Friday, 30 July 2010

பாலைவன வாழ்க்கை-தொடர்ச்சி

பாலைவன வாழ்க்கை-தொடர்ச்சி

சகோதரர்-பதிவர் திரு. ராம்ஜி அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மேலும் சில தகவல்களுடன் மறுபடியும் பாலைவன வாழ்க்கை தொடர்கிறது.

இங்கு இத்தனை வருடங்கள் வாழ்கின்ற அனுபவத்தில் ஒன்றை மட்டும் அவசியம் சொல்ல வேண்டும். இங்குள்ள அரேபியர்கள் மிகவும் நல்லவர்கள் என்பதுடன் மற்ற பெண்களை கண்ணியமாயும் மதிக்கத் தெரிந்தவர்கள். நிமிர்ந்த பார்வையில் கண்ணியம் தெரியும். எப்போது சாலையைக் கடந்தாலும் முதலில் காரை நிறுத்தி நாம் கடக்க வழி விடுபவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள். மாறுபட்ட மதங்கள் பெரிய பிரச்சினைகளாய் இருந்ததில்லை. இன்னும் பார்க்கப்போனால் துபாயில் இந்தியர்கள் கட்டி வழிபட சிவன் கோவில் ஒன்றையும் கிருஷ்ணன் கோவில் ஒன்றையும் இந்த நாட்டு அரசாங்காம் அனுமதித்துள்ளது. சட்ட திட்டங்களை ஒழுங்காக அனுசரித்து நடந்தால் எந்தக் கவலைகளுமின்றி இங்கே வசிக்கலாம்.


வியாபாரத்தைப்பொறுத்தவரை முன்னைவிட தற்போது சட்ட திட்டங்கள் சரியான முறையில் வரையறுக்கப்பட்டு கடுமையாகவும் அனுசரிக்கப்படுகின்றன. மில்லியன் கணக்கில் புழங்கும் வியாபாரங்களைத்தவிர்த்து, மற்ற வியாபாரங்களில் நிச்சயம் ஒரு அரேபியர் ஸ்பான்ஸராக இருக்க வேண்டும். அவருக்கு அவர் கேட்கும் தொகையை வருடந்தோறும் ஸ்பான்ஸர்ஷிப் பணமாகத் தரவேண்டும். இதைத்தவிர அவர் பெயரைக்கூட்டாக வைத்தோ [இதற்கென தனியாக பங்கோ பணமோ தரவேண்டியதில்லை] அல்லது அவர் இல்லாமல் தனியான உரிமையாளராகவோ வியாபாரம் செய்யலாம்.

வியாபாரம் செய்யும் கட்டிடத்தின் வாடகையை 4 காசோலைகளாக ஒரு வருடத்திற்குக் கொடுத்துக் கையெழுத்திட்டால்தான் கட்டிடம் நம் கைக்கு வரும். இதோடு போகாது. கட்டிடத்திற்கான செக்யூரிட்டி பணம் ஐந்து இலக்கத்தில் இருக்கும். அவற்றையும் கொடுக்க வேண்டும். பெரிய இடமாக இருந்தால் வாடகை பேசி முடிப்பவரிடம் கமிஷன் தொகையையும் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஹோட்டல் உரிமையாளர் வாடகையாக இன்றைக்கு நம் பணத்துக்கு 30 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை ஒரு வருடத்திற்குக் கொடுக்க வேண்டியுள்ளது. இது வாடகை மட்டுமே. அதன் பிறகு இங்கு எக்னாமிக்ஸ் அலுவலகம், லேபர் அலுவலகம் என்று நம் கட்டிடத்தை முறைப்படி ரெஜிஸ்டர் செய்வதற்கும் பெயர் கொடுத்து பதிவு செய்வதற்கும் லைசென்ஸ் வாங்கவும் என்று நிறைய செலவழியும். பெயர் நம் இஷ்டப்படி வைத்து விட முடியாது. ஐந்து பெயர்கள் தேர்வு செய்து கொடுக்க வேண்டும். அவற்றில் எந்தப் பெயர் அவர்களுடைய புத்தகத்தில் சரியான அர்த்தத்துடன் கிடைக்கிறதோ அதுதான் நமக்குக் கிடைக்கும். ஒரு ஹோட்டல் என்றால் இவ்வளவு சதுர அடியில் ஹால் இருக்க வேண்டும், இத்தனை சதுர அடியில்தான் சமையலறை இருக்க வேண்டும் என்று சட்டமே இருக்கிறது. அதைப் படம் வரைந்து முனிசிபாலிடி இன்ஸ்பெக்டர் ஸ்டாம்ப் அடித்து நம்மிடம் தருவார். இவற்றையெல்லாம் வாங்கி மின்சாரம், தண்ணீர் என்று ஐந்து இலக்கத்தில் கட்டணம் கட்டி அதன் பிறகே வேலைகளைத் தொடங்க வேண்டும்.

