Showing posts with label ஓவிய முத்துக்கள். Show all posts
Showing posts with label ஓவிய முத்துக்கள். Show all posts

Sunday, 4 October 2020

பழைய ஓவியமும் புதிய வாசகமும்!!!

னக்கு ஒரு வாட்ஸ் அப் வந்தது. அறுபதுகளில் வெளி வந்த, கோபுலு, மாயா, ஜெயராஜ் போன்ற‌ பிரபல ஓவியர்கள் வரைந்த அட்டைப்படங்களுக்கு இன்றைய சூழ்நிலையில் அனைவரையும் தாக்கி வரும் கொரோனா வைரஸ் எங்கும் உலவி வரும் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல வாசகங்கள் இணைக்கப்பட்டு வெளி வந்திருக்கும் வாட்ஸ் அப் அது. இங்கே பதிவிடுகிறேன். நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!!


 












Tuesday, 7 July 2020

மறக்க முடியாத ஓவியர்களும் அவர்களின் ஓவியங்களும்!!!

சிறு வயதில் அப்போதெல்லாம் வார இதழ்களான ஆனந்த விகடன், கல்கி,குமுதம், தினமணி கதிர் மற்றும் மாத இதழான கலைமகள் இதழ்களில்  சிறுகதைகளுக்கு பிரபல ஓவியர்கள் படம் வரைவார்கள். சிறுகதைகளின் வீரியம் புரியாத சின்னஞ்சிறு வயது. ஆனால் ஓவியங்களின் அழகின் தாக்கம் பாதித்தது. ஏகலைவனாய் நான் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தது அப்போது தான். எல்லா ஓவியர்களும் மனதை கொள்ளை கொண்டார்கள் என்றாலும் கல்கியின் ஓவியர் வினுவும் ஓவியர் நடராஜனும் என் மானசீக குருவானார்கள்.
அந்த கால ஓவியர்கள் சிலரின் ஓவியங்கள் இங்கே..உங்கள் பார்வைக்கு..

1.இது எனக்கு மிகவும் பிடித்த ஓவியர் நடராஜனின் ஓவியம்! ' கலைமகளிலும்' தீபாவளி மலர்களிலும் வண்ண ஓவியங்கள் நிறைய வரைந்திருக்கிறார். மற்ற வார இதழ்களில் இவரது ஓவியங்களை நான் கண்டதில்லை!
 

2. ஓவியர் வினு வரைந்த ஓவியம் இது!


3. ஓவியர் சிம்ஹாவின் ஓவியம். இவர் அறுபதுகளில் நிறைய விகடனில் வரைந்துள்ளார்.


4. ஓவியர் ராஜம் வழங்கிய ஓவியம் இது. நிறைய கோடுகளும் வித்தியாசமான வண்ணக்கலவைகளும் இவரின் ஓவியங்களில் நிரம்பியிருக்கும்!


5. இவர் ஓவியர் உமாபதி. நகைச்சுவைத்துணுக்குகள் வரைவதில் வல்லவர். இவர் இத்தனை அழகாய் வண்ண ஓவியம் வரைவாரா என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது இந்த ஓவியம்!



6. ஓவியர் ஸுபா வரைந்தது இது!


.  7. ஓவியர் கோபுலுவின் ஓவியம் இது! ஆனந்த விகடனின் மிகச்சிறந்த ஆஸ்தான ஓவியர் இவர். கோட்டு ஓவியங்கள் வரைவதில் வல்லவர். சன் டிவி, குங்குமம் வார இதழ் லோகோ இவர் வரைந்தது தான்!


Thursday, 24 October 2019

45 வருடங்களுக்கு முன்!

இது நாங்கள் 1975ல் மும்பையை அடுத்த பன்வேல் என்னும் கிராமத்திலிருந்த போது வரைந்தது. கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்!!! திருமணமான புதிது. அங்கு தான் ஹிந்தி, மராத்தி மொழிகள் பழக்கமாயின!

