Friday 21 May 2010

ஆதங்கம்.


சில நாட்களுக்கு முன் எங்கள் குடும்ப நண்பரின் பெண்ணுக்கு பிறந்திருந்த குழந்தையைப் பார்ப்பதற்காக இங்குள்ள மருத்துவ விடுதிக்குச் சென்றிருந்தேன். அன்று காலைதான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்திருந்தது. நான் அன்று மாலை சென்றிருந்தேன்.

மயக்கம் தெளிந்த நிலையில் சோர்வாகப் பேசிக்கொண்டிருந்தது அந்தப் பெண். சில வினாடிகளில் தலைமை நர்ஸ் வந்து சற்று சாய்ந்தாற்போல அமர்ந்து குழந்தைக்குப்பால் புகட்டச் சொன்னார். அந்தப் பெண் உடனே பதறி ‘நான் எப்படி இப்போது பால் தர முடியும். இன்னும் வலி தாங்க முடியவில்லை’ என்றது. அந்த நர்ஸ் ‘உன் குழந்தைக்கு நீதான் கஷ்டப்பட்டு பால் தர வேண்டும். கையை ஊன்றி கொஞ்சம் சாய்ந்து உட்கார். நான் எந்த உதவியும் செய்ய மாட்டேன். நீயேதான் எழுந்து உட்கார வேண்டும்’ என்றார். உதவி செய்ய முயன்ற அந்தப் பெண்ணின் அம்மாவையும் தடுத்து விட்டார். அந்தப்பெண் சிரமப்பட்டு சாய்ந்து அமர்ந்து தன் குழந்தைக்குப் பாலூட்ட முன் வந்ததைப் பார்த்தவாறே நான் வெளியே வந்தேன்.

அந்தப் பெண் மூன்றாம் நாளே வீட்டுக்கு வந்து ஒரு வாரத்தில் நன்கு நடக்க முடிந்ததோடு மட்டுமல்லாது தன்னுடைய, தன் குழந்தையின் தேவைகளை யாருடைய உதவியுமில்லாது பார்த்துக் கொள்ள ஆரம்பித்தது.

மனசு உடனேயே நம் ஊரை நினைத்துக் கொண்டது. இதுவே நம் ஊரானால் என்னென்ன ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்! குழந்தை பெற்ற பெண்னைத் தாங்குவதாக நினைத்து, மன தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுவதற்கு பதிலாக பிரசவமான பெண்ணையும் ஒரு குழந்தையாக கவனித்துக் கொள்பவர்கள் எத்தனை பேர்!

பொதுவாகவே நோயுற்ற ஒருவரைப் பார்க்கப் போகும் மனிதர்களில் எத்தனை பேர் அவருக்குத் தைரியம் கொடுக்கிறார்கள்? அவர் என்னவோ உயிருக்குப் போராடுவது போல ‘ உனக்கா இப்படி ஆக வேண்டும் ? என்ற அழுகையுடன் சிலர் கட்டிப் பிடிப்பார்கள். நோயாளியும் அது வரை தைரியமாயிருந்தவர் தான் வாழ்க்கையின் விளிம்புக்கே வந்து விட்டதுபோல கண் கலங்கி விடுவார். இன்னும் சிலரோ ‘ இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருத்தருக்கு வந்தது. கடைசி வரைக்கும் அவர் பிழைக்கவேயில்லை’ என்று புலம்பும் புலம்பலில் நோயாளிக்கு அடி வயறு கலங்கும். இன்னும் சிலர் தனக்குத் தெரிந்த அரைகுறை மருத்துவ அறிவை அந்த இடத்தில் உபயோகிப்பார்கள். ‘ டாக்டர் இந்த மருத்தையா கொடுத்திருக்கிறார்? இது சரி கிடையாதே? அலர்ஜி அல்லவா உண்டாகும்?’ என்று அவர் பேசுவதைக்கேட்டு நோயாளிக்கு அதுவரை தனக்கு சிகிச்சை செய்து வந்த டாக்டரிடம் இருந்து வந்த நம்பிக்கை ஆடிப்போகும். இன்னும் சிலர் ஏற்கனவே கவலையுடன் இருக்கும் நோயாளியிடம் தன் குடும்பக்கவலைகளையெல்லாம் கூறிப் புலம்புவார்கள்.

நானும் பார்த்து விட்டேன், நிறைய பேர் அதுவரை காப்பியே குடிக்காதவர்போல் நோயாளியைப் பார்க்கப்போகும் இடத்தில்தான் உட்கார்ந்து காப்பி, டீ என்று வெளுத்து கட்டுவார்கள். நோயாளிக்கு உதவியாக இருக்கும் நபருக்கு பார்க்க வருபவர்களுக்கு காப்பி வாங்கி வந்து தரவே நேரம் சரியாக இருக்கும். அதே போல நோயாளியின் கட்டிலில் தானும் அமர்ந்து கொண்டு நோயாளிக்குக் கொஞ்சம்கூட அசைய இடம் கொடுக்காமல் ஆக்ரமித்து அவஸ்தைப்படுத்தும் மனிதர்களைப் பார்த்து எத்தனையோ தடவைகள் சலிப்படைந்திருக்கிறேன்.

