அனுபவங்களும் மரணமும் நம் கூடவே வரும் நிழல் மாதிரி!
பிரிக்க முடியாதவை! இந்த வேதாந்த உண்மை ஒரு பச்சிளங்குழந்தையின் விஷயத்தில் மனதில்
உரைக்க மறுக்கிறது.
சென்ற வாரம் மனதை வருத்திய இரண்டு சம்பவங்கள்.
முதலாவது ஒரு குழந்தையைப்பற்றியது. இந்தக் குழந்தையின்
வீட்டில் கோழிக்கறி சமைத்திருக்கிறார்கள். அதை சாப்பிட்ட தந்தை, மகன் இருவருக்குமே
சாப்பிட்டதெல்லாம் உடனேயே வெளியில் வர மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்திருக்கிறார்கள்.
ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்த 2 வயது குழந்தை இறந்து விட்டது. காரணம் சாப்பிட்ட
கோழிக்கறியாக இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஒரு வேளை பக்கத்து வீட்டில்
கரப்பான் பூச்சிகளுக்கு மருந்தடித்து, அது காற்றில் பரவி இந்தக் குழந்தையைப்
பாதித்திருக்குமோ என்றும் சந்தேகம். பொதுவாக, ஒரு வீட்டில் கரப்பான்
பூச்சிகளுக்கான மருந்தை ஸ்பிரே செய்யும்போது, குளியலறை, டாய்லட், சமையலறைக்கதவுகளை
இறுக்க மூடி விடவேண்டும். எங்கள் வீட்டில் மருந்து அடிக்கும்போது, எந்தெந்த
அறைகளில் மருந்து அடிக்கிறோமோ, அந்த அறைகளைப் பூட்டுவதுடன் கீழே கதவு
இடைவெளியிலும் டர்கி டவல் கொண்டு இறுக்கமாய் நூல் இடைவெளி கூட இல்லாது மூடி
விடுவோம். இந்த மாதிரி சமயங்களில் சமையலறைக் கதவுகளையும் இது போல மூடுவோம். பூச்சி
மருந்தின் தாக்கம் அந்த அறைகளை விட்டு வெளியே சிறிதும் வராது. இந்த மாதிரி செய்ய
மறந்தால், அந்த விஷக்காற்று, பாத்ரூம் ஜன்னல் வழியே அடுத்த ஃப்ளாட்டிற்குப் போக
வாய்ப்பு உண்டு. அந்த மாதிரியும் இங்கு குழந்தைகள் இறந்து போயிருக்கின்றன முன்பு.
குளிர்சாதனப்பெட்டியை எதற்குத்தான் உபயோகிப்பது என்பது
கணக்கிலேயே இல்லாமல் போய் விட்டது இப்போதெல்லாம். தேவையில்லாத பொருள்களை அங்கு
வைப்பது மட்டுமில்லை, சமைத்த உணவுப்பொருள்கள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அங்கு
சேகரித்து வைக்கப்படுகின்றன. சாதாரணமாக சமைத்த ஒரு பொருளை ஃபிரிட்ஜில் வைத்து, அதை
மறுநாள் சூடுபடுத்தும்போதே அது உடலுக்குக் கேடு விளைவிக்கிறது என்கிறார்க.ள்
ஆராய்ச்சியாளர்கள். பாக்டீரியாக்கள் உருவாவதும் நாட்கணக்கில் சேமித்து வைக்கும்
இறைச்சி, உணவுப் பொருள்களால் இரப்பை சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதுடன் ஒரு வகையான
விஷ வாயுவும் இறைச்சி மற்றும் உணவுப்பொருள்களினின்றும் பரவுகிறது என்கிறார்கள்
உனவு சம்பந்தமான வல்லுனர்கள். இந்தக் குழந்தை எதனால் இறந்தது என்று இன்னும் கண்டு
பிடிக்கப்படவில்லை, ஆனால் மனதை மிகவும் பாதித்தது இந்தத் தளிரின் மரணம்.
இரண்டாவதும் ஒரு மரணம் பற்றியது தான். என்
சினேகிதியின் தாயார் படுக்கையில் விழுந்திருப்பது பற்றியும் அவர்கள் மன உணர்வுகள்
பற்றியும் முன்பே இங்கு எழுதியிருக்கிறேன். அவர்கள் சென்ற வாரம் காலமாகி
விட்டார்கள். அதற்குப்பிறகு தான் பிரச்சினையே ஏற்பட்டிருக்கிறது. மின் தகனம்
செய்வதற்காக ஏற்பாடு செய்ய என் சினேகிதியின் மகன் சென்றிருந்த போது, இறப்புச்
சான்றிதழ் கொண்டு வந்தால்தான் தகனம் செய்ய முடியும் என்றதுடன் அப்படி கொண்டு
வந்தாலும் ஒரு நாளைக்கு 5 பேருக்குத்தான் தகனம் செய்ய வேண்டுமென்ற கணக்கு
இருக்கிறது, இதற்கு நீங்கள் முன்கூட்டியே முன் பதிவு செய்திருக்க வேண்டும்
என்றார்களாம். ‘ எது எதற்குத்தான் முன் பதிவு செய்ய வேண்டுமென்று வரை முறை
இல்லையா? இதற்கு எப்படி முன் பதிவு செய்ய முடியும்?’ என்று என் சினேகிதி
தொலைபேசியில் அழுத போது, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை எனக்கு. அன்று முழுவதும்
அருகிலுள்ள மருத்துவர்களிம் அலைந்தாலும் ‘ இந்த அம்மாவுக்கு சிகிச்சை ஒரு
தடவையாவது அளித்திருந்தால்தான் நான் சான்றிதழ் தர முடியும்’ என்று அனைத்து
மருத்துவர்களும் மறுத்து விட்டார்களாம். அதுவரை சிகிச்சை தந்த மருத்துவர்
வெளியூரில். ஒரு வழியாய் அவர் மறு நாள் நண்பகலில் வந்து இறப்புச் சான்றிதழ் தந்த
பிறகு தான் காரியம் முடிந்திருக்கிறது!!