Sunday, 27 November 2011

முத்துக்குவியல்கள்

இந்த‌ முறை முத்துக்குவியல்களில் ஒரு சுவாரஸ்யமான தகவல், சிந்திக்க வைத்த ஒரு சிறு கதை, ஆச்சரியப்பட வைத்த இரு செய்திகள் இடம் பெறுகின்றன.

முதலில் சிந்திக்க வைத்த சிறு கதை. இந்த மாதிரி ஒரு தந்தை அமைவது ஒரு குழ‌ந்தைக்கு எத்தனை பெரிய வரம்!

சிந்திக்க வைத்த முத்து:

மிகவும் கோபக்காரனாக இருந்தான் அந்த சிறுவன். அவனைக்கூப்பிட்டு கண்டித்த அவன் தந்தை, ஒரு வெள்ளை சுவரைக் காண்பித்து, நீ ஒவ்வொரு தடவை கோபப்படும்போதும் நான் இந்த சுவற்றில் ஒரு ஆணி அடிக்கப்போகிறேன் என்று சொன்னார். அதேபோல அந்த சிறுவன் கோபப்படும்போதெல்லாம் ஆணி அடித்து அந்த சுவரே ஆணிகளால் நிரம்பி விட்டது. அதைப்பார்த்த அந்த சிறுவன் குற்ற உணர்ச்சியால் மனம் திருந்தி தன் தந்தையிடம் வந்து ‘ இனி நான் கோபப்படமாட்டேன். நான் திருந்தி விட்டேன்’ என்றான். தந்தை அவனிடம் ‘ நீயே போய் அந்த ஆணிகளையெல்லாம் பிடுங்கி எடு’ என்றாராம். அவன் அந்த ஆணிகள் முழுவதையும் பிடுங்கி எடுத்த பிறகு சுவற்றைப் பார்த்தால் சுவர் முழுவதும் ஆணியின் தழும்புகள் இருந்தன. தந்தை வந்து பார்த்து விட்டு சொன்னார்,’ கோபமும் இது போலத்தான் மகனே! கோபத்தை நாம் நிறுத்தி விட்டாலும் அதன் விளைவுகளை இது போலவே அழிக்க முடியாது’ என்றாராம்!

                                                         ****************************

அடுத்தது ஒரு வித்தியாசமான தகவல். இன்றைய உலகின் விஞ்ஞான முன்னேற்ற‌த்தின் ஒரு துளி இது!                                      
விஞ்ஞான‌ முத்து:

மரவட்டையைத் தொட்டால் சுருண்டு கொள்ளும், எதிரி விலகி விட்டார் என்று தெரிந்த பிறகு தான் உடலை பழைய நிலைக்குக் கொண்டு வரும். இதை அடிப்படையாக வைத்து அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலத்தில் உள்ல டப்ஸ் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் புழு ரோபோவை கண்டு பிடித்துள்ளார்கள். சுனாமி, வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றில் சிக்கிக்கொள்பவர்களை, அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இடிபாடுகளை அகற்றுவது எப்போதுமே கடினமாக இருந்து வருகிறது. இந்த மாதிரி சூழ்நிலைகளை புழு ரோபோ சுலமாக சமாளிக்கும். சிறிய துளை வழியே உள்ளே நுழைந்து பாதிக்கப்பட்டவர்களை தன் சிலிகான் ரப்பர் உடலுக்குள் வைத்து வெளியே கொண்டு வரும். முதல் கட்டமாக 4 அங்குல ரோபோவை உண்டாக்கி விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதற்கு


‘ கோ க்யூட் ரோபோட்’ என்று பெயர். மீட்புப்பணிகளில் ஈடுபடுகின்ற அளவில் பெரிய அளவு ரோபோக்களை உருவாக்கும் பணி இனி தொடங்கவிருக்கிறதாம்!           

                                                    ***********************

இந்த வித்தியாசமான தகவல் காலம் எந்த அளவு மாறுகிறது, சமுதாயப் பண்பாடுகளும் கலாச்சாரமும் எந்த அளவு சீர்கெடுகிறது என்பதைக் காட்டுகிறது!

வியக்க வைத்த முத்து:

மருமகள்களின் கொடுமை!

