சகோதரி அதிராவின் அழைப்பிற்கு அன்பு நன்றி!
நட்புக்கு இலக்கணம் திருக்குறளில் ஆரம்பித்து, புதினங்கள், தமிழ்க்கவிதைகள், பாடல்கள், திரைப்படங்கள் என்று பலவற்றிலும் வந்து விட்டது. சின்னஞ்சிறு வயதில், உலகம் தெரியாத அந்தப் பருவத்தில், நட்பு என்ற சொல்லின் அர்த்தம் கூடப் புரியாத காலத்தில் சக பள்ளித்தோழிகள், அதே தெருவில் வசித்த மற்ற தோழிகள் என்று ஒன்றாய் கூடித் திரிந்ததுவும் நிலாவில் பாடியும் ஆடியும் களித்ததுவும் இப்போது நினைத்துப்பார்த்தால் கூட அடிக்கரும்பை சுவைப்பது போல மனசின் ஆழம் வரை இனிக்கிறது. அந்த நட்பிற்கு துரோகம் கிடையாது. பொறாமை கிடையாது. ‘ உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது ’ கிடையாது.
‘ மயிலிறகு குட்டி போடுமா?’ என்ற கேள்வியில் பெரிய ஆராய்ச்சியெல்லாம் நடக்கும். பூவரசம்பூவில் மோதிரம் செய்ய போட்டிக்கு மேல் போட்டி இருக்கும். அப்புறம் கொஞ்சம் வயது அதிகமாக, பாவாடை தாவணியில் புதிய உலகம் தெரிந்ததில் சினேகிதிகளுடன் எதற்கெடுத்தாலும் சிரிப்பாயிருக்கும். படிப்பு அப்போது பிரதானமாக இருக்கும். தோளில் புத்தகப்பையும், கையில் சாப்பாட்டுப்பையுமாக, யார் வேகமாக நடப்பது என்பதில் பெரிய போட்டியே இருக்கும். அப்புறம் கல்லூரிப்பருவம். இளம் வயதின் ஆரம்பம். வீட்டின் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதிலும் காதலில் அமிழ்ந்து அந்தத் தவிப்பைப் பகிர்ந்து கொள்வதிலும் நட்பின் தீவிரம் இந்த வயதில்தான் அதிகரிக்கும். பாடல்களைக் கேட்டு மயங்குவதிலும் கவிதைகளைப் பற்றி ரசித்துப் பேசுவதிலும் நட்பின் அன்பு ஆழமாகும்.
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு விதமாய் வளரும் நட்பு, பல வருடங்களின் அனுபவங்களுக்குப்பிறகு, வாழ்க்கையின் நடுப்பகுதியில் உயிர்காக்கும் நட்பாகவும் அவதாரம் எடுக்கிறது. சில சமயங்களில் நட்பு முதுகில் குத்தும் எதிரியாகவும் மாறுகிறது. நட்பை சில சமயங்களில் பொருளாதாரம் தீர்மானிக்கிறது. சிலரது வாழ்க்கையில் நட்பு பொறாமையில் தீக்கனலாக மாறி தகிக்க வைக்கிறது. அந்த வயதில் ‘உயர்ந்த மனிதன் ’ திரைப்படத்தில் வரும்
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே! நண்பனே! நண்பனே!இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே
அது ஏன்? ஏன்? ஏன்? நண்பனே!
பாடம் படிப்பு ஆட்டம் பாட்டம்
இதைத் தவிர வேறெதைக் கண்டோம்
புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே
பள்ளியைப் பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே
நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்”
என்ற கவிஞர் வாலியின் பாடலை நினைக்காதவர் இருக்க முடியாது!!
உண்மையான நட்பு அந்தஸ்து பேதம் பார்ப்பதில்லை. அக்கறையும் கனிவும் அன்புமாய் நட்பை அமையப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
என் நட்புக்குரியவர்கள் என்று பார்த்தால், முக்கியமான சிலரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
சில பிரச்சினைகளுக்காக சில மாதங்கள் அந்த நகரத்தில் நான் தங்கியிருந்த போது, குடும்ப நண்பரால் அறிமுகமான சினேகிதி இவர். குறுகிய நாட்களிலேயே மனம் ஒருமித்த சினேகிதிகளாகி விட்டோம். இவரைப்பற்றி முத்துச்சிதறலில் முன்னமேயே எழுதியிருக்கிறேன். கணவர் பெரிய செல்வந்தர். கையெடுத்து வணங்கக்கூடிய தோற்றம். ஆனால் வெளியில் தெரியாத மோசமான குடிப்பழக்கத்தால் வாழ்க்கையை நரகமாக்க, என் சினேகிதி அதுவும் 8 வயதிலும் 5 வயதிலும் 1 வயதிலும் பெண் குழந்தைகளைப் பெற்றவர் பல தடவைகள் தற்கொலைக்கு முயன்று கொண்டேயிருந்தார். நான் அங்கு இருந்தவரை அவரைப் பல தடவைகள் அந்த மோசமான முடிவிற்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி கண்டித்திருக்கிறேன். நான் அங்கிருந்து இங்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே இறந்து போனார். இப்போது நினைக்கும்போது கூட மனதை கனமாக்கி விடும் சினேகிதி இவர்.
