சென்ற வாரம் பிரணயம் என்றதொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். பிரணயம் என்றால் காதல், அன்பு என்று சொல்லியிருக்கிறார்கள். முதுமையில் தடம் பத்திருக்கும் மூவரின் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சிப் பிரவாகங்கள் தான் இந்த படத்தின் கதை. நம் இந்திய திரையுலகின் மூன்று சிறந்த நட்சத்திரங்கள்-விருதுகள் பல பெற்றவர்கள் இந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஜெயப்பிரதா கதாநாயகியாகவும் மோகன்லாலும் அனுபம் கேரும் கதாநாயகர்களாகவும் தங்கள் மன உணர்வுகளை அருமையாகப் பிரதிபலித்திருக்கிறார்கள்.. இது தன் dream project என்று இதன் இயக்குனர் ப்ளெஸ்ஸி தெரிவித்திருக்கிறார்.
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தன் மகன் வெளிநாட்டில் வேலை பார்க்க, தன் மருமகளுடனும் பேத்தியுடனும் வாழும் அனுபம் கேரும் தன் மகள், மருமகனுடன் வாழும் ஜெயப்ரதாவும் லிஃட்டில் சந்திக்கிறார்கள். ஜெயப்ரதா லிஃடிலிருந்து வெளியேறும்போது அனுபம் கேருக்கு அது யாரென்று புரிந்து அவர் பெய்ரைச் சொல்லி அழைக்கும்போது, திடீரென்று ஏற்பட்ட இதயத்தாக்குதலில் ஒரு விநாடியில் கீழே விழுகிறார். ஜெயப்ரதா பதறித்துடித்து அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார். கண்களிலிருந்தும் கண்ணீர் அருவியாய்ப்பொழிய அவரது முன்னாள் வாழ்க்கை நிழலாய்க் கண் முன் விரிகிறது.
நாற்பது வருடங்களுக்குப்பிறகு தன் முன்னாள் கணவரை சந்திக்கையில் பிரிந்த போன தன் மகனை நினைத்தும் மிக இளம் வயதில் தனக்கு அனுபம் கேரிடம் ஏற்பட்ட அன்பை நினைத்தும் குமுறிக் குமுறி தவிக்கிறார் ஜெயப்ரதா. மோகன்லாலிடம் தன் மன உணர்வுகளைப் பகிர்ந்தும் அழுகிறார். பக்க வாதத்தால் செயலிழந்து எந்நேரமும் படுக்கையிலும் வீல் சேரிலும் முடங்கியிருக்கும் மோகன்லால் தன் மனைவியின் உனர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்வது தான் இந்தத் திரைப்படத்தில் மிக அழகு. அனுபம் கேர் மருத்துமனையில் இருக்கும்போதே, அவரின் மருமகளிடம் தான் யாரென்று சொல்லி அழுகிறார் ஜெயப்ரதா. வெளி நாட்டிலிருந்து உடனேயே திரும்பிய மகனுக்கு, குழந்தைப்பருவத்தில் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தாயிடம் ஏற்பட்ட வெறுப்பு அடங்கவில்லை. வார்த்தைகளால் குதறுகிறார். தன் தந்தையின் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாமென்கிறார். இதற்கப்பால் ஜெயப்ரதாவும் மோகன்லாலும் அனுபம் கேரும் நண்பர்களாகப் பழகுவதை மோகன்லாலின் மகளால் ஜீரணிக்க முடியவில்லை. அவரும் தன் வார்த்தைகளால் தன் அன்னையைக் காயப்படுத்துகிறார்.