மாமியார்களின் கொடுமை மாறி மருமகள்கள் கொடுமை என்ற காலம் வந்து விட்டது. HELP AGE INDIAசார்பில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 64 சதவிகித வழக்குகள் மருமகள்களின் கொடுமை காரனமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் 44 சதவிகிதம், ஹைதராபாத்தில் 38 சதவிகிதம், போபாலில் 30 சதவிகிதம், கலத்தா 23 சதவிகிதம், சென்னை 2 சதவிகிதம் என்று முடிவுகள் சொல்லப்பட்டுள்ளன!!!


Monday, 21 November 2011

மழலை உலகம் மகத்தானது [தொடர்பதிவு]



“ நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே!
அவன் கருனையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே!”


இது ஒரு பழைய திரைப்படப் பாடல். உண்மையும்கூட அது தான். குழந்தையின் சிரிப்பும் மழலைப்பேச்சும் நிர்மலமும் தெய்வீகமானது. வானத்திலிருந்து விழும் பரிசுத்தமான மழைத்துளி போன்றது தான் குழந்தை! அந்த பனித்துளி பூமியில் கலக்கும்போது அதன் பரிசுத்தம் மறைந்து பூமியின் அத்தனை அசுத்தங்களுடன் கலந்து மனிதர்களாகி விடுகிறது. அது பரிசுத்தமாக வந்து விழும் நேரத்தில் பூமியில் படாமல் தாங்கி, நாமும் அந்த பரிசுத்ததை உள்வாங்கிக் கொண்டால் மனது எத்தனை சுகமாகிறது! சின்னக் குழந்தைகளை ரசிக்கும்போது, அவர்களுடன் பேசும்போது, பழகும்போது மனசின் அத்தனை ரணங்களும், அது நாள் வரை தாங்கிய எத்தனையோ மரண அடிகளும் எங்கோ கரைந்து போய், காற்றாய் மனது இலேசாகிறது. ஒரு குழந்தையின் அருகாமையே இத்தனை அழகான தாக்கங்களை உண்டு பண்ணும்போது, நாமும் பதிலுக்கு, ஒரு நன்றிக்கடன்போல், நம் அன்பாலும் பொறுமையாலும் தியாகங்களாலும் இதையும் விட அழகான தாக்கங்களை குழந்தைகளிடம் உண்டு பண்ண வேண்டாமா?

சகோதரி லக்ஷ்மி சொல்லியிருந்தது போல, அந்தக் காலக் கூட்டுக்குடும்பங்களில் பெரியவர்களுக்கு பணிவிடை செய்வதற்கும் வீட்டு நிர்வாகம், சமையல், மற்ற பொறுப்புகளை கவனிப்பதற்குமே நேரம் போதாமல் இருக்கும். இதில் குழந்தைகளின் அருகிலிருந்து சாதம் கொடுக்கக்கூட இயலாது போய் விடும். இந்த நிலைமையில் குழந்தையின் வளர்ப்பு பற்றி யோசிக்கவோ, அதன் எதிர்காலம் பற்றி கனவு காணவோ நேரம் எங்கிருந்து கிடைக்கும்? வீட்டிலிருக்கும் குழந்தைகளோடு பத்தோடு பதினொன்றாக ஒவ்வொரு குழந்தையும் அதுவே வளரும். அதுவும் எப்படி? பெரியவர்களின் கண்டிப்பு, கட்டுப்பாடு இதெல்லாம் சகோதரத்துவத்தின் மகிமை, பகிரும் உணர்வு, பெரியவர்களிடம் மரியாதை என்று பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கும்.

என் புகுந்த வீட்டில் என் கணவருடன் சேர்த்து எட்டு குழந்தைகள். வசதியான குடும்பமாக இருந்தாலும் விடுமுறை நாட்களில் மாடுகளை இவர்கள் தான் மேய்த்தாக வேண்டும். மாடு மேய்ப்பவர்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டு, மாடுகளை மேய்க்க ஓட்டிச் செல்லும்போது, அப்படியே பாடப் புத்தகங்களையும் எடுத்துச் செல்லுமாறு என் மாமனார் சொல்வார்களாம். ‘ இந்தப் பயிற்சி தான் இந்த 65 வயது வரை என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது’ என்று என் கணவர் அடிக்கடி சொல்வார்கள். ஏதாவது தப்பு செய்தாலோ, அடுத்தவரைப்பற்றியோ, சகோதர்களைப் பற்றியோ புகார் சொன்னாலோ, உடனே அடிக்காமல் ஒருத்தர் தப்பு செய்தாலும் அத்தனை பேரையும் தோப்புக்கரணம் போடச்சொல்வார்களாம் என் மாமனார். அல்லது ‘கொக்குப்பிடி’ போடச் சொல்வார்களாம். அதாவது ஒரு கையால் ஒரு காலைப் பற்றிக்கொண்டு இடது காலை தூக்கி அதை இடது கையால் பிடித்துக் கொள்ள வேண்டுமாம். இந்த மாதிரி தண்டனைகளில் அடுத்தவரைப்பற்றிப் பேசக் கூடாது, சகோதரர்களுக்குள் சண்டை செய்தல் கூடாது, அனைவரும் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும் என்பது சின்ன வயதிலேயே மனதில் கல்லில் எழுத்தாய் பதிந்து போயிற்று என்பார்கள்.

இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் பெரும்பாலும் மறைந்து விட்டது. பெற்ற தாய்க்கும் தகப்பனுக்கும் சோறு போடுவதற்குக் கூட கணக்கு பார்க்கும் மனசு வந்து விட்டது. சுயநலங்களுக்கிடையே எதிர்காலக் குழந்தைகள் எப்படி வளரும் என்பதை நினைத்தாலே பகீரென்கிறது.

நிறைய பெற்றோருக்கு எதற்குமே நேரமிருப்பதில்லை. பொருளாதார மேம்பாட்டிற்காக பறப்பதிலும் தன் குழந்தைகள் பெரிய அளவு படிக்க வேண்டும் என்று கனவு காண்பதிலும் நிறைய நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பது கூட நேரமில்லாது வாழ்க்கை யந்திரகதியாய் நிறைய பேருக்கு கழிந்து செல்கிறது. ஆடி ஓடி சிரிக்கின்ற வயதில் குழந்தைகள் உலகம் கணினியிலும் தொலைக்காட்சியிலும் சுருங்கி விட்டது. இயற்கைக்காற்றும் தோட்டங்களைச் சுற்றி விளையாடுதலும் நிலாவைப் பார்த்து ரசிப்பதும் பாடுவதும் இன்றைய குழந்தைகளுக்கு கிடைக்காத வரங்கள்.

அவர்களுக்கு இன்றைக்கு கிடைக்கிற வசதிகள் மட்டும் உலகமில்லை, கிடைக்காத எத்தனையோ நல்ல விஷயங்கள் எந்த் அளவிற்கு உன்னதமானவை என்பதைப் புரிய வைக்க வேண்டும். சிறிய குழந்தைகளை கையாள்வதில் ரொம்பவும் கவனம் தேவை. குழந்தைகள் அனிச்ச மலர் மாதிரி. சட்டென்று முகமும் மனசும் சுருங்கி விடும். அவர்கள் வயதிற்கு நாம் மனரீதியாகச் சென்றால்தான் அவர்களை அழகாக அணுக முடியும்.




சின்ன வயதிலிருந்தே குழந்தைகளை ஒவ்வொரு விஷயத்திற்கும் பழக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாகப் பேச வேண்டும். குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடுவதோ, சூடாக விவாதம் செய்வதோ குழந்தைகளை மனரீதியாகப் பாதிக்கும். எந்தக் குழந்தையுடனும் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்த வேண்டும். அது குழந்தைகள் மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குவதுடன், பெற்றவர்கள் மீது ஒரு வெறுப்பையும் வளர்க்க ஆரம்பிக்கும். நாம் குடும்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் மரியாதையுடன் பேசுவதையும் நடத்துவதையும் செய்யும்போது, குழந்தையும் மற்றவர்களை மரியாதையுடன் பேசுவதையும் நடத்துவதையும் நிச்சயம் பின்பற்றும். மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதை அதன் ஒவ்வொரு வயதிலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லித்தர வேண்டும்.

படிப்பிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, எதிர்காலத்திலும் சரி, வெற்றிகள், தோல்விகள் எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது அவசியம் என்பதைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். சின்ன சின்ன விஷயத்திற்குக்கூட குழந்தைகளை மனந்திறந்து பாராட்டுவது அவர்களுக்கு எதிலுமே உற்சாகத்தையும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளையும் வரவழைக்கும். குழந்தைகள் பெரியவர்களானதும் வீட்டு வேலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக பழக்க வேண்டும். அவர்களையும் பெரிய ஆளாக மதித்து வீட்டு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதும், யோசனைகள் கேட்பதும் அவர்களை வீட்டின்மீது பொறுப்புணர்வு மிக்கவர்களாக மாற்றும்.