ஹிந்தி திரைப்படங்கள் புரிந்து ரசிக்க ஆரம்பித்த காலம். பக்கத்து வீடு கேரளத்தினர். எதிர் வீடு பீஹாரைச்சேர்ந்த குடும்பம். முன் மதிய நேரங்களில் என்னை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு போய் விடுவார்கள். அவர்கள் வீட்டில் தான் சப்பாத்தி செய்ய கற்றுக்கொண்டேன். தினமும் சப்பாத்தி தானென்பதால் அது அவர்களுக்கு அனாயசமாக செய்ய வரும். நிறைய கோதுமை மாவை ஒரு பெரிய கல்லில் கொட்டி நடுவில் ஒரு பள்ள‌ம் பறித்து உப்பும் தண்ணீரும் ஊற்றி ஒரு நீளமான கட்டையால் அந்த காலத்தில் குளத்தில் குளிக்கும்போது துணிகளை அடித்து துவைப்பது போல அந்த கட்டையால் மாவை அடிப்பார்கள். அந்த மாவு அப்படியே திரண்டு உப்பி வரும். அதில் போடும் சப்பாத்தியோ பூரி போல உப்பி வரும். தொட்டுக்கொள்ள நெத்திலி மீன் கறி செய்வார்கள். அதையும் கற்றுக்கொண்டேன். சமையலில் அங்கே தான் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. சற்று தள்ளி மராத்தி குடும்பம் இருந்தது. அங்கே இனிப்பு சாதம், பேடா என்று கற்றேன். சமையலுக்கு எல்லைகள் ஏது?



இது அப்போது வெளி வந்து கொண்டிருந்த ஃபிலிம் ஃபேர் ஒன்றில் வெளியாகியிருந்த புகைப்படத்தைப்பார்த்து வரைந்தேன். பென்சில் ஓவியம். 

Sunday, 5 February 2017

பென்சில் ஓவியம்!!!

புத்தக அலமாரியில் அலசிக்கொண்டிருந்த போது கிடைத்த  பழைய நோட்டில் இந்த ஓவியம் இருந்தது. வெறும் பென்சிலாலும் கூர்மையான கருப்பு ஸ்கெட்ச் பேனாவாலும் வரைந்தது.



1995ல் வரைந்திருக்கிறேன். வரைந்து பத்து வருடங்க‌ளுக்கு மேல் ஆகி விட்டன!

Saturday, 2 April 2016

அந்த நாள் ஞாபகம்!!

 
திரு.மோகன்ஜி சொன்னது போல ஒவ்வொருத்தரும் தன் இளம் வயதில் தன் மனதுக்கு இனியவற்றை பொக்கிஷங்களாக சேகரிக்கிறார்கள்! சிலருக்கு அழகழகாய் குட்டிக்குட்டியாய் பொம்மைகள், சிலருக்கு சில கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள் என்று இந்த வ‌ரிசை நீண்டு கொண்டே போகும். அந்த வரிசையில் இங்கே எனது சில ஓவியங்கள்!!

மிகச் சிறிய வயதிலேயே என் பெற்றோர் எனக்கு கர்நாடக இசையை கற்க வைத்தார்கள். ஆனால் இசையுடன், இசையை விடவும் ஓவியம் வரைவதிலே தான் மனம் ஆழ்ந்து போனது. ஏதாவது காகிதத்தில் வரைந்து பார்க்க முயன்றதெல்லாம் வயது ஏற ஏற வண்ண‌க்கலவைகளில் மனம் அமிழ்ந்து போக ஆரம்பித்தது. எண்பதுகளில் அனுப்பிய ஓவியங்களை எல்லாம் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்தன. அப்போது வெளியான பல ஓவியங்களில் சில உங்கள் பார்வைக்கு!

1980களில் ஆனந்த விகடனில் என் சிறுகதை முதன் முதலாக வெளி வந்த போது, தனியாக நான் அனுப்பியிருந்த இந்த ஓவியத்தையும் வேறொரு சிறுகதைக்காக தேர்ந்தெடுத்து வெளியிட்டார்கள். அதன் பிறகு என் ஓவியங்கள் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன... 
குங்குமத்தில் வெளி வந்த ஓவியம் இது!
இதுவும் கூட குங்குமத்தில் வெளியானது தான்!
இது மங்கையர் மலரில் வெளியானது!
இது தேவியில் வெளியானது!
 
என் இளமைக்காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த திரு நடராஜன் வரைந்த ஓவியத்தைப்பார்த்து வரைந்தது இது!
சாவியில் ஒரு ஓவியப்போட்டி வைத்தார்கள்! என் ஓவியம் முதல் பரிசு பெற்றது! பெரும்பாலும் என் ஓவியங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொன்டிருந்த காலம் அது! எல்லாமே சில வருடங்கள் தான்! வலது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட விபத்து என் ஓவிய ஆர்வத்திற்கு தடை போட்டு விட்டுத்தான் ஓய்ந்தது!
 

Saturday, 4 July 2015

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே.......!!

