Monday 28 January 2013

முள்ளங்கி ரசம்!!!

செய்திகள், சிந்தனைகள், அனுபவங்களின் சிதறலுக்கு சற்று மாறுதலாய் நாக்கின் சுவையரும்புகளை மீட்டியிழுக்க ஒரு சமையல் முத்து இன்றைக்கு! நிறைய சமையல் குறிப்புகள் இருந்தாலும், சமையலுக்கென்றே ஒரு தளம் வைத்திருந்தாலும் இங்கே முத்துச்சிதறலில் வித்தியாசமான சமையல் குறிப்புகள் மட்டும் தான் பதிவிடுவேன். அந்த வகையல் இப்போதும் ஒரு வித்தியாசமான ‘ முள்ளங்கி ரசம்’ இடம் பெறுகிறது. நான் முன்பே இங்கே பதிவிட்டிருந்த ‘ வாழைத்தண்டு ரசம்’ போலத்தான் இதுவும். ஆனால் பிஞ்சான முள்ளங்கி மட்டும் கிடைத்து விட்டால் இதன் சுவை அதிகம்! செய்வதும் சுலபம். பித்தப்பை, சிறுநீரகக் கற்களால் அவதியுறுபவர்களுக்கு தினமும் செய்து கொடுக்கலாம். இது தனியாகவும் சாப்பிடலாம். அல்லது சூடான சாதம், முள்ளங்கி ரசம், ஏதேனும் ஒரு பொரியல் அல்லது வறுவல் இருந்தால் போதும் முழுமையான உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இது செய்யும்போது தனியான குழம்பு எதுவும் செய்யத் தேவையில்லை.



முள்ளங்கி ரசம்

தேவையான பொருள்கள்:

பிஞ்சான முள்ளங்கி-2
துவரம்பருப்பு குழைவாக வேக வைத்தது- கால் கப்
நடுத்தர சைஸில் தக்காளி-2
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்- அரை கப்
துருவிய இஞ்சி- 1 ஸ்பூன்
சிறிய பூண்டிதழ்கள்- 8
எலுமிச்சம்பழம்-1
அரிந்த கொத்தமல்லி-கால் கப்
கீறிய பச்சை மிளகாய்- 3
கறிவேப்பிலை- 1 கொத்து
வெந்தயம்-அரை ஸ்பூன்
சீரகம்- அரை ஸ்பூன்
தேவையான உப்பு
நல்லெண்ணை- 1 ஸ்பூன்
நெய்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் எண்ணையையும் நெய்யையும் ஊற்றி சூடானதும் சீரகத்தைப்போடவும்.
அது பொரிய ஆரம்பித்ததும் வெந்தயத்தைப்போட்டு அது இலேசாக சிவக்க ஆரம்பித்ததும் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து இளம் சிவப்பாக வதக்கவும்.
அதன் பின் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்து எண்ணெய் தெளிய ஆரம்பித்ததும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து ஒரு வினாடி கிளறவும்.
இப்போது பருப்பையும் நாலைந்து கப் தண்ணீரையும் ஊற்றவும்.
போதுமான உப்பு சேர்க்கவும்.
பருப்பு கொதிக்க ஆரம்பிக்கும்போது முள்ளங்கியை மெல்லிய வட்டம் வட்டமாக அரிந்து சேர்க்கவும்.
முள்ளங்கி ஒரு சில நிமிடங்களில் வெந்து விடும்.
அதை சரி பார்த்துக்கொண்டு ரசத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதன் பின் எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து சேர்க்கவும்.
சுவையான முள்ளங்கி ரசம் தயார்!

பின்குறிப்பு:

எலுமிச்சை கைப்பிலாமல் நிறைய சாறு தரக்கூடிய வகையாய் இருக்க வேண்டும். எலுமிச்சை சாறு போதவில்லையென்றால் இன்னும் சில துளிகள் சேர்க்கலாம். நல்ல சுவை கிடைக்கும் வரை ருசி பார்த்து எலுமிச்சை சாறு சேர்ப்பது அவசியம்.

 

Sunday 20 January 2013

ஒரு அனுபவமும் சில முத்துக்களும்!!!