இன்னும் சில இடங்களில் தனியறை வாங்கிக் கொண்டு உள்ளே பிரியாணி வாசம் வர சமைத்துக்கொடுப்பதையும் நான் பார்த்து அசந்து போயிருக்கிறேன்.

எனக்குத் தெரிந்த ஒருத்தர் மனைவியை சரியாக கவனிக்கவில்லை என்று பிரசவம் பார்த்துக்கொண்டிருந்த டாக்டரிடம் சண்டை போட, கோபமடைந்த டாக்டர் உடனே வெளியேறி பிரசவம் சிக்கலில் மாட்டிக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

இன்னும் சிலர் நோயாளியிடம் அவரின் நோயைப்பற்றி அலசி கேட்கும் கேள்விகள் அவரை மிகவும் சங்கடத்திற்குள்ளாகி விடும். மற்றவரின் அந்தரங்கத்தில் சம்பந்தமில்லாது தலையிடுவது எத்தனை அநாகரிகம் என்றுகூட நம் மனிதர்கள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நாம் பார்க்கச் செல்வதே அவருக்கு மன ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதற்குத்தான். மருத்துவ சிகிச்சை ஒரு பக்கம் அவர்களை பாதி குணப்படுத்துமென்றால் மீதிப்பாதியை அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் கொடுக்கும் உற்சாகமும் தைரியமும் தான் குணபப்டுத்தும். நம் ஊரில் எப்போது இந்த நாகரிகம் எல்லோருக்கும் முழுமையாக வரும்?

42 comments:

ஜெய்லானி said...

நீங்க சொன்ன விஷயம் அத்தனையும் உண்மை. பொதுவா எதுவும் தெரியாட்டி அமைதியா இருந்து விட்டாவது வரனும். முந்திரி கொட்டை மாதிரி பேசி அடுத்த வங்க மனசை புண்படுத்துபவர்களை என்ன செய்வது. இதை கேட்டா வீண் மனஸ்தாபங்களே வளரும்.

நல்ல அவசியமான பதிவு :-)))))))))))))))

Chitra said...

இன்னும் சிலர் நோயாளியிடம் அவரின் நோயைப்பற்றி அலசி கேட்கும் கேள்விகள் அவரை மிகவும் சங்கடத்திற்குள்ளாகி விடும். மற்றவரின் அந்தரங்கத்தில் சம்பந்தமில்லாது தலையிடுவது எத்தனை அநாகரிகம் என்றுகூட நம் மனிதர்கள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நாம் பார்க்கச் செல்வதே அவருக்கு மன ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதற்குத்தான். மருத்துவ சிகிச்சை ஒரு பக்கம் அவர்களை பாதி குணப்படுத்துமென்றால் மீதிப்பாதியை அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் கொடுக்கும் உற்சாகமும் தைரியமும் தான் குணபப்டுத்தும். நம் ஊரில் எப்போது இந்த நாகரிகம் எல்லோருக்கும் முழுமையாக வரும்?


....... சரியான அலசல். இதை எடுத்து சொல்ல நினைத்தால், உடனே அவர்கள் ஈகோ hurt ஆகி, சண்டைக்குத்தான் வருகிறார்கள். mmmm.....

ஸாதிகா said...

அக்கா அருமையான அலசல்.நிறைய பேர் இதே போல் இங்கிதம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர்.சமீபத்தில் சென்னையில் ஒரு பிரபலமான ஸ்கேன்செண்டருக்கு போனேன்.ஸ்கேன் தொழில் நுட்பத்தின் அதீத நுண்ணியமான விஷயங்களை கற்றுத்தெரிந்து இருக்கும் மருத்துவர்களே நோயாளியின் மனதினை தெரிந்து கொள்ள மறந்துவிடுகின்றனர்.ஸ்கேன் பார்க்க வந்த இடத்தில் நோயாளியின் எதிரிலேயே அவருக்கு வந்திருக்கும் பயங்கரமான நோயை அறிவித்து விட்டார்.ஸ்கேன் ரூமில் இருந்து வெளிப்பட்ட அந்த பெண் பொது இடம் என்பதைக்கூட மறந்து அழுத அழுகை அழுகை இன்னுமும் மறக்க இயல்வில்லை.

Asiya Omar said...

தேவையான பதிவு.இரண்டு மாதம் முன்பு எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு மைல்ட் ஹார்ட் அட்டாக்,அக்கா நீங்கள் சொன்ன அத்தனை அவஸ்தைகளையும் அனுபவித்தோம்.மருத்துவமனை வாசலில் நுழையும் பொழுதே நோட்டீஸ் அடித்து கையில் கொடுத்தால் கூட திருந்த மாட்டார்கள்.