குழந்தை வளர்ப்பைப்பற்றி ரொம்பவும் சாதாரணமாக, எளிமையாக, அசத்தலாக எம்.ஜி.ஆர் ஒரு பாடலில் நான்கே வரிகளில் சொல்லியிருப்பார்.

‘ அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்!
  தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்!
  இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்!
  பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்!! ’

அன்பென்பதும் அறிவென்பதும் அவ்வளவு சாதாரணமானதில்லை. தன்னலமற்ற, அத்தனை உணர்வுகளுக்கும் மேலான, முழுமையான அன்பு. உலகின் அனைத்து நற்செயல்களையும் நல்ல பண்புகளையும் ஊட்டி வளர்க்கும் அறிவு. இத்தகைய அன்பையும் அறிவையும் ஊட்டி வளர்க்க்கப்படும் எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை.

மழலை உலகைப்பற்றி எழுத எனக்கு இந்த தொடர் பதிவு வாய்ப்பளித்த சகோதரி லக்ஷ்மிக்கும் அவரைத்தொடர்ந்து இந்த தொடர்பதிவிற்கு அழைத்த சகோதரி சந்திர கெளரிக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன் இங்கே!!!

இந்தத் தொடர்பதிவிற்கு நான் அன்புடன் அழைப்பது:

1. பேரன்களுடன் கொஞ்சி விளையாடும் திரு.வை.கோபாலகிருஷ்ணன்.


2. மகளே தாயாய் மாறி பணிவிடை செய்த பாக்கியம் கிடைக்கப்பெற்ற    திருமதி. ராஜி [கற்றலும் கேட்டலும்]


3. குழந்தைகளைப் பிரிந்து வாடும் ஒரு தந்தையின் ஏக்கத்தை அருமையாக வெளிப்படுத்திய திரு.நாஞ்சில் மனோ.



படங்கள் உதவி: கூகிள்









Monday, 14 November 2011

மருத்துவ உலகின் மறுபக்கம்-பகுதி-2

டாக்டர் சேதுராமனின் கருத்துக்களை, ‘போஸ்ட்மார்ட்டம்’ என்ற புத்தகத்திலிருந்து மீண்டும் தொடர்கிறேன்.

 எந்த மருத்துவ சிகிச்சைக்குமே, முக்கியமாக அறுவை சிகிச்சைகளுக்கு SECOND OPINION அவசியம் தேவை.

தற்போதெல்லாம் கர்ப்பப்பையை நீக்குவதென்பது சர்வ சாதாரணமாகி விட்டது. கர்ப்பப்பையையும் சில சமயங்களில் சினைப்பையையும் கூட நீக்குவதால் ஹார்மோன்கள் சுரப்பது தாறுமாறாகக் குறையும். இதனால் சில பெண்களுக்கு மார்பகப் புற்று நோய், தொடர் தலைவலி, தூக்கமின்மை, மன அழுத்தம், முதலியவை வருகின்றன. இதன் மோசமான பின் விளைவுகள் மிக நீளமானவை.

இதே போலத்தான் சிசேரியன் அறுவை சிகிச்சையும். பிரசவ நேரத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் இதயத் துடிப்பு அபாய அளவில் இருந்தாலோ, குழந்தை சரியான POSITIONல் இல்லாமலிருந்தாலோ, கர்ப்பப்பை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தாலோதான் சிசேரியன் செய்ய வேண்டும். இந்த பரிசோதனைக்கு PARTOGRAM என்று பெயர். நிறைய மருத்துவர்கள் இந்த டெஸ்ட் செய்வதில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.


உங்கள் வீட்டில் யாரையாவது பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்க்கும்போது, அந்த மருத்துவ மனையின் சுகப்பிரசவ விகிதம் என்ன, சிசேரியன் விகிதம் என்ன என்று விசாரியுங்கள். எங்கு சுகப்பிரசவ விகிதம் அதிகமாக இருக்கிறதோ, அது மட்டுமே பாதுகாப்பான மருத்துவ மனை என்பதை முடிவு செய்யுங்கள். சில மருத்துவ மனைகளில் சிசேரியன் சிகிச்சைக்கு தூண்டும் விதத்தில் பேசி அந்த முடிவை நோயாளி எடுக்கும்வகையில் செய்வதற்கு செவிலித்தாய்களுக்கு கமிஷன் தரப்படுகிறது என்பது அதிர்ச்சியான நிஜம்!!