அனுபவம்:

பொதுவாக அவ்வப்போது என் சர்க்கரையின் அளவை இங்கேயே குளூக்கோமீட்டரில் பரிசோதனை செய்து கொள்வது எனக்கு வழக்கம். அதை முதல் முதலாக வாங்கிய போது, இங்குள்ள என் கணவரின் சகோதரர் அதை எப்படியெல்லாம் Hygienic ஆகக் கையாள வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள். முக்கியமாக ஊசியை விரலில் குத்துவதற்கு முன் ஆல்கஹால் தடவிய பஞ்சால் விரலைத் துடைத்து பின் ஊசியால் குத்த வேண்டும்



பின் இரத்தத்துளியை அதற்கான ஸ்ட்ரைப்பில் வைத்து குளுகோமீட்டரில் சொருக வேண்டும். அது ஒரு சில விநாடிகளில் நம் ரத்தத்தின் அப்போதைய‌ சர்க்கரை அளவைக் காட்டும். அதன் பிறகு குத்திய ஊசியையும் ஆல்கஹால் தடவிய பஞ்சால் துடைக்க வேண்டும். இது மாதிரியே கடைப்பிடித்து பழக்கப்பட்டிருந்த எனக்கு ஒரு கசப்பான நிகழ்வை எதிர்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

நாலைந்து மாதங்களுக்கு முன்பு ஊருக்குச் சென்றிருந்த போது, பிரபல சர்க்கரை நோய் நிபுணரை சந்திக்கச் சென்றிருந்தேன். 3 மணிக்கு வரச்சொல்லியிருந்ததால் நான் அங்கே இரண்டரைக்கே சென்று விட்டேன். டாக்டர் ஐந்தரை மணிக்குத்தான் வருவார் என்று அதன் பிறகு சொல்ல, ‘ ஏன் அப்புறம் 3 மணிக்கு வரச்சொன்னீர்க்ள்?’ என்று கேட்டால் பதிலில்லை. கையோடு எடுத்துப்போயிருந்த நாவல் தான் உதவியது. ஒரு வழியாக டாக்டர் ஐந்தரைக்குப்பிறகு வந்ததும் அவரை சந்தித்தேன். என்னிடம் பேசிய பின் ‘சர்க்கரையின் அளவை நன்றாகத்தானே வைத்திருக்கிறீர்கள்! இருந்தாலும் இப்போது ஒரு டெஸ்ட் பண்ணி விடுகிறேன் என்றார். ஒரு பெண்ணைக்கூப்பிட்டார். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் ஒரு குண்டூசியை எடுத்து வந்து என் விரலில் குத்தியது. சரியாகக் குத்தவில்லை. அவர் ‘ நன்றாக குத்தும்மா!’ என்கிறார். அப்புறம் ஒரு வழியாக அது குத்தியதும் பக்கத்திலுள்ள குளூக்கோமீட்டரில் ஸ்ட்ரைப்பில் இரத்தத்ததைத் தடவி டெஸ்ட் செய்தது. துடைத்துக்கொள்ள சிறிது பஞ்சையும் தந்தது.

நான் அப்படியே பேச்சிழந்து போனேன். ஒரு மருத்துவர், அதுவும் பிரபலமானவர் சிறிது கூட சுகாதார உணர்வின்றி குண்டூசியால் குத்துகிறார். குளுக்கோமீட்டரின் ஊசிகளை மிச்சம் பிடிக்கிறாரா என்று தெரியவில்லை. 200 ரூபாய் ஃபீஸ் என்று ஒவ்வொரு தடவையும் வாங்குகிறார். அவர் இப்படி சுகாதாரக் குறைவாக நடந்து கொண்டால் ஒரு PATIENTன் உடல் நிலை என்னாவது? கடைசி வரை அவரிடம் இதைக் கேட்டு விடத்தான் நினைத்தேன். கடந்து சென்ற மூன்று மணி நேர அவஸ்தை நினைவுக்கு வந்தது. அதோடு அவர் எங்கள் குடும்ப நண்பரின் நண்பர். எதுவும் பேச முடியமல் வெளியே வந்தேன் இனி அவரிடம் செல்வதில்லை என்ற முடிவுடன்!!

மருத்துவ முத்துக்கள்

ஊரில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு வேப்ப மரம் இருந்தது. அது மாடி ஜன்னலுக்கு மேலே கிளைகள் விரித்துப் பரந்திருந்தது. அதனால் அந்தக் கிளைகள் வழியாக அறைகளுக்குள் ஒரு தினுசான கறுப்பெறும்புகள் எப்போதும் வந்து விடும். கடித்து விட்டால் உடனேயே அந்த இடம் வீங்கிக் கொண்டு வலி சுருக் சுருக்கென்று குத்த தாங்க முடியாத வலியிருக்கும். எந்த மருந்து தடவினாலும் உடனேயே வலி போகாது.

