Tuesday 4 May 2010

காற்றுக் குமிழிகள்!!



பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது.


இங்கிருந்து தனியாகச் சென்று தஞ்சையில் என் சகோதரி இல்லத்தில் சில நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களுடன் தான் என் தாயாரும் வசித்து வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் நள்ளிரவு என் தாயாருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே என் சகோதரியும் சினேகிதியுமாகச் சேர்ந்து உடனே அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டிலிருந்த சகோதரி மகனை நான் கவனித்து மறு நாள் காலை வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் பெண், சகோதரி மகன் இருவரையும் உறவினர் இல்லம் ஒன்றில் விட்டு விட்டு அதன் பின் நான் மருத்துவமனை செல்வதாகப் பொறுப்பேற்றிருந்தேன்.


சகோதரி வீட்டில் தங்கி வேலை செய்த பெண்ணின் பெயர் கலா. அழகும் துறுதுறுப்புமான பெண். காலையிலேயே எழுந்து வீட்டில் உள்ள வேலைகளைப்பார்த்து சகோதரி மகனையும் கவனித்து விட்டு நேரே என்னிடம் வந்து ‘அம்மா, இந்த ட்ரெஸ் எனக்கு அழகாக இருக்கா’ என்று கேட்டாள். அப்போதுதான் கவனித்தேன், அந்த உடை நான் அவளுக்கு பரிசளித்தது என்பதை. அப்போதுதான் பூப்பெய்திய 13 வயதுப்பெண் அவள். ரொம்பவும் அழகாக இருக்கிறது என்று சொன்னேன். வீட்டை பூட்டு முன் என் கணவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. என் தாயாருக்கு மிகவும் உடல் நலமில்லாததைச் சொன்னதும் பேசி முடிக்கும்போது, ‘உடனேயே போய் விட வேண்டாம், தம்பி இப்போது அழைப்பார். அவரிடமும் விஷயத்தைச் சொல்லி விட்டுச் செல்’ என்று என் கணவர் சொல்லவே தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருந்தேன்.


இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கலா, ‘அம்மா, நான் போய் தெருமுனைக்குச் சென்று ஆட்டோக்காரரை அழைத்து வருகிறேன்’ என்றாள். [அப்போதெல்லாம் கைபேசி உபயோகம் பரவலாக இல்லாத காலம்]. நான் உடனேயே மறுத்தேன். “ஒரு வேளை தொலைபேசி அழைப்பு வருவதற்குள் ஆட்டோ வந்துவிட்டால்- எனக்கு இங்கு ஆட்டோக்காரர்களையெல்லாம் பழக்கம் கிடையாது. ஒருவேளை காத்திருப்பது பிடிக்காமல் ஏதாவது சொல்லலாம். இரு. தொலைபேசி அழைப்பு வந்ததும் நீ போகலாம் ஆட்டோ அழைத்து வர” என்று மறுத்தேன். அவள் பிடிவாதமாக ‘அதெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டாங்கம்மா, எங்களுக்குப் பழக்கமானவர்கள் இருக்கிறார்கள்” என்று கிளம்பிப்போனாள்.


அதன் பின் எனக்கு என் கொழுந்தனாரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்து விட்டு வீட்டைப்பூட்டிக் கொண்டு என் சகோதரி மகனுடன் வெளியே தயாராக அமர்ந்திருந்தேன். 10 நிமிடமாகியும் கலா வரவில்லை. ஆட்டோ கிடைக்கவில்லையோ என்று யோசனை செய்து கொண்டிருந்தேன்.


திடீரென்று பக்கத்துத் தெருவில் இருக்கும் எங்கள் உறவினர் வந்தார். ‘என்னம்மா, இங்கே வீட்டைப் பூட்டி விட்டு உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டதும் நான் விபரத்தைச் சொன்னேன்.


பேசாமல் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தவர் ‘கலா லாரி மோதி மூளை சிதறி செத்துப்போய் சாலையில் கிடக்கிறாள் அம்மா, இந்த வீட்டில் வேலை செய்யும் பெண் ஆயிற்றே, தகவல் சொல்லலாம் என்றுதான் வந்தேன்’ என்றார்.


