Sunday, 8 September 2019

அசத்தும் ஓவியங்கள்!!மலேஷியா நாட்டைச் சேர்ந்தது லங்காவி தீவு. மலேஷியாவின் கெடா மாகாணத்திலுள்ள தீவுக்குழுமம் இது. இதில் 104 தீவுக்கள் அடங்கியுள்ளன. இவற்றில் மிகப்பெரிய தீவு தான் லங்காவி தீவு. அந்தமான் கடலும் மலாக்கா நீரிணையும் இடத்தில்தான் லங்காவி தீவு இருக்கிறது இது JEWEL OF KEDHA என்று அழைக்கப்படுகிறது. மலேஷிய நாட்டிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் அமைந்துள்ளது. விமானத்தில் இருந்து பார்க்கும்போது கழுகு பறப்பதைப்போன்ற தோற்றம் தரும்

லங்காவித் தீவு.

இங்குள்ள 3D ART MUSEUM  மிகவும் புகழ் பெற்றது. உலகத்திலேயே இரண்டாம் இடம் வகிப்பது. மிகப்பெரிய அளவில் 3D ஓவியங்கள் தரையையும் சுவர்களையும் அலங்கரிக்கும். நம்மை அசத்துவது மட்டுமல்லாமல் சில நம்மை பயமுறுத்தவும் செய்யும். 200க்கும் மேற்பட்ட உயிரூட்டும் இந்த ஓவியங்களை 23 கொரியா நாட்டு ஓவியர்களும் மலேஷிய ஓவியர்களும் இணைந்து வரைந்திருக்கிறார்கள்.
என் பேரனும் பேத்தியும் இந்த ஓவியங்களிடையே! கண்டு ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.

Friday, 23 August 2019

முத்துக்குவியல்- 54!!!

ஆச்சரிய முத்து:

இங்கே அமீரகத்தில் இந்த பாலைவன நாட்டில் நல்ல மழை!  இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? பசும் சோலையாக இருந்த நம் பூமி வரண்டு சூட்டுக்காற்றில் தவிக்கிறது. பாலைவனமாய் சுட்டுப்பொசுக்கிய இந்த பூமி இப்போது மழையால் குளிர்கிறது, அதுவும் ஏப்ரல் மாதத்தில்!அதிக மழையைப் பெறுவதற்காக இங்கே ' கிளவுட் சீடிங் ' முறையில் விமானங்கள் மூலம் வானில் ரசாயனப்பவுட்ர்கள் தூவப்படுகின்றன. செயற்கை முறையில் ரசாயனப் பவுடர் தூவப்பட்டு ஒரு சில வாரங்களில் அதிக மழைப்பொழிவைப் பெற முடியும். கடந்த ஆண்டு ஒரு வாரத்தில் நான்கு நாட்களுக்கு கிளவுட் சீட்ங் செய்யப்பட்டது. இதன் பலனாக கூடுதலாக 20 சதவிகிதம் சென்ற ஆண்டு மழைப்பொழிவு கிடைத்தது. இந்த ஆண்டு ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை 88 தடவை கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளது.

இசையின்ப முத்து:

தியாகராஜ சுவாமிகள் பற்றி கர்நாடக சங்கீதம் அறிந்த அனைவரும் அறிவார்கள். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இவர் பிறந்தது திருவாரூர் என்றாலும் வளர்ந்ததும் இசையறிவு கொண்டதும் சமஸ்கிருதம் கற்றதும் திருவையாற்றில்! பல அபூர்வமான ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றியிருப்பதும் ஒரே ராகத்தில் பல கீர்த்தனை இயற்றியிருப்பதும் இவரின் அரிய திறமை. தன் தாய்மொழியான தெலுங்கிலும் வடமொழியிலும் மட்டுமே கீர்த்தனைகள் இயற்றிருக்கிறார்.இந்த திறமையை கேள்விப்பட்டு தஞ்சை மன்னர் சரபோஜி தன் அரண்மனைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று ஆசை கொண்டார். ஆனால் தியாகராஜர் அதை மறுத்து ' ' நிதிசால சுகமா ' என்ற கல்யாணி ராக கீர்த்தனையை உருவாக்கி இசைத்தார். ' செல்வம் சுகம் தருமா அல்லது ராமன் சன்னதியில் சேவை செய்வது சுகமா?' என்ற அர்த்தத்தில் தொடங்கும் இந்த கீர்த்தனை!

