Sunday 26 June 2011

தஞ்சை பெரிய கோவில்.. ..

என் ஊரான தஞ்சையின் பெருமிதமிக்க அழகான அடையாளம்தான் தஞ்சை பெரிய கோவில். பெரிய கோவிலுக்கு, எழுத்தாளர் கல்கி அவர்களும் தன் பங்கிற்கு புத்துயிர் கொடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். ராஜராஜ சோழனை தன் எழுத்தால் மீண்டும் மக்கள் மத்தியில் அவர் உலவ விட்டார். என் இளமைப் பருவ நினைவுகளில் கல்கியின் பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழனும் அகிலனின் ‘ வேங்கையின் மைந்தனான’ ராஜேந்திர சோழனும் எப்போதும் வலம் வந்து கொண்டேயிருந்தார்கள்.


வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாபெரும் கோவிலைப் பார்க்கும்போதெல்லாம் ஏற்படும் பிரமிப்பும் ஆச்சரியமும் இன்னும்கூட அடங்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகும் அத்தனை கம்பீரமாய், ஏகாந்தமாய் அசத்தும் அழகுடன் நின்று கொண்டிருக்கும் இந்தப் பெருவுடையார் கோவிலைப் பற்றி எழுத வார்த்தைகள் இல்லை. என்றாலும் இந்தப் பெரிய கோவிலினைப்பற்றி ஒரு பதிவிட வேண்டுமென்ற என் கனவை, தாகத்தை கொஞ்சமாவது இங்கே பகிர்ந்து கொள்கிறேன்!

இக்கோவில் ராஜராஜ சோழன் காலத்தில் ‘இராஜராஜீஸ்வரம், இராஜராஜேச்சரம்’ என்றழைக்கப்பட்டு, பிறகு நாயக்க மன்னர்கள் ஆண்ட காலத்தில் ‘ பெருவுடையார் கோயில்’ என்றழைக்கப்பட்டு, பிறகு 17-ம் நூற்றாண்டுகளில் ஆண்ட சரபோஜி போன்ற மராட்டிய மன்னர்களால் ‘பிரஹதீஸ்வரர் கோயில்’ என்றழைக்கப்பட்டது.

ராஜராஜ சோழன் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் காஞ்சிக்கு வெளியே நிர்மாணித்திருந்த கைலாசநாதர் கற்கோயிலின் பேரழகில் மயங்கி " கச்சிப்பேட்டுப் பெரிய தளி' என்று போற்றினார். அப்போது அவர் உள்ளத்தில் எழுந்த எழுச்சி மிக்க கனவே பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோவிலாக உருவெடுத்தது.விடியற்காலையில் பெரிய கோவிலின் தோற்றம் ..  
 இசை, ஓவியம், சிற்பம், நடனம் எனப் பல கலைகள் கொண்டு திகழ்ந்த ஒரே கோயில் தஞ்சை பெரிய கோயில் மட்டுமே. இக்கோவிலைக்கட்டிய தலைமைச் சிற்பியின் பெயர் குஞ்சர மல்லன். அவன் பெயரும் அவன் கீழ் வேலை செய்த அத்தனை பணியாளர்களின் பெயர்களும் கோவில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோவிலுக்கு மட்டுமேயுள்ள தனிச் சிறப்பாகும். கோவிலைப் பாதுகாக்க 118 ஊர்களிலிருந்து மெய்க்காவலர்கள் வரவழைக்கப்பட்டார்கள். கோவிலில் வழிபாட்டிற்கு பயன்பட்ட கற்பூரம் சுமத்ரா தீவிலிருந்து வரவழைக்கப்பட்டது.

பெரிய கோவில் முழுவதும் கட்டுமானப்பணி 1006ல் தொடங்கி 1010ல் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. தஞ்சாவூர்ப்பகுதி முழுவதும் வயல்வெளிகளும் ஆறுகளும் வாய்க்கால்களும் நிறைந்த பாறைகளே இல்லாத பசுமை நிறையப் பெற்ற சமவெளிப் பிரதேசம். மலைகளோ, கற்களோ கிடைக்காத சமவெளிப்பிரதேசத்தில் அறுபது, எழுபது கல் தொலைவிலிருந்து கற்களைக் கொண்டு வந்து, செம்மண் பிரதேசத்தில் மரம், பூராங்கல், சுடு செங்கல், சாந்து, களிமண், காரை என்று எதுவுமே இல்லாமல் கெட்டிப்பாறைகள் கொண்டு வந்து இத்தனைப்பெரிய கோவிலைக்கட்டியது ராஜராஜ சோழனின் பொறியியல் திறமைக்குச் சான்று!

மண்ணியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, உறுதியான கற்கள் திருச்சியின் மானமலையிலிருந்தும் புதுக்கோட்டை குன்னாண்டார் கோயில் பகுதியிலிருந்தும் பெரிய சிலைகளுக்கான கற்கள் பச்சைமலையிலிருந்தும் பெரிய லிங்கத்திற்கான கல் திருவக்கரையிலிருந்தும் வரவழைக்கப்பட்டு கற்பாறையில்லாத தஞ்சை பூமியில் ஏறத்தாழ 2 லட்சம் டன் எடையுள்ள கற்களைக்கொண்டு 216 அடி உயரமுள்ள ஒரு மலையாகவே ராஜராஜன் பெரிய கோவிலைக்கட்டியுள்ளார்.

இடம் தேர்வானதும் சமய நெறிகள் கடைபிடிக்கப்பட்டு, திசை வாஸ்து பார்க்கப்பட்டு, கோவில் கட்டிய பகுதி முழுவதும் பசுக்களை பல வருடங்கள் கட்டி வைத்து அவற்றின் சாணம் கோமியம் இவற்றால் தோஷங்கள் நீக்கப்பட்டு சுத்தமாக்கி, மண் கெட்டிப்பட யானைகளைக் கட்டி வைத்து பதப்படுத்தி, பூஜைகள் பல செய்து கட்டுமானப்பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இன்று கடைக்கால் நடுவதற்கு முன் நிலத்தைக் கோடுகளால் பிரிப்பது போல, அன்றைக்கு இடத்தை நெல்லால் பரப்பி, கோடுகளும் கட்டங்களும் போட்டு ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, பாறையின் அழுத்தம், தாங்கு திறன் இவற்றை சோதித்து, அவற்றில் விரிசல்கள் ஏற்படுகின்றதா என்பதை கவனித்து கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்படிருக்கின்றன. கோபுரத்தின் உட்பகுதியில் மணலைப் பரப்பி அதன்மீது ஏறி நின்று கொண்டு கட்டுமான வேலைகளைச் செய்து, உச்சி விமான கற்களைப்பதித்த பிறகு மணல் அத்தனையையும் நீக்கியிருக்கிறார்கள்.