அவர் அதற்கடுத்தாற்போல பேசியது எதுவுமே என் காதில் விழவேயில்லை. மரணங்களை எதிர்பாராத தருணங்களில் பல முறை சந்தித்திருக்கிறேன். சில வாழ்க்கையை அப்படியே புரட்ட்டி போட்டிருக்கின்றன. ஆனால் இப்படி நிலை குலைய வைத்ததில்லை. எப்படி அழகாக, மஞ்சள் பூசிக்குளித்து, எனக்காகவும் வேலைகள் செய்து கொடுத்து [எனக்கு அன்று உடல் நலம் வேறு சரியில்லாமல் இருந்தது] புதிய ஆடை அணிந்து சந்தோஷமாகப்போனவள் இப்படி ஒரு நிமிடத்தில் காற்றுக்குமிழியாக மறைந்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.


என் உறவினர் ‘ அம்மா, இங்கேயே இருப்பது ஆபத்து. கலாவின் சொந்தங்கள் எல்லாம் குடிகாரர்கள். கூட்டமாக அங்கே அவள் உடல் அருகே நின்று கொண்டிருக்கிறார்கள். இங்கே விரைவில் வந்து நின்று தொல்லை கொடுப்பார்கள். நான் போய் உடனே ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ உடனே கிளம்பு “ என்று கூறி, ஆட்டோ பிடித்து வந்து என்னை அனுப்பி வைத்தார். அன்று முழுவதும் என் உறவினர்கள் என்னை சூழ்ந்து கொண்டு ஒருவர் மாற்றி ஒருவர் ஆறுதல் கூறியதெல்லாம் என் மனதில் பதியவேயில்லல.


ஒரு பக்கம் கலாவின் அப்பாவும் அம்மாவும் என் உறவினர் வீட்டுக்கு வந்து என் சகோதரி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவள் இறந்ததால் இழப்பீடு தொகை அதிகமாக வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர். காலையில் மூளை சிதறி இறந்த பெண்ணுக்கு அவர்கள் அன்று மாலையே பணம் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்தத் தொல்லை தாங்காமல் என் கொழுந்தனார் தன் நண்பரான போலீஸ் அதிகாரியை சந்தித்து அழைத்து வரப் புறப்பட்டிருந்தார். இன்னொரு பக்கம் உடல் நலம் தேறத்தொடங்கியிருந்த என் தாயாருக்கு உண்மை தெரியாது, பெரிய மனக்குறை நான் சரியாகவே பேசவில்லை என்று! இதையெல்லாம் தாண்டி மிகப் பெரிய மன வேதனையில் நான் தவித்துக்கொண்டிருந்தேன்.


அவள் நான் சொல்லச்சொல்ல பிடிவாதமாக கிளம்பினாளே, அப்போது நான் அதட்டி உட்காரவைத்திருந்தால் இப்படி அநியாயமாக இறந்திருக்க மாட்டாளோ, அந்த ஒரு சில நிமிடங்களில் அவளை நான் கோட்டை விட்டு விட்டேனே” என்ற மனதின் தவிப்பை என்னால் வெகு நாட்களுக்கு நிறுத்தவே முடியவில்லை. இன்று நினைத்தால்கூட மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடியவில்லை. அந்த தொலைபேசி அழைப்பு கொஞ்சம் முன்னால் வந்திருந்தால்கூட அந்த மரணத்தின் அழைப்பிலிருந்து அவள் தப்பித்திருப்பாளே என்ற மனதின் தவிப்பை அடக்க முடியவில்லை. நான் அவளைப் போக வேண்டாம் என்று சொன்னதற்கும் அவள் பிடிவாதமாகப் போனதற்கும் இடையில் மரணம் அவளுக்காகக் கொடூரமாகக் காத்திருந்ததை அறியாமல் போய் விட்டேனே என்ற தாபம் இன்னும் மறையவில்லை. அப்போதுதான் பூத்த அந்தப் புது மலர் அடையாளம் தெரியாமல் வாடி உதிர்ந்து போய்விட்டது.








33 comments:

Chitra said...

உங்கள் மன ஆதங்கம் புரிகிறது. உங்களுக்கு சமாதானமும் அவளது ஆத்மா சாந்தி அடையவும், எங்களது பிரார்த்தனைகள்.

Ananya Mahadevan said...

மனோ அக்கா,

ரொம்ப அதிர்ச்சி அடைஞ்சேன். என்ன சொல்றதுன்னு தெரியலை.