இவரின் 'எந்தரோ மஹானுபாவலு' அழியாப்புகழ் பெற்றது! அதன் அர்த்தமோ அதையும்விட புகழ் பெற்றது! ' அன்பால் உயர்ந்த பக்தர்களுக்கு முன்னால் இந்த அடியேன் எங்கே? ' என்பது தான் இந்த வரியின் அர்த்தம்! இந்த கீர்த்தனை பல பாடகர்கள் குரலில், இனிமை வழிந்தோட கேட்டு ரசித்திருக்கிறேன். வயலினின் உருகலில் நானும் உருகியிருக்கிறேன். புல்லாங்குழலின் தேடலில் மெய்மறந்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் நாதஸ்வர இசையில் ஸ்ரீராக ராகம் குழைந்து மயங்கியதை ரசித்தபோது மனமும் அந்தக்குழைவில் மயங்கிப்போனது. நீங்களும் ரசிக்க இணைத்திருக்கிறேன் இங்கே! கேட்டு ரசியுங்கள்!


மருத்துவ முத்து:

பொதுவாய் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் சிலர் அவற்றை ஒழிக்க சீத்தாபழ விதைகளை அரைத்துத் தலையில் தடவுவதுண்டு.நிச்சயம் பேன் தொல்லை ஒழிந்து விடும். ஆனால் அவ்வாறு சீத்தா பழ விதைகளை அரைத்து தலையில் தடவுவது ஆபத்து என்று அறிவித்திருக்கிறது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம். கண் வலி, கருவிழி பாதிப்பு, கண்ணீர் வடிதல், உறுத்தல், பார்வை மங்குதல் போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சொல்லியுள்ளது நிர்வாகம்.

ரசித்த முத்து:

அறுபது சொல்வது அனுபவ நிஜம்.
அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்.
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள்.
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம்.
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை.

அமைதி முத்து:

சென்னையில், தி.ந‌கரில் உள்ள ஒரு நான்கு நட்சத்திர விடுதியில் வரவேற்பு பகுதியில் இருந்த சிலை இது. பார்க்கும்போதே மனதில் அமைதி பிறந்தது.


Wednesday, 7 August 2019

ஒரு விபத்தும் சில ஆச்சரியங்களும்!

முதலில் விபத்து பற்றி எழுதுகிறேன். கம்போடியாவில் ஒரு கோவிலைப்பார்க்க ந‌டந்து கொண்டிருந்த போது அந்த தளம் சரியில்லாத பாதையில் எது தடுக்கியது என்று தெரியவில்லை, திடீரென்று ஒன்றும் புரியாமல் மின்னல் வேகத்தில் தலை குப்புற விழுந்தேன். அந்த ஒரு கணம் விழும்போதே, பிடித்துக்கொள்ள எதுவும் அருகில் இல்லாமல் நான் தவித்தது மட்டும் தான் நினைவில் உள்ளது. சற்று அருகில் நடந்து வந்து கொண்டிருந்த என் கணவரும் வழிகாட்டியும் ஓடி வந்து என்னைத்தூக்கிய போது தான் கால் பயங்கரமாக வலித்தது புரிந்தது. இடது கால் கட்டை விரல் ச‌ற்று பெயர்ந்து முழுவதுமாக வீங்க ஆரம்பித்திருந்தது. அதற்குள் கோவில் அருகே வந்து விட்டதால் நான் வெளியே அமர்ந்து கொண்டு, என் கணவரையும் வழிகாட்டியையும் கோவிலைப்பார்க்க சொல்லி அனுப்பி விட்டேன். எப்போதும் கையில் வைத்திருக்கும் மூவ் ஆயின்மெண்ட் எடுத்து தடவிக்கொண்டு, குளிர்ந்த travel wipe-ஐ எடுத்து ஒத்தடம் கொடுத்ததில் வலி சற்று குறைந்தது. மறுபடியும் காரில் ஏறி உணவுண்ண தமிழ் உணவகத்திற்குச் சென்றோம். அங்கே, உணவகத்தின் உரிமையாளரிடம் காயத்தைக்காட்டி, சிகிச்சைக்கு எங்கே போவது என்று விசாரித்தோம்.