மருத்துவக் கண்ணோட்டத்தில் மரணம் இரு வகைகளாய் பிரிக்கப்பட்டிருக்கின்றன. உடல் சாவு முதல் வகை. இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புக்கள் தங்கள் வேலையை நிறுத்திக்கொள்ள, உடலின் ஒட்டு மொத்த செயல்பாடும் நின்று விடும். இது தான் உடல் சாவு. மூளை செயல்பட, இரத்தத்திலிருந்து அதற்குத் தேவையான பிராணவாயுவும் சர்க்கரையும் கிடைக்கிறது. இரத்த ஓட்டம் தடைப்பட்டால் மற்ற உறுப்புக்கள் 45 நிமிடங்கள் வரை தாக்குப் பிடிக்க முடியும். மூளையோ நான்கே நிமிடங்களில் செயலிழந்து விடும். இது தான் மூளைச் சாவு. மூளைச்சாவு நிலையிலிருக்கும் நோயாளிக்கு செயற்கைக் கருவிகள் மூலம் இதயம், நுரையீரல், சிறுநீரகம் எல்லாவற்றையும் செயல்பட வைக்க முடியுமென்றாலும் அதிக பட்சம் 6 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ வைக்க முடியும். மூளைச்சாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக நாட்கள் உயிர்வாழ முடியாது என்ற உண்மையை மறைத்து, அந்த நிலையிலேயே அவர்கள் முழுமையாக மரணம் எய்தும்வரை வைத்து பணம் பறிக்கின்றன சில மருத்துவ மனைகள். இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை வசூலிக்கிறார்கள்.

மருத்துவப்படிப்பிற்கு செலவான தொகையை மட்டுமல்ல, மருத்துவமனை கட்டியதற்கான செலவையும் மீட்டு கடன் தொல்லைகளிலிருந்து விடுபடவும் லட்சக்கணக்கான வட்டி கட்டுவதிலிருந்து மீளவும்கூட இன்றைக்கு சில தனியார் மருத்துவமனிகளில் சாதாரண பிரசவம் சிசேரியனாகவும், சாதாரண நெஞ்சு வலி தீவிர சிகிச்சைப்பிரிவிலும் மாற்றப்படுகின்றன!!



எந்த மருத்துவர் சரியானவரில்லை?

1. சாதாரண தலைவலியைக் கூட உயிரைக்கொல்லும் வியாதி என்று
    வர்ணித்து ஏகப்பட்ட மாத்திரைகள், ஊசிகள் என்று சிகிச்சைகள்
   தருபவர்கள்.

2. எல்லாம் தனக்கு மட்டும் தெரியும் என்பவர்.

3. தங்கள் சிகிச்சை வலி இல்லாதது, பக்க விளைவுகள் இல்லாதது, துரித
    நிவாரணம் தருவது என்று சொல்பவர்கள்.

4. நீங்கள் சொல்லும் எதையும் காதில் வாங்காத மருத்துவர்..

5. உடலின் எந்தப்பகுதியில் உங்களுக்கு உபத்திரவம் என்று
    சொல்கிறீர்களோ, அந்தப் பகுதியைத் தொட்டுக்கூட பார்க்காதவர்..

6. அதிகப்பட்ச நம்பிக்கை வாக்குறுதிகளைத் தருபவர்கள்.

7. ‘உங்கள் நோய் தீர இது தான் வழி’ என்று, என்று ஒரு காஸ்ட்லியான
     சிகிச்சையை, அதைத் தவிரவும் குறைந்த செலவில் வேறு சிறப்பான
     சிகிச்சைகள் முறைகள் இருந்தும் சொல்பவர்.

உங்களின் நோயை குணப்படுத்த நீங்கள் சந்திக்கும் மருத்துவரிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள்:


1. எனக்கு என்ன நோய் என்பதை விளக்கமாகச் சொல்லுங்கள்.

2. எந்த அளவு இது சீரியஸானது இது?

3. இதற்கு சிகிச்சை பெறாமல் அப்படியே விட்டால் என்ன ஆகும்?

4. எனக்கு என்ன சிகிச்சை தரப்போகிறீர்கள்?

5. இதில் என்னென்ன அபாயங்கள், பக்க விளைவுகள் இருக்கின்றன?

6. இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமையும் வாய்ப்பு எத்தனை சதவிகிதம்?

7. இந்த சிகிச்சைக்கான முழு செலவு எவ்வளவு ஆகும்?

8. சிகிச்சைக்குப் பிறகு தொடர் பராமரிப்பிற்கு எவ்வளவு செலவாகும்?