உங்கள் நிலமையை புரிஞ்சுக்க முடியறது. முக்கியமா கடைசி பத்தி படிச்சப்போ நீங்க எவ்வளவு ஆற்றாமையோட இதை எழுதி இருக்கீங்கன்னு தெரியுது.

ஆனா இதெல்லாம் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கற விஷயமா? நீங்க இதுக்காக மனசை போட்டு அலட்டிக்காதீங்க.

அந்த குழந்தையின் ஆத்மா உங்கள் ஆதங்கத்திலேயே சாந்தி அடைஞ்சு இருக்கும்.

May God give you peace.

அன்புடன்
அநன்யா

Menaga Sathia said...

இந்த இடுகையை படித்ததும் உங்க மனவேதனை புரிகிறது..காலம் எல்லாம் மாற்றும்,அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் அம்மா..

'பரிவை' சே.குமார் said...

அம்மா,

படித்ததும் சில நிமிடங்கள் என் மனவலியை கட்டுப்படுத்த முடியவில்லை. மரணம் என்பது வரும் நேரத்தில் நாம் பூட்டிவைத்தாலும் நடந்தே ஆகும். அதை தடுக்கும் சக்தி நமக்கேது. அந்த பூ (சிறுமி) அந்த வாடத்தான் அழகாய் மலர்ந்தது போலும். அத்தனை கொடுரமாய் கொண்டு செல்ல இறைவனுக்கு எப்படி மனம் வந்தது?
மறக்க முடியாத நிகழ்வுதான். மறக்க முயலுங்கள்.

Krishnaveni said...

pathetic situation, we can't blame others or including you...It is life...it happens...

ஜெய்லானி said...

இதை படிச்ச எனக்கே மனசு தாங்கல, நேரில பழகிய உங்களுக்கு........ :-(((

Asiya Omar said...

ரொம்ப சங்கடமான விஷயம்,மனசில பூட்டி வைக்காமல் இப்படி பகிர்ந்தது நல்லது,மனது லேசாகி இருக்கும்.நடந்ததை மறப்போம்.நல்லதை நினைப்போம்.அது புண்ணிய ஆத்மா.கவலைப்படாதீங்க.

அன்புடன் மலிக்கா said...

மரணம் நிச்சயம் அது நாம் நினைக்கும்போது வருமேயானால் அதைபற்றி பயம் இருக்காது.

நடந்த விசயங்கள் எல்லாம் நன்மைக்கே மனதை திடப்படுத்திக்கொள்ள இறைவன் சக்தி தரட்டும்.
அந்த ஆன்மா சாந்தியட்டையட்டும்.

ஹுஸைனம்மா said...

என்னதான் சொன்னாலும் மனம் ஆறாதுதான். இறைவன் உங்களுக்குச் சமாதானம் தரட்டும்.

இதில் பெரியவர்கள் சொல் தட்டக்கூடாது என்ற பாடமும் இருக்கிறது!!

Ahamed irshad said...

மனசு கனத்துவிட்டது. கலாவின் மரணம் அந்த நேரத்தில் ஏற்படவேண்டும் என்றிருக்கிறது..அது இறைவன் செயல்.. உண்மையிலேயே படிக்கிற எங்களுக்கே இப்படி என்றால் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் அச்சுழலில்..

அப்போது சொல்ல முடியாததால் இப்போது சொல்கிறேன்


### கலாவின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ####

Ahamed irshad said...

மனோ அக்கா, உங்கள் புதிய பதிவுகள் பதிந்தவுடன் தமிழ்மணம்,தமிழிஷ்,திரட்டி போன்ற வலைதிரட்டிகளில் வர உங்கள் ப்ளாக்கரை அந்தந்த தளங்களில் இணையுங்கள். இதற்கான வழிகள் தெரியுமெனில் இணைக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. தெரியாதெனில் எனக்கு மெயில் {adiraiirshad@gmail.com} அனுப்புங்கள் நான் அதற்கான வழிமுறையை எளிதாக அனுப்பிவைக்கிறேன்...

ஸாதிகா said...

அக்கா,மனதை புரட்டிப்போட்டுவிட்டது இந்த இடுகை.இது நடந்து வருடங்கள் பல சென்றாலும் நினைக்கும் பொழுது பதறத்தான் செய்யும்.படிக்கும் எங்களுக்கே இவ்விடுகை பாதிப்பு இன்னும் நீங்கவில்லையே!