நாங்கள் இருந்தது கம்போடியாவின் பழமையான, புராதன நகரமான சியாம் ரீப். இங்கு கம்போடிய மொழி பேசும் ம்ருத்துவர் தான் கிடைப்பார் என்றும் அது நமக்குப்புரியாது என்றும் ஆங்கிலம் பேசும் மருத்துவமனைகள் கிடையாது என்றும் கூறி முதல் உதவிக்காக ஆங்கிலம் பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு பார்மஸிக்கு அனுப்பி வைத்தார். நாங்கள் மறுநாள் வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற ஹோஸ்மின் சிட்டி நகருக்கு செல்வதால் அங்கு ஆங்கிலம் பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய மருத்துவமனைகள் இருப்பதாகவும் மேலும் தகவல்கள் சொன்னார். அவர் சொன்னபடியே, பார்மஸி சென்று முதல் உதவி பெற்றுக்கொண்டு எங்கள் ஹோட்டலுக்கு திரும்பினோம். தொலைபேசியில் பேசியபோது எங்கள் மகனும் வியட்நாமில் மருத்துவ உதவி பெறுவது தான் நல்லது என்று சொல்ல, மறுநாள் கம்போடியாவில் சக்கர நாற்காலியின் உதவியுடன் விமானம் ஏறினோம்.அன்று மாலை ஹோஸிமின் நகரின் ஒரு பொது மருத்துவமனைக்குச் சென்றோம். விபத்து பற்றி தெளிவாகக் கேட்டறிந்த அவர்களின் கனிவு என்னை அசத்தியது. பல்லைக்கடிக்கும் ஆங்கிலத்தில் மருத்துவப்பெண்மணியும் ஊழியர்களும் பேசி விசாரித்ததும் என் அனைத்துத் தகவல்களையும் அறிந்த விதமும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பின் எக்ஸ்ரே எடுக்க அந்தப்பிரிவின் தலமை மருத்துவரே வந்தார். என்னை அவரே சக்கர நாற்காலியில் அமர வைத்து அவரே தள்ளிக்கொண்டு சென்றார். விரலை பல முறை பல விதத்தில் எடுக்க வேண்டியிருந்த‌தால் ஒரு சில முறைகள் அதற்காக sorry கேட்டுக்கொண்டார். மறுபடியும் அவரே சக்கர நாற்காலியில் அமர வைத்து மருத்துவரின் அறைக்கு வெளியே விட்டுச் சென்றார்.

எக்ஸ்ரே என் விரலுக்கு எந்த வித பாதிப்புமில்லை என்று சொன்னதால்  மருத்துவர் எழுதிக்கொடுத்த மாத்திரை, மருந்துகள் கொண்ட பேப்பருடன் அங்கிருந்த பெண் ஊழியர் இன்னொரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் பணத்தை கட்டியதும் எல்லா விபரங்களும் அடங்கிய ஒரு ஃபைல், மற்றும் பணம் கட்டிய ரசீது, மருத்துவரின் என்னைப்பற்றிய குறிப்பு அனைத்தும் தந்தார்கள். இதெல்லாம் கொடுத்து இன்ஷூரன்ஸ் claim பண்ணலாம் என்று அவர்கள் சொன்னதும் ஏற்ப‌ட்ட வியப்பு இலேசில் குறையவில்லை!

எக்ஸ்ரே ஒன்றுமில்லை என்றாலும் இந்த விபத்து நடந்து இன்று 8 மாதங்கள் கடந்து விட்ட போதிலும், என் இடது கால் கட்டை விரலில் இன்னும் கொஞ்சம் வலி, மரத்துப்போன தன்மை இருந்து கொண்டு தானிருக்கிறது!