இன்னொரு சினேகிதி. மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்தவர். திருமணமானதும் அத்தனையும் மாறிப்போனது. சந்தேகப்படும் கணவனால் வாழ்க்கை ரணமாயிற்று. சம்பாதித்ததெல்லாம் கணவரின் பொருந்தாத வியாபாரத்தில் காற்றாய்ப் பறந்து போக வாழ்க்கை வறுமையின் கோரப்பிடியில் கழிய ஆரம்பித்தது. மலை போன்ற நம்பிக்கையை பையன் மீது வைத்திருந்தார். அவனும் விபத்தொன்றில் இறந்து போக, நிலை குலைந்து போனார் அவர். இப்போது பெண் வீட்டில் காலம் கழிக்கும் அவர் மனம் படும் பாட்டை எழுத்தில் வடிக்க முடியாது. அவ்வப்போது, 10 வருடங்களுக்கு முன்னால் இறந்த தன் மகனை நினைத்து அழும் அவரை என்னால் எப்போதுமே சமாதானம் செய்ய முடிந்ததில்லை.
சில சமயங்களில் நட்பு கூட நம்ப முடியாத அவதாரங்கள் எல்லாம் எடுக்கும். ‘அறுசுவை’ இணைய தள நிறுவனர் என்னை அவரது தளத்தில் சமையல் குறிப்புகள் எழுமாறு கேட்டுக்கொண்ட போது, அவர் ஒரு சக நண்பராகத்தான் இருந்தார். அப்புறம் நேரே சந்தித்த போதுதான் தெரிந்தது அவர் என் உறவினர் என்று! அதே போல் சக பதிவர் ‘ஹைஷ்’ நிறைய பேருக்கு நல்ல நண்பர். நல்ல அறிவுத்திறன் கொண்டவர். பலருடைய வலிகளை ‘ஹீலிங்’ என்ற முறையில் சரி செய்பவர். என் ஊரிலிருக்கும் அவரின் தங்கையைப்பார்க்கச் சென்ற போதுதான் தெரிந்தது அவரும் என் உறவினர் என்று! உலகம் எத்தனை சின்னது என்று அப்போது தான் புரிந்தது.
கடைசியாக பள்லிப்பருவத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து வரும் என் சினேகிதியைப் பற்றிச் சொல்ல வேண்டும். இவர் கோவையிலிருக்கிறார். எப்போது நான் ஊருக்குச் சென்றாலும் எனக்கு முன்னதாகவே என் வீட்டுக்கு வந்து பூட்டைத் திறந்து, எல்லாம் சுத்தமாக இருக்கிறதா என்று கவனித்து, ஒரு குட்டி சமையல் செய்து, நாங்கள் போய் இறங்கும்போது ஒரு ஃபில்டர் காப்பியுடன் வரவேற்பார். எத்தனை வேலைகள், பிரச்சினைகள் இருந்தாலும் நாங்கள் இருவரும் தினமும் இலக்கியம் பேச மறப்பதில்லை. பாடல்களைக் கேட்டு ரசிப்பதையும் கதைகள் பல பேசுவதையும் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்வதையும் பல வித சமையல் குறிப்புகளை செய்து பார்த்து ருசித்து சிரிப்பதையும் என்றுமே மறந்ததில்லை. அவர் என் சமையலை ருசித்து சாப்பிடுவதைப்பார்க்கும்போதெல்லாம் என் மனம் நிறைந்து விடும். நான் அவருக்காக பதிவு செய்து எடுத்துச் சென்ற பாடல்களைக் கேட்டு விழி நீர் கசிய பரவசப்படும்போது என் மனதும் புளகாங்கிதமடையும். வசந்த கால நட்பை விட இலையுதிர்க்காலத்து நட்பு ரொம்பவும் ஆழமானது!
நட்பிற்கும் எல்லை இருக்கிறது. அன்பும் பாசமும் எல்லை மீறினால் அந்த நட்பில் விரிசல்கள் விழுவதைத் தடுக்க இயலாது. சார்ந்திருக்கும் நட்பை விட கூடவே இருந்து பலப்படுத்தும் நட்பு மிகவும் சிறந்தது!
இந்த நட்பு தொடர்பதிவில் பங்கேற்க நண்பர்கள்
1. மதுரகவி ராம்வி
3. 'தீதும் நன்றும் பிறர்தர வரா' ரமணி அவர்கள்.
4. ஹுஸைனம்மா
ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்.