டாக்டர் சேதுராமன் எழுதிய புத்தகத்திலிருந்து, அனைவருக்கும் பயன்படக்கூடிய ஒரு சில விஷயங்களை மட்டுமே இங்கே எழுதியிருக்கிறேன். .அவர் வலியுறுத்திக் கூறும் முக்கியமான விஷயம், ஒரு சாதாரண நோய்க்கு உடனே ஒரு மருத்துவமனையை நோக்கி ஓடி விட வேண்டாமென்பது. ஒவ்வொருத்தரும் தனக்கென, சாதாரண வியாதிகளான ஜுரம், உடம்பு வலிகள், வயிற்று வலி இவற்றுக்கெல்லாம் நன்கு பழகக்கூடிய ஒரு குடும்ப டாக்டரை வைத்துக்கொள்ள வேண்டுமென்பதையும் வலியுறுத்துகிறார். தீவிர நோய்களுக்கு அவரே ஒரு நல்ல, அந்தந்த துறைக்கான மருத்துவரிடம் அனுப்பி வைப்பது தான் சிறந்த விஷயம் என்பதுடன் மருத்துவ மனைக்குச் செல்ல அலுப்பு பட்டுக்கொண்டோ, அவசரத்தேவைக்கோ, நாமாகவே மருந்துக்கடைகளுக்குச் சென்று மருந்துகள் கேட்டு வாங்குவது எந்த அளவு அபாயகரமானது என்பதையும் சொல்கிறார் விரிவாக!

நானும் எப்போதும் என் குடும்ப டாக்டரைத்தான் மற்ற பிரச்சினைகளுக்கு கலந்தாலோசிக்கிறேன்.

எது நமக்கு நல்லது என்பதை நாம் தான் நன்கு யோசித்து முடிவு செய்ய வேண்டும்.

படங்களுக்கு நன்றி: கூகிள்




Monday, 7 November 2011

மருத்துவ உலகின் மறுபக்கம்!!

புதுவையிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் 22 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி, அங்கே மருத்துவக்கல்வித்துறையில் தலைவராக இருக்கும் டாக்டர் சேதுராமன், மருத்துவத் துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தி வந்ததுடன் அதற்காக சக டாக்டர்களுடன் இணைந்து ஒரு அமைப்பையும் ஏற்படுத்தினார். மருத்துவர்களின் வியாபாரத்தந்திரங்களை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டிய இவரின் TRICK OR TREAT என்ற புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைப்படித்ததனால் ஏற்பட்ட தாக்கம். ஆனந்த விகடன் ஆசிரியரால் 'போஸ்ட்மார்ட்டம்' என்ற மருத்துவ விழிப்புணர்வு தொடரை டாக்டர் சேதுராமனைக் கொண்டு 2003 ஆம் ஆண்டு விகடனில் எழுத வைத்தது.

மருந்துகள் தயாரிப்பைப்பற்றியும் கமிஷன் என்ற நஞ்சு இன்றைக்கு மருத்துவர்களிடையேயும், மருந்துக் கம்பெனிகளிடையேயும் எந்த அளவு கொடூரமாகப் பரவியிருக்கிறது என்பதை அவர் அருமையாக விவரித்திருக்கிறார்.

இதை நிறைய பேர்கள் படித்திருக்க மாட்டார்கள். முக்கியமாக இளைய தலைமுறையினர்.  இந்தப் புத்தகத்திலுள்ள சில அதிர வைக்கும் சில உண்மைகளை, மனதை உறைய வைக்கும் நிகழ்வுகளை அனைவருக்கும் எடுத்துச் சொல்வதே இந்தப் பதிவின் நோக்கம். மேலும் ஒரு குடும்ப வைத்தியரை நாம் எல்லோரும் வைத்துகொள்ளுவது எவ்வளவு அவசியம், என்பதையும் அந்த மருத்துவர் வழியாகவே ஒரு தரமான ஸ்கான் செண்டர், ஒரு தரமான ரத்த பரிசோதனை நிலையம் என்று செல்வது எந்த அளவு நல்லது என்பதையும் எல்லோருமே விழிப்புணர்வுடன் இருப்பது உடல் நலத்திற்கு எந்த அளவு முக்கியமானது என்பதையும் வலியுறுத்திச் சொல்வதற்காகவே இந்தப்பதிவை ஒரு கருவியாக நான் நினைக்கிறேன்.

இனி டாக்டர். சேதுராமன் அவர்களது கருத்துக்கள்......