மன அமைதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் இந்த மூவரும் தன் குழந்தைகளிடம்கூட சொல்லாமல் ரொம்ப தூரத்திற்கு பயணம் செல்லுகிறார்கள். வழியெல்லாம் சிரித்து, ஆடிப்பாடி மகிழ்ந்து போகிறார்கள் இவர்கள். திடீரென்று மோகன்லாலுக்கு மறுபடியும் பக்கவாதம் வந்து தாக்க, அவர் ஒரு மருத்துவமனியில் சேர்க்கப்படுகிறார். உயிருக்குப் போராடி பிறகு கண் விழிக்கும் அந்த நிலையிலும் மோகன்லால் ‘தனக்கு ஏதேனும் ஆகி விட்டால் இருவரும் மறுபடியும் ஒன்று சேர வேண்டும்’ என்கிறார். அதை மறுத்து, தன் கணவரை தான் மிகவும் நேசிப்பதாக சொல்லி அழும் ஜெயப்ரதா, தாங்கள் தங்குமிடத்துக்கு திரும்புகிறார். அந்த நிலையில் அவரின் மகனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. ‘தன் தவறை உணர்ந்து கொண்டதாகவும் தன் தாயின் உணர்வுகளைப்புரிந்து கொண்டதாகவும் தன் அம்மாவை மிக மிக நேசிப்பதாகவும்’ சொல்லி விடை பெற்றுச் செல்லும் மகனை நினைத்து கண்ணீருடனும் சந்தோஷத்துடனும் புன்னகைக்கிறார் ஜெயப்ரதா. அப்படியே அனுபம் கேரின் மீது சாய்ந்து இறந்து போகிறார்.
ஜெயப்ரதாவின் தவிப்பும் கண்ணீரும் நிறைந்த நடிப்பு மனதை நெகிழ்த்துகிறது. மோகன்லாலிடம் அவர் வைத்திருக்கும் பிரியத்தை படம் முழுவதும் அவர் வெளிப்படுத்தும் விதம் ஒரு காவியம். முன்னாள் கணவரைப் பார்த்த பின் அவரிடம் தான் வைத்திருந்த பாசம், பிரியம் எல்லாம் உடைந்து போன சோகமும் ஒரு பெண்ணாக நாற்பது வருடங்களுக்குப்பிறகும் அவரின் மனதை வலிக்கச் செய்கிறது. தன் மகனை நினைத்து, அவனின் வெறுப்பை நினைத்துக் குமுறும்போது ஒரு தாயாக அவர் தவிக்கிறார். ஒரு சமயம் அனுபம் கேரும் அவரும் தனிமையில் சந்திக்கும்போது, அனுபம் ‘ அவனுக்கு தாயன்பு கிடைக்காதது உன் தவறு என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறான். எங்கே என்மீது வைத்திருக்கும் அவனின் பிரியமும் மதிப்பும் குறைந்து போய் விடுமோ என்ற பயத்தில் தவறு செய்தவன் நான் தானென்று இதுவரை சொல்லவில்லை. உன் மீது இந்த அளவு வெறுப்பை அவன் காட்டுவதைப்பார்க்கும்போது உண்மையைச் சொல்லி விடுவதே நல்லது என்று தோன்றுகிறது’ என்று கலங்கும்போது ‘வேண்டாம். என்னை இதுவரை தவறாக நினைத்ததே போதும். இனி உங்களையும் தவறாக நினைக்க வேண்டாம்’ என்னும்போது அவரின் நல்ல மனம் வெளிப்படுகிறது.
மோகன்லாலும் ஜெயப்ரதாவும் ஒருத்தருக்கொருத்தர் பிரியமாகப் பேசிக்கொள்ளும்போதும் மோகன்லால் தன் மனைவியை மிக உயர்ந்தவராய் ஆராதித்துப் பேசும்போதும் அவர்களைத் தள்ளி நின்று ரசிப்பதும் சில சமயம் அந்த அன்பைப்பார்த்து மனம் கலங்கி தன் இழப்பு நினைவுக்கு வந்து ஒரு விநாடி சோகமாவதுமாக அனுபம் கேர் மிக அழகாக நடித்திருக்கிரார்.
மோகன்லால் நடிப்பைப்பற்றி சொல்லவே வேண்டாம். கேரளத் திரையுலகில் தன் நடிப்பால் உயர்ந்து நிற்பவர். அனுபம் கேர் ரோல் தான் அவருக்கு முதலில் கொடுக்கப்பட்டது. அதை மறுத்து இந்தக் கதாபாத்திரம்தான் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டாராம் மோகன்லால். அதை அவர் மிக அழகாக நியாயப்படுத்தியிருக்கிறார் தண் தன் மிகச் சிறந்த நடிப்பினால். இயங்க முடியாத உடலின் வலியையும் அவஸ்தையையும் பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில் மன உணர்வுகளை மிக அழகாகப் பிரபலித்த படம் இது!!
படங்கள் உதவி: கூகிள்