இவ்வளவு செலவு செய்து, உணவுப்பொருள்களின் விலை ஏற்றத்தை சமாளித்துத்தான் ஒரு ஹோட்டலின் உரிமையாளர் வாழ்க்கையை, வியாபாரத்தை ஓட்ட வேண்டும். எல்லா வியாபாரத்திற்கும் ஏறக்குறைய இதே மாதிரி சட்ட திட்டங்கள்தான்.

சகோதரர் சொன்னதுபோல உரிமையாளர் தரப்பிலும் சில தவறுகள் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன. சென்ற வாரம்கூட, இங்கே வியாபாரம் செய்த இரு தமிழர்கள் மோசடிகளால் கைதாகி தற்சமயம் சிறைக்குள் தள்ளப்பட்டதை தமிழ்த்தொலைக்காட்சிகூட ஒளிபரப்பியது. எங்கள் இல்லத்தில் வாரம் ஒரு முறை வந்து வீட்டை சுத்தம் செய்து செல்பவர் ஒரு தமிழர்தான். பகுதி நேர வேலைகளாய் இப்படி செய்கிறர். காலை முதல் மாலை வரை ஒரு க்ளீனிங் கம்பெனியில் வேலை செய்கிறார். கடந்த 3 மாதங்களாக அவருக்கும் மற்றவர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. சென்ற மாதம் அந்தக் கம்பெனி உரிமையாளர்கள் திடீரென கம்பெனியை மூடி விட்டு திருட்டுத்தனமாக இந்தியா கிளம்ப முயற்சிக்க ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி தினம் தினம் நிறைய நடக்கின்றன. வேலை தேடும்போது அந்தந்த கம்பெனிகள் எப்படிப்பட்டவை என்பதை நன்கு விசாரித்து-யாராவது இங்குள்ளவர்களிடம் கேட்டுத்தெரிந்து வருவதுதான் நல்லது.

அதேபோல ஊழியர்கள் தரப்பிலும் நிறைய ஒழுங்கீனங்கள் நடக்கத்தான் செய்கின்றன. பணத்தையும் பொருள்களையும் திருடுவது, இன்னும் பெரிய குற்றங்கள் செய்து சிறைக்குச் செல்வது-இப்படி இவர்கள் தவறுகளும் தொடர்கின்றன.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சீட்டிலும் குடியிலும் செலவழிப்பது, உடல் நலத்தை அறியாமையால் கெடுத்துக்கொள்வது என்று தொடரும் பெரும்பாலாரது வாழ்க்கையைப் பார்க்கும்போது வேதனைதான் ஏற்படுகிறது!

சில மாதங்களுக்கு முன் எங்களின் வாடிக்கையாளர் ஒருத்தர் என் கனவரிடம் வந்து தனக்கு நெஞ்சில் வலி இருப்பதாயும் யாராவது தெரிந்த டாக்டரிடம் சிபாரிசு செய்யுமாறும் சொல்லியிருக்கிறார். என் கணவரும் எங்களின் இதய மருத்துவரிடம் அனுப்பியிருக்கிறார். சிறிது நேரத்திலேயே அந்த இதய மருத்துவர் ஃபோன் செய்து என் கணவரை நேரில் வரவழைத்து, அந்த வாடிக்கையாளரை சில பரிசோதனைகள் தன்னிடம் செய்ய வசதி இல்லை என்று சொல்லி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருப்பதாயும் ஆனால் உண்மையில் அவரது இதயம் மிகவும் பழுதுபட்டிருப்பதாயும் எந்த நேரத்திலும் அவருக்கு தீவிர இதயத்தாக்குதல் ஏற்படலாமென்றும் உடனே அவரைச் சேர்ந்தவர்களிடம் இதைக்கூறி நடவடிக்கை எடுக்குமாறும் சொன்னார். என் கணவரும் அவருடைய அறை நண்பர்களை அழைத்து உண்மையைக்கூறி உடனேயே துரித நடவடிக்கை எடுக்குமாறு சொல்லியும் அந்த வாடிக்கையாளர் என் கணவரிடம் வந்து மருத்துவமனையில் தனக்கு எதுவும் பிரச்சினையில்லை என்று சொன்னதாகச் சொன்னார். அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்று பிறகுதான் தெரிந்தது. பரிசோதனைகளை எதிர்கொள்ள பயந்து பேசாமல் திரும்பி வந்திருக்கிறார். அடுத்த இரு மாதங்களில் அவர் இறந்து போனார். செய்தி அறிந்ததும் எனக்கும் மனம் கலங்கிப்போனது.