நாஸியா said...

நீங்க சொல்வது 100% சரி.. நானும் இதை ரொம்ப அனுபவிச்சிருக்கேன் சகோதரி.

நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கு ஒருமுறை லெப்டஸ் பைரோஸிஸ் எனப்படும் காய்ச்சல் வந்தது. அதை எல்லாரும் 'எலி ஜுரம்'ன்னு சொன்னாங்க. அப்போ அதை பத்தி அவ்வளவா ஒன்றும் தெரியாது.. நான் இயலாம படுத்திருக்கும்போது, சின்ன பிள்ளைன்னு கூட பார்க்காம என் முன்னாடியே 'எலி ஜுரமா, அப்படின்னா ப்ளேகா'ன்னு கேட்டாங்க. நானும் ஒரு வேளை அப்படித்தானோன்னு எவ்வளவு பயந்து போனேன் தெரியுமா.



சே. அதிலிருந்து என்ன உடம்புக்கு முடியலன்டாலும் யார்கிட்டயும் எதுவும் சொல்றதில்லை.

ஸாதிகா said...

//மருத்துவமனை வாசலில் நுழையும் பொழுதே நோட்டீஸ் அடித்து கையில் கொடுத்தால் கூட திருந்த மாட்டார்கள்//ஆசியா..உண்மைதான்.

மனோ சாமிநாதன் said...

ஜெய்லானி அவர்களுக்கு!

நீங்கள் சொன்ன மாதிரி சம்பந்தமில்லாது பேசி அடுத்தவர் மனம் புண்பட நடக்கும் மனிதர்கள்தான் அதிகம். சிலரைத் தவிர்க்கவும் முடிவதில்லை. மிகவும் முக்கியமானவர்களாக இருப்பார்கள். அந்த மாதிரி சமயங்களில் நோயாளிகளின் பாடுதான் பரிதாபம்.

மனோ சாமிநாதன் said...

சித்ரா! இந்த ஈகோ பாதிக்கப்படுகிறது என்கிறீர்களே, அது மிகவும் சரி.

ஒரு முறை என் மகன் சிறு குழந்தையாக இருந்தபோது தொடர்ந்த வயிற்றுப்போக்கினால் திடீரென்று பாதிக்கப்பட, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்கத்தில் மருந்துக்கடைகள் இல்லாத நிலையில் நெருங்கிய நண்பரும் அருகில் இல்லாத நிலையில் அவர்கள் சகோதரர்- மருந்துக்கடை வைத்திருப்பவர்கள் சொன்ன மருந்துகளை வாங்கினோம். மருந்து கொடுக்க ஆரம்பித்தபோது, ஊரிலிருந்து வந்திருந்த என் சினேகிதி ‘இதில் ஒரு மருந்து மட்டுமே நல்லது. அடுத்த மருந்து நல்லதில்லை. இதைக்கொடுத்து என் தூரத்து உறவினர் குழந்தைக்கு மூச்சு திணறி பிழைக்கவைத்ததே பெரும்பாடாகி விட்டது’ என்று சொன்னதும் பயந்து அந்த மருந்தைக் கொடுக்காமல் அடுத்த மருந்தை மட்டுமே கொடுத்தேன். எங்கள் நண்பர் ஊரிலிருந்து வந்து விஷயத்தை கேள்விப்பட்டதும் ‘அது எப்படி என் சகோதரர் சொன்ன மருந்து தவறாக இருக்கும்?’ என்று மிகவும் வருத்தப்பட்டு விட்டார்.

மனோ சாமிநாதன் said...

அன்பு ஸாதிகா!

மருத்துவர்களும் மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களும் படுத்துகிற பாடு இருக்கிறதே, அதை எழுதப்போனால் இன்னும் மிகப்பெரிய பதிவாக இருக்கும். விரைவில் அது சம்பந்தமாகவும் பதிவு போடலாமென்றுதான் இருக்கிறேன்.

நீங்கள் சொன்னமாதிரி நிறைய நடக்கிறது. ஒரு முறை வயிற்று வலி காரணமாக ஸ்கான் செய்து விட்டு உடைகளை சரி செய்து கொண்டிருந்தபோது, ஸ்கான் செய்த டாக்டர் ரேடியாலஜிஸ்டிடம் பேசிக்கொண்டிருக்கிறார் ‘ இவங்களுக்கு ஒரு கிட்னி வேலை செய்யவில்லை. இன்னொன்றும் பழுதாகிக் கொண்டிருக்கிறது’ என்று. ஒரு கணம் ஆடிப்போய் விட்டேன். அப்புறம் எனக்கெல்லம் சரியாக இருக்கிறது என்பதைத் தெரிவித்த பிறகு, ரிப்போர்ட் வாங்கிப் படித்த பிறகுதான் அவர்கள் இன்னொரு நோயாளியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பதை அவர்களின் தொடர்ந்த பேச்சில் புரிந்து கொண்டேன்.