மற்ற கோவில்களில் தானங்கள் செய்தவர்கள் பெயர்கள் மட்டுமே கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கும். ராஜராஜன் காலத்துக் கோயில்களில் மட்டும்தான் தானங்கள் செய்தவர்கள் மட்டுமல்லாது, வேதம் ஓதிய சட்டர்கள், ஆடல் மகளிர், தச்சர்கள், பக்திப்பாடல்கள் இசைத்த பிடாரர்கள், நட்டுவனார்கள், கணக்கர்கள், விவசாயிகள், வணிகர்கள், கோவிலைக்காத்த வீரர்கள் இப்படி அனைவரது பெயர்களும் மன்னனுக்கு இணையாக கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது ராஜராஜ சோழனின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தஞ்சைக்கோவிலைக்கட்டிய குஞ்சர மல்லன், அவன் கீழ் பணி செய்த 1600 தொழிலாளர்கள், அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்த தொழிலாளி அனைவருக்குமே தன் பெயரான ‘ராஜராஜன்’ என்பதையே பட்டப்பெயராக அறிவித்து அவர்களது பெயர்களைக் கல்வெட்டுகளில் பொறித்திருப்பது ராஜராஜனின் விசால மனதுக்குச் சான்று!! மற்ற கோவில்களில் சுற்றுப்புற கோபுரங்கள் பெரியதாயும் கருவறைக்கோபுரம் சிறியதாகவும் இருக்கும். ஆனால் பெரிய கோவிலில் சுற்றுக்கோபுரங்கள் சிறியதாயும் கருவறைக்கோபுரம் பெரியதாயும் அமைந்துள்ள விதம் ‘யுனெஸ்கோ’ இந்தக் கோவிலை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க ஒரு காரணம்.

இக்கோவிலின் விமானமான ‘ தக்ஷிணமேரு’ 216 அடி உயரமானது. விமானத்தளக்கல்லின் நான்கு மூலைகளிலும் இரண்டிரண்டு நந்திகள் உள்ளன. கோபுரம் முழுவதும் செப்புத்தகடுகளால் போர்த்தி பொன் வேய்ந்து குடமுழுக்கு நடத்தியிருக்கிறார் ராஜராஜர். 216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததை ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியில் குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் எதிரிகளின் படையெடுப்பின்போது அவை அத்தனையும் சூறையாடப்பட்டு விட்டது. கருவறைக்கு மேல் மகாமண்டபம் வழியாக இரண்டாம் தளம் சென்றால் அங்கிருந்து கோபுரத்தின் உட்புறம் பிரமிட் வடிவத்தில் குவிந்து 13 அடுக்குகளாக உயர்ந்து, கடைசியாக 8.7 மீட்டர் பக்க அளவுகள் உள்ள சதுர தளத்தை உண்டாக்கியிருப்பதைப் பார்க்க முடியும். விமானத்தினுள் அழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

கீழ்தளத்தின் உள்ளே இரு சுவர்கள் உள்ளன. அதற்கிடையே உள்ள அகலம் 2 மீட்டர். இரண்டு தளம் வரை அப்படியே சென்று, அதன் பின் சிறிது சிறிதாகக் குறுக்கி ஒரே சுவராக்கியுள்ளனர். அதன் மேல்தான் அந்த வானளாவும் விமானம் நிற்கிறது.


கோபுரத்தின் மேலுள்ள சதுர தளம் ஒரே கல்லினால் ஆனது என்று சொல்லப்படுவதும் சாரப்பள்ளம் என்னும் கிராமத்திலிருந்து சாரம் கட்டி 80 டன் எடையுள்ள பிரம்மாந்திரக்கல் ஏற்றப்பட்டது என்பதும் நிழல் கீழே விழாத கோபுரம் என்பதும் வளர்ந்து வருகிற நந்தி என்பதும் போன்ற தகவல்கள் அனைத்துமே தவறானவை. சரித்திர ஆராய்ச்சி வல்லுனர்கள் இவையெல்லாமே தவறு என்று நிரூபித்திருக்கிறார்கள்.

தஞ்சை கோவிலின் பயணம் அடுத்த பதிவிலும் தொடர்கிறது .. .. ..

Monday 20 June 2011

அன்பென்பது யாதெனில்......

“ நமக்கு வரும் புகழெல்லாம் நமக்குச் சொந்தமல்ல. நம்மைப் பெற்றவர்களுக்கே சொந்தம். இதை உணர்ந்தவர்கள் வாழ்வில் உயர்ந்து நிற்கிறார்கள். உணராதவர்கள் தங்கள் நிலையில் தாழ்ந்து விடுகிறார்கள்!”

சமீபத்தில் இந்த வரிகளை ஒரு புத்தகத்தில் படிக்க நேர்ந்தது.

எத்தனை சத்தியமான வரிகள்!

இளம்பிராயத்தினர் யாராக இருந்தாலும் அவர்களின் சாதனைகளுக்காக, விருதுகளுக்காக வாழ்த்து சொல்ல நேரிடும்போது, முதலில் ‘ உன் பெற்றோரை கடைசி வரை நன்றாக கவனித்துக்கொள்’ என்று ஆரம்பித்து பிறகு தான் வாழ்த்து சொல்லி முடிப்பேன்.