யதேச்சையாக என் பழைய பொக்கிஷங்களைக் கிளறிக்கொண்டிருந்த போது அந்த ஆட்டோகிராஃப் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முன் அதில் சில முக்கியமான, புகழ் பெற்ற முகங்களை வரைந்து கையெழுத்து வாங்கியிருந்தேன். அவற்றில் சில உங்களீன் பார்வைக்கு!


1983ல் இந்தியா கிரிக்கெட்டில் முதல் உலகக் கோப்பையை வென்று பயங்கர புகழ் பெற்றிருந்த சமயம். அதே சூட்டில் ஷார்ஜா வந்து சில முக்கிய நாடுகளை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது சுனில் கவாஸ்கரை வரைந்து பின் அவரை நேரில் சந்தித்து வரைந்ததைக் காண்பித்தேன். ' காதோர நரையைக்கூட விடாமல் அப்படியே என்னை வரைந்திருக்கிறீர்கள்!' என்று சொல்லி பாராட்டி கையொப்பமிட்டுக்கொடுத்தார். அது இந்த கருப்பு வெள்ளை வண்ணங்க‌ளால் குழைத்த ஓவிய‌ம்.


அடுத்தது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஓவியம். அதிரடி விளையாட்டால் புகழ் பெற்றிருந்த இவர், கொஞ்ச நாட்களுக்கு முன்னால் தான் ஹெல்மெட் போடாமல் விளையாடியதால் ஒரு புகழ்பெற்ற பெளலரின் பால் அவரின் முகவாயைக்கிழித்திருந்ததால் அங்கே சில தையல்கள் போடவேண்டியிருந்ததாக சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார். இது அவரின் பென்சில் ஓவியம்.


கவிஞர் வைரமுத்து அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த காலம். ஷார்ஜாவில் ஒரு உணவகத்தைத் திறந்து வைக்கவும் வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும் 1989ல் வந்திருந்தார். அவரை கருப்பு வெள்ளை வண்ண‌க்கலவையில் வரைந்து அவரிடம் காண்பித்தேன். 'ஏதாவது ஒரு தலைப்பைச் சொல்லுங்கள். அதைப்பற்றி எழுதி கையெழுத்திடுகிறேன்' என்றார். நான் 'அன்பு' என்றேன். அவர் அன்பைப்பற்றி மிக அருமையாக எழுதி கையொப்பமிட்டார். அந்த கவிதை:
அன்பு
உயிரின் உயிர்!
அன்பு
வாழ்வின் அர்த்தம்!
அன்பு
உலகின் சுவாசம்!
அன்பு மட்டும் இல்லையென்றால்
மனிதனை இலக்கணம் அஃறிணையில் சேர்த்திருக்கும்!
அன்பு
வாழ்வின் பரிசு!
 

Sunday, 2 June 2013

இந்தப்புன்னகை என்ன விலை?

வெகு நாட்களாக, தூரிகைக‌ளைத்தொடவில்லை. திடீரென்று இந்த ஓவியத்திற்கான புகைப்படம் மனதைக் கவர்ந்தது. அந்தப்பார்வையும் புன்னகையும் அடிக்கடி என் பார்வையில் படும்போதெல்லாம் கைகள் நமைச்சலெடுத்துக்கொண்டேயிருந்தன. ஒரு வழியாக வரைந்து விட்டேன்! வெறும் கறுப்பு, வெண்மை நிற வண்ணங்கள் மட்டும் தான்!! இதோ, உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்!!

Monday, 8 August 2011

பூவையும் பூக்களும்! !!

ரொம்ப நாட்களுக்குப் பின் இந்த ஓவியம் வரைந்து முடித்திருக்கிறேன். போஸ்டர் வண்ண‌க்கலவைகள் தான் உபயோகித்தது. எங்கள் உண‌வகத்திற்காக இதை வரைந்து தருவதாக என் மகனிடம் வாக்குறுதி தந்து விட்டதால் அதிக பொறுமையுடன் வரைந்திருக்கிறேன். எப்போதுமே முகம் அழகாக வந்து விட்டால் மற்ற‌தெல்லாம் அவசர தீற்றல்களாயிருக்கும். மிக வேகமாக முடித்து விடுவேன். இது மட்டும்தான் அதிக நேரம் எடுத்து பொறுமையாக வரைந்தது.




Wednesday, 2 February 2011

அலைகடலும் வயிற்றுப்பசியும்!