எங்கேயோ பிறந்து, பிழைப்பதற்காக மனைவி குழந்தைகளைப் பிரிந்து வந்து இங்கு வெய்யிலிலும் குளிரிலும் வாழ்க்கை நடத்தி வேலை பார்த்து குருவி சேகரிப்பது போல சேர்த்து வீட்டிற்குப் பணம் அனுப்பத்தெரிந்தவருக்கு ஏன் தன் உடல் நிலையை கவனிக்க முடியாமல் போயிற்று என்று புரியவில்லை.

Sunday, 25 July 2010

இனிப்புப் பழக்கலவை டெஸர்ட்

மறுபடியும் ஒரு இனிப்பான குறிப்பு. இதில் அடுப்பில் வைத்து சமைக்க வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் சுவையோ மிக அதிகம். அதில் குறிப்பிட்டுள்ள பழங்கள் மட்டும் மிக இனிப்பானதாக அமைவது அவசியம். பழங்களின் இனிப்பிற்கேற்ப சுவையும் அபாரமாக இருக்கும். ஒரு விருந்து சமையலுக்குப் பின்னர் விருந்தினர்களுக்குக் கொடுப்பதற்கு மிகவும் சுவையான இனிப்பு இது!


இனிப்புப் பழக்கலவை டெஸர்ட்

தேவையான பொருள்கள்:

ஸ்பாஞ்ச் கேக்-1
கண்டென்ஸ்ட் மில்க்-500 கிராம்
ஆரஞ்சு ஜெல்லி- 2 பாக்கெட்
மாம்பழம்-2
அன்னாசிப்பழம்-1
பேரீச்சை-10
வாழைப்பழம்-2
ஆரஞ்சு-1 அல்லது இரண்டு
முந்திரிப்பருப்பு-20
காய்ந்த திராட்சை-2 மேசைக்கரண்டி
நெய்- 2 மேசைக்கரண்டி

செய்முறை:

நெய்யில் முந்திரிப்பருப்பையும் திராட்சையையும் பொன்னிறமாக வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
ஜெல்லி பாக்கெட்டில் எழுதி உள்ளபடி ஜெல்லியைத் தயார் செய்யவும்.
அதைக் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
ஆரஞ்சுப் பழத்தைத் தவிர மற்ற பழங்களை சிறிய துண்டுகளாக அறிந்து வைக்கவும்.
ஆரஞ்சுப்பழத்தின் சாற்றைப் பிழிந்தெடுத்து வைக்கவும்.
ஸ்பாஞ்ச் கேக்கை பூந்துருவல்போல உதிர்த்துக்கொள்ளவும்.
அதை ஒரு உயரம் குறைவான கண்ணாடிப்பாத்திரத்தில் கொட்டி கையால் நன்கு அமுக்கி சரி செய்யவும்.
இப்போது கால் கப் கண்டென்ஸ்ட் மில்க் மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொண்டு பாக்கி கண்டென்ஸ்ட் மில்க்-ஐ அதன் மீது சமமாக ஊற்றவும்.

இப்போது பழங்களையும் வறுத்து வைத்துள்ளவற்றையும்  அதன் மீது சமமாகப்பரப்பவும்.
ஆரஞ்சு சாறை அதன்மீது சமமான அளவில் ஊற்றவும்.
அதன்மீது எடுத்து வைத்த கண்டென்ஸ்ட் மில்க்-ஐ ஊற்றவும்.
ஜெல்லி கிட்டத்தட்ட செட் ஆகும் சமயம் அதை எடுத்து பழக்கலவை மீது சமமாகப் பரப்பவும்.
குளிர்சாதனப் பெட்டியில் சில மணி நேரங்கள் வைத்திருந்து அதன் பின் பரிமாறவும்.



      

Tuesday, 20 July 2010

மூளை செயலிழப்பு-உடனடியான மருத்துவ உதவி

சமீபத்தில் எனக்கு என் மகனிடமிருந்து வந்த ஈமெயில் கீழுள்ள மிக முக்கியமான விஷயங்களைத் தாங்கி வந்தது.


மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு திடீரென ஸ்ட்ரோக் வந்தும், வந்ததே சில பேருக்குத் தெரிவதில்லை. சிலருக்கு உடனே மரணம் சம்பவிக்கிறது. சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரியாமலேயே சில நாட்களில் மரணம் திடீரென சம்பவிக்கிறது.

20 வருடங்களுக்கு முன் என் சகோதரியின் கணவருக்கும் இதுபோல ஏற்பட்டு மருத்துவர்களின் சரியான கணிப்புகளும் சிகிச்சைகளும் இல்லாமல் இறந்து போனார். நவீன வசதிகளும் மருத்துவ சிகிச்சை அறிவும் அதிகமாக இல்லாத காலம் அது.

