Monday, 30 July 2012

முத்துக்குவியல்கள்!!

இன்றைய முத்துக்குவியல் ஒரு தகவல் முத்துடனும் ஒரு அனுபவ முத்துடனும் ஒரு மருத்துவ முத்துடனும் மலருகிறது.

அனுப‌வ‌ முத்து:

சில சமயம் என்றோ நடந்த ஒரு நிகழ்வு பல வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் வேறொரு சூழ்நிலையில் நினைவுக்கு வந்து நம்மை அதிசயப்படுத்தும். பல வருடங்களுக்கு முன்னால் நடந்த அதே மாதிரி நிகழ்வு
ஒன்று இப்போது நினைவுக்கு வருகிறது....

திருமணமான புதிது. ஏழு கொழுந்தனார்களும் ஒரு நாத்தனாரும், அவர்கள் குழந்தைகளும் மாமியாரும் அடங்கிய பெரிய கூட்டுக்குடும்பம் என்னுடையது. விடுமுறை நாட்களில் அனைவரும் கிராமத்துக்கு வந்து விடுவார்கள்.

அல்லது நாங்கள் இங்கிருந்து [ வெளிநாட்டிலிருந்து ] செல்லும்போது அனைவரும் வீட்டுக்கு வந்து ஒரே கலகலப்பாயிருக்கும் வீடு.

அந்த மாதிரி ஒரு நாளிரவு நடந்த சம்பவம் இது. மின்வெட்டு காரணமாக, அரிக்கேன் விள‌‌க்கு உதவியுடன் நாங்கள் சமைத்து முடித்ததும் வரிசையாக முதலில் குழந்தைகள், பிறகு பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். அதன் பிறகு பெண்களாகிய நாங்கள் சாப்பிட அமர்ந்ததும் உடனே மின்னொளி வந்து சமயலறை முழுவதும் ஒளியைப் பாய்ச்சியது. பானையிலிருந்து சாதத்தை எடுத்ததும் என் சின்ன அக்கா அலறினார்கள். எல்லோரும் உள்ளே பார்க்க‌,உள்ளே பல்லி ஒன்று முழுவதுமாக வெந்திருந்தது. அடித்துப்பிடித்துக்கொன்டு வெளியே ஓடி, வெளியே அமர்ந்திருந்த ஆண்களிடம் விஷயத்தைச் சொல்ல, ஒரு நொடியில் வீடே களேபாரமானது.

உடனேயே மாட்டு வண்டி பூட்டி, ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள‌ நீடாமங்கலம் சென்று மருத்துவரை அழைத்து வந்தார்கள். அவர் வருவதற்குள் குழந்தைகள் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வாந்தி எடுப்பதும், வயிற்றுப்போக்குமாய் அவதியுறுவதுமாய் அவஸ்தைப்பட ஆரம்பித்திருந்தார்கள். ஒரு வழியாய் மருத்துவர் வந்து வரிசையாக குழந்தைக‌ள் எல்லோரையும் நிற்க வைத்து ஊசி போட்டு, பெரியவர்கள் எல்லோருக்கும் மருந்துகள் கொடுத்து முடித்தார். ' பல்லி விஷமெல்லாம் கிடையாது, யாரும் பயப்பட வேன்டியதில்லை' என்று சொல்லிச் சென்றார். இன்றைக்கும் பயந்து கொன்டு குழந்தைகள் எல்லோரும் நின்ற அந்த காட்சி மறப்பதில்லை.

12 வருடங்கள் கழித்து, பொள்ளாச்சியிலுள்ள என் சினேகிதி வீட்டிற்கு 8 வயதான என் மகனை அழைத்துச்சென்றிருந்தேன். போன இடத்தில், மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தேன். பார்த்ததுமே, அவர் என்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதென்றார். மேலும் விசாரித்ததில், ' அந்தப் பல்லி விழுந்த சாதத்தை சாப்பிட்ட வீடா நீங்கள்?" என்றாரே பார்க்கலாம்! உலகம் எத்தனை சிறியது என்று என்னை அதிசய வைக்க வைத்த சம்பவம் இது!