சமீபத்தில் வரைந்த வாட்டர் கலர் ஓவியம் இது. அதிக வண்னங்கள் உபயோகிக்கவில்லை. கறுப்பும் வெள்ளையும்தான் பிரதான வண்ண‌ங்கள். மற்றும் பலவித நீல நிற தீற்றல்கள் அதிகம்.


"அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக்கொடுப்பவர் இங்கே!" என்ற பழைய பாடல் நினைவுக்கு வருகிறது!

Tuesday, 7 December 2010

இசையுடன் கண்ணீர்!!

இந்த ஓவியம் கூட 20 வருடங்களுக்கு முன் வரைந்ததுதான். ஒரு ஹிந்திப் படத்தில் [படம் பெயர் நினைவில்லை]மறைந்த பழம்பெரும் நடிகர் மதன்பூரி வயலின் துணையுடன் பாடிக்கொண்டே இருக்கையில் கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழும்! அந்த சோகமும் ததும்பிய விழிகளும் வேதனை நிரம்பிய முக பாவங்களும் என்னைப்பாதித்தன. அந்தக் காட்சியை ஒரு வீடியோவில் பதிவு செய்து அதை ஸ்டில் செய்து வரைந்தேன். போஸ்டர் பெயிண்ட்ஸ் கொன்டு உருவாக்கிய ஓவியம் இது.



Sunday, 3 October 2010

வணக்கம்! வந்தனம்!!

இது சில வருடங்களுக்கு முன் வரைந்தது. போஸ்டர் கலரில்தான் வரைந்திருக்கிறேன். எங்கள் நிறுவனத்தில் மாட்டி வைத்திருக்கிறேன்.


Saturday, 14 August 2010

பசுமையுடன் இளமை அழகு!!

இளம் வயதில் வரைந்த ஆயில் பெயிண்டிங் இது. ஆயில் பெயிண்டிங் பழகிக்கொண்டிருந்த புதிது! . சுற்றிலும் பசுமையாய், பனி படர்ந்த மலையின் பின்னணியில், காஷ்மீரப்பள்ளத்தாக்கில் கையில் ஆட்டுக்குட்டியுடன் நிற்கும் இளம் காஷ்மீரப்பெண்ணை வரைந்திருக்கிறேன்.

Thursday, 15 July 2010

பென்சில் ஓவியம்

மறுபடியும் நான் வரைந்த ஒரு பென்சில் ஓவியம். எழுபதுகளின் ஆரம்பத்தில், மும்பைக்கும் பூனாவுக்குமிடையே இருக்கும் ஒரு நகரத்தில் என் கணவர் வேலை செய்த இடத்தில் நடிகை ஹேமமாலினி படப்பிடிப்பிற்காக வந்ததால் அங்கிருந்த அத்தனை தொழிற்சாலைகளும் வேலை நடக்காமல் ஸ்தம்பித்துப்போனதாக என் கணவர் கூறியப்போது அந்த அழகை வரைந்து பார்க்கத்தோன்றி அப்போது நான் வரைந்தது இது.

Saturday, 8 May 2010

பென்சில் ஓவியம்!


இந்த ஓவியத்தை நான் வரைந்தது என் இளம் பருவத்தில். அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ வந்திருந்த சமயம். எங்களிடையே அந்தப் படத்தைப்பற்றிய சூடான விவாதங்கள் அனல் பறக்கும். இப்போது நினைத்தாலும் புன்னகையை வரவழைக்கும் விவாதங்கள். அப்போது வரைந்த ஸ்கெட்ச் இது. பென்சிலால் மட்டும்தான் வரைந்திருக்கிறேன்.

Friday, 2 April 2010

கண்களில் கனவு!

இதுவும் வாட்டர் கலரில் நான் வரைந்த ஓவியம்தான். ஆனால் முந்தையதைப்போலல்லாமல் நிறைய ஷேட்ஸ் இதில் உபயோகித்திருக்கிறேன்.

Wednesday, 31 March 2010

கண்ணீர் ஓவியம்

புகழ் பெற்ற வெளி நாட்டு ஓவியம் இது. ஒரு தமிழ் வார இதழில் முகப்புப்படமாக வந்திருந்தது. இந்த பிஞ்சு முகத்தில் தெரியும் சோகமும் கண்ணீர்த்துளிகளும் மனதை என்னவோ செய்ய 20 வருடங்களுக்கு முன்னர் அதைப்பார்த்து நான் வரைந்த ஓவியம் இது. வெறும் வாட்டர் கலரில் வரைந்திருக்கிறேன்.