சுமார் 3000ற்கு மேற்பட்ட வேதிப்பொருள்களை வெவ்வேறு கூட்டணியில் பயன்படுத்தித்தான் மருந்து தயாரிக்கிறார்கள். ஒரே மாத்திரைக்கு வேறு வேறு பெயர்களைச் சூட்டி பல கம்பெனிகள் விற்கின்றன. உதாரணத்திற்கு ஜுரத்திற்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால், குரோசின், தெர்மோநில், டோலோ, மெட்டாசின் என்ற பெயர்களில் வலம் வருகின்றன. இப்படி விற்கப்படும் மாத்திரைகள் 1 லட்சத்துக்கும் மேல்! மனித மூளையின் ஞாபக சக்திக்கு வரையறை இருக்கிறது. ஒரு அபாரமான ஞாபக சக்தி உடைய மருத்துவரால் கூட ஒரே சமயத்தில் 500 மாத்திரைகள் பெயர்களைத்தான் நினைவு வைத்துக் கொள்ள முடியும். மருத்துவரின் ஞாபகத்திலுள்ள TOP- 100. மாத்திரைகள் லிஸ்ட்டில் தங்களது தயாரிப்பும் இடம் பெற வேண்டுமென்று தான் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு வேலை செய்கிறது.  தங்கள் மருந்துகளை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுத வெளி நாட்டுக்கு பல வசதிகள் தந்து அழைத்துச் செல்வதிலிருந்து, கார், ஃப்ரிட்ஜ் தருவதிலிருந்து இந்த மருந்துக் கம்பெனிகள் போகாத எல்லையே இல்லை.





“இரண்டு நாளா தலைவலி' என்று யார் வந்தாலும் சி.டி.ஸ்கான் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுத்துப்பார்த்து விடலாம் என்று சில டாக்டர்கள் உடனேயே கூறுகிறார்கள். பொதுவாக இந்த ஸ்கான் வகைகளை எடுக்க 2500 லிருந்து 10000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இதிலிருந்து 20 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை டாக்டர்களுக்கு கமிஷன் போகிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இந்த கமிஷன் பிஸினஸ் ஒரு வைரஸ் மாதிரி மருத்துவ உலகத்தில் ஊடுருவியிருக்கிறது.
மனசாட்சியுள்ள நல்ல மருத்துவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்கள் கமிஷன் என்ற வியாபாரத்தை அழிக்க போராடவே செய்கிறார்கள். அதை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை என்பது தான் நிஜம்.

இப்போதெல்லாம் நட்சத்திர அந்தஸ்துள்ள மருத்துவ மனைகள் ஏராளமாய் வந்து விட்டன. இவரின் நண்பர் அது மாதிரி ஒரு மருத்துவ மனையில் காலையில் சில மணி நேரங்களும் மாலையில் சில மணி நேரங்களும் பணியாற்றும் ' விஸிட்டிங் கன்சல்டண்ட்' ஆக பொறுப்பேற்றிருக்கிறார். ஒவ்வொரு நாளும் நிறைய நோயாளிகளுக்கு அங்குள்ள செகரட்டரியிடம் அப்பாயின்மெண்ட் ஆகியிருக்கிறது. இவர் போய் உட்கார்ந்தால் யாருமே வருவதில்லையாம். செகரட்டரியை அழைத்துக் கேட்டால் ' யாருமே வரவில்லையே சார்' என்கிறாராம். ஒன்றுமே புரியாமல் சக மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசிய போது அவர் கேட்டாராம், ' அந்த செகரட்டரியிடமும் அட்டெண்டரிடமும் பிஸினஸ் பேசி விட்டீர்களா?'

எதுவும் புரியாமல் இந்த டாக்டர் விழித்தபோது அவரே அதற்கு விளக்கமும் அளித்தாராம்.

‘உங்களிடம் appointment வாங்கிய நோயாளிகள் உங்களிடமே வைத்தியம் பார்க்க வரவேண்டுமென்றால், அவர்களிடம் நீங்கள் வாங்கும் பணத்தில் பத்து சதவிகிதத்தை அந்த செகரட்டரியிடமும் அட்டெண்டரிடமும் தரவேண்டும். அப்படி நீங்கள் ஒத்துழைக்கவில்லையென்றால் உங்களைப் போன்ற இன்னொரு ஸ்பெஷலிஸ்டிடம் நோயாளிகளை அனுப்பி விடுவார்கள்.’