தகவல் முத்து:

பெட்டிக்குள் இருக்கும் அம்மன்
காரைக்கால் அருகேயுள்ள ஊரான திருமலைராயன் பட்டிணத்தில் ஆயிரம் காளியம்மன் திருக்கோவில் உள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ஒரு பெட்டியிலிருந்து அம்மனை
எடுத்து வழிபாடு நடத்துகிறார்கள்.. மற்ற நாட்களில் கோவிலுக்குச் சென்று பெட்டியை மட்டும் வணங்குகிறார்கள்.. வைகாசி மாதம் வள‌ர்பிறை திங்கட்கிழமை மட்டும்தான் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை அம்மனை வெளியே எடுத்து பூஜை செய்கிறார்கள். இந்த அம்மனுக்கு எதைப் படைத்தாலும் ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்ற எண்ணிக்கையில்தான் படைக்க முடியும். எனவே தான் இந்த அம்மன் ஆயிரம் காளியம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

மருத்துவ முத்து:

அடிக்கடி வரும் தலைவலிக்கு:
அரை ஸ்பூன் சீரகம், 1 கிராம்பு, 2 மிளகு-இவற்றைப் பசும்பால் விட்டு அரைத்து பற்று போடவும்.


Monday, 23 July 2012

பாலைவனத்தில் பணிப்பெண்கள்!!

நம் தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் வீட்டு வேலைக்கு பணிப்பெண்கள் கிடைப்பதில்லை. வீட்டு வேலையைக்காட்டிலும் கட்டிட வேலையில் அதிகம் சம்பாதிக்க முடிகிறது என்பதால்தான் வீட்டு வேலைக்கு பெண்கள் வர மறுப்பதாகச் சொல்லுகிறார்கள். மீதி இருப்பவர்கள் இருக்கும் சொத்தையெல்லாம் விற்று, பல ஏஜென்சிகள் மூலம் பல நிபந்தனைகளுக்குட்பட்டு, வீட்டு வேலைக்கு அமீரகத்திற்கு வருகின்றனர். இவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு இங்கு வந்தார்கள் என்பதற்கு பல விதமான சோகக்கதைகள் இருக்கின்றன.



இங்கே அமீரகத்தில் வீட்டு வேலைகள் செய்யும் பணிப்பெண்களின் கூட்டம் அதிகமாகி வருகிறது. பெரும்பாலும் இந்தியப் பெண்களும், மற்றும் இலங்கை, பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து வந்த இளம் பெண்களும் தான் இந்த வேலைகளைச் செய்து வருகின்றனர். ஒரு வீட்டில் குளியலறை, டாய்லட் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது, துணிகளைத்துவைத்து காயவைப்பது, காய்ந்த துணிகளை மடித்து வைப்பது என்று தினமும் வேலைகள் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமைகள் இங்கே அரசு விடுமுறை என்பதால் அன்று மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்கிறார்கள். அன்றைய தினம் அவர்களின் வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, சொந்த வேலைகளை கவனிப்பது என்றாகி விடுகிறது. இன்னும் சில பெண்கள் வாரம் முழுவதும் ஒரே வீட்டில் தங்கி வேலைகள் செய்வது, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தன் அறைக்கு வந்து போவது என்றிருக்கிறார்கள். சில பேர்கள் குழந்தையை கவனிப்பதும் மட்டும் செய்கிறார்கள். இன்னும் சில பேர்கள் சமையலுக்கு மட்டும் வீடுகளுக்குச் சென்று செய்கிறார்கள். நான்கு பேர்களாக ஒரு அறை என்று பல அறைகள் கொண்ட வில்லா ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொள்கிறார்கள். ஒரு அறைக்கு மாத வாடகை 1000 திரஹம் [ஏறத்தாழ 13000ரூ] செலவாகிறது இவர்களுக்கு. அதை மற்றவர்களுடன் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்.



ஒரு வீட்டில் ஒன்றரை மணி நேரம் வேலை செய்ய பெரும்பாலும் மாதம் 500 திரஹம் வாங்குகிறார்கள். ஒரு நாளைக்கு ஆறிலிருந்து எட்டு வீடுகள் வரை வேலை செய்கிறார்கள்.

கணவனைப்பிரிந்து, குடும்பத்தைப்பிரிந்து, உழைக்க ஆரம்பித்த இவர்கள், தங்கள் குழந்தைகள் கல்லூரியில் படிப்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். பெண் குழந்தைகள் என்றால், நகைகள் திருமணத்தின்போது வாங்கி சீதனமாகக் கொடுக்க வேண்டுமென்பதால், அவற்றை வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வருவதைச் சொல்கிறார்கள். இதில் கடுமையான நோய்களுடன் சிலர் வேலைகளைச் செய்து வருவதைப்பார்க்கையில் பரிதாபமாகவே இருக்கிறது. கொஞ்சம் சாமர்த்தியமுள்ள பெண்கள், தாங்கள் வேலை செய்யும் வீடுகளில் சொல்லி கணவனுக்கும் மெல்ல மெல்ல விசா வாங்கி இங்கு அழைத்துக்கொள்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைச் சக்கரத்தை கொஞ்சம் சுலபமாக சுழல வழி செய்து கொள்கிறார்கள். எத்தனை சம்பாதித்துக் கொடுத்தாலும் திருப்தி படாத அம்மா, எத்தனை சம்பாதித்து அனுப்பினாலும் அதைக் குடித்தே அழிக்கும் கணவன்கள்-வாழ்க்கை இவர்களுக்கு நெருஞ்சி முள்ளாய்த்தான் நகருகின்றது. சிறு வயதில் பிரிந்து, வளர்ந்து வந்த மகள் பூப்பெய்தியதை அறிந்து கண்களில் கண்ணீர் வழிய புலம்பி பேசுவதைக் கேட்கையில் மனம் கனமாகின்றது.