இப்போது அப்படியில்லை. நவீன சிகிச்சைகள் ஏராளமாக வந்து விட்டன. நோய்களைப்பற்றியும் சிகிச்சைகளைப்பற்றியும் மீடியா, புத்தகங்கள் மூலமாக அறிவும் விழிப்புணர்வும் நிறைய கிடைக்கின்றன. கீழுள்ள குறிப்புகளும் ஸ்ட்ரோக் திடீரென்று வந்ததை எப்படி அறிந்து கொள்ளுவது, எப்படி சிகிச்சைக்கு தயாராவது என்பதை அருமையாகச் சொல்கின்றன. இந்தத் தகவல்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை இங்கு வெளியிடுகிறேன். இதைப்படித்து யாரேனும் பாதிக்கப்பட்ட ஒருத்தராவது தகுந்த சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டால் அதுவே என் முயற்சிக்குக் கிடைத்த சிறந்த வெற்றி!!

Blood Clots/Stroke


STROKE: Remember the 1st Three Letters.... S. T. R.

STROKE IDENTIFICATION:

During a BBQ, a woman stumbled and took a little fall - she assured everyone that she was fine (they offered to call paramedics) ..She said she had just tripped over a brick because of her new shoes.

They got her cleaned up and got her a new plate of food. While she appeared a bit shaken up, Jane went about enjoying herself the rest of the evening

Jane's husband called later telling everyone that his wife had been taken to the hospital -

(at 6:00 pm Jane passed away.) She had suffered a stroke at the BBQ. Had they known how to identify the signs of a stroke, perhaps Jane would be with us today. Some don't die. They end up in a helpless, hopeless condition instead.

It only takes a minute to read this...

A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough...

RECOGNIZING A STROKE

Thank God for the sense to remember the '3' steps, STR. Read and Learn!
Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke.

Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions:

S *Ask the individual to SMILE.

T *Ask the person to TALK and SPEAK A SIMPLE SENTENCE (Coherently)
(i.e. It is sunny out today.)

R *Ask him or her to RAISE BOTH ARMS.

If he or she has trouble with ANY ONE of these tasks, call emergency number immediately and describe the symptoms to the dispatcher.

New Sign of a Stroke -------- Stick out Your Tongue

NOTE: Another 'sign' of a stroke is this: Ask the person to 'stick' out his tongue.. If the tongue is 'crooked', if it goes to one side or the other, that is also an indication of a stroke.

A cardiologist says if everyone who gets this e-mail sends it to 10 people; you can bet that at least one life will be saved..
I have done my part. Will you?

Thursday, 15 July 2010

பென்சில் ஓவியம்

மறுபடியும் நான் வரைந்த ஒரு பென்சில் ஓவியம். எழுபதுகளின் ஆரம்பத்தில், மும்பைக்கும் பூனாவுக்குமிடையே இருக்கும் ஒரு நகரத்தில் என் கணவர் வேலை செய்த இடத்தில் நடிகை ஹேமமாலினி படப்பிடிப்பிற்காக வந்ததால் அங்கிருந்த அத்தனை தொழிற்சாலைகளும் வேலை நடக்காமல் ஸ்தம்பித்துப்போனதாக என் கணவர் கூறியப்போது அந்த அழகை வரைந்து பார்க்கத்தோன்றி அப்போது நான் வரைந்தது இது.

Saturday, 10 July 2010

பாலைவன வாழ்க்கை-அதன் லாபங்களும் நஷ்டங்களும்!!

பகுதி-2

எழுபதுகளில் கொச்சியிலிருந்தும் மும்பையிலிருந்தும் காய்கறிகளையும் சரக்குகளையும் கொண்டு வரும் படகுகளிடமும் இந்தத் தொழிலைச் செய்வதற்கென்றே இருந்த சில தனியார் நடத்திய படகுப்பயணங்களுக்கும் பணம் கொடுத்து, பாஸ்போர்ட், விசா போன்ற எதுவுமேயில்லாமல் ஒரு வார காலம் தினமும் அந்த கள்ளத்தோணியினர் ஒரே ஒரு முறை கொடுக்கும் பிரெட் துண்டுகளையும் தண்ணீரையும் உணவாக ஏற்று கடற்பயணம் செய்து திருட்டுத்தனமாக சட்ட விரோதமாக பலர் இங்கு நுழைந்தார்கள். கடற்பயணம் முடிவதற்குள் தரைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அவர்கள் இறக்கி விடப்படுவார்கள். சொற்ப உடைமைப்பொருள்களுடன் இங்கு நுழைந்து கிடைத்த இடைத்தில் கூலி வேலை செய்து அல்லது டாக்ஸி ஓட்டி பிழைத்து வந்த எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன். எழுபதுகளின் பிற்பகுதியில் இரு அரசாங்கங்களும் எடுத்த முடிவில் பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு பொது மன்னிப்பும், ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்து இருப்பவர் ஒருவர் கையெழுத்திட்டு காரண்டி கொடுத்தால் இல்லாத ஒருவருக்கு பாஸ்போர்ட்டும் பின் அதில் விசாவும் அடித்துத் தரப்பட்டது.