மிரண்டு போன அந்த மருத்துவர் அடுத்த மாதமே அங்கிருந்து விலகி விட்டார்.

இவர் ஆதங்கப்படும் மற்றொரு விஷயம் மருத்துவர்கள் தாங்களே சொந்தமாக மருந்துக்கடை வைத்துக்கொள்வது. மருத்துவர்கள் சொந்தமாக மருந்துக்கடை வைத்து மாத்திரைகள் விற்பதை இந்திய மருத்துவக் கவுன்சில் தடை செய்திருந்தும் மருத்துவர்கள் பலர் இதை மதிப்பதில்லை என்றும் மருந்து ஆய்வாளரிடம் உரிய லைசென்ஸ் பெறாமல், விற்பனை வரியும் கட்டாமல் இப்படி குறுக்கு வழியில் வியாபாரம் செய்யும் மருத்துவர்களை பல ஊர்களில் பார்க்க முடிகிறது என்று வருத்தப்படுகிறார் இவர்.

சர்க்கரை வியாதிக்காக சிறுநீர் பரிசோதனை பல பரிசோதனை நிலையங்களில் செய்யும் விதத்தைப்பற்றி இவர் எழுதியிருப்பதைப் படிக்கும்போது பகீரென்கிறது.

பல laboratoryகளில் இன்று ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியே சிறுநீரைப் பரிசோதனை செய்வதில்லையாம். 20 சாம்பிள்கள் வரும்வரைக் காத்திருந்து, 20 சாம்பிள்களிலிருந்தும் சிறிது சிறுநீரை எடுது, அவற்றை மொத்தமாய் ஒரு சோதனைக்குழாயில் ஊற்றி பரிசோதனை செய்வார்களாம். மொத்தமாக நெகடிவ் என்று வந்து விட்டால் பிரச்சினையில்லை. 20 பேருக்கும் நெகடிவ் என்று எழுதிக்கொடுத்து விடலாம். ஒரே கல்லில் 20 மாங்காய்கள்!! அதில் ஒரு வேளை பாஸிடிவ் என்று வந்தால் அந்த 20 சாம்பிள்களையும் ஐந்து ஐந்தாய் பிரித்து மறுபடியும் பரிசோதனை செய்வார்களாம். மறுபடியும் பாஸிடிவ் என்று காண்பிக்கும் பிரிவை மட்டும் தனித்தனியே எடுத்து பரிசோதனையை செய்வார்களாம். இந்தத் தவறால் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் ஒரு சர்க்கரை நோயாளி, தகுந்த சிகிச்சையைப் பெறும் வாய்ப்பை இழக்கிறார்.



இவரின் மாணவர்-பீகாரில் மருத்துவராக வேலை செய்தவர், அங்கே கிராமப்புறங்களில் எடுக்கும் எக்ஸ்ரே பற்றி சொன்னதை வேதனையுடன் எடுத்துரைக்கிறார்.

மின் வசதி இல்லாத கிராமப்புற நோயாளிகள் நகர்ப்புறம் வந்து மருத்துவர்களை சந்திக்கும்போது, அவர்களிடம் எக்ஸ்ரே எடுக்கச் சொல்லி பக்கத்து செண்டருக்கு அனுப்பி விடுவார்களாம். அங்கே ஆளுயரம் ஃபிரிட்ஜ் இருக்குமாம். அங்கு வேலை செய்பவர் அதை வேகமாகத் திறந்து மூடுவாராம் திறந்ததும் வரும் வெளிச்சத்தை மிரள மிரள பார்ப்பவர்களிடம் எக்ஸ்ரே எடுத்து முடிந்தாகி விட்டது என்று சொல்லி,, ஃபிரிட்ஜின் அடியில் தண்ணீர் தேங்குவதற்காக வைக்கப்பட்டிருக்கும் ட்ரேயில் ஏற்கனவே தயாராக போட்டு வைத்திருந்த பழைய எக்ஸ்ரே படம் ஒன்றைக் கொடுத்து அனுப்புவாராம். இதை வைத்து சிகிச்சை செய்வதாக அந்த மருத்துவரும் கூறுவாராம். அந்த எக்ஸ்ரே படம் அடுத்த சுற்றுக்கு உடனேயே அந்த செண்டருக்குத் திரும்ப வந்து விடுமாம். எத்தனை ஏமாற்று வேலை இது! .

மேலும் தொடர்கிறது.. .. .


படங்களுக்கு நன்றி: கூகிள்