சென்ற மாதம் என் வீட்டில் வேலை செய்யும் பெண் சொன்னது. தெரிந்த பெண் ஒன்று ஒரு அரேபியர் வீட்டில் வேலை செய்கிறதாம். அந்தப் பெண்ணை வீட்டில் காவலுக்கு வைத்து விட்டு அடிக்கடி வெளியே செல்வது அவர்களுக்கு வழக்கம். ஒரு முறை அந்த மாதிரி அவர்கள் சென்றதும் இந்தப் பெண் வீட்டைப் பூட்டிக்கொண்டு படுத்திருக்கிறது. அது வரை அந்தப் பெண்ணுக்கு சர்க்கரை நோய் இருப்பது அதற்கே தெரிந்திருக்கவில்லை. அன்றைக்கு அதற்கு சர்க்கரை மிக அதிகமாகி, படுத்ததுமே கோமாவில் அந்தப் பெண் விழுந்து விட்டதாம். மறு நாள் வீட்டுக்கு உரியவர்கள் கதவை உடைத்துக்கொண்டு வந்து உள்ளே தேடி, இந்தப் பெண் நினைவிழந்து கிடப்பதைப்பார்த்து உடனேயே மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். பல நாட்கள் கோமாவிலேயே கிடந்து, ஒரு நாள் நினைவு திரும்பியது அந்தப் பெண்ணுக்கு!! அது வரை அந்தப்பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்த செய்தியைத் தெரிவிக்கவில்லை!! பாவம், இந்தியாவில் அவர்கள் கனவு தானே கண்டு கொண்டிருந்திருப்பார்கள்?

பொதுவாய் நம் நாட்டவர் யாராவது ஒரு முழு வீட்டையோ அல்லது ஒரு வில்லாவையோ வாடகைக்கு எடுத்து, இது மாதிரி ஒரு அறையில் மூன்று பேர், நான்கு பேர் என்று வாடகைக்கு விட்டு அதிகம் சம்பாதிப்பது இங்கு பரவலாக இருக்கிறது. என் வீட்டில் வேலை செய்யும் பெண் பெயர் குமாரி. மூன்று குழந்தைகளுக்குத் தாய். காலை 7 மணிக்கு எழுந்து வேலை செய்யப்போனால் மாலை வீட்டுக்குத் திரும்பும்போது, மொத்தம் 8 வீடுகளில் வேலைகள் முடிந்திருக்கும். ஒரு நாள், குமாரி வழக்கம்போல வீடுகளில் வேலை செய்து விட்டுத் திரும்பிய போது, அந்தப்பெண் குடியிருக்கும் வில்லாவிற்கு முழுவதுமாய் வாடகை கொடுத்துக்கொண்டிருக்கும் ஒருவன் அந்தப்பெண்ணையும் மற்ற பெண்களையும் உள்ளே நுழைய வேண்டாம் என்று சொல்லி விட்டான். கேரள நாட்டவனான அவன் “ வேலை செய்யும் பெண்களுக்கு ஏன் வீட்டை வாடகைக்குக் கொடுப்பது நான் ஏதோ வேறு தொழில் செய்து சம்பாதிப்பதாய் அரசு அதிகாரிகளுக்கு செய்தி போயிருக்கிறது. அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சோதனையிட வரப்போகிறார்கள். அதனால் நான்கு நாட்கள் கழித்து எல்லோரும் வாருங்கள்’ என்று சொல்ல இந்தப் பெண்கள் எல்லோருமே திகைத்துப்போய் ‘ அதுவரை நாங்கள் எங்கே போய் இருப்போம்?’ என்று கேட்க, அவனோ ரொம்ப சாதாரணமாக ‘ அது உங்கள் பிரச்சினை’ என்று சொல்லி கதவை அடைத்துக்கொண்டிருக்கிறான். மாற்றுத்துணிகள்கூட எதையும் எடுத்துக்கொள்ள அவன் அனுமதிக்கவில்லை. அந்த நான்கு நாட்களும் தெரிந்த மற்ற பணிப்பெண்கள் வீட்டில் தங்கி, வீடு திரும்ப கிடைக்குமா, கிடைக்காதா என்ற பயத்திலும் தவிப்பிலும் அவர்கள் அவஸ்தையுடன் நேரத்தைக் கழித்ததைப்பற்றி அறிந்த போது மிகவும் பரிதாபமாக இருந்தது இந்த பணிப்பெண்களை நினைத்து!!