மனோ சாமிநாதன் said...

ஆஸியா!

இன்னொரு விஷயம் தெரியுமா? சில சமயம் நோயாளிகளே அழுவதையும் புலம்புவதையும் விரும்புகிறார்கள். இதை என்னவென்று சொல்வது? எனக்குத் தெரிந்த ஒருத்தர், நோயில் படுத்திருந்தவர், அவர் பெற்ற மகள் வந்து பார்த்தபோது கண்களில் கலக்கமே இல்லையென்றும் அவரைப்பற்றி அவர் கவலைப்படவேயில்லை என்றும் சொன்னபோது இது புது மாதிரி நகச்சுவையாக இருந்தது எனக்கு. இப்படியும் மனக்குறை!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி நாஸியா!

எத்தனைப் பேர் இந்த மாதிரி ஏதாவது சொல்லி நோயாளிகளின் மனதைக் காயப்படுத்தி விடுகிறார்கள்! இப்போதெல்லாம் மருத்துவமனைக்கு நோயாளியாக அட்மிட் ஆவதற்கு முன்னால் நிரைய விஷயங்களை யோசித்து ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது!!

Menaga Sathia said...

நீங்கள் சொல்வதும் முற்றிலும் உண்மை அம்மா...சிலர் பேசும் போதே நமக்குள் இருக்கும் கொஞ்ச தைரியம் போய்விடுகிறது..எப்போதான் உண்ருவாங்களோன்னு தெரியல??

athira said...

மனோஅக்கா, மிக நல்ல விஷயம் சொல்லியிருக்கிறீங்கள். பலருக்கு இது புரிவதில்லை.

இப்படியான விஷயம்தான் முன்பு “நாகரீகம்” என்ற தலைப்பிலே உரையாடினோம்.

ஜெயா said...

நல்ல சிந்தனையை தூண்டும் பதிவு.வாழ்த்துக்கள் மனோ அக்கா....

மனோ சாமிநாதன் said...

ஆமாம் மேனகா! இப்படிப்பட்ட மனிதர்கள் திருந்துவதே இல்லை. நெருங்கிய உறவுகளும் நண்பர்களுமே இப்படிப்பட்ட தொல்லைகளைத்தரும்போது மற்றவர்கள் செய்கின்ற அத்துமீறல்களை ஒன்றுமே செய்ய முடிவதில்லை.

மனோ சாமிநாதன் said...

அதிரா! நீங்கள் சொல்லியிருக்கிற மாதிரி பலருக்கு தாங்கள் செய்கின்ற தவறுகள் புரிவதில்லை.
மற்றவர்களோ தாங்கள் செய்கின்ற அனைத்துமே சரியானதுதான் என்று நடந்து கொள்கின்றனர்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு என் அன்பு நன்றி, ஜெயா!!

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

இலா said...

ரொம்ப நல்ல பதிவு! எனக்கு சிரிப்பு தான் வருது சிலரை எண்ணி! இப்பல்லாம் இன்டெர்னெட் இருப்பதால் ரொம்பவே ஒரு நோயை பத்தி அதிகமா தெரிஞ்சிட்டு எல்லாரையும் குழப்புவது தான் அதிகம். சமீபத்தில் என் மாமா ( பிரபல குழந்தை மருத்துவர்)அவரிடன் என் பிரெண்டின் மகனை அனுப்பி வைத்தேன்...என் பிரெண்ட் ரொம்ப அதிகம் கேள்வி கேட்டதால் மாமா என்னை தான் ஏன் இப்படி என்று கேட்கிறார்... சிலர் இப்படி தான்...

மனோ சாமிநாதன் said...

"உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி "

விருது கொடுத்த உங்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

உண்மைதான் இலா!

இந்த அரைகுறை மருத்துவ அறிவு கொண்ட மனிதர்கள் இப்போது அதிகமாகி விட்டார்கள். தனக்கு ஆபத்தைத் தேடிக்கொள்வது மட்டுமல்லாது பார்ப்பவர்களிடமெல்லாம், ‘தலைவலியா, இந்த மாத்திரை போட்டுக்கொள்ளுங்கள்’, ‘வயிற்று வலியா, இந்த மருந்துதான் சரி’ என்று தன் அறிவைத் திணிப்பதும் அறிவுரை சொல்வதும் அளவிற்கதிகமாகி விட்டது!

Unknown said...

சரியாக சொன்னீர்கள் .ஒருவர் தன் நாக்கை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் ,எத்தனையோ பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கபடும். அதனால் தன் என் தலத்தில் முதல் வரியில் குறிப்பிட்டு உள்ளேன் .(நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்)

Nathanjagk said...

உங்கள் சிந்தனை சிந்திக்க வைக்கிறது.
நோயுற்றவருக்கு மனரீதியாக வலுசேர்க்கும் நடவடிக்கைகள் காலம் காலமாக இங்கு, நம்நாட்டிலும் உண்டு. சுற்றங்கள், நட்புகள், மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் என்று பல தரப்புகளிலிருந்து மனோதிடம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கிறது.