எந்த நாட்டிற்கு சென்றாலும் தேவையான மருந்துகள் அடங்கிய ஒரு மெடிக்கல் கிட் எடுத்துச் செல்ல வேண்டியது மிக அவசியம். நான் எப்போதுமே உள்ளூர் சென்றாலும்கூட இந்த மெடிக்கல் கிட் எடுத்துச் செல்வதுடன் எனக்கான மாத்திரைகள் இரண்டு செட் எடுத்து செல்வேன். ஒன்று கைப்பையிலும் மற்றது பெட்டியிலும் இருக்கும். ஒன்று தொலைந்தாலும் இன்னொன்று காப்பாற்றும்! ஆனால் இந்த அனுபவத்தில் எந்த ஊர் சென்றாலும் உள்ளூரோ, வெளியூரோ, அங்கிருக்கும் இந்திய மருத்துவர்கள் லிஸ்ட், ஆங்கிலம் அறிந்த மருத்துவ மனைகள் விபரங்களும் எடுத்துச்செல்ல வேன்டும் என்பதை புரிய வைத்தது! [ சில சமயங்களில் கூகிள் உதவி கூட கிடைக்காது!]

கடந்த 4 மாதங்களாக இருமலும் தொண்டைப்புண்ணுமாக இருந்ததால் தஞ்சையில் ஒரு மருத்துவரிடம் காண்பித்துக்கொண்டதில் அவர் எக்ஸ்ரே எடுக்கச் சொன்னார். முன்பு போலில்லாமல் எக்ஸ்ரே ஃபிலிம் 10 நிமிடங்களிலேயே கிடைத்து விட்டது. மருத்துவர் பார்த்து விட்டு நுரையீரலில் சளி கொஞ்சம் தங்கியிருப்பதாகச் சொல்லி  மருந்து மாத்திரைகள் எழுதிக்கொடுத்தார். என் உறவினரான மற்றொரு டாக்டர் அந்த எக்ஸ்ரேயைப்பார்த்து விட்டு, 'எக்ஸ்ரே அவ்வளவு க்ளியராக இல்லையே' என்று சொல்லி மேலே பேசவில்லை. மறுபடியும் நான் எப்போதும் செல்லும் பெண் மருத்துவரிட்ம் காண்பித்தபோது, அவர் உடனேயே ' எக்ஸ்ரே சரியாக இல்லை. நீங்கள் 4 மாதங்களுக்குப்பின் அங்கேயே [ நான் வசித்து வரும் துபாய் நகரில் ] ஒரு எக்ஸ்ரே எடுத்து விடுங்கள்' என்றார்! எனக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை.

ஒரு நிமிடம்  வியட்நாம் அனுபவம் மனத்திரையில் ஓடியது. இத்தனைக்கும் பல போர்களால் பாதிக்கப்பட்டு, இப்போது தான் அடி மட்டத்திலிருந்து முன்னேறி வரும் ஒரு ஏழை நாடு அது. ஊரும் மொழியும் புரியாத இடத்தில்கூட கண்கூடாகப்பார்த்த தொழில் மரியாதை நம் பிரம்மாண்டமான இந்தியாவில் இல்லையே!

Friday, 19 July 2019

முத்துக்குவியல்-53!!!!

அசத்தும் முத்து:

சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பொள்ளாச்சி நிகழ்வுகளுக்கிடையே மறு அறிவிப்பாக இங்கு படித்த ஒரு செய்தி, நம் நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் இருந்தால் எப்ப‌டியிருக்கும் என்று என்னை கனவு காண வைத்தது. கனவு தான்!!!

இந்த நாட்டில், அமீரகத்தில் பெண்களை அவமதித்தாலோ, அவர்கள் அறியாமல் புகைப்படம் எடுத்தாலோ, அவர்கள் தாராளமாக காவல் நிலையத்தில் புகார் செய்யலாம். குற்றம் செய்தவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் 5 லட்சம் திரஹமும்[ நம் பணத்துக்கு  1 கோடி ]அபராதமாக விதிக்கப்படும். குற்றம் கடுமையாக இருக்கும் பட்சத்தில் குற்றவாளிகள் உடனேயே நாடு கடத்தப்படுவார்கள். சென்ற ஆண்டு 70 பேர்கள் இந்தக்குற்ற்த்தின் அடிப்படையில் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

கவிதை முத்து:

சொல்நயமிக்க இந்த சிலேடைக்கவிதையை ரசியுங்கள்1

தலைவியைச்  சந்திக்க காத்திருக்கிறான்
தலைவன் .தாமதமாக வந்த அவள் சொன்னாள்:''வெட்டியதால் சாகவில்லை.
வெட்டாதிருந்தால் செத்திருப்பேன்.
செத்ததால் சாகவில்லை.
சாகாதிருந்தால் செத்திருப்பேன்.''