சாண் வயிற்றுக்காக என்பதை விட, தாய் நாட்டில் தன் குடும்பம் நன்றாக வாழ வேண்டும் என்ற நினைப்புடன் கடும் குளிரிலும் தகிக்க வைக்கும் சூட்டிலும் மொழி தெரியாத இடத்தில், அலைந்து திரிந்து கடுமையாக உழைத்து சம்பாதிக்கும் இந்தப் பெண்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்!!



Monday, 16 July 2012

முத்துக்குவியல்கள்!!

அறிந்து கொள்ள வேண்டிய முத்து-1



ஒரு ஆப்பிளை தினமும் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதேயில்லை என்பது பழைய மொழி. இன்றைய புதிய ஆய்வில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சக்கூடியது என்று அமெரிக்காவின் சால்க் ஆராய்ச்சி நிறுவனம் சொல்கிறது. இந்த பழத்தில் உள்ள பிளேலனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்திக்கு இணையாக செயல்படுகிறதாம். உடலில் சர்க்கரை நோய், புற்று நோய் ஏற்படுவதை தடுக்கிறதாம் இந்த ஸ்ட்ராபெரி பழம்!

ரசித்த முத்து:

உறவுகள் பலப்படுவதற்கான இந்த யோசனைகள் மிகவும் சிந்திக்க வைத்தன.

உறவும் நட்பும் உன்னதமாக 9 முக்கியமான சொற்கள்:

1.மிக்க நன்றி

2.நாம்

3.தாங்கள் மனது வைத்தால்

4. இதில் தங்கள் கருத்து என்ன?

5. தங்கள் பணி இதில் சிறப்பானது.

6.மனமார்ந்த பாராட்டுக்கள்

7. ஒப்புக்கொள்கிறேன்

8. இது என்னுடைய தவறு தான்.

9. நானே பொறுப்பு.

ஆச்சரியப்பட வைத்த முத்து!

மக்களுக்கு நன்மை தரக்கூடிய விஞ்ஞானக் கண்டு பிடிப்பு இது.



இப்போதைய சைக்கிள்களைக்காட்டிலும் அதிவேகமாக செல்லக்கூடிய மின்சார சைக்கிள்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. TURBO EBIKE என்றழைக்கப்படும் இந்த மின்சார சைக்கிள் மணிக்கு 28 மைல்கள் வேகம் செல்லக்கூடியவை. இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் உதவியுடன்தான் இந்த சைக்கிள் இத்தனை வேகம் செல்கிறது. இன்னும் மூன்றே வருடங்களில் இந்த மோட்டார் 250 வாட் மின்சக்தி கொண்ட மோட்டாராக மாற்றப்படும் என்றும் இதையும்விட அதிக வேகத்தில் இந்த சைக்கிளை அப்போது செலுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. இது மிகவும் எடை குறைவானது என்பது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிற செய்தியாக இருக்கிறது.

அறிந்து கொள்ள வேண்டிய முத்து-2

பாலை உபயோகிக்கும் விதம்:



கிராமப்புறங்களிலிருந்து வரும் பாலை காய்ச்சும்போது, அது பொங்கியதும் உடனேயே தீயை அணைக்காமல் சுமார் 8 நிமிடங்கள் வரை அதைக் கரண்டியால் கிளறியவாறே காய்ச்ச வேண்டும். அப்போது தான் பால் 100 டிகிரி செல்ஷியஸ் வரை சூடாகி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழியும். பதப்படுத்த பால் ஏற்கனவே காய்ச்சப்பட்டிருப்பதால் அவற்ரை 6 நிமிடங்கள் வரை காய்ச்சினால் போதும். காய்ச்சிய பாலை அடிக்கடி சுட வைக்ககூடாது. இரண்டு தடவைகளுக்கு மேல் சுட வைக்கும்போது அதிலுள்ள விட்டமின்கள் B1, B2, B12 போன்றவை ஆவியாகி விடுகின்றன. அவசரமும் தேவையும் ஏற்படும்போது, மொத்த பாலையும் சூடாக்காமல், எவ்வளவு தேவையோ, அதை மட்டும் சூடாக்குவது நல்லது.

ஆச்சரியப்பட வைத்த முத்துக்கள்-2



1. தலையில் இதயம் உள்ள உயிரினம் இறால்!

2. அணுக்கதிர் வீச்சுக்கு சாகாத உயிரினம் கரப்பான் பூச்சி!!