எப்போதாவது நம்மூர் அரசு மருத்துவமனைகள் பக்கம் ஒதுங்கியிருந்திருப்பீர்களேயானால் கவனித்திருக்க வாய்ப்புண்டு. கையில் ரத்தம் கொப்பளிக்க வாசலில் காத்துக்கிடப்பவரிடம் 'ஏய்.. இந்தா ஒன்னைத்தான். நேரா போயி ரைட்ல திரும்பு. அந்த ரூம்ல போயி ஒக்காரு. வர்றோம்' போன்ற அசால்ட் உபசரிப்புகளும்.. பிரசவத்தில் குழந்தையிழந்தவளிடம் அல்லது பறிகொடுத்தவளிடம் (தமிழக அரசு மருத்துவமனைகளில் இது கொஞ்சம் சகஜம்) 'ஏண்டி இந்த தொற தொறக்கற? என்னமோ அதிசயமா இவ மட்டும் கொழந்த பெத்துட்ட மாதிரி. அழுவற மாதிரி இருந்தா கெளம்பிடு இங்கிருந்து' என்ற மென்-அதட்டல்களும்.. அங்கஹீனமாகி படுத்திருக்கும் நபரிடம், 'தோ பாருப்பா.. வெளியில டிஸ்பன்ஸரி போயி மருந்து வாங்கிட்டு வர்றேன். சும்மா உர்ன்னு பாக்காமா ஏதாவது பாத்துப் போட்டுக் கொடு. இன்னும் 2 நாள் நான்தான் உன்னைப் பாத்துக்கணும்' என்று நடைவலி சொல்லி பணம் பண்ணும் நர்ஸ்களும் இங்கு அதிகம், பேரதிகம்.

இவர்களும் இவர்களின் வார்த்தைகளும் ஒரு அறுவை சிகிச்கை அளவுக்கு நமக்கு மனோதைரியம் கொடுக்கின்றன. தனியாக தனியார் மருத்துவமனைகளில் தன்னைத் தானே சேர்ப்பித்துக் கொள்கிற தனவான்களுக்கு இந்த மாதிரியான தன்னம்பிக்கை வாய்க்காமல் போகலாம். நம் நாட்டு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கிற இந்த மாதிரியான தன்னம்பிக்கை ஊட்டல்கள், மனோதைரிய கவுன்ஸலிங்கள் வேறு எங்கும் கிடைக்கவே கிடைக்காது என அறுதியிடலாம்.

சிலருக்கு மனோதிடம் தானாக அமைந்துவிடுகிறது; இல்லாதவர்களுக்கு பிறரால் நேர்கிறது.

மற்றபடி, மிக நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!!

Nathanjagk said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஜெகந்நாதன் அவர்களுக்கு

உங்கள் முதல் வருகைக்கும் பதிவிற்கும் என் நன்றி!!

நோயுற்றவர்க்கு மனரீதியாக வலு சேர்க்கும் நடவடிக்கைகள் நம் நாட்டில் நிச்சயம் குறைவு என்பதை இத்தனை வருடங்களில் அனுபவப்பூர்வமாக நான் அறிவேன். தற்போது ஆங்காங்கே சில நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து வருவதையும் பார்க்கிறேன்.

அரசு மருத்துவ மனைகளில் ஒதுங்கியிருந்தது மட்டுமில்லை, அனுபவப்பூர்வமான பல கசப்பான நிகழ்வுகளையும் அனுபவித்தவள் நான். என் தந்தை அங்குதான் மரணம் எய்தினார். இப்படி மரணமுற்ற ஒருவர் உடலை அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்ல எத்தனை கஷ்டங்கள், பேரங்கள் உண்டோ அத்தனையும் அனுபவித்தோம்.

சரியான மயக்க மருந்தைத் தராமல் உணர்வு இருக்கும்போதே துடிக்கதுடிக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட சினேகிதியர்கள் கண்ணீரில் பங்கேற்ற அனுபவமும் உண்டு. என் கணவரே அறுவை சிகிச்சை முடிந்து தையலைப் பிரிக்காமல் தள்ளிப்போட்ட டாக்டரைத் தவிர்த்து அட்டெண்டருக்கு பணம் கொடுத்துத் தையலைப் பிரித்துக்கொண்ட அனுபவமும் நேர்ந்திருக்கிறது. இதெல்லாம் 20 வருடங்களுக்கு முன்னான கதைகள்! இப்போதோ இந்த ஒழுங்கீனங்கள் எல்லாம் புரையோடிப்போயிருக்கின்றன என்பதுதான் உண்மை..