சமீபத்தில் தான் அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது. ஒரு உறவினர் சொன்னது இது. மருந்துக்கடைகளில் BETNOVATE என்ற க்ரீம் கிடைக்கிறது. பொதுவாக தோல் சம்பந்தமான நோய்களுக்கு இந்த க்ரீமைத்தடவுவார்கள். இந்த க்ரீம் எடுத்து தடவினால் உடனேயே வலி நின்று வீங்குவதும் குறைந்து விடுகிறது. அனுபவப்பூர்வமாகவும் செய்து பார்த்து விட்டேன்.

தேனீக்கள் கொட்டி விட்டால் உடனே பற்பசையை எடுத்து கொட்டுவாயில் தடவினால் அடுத்த சில நொடிகளில் வலி பறந்து விடும்.

Sunday 13 January 2013

அன்பிற்கினிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

இல்லம் தன்னில்
அன்பும் மகிழ்வும்
அனைத்து நல் பாக்கியங்களும்
பொங்கிப் பெருக‌
அனைத்து அன்புள்ள‌ங்களுக்கும் என்


அன்பிற்கினிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!






அன்புள்ள‌ங்களுக்கு!!!

நாளை பொங்கல் தினத்திலிருந்து ஒரு வாரம் வலைச்சர ஆசிரியப்பணி ஏற்குமாறு அழைத்த சகோதரர் சீனா அவர்களின் அன்பிற்கிணங்கி நாளை முதல் வலைச்சர ஆசிரியராக இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்கிறேன்!
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஊக்குவித்தலும் நிச்சயம் இப்பணியை சிறப்பாக செய்ய உற்சாகத்தையும் மகிழ்வையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை!!


அன்புடன்
ம‌னோ சாமிநாத‌ன்

Monday 7 January 2013

முத்துக்குவியல்-17!!

பாதித்த முத்து:
சமீபத்தில் படித்த செய்தி இது. பொதுவாய் பிறருக்கு நல்லது செய்வதைப்பற்றி ஆதி காலத்து செய்யுள்கள் முதல் இன்றைய காலத்து நூல்கள் வரை எத்தனையோ பேர் பாடியும் சொல்லியும் இருக்கிறார்கள். நாமெல்லோரும் செய்ய நினைப்பதும் விரும்புவதும் செய்வதும் செய்து பின் சுட்டுக்கொள்வதும் அதே தான். எத்தனை எதிர்மறை பாதிப்புகள் வந்தடைந்தாலும் நல்லன செய்வதை மறக்க வேண்டாம் என்று சான்றோரும் கூறியிருக்கிறார்கள் தான். ஆனால் ரொம்பவும் நல்லவராயிருப்பது சரி தானா என்று வாழ்க்கையில் ஏற்படும் பல நிகழ்வுகள் அடிக்கடி யோசிக்க வைக்கிறது. இந்த நிகழ்வும் [ உண்மைக்கதை] மனதைத் தாக்கி மிகவும் யோசிக்க வைக்கிறது.
எழுதியவரின் நண்பர் இளம் வயதில் தந்தையை இழந்து தாயின் உழைப்பினால் கீழிருந்து மேலுக்கு வந்தவர். ஒரு சமயம் தாய் படும் கஷ்டங்களைப்பார்த்து சகிக்க முடியாமல் ‘ ஏனம்மா நீங்கள் மறுமணம் செய்திருக்கக்கூடாது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தத் தாய் ‘ இந்த நாட்டில் கணவனை இழந்தவளை யாருப்பா திருமணம் செய்து கொள்ள முன் வருவார்கள்?’ என்று பதில் சொன்னது அவரின் மனதைத் தாக்கியிருக்கிறது. கணவனை இழந்த ஒரு பெண்னைத்தான் திருமனம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, அது போலவே பரந்த மனதுடன் திருமணம் ஆகி மூன்றே மாதங்களில் கணவனை இழந்த ஒரு பெண்னை தன் அம்மாவின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்திருக்கிறார்.  
ஒரு வருடம் கழிந்த பிறகு ஒரு குழந்தைக்கும் தாயான நிலையில் எதற்காகவோ நடந்த இரத்தப்பரிசோதனையில் அவர் மனைவிக்கும் குழந்தைக்கும் எய்ட்ஸ் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் மனைவியும் அவர் வீட்டாரும் இதை ம‌றைத்துத்தான் திருமணம் செய்திருக்கிறார்கள். முதல் கணவனிடமிருந்து வந்த பரிசு இது. அவர் இறந்ததும் அதனால் தான் என்பதையும் மறைத்து விட்டார்கள். நொந்து போய் விட்டார் இவர். இது வரை இத்தனை பெரிய விஷயத்தை மறைத்த தன் மனைவியிடம் கூட அவருக்கு அதிகம் வருத்தம் வரவில்லை. இந்த விஷயம் முன்னாலேயே தெரிந்திருந்தால் அந்தக் குழ்னதையையாவது இந்த பூவுலகில் பிறக்காமல் தவிர்த்திருக்கலாமே என்பது தான்! எத்தனை நல்லவர் பாருங்கள். அவர் நண்பர் இறுதியில் சொல்லுகிறார் ’ புத்திசாலித்தனம் எல்லோருக்கும் தேவையானது தான் என்றாலும் நல்லவர்களுக்குத்தான் அது அதிகம் தேவைப்படுகிறது சீக்கிரம் ஏமாறாமலிருக்க!’
தகவல் முத்து:
குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள், முதியவர்களுக்காக இலவச முதியோர் சேவையை வழங்கி வருகிறார்கள் ‘ ஹெல்பேஜ் இந்தியா அமைப்பு ’! இது தவிர சாலையோர முதியவர்களின் நிலையைப்பற்றி இந்த நிறுவனத்துக்கு தெரியபடுடுத்தினால் சம்பந்தப்பட்ட முதியோருக்கு உதவிகள் கிடைக்கும். தொடர்புக்கு:
ஹெல்பேஜ் இந்தியா, கீழப்பாக்கம், சென்னை-10. தொலைபேசி: 044-2532 2149/1800-180-1253
மருத்துவ முத்து

குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களைப் பொடியாக்கி தேனுடன் க‌லந்து நாக்கில் தடவினால் போதும், வாந்தி நின்று விடும்.

அருமையான முத்துக்கள்!!

ஒரு புத்தகத்தில் ரசித்த வாசகங்கள்!!

இருக்க வேண்டியது மூன்று:        தூய்மை, நேர்மை, நீதி.
அடக்க வேண்டியது மூன்று:         நாக்கு, நடத்தை, கோபம்
பெற வேண்டியது மூன்று:              தைரியம், அன்பு, மென்மை.
கொடுக்க வேண்டியது மூன்று:    ஆறுதல், ஈதல், பாராட்டு
அடைய வேண்டியது மூன்று:      ஆன்ம சுத்தம், முனைவு, மகிழ்வு
தவிர்க்க வேணியது மூன்று:         இன்னா செய்தல், நன்றியில்லாமை, 

                                                                    முரட்டுத்தன்மை  
 நேசிக்க வேண்டியது மூன்று:       கற்பு, அறிவு, மாசின்மை.
 
அசத்திய முத்து
SPARE-1
மொபைல் ஃபோன் வைத்திருக்கும் பலருக்கும் அதை சார்ஜ் செய்வதில் தான் பிரச்சினையே. அதை ஆஃப் செய்து வைத்திருந்தாலும் கூட சார்ஜ் போய் விடுகிறது! நான் அதிகம் மொபைல் உபயோகிப்பதில்லை. அடிக்கடி அதை உபயோகிக்கும் என் கணவரிடமும் மகனிடமும் ‘ சும்மா சும்மா சார்ஜ் செய்வதில் இந்த மொபைல் வசதியே போர் அடிக்கிறது. சார்ஜ் செய்யத் தேவையில்லாத மொபைலாக இருந்தால் அல்லவா தேவலாம்?’ என்று கூறுவேன். நான் நினைத்த மாதிரியே ஒரு மொபைல் வசதி வ‌ந்திருக்கிறது. அமெரிக்காவின் எக்ஸ்பால் நிறுவனம் கண்டு பிடித்துள்ள SPARE-1 என்ற இந்த கைபேசியை ஒரு முறை சார்ஜ் செய்து விட்டால் போதும், 15 வருடங்களுக்கு சார்ஜ் தீராது இருக்கும். இந்த கைபேசியில் தொடர்ந்து 10 மணி நேரம் பேச முடியும். இந்த ஃபோனை உபயோகப்படுத்தாமல் வைத்திருந்தாலும் 15 வருடங்களுக்கு சார்ஜ் தீராமல் இருக்கும். வெறும் 50 டாலர்களே விலையுள்ள‌ இந்த மொபைல் விரைவில் விற்பனைக்கு வ‌ருகிறது!