தலைவனுக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் விளக்கம் சொன்னாள்:
வரும் வழியில் இருட்டில் பாழும்கிணறு ஒன்று இருந்தது தெரியவில்லை.
அப்போது மின்னல் வெட்டியதால் நான் விழாமல் தப்பித்தேன்.சாகவில்லை.மின்னல் வெட்டாதிருந்தால் நான் செத்திருப்பேன்.
சிறிது தூரம் வந்தபின் ஒரு பாம்பை மிதித்து விட்டேன்.நல்ல வேளை.அது ஒரு செத்த பாம்பு.அதனால் நான் சாகவில்லை.அது சாகாதிருந்தால் நான் செத்திருப்பேன்.

சாதனை முத்து:

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டைச் சேர்ந்தவர் ஐரீன் ஓஷியா. இவருக்கு வயது 102.இவரது 67 வயது மகள் 10 வருடங்களுக்கு முன் மோட்டார் நியூரான் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அந்த நோயைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய பொருளீட்டுவதற்காகவும் இந்த வயதிலும் 14000 அடி உயரத்திலிருந்து விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்துள்ளார். இதன் மூலம் மிக அதிக வயதில் ஸ்கை டைவிங் செய்த பெண்மணி என்ற பெருமையைப்பெற்றிருக்கிறார். தன் 100-வது பிறந்தநாள் முதல் ஒவ்வோர் ஆண்டும் விமானத்திலிருந்து குதித்து வருகிறார்.

மழலை முத்து:

நாளை என் பெயர்த்தியின் பிறந்த நாள்!எங்கள் வீட்டு இளவரசி விஹானாவிற்கு நாளை இரண்டு வயது பூர்த்தியாகிறது! நான் தஞ்சையில் இருப்பதால் குழந்தையின் சிரிப்பை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்! நலமும் மகிழ்வும் என்றும் விஹானாவின் வாழ்க்கையில் தொடர வேண்டும்!!

பெருமித முத்து:

கம்போடியாவைப்பற்றி நான் முன்னர் எழுதியிருந்தபோது, காஞ்சியை ஆண்ட பல்லவப்பேரரசுக்கும் கம்போடியாவை ஆண்ட கைமர் பேரரசுக்கும் நெருங்கிய தொடர்பிருந்தது என்று குறிப்பிட்டிருந்தேன். அந்த நாட்டு கலாசார இயக்குனர் மார்ன் சொப்ஹீப் இதைப்பற்றி சொல்லியிருப்பது மேலும் நம்மை பெருமைப்படுத்துகிறது.

ராஜேந்திர சோழன்
பல்லவ சோழ மன்னர்களின் வரலாறு கம்போடியாவின் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாகக்கொண்டு வரவிருப்பதாகவும் அத்துடன் திருக்குறளை மொழி பெயர்த்து அதனையும் பள்ளிகளில் பாடத்திட்டமாகக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்லியுள்ளார்.

முதலாம் சூர்யவர்மன்
கம்போடியாவின் மன்னராக இருந்த முதலாம் சூர்யவர்மனுக்கு நெருங்கிய நண்பராக இருந்த சோழ மன்னர் ராஜேந்திர சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அடுத்த ஆண்டு ராஜேந்திர சோழனுக்கு சிலை திறக்கப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடியை அழைக்கவிருப்பதாகவும் உலகெங்கும் பல்வேறு தலைமைப்பொறுப்புகளில் இருக்கும் இருப த்தைந்தாயிரம் தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் சொல்லியிருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழுக்கும் பெருமையளிப்பதாக இருக்கிறது!! 

Monday, 17 June 2019

வித்தியாசமான புகைப்படங்கள்!!!