தனியார் மருத்துவ மனைகளைவிட பொது மருத்துவ மனைகளில் இவை அதிகம் என்பதுதான் வித்தியாசமே தவிர எல்லா இடங்களிலும் இந்த மாதிரி அத்து மீறல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. சமீபத்தில்கூட எங்கள் குடும்ப நண்பர்-வயதானவர்-ட்ரிப் செல்வதை நர்ஸ் சரியாக கவனிக்காமல் விட-இரத்தம் ரிவர்ஸில் போய் கசிய ஆரம்பித்ததும்- அவர் ஒரு கடந்த கால லாப் டெக்னீஷியன் என்பதால்- தனக்குத்தானே சரி செய்து கொண்டு விட்டார்.

ஒரு அறுவை சிகிச்சைக்கு இளம் வயதினர் தைரியத்தோடு தயாராவதுபோல வயதானவர்கள் தயாராவதில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் அனுபவம் அவர்களுக்கு மனோதைரியத்தைக் கொடுப்பதில்லை. அனுபவங்கள், கவலைகள் அவர்களின் மனோதிடத்தைக் குறைக்கின்றன.. விதிவிலக்குகள் இருக்கிறார்கள். ஆனால் பொதுவான நிலைமை இதுதான். லஞ்ச லாவண்யங்களிலும் கசப்பான நிகழ்வுகளிலும் நிறைய பேர் போராடிக் களைத்துப்போய் விடுகிறார்கள் என்பதே நிதர்சனம்!

Krishnaveni said...

nice post madam. very true sayings....

மனோ சாமிநாதன் said...

தூயவன் அவர்களுக்கு!

உண்மைதான். நாக்கைக் கட்டுப்படுத்தினாலே மனக்கஷ்டங்களையும் தவிர்க்கலாம். நோய்களையும் தவிர்க்கலாம்.

தங்கள் முதல் வருகைக்கும் பதிவிற்கும் என் நன்றி!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice words, Krishnaveni!

Nathanjagk said...

அன்பு தங்களின் மனோ மேடம்,
தங்களின் விரிவான பதிலுரைக்கு நன்றி!
உங்களின் இந்த சிரத்தையும் தெளிவும் போற்றப்படவேண்டியது.
கடந்து செல்லக்கூடிய நிகழ்ச்சிகள் என்று நாம் எண்ணுபவை பிறருக்கு பெரிய வலியாகவும் அசாதாரணமாகவும் இருந்திருக்கக்கூடும்.
நம் அரசு மருத்துவமனைகள் பற்ற நான் எழுதியது பெரிதும் கேட்டல், படித்தல் அல்லது பார்த்தல் போன்றவற்றின் மூலமே. உங்களது பதிலுரையில் தாங்கள் இத்தகு அனுபவங்களை என்னிலும் மேலாக நேராக சந்திருப்பீர்கள் என்று புரிகிறது.

நான் சொன்ன கருத்தும் தங்களின் கருத்தும் அரசு மருத்துவமனைகளில் பராமரிப்பு என்ற பார்வையில் ஒன்றாக இருப்பதை உணர்கிறேன். அரசு மருத்துவமனை பற்றி நான் இங்கு குறிப்பிடக் காரணம்.. சிலசமயங்களில் மனோதைரியம் மற்றவர்கள் அலட்சியத்தாலும் கிடைக்கிறது என்பதற்காகவே.

தங்கள் இடுகையின் மையக்கருத்தான 'நோயுற்றவர்களின் மனோதைரியம்' என்ற வாதத்திற்கு சற்றுப் பொருத்தமில்லாததாக என் பின்னூட்டம் இருந்திருக்கலாம். இருந்தும் அதனை சிரமமேற்கொண்டு தங்களின் சிந்தனைகளையும் தந்திருப்பது இதமாக உணர்கிறேன்.
மனோதிடம் நமக்குப் பெற ஒரு சிறு இழப்பாவது தேவைப்படுகிறது. ஒரு தோல்வி அல்லது வலி நம் மனோதிடத்தைச் சோதிக்கும் வாய்ப்பாகவே வருகிறது. அந்த வாய்ப்பை பறித்துவிடும் முனைப்போடு சிலர் ஆறுதல் என்ற பெயரில் நம் மனோதைரியத்தை குலைத்துவிடுகிறார்கள். நோயுற்றவர்களை நாம் எதிர்கொள்ளும் விதம் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் சிந்தனை எனக்கும் பிடித்தமானது.

நோயுற்றவருக்கு ஆறுதல் சொல்வது தற்காலிக ஆதூரம்.. எழு, நட, முறியடி என வலியை எதிர்கொள்ளும் மந்திரத்தைச் சொல்லித்தருவதே நிரந்தர வைத்தியம்.

தன்னம்பிக்கையூட்டும் இது போன்ற எழுத்தை மேலும் படிக்க ஆவலாகிறேன். வாழ்த்துக்கள்!!

Mrs.Mano Saminathan said...

அன்புள்ள ஜெகந்நாதன் அவர்களுக்கு!