மனோ சாமிநாதன் said...

என் ஆதங்கம் புரிந்து எழுதிய பதிவிற்கும் பிரார்த்தனைக்கும் என் நன்றி, சித்ரா!

மனோ சாமிநாதன் said...

அநன்யா!

நீங்கள் சொல்வதுபோல ‘ஆற்றாமை’ என்பதுதான் சரியான வார்த்தை. முதல் ஐந்து வருடங்களுக்கு மனசு ரொம்பவும் கஷ்டப்பட்டது. ஒரு எஜமானியாய், ‘நான் சொல்வதை நீ கேள்’ என்று அதட்டி உட்கார வைக்கத் தவறி விட்டேன் என்பதுதான் என் ஆதங்கம். ஒரு சினேகிதியாய் நடந்து கொண்டு விட்டேன் என்பதுதான் வருத்தமே.

அன்பான பகிர்தலுக்கு என் நன்றி!!

மனோ சாமிநாதன் said...

என் மன வேதனையைப் புரிந்து, அன்பான பதிலெழுதியதற்கு என் உளமார்ந்த நன்றி, மேனகா!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள குமார் அவர்களுக்கு!

உங்கள் பதிவு ஆறுதல் அளித்தது. சில சமயங்களில் ஒருத்தருக்கு சீரியஸாக இருக்கும்போது, திடீரென்று இன்னொருத்தர் காரணமில்லாமல் மரணம் அடைவார். சீரியஸாக இருந்தவர் உயிர் பிழைத்துக்கொள்வார். அதுதான் இங்கேயும் நடந்தது. நடுவே எதிர்பாராமல் நான் பகடைக்காயாக மாட்டிக் கொண்டேன். அந்தப் பெண்ணுக்கான இழப்பீட்டுத்தொகையை நானே என் கொழுந்தனார் மூலம் அளித்து விட்டேன். அவளின் அப்பா, அம்மாகூட சில நாட்களிலேயே அதை மறந்து விட்டார்கள் என்பது அவர்கள் வந்து என் சகோதரியிடம் பேசியதில் தெரிந்தது. ஆனால் என்னால் இன்னும் அவளின் சோக முடிவை மறக்க முடியவில்லை. அதைப் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

மனோ சாமிநாதன் said...

Dear Krishnaveni!

Yes, we could not predict any thing in this world especially these kinds of tragic happenings. But still I could not forget her tragic end as she was so lovely and innocent in her last minutes!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஜெய்லானி அவர்களுக்கு!

முதல் வருகைக்கும் என் சோகம் புரிந்து எழுதிய வார்த்தைகளுக்கும் என் உளமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஆசியா!

ரொம்பவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்! என் சினேகிதிகள், உறவுகள், முக்கியமாய் என் மகன், கணவர் இவர்களின் மாரல் சப்போர்ட்-இவற்றால் நான் அந்த வேதனையிலிருந்து மீண்டு வந்தேன். 15 வருட காலம் என்பது ஒரு நீண்ட இடைவெளி. ஆனால் ‘என்னால் அவளைக் காப்பாற்ற முடிந்திருக்குமோ, நான் அவளைத் தவற விட்டு விட்டேனோ’ என்ற ஆதங்கம் இன்னும் எப்போதாவது எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மனோ சாமிநாதன் said...

அன்பான பதிவிற்கு உளமார்ந்த நன்றி, மலிக்கா!

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமாக எழுதியுருக்கிறீர்கள், ஹுசைனம்மா!
உண்மை தான். பெரியவர்களின் சொல் தட்டியதால் ஏற்பட்ட எத்தனையோ அவலக்கதைகள் அவ்வப்போது நடக்கின்றனவே!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள இர்ஷாத் அவர்களுக்கு!

நீங்கள் சொல்வதுபோல எந்த விஷயங்களையும் நாம் தடுத்து நிறுத்த முடியாது. நடப்பது நடந்தே தீரும் என்பதுதான் வாழ்க்கையின் அதிசயமும் ரகசியமும்! சில சமயங்களில் நல்லவை நடக்க நாம் ஒரு கருவியாக இருப்பதுபோல, நல்லவை அல்லாதது நடக்கும்போதும் நாம் ஒரு கருவியாக சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஆக்கப்படுகின்றோம். அதுதான் வாழ்க்கையின் சோகமாகி விடுகிறது.

தாங்கள் குறிப்பிட்டுள்ள வலைத்திரட்டிகளில் இணய இதுவரை நேரம் இருந்ததில்லை. அதனால் மெதுவாக அவற்றைச் செய்து கொள்ளலாமென்று இருந்து விட்டேன் இதுவரை. உங்களுக்கு விரைவில் மெயில் எழுதுகிறேன்.

தங்களின் பதிவிற்கும் அக்கறைக்கும் என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஸாதிகா!

இப்போதுகூட, அவள் இறந்து கிடந்த இடம், என் சகோதரியின் இல்லம்-இங்கெல்லாம் கடந்து போகும்போது மின்னல் போல அவள் நினைவு வந்து மறையும். கூடவே ஒரு சோகமும் வலியும் வந்து போகும்.

சில பாதிப்புகள் அவ்வளவு சுலபமாக நம்மை விட்டு என்றுமே மறையாது!

அன்புப் பதிவிற்கு என் நன்றி!!

Anonymous said...

அனைத்துஉலக அன்னையர்க்கும்
பதிவர்களுக்கும்
எனது
பாசமான,
பணிவான,
அன்பான
அன்னையர் தின
வாழ்த்துக்கள்...
complan surya

மனோ சாமிநாதன் said...

தங்களது இனிய வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி, காம்ப்ளான் சூர்யா!

இலா said...

மனோ ஆன்டி! எனக்கு அந்த சிறுமியின் பெற்றோரை நினைத்து தான் வேதனையாக இருக்கிறது. மனித உயிருக்கு எவ்வளவு விலை? விலை கொடுத்தாலும் விலகாத வலிகளும் உண்டே !
அந்த சம்பவத்தின் தாக்கம் இப்பொழுதும் உங்கள் எழுத்தில் இருந்தாலும் அதை பற்றி எழுத இப்போது தான் உங்களால் முடிகிறது... காலம் காயத்தை ஆற்றினலும் தழும்பு மறைவதில்லை...

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் இலா! சில காயங்கள் என்றுமே ஆறாமல் நீரு பூத்த நெருப்பாய் கனிந்து கொண்டேதான் இருக்கின்றன.
சம்பந்தமே இல்லாத ஆளாய் இருந்தாலும் இன்னும் அவளின் இறப்பு எனக்கு வேதனையாகத் தானிருக்கிறது.
உங்களின் புரிதலான பகிர்வுக்கு என் அன்பு நன்றி, இலா!

Priya said...

படித்த எனக்கும் மனதை புரட்டி போட்டுவிட்டது... என்ன சொல்வது என்றே தெரியவில்லை;(

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ப்ரியா!

இது மனதை அப்படியே நொறுக்கி விட்டது. இன்று நினைத்தால்கூட ஒரு தவிப்பு வரும், நம்மால் காப்பாற்றியிருக்க முடிந்திருக்குமோ என்று!

அன்புப் பதிவிற்கு என் நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நாம் என்ன செய்ய முடியும் மேடம்..ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.. நீங்கள் அந்த சிறுமியை அனுப்பியிருந்தால்...
மாறாத...ஆறாத ரணம் அல்லவா அது?
காலன் அவளை அழைக்க அவள் சென்றாள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ராமமூர்த்தி அவர்களுக்கு!

தங்களின் முதல் வருகைக்கு என் அன்பு நன்றி!!
நீங்கள் சொல்வது உண்மைதான். நானாக அனுப்பியிருந்தால் காலத்துக்கும் குற்ற உணர்ச்சி மறையாது. இருந்தாலும் ஒரு எஜமானி போல அவளை அதட்டி உட்கார வைக்காமல் இருந்து விட்டோமே என்ற தவிப்பு இப்போதுகூட வரும்.

துளசி கோபால் said...

ப்ச்.........:(

விதி வலியது:(

நிலாமகள் said...

கொட்டும் மழையில் குமிழ்ந்த நீர்க்குமிழ் போல் நம் வாழ்வு.

சூழ்நிலைக் கைதியாய் சில நேரங்களில் நம்மைப் பீடிக்கும் விதியை என்ன சொல்வது?!

நிறைந்த மனிதநேயமும் நேர்மையான மனசும் இருப்பதால் ஆற்ற முடியாமல் தவிக்க வேண்டியுள்ளது.