Sunday, 1 October 2023

சமயங்களும் அன்பும் !!!- பகுதி-1

 தமிழர்கள் வாழ்வியலில் சமயத்துக்கான முக்கியத்துவம் முன்பு இருந்ததில்லை. மனிதமும் மனிதாபிமானமும் நல்லிணக்கமுமே பெரிதாய் இருந்தது. அரசியலும் புல்லுருவிகளுமே இந்த அன்பைத்தகர்த்து சமயங்களை பிரித்தன. ஆனால் இதற்கெல்லாம் இன்னும் மசியாமல் ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பரம் இணைந்து சமயங்களும் அன்பும் ஒன்றாய் இணைந்து வாழ்வது இன்னும் நம் தமிழகத்தில் அங்கங்கே இருப்பதறிந்தபோது வியப்பாக இருக்கிறது! கீழ்க்கண்டவை அவற்றின் சாட்சியங்கள்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டணம் என்னும் ஊரில் உள்ள தர்க்கா, ராவுத்தர் அப்பா தர்க்கா என அழைக்கப்படுகிறது. அதன் அருகே முனியய்யா கோவில் உள்ளது. இந்த முனியய்யாவும் ராவுத்தர் அய்யாவும் நண்பர்கள். அதனால் இந்து இஸ்லாமிய பண்டிகைகளின் போது இந்த இரு கோவில்களுமே அலங்கரிக்கப்படுகின்றன. கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் தர்க்காவிற்கு சென்று விட்டுத்தான் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்த தர்க்காவின் கந்தூரி விழா காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல் நாள் மண்டகப்படியை அங்குள்ள பத்தர் குடும்பத்தார்தான் செய்து வருகிறார்கள். 


ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி நடுவில் ஒரே வளாகத்தில் மாரியம்மன் கோவிலும் தர்க்காவும் அமைந்துள்ளது. மாரியம்மன் கோவிலின் குண்டம் தர்க்காவின் வாசல் பகுதியில் அமைந்துள்ளது. தர்க்காவின் வலப்பக்கம் வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. ரம்ஜான் தொழுகையின் போது இந்து மக்களும் தொழுகைக்கு செல்வதும் மாரியம்மன் கோவில் விழாவில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து கொண்டாடுவதும் இங்கு ஆண்டு தோறும் நடக்கும் அற்புதம்!!


ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிப்பாளையத்தில் உள்ள சிவசுப்ரமண்யர் கோவிலில் விழா தொடங்குமுன்பாக ஊர்மக்கள் எல்லோரும் ஒன்று கூடி தேங்காய்ப்பழத்தட்டுடன் பள்ளிவாசலுக்குச் சென்று அழைப்பு விடுப்பார்கள். பங்குனி உத்தரத்தின் போது இஸ்லாமியர்கள் வெள்ளக்கொடி ஏந்தி கோவிலிலிருந்து வாத்தியங்கள் முழங்க புறப்பட்டுச் சென்று கடைகளின் வாசலில் சந்தனம் பூசி, இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒருவருக்கொருவர் மாலை மரியாதை செய்து கொள்கிறார்கள்!


சிவகங்கை மாவட்டத்திலுள்ள வஞ்சினிப்பட்டியில் 10 நாள் பூக்குழி திருவிழாவாக அல்லாசாமி பூக்குழி திருவிழா கடந்த 350 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது இந்துக்களும் இஸ்லாமியர்களும் மாறி மாறி ஒருவருக்கொருவர் விருந்து வைத்துக்கொள்வார்கள். பூக்குழி தினத்தன்று அனைத்து மக்களும் மல்லிகைப்பூ, சர்க்கரை வைத்து அல்லாவிடம் பாந்தியா ஓதி பின் சுவாமிக்கு பூக்குழி வளர்க்கப்படுகிறது. பூக்குழிக்குப்பிறகு சாம்பலை அள்ளி இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் பூசி விடுவதும் வழக்கமாக இருக்கிறது.


ராமநாதபுரம் அரண்மனையிலுள்ள சேதுபதி மன்னர்களது குடும்பக் கோயிலான ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் போது முதல் பிரசாதம் கன்னிராசபுரம் நாட்டாமைக்கே வழங்கப்பட்டது. போர் ஒன்றில் அப்துல் கனி என்ற அந்த நாட்டாண்மை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதிக்கு உதவீயாக செய்த அருஞ்செயலுக்காக இந்த தனிச்சிறப்பு செய்யப்பட்டது. 

மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் நிறைய இந்துக்கள் விசேஷ அலங்காரங்களுடன் கூடிய ஆடைகளை அணிந்து கலந்து கொள்வது வழக்கம். அந்த ஆடைகளை இன்றளவும் மதுரையில் இருக்கும் புது மண்டபத்தில் பல தலைமுறைகளாக இஸ்லாமியர்கள் தான் தைத்து வருகிறார்கள். அந்தப்பகுதியில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் மாமா, மாப்பிள்ளை என்று ஒருத்தருக்கொருத்தர் அழைத்துக்கொள்வது தான் வழக்கம்!

தொடரும்-