அதற்குப்பிறகு கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஓடி விட்டன. சட்ட திட்டங்கள் இன்று கடுமையாக்கப்பட்டு விட்டன. வானளாவிய கட்டடங்களும் செயற்கைப் புல்வெளிகளும் உலகின் பல அதிசயங்களும் இன்றைக்கு எத்தனையோ மாறுதல்களை ஐக்கிய அரபுக்குடியரசில் உண்டாக்கி விட்டன. ஆனால் இன்றைக்கும் பாஸ்போர்ட், விசா என்பதன் அர்த்தமே தெரியாமல் நிலங்களையோ வீட்டையோ அடகு வைத்து காசை ஏதாவது ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து எப்படியாவது இங்கு வந்து நாலு காசைப் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டும்தான் நிறையபேர் வருகிறார்கள். இதில் படிக்காதவர்களுக்கும் படித்தவர்களுக்கும் எதுவும் அதிக வித்தியாசமில்லை.

சில வருடங்களுக்கு முன் இது போல வந்த ஒரு இளைஞர்-அவ்வளவாக படிப்பறிவு இல்லாதவர்-ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததும் அவரை சந்திக்க வந்த ஏஜண்ட் அவர் கையிலிருந்த பாஸ்போர்ட், அனைத்து பேப்பர்களை வாங்கிக்கொண்டு துபாயிலிருந்து இங்கே ஷார்ஜாவிற்கு அழைத்து வந்து, காரை விட்டு இறக்கி “ இங்கேயே நின்று கொண்டிரு, இதோ வந்து விடுகிறேன் ” என்று சொல்லி போனவர்தான். திரும்ப வரவேயில்லை. இரவு நெடுநேரம் வரை அங்கேயே நின்று காத்திருந்து விட்டு அவர் ஒரு வங்கி வாசலில் படுத்துத் தூங்கி விட்டார். காலையில் கூட்டுவதற்கு அங்கு வந்த ஒரு துப்புறவுத் தொழிலாளி பேசிப்பார்த்து விட்டு தமிழர் என்பதால் என் கணவரிடம் கொண்டு வந்து சேர்ப்பித்தார். அவருக்கு இரு வாரங்கள் உணவு, உறைவிடமெல்லாம் கொடுத்து ‘அவுட் பாஸ்’ [ இந்த மாதிரி பாஸ்போர்ட் இல்லாது அல்லது களவு கொடுத்து திண்டாடுபவர்களுக்காக அவர்கள் இந்தியா செல்ல இந்த அரசாங்கம் கொடுக்கும் அனுமதிச் சீட்டு] வாங்க எல்லா ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் தெரிந்த நண்பர் ஒருவர் அவருக்கு தன் அலுவலகத்தில் தினம் நம் இந்திய மதிப்பில் 400 ரூபாயுடன் வேலை கொடுப்பதாகச் சொன்னார். முடிவை அவரிடமே விட்டு விட, கொஞ்ச நாளாவது அந்த வேலையில் இருந்தால் ஊரில் பட்டிருக்கும் கடனையாவது தீர்க்கலாம் என்று சொல்லி பல நன்றிகளைத் தெரிவித்து அந்த கம்பெனிக்குப் போனார் அந்த இளைஞர்.

இது ஒரு விதம் என்றால், சமீபத்தில் எங்களுக்குத் தெரிந்தவர்-ஃபோன் செய்து ஷார்ஜாவில் வேலை கிடைத்திருக்கிறது என்றும்
விசா ரெடியாகி விட்டது என்றும் இன்னும் ஒரு வாரத்தில் கிளம்ப உள்ளதாகவும் சொன்னார். நான் கம்பெனியின் பெயரைக்கேட்டதும் தனக்கு அதெல்லாம் தெரியாது என்றும் க்ரூப் விசாவில் வருவதாகவும் புறப்படும்போதுதான் விசா கொடுப்பார்களென்றும் சொன்னார். அதன் பின் தன் பாஸ்போர்ட் expiry ஆகி விட்டதாயும் அதை renewalக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுத்தால் உடனேயே கிடைக்குமா என்று கேட்டதும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. “ பாஸ்போர்ட் expiry ஆகியிருந்தால் எப்படி உங்களுக்கு விசா கொடுத்திருக்க முடியும் ” என்று கேட்டதற்கு அவருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ‘ இதில் ஏதோ தப்பு நடந்திருக்கிறது. பணம் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். நன்கு விசாரியுங்கள்’ என்றேன். இவர் படித்தவர். ஊரில் நல்ல வியாபாரம் செய்பவர். இவருமே இப்படி அடிப்படை விபரமே தெரியாமல் இருக்கிறார் என்றால் என்ன செய்வது?