தங்களின் பதில் இதமாக இருந்தது மட்டுமல்ல, உங்களைப்போன்ற இளைஞர்களின் மனத்தெளிவினாலும் சீற்றமிகு போராட்ட உணர்வுகளினாலும் எதிர்காலத்தில் இந்த மாதிரி பொது ஒழுங்கீனங்கள் குறைந்து மற்றவர்களுக்கு மனோதிடம் ஏற்படும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.

என் ஆதங்கங்களைத்தான் என் பதிவில் பகிர்ந்திருந்தேன். ஒரு நோயாளிக்கு அவர்களின் அவசரத்தேவையில் நெருங்கிய உறவுகள்கூட ரத்தம் கொடுக்க முன் வருவதில்லை. இதுகூட சொந்த அனுபவம்தான். பொதுவாகவே கருணை என்பதும் அன்பு என்பதன் உண்மையான அர்த்தமும் இப்போதெல்லாம் மிகவும் அருகிப்போய் விட்டன!

இரு முறைகள் தாங்கள் வந்து பதிவெழுதியதற்கும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் என் அன்பு நன்றி!!

Ahamed irshad said...

மனிதமே இல்லாதவர்கள்.. நல்ல பதிவு மனோ அக்கா..

மங்குனி அமைச்சர் said...

//மற்றவரின் அந்தரங்கத்தில் சம்பந்தமில்லாது தலையிடுவது எத்தனை அநாகரிகம் என்றுகூட நம் மனிதர்கள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
////


அதுலயும் ஆறுதல் படுத்துறேன்னு சொல்லி , பக்கத்துல யார் இருக்கான்னு கூட பாக்காமா ஓவரா பேசுவாங்க

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. இங்கு எல்லாம் பேஷண்டிமே ஒப்பனா என்ன வியாதி என்பதை சொல்வார்கள். அது தான் இங்குள்ள முறை. அதற்க்குண்டான் சிகிச்சையும் அதன் பக்க விளைவுகள் + அதற்குண்டான் செலவு எல்லாவற்றையும் வினாவினாடியா கூறிவிடுவார்கள். இங்கு எந்த ஒரு சர்ஜரி என்றாலும் ரொம்ப சிம்பிளா நம்க்கு புரியும் படியாகவும். தைரியத்தை தருவதையும் சொல்தால் பேஷண்ட்டுக்கும் தைரியம் வந்து விடுகிறது. என் கனவருக்கு மினஸ்கஸ் சர்ஜரி செய்தார்கள். உண்மையிலே எனக்கு ரொம்ப பயமாகிவிட்டது. ஆனால். இங்கு பேஷண்ட்டுக்கு சர்ஜரி எப்படி செய்ய போகிறாகள் என்பதை முன்பே செய்தவரின் படத்தை போட்டு விளக்கி விடுவார்கள்.
நல்ல் முறை அதை பார்த்ததும் அவசியம் நாம் எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியவந்தது. பின்பு தான் பயம் இல்லாமல் என்னால் இருக்க முடிய்ம். இங்கும் சர்ஜரி முடிந்த மறு நாளே நட்க்க வைப்பார்கள், பின் சொல்வார்கள் நிங்களே பிடித்து கொண்டு நடக்க பழகவேண்டும் என்று சொல்லிவிட்டு செல்வார்கள். ஒரு விதத்தில் நல்லது என்றே தான் நால் சொல்வேன்.

ஹுஸைனம்மா said...

இங்கேதான் என் இரண்டாம் மகன் பிறந்தான். அறுவை சிகிச்சை என்ற போதும், என்னோடு யாரையும் உதவிக்கு தங்க விடவில்லை!! 5 நாட்களும் தனியேதான் இருந்தேன். எல்லா வேலைகளையும் செய்துகொண்டேன். அதேபோல, பக்கத்து பெட்டில், முதல் பிரசவமான பெண், தனியே இருக்கும்போது, தாயின் அறிவுரைப்படி, நர்ஸிடம் குழந்தையைத் தூக்கித்தரச் சொல்ல, அவர் “உனக்கென்ன பெட்ரெஸ்டா? நீயே இறங்கி எடுத்துக் கொள்” என்று சொல்லிவிட்டார்!!

ஒரு வகையில் இது தன்னம்பிக்கை தருவதுதான்.

/நோயாளியைப் பார்க்கப்போகும் இடத்தில்தான் உட்கார்ந்து காப்பி, டீ என்று வெளுத்து கட்டுவார்கள்//
ஆமாக்கா!! இதுக்குன்னே ஒரு ஆளும் வேணும்!!

நம்ம ஊர் அரசு மருத்துவமனைக்குப் போகும் நிலை வராது, இறைவன் காக்க வேண்டும்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு மிக்க நன்றி, இர்ஷாத்!

மனோ சாமிநாதன் said...