கம்போடியா ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த தோட்டத்தில் வைத்திருந்த சிலை இது!
தேங்காயை மட்டையோடு வெட்டி உள்ளேயுள்ளதை நீக்கி அவைகளில் செடிகளை வளர்க்கிறார்கள்!அதை கம்பிகளால் பாக்கு மரத்தோடு இணைத்திருக்கிறார்கள்!
என் கணவர் எடுத்த புகைப்படம்! ஒரு பெண் முகம் ஐந்து உட‌ல்கள்!எத்தனை அரிதான சிற்பத்திறமை!

கம்போடியாவிலுள்ள‌ ஒரு கோவிலின் சிற்பம் இது!
வியட்நாமிலுள்ள‌ ஒரு புகழ் பெற்ற இடத்தின் வெளியே கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசிக்கிறார்கள்! இவர்களில் பலர் பார்வை அல்லது செவிப்புலனை இழந்தவர்களாக இருக்கிறார்கள்! அல்லது அங்கஹீனமானவர்களாக இருக்கிறார்கள்! வியட்நாம் போரில் வெடிகுண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள். சுற்றுலா பயணிகளினால் தான் அவர்களுக்கு வருமானம்!
வியட்நாமீய புதுமணத்தம்பதி!!
வியட்நாமில் உறங்கும் புத்தர்!
வியட்நாமில் உள்ள ஒரு புத்த ஆலயத்தின் மேல் உள்ள சிலை! இதுவும் புத்தர் என்றே சொல்லப்படுகிறது!
என் 2 வயது பேத்தி விஹானா பந்து வீச, மருமகள் அதை அடிக்கத் தயாராகிறார்!

Monday, 3 June 2019

வியட்நாம் உணவும் ஒரு எட்டு வயது சிறுமியின் கதையும்!!!

இஸ்லாமிய ச‌கோதர, சகோதரிகட்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!இங்கு ரம்தான் நோன்பு மிகச் சிறப்பான ஒன்று. நோன்பு ஆரம்பித்த நாளிலிருந்து வெளியே யாரும் பார்க்கும்படி உண்ணுதல் கூடாது என்ற சட்டம் அமுலில் இருக்கிறது. நோன்பு மாலையில் முடிந்து மறுநாள் காலை மீன்டும் தொடங்கும் வரை முப்பது நாட்களும் இரவு கடைத்தெரு முழுக்க ஜே ஜே என்றிருக்கும். நோன்பு முடிந்து ரம்ஜான் அன்று எங்கு பார்த்தாலும் இனிப்புகள், விருந்துகள் என்று அமர்க்களப்படும்.

*********************************************************************************

வியட்நாம் போரில் உடலெங்கும் தீப்புண்களால் பாதிக்கப்பட்ட ஒரு எட்டு வயது சிறுமியின் கதை!

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது  இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் நிர்வாணமாக ஒரு சிறுமி! தெற்கு வியட்நாம் போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான இந்தச் சிறுமி ஓடி வரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது. சுமார் 19 வருடங்களாக நடந்து கொண்டிருந்த வியட்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது.

போரின் உச்சத்தில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும், 11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டுபோயினர்.
போர் உச்சத்தில் இருந்த காலகட்டமான 1972 ஜூன் 9-ம் நாள் தெற்கு வியட்நாம் பெட்ரோலிய ரசாயனம் கொண்ட நாப்பாம் குண்டினை தெற்கு வியட்நாமில் இருக்கும் (அப்போது வடக்கு வியட்நாமின் கட்டுப்பாட்டில் இருந்த) 'தராங்பாங்க்’ என்ற கிராமத்தில் வீசியது. இந்த நிலையில்தான் அந்தக் கிராமத்தில் இருந்த எட்டு வயதான சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள். அப்போது சிறுமி கிம் ஃப்யூக்கின் உடைகள் முழுவதும் எரிந்து உடலிலும் தீக்காயம் பரவிட்ட நிலையில் ''சுடுது சுடுது'' என்று கதறியபடியே ராணுவம் இருந்த பகுதியை நோக்கி ஓடி வருகிறாள்.

அந்த நேரத்தில் புகைப்படம்  எடுத்துக் கொண்டிருந்த அசோசியேட்டட் பிரஸ்சின் புகைப்பட பத்திரிகையாளர் நிக் வுட் (Nick Ut) தனது வியு ஃபைண்டர் ஓரத்தில் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியை பார்த்தார். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, தன் கேமராவை அவளை நோக்கி திருப்பினார். நிர்வாணமாக ஓடிவந்த சிறுமி கிம் ஃப்யூக்கை படம் எடுக்கத் தொடங்கினார்.

அந்தச் சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு நின்றுவிடாமல், அவளுக்கு முதலுதவி செய்து தன் காரிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிர் பிழைக்கவும் வைத்த நிக்குக்கு அப்போது வயது 19 மட்டுமே. பிறகு, தன் அலுவலகத்துக்குச் சென்ற நிக், அந்தப் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ஆசிரியர் குழுவினரிடம் காட்டியபோது, சிறுமி நிர்வாணமாக இருப்பதைக் காரணமாக காட்டி முதலில் அவர்கள் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது.

இதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உலகில் இருந்த அத்தனைப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் போருக்கு எதிரான படமாக அடையாளப்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அமெரிக்க ராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல், வடக்கு வியட்நாமிடம் தெற்கு வியட்நாம் சரணடைந்தது. 1976-ல் ஜூலை 2-ல் 'வியட்நாம் சோசலிசக் குடியரசு’ (The Socialist Republic of Vietnam) உருவானது. இந்தப் படத்துக்காக நிக்குக்கு 1973-ல் நோபல் பரிசுக்கு இணையான பத்திரிகை துறையில் உயரிய விருதான ’புலிட்சர் விருது’ வழங்கப்பட்டது.
அந்த சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவர் 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக (UNESCO Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார். 1997-ல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம் ஃப்யூக். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து 'Kim Phuc Foundation International' என்ற பெயரில் இயங்கி வருகிறது.

Bánh tráng

இது  வியட்நாமிய அரிசி பூரி என்று சொல்லலாம். அரிசிமாவிலும் மரவள்ளிக்கிழங்கு மாவிலும் சில பொருள்கள் சேர்த்து கரைத்து ஆவியில் மாவாக‌ வேக வைத்து செய்கிறார்கள். அந்த மாவை எப்ப‌டி அப்பளம் போல இடுகிறார்கள் எனப‌தை இந்த வீடியோ காண்பிக்கிறது.இந்த பூரியில் அசைவ மசாலா அல்லது சைவ ம‌சாலா, காய்கறிகள் வைத்து மூடி எண்ணெயில் பொரித்து உண்கிறார்கள்!Wednesday, 22 May 2019

வியட்நாம் பயணம் -மூன்றாம் நாள்!!!


இன்று காலை நகரின் முக்கியமான இரு இடங்க‌ளுக்கு வழிகாட்டி கூட்டிச் சென்றார். 

முதலாவது:

Ho Chi Minh Central Post Office:
பிரான்ஸ்  நாட்டு ஆதிக்கத்தின்போது ஹோசிமின் நகரில் [ சைகோனில் ] இந்த தபால் நிலையம் 1981ல் கட்டப்பட்டது. ஈஃபில் டவரைக்கட்டிய Gustave Eiffel என்ற கலைஞரே இதையும் நிர்மாணித்தார்.  பிரான்ஸ் நாட்டு கட்டிடக்கலையின் அழகு இதிலும் சிறப்பாகத்தெரியும்.

போஸ்ட் ஆபீஸ் உட்புறம்
இரண்டாவது:

Saigon Notre Dame Cathedral:

நகரின் Paris Squareல் இதுவுமே வியட்நாம் பிரான்ஸ்  நாட்டு ஆதிக்கத்தின் கீழ் இருந்த சமயம் 1980களின் இறுதியில் கட்டப்பட்டது. 


வர்ஜின் மேரி சிலையுடன்


புத்த மதத்தை முழுமையாக பின்பற்றும் வியட்நாம் நாட்டில் கிறிஸ்து மதத்தை ஞாபகப்படுத்தும் சில