சென்ற வாரம் இப்படித்தான் செளத் ஆப்பிரிக்காவில் வேலை என்று 15 பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏஜெண்ட் சென்னையில் விமானத்தில் ஏற்றி விட்டாயிற்று. இங்கே ஷார்ஜாவைச் சேர்ந்த அவர்களின் ஆள் இங்கு கொண்டு வந்து இறக்கி ஒரு வாடகை வீட்டில் அனைவரையும் வைத்து, ‘செளத் ஆப்பிரிக்காவில் பிரச்சினை. அங்கே நுழைய முடியவில்லை’ என்று சொல்லி இரண்டிரண்டு பேராக திருப்ப ஊருக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறான். முன் பின் தெரியாத நாட்டில் வந்து மாட்டிக்கொண்டு அவர்கள் படும் அவஸ்தைகளைக் கேட்கும்போது சகிக்கவில்லை. அதில் ஒருத்தர் சொல்கிறார்- ‘ ஊருக்குப் போய் அந்த ஏஜெண்டைக் கொலை செய்து விட்டுத்தான் மறுவேலை’ என்று!

இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் பணத்தைக் கொடுத்து ஏமாந்து போகிறார்கள். திரும்பத் திரும்ப அரசாங்கம், ‘ முறைப்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனக்கள் மூலம் வெளி நாட்டு வேலைக்கு முயற்சி செய்யுங்கள்’ என்று எச்சரித்தாலும் முன் பின் தெரியாதவர்களின் வார்த்தை ஜாலங்களில் மயங்கி ஏமாறுவதும் இங்கே வந்து ஏமாறித் திணறுவதும்தான் ஆயிரக்கனக்கானவர்களின் நடைமுறைத் துன்பங்களாக இன்றிருக்கின்றன.

இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செய்து பணத்தை சேமித்து நட்புகளுக்கும் உறவுகளுக்கும் உதவுவதிலேயே நிறைய பேரின் ஆயுள் விரயமாகி விடுகிறது. இதில் எத்தனையோ நம்பிக்கை துரோகங்கள்! ஏமாற்றங்கள்!! ஊரிலும் இங்குமாக மனதில் அடி வாங்கி தொலைந்து போன வாழ்க்கையைப் மீட்டுக்கொள்ளக் கஷ்டப்படுபவர்களும் இங்கே ஏராளமாக இருக்கிறார்கள்.

இங்கு வியாபாரத்தைப் பொறுத்தவரை, அனைத்துச் சட்டங்களையும் ஒழுங்காக நூல் பிடித்தாற்போலத் தொடர்ந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. முன்போல இன்று வியாபாரத்தில் ஈடுபடுவது சுலபமில்லை. கடுமையான சட்ட திட்டங்களுக்கு ஈடு கொடுத்து, விஷம் போல ஏறும் வாடகையையும் சமாளித்து வியாபாரம் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அனைத்து வியாபாரிகளுக்கும் இருக்கின்றன.

இதிலேயே காலம் முழுதும் பழகி விட்டு, நம் ஊரில் பிற்காலத்துக்கு என்று ஏதாவது தொழில் தொடங்க வேண்டுமென்று இங்குள்ளவர்கள் அங்கு போய் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யும்போது மிகவும் திணறிப்போகிறார்கள் என்பதும் உண்மை! அவர்களால் முதலில் எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுத்துக்கூட சமாளிக்க முடியாமல் துவண்டு போய் விடுகிறார்கள். பிறகு அந்த சொத்துக்களை காபந்து செய்வதில் ஒரு வழியாகி விடுகிறார்கள். தனது சொந்த வீட்டைக்கூட பத்திரமாக பாதுகாக்க யாருமில்லாதவர்கள்தான் இன்று அதிகம்!

பொருளாதார வளர்ச்சியும் அதனால் கிடைக்கும் மதிப்பும் வசதிகளும் லாபங்கள் என்றால்-இவற்றுக்காகக் கொடுக்கும் விலையோ மிக அதிகம்!

வெளி நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு வாழும் பூமியும் சொந்தமில்லை. பிறந்து வளர்ந்த பூமியும் அந்நியப்பட்டுக்கிடக்கின்றது!

Monday, 5 July 2010

பாலைவன வாழ்க்கை-அதன் லாபங்களும் நஷ்டங்களும்!!

பகுதி-1

லாபங்கள்.. .. .. ..

ஐக்கிய அரபுக் குடியரசில் வாழ்க்கை முப்பந்தைந்தாவது வருடத்தில் சென்று கொண்டிருக்கிறது!! இத்தனை வருடங்களில் நிறைய பெற்றிருக்கிறோம் என்பதும் சிலவற்றை இழந்திருக்கிறோம் என்பதும் மன நிறைவு கிடைத்திருக்கிறது என்பதும் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.