“//மற்றவரின் அந்தரங்கத்தில் சம்பந்தமில்லாது தலையிடுவது எத்தனை அநாகரிகம் என்றுகூட நம் மனிதர்கள் நிறைய பேருக்குத் தெரிவதில்லை.
////
அதுலயும் ஆறுதல் படுத்துறேன்னு சொல்லி , பக்கத்துல யார் இருக்கான்னு கூட பாக்காமா ஓவரா பேசுவாங்க”

நீங்கள் சொல்வது மிகவும் சரியான விஷயம். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவமாக இல்லாமலாவது இருக்கலாம். மக்கள் தானாக திருந்தும் காலம் வந்தால்தான் இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு விடிவு காலம் வரும்!

மனோ சாமிநாதன் said...

விஜி! இங்கும் நீங்கள் சொன்னமாதிரி முன்னேற்றங்கள் பெரும்பாலும் மருத்துவ மனைகளில் உண்டு. பிரசவ வலியுடன் பெண்ணை அழைத்துச் சென்றாலும் அட்மிட் செய்த கையோடு நம்மை அனுப்பி விடுவார்கள் குழந்தை பிறந்த பிறகு சொல்கிறோம் என்று!! இதனால் தகுந்த பயிற்சி மூலம் அந்த சம்பந்தப்பட்ட நோயாளிக்கு தன்னம்பிக்கை, யாரையும் சார்ந்து இல்லாதிருத்தல் என்று நிறைய நல்ல விஷயங்க்ளைக் கற்றுக்கொள்ள முடிகிறது!! நம் இந்தியாவில் இவை மாதிரி நல்ல மாற்றங்கள் வராதா என்று இதுபோல ஒவ்வொரு நல்ல விஷயத்தைப் பார்க்கும்போது வரும் ஏக்கத்தைத் தவிர்க்க முடிவதில்லை.

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சொல்வதெல்லாம் மிக மிகச் சரியான விஷயங்கள் ஹுஸைனம்மா! முப்பது வருஷங்களுக்கு முன்பேயே என் தங்கைக்கும் இப்படித்தான் நடந்தது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் சலைன் பாட்டிலையும் கையில் தூக்கிக் கொண்டு குழந்தைகள் அறைக்குச் சென்று குழந்தைக்கு பால் புகட்ட வேண்டும்! இந்த மாதிரியான கட்டுப்பாடுகள், பயிற்சி, சுத்தம், இதெல்லாம் எப்போது நம் இந்திய மருத்துவ மனைகளில் வரும்? பெருமூச்சுதான் வருகிறது!

ராமலக்ஷ்மி said...

ஆதங்கம் சரியே.

//நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை நாம் பார்க்கச் செல்வதே அவருக்கு மன ஆறுதலையும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தருவதற்குத்தான். மருத்துவ சிகிச்சை ஒரு பக்கம் அவர்களை பாதி குணப்படுத்துமென்றால் மீதிப்பாதியை அவர்களைப் பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் கொடுக்கும் உற்சாகமும் தைரியமும் தான் குணபப்டுத்தும். நம் ஊரில் எப்போது இந்த நாகரிகம் எல்லோருக்கும் முழுமையாக வரும்?//


நல்லாச் சொல்லியிருக்கீங்க. அதையும் நல்ல பார்வையில் ஏற்றுக் கொள்கிற மனோபாவமும் மனிதருக்கு வேண்டும். இங்க பாருங்களேன்: “பன்னீர் புஷ்பங்களே” ! பயப்படாதீங்க, அடிக்கடி சுட்டியெல்லாம் தந்திட மாட்டேன். இப்பதிவுக்குக் கொஞ்சம் தொடர்புடையதாய் இருப்பதால்:)!

நானும் என் சிந்தனைச் சிப்பியிலிருந்து சிதறி விழும் எண்ண முத்துக்களைத்தான் சரமாகக் கோர்த்து வருகிறேன்:)!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ராமலக்ஷ்மி!

முதல் வருகைக்கும் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் அன்பு நன்றி!
நீங்கள் கூறியிருப்பது உண்மைதான். நல்லன எதையும் நல்ல விதமாக எடுத்துக்கொள்ளும் தெளிவான மனப்பாங்கு எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

உங்களைப் பற்றி சென்ற வாரம் ‘வல்லி சிம்ஹன்’ சொன்னார்கள். அப்போதுதான் என்னுடைய ‘முத்துச்சிதறல்’ மாதிரி ‘முத்துச்சரம்’ என்ற வலைத்தளமும் இருப்பது தெரிந்தது. நீங்கள் குறிப்பிட்ட ‘பன்னீர் புஷ்பங்களைப் படித்தேன். பொதுவான ஒரு நோயாளியின் மனதை அழகாக எழுதியிருக்கிறீர்கள். நோயாளியின் பல வித உணர்வுகள் பற்றியும் அனுபவங்களைப்பற்றியும் ஒரு தனியான பதிவு போட வேண்டும்!

goma said...

உங்கள் ஆதக்கத்தை அப்படியே சுருக்கமாக டைப் செய்து மருத்துவமனைகளில் மாட்டி வைத்தால் பயன் தரும்

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் பதிவிற்கும் அன்பு நன்றி கோமா!!