பெற்றோரை கவனிப்பது என்று ஆரம்பித்ததுமே சில வருடங்களுக்கு முன் குமுதம் குழுமத்திலிருந்து வெளி வந்து கொண்டிருந்த ஜங்ஷன் என்னும் மாத இதழில் வெளி வந்த ஒரு உண்மை நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

கிராமத்து வெள்ளந்தியான தம்பதியர் அவர்கள். ஒரே மகனுக்கு ஓரளவு படிக்க வைத்து, திருமணமும் செய்விக்கிறார்கள். வீட்டையும் மகனுக்கே எழுதி வைத்து பெரியவர் இறந்து விடுகிறார். அதன் பின் தான் அந்த அம்மாவிற்கு திண்டாட்டமாகிறது. நல்லது எது சொன்னாலும் விரோதமாகவே பார்க்கிறாள் மருமகள். கடைசியில் சாப்பாடு போடுவதும் பிடிக்காமல் அவள் மனம் கசந்து போக, தன் கணவனை உசுப்பேற்றுகிறாள். அவளின் தொல்லை தாங்காமல் அவனும் அம்மாவை ' டாக்டரிடம் செல்லலாம்' என்று சொல்லி சென்னக்கு அழைத்துச் செல்கிறான். நேரே கடற்கரைக்குச் சென்று அவளை அங்கே உட்கார வைத்து, பாத்ரூம் சென்று வருவதாகச் சொல்லி அவளை அப்படியே கை கழுவி விட்டு சென்று விடுகிறான். அந்த பேதைத் தாயும் அவன் வருவான், வருவான் என்று காத்திருந்து, இரவு நேரமானதும் அந்தத் தாயின் புலம்பலைக் கேட்டு சில நல்ல உள்ளம் படைத்த போலீஸ்காரர்கள் அவரை ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அந்த முதியோர் இல்லத்தில் இதையெல்லாம் கேட்டு பதைபதைத்துப்போன இளம் ரிப்போர்ட்டர், அவர்களுக்கு மனம் நெகிழ்ந்து நன்றி கூறுகிறார். அப்போது அவர்கள் அந்த அம்மா அழுது கொன்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்பெண் அவரிடம் போய் கேட்கிறது, ' ஏம்மா! அது தான் இப்போது இங்கே பத்திரமாக வந்து சேர்ந்து விட்டீர்கள் அல்லவா? இன்னும் ஏன் அழுகிறீர்கள்?' என்று! அதற்கு அந்த அம்மா விழிகள் பளபளக்கச் சொல்கிறார், " இல்லைம்மா! என் மகன் ஒருவேளை அதற்கப்புறம் என்னைத் தேடி வந்திருந்தால் என்னைக் காணாமல் தவித்திருப்பானே அம்மா!"

அந்த பெண் வார்த்தைகள் வராமல் அசந்து போனாள். படித்து முடித்த நிலையில் நானும் தான்.

இது தான் தாய்மையின் மகத்தான சிறப்பு என்பதை தாயுள்ளம் கொண்ட யாராலுமே புரிந்து கொள்ள முடியும்.

எப்போது இதை நினைத்தாலும் மனதில் ஒரு சின்ன வலி ஏற்படும். துரோகங்கள் பல உண்டு. ஆனால் பெற்ற தாய்க்கு உணவோ, பொருளோ எதுவும் கொடுக்காமல், தன்னந்தனியாக யாரையுமே தெரியாத ஒரு ஊரில் அப்படியே தவிக்க விட்டுச் சென்ற துரோகத்திற்கும் குரூரத்திற்கும் என்ன பெயர் கொடுப்பது? எத்தனை நல்ல விஷயங்கள் அன்பு, பாசம், கருணை, நன்றியுணர்வு என்று உலகில் இருக்கின்றன! இதில் ஏதாவது ஒன்று கூடவா அந்த மகனுக்கு இல்லாமல் போய்விட்டது?

யோசித்துப்பார்க்கும்போது, அந்தத் தாயார் அவனை வளர்த்த விதம் சரியில்லையா அல்லது அவளின் அன்பை அவனுக்கு உணர்த்திய விதம் சரியில்லையா என்ற கேள்வி எழுகிறது.குழந்தைகளைப் பொதுவாக எத்தனையோ கனவுகளுடன் தான் வளர்க்கிறோம். அவர்களுக்கு நல்ல படிப்பைத் தருகிறோம். நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லித் தருகிறோம். ஆனால் முக்கியமான ஒன்றை பெரும்பாலோனார் சொல்லித்தருவதில்லை.

நம் அன்பு எத்தகையது என்பதையும் நம் குழந்தைகளிடம் அவசியம் சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். ' உன் மீது நாங்கள் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறோம், உன் மீது எல்லையில்லாத பிரியம் வைத்திருக்கிறோம், எங்கள் வாழ்க்கையின் அத்தனை நம்பிக்கைகளும் நீதான் ' என்று ஒவ்வொரு கட்டத்திலும் சொல்லி சொல்லித்தான் வளர்க்க வேண்டும். தாய் தந்தையின் அன்பையும் நம்பிக்கையையும் முழுமையாகப் புரிந்து கொன்ட குழந்தை என்றுமே அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது.

ஓரளவு வளர்ந்ததும் வீட்டிலிருக்கும் பிரச்சினைகளையும் சொல்லி வளர்க்க வேண்டும். நம் சிறகுகளுக்குள் பொத்தி பொத்தி வளர்த்த குழந்தைகளுக்கு, அதற்கான சமயம் வரும்போது சிறகுகளை விரித்துப் பறக்கவும் சொல்லித்தர வேன்டும். சிறகு முளைக்குமுன் பறக்க எத்தனிப்பது எத்தனை ஆபத்தானது என்பதையும் சொல்லித் தர வேன்டும். எத்தனை உயர உயர பறந்தாலும் வேர்கள் எங்கே இருக்கின்றன என்பதையும் உணர வைக்க வேண்டும். இப்படி வளர்க்கப்படும் குழந்தை என்றுமே அதன் பெற்றோர் பெருமைப்படும்படி தான் வளரும்.

மனதில் இருக்கும் அன்பை சிலர் வெளிப்படையாக காட்ட மாட்டார்கள். பிரச்சினைகள் நேரும்போது, 'என் மனசு முழுவதும் அன்பை வைத்திருந்தேனே, சொன்னால்தான் அன்பா? அதை உணர்ந்து கொள்ள முடியாதா?' என்று புலம்புவார்கள். எப்போதுமே அன்பை வெளிப்படுத்தினால்தான் அடுத்தவருக்கு அந்த அன்பின் ஆழம் புரியும். மலர்ந்தால்தான் பூவின் மணத்தை நுகர முடியும் ரு தடவை அரட்டை அரங்கத்தில் விசு சுவாரஸ்யமான ஒரு விஷயம் சொன்னார். அவருடைய டெளரி கல்யாணம் என்ற திரைப்படமும் டி.ராஜேந்தரின் ' தங்கைக்கோர் கீதம் என்ற திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானதாம். இரண்டுமே புகழ் பெற்றாலும் இவரது படம் 100 நாட்கள் மட்டுமே ஓடியதாம். ராஜேந்தரின் படமோ வெள்ளி விழா கொண்டாடியதாம். இவர் ஒரு நண்பரிடம் கேட்டாரம்' இரண்டு பேருமே அண்ணன் தங்கை பாசத்தை வைத்துத் தான் படம் எடுத்திருக்கிறோம். எப்படி அவருடைய படம் மட்டும் வெள்ளி விழா கொண்டாடியது? ஏன் என் படம் 100 நாட்களைத் தாண்டவில்லை?' என்று! அதற்கு அவருடைய நண்பர் ' நீ உன் தங்கையிடம் எதையும் சொல்லிச் சொல்லி வளர்க்கவில்லை. உன் கஷ்டங்கள்கூட அவளுக்குத் தெரியாதுதான் வளர்த்தாய். அவரோ படம் முழுவதும் தன் அன்பையும் கஷ்டங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார். இது தான் இந்த வித்தியாசத்திற்குக் காரணம்' என்று பதிலளித்தாராம்.

அன்போ, பாசமோ, நன்றி உணர்வோ எதுவாயிருந்தாலும் அடுத்தவரிடம் அதை முழுமையாக வெளிப்படுத்தினால்தான் அந்த உறவு நீடித்து வாழும்.

Sunday 12 June 2011

இது என்று சொர்க்க பூமியாகும்?

சில மாதங்கள் முன்பு, ஒரு மங்கையர் இதழில் திருமதி.ரேவதி சங்கரன் எழுதியிருந்த சில வரிகள் மனதை மிகவும் நெகிழ வைத்தன.அவர்கள் மூன்று தலைமுறைக்கு முன்னால் நம் பாட்டிமார்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி அழகாக எழுதியிருந்த விபரங்கள் நம் பழந்தமிழ் வாழ்க்கையை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தன என்று தான் சொல்ல வேண்டும்!


அந்த வரிகள்.. .. ..


" சம்பாத்தியம் என்பது ஆண்களின் இலக்கணம் என்றாலும் அன்று வீட்டுப் பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கியவள் பெண்தான். கையில் வரும் பொருள், கழனியிலிருந்து வரும் விளைச்சல், பட்டுவாடா, சேமிப்பு இதிலெல்லாம்


அவள் தான் மதி மந்திரி. உப்பு, புளி, மிளகாய் போன்ற சாமான்களை மொத்தமாக வாங்கி அவற்றை சேமித்த திறமையில் அவள் உணவு மந்திரி. கையில் இருப்பு அதிகமானால் அவற்றை குழந்தைகளுக்கு நகைகளாய் வாங்கி சேமித்த நிதி மந்திரி. சாதாரண உடல் நலக்குறைவுகளுக்கு மருத்துவச் செலவு ஆகாமல் கை வைத்தியம் பார்த்து சமாளித்த வகையில் சுகாதார மந்திரி. இப்படி தனக்கென வாழாத தன்மைதான் அன்றைய காலக்கட்டத்தில் பெண்களின் வாழ்க்கையாக இருந்தது! அதற்கு பிறந்த வீடு தான் பயிற்சிக் களம். புகுந்த வீடு கற்றவைகளை செயலாக்கிய ஆடுகளம்!"


உண்மைதான்!


என் மாமியார் அந்தக் காலத்தில் கொசுத்தொல்லைகளை நீக்க வரட்டிகளைக் கொளுத்தி மூட்டம் போடுவார்களாம். அதற்காகத் தொழுவத்திலுள்ள அத்தனை பசுஞ்சாணத்தையும் சுத்தம் செய்யும் பெண்களிடம் வரட்டி தட்டச் சொல்லி, மூன்றில் ஒரு பங்கை அவர்களுக்குக் கொடுத்து விடுவார்களாம். வரட்டிக்கு வரட்டியும் ஆயிற்று! காசு செலவழிக்காமல் மிச்சம் பிடித்த திருப்தியும் கிடைத்தாயிற்று! இது போலவே தென்னை மரங்களில் அசடு எடுக்கும்போது சில கீற்றுக்களும் கீழே விழும். அவற்றையெல்லாம் சேகரித்து, ஆட்களிடம் கொடுத்து ஓலைகளை நீக்கி, குச்சிகளைச் சேர்த்துக்கட்டி துடைப்பங்கள் ஒரு வருடத்திற்கு சேகரித்து விடுவர்களாம். கூலி அதே மூன்றில் ஒரு பங்கு துடைப்பங்கள்தான்! அது போலவே அம்பாரமாய்க் குவிந்து கிடக்கும் புளியை நார், கொட்டைகள் நீக்கி பெண்களை வைத்து சுத்தம் செய்வதற்கும் இதே கணக்கு தான்.

சுத்தம் செய்த புளியை இத்தனை நாட்களுக்கு இவ்வளவு என்று கணக்கிட்டு உருண்டைகள் பிடித்து பானைகளில் வைக்கப்பட்டு பரணில் ஏற்றி வைத்து விடுவார்களாம். மிளகாய்களை மூட்டையாய் கட்டித் தொங்க விட்டு முடிச்சு போட்ட இடத்தில் ஒரு வரட்டியையும் சொருகி வைப்பார்களாம். மேலியிலிருந்து எலி வந்து தாவும்போது அது முதலில் வரட்டியில் தான் விழும். அதால் பாலன்ஸ் பிடிக்க முடியாமல் மூட்டையைக்கடிக்க முடியாமல் எலி கீழே விழவே இந்த ஏற்பாடு! எத்தனை புத்திசாலித்தனம்! எத்தனை முன் யோசனை!! பால், தயிர், ஜீனி போன்ற பொருள்களை வலை பீரோவில் வைத்து அதன் நான்கு கால்களும் தண்ணீரில் பதிந்திருக்குமாறு வைத்து விடுவார்களாம். இந்த இயற்கையான பாதுகாப்பு அரண்கள் பொருள்களை அன்றைக்கு ரொம்ப நாட்களுக்கு கெடாமல் பாதுகாத்தன.


இன்றைக்கோ காசு கொடுத்து வாங்கிய குளிர்சாதனப்பெட்டியைக்கூட பாதுகாக்க நிறைய பேருக்குத் தெரிவதேயில்லை. அசுத்தமாயும் அத்தனை குப்பைகளும் அங்கே தான் குவிந்திருக்கிறது!

யாரும் சொல்லித்தராமலேயே நல்ல பழக்க வழக்கங்களையும் ஒழுக்கத்தையும் அன்றைய வாழ்க்கை சொல்லித்தந்தது. புத்தகங்கள் சொல்லித் தந்தன. ஏன், சில நல்ல திரைப்படங்கள்கூட சொல்லித்தந்தன என்பேன்!


பள்ளிக்கூட வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன். நான்கைந்து கிலோ மீட்டர்கள் நடந்து போக வேன்டும். ஒரு கையில் சாப்பாட்டுடனும் மறு கையில் புத்தகச்சுமைகளுடனும் போகும் போது வழியில் தென்படும் காட்சிகளை ரசித்துக் கொண்டே போனதில் சோர்வை உணர்ந்ததேயில்லை! வழியெல்லாம் வீதிகளின் இரு மருங்கிலும் வீட்டு வாசல்களில் கோலங்கள் அழகாய்ப்போட்டிருப்பார்கள். அதுவும் எப்படி? கரியைப் பொடித்துக் குழைத்து மண்ணாலான வாயிற்புறத்தை மெழுகி, மேடு கட்டி அதன் பிறகு வாசலை அடைத்து சிக்குக்கோலம் போட்டிருப்பார்கள். கருமை நிறப்பின்னணியில் வெண்ணிறக் கோலம் பூக்களும் சித்திரங்களுமாய் அத்தனை அழகாயிருக்கும். இதையெல்லாம் பார்த்துப்பார்த்தே கோலம் கற்றுக்கொண்டு வீதியடைத்து போடும் பழக்கம் வந்தது.

புலர்ந்தும் புலராத நேரத்தில் எதிரே இருந்த குளத்திற்கு பாத்திரங்களைக் கழுவ எடுத்துக்கொண்டு போகும்போது தினந்தோறும் வைகறையின் அழகையும் புள்ளினங்கள் பறப்பதையும் கீழ்திசையில் சிவந்த ஒளிக்கீற்றுக்களையும் ரசிக்கும் பழக்கம் வந்தது. காலை பத்து மணிக்கு தோழியருடன் குடங்களை எடுத்துக் கொண்டு ஆற்றுப்பக்கம் சென்று, ஆசை தீர நீந்தி விட்டு, துவைத்த துணிகளையும் நல்ல தண்ணீரையும் எடுத்துக்கொண்டு வருவது வழக்கமாயிருந்தது. நீச்சல் இப்படித்தான் கற்க முடிந்தது. இப்படி எத்தனை நல்ல பழக்க வழக்கங்களை இயற்கை சொல்லிக்கொடுத்தது! சின்ன வயதில் அன்றைய பிரபல நாதஸ்வர வித்வான் கர்நாடக சங்கீதம் கற்றுத்தர தினந்தோறும் வீட்டுக்கு வருவார். பன்னிரெண்டு வயதில் வெளியே விளையாடப்போகாமல் இப்படி சங்கீதம் கற்றுக்கொள்வது அன்றைக்கு வேப்பங்காயாக இருந்தாலும் முடியாது என்றோ பிடிக்கவில்லை என்றோ வீட்டில் சொல்லி விட முடியாது. சொல்லவும் தெரியாது. அன்றைக்கு அப்படி கற்றதன் பலன் இன்றைக்கும்கூட ராகங்களை பிரித்தறிந்து ரசிக்க முடிகிறது! நல்ல விதைகள் என்றைக்காவது பூவுடனும் காயுடனும் பூத்துக்குலுங்கி நமக்குப் பலன் தருமென்பது நிச்சயம்!


சமையலும் அப்படித்தான். ஒரு சின்ன பாராட்டு தந்தையிடமிருந்து கிடைத்து விட்டால் போதும், அம்மாவிற்குத் தெரியாமல் அடுப்படி புகுந்து விதம் விதமாக சமைத்துப்பழகும் ஆர்வம் தானாகவே வந்தது. நூலகம் சென்று வாசிக்கும் பழக்கம் அந்த வயதிலேயே வந்தததால் Keats, Milton, Robert Browning, wordsworth போன்ற ஆங்கில கவிஞர்களும் பாரதியும் அகிலன், கல்கி, ராஜம் கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி, கிருஷ்ணா போன்ற அருமையான தமிழ் எழுத்தாளர்களும் சின்ன வயதிலேயே பரிச்சயமாகி மனதுக்கு நெருங்கியவர்களாய் ஆனார்கள். இவர்களின் எழுத்துக்கள் அருமையான மன உணர்வுகளையும் சத்தியக்கோட்பாடுகளையும் மனதில் என்றுமே வளர்த்துக்கொண்டிருந்ததால் வாழ்க்கைப்பள்ளியில் இவர்களுமே நல்ல ஆசான்களாக வலம் வந்தனர்.


இன்றைக்கு வாழ்க்கையை ரசிக்கவும் நல்ல பழக்கங்களைக் கற்கவும் அவற்றை செயலாக்கவும் குழந்தைகளுக்கு அவற்றைச் சொல்லிக் கொடுத்து மனதில் பதிய வைக்கவும் எங்கே நேரமிருக்கிறது?


எத்தனை மாற்றங்கள் அன்றைக்கும் இன்றைக்கும்! மாற்றங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லைதான்! புதிய மாற்றங்களும் புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தலைமுறைகளால் உருவாக்கப்பட்டு வாழ்க்கை நடைமுறையில் புது இரத்தம் பாய்ந்தால்தான் வளரும் தலைமுறைகள் சிறந்து வாழ்வார்கள் என்பதும் உண்மைதான்! ஆனால் உயர்ந்த சிந்தனைகளும் நல்ல பழக்க வழக்கங்களும் ஏன் அழிய வேண்டும்? “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற வாக்கே இருக்கிறது. பழையனவற்றில் நல்லவை நீடித்தலும் புதியனவற்றில் நல்லதல்லாதவை அழிதலும் உண்டானால் நம் தாய் நாடு சொர்க்க பூமியாகி விடாதா?


Wednesday 8 June 2011

நலன் தரும் நல்லதொரு சிகிச்சை- தொடர்ச்சி


ஏக பாத சலபாசனம்:-
கால்களை நீட்டிக்கொண்டு கவிழ்ந்து படுத்து நெற்றி அல்லது மோவாயைத் தரையில் பதிக்க வேண்டும். இரண்டு கைகளையும் உடம்பை ஒட்டிப் பக்கத்தில் நீட்டிக்கொண்டு கைகளை இறுக்கமாக முஷ்டிபிடித்துக் கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து உள்ளே அடக்கிக்கொண்டு கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு இரண்டு கால்களையும் நீட்டிய நிலையில் வலது காலை மெதுவாக மேலே உயர்த்தவேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். காலை கீழே இறக்கி மீண்டும் இடது காலை இம்மாதிரியே செய்யவேண்டும். இப்படி நான்கு முறைகள் செய்தால் போதும்.

ஏக பாத சலபாசனம் நரம்பு மண்டலம் முழுவதையும் சுறுசுறுப்படையச் செய்கிறது.

சர்ப்பாசனம்:-

சர்ப்பம் என்றால் பாம்பு என்று பொருள். இவ்வாசனம் பாம்பு நமிர்ந்து படம் எடுப்பது போன்ற தோற்றத்தைத் தருவதால் இதற்கு சர்ப்பாசனம் என்ற பெயர் வந்தது. இதையே புஜங்காசனம் என்றும் சொல்வதுண்டு.

செய்முறை:-

விரிப்பின்மேல் கவிழ்ந்து படுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் கவிழ்த்து இரண்டு காதுகளுக்கும் பக்கம் பக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஒருமுறை ஆழ்ந்து இழுத்து, இழுத்த மூச்சு முழுவதையும் வெளியே விட்டுவிடவேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் தரையில் வசமாக ஊன்றிக்கொண்டு மார்பு, கழுத்து, வயிறு இவற்றை மேலே நிமிர்த்த வேண்டும் இடுப்பும் அதன் கீழ்ப்பகுதிகளும் நன்கு தரையில் படிந்திருக்கவேண்டும். பாதங்கள் தரையில் படியும்படியாக கால்கள் இரண்டும் நீட்டிய நிலையில் இருக்கவேண்டும். அதேசமயம் கால்கள், கைகள் இவற்றை விறைத்து நீட்டிக் கொள்ளக்கூடாது. எவ்வளவுக்கு அண்ணாந்து மேலே பார்க்கமுடியுமோ அவ்வளவிற்கு அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். மூச்சில்லாத இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். இந்தப்பத்து நொடிநேரம் சுவாசம் இல்லாமல் வெற்று நுரையீரலோடு இருக்க முடியாதவர்கள் இலேசாக சுவாசித்துக் கொள்ளலாம். பழகப்பழக இந்தநிலை சரியாக வந்துவிடும்.

இப்பயிற்சியால் நுரையீரல் வளம்பெறுகிறது. இதயம் வலிமைப்பட்டு இதயத்துடிப்பு சமப்படுத்தப்படுகிறது. இதயபலவீனத்தைப் போக்குகிறது. இதயத்தின் வால்வுகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது. இடுப்பு வலிகள் அகலுகின்றன. தீர்வே இல்லாத கழுத்துவலித் துன்பம் நீங்குவது மட்டுமன்றிக் கழுத்துப்பட்டை போட்டுக்கொள்ளும் அவசியமும் அகலுகின்றது. முதுகெலும்பை மிக இலகுவாக வளைத்துப் பயிற்சி கொடுப்பதில் சீரிய ஆசனம் இது. தோள் எலும்புகள்இ தோள்மூட்டுக்கள், கைஎலும்புகள் ஆகியவை பலம்பெறுகின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்பை, சிறுநீர்க்குழாய் போன்ற உறுப்புக்கள் இதனால் வளம்பெறுகின்றன. பெண்களுக்குப் பிரசவத்தின் பின்னால் உண்டாகும் வயிற்றுச் சரிவைத் தடுக்கிறது. கருப்பை, ஓவரி, மார்பகங்கள் ஆகிய பகுதிகளுக்கு நல்ல பயிற்சி கிட்டுகிறது. கர்ப்பிணிகள் இவ்வாசனத்தைச் செயயக்கூடாது.

தனுராசனம்குப்புறப் படுத்துக் கைகளால் காலை(கரண்டைக்கால்) பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை வில்போல் வளைத்து நிற்கவும்.

முதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. தொந்தி கரையும். அஜீரணம், வயிற்று வலி, தொந்தி, வயிற்றுக் கொழுப்பு, ஊளைச் சதை நீங்கும்., நீரிழிவு நோய் நீங்கும், பெண்களின் மாதாந்திர நோய்கள் நீங்கும்.

யோகமுத்ராபத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். மூச்சை மெதுவாக வெளியே விட்டவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தை பயிலலாம்.

முதுகின் தசை எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் , நீரழிவு நோய் நீங்கும், தொந்தி கறையும். முதுகெலும்பு நேராகும்.

வச்சிராசனம்கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமர்த்தி உட்காரவும் நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும் 2 முதல் 4 நிமிடம் ஆசன நிலையில் இருக்கலாம்.

வச்சிரம் போன்று திட மனது ஏற்படும்.

நின்ற பாத ஆசனம்வலது காலில் நின்று கொண்டு இடது காலை மடக்கி குதிகாலை வலது தொடை மேல் வளைத்து நிறுத்த வேண்டும். இரு கைகளையும் உயரே முடிந்த அளவு உயர்த்திக் கும்பிட வேண்டும். கையை விறைப்பாக வைக்கக் கூடாது. பின் இடது காலில் நிற்க வேண்டும். முறைக்கு 1 நிமிடமாக 2 முதல் 4 முறை செய்யலாம். பலன்கள்:

இவ்வாசனம் பார்வைக்கு மிக இலகுவாகத் தோன்றினாலும் இதன் பலன் மிக அதிகம். தியானம், மன ஒருமைப்பாடு, திடசிந்தனை இவைகளுக்கு சிறந்த ஆசனம். திடமனது ஏற்படும். காரியங்களைச் செம்மையாக முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பயம் ஒழியும். ரத்த ஓட்டம் சீர்படும். மன அமைதி பெறும். சஞ்சலங்கள் ஏற்படாது.

பத்மாசனம்இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மீதும் வைக்க வேண்டும்.. முதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் படத்தில் காட்டியபடி வைத்துக் கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும். ஆரம்பக் கட்டத்தில் சில வினாடிகள் இருந்தால் போதுமானது. வலி இருந்தால் உடன் ஆசனத்தைக் கலைத்துவிட வேண்டும். நாள் செல்ல வலி வராது.. 3 நிமிடம் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.

அடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். வாதநோய் தீரும்.

இப்பதிவில் எழுதியிருப்பதெல்லாம் சுலமான பயிற்சிகள்தான் என்றாலும் ஒரு ஆசிரியரிடம் பயிற்சி எடுத்துக்கொள்வது மிக நல்லது. முடியாதவர்கள் மெதுவாக செய்ய ஆரம்பிக்கலாம். எப்போது வலி வந்தாலும் உடனேயே அந்த பயிர்சியை நிறுத்தி விட வேன்டும்.

பல விதமான நோய்கள், உடல் சார்ந்த பிரச்சினைகள் சரியாவதால் இன்த மாதிரி சுலபமான பயிற்சிகள் செய்ய தினமும் இந்த இயந்திர உலகில் சில நிமிடங்களை ஒதுக்குவது மனதிற்கும் உடலுக்கும் பலவித நன்மைகள் தரும்!!!

படங்களுக்கான உதவியும் நன்றியும்: கூகிள்
Wednesday 1 June 2011

நலன் தரும் நல்லதொரு சிகிச்சை!

வாழ்க்கையில் கடுமையான பிரச்சினைகளாயிருந்தாலும் சரி, தீர்க்க இயலாது என்று தீர்மானிக்கப்பட்ட நோய்களாயிருந்தாலும் சரி, திடீரென்று எதிர்பாராத விதமாக யாருடைய யோசனையின் பேரிலோ, உதவியினாலோ தீர்வதுண்டு. அத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மின்னலாய் மறைந்து போகையில் மனசு அசந்து போகும்.


அது போல எனக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.


பல வருடங்களுக்கு முன்னால் மருந்துகளின் பக்க விளைவால் எனக்கு இதயத்துடிப்பு அதிகரித்த அளவில் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. இதற்கு நேரம் காலம் எதுவும் கிடையாது. உறங்கும் வேளையில் திடீரென அதிக அளவில் இதயம் துடிக்க ஆரம்பிக்கும். சாதரணமாக 76ல் இருக்க வேண்டிய நாடித்துடிப்பு 120க்கு மேலே செல்லும். 20 நிமிடங்கள் வரை கூட தொடர்ந்து நீடிக்கும். அதன் பின் நாடித்துடிப்பு நார்மல் நிலைக்கு வரும்போது இதயத்தின் உள்ளே அதிர்வது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். கணவரும் மகனும் மாறி மாறி நாடித்துடிப்பை கவனித்துக்கொண்டே இருப்பதுவும் எனக்கு ஆறுதல் சொல்வதுவும் வழக்கமாக இருந்தது. இந்த மாதிரி சமயங்களில் உடல் மனது இரண்டுமே அதிக அளவில் சோர்ந்து விடும்.


அலோபதி, சித்த வைத்தியம், அக்கு பங்க்சர், அக்கு பிரஷர், ஆயிர்வேதம், யுனானி வைத்தியம் என்று பல வித சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லாத நிலையில் நண்பர் ஒருத்தர் யோசனைப்படி இயற்கை வைத்தியத்தையும் எடுத்துக்கொண்டேன். இயற்கை வைத்திய நிலையத்தில் சேர்ந்து அங்கே முதன் முதலாக யோகா கற்றுக்கொன்டேன். உணவு வகைகளில் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன். சில குறிப்பிட்ட வழக்கங்கள்கூட சில சமயங்களில் பிரச்சினைகளைத் தருபவையாக இருக்கலாம். பொதுவாகவே உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சுய அலசல் அவசியம் தேவை. உணவுப் பழக்க வழக்கங்கள், யோகாசனம், சுய அலசல், இவற்றினால் ஏற்பட்ட மாறுதல்கள் என்னை அசர வைத்தது. பல வருடங்களாக என்னைத் துன்புறுத்திக்கொன்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. சில குறிப்பிட்ட யோகாசனங்கள் எந்த அளவிற்கு உடலின் பல விதக்கோளாறுகளுக்கு நிவாரணங்கள் அளிக்கக்கூடியனவை என்பதையும் அங்கே தான் கற்றுக்கொண்டேன். அவற்றைப்பற்றி பகிர்ந்து கொள்வதுதான் இந்தப்பதிவின் நோக்கம். இந்தப் பதிவு, நோய்களும் பிரச்சினைகளும் உள்ள ஒரு சிலருக்காவது விழிப்புணர்ச்சியையும் உதவியையும் தருவனவாக அமைந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.


இதில் முக்கிய விஷயமாக கவனிக்க வேண்டியது:


யோகாசனங்களை அதை முழுமையாக கற்றுத் தெரிந்த நிபுணரிடம்தான் கற்க வேண்டும்.


நாமாகப் புத்தகங்களைப் படித்து யோகாசனங்களைச் செய்ய ஆரம்பிக்ககூடாது. யோகாசனங்ககள் நம் உடலுக்கு ஏற்படுத்தும் நல்ல மாறுதல்களைப்பார்த்ததும் ஆர்வக்கோளாறினால் நாமே கூடுதலாக எதையும் படித்துப் பார்த்து செய்ய ஆரம்பிக்கக் கூடாது.


வயிறு காலியாக இருக்கும் காலைப்பொழுதில் இரு தம்ளர் தண்ணீர் அல்லது ஏதாவது இலேசான பழச்சாறு அருந்திய பிறகு தொடங்குவது நல்லது. எப்போதுமே கால்கள், கைகளுக்கு சிறு சிறு பயிற்சிகளை முதலில் ஆரம்பித்து, உடலை சற்று தளர்வாக்கிக் கொண்டு யோகாசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காற்றோட்டமான இடத்தில் நல்ல கனமான விரிப்பு அல்லது ஜமுக்காளத்தின் மீது அமர்ந்து யோகாசனங்களைச் செய்ய வேண்டும். தளர்வான உடைகள் பயிற்சிகளை இலகுவாக்கும். பொதுவாகவே தனிமையில் யோகாசனங்களைச் செய்யும்போது, உடல் தன்னிச்சையாக பயிற்சிகளைச் செய்யுமே தவிர, மனம் என்னவோ தனிப்பாதையில் பல சிந்தனைகளில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் . இதைத் தவிர்க்க, மெல்லிய இசை நாடாக்களைக் கேட்டுக்கொண்டே யோகாசனங்களைச் செய்வது நல்லது.
யோகாசனத்தில் பல வித நிலைகள் உண்டு. நான் இங்கே எழுதியிருப்பது சில பயிற்சி முறைகள் மட்டும்தான். இவற்றை மட்டுமே தினமும் 20 நிமிடங்கள் செய்து வந்தால் போதும். பல விதமான நீண்ட நாட்கள் பிரச்சினைகள் சரியாகும்.முதலில் உடல் தளர சில பயிற்சிகள் முதலில் கழுத்துக்கும் கைகளுக்கும் செய்ய வேண்டும். கழுத்தை மேலும் கீழுமாக, பிறகு பக்கவாட்டில் என்று மெதுவாக சில தடவைகள் திருப்புவது, கால்களை அகட்டி நின்று கொண்டு கைகளை மெதுவாக உயரத் தூக்கிக் இரு கரங்களையும் சேர்த்துக் குவிப்பது போன்ற பயிற்சிகளை முடித்த பின் மெதுவாக தரையில் படுக்க வேண்டும்.


ஏகபாத உத்தானாசனம்:படுத்த நிலையில் கைகளை இரு பக்கத்திலும் குவித்து கீழே வைத்து உடலைத் தளர வைத்துக்கொண்டு மெதுவாக வலது காலை 45 டிகிரி வரை தூக்க வேண்டும். சில நொடிகளுக்குப்பின் மெதுவாக காலை இறக்க வேண்டும். இது போல இடது காலையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு காலையும் ஐந்து தடவைகள் முதலில் பழக்கி பிறகு தினமும் 10 தடவைகள் செய்வது நல்லது.


பலன்கள்:


வயிற்றிலுள்ள ஜீரண உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. கால் நரம்புகள் வலிமை பெறுகின்றன. இடுப்பு வலியைப் போக்குகிறது. தொடைகள் கால்களிலுள்ள தொளதொளத்த தசைகள் கரைந்து வலிமை பெறுகின்றன. மூல நோயால் கஷ்டப்படுபவர்கள் இந்த ஆசனத்தைச் செய்ய ஆரம்பித்தால் மெல்ல மெல்ல நோயின் கடுமை நீங்கி பூரண நலம் கிடைக்கும்.


பவன முத்தாசனம்:
படுத்தவாறே ஒரு காலை மடக்கி இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு கூடியவரை கால் முட்டியை முகம் அருகே கொண்டு வர வேண்டும். பின் மெதுவாக காலை கீழே இறக்க வேண்டும். இடது காலையும் அது போல செய்ய வேண்டும். ஒவ்வொரு கால் பக்கமும் ஐந்து முறைகள் செய்யலாம். பின் இரு கால்களையும் இரு கரங்களாலும் பிடித்துக்கொண்டு இதே பயிற்சியை செய்ய வேண்டும். யோகா முறைப்படி இந்த பயிற்சிச் செய்யும்போது படத்தில் உள்ளது போல கழுத்தையும் உயர்த்தி இந்த யோகாசனத்தைச் செய்ய வேண்டும். ஆனால் கழுத்தில் வலியோ பிரச்சினைகளோ உள்ளவர்கள் கழுத்தை உயர்த்தாமல் இந்த யோகாசனத்தைச் செய்தால் போதும். இந்தப்பயிற்சி செய்யும் போது இடுப்பை வலது, இடது புறமாக மெதுவாக படகு போல ஆட்டுவது நல்லதென தற்போது பிஸியோதெரபி வல்லுனர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதுவுமல்லாமல் இந்த மாதிரி படுத்த நிலையிலேயே மூச்சை அடக்கி இடுப்பை கூடிய வரை மேலே தூக்கச் சொல்கிறார்கள். பின் மூச்சை விட்டாவாறே இடுப்பை கீழே இறக்க வேண்டும். இந்தப் பயிற்சிகள் இடுப்பு வலி, முதுகு வலி நீங்கச் சொல்லிக்கொடுக்கப்படுக்கிறது.


யோகா சிகிச்சை மீண்டும் தொடரும்.. .. .. . .


படங்களுக்கான உதவியும் நன்றியும்: கூகிள்