Wednesday 31 December 2014

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



அன்பு மணம் வீசியதில் ஆனந்தம் வீட்டில் விளையாட‌,
இன்பம் எங்கும் நிறைந்திருக்க, ஈடில்லாத நிறைவு வழிந்திருக்க,
உண்மையும் உவகையும் சேர்ந்திருக்க,

ஊரும் உலகமும் வாழ்த்திசைக்க,
அனைத்து அன்பு உள்ள‌ங்களும் மகிழ்ந்திருக்க‌
அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


 

Sunday 21 December 2014

முத்துக்குவியல்-33!!

ரசித்த முத்து:

உச்சரிப்பு சரியில்லை. பேசினாலே இலக்கணப்பிழைகள் அதிகம்.  கூடவே ஒருமைக்குத்தாவும் மரியாதையின்மை.  இப்படி யாராவது குறுக்கே வந்தால் நமக்கு எரிச்சல் வருகிறது. கோபம் வருகிறது. சில சமயம் கை நீட்டும்போது கோபம் தலைக்கேறுகிறது.



ஆனால் இதுவே ஒரு மழலைப்பிஞ்சென்றால் நமக்கு ஏன் அத்தனையும் இனிமையாகவே இருக்கிறது?  'தொப்'பென்று தன் பிஞ்சுக்கையால் ஒரு அடி அடித்தால் ஏன் அது மட்டும் பூமாலை மேலே விழுந்தது போல அத்தனை சுகமாக இருக்கிறது?

சிறிய சமையல் முத்து:

ஐந்து நிமிடத்தில் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு விட்டு ஒரு சட்னி செய்யலாம். இதற்கு நாங்கள் 'அவசர சட்னி' என்று தான் பெயர் வைத்திருக்கிறோம்! சற்று பெரிய தக்காளி ஒன்று, பெரிய வெங்காயம் 2, புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு, வற்ற‌ல் மிளகாய் 8 இவற்றை உப்பு சேர்த்து நைய அரைக்கவும். ஒரு தாளிப்புக்கரண்டியில் சிறிது நல்லெண்ணெயை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து நாலைந்து சிறிய வெங்காயங்களை பொடியாக அரிந்து சிறிது கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு வதக்கி சட்னியில் கொட்டவும். தோசைக்கு அத்தனை சுவையாக இருக்கும் இந்த சட்னி!

கேள்வி முத்து:

சில வருடங்களுக்கு முன்பு ஜெயா தொலைக்காட்சியில் பாலச்சந்தர் இய‌க்கத்தில் சிந்து பைரவி 2 என்ற 'சஹானா' என்ற சீரியல் வெளியாகிக்கொண்டிருந்தது. நான் இதை எப்போதாவது நின்று சில காட்சிகளைப்பார்த்திருக்கிறேன். அந்தக் காட்சிகள் எல்லாமே பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி, நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த சில காட்சிகள் தான். அதில் ஒரு காட்சியில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ரசனையுடன் கவனிக்க பிரகாஷ் ராஜ் வசன நடையில் பாடுவார். பிரபல் பாடகர் ஓ.எஸ்.ஆருண் அதற்குப்பாடினார் என்று நினைக்கிறேன். அந்த பாடல் எப்படி ஆரம்பிக்கும், அதன் ஆரம்ப வரிகள் என்ன‌ என்பதை யாராவது சொல்ல முடியுமா?

குறிப்பு முத்து:



தும்பை இலைகளை காய வைத்து பொடித்து தணலில் போட்டால் வரும் புகைக்கு கொசுக்கள் ஓடி விடும்.