இங்கு வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் எத்தனையோ இந்தியர்கள் டாய்லட் கழுவியும் கார்களைக் கழுவியும் பாலங்கள் கட்டும் சித்தாட்களாயும் இன்னும் எத்தனையோ கடை மட்ட வேலைகளைச் செய்து பிழைக்கிறார்கள். ஆனாலும் அவர்களாலும் அவர்கள் குழந்தைகளை ஆங்கிலப்பள்ளியில் படிக்க வைக்க முடிகிறது. மனைவிக்கும் குழந்தைக்கும் நகைகள் வாங்கி சேமிக்க முடிகிறது. இவைதானே எதிர்காலத்திற்கான உத்திரவாதங்கள்!! அவ்வளவு ஏன், எங்களிடம் பல வருடங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த - அவ்வளவாக படிப்பு இல்லாத ஒருவர் இங்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்த இத்தனை வருடங்களில் ஊரில் தனது நிலங்களையெல்லாம் அடமானங்களிலிருந்து மீட்டு மேற்கொண்டு நிலங்கள், நவீன மயமான வீடு, தன் மூன்று பெண்களுக்கும் பட்ட மேற்படிப்பு, பொறியியல் கல்லூரிப்படிப்பு என்ற வசதி வாய்ப்புகளுடன் வாழ்க்கையை நிலை நிறுத்தியிருக்கிறார். பெண்களுக்கு பொன்னும் பொருள்களும் தந்து திருமணம் செய்து வைக்க அவரால் முடிந்திருக்கிறது!. . இது ஒரு உதாரணம் மட்டும்தான்.

அப்புறம் இங்குள்ள அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான ஒற்றுமை இருக்கிறது. இந்தியாவில் எந்த இயற்கைச் சீரழிவு ஏற்பட்டாலும் மன உந்துதல் ஏற்பட்டு உடனே சமூகச் சேவை நிலையங்களைத் தேடிப்போய் உதவ வழிகள் இருக்கின்றதா என்று பார்ப்பவர்கள் மிகக் குறைவு. அதே மனிதர்கள் இங்கு வந்தபிறகு, அதே மாதிரி இந்தியாவில் மட்டுமல்ல, எந்த நாட்டில் இயற்கைச் சீரழிவு ஏற்பட்டாலும் வேறு வகையில் பாதிப்பு ஏற்பட்டாலும் மனித நேயத்தில் ஒன்றாகி பணமும் பொருள்களும் வசூலித்து உடனே இந்தியாவிற்கு அனுப்புவதில் யாரும் வித்தியாசம் பார்ப்பதில்லை. ஒரு சாதாரண கூலித் தொழிலாளிகூட தன் பங்காக ஏதேனும் கொண்டு வந்து கொடுக்கும்போது மனம் நெகிழ்ந்து போகும். இதுதான் தாய்நாட்டுப்பாசம்!

நஷ்டங்கள்?

இந்த சந்தோஷங்களுக்கும் நிறைவுகளுக்கும் பின்னால் இருக்கும் கண்ணீர்க்கதைகள், சோகங்கள் எத்தனை எத்தனை!!


வாழ்க்கையில் காலூன்றத்தான் இங்கு முதன் முதலாக அனைவரும் நுழைகிறார்கள். குடும்பக்கடமைகளுக்காக பலரும், பட்ட கடன்களை அடைப்பதற்காக சிலரும் இங்கு வேலை செய்ய வருகிறார்கள். எனக்குத் தெரிந்து ஒருவர் தன் கிட்னியை விற்றுக்கூட இங்கு வந்திருக்கிறார். குடும்பக்கடமைகள் தீர்ந்த பிறகும்கூட, கடன்கள் எல்லாம் அடைந்த பிறகும்கூட நிறைய பேர்களால் அவர்கள் விருப்பப்படி தாயகம் திரும்பிச்செல்ல முடிவதில்லை. சொந்த பந்தங்களின் ஆசைகளும் தேவைகளும் விரிந்து கொண்டே போவதால் அவர்களின் துன்பங்களும் முடிவில்லாது விரிந்து கொண்டே போகின்றன. இந்த புதை குழியிலிருந்து அவர்களால் மேலெழும்ப முடிவதில்லை. இதிலேயே அவர்கள் இளமையும் சந்தோஷங்களும் கரைந்து போய் விடுகின்றன.

எத்தனையோ பேர்கள் தனக்கு மீறின கடன்களை வாங்கி ஊரில் தன் சொந்தங்களுக்கு பொருள்களும் உடைகளுமாய் வாங்கிக் குவித்துச் செல்வார்கள். இன்னும் சில இடங்களில் மொய்ப்பணம் மாதிரி யார் ஊருக்குச் சென்றாலும் நண்பர்களெல்லாம் ஆளாளுக்கு 500 திரஹம் தரவேண்டும் என்ற வழக்கமே இருக்கிறது. இது வட்டியில்லாக் கடன்!

திரும்பி வந்ததும் ‘ யாருக்கும் மனசு முக்கியமில்லை. என் பணமும் நான் கொண்டு சென்ற பொருள்களும் மட்டும்தான் முக்கியமாகப்போய்விட்டன. இனி 3 வருடங்களுக்கு ஊர்ப்பக்கம் தலை வைத்து படுப்பதில்லை என்று ரத்தக் கண்ணீர் விட்டழுதவர்களைப் பார்த்திருக்கிறோம்.  திரும்பவும் ஆறு மாசத்திலேயே அவர்களே ‘ இதெல்லாம் பிரசவ வைராக்கியம் மாதிரிதான். அடுத்த வருடமே ஊருக்குப் போகணும்.” என்று புலம்புவதையும் பார்த்திருக்கிறோம்.  சோகங்களும் வலிகளும் தொடர்ந்து துரத்தினாலும் விழியோரங்களில் கண்ணீர் கசிந்தாலும் தூரத்துப்பச்சையாய் எப்போதும் தாய்மண் இங்குள்ளவர்களை இழுத்துக்கொண்டே இருக்கிறது!  இதுதான் நம் மண்ணின் மகிமை!!

இங்குள்ள நடுத்தர குடும்பங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் இல்லை. ஆனால் வேறு மாதிரியான பிரச்சினைகள்- அதிக செலவினங்கள், படிப்புப் பிரச்சினைகள்-இவற்றை சமாளிக்க முடியாமல் நிறைய பேர்கள் திணருகிறார்கள். நம் ஊரைப்போலவே இரண்டு பேரும் சம்பாதித்து வாழ்க்கைச் செலவினங்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது. அல்லது மனைவியையும் குழந்தைகளையும் ஊருக்கு அனுப்பி விட்டு தனிமையிலும் பிரிவிலும் இளைஞர்கள் பாரத்தை சுமக்க வேண்டியிருக்கிறது. இதிலும் ஆயிரம் பிரச்சினைகள். ஊரில் மாமியார்-மருமகள் பிரச்சினை. பெற்றோரின் பாசப்பிணைப்பு ஒரு பக்கம், மனைவியின் தனிக்குடித்தன வற்புறுத்தல் ஒரு பக்கம். பாலைவனத்தில் வேலை செய்யும் இளைஞன் ஊருக்குச்சென்று  அனைவரையும் சமாதானப்படுத்த யாரிடமாவது கடன் வாங்கி அவசரம் அவசரமாக ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

எங்களிடம் வேலை செய்யும் ஒருத்தரின் மனைவி, கடன்களை சமாளிக்க முடியவில்லையென்றும் சீக்கிரம் வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகவும் விட்ட மிரட்டலில் அவர் அவசரமாகக் கிளம்பி ஊருக்குச் செல்கிறார். இப்படி உடனே தீர்த்து வைக்க முடியாத பல பிரச்சினைகளுடன் போராடுவதுதான் இங்கு பாலையில் வேலை செய்யும் பலரின் வாழ்க்கை!!

ஒரு சமயம் ஊரிலிருந்த வந்திருந்த தன் குழந்தையின் புகைப்படத்தை தனது சகோதரரிடம் காண்பிக்க அவர் வேலை செய்யும் இடத்திற்குச் சென்ற ஒரு நண்பர்- கவனக்குறைவினால் அபாயகரமான இடத்தில் மாட்டி-அவர் பின்னந்தலை முழுவதும் உயரத்திலிருந்து வேகமாக வந்த க்ரேனினால் அப்படியே சீவப்பட ரத்த வெள்ளத்தில் விழுந்தார். உயிர் பிழைப்பது மிகவும் அரிது என்ற நிலையில் அவரை இங்குள்ள சாதாரண மருத்துவ மனைகள் எதுவும் அட்மிட் செய்ய மறுத்த நிலையில் அவர் இந்த நாட்டின் தலைநகரில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். சொன்னால் நம்ப முடியாது. அவருக்காக-அவர் பிழைப்பதற்காக இங்கு தெரிந்தவர்-தெரியாதவரெல்லாம் பிரார்த்தனை செய்தார்கள். கடைசியில் எல்லோருடைய பிரார்த்தனை வென்றது. அவர் நம்பவே முடியாதபடி உயிர் பிழைத்தார்.

இன்னொரு சமயம், என் கணவர் கண்ணெதிரே, சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருத்தர், திடீரென இதயத்தாக்குதல் ஏற்பட்டு, கையில் இட்லித்துண்டுகளுடன் அப்படியே இறந்து போனார். அவர் நண்பர்களிடம் தெரிவித்து, ஊரில் மனைவிக்குத் தெரிவித்து- மனசு முழுவதும் கனமாகிப்போனது. இப்படி பல சோகங்கள்!

இது தொடரும்!