கதையை அத்துடன் மறந்து போனார். கண்ணையனும் சென்னையில் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைத்தார். அந்தப் பெண் தாய்மை அடைந்ததும் வளைகாப்பும் சிறப்பாக செய்வித்தார். ஆனால் பேறு காலம் நெருங்கும் சமயத்தில் அந்தப் பெண்ணுக்கு மன நிலை பிறழத் துவங்கியது. அந்தப்பெண்ணின் பாட்டிக்கு பேறுகாலத்தில் அந்த மாதிரி பிரச்சினை இருந்திருக்கிறது. பிரசவம் முடிந்ததும் சில மாதங்களில் மன நிலை சீரடைந்திருக்கிறது. அதே போல பேத்திக்கும் நடந்து, குழந்தைக்கு 2 மாதங்கள் ஆன போது மன நிலை சீராகியிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவர் நல்ல மனதுடன் அதைப்பொருட்படுத்தாமல் இருந்திருக்கிறார். ஆனால் மறுபடியும் அந்தப் பெண்ணுக்குத் தாய்மை ஏற்பட்டு, மறுபடியும் அதே நிலை ஏற்பட்டதும் மனம் தளர்ந்திருக்கிறார். இரண்டாவது குழந்தை பிறந்ததும் தானே குழந்தைகளை இனிமேல் வளர்த்துக்கொள்வதாகச் சொல்லி, மனைவியைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட்டார். அந்தப் பெண்ணும் மனநிலை சரியாகாமலேயே இறந்து போனது.
30 வருடங்களுக்குப்பிறகு:
கண்ணையன் நடுவே இறந்து விட்டார். சிவப்பிரகாசத்தின் இரண்டாவது மகன் தன் மகனுக்கு பெண் தேடியிருக்கிறார். கண்ணையனின் மாப்பிள்ளையைப்பற்றியும் அவரின் பெண் பற்றியும் தெரிந்தவர்கள் சொல்ல, சென்னை சென்று பேசி திருமணமும் முடிவானது. நிச்சயம் நடந்து கொண்டிருக்கும்போது தான், பழைய விஷயம் தெரிந்த ஒரு உறவினருக்கு, அங்கு நிச்சய வேலைகளில் கலந்து கொண்டிருக்கும் பெண்ணின் உறவுகள் சிலரைப் பார்த்ததும் சந்தேகம் வந்திருக்கிறது. பெண்ணின் அம்மா, தாத்தா பற்றி விசாரித்து, விபரம் தெரிந்ததும் அவருக்கு அதிர்ச்சியாகி விட்டது. ஒரு நிச்சயம் நம்மால் முறிய வேண்டாம் என்ற நல்ல எண்ணத்துடன் பேசாமலிருந்து விட்டார்.
ஆனால் நிச்சயம் முடிந்த பிறகு, சிவப்பிரகாசத்தின் உறவினர்கள் மூலம் இந்த விஷயம் சிவப்பிரகாசத்திற்குத் தெரிந்து விட்டது. இந்தத் திருமணம் இனி நடத்த வேண்டாம் என்று கோபமாகச் சொல்லியும் வாக்குவாதம் செய்தும் அவரது மனைவியும் அவரின் மகனும் அதற்கு ஒப்புதல் தர மறுத்து விட்டார்கள். ‘ அது என்றோ நடந்த விஷயம். 30 வருடங்களுக்குப்பின்னும் அதை நினைத்துக்கொண்டிருக்க வேண்டாம்.’ என்று மணமகனும் சொல்லி விட்டார்.
திருமணமும் இனிதே நடந்தேறி, சிவப்பிரகாசத்தின் பேரனின் மனைவி தாய்மையடைந்து விட்டார். எல்லோருக்கும் புறத்தே மகிழ்வாக இருந்தாலும், அந்தப் பெண் தன் தாயைக்கொண்டு விடுமோ பிரசவ நேரத்தில் என்ற மெலிதான பயம் மட்டிலும் சிவப்பிரகாசத்தின் மனைவிக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது..!!!