மருத்துவ முத்து:



இது ஒரு சகோதரியின் அனுபவமாக ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன். அவருடைய மகனுக்கு மெட்ராஸ் ஐ வந்திருக்கிறது. அந்த வலியோடு நண்பர்களை அழைத்துக்கொண்டு அவருடைய மகன் கடலில் குளித்து விட்டு வ‌ந்திருக்கிறார். மறு நாள் விழிக்கும் போது மெட்ராஸ் ஐ வ‌ந்த சுவ‌டே இல்லையாம். அதனால் உப்பு நீர் மெட்ராஸ் ஐயை குண‌ப்படுத்துகிறது என்பதைப்புரிந்து கொண்டு, சில நாட்களில் அவர் கண‌வருக்கு மெட்ராஸ் ஐ வந்ததும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை விட்டு நாலைந்து தடவை கண்க‌ளை கழுவச்சொல்லியிருக்கிறார். அவர் கணவருக்கும் வந்த மெட்ராஸ் ஐ உடனேயே மறைந்து விட்டதென எழுதியிருக்கிறார் அந்த சகோதரி!!

அதிர்ச்சியடைய வைத்த முத்து:

சமீபத்தில் படித்தேன். ஒரு பெண் பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தபோது இரவில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். இத்தனைக்கும் அவரின் சகோதரி அருகிலேயே அமர்ந்திருக்கிறார். விழித்த போது தான் தெரிந்திருக்கிறது பின்னால் தொங்க விட்டிருந்த அவருடைய நீளமான கூந்தல் கழுத்து வரை வெட்டப்பட்டிருக்கிறது என்ற விபரம்.  தனியே பிரயாண‌ங்கள் செய்கிற போது நகைகள், உடமைகள், பணம் மட்டும் தான் இதுவரை பாதுகாக்கப்படுகிற பொருள்களாக இருந்தன. இனி அவற்றோடு கூந்தலையும் பெண்கள் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்போலத் தெரிகிறது!

இசை முத்து:

இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்  இவர்களது ஆழ்ந்த உச்சரிப்பா, மனதை ஈர்க்கும் பாடல் வரிக‌ளா, இந்த வரிகளை இவர்கள் தங்களது தேன் குரலில் பாடிய விதமா, அருமையான இசையமைப்பா, எதுவென்று எனக்கு இனம் பிரிக்கத்தெரிந்ததில்லை, ஆனால் எப்போது கேட்டாலும் அது முடியும் வரை அமைதியாக அப்படியே ரசித்துக்கொண்டிருப்பேன். அதன் காணொளி இதோ. நீங்களும் ரசியுங்கள். ஆனால் இதில் சித்ரா பாடிய பகுதி மட்டும் தான் இருக்கிறது. முழுப்பாடல் கிடைக்கவில்லை.
 

Wednesday 10 December 2014

தீர்த்தமலை!!

சமீபத்தில் அவ்வளவாக யாரும் அறியாத, ஒரு பழமையான கோவில் பற்றி அறிந்தேன். அதன் விபரங்கள் இதோ!

தீர்த்தமலை

தர்மபுரி மாவட்டம் அரூரிலிருந்து கொட்டப்பட்டி சாலையில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் தீர்த்தமலை கிராமம் உள்ள‌து. இங்குள்ள‌ அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் மலைக்கு தீர்த்தமலை என்றே பெயரிய்யு அழைக்கிறார்கள். மலை அடிவாரத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் மேலேறினால் சிறிது நேரத்தில் மலைக்கோவிலை அடைந்து விடலாம். மலை உச்சியில் தான் தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலைப்பகுதியில் நடந்து செல்வதற்க்கு வசதியாக கற்காரையிலான சாய்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் ஐனூறு அடி உயரத்தில் அமைந்திருக்குமó மலைக்கோவிலுக்குச் செல்லும் வழியில், ஆங்காங்கே நடை மேடை மண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது.




ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட ராமபிரான் வழிபட்ட திருத்தலம். ராம பிரான் சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை.
இந்தக் கோவில் கி.மு 203ல் கட்டப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் அருணகிரி நாதரால் பாடப்பட்ட ஒரே தலம். 1040ல் ராஜேந்திர சோழனால் முன் மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. நாயக்க மன்னர்கள் ஆட்சியில் அங்குள்ள இன்னொரு கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலின் முன் மண்டபம் கட்டப்பட்டது.

தீர்த்தமலை அடிவாரத்திலும் மலை மீதும் தீர்த்தகிரீஸ்வரர், ராமலிங்க சாமி, சப்தகன்னியர், வடிவாம்பிகை அம்மன் என்று தனித்தனிக்கோவில்கள் உள்லன.
மலைக்கு மேற்கே வாயுதீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் உள்ளது. வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது.




தெற்கே எம தீர்த்தம் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் உள்ளது.இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்த மலை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மன் கோவிலுக்குப் பின்புறம் மலை உச்சியிலிருந்து பாறைகள் வழியாக ஊற்று நீர் 2000 வருடங்களாக கொட்டிக் கொண்டேயிருக்கிறது. வருடம் முழுவதும் மழை பொய்த்தாலும் இந்த ஊற்று நீர் கொட்டிக்கொண்டேயிருக்கிறது. இந்த ஊற்று நீரின் மூலம் எது, எங்கிருந்து ஊற்ரெடுத்து பிறக்கின்றது என்ற கேள்விக்கு விடை தெரிய வெளி நாடுகளிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பலர் வந்து ஆராய்ச்சி செய்தும் அவர்களால் எதையும் கண்டறிய முடியவில்லை. மேலிருந்து விழும் நீர் தலையிலோ உடலிலோ பட்டால் நோய்கள் முழுமையாக நீங்கும், பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் தீர்த்தமலைக்கு வந்த வண்ணமாகவே இருக்கிறார்கள்!!

Tuesday 2 December 2014

உதவி எனப்படுவது யாதெனில்...

பழைய புத்தகத்தொகுப்பொன்றைப் புரட்டிக்கொன்டிருந்தபோது, அவற்றில் ஒன்றில் ஒரு சினேகிதி சின்னச்சின்ன உதவிகள் பிறருக்குச்செய்வதைப்பற்றி எழுதியிருந்தார். உண்மையிலேயே அந்த கட்டுரையைப்படித்த போது மனசிற்கு இதமாக இருந்தது! என் மனதில் பதிந்தவைகளில் சிலவும் என் மன உனர்வுகளும் கலந்து இங்கே...!



ஒருத்தருக்கு உதவி செய்வதென்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பது தான்! ஆனால் அது எப்படிப்பட்ட உதவி, எந்த நபருக்குச் செய்கிறோம் என்பதைப்பொருத்து அதன் பரிமாணம் விரிந்து கொண்டே போகிறது. சிலர் தன் உறவு வட்டங்களுக்கிடையே மட்டுமே உதவி என்பதைச் செய்கிறார்கள். இதுவே வேற்று மனிதர் என்றாகிற போது மனசிலிருக்கும் கருணை ஊற்று வரண்டு விடுகிறது. சாலையில் அடிபட்டு விழுந்து கிடக்கும் மனிதர், மனநிலை பிறழ்ந்தவர், நிராதரவாய் அலைந்து திரிந்து கொன்டிருக்கும் மனிதர்கள் என்று இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரியவர்களுக்கு உதவுவதற்கு மிகப்பெரிய கருணை மனம் வேண்டும்.

சின்னச் சின்ன உந்துதல்கள் தான் கருணை என்னும் படிகள் ஏற வழி செய்யும். நாளெல்லாம் வீட்டு வேலைகள் செய்யும் அம்மா, துணி காயவைக்கும் போது, நான் செய்கிறேனே என்று ஒரு கை கொடுக்கலாம். அப்பா வேலைக்குப் போகுமுன் வாகனத்தைத் துடைக்க முற்படும்போது 'அப்பா நான் துடைக்கிறேனே" என்று முன் வரலாம். காய்கறிக்காரியின் கூடையை இற‌க்கி வைக்க ஒரு கை கொடுக்கலாம். நமக்காக வேலை செய்து அச‌ந்து போகிறவர்களிடம் ஒரு விரிந்த புன்சிரிப்பு, ஒரு தம்ளர் மோர் கொடுக்கலாம். சாலையோரம் வழி கேட்பவர்களிடம் சுருக்கமான அசட்டையான பதில் தராமல் விரிவாய் புன்னகையுடன் வழி சொல்லலாம். இப்படி சின்னச் சின்ன உதவிகளை பிறருக்கு வாழ்க்கையின் வழி நெடுக செய்து கொண்டே போகலாம்.



ஒரு பழைய அனுபவம் நினைவுக்கு வருகிறது. பல வருடங்கள் முன்பு நடந்தது இது. வாசலின் முன் இருந்த சிறு கால்வாய் ஓரம் யாரோ ஒருவர் வலிப்பு வந்து துடித்துக்கொன்டிருந்தார். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொன்டிருந்தவர்கள், அந்த வழியே நகர்ந்து கொண்டிருந்தவர்கள் என்று பலர் இருந்தார்கள். நான் என் சகோதரி மகனை அழைத்து அவரை ஓரமாக நகர்த்தி உட்கார வைத்து, ஒரு இரும்புக்கம்பியை கையில் கொடுத்து பிடித்துக்கொள்ள‌ச் சொன்னேன். சிறிது நேரத்தில் வலிப்பு நின்று நுரை தள்ளுவதும் நின்றது. ராமநாதபுரத்திலிருந்து வேலை தேடி வந்ததாயும் வந்த இடத்தில் கையில் காசில்லாமல் உண்ணுவதற்கு வழியில்லாமல் அலைந்ததால் தன் வலிப்பு நோய் மீன்டும் வந்து தாக்கி விட்டதாயும் சொன்ன அவரை வீட்டினுள் அழைத்து பின்பக்கமாய் சென்று குளிக்கச் சொன்னோம். மறைந்த என் சகோதரி கணவரின் உடைகள் தந்து அணிந்து கொள்ள‌ச் சொன்னோம். வயிறார சாப்பாடு போட்டு, திரும்ப ஊருக்குச் செல்ல கையில் பணமும் கொடுத்தோம். கை கூப்பிய அவரின் கலங்கிய கண்களில் தெரிந்த நன்றியை என்னால் 25 வருடங்களுக்குப்பின்பும் மறக்க முடியவில்லை.

தக்க சமயத்தில் ஒருத்தருக்கு வலியப்போய் உதவி செய்யும்போது அந்த நபருக்கு அது எத்தனை ஆறுதலாக இருக்கும் என்பது அனுபவத்தில் உணரும்போது மட்டுமே தெரியும். 'தெய்வம் மாதிரி வந்து உதவினீர்கள்' என்று அவர்கள் வாய் நிறைய வாழ்த்தும்போது ஆத்ம திருப்தி என்பது என்னவென்று உங்களுக்கு புரியும்.



ஒரு ஆங்கில பத்திரிக்கையில் ஒருவர்  தினமும் யாரைப்பார்த்தாலும் Good day என்று சொல்வதையும், யாரிடம் பேசினாலும் 'உங்களிடம் பேசியது எனக்கு மிகவும் நன்றாக இருந்தது' என்று சொல்வதையும் பிடிவாதமான வழக்கமாக வைத்துக்கொன்டிருந்தாராம். இந்த மாதிரி சொல்வது மனிதர்களுக்கு எத்தனை இதமளிக்கும் என்பது உங்களுக்கு புரிந்தால் சங்கிலி போல என்னைத் தொட்ருங்கள் என்று எழுதியிருந்தாராம்.

இந்த வார்த்தைகள் எத்தனை சத்தியாமானது என்பதை மனதளவில் உணர்ந்திருந்தாலும் வாழ்க்கையில் இதைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அனுபவத்தில் இந்த சந்தோஷம் நமக்கு கிடைக்கும் போது அது எத்தனை ஆத்ம திருப்தி கொடுக்கும் என்பதை வாழ்க்கையில் பல சமயங்களில் உண்ர்ந்திருக்கிறேன்.
சென்ற மாதம் துபாயில் ஒரு ஒரு பெரிய வணிக வளாகத்தை சுற்றிப்பார்த்து விட்டு லிஃப்ட்டிற்காகக் காத்து நின்றோம் நானும் என் கணவரும். முதல் நாள் தான் எங்களின் நாற்பதாவது திருமண நாளை சிறப்பாக எங்களின் மகனும் மருமகளும் பேரனும் கொன்டாடியிருந்தார்கள். அருகில் வந்து நின்ற ஒரு வட இந்திய பெண்மணியின் ஆறடிக்கு மேலான உயரத்தையும் அசாத்தியமான பருமனையும் பார்த்துக்கொண்டே லிஃப்ட் உள்ளே நுழைந்தேன். உடனேயே அந்தப் பெண் என்னிடம் ' உங்களுக்குத் திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகின்றன?' என்று கேட்டதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாகிப்போய் விட்டது. ' ஏன் கேட்கிறீர்கள்? நேற்று தான் எங்களின் நாற்பதாவது திருமண நாளைக்கொண்டாடினோம்' என்றேன். அதற்கு அந்தப்பெண் ' உங்கள் இருவரையும் பார்க்கப் பார்க்க Made for each other என்று தோன்றியது. அதனால் தான் கேட்டேன். உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!!' என்று சொல்லி முடிக்கும்போது லிஃப்ட் தரைத்தளத்தில் வந்து நிற்க, புன்னகையுடன் அந்தப்பெண் வெளியே சென்று விட்டது. நான் ஒரு நிமிடம் அசந்து போனேன். வெளி நாட்டினர் இலட்சக்கணக்காக சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில், யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் திடீரென்று தோன்றி நல்ல வார்த்தைகளும் வாழ்த்தும் சொன்னது அதிகமான இதத்தையும் மகிழ்ச்சியையும் மனதில் நிறைய வைத்தது. ஒரு நல்ல வாக்கிற்கு எத்தனை வலிமை இருக்கிறது!!

இது போல நாம் ஒருவருக்கு அவர் எதிர்பாராத போது உதவுகையில், நல்ல வாத்தைகள் சொல்கையில் மனித சமுதாயத்தின்மீது அவருக்கு ஒரு அசாத்திய பிடிப்பும் நம்பிக்கையும் நேசமும் அவரைத் தொற்றிக்கொள்ளும். இது சங்கிலித்தொடராக மாறும். இக்கட்டு, அவசர உதவி என்றில்லை, நம் வீட்டிலேயே சின்னச் சின்ன உதவிகளை நம் உற்றவர்களுக்கு செய்து பாருங்கள், அது தொற்று வியாதி போல உங்களைப்பிடித்துக்கொள்ள்ளும்.



அடிப்படையில் நாம் எல்லோரும் நல்லெண்ணம் கொண்டவர்கள் தான். ஆனால் யோசித்து, கணக்கு பார்த்து செயல்படத் துவங்கும்போது கெட்ட எண்ணங்கள் ஒரேயடியாக அமுக்கி விடுகின்றன. இது மாதிரி உந்துதல்கள் மட்டும் தான் நல்லெண்ணங்களை தூக்கி விடுகின்றன.

ஒருவரைப்பார்த்து சிரிப்பதைக்கூட இப்போது ஒரு பெரிய உதவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். மனதையும் முகத்தையும் கல்லாக வைத்திருந்தால் தான் மதிப்பு என்று பலர் நினைக்கிறோம். எங்கே சிரித்துப் பேசினால் உதவி கோரி வந்து விடுவார்களோ என்ற பயம் வேறு! பக்க்த்து வீட்டின் கதவு திறந்தால் நம் வீட்டின் கதவு அடைத்து விடுகிறது.

ரொம்ப ரொம்ப சின்ன உதவிகளை அவசரத்திற்கு செய்யத் தயங்காதீர்கள். உங்களுக்கு அதன் பின் அதுவே பழக்கமாகி விடும். அதன் பின் எத்தனை நண்பர்கள் உங்களுக்குக் கிடைக்கிறார்கள் என்று பாருங்கள்! பிரமித்துப்போவீர்கள்!! உதவும் மனப்பான்மை நம்மில் வளர வித்திடுங்கள்!!

படங்கள் உதவி: கூகிள்