விபத்துக்கள் மனித வாழ்வில் எந்தெந்த ரூபங்களில்
வருகின்றன என்பதை யாரும் அறிவதில்லை. சில விபத்துக்கள் ஒரு நொடியில் எந்தக்
காரணமுமில்லாமல் நடக்கின்றன! சில விபத்துக்களோ, நம் கவனக்குறைவால் நடந்து நம்மை
பாதிப்பதுடன் பிறரையும் பாதிக்கின்றன! தவறு என்று நன்கு தெரிந்திருந்தும் சில
கோடுகளை நாம் கடக்க முயலும்போது, விபத்துக்கள் ஏற்பட்டு நம் தலையெழுத்தையே
மாற்றுகின்றன!
சென்ற வாரம் உறவினர் ஒருவர் விபத்துக்குள்ளான செய்தி வந்தது.
அவரின் மகளிடம் ஆறுதல் கூற அழைத்துப் பேசிய போது விபத்து எப்படி நடந்தது என்ற விபரம்
தெரிந்தது. 60 வயதான் இவர் சாலையில் பைக்கில் போய்க்கொண்டிருந்த போது முன்னால் சென்ற
லாரி மெதுவாகப் போய்க்கொண்டிருந்ததால் அதை முந்திச் செல்ல பக்கவாட்டில் இறங்கிச்செல்ல,
அங்கே நின்று கொண்டிருந்த காரின் கதவு உள்ளேயிருந்து அப்போது தான் திறக்கப்பட, இவரின்
பைக், காரின் கதவில் மோதி, கதவு அப்படியே காற்றில் பறக்க, இவரது காலில் தொடைவரை கிழிய
அவசர சிகிச்சைப் பிரிவில் இவர் சேர்க்கப்பட்டு, தையல்கள் போடப்பட்டு அதன் பின் பல மணி
நேரங்கள் கழித்துத்தான் ஆபத்தில்லை என்று அறிவிப்பு வந்தது. முன்னால் செல்லும் வாகனம்
மிக மெதுவாகப் போனால் அதை பக்கவாட்டில் சென்று கடப்பது எப்போதும் நடக்கத்தான் செய்கிறது.
ஆனால் அப்படி கடக்கும்போது, எந்த அளவு கவனமும் வேகக்குறைவும் இருக்க வேண்டும் என்பதற்கு
இந்த விபத்து ஒரு உதாரணம்!! அவரின் மகள் அழுத அழுகை இன்னும் நினைவிலேயே நிற்கிறது!
இந்த அளவு மோதியும் அவர் உயிருடன் தப்பிப்பிழைத்து
விட்டார் என்பது ஒரு மகிழ்வு கலந்த ஆச்சரியம்!! சமீபத்தில் ஒரு நண்பர்
குடும்பத்தில், அவர் தந்தை சிறிது மது அருந்தி விட்டு சைக்கிளில் வெளியே
போயிருக்கிரார். அந்த சமயம் சாலையில் இரு கார்கள் ஒன்றுக்கொன்று போட்டி
போட்டுக்கொண்டு வேகமாக வர, ஒன்று அவரை இலேசாக இடித்து விட, அதிக காயங்கள் இன்றி,
அவர் அந்த இடத்திலேயே இறந்து போனார்..
பல வருடங்களுக்கு முன் ஒரு நண்பருக்கு நடந்த விபத்து
ஞாபகம் வருகிறது. இவருக்கு அதிகாலையில் பேப்பர் போடும் வேலை இங்கு. சைக்கிளில்
போய்க்கொண்டிருந்த போது எதிரே அதி வேகமாய் வந்த ஒரு சிறு லாரி இவரை மோத, அப்படியே
தூக்கி எறியப்பட்ட அவர் மயங்கிப்போனார். மனசாட்சிக்குப் பயந்து போன அந்த சூடான்
நாட்டு குடிமகன், அவரை அப்படியே அள்ளி எடுத்து தன் காரில் போட்டு, மருத்துவ
மனையில் கொண்டு போய்ச் சேர்த்தார். கால் எலும்புகள் தூள் தூளாகிப்போன நிலையில்,
அந்த எலும்புகளெல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைத்து அவருக்கு அறுவை சிகிச்சை
நடந்தது இங்கே. கால் சற்றே விந்தி விந்தி நடப்பதைத் தவிர வேறெந்தக் குறையுமின்றி
உயிர் தப்பிப் பிழைத்தார் அவர்!
என் மகனின் பள்ளிப்பருவத்தில், ஒரு நாள், மணி
அடித்ததும் பள்ளிக்கு வெளியிலிருந்து உள்ளே ஓடி வந்த போது, வழியில் இருந்த ஒரு பெஞ்சில்
மோதிக் கீழே விழுந்ததில் நாக்கு முக்கால்வாசி துண்டிக்கப்பட்டு, இரத்தம்
ஒழுகிக்கொண்டிருக்க, என் கணவர் மகனைத் தூக்கிக்கொண்டு ஓட, இங்கே எந்த மருத்துவமனையிலும்
சேர்க்க மறுக்க, இறுதியில் அரசாங்க மருத்துவ மனையில் நாக்கை இழுத்துப்பிடித்துத்
தைத்தார்கள். நாக்கு ஒன்றாய்ச் சேரும்வரை நாங்கள் பட்ட பாடு....!
சமீபத்தில் படித்த செய்தி இது. மனதை மிகவும் பாதித்தது.
ஒரு வீட்டில், நெயில் பாலீஷ் ரிமூவர் உபயோகித்து
விட்டு வீட்டுப் பெண்கள் அதை கவனக்குறைவாய் கீழே வைத்து விட்டு வேறு வேலையைப்பார்க்கச்
சென்று விட்டார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து விழுங்கிய குழந்தை தொண்டை எரிய கத்தியதைத்
தொடர்ந்து அதை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் என்று 5 நாட்கள் சிகிச்சை
செய்திருக்கிறார்கள். ஒன்றுமில்லை என்று வீட்டுக்கு வந்த குழந்தையால் பசி வந்த
போது உணவை விழுங்க முடியாமல் கதறி அழுதிருக்கிறது. மறுபடியும் மும்பையிலுள்ள பிரபல
மருத்துவ மனை சென்று பார்த்தபோது தான்
குழந்தையின் உணவுக்குழல் மூன்றில் 2 மடங்கு எரிந்து போயிருப்பது
தெரிந்திருக்கிறது. உடனே குழந்தையின் அடிவயிற்றில் ஒரு குழாயைச் செருகி அதன் மூலம்
உணவைச் செலுத்தியிருக்கிறார்கள். இப்படியே 5 வருடங்கள் ஒரு நரகமாக சோர்வும்
வேதனையுமாக குழந்தைக்குக் கழிய, உனவின் ருசி எப்படியிருக்கும் என்பதே குழந்தைக்கு
மறந்து விட்டது. கடைசி முயற்சியாக அதற்கு மருத்துவர்கள் ஒரு அறுவை சிக்கிச்சை
செய்தார்கள். எரிந்து போயிருந்த உணவுக்குழாயின் பகுதிகளை நீக்கி விட்டு மீதம்
இருக்கும் பகுதிகளை இனைத்து விட்டார்கள். ஐந்து வருடங்களுக்குப்பிறகு
அந்தக்குழந்தை இப்போது தான் ரசித்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறது!! யாரோ செய்த
தப்பினால் அந்தக்குழந்தை ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறது!
தானாக வரும் விபத்துக்களை நம்மால் தவிர்க்க முடியாது!
ஆனால் விபத்துக்கள் ஏற்பட நாம் காரணமாக வேண்டாம்!
கார் ஓட்டும்போது மேக் கப் போடுவது, முன்னால் போகும்
காரை முந்தப்பார்ப்பது, சாலையைக்கடக்கும்போது கூட மொபைலில் பேசுவது- இதெல்லாம்
வேண்டாமே!
எங்கு பயணித்தாலும், உங்கள் விலாசம், நீங்கள்
சாப்பிடும் மாத்திரை விபரங்கள், உங்களின் மெடிகல் ஹிஸ்டரி, உங்களின் இரத்தத்தின்
குரூப் வகை போன்ற விபரங்கள் அடங்கிய குறிப்பை உங்களுடன் எப்போதும் எடுத்துச்
செல்லுங்கள். விபத்துக்களில் சிக்க நேரும்போது, இந்த விபரங்கள் உங்களுக்கான
சிகிச்சையை துரிதப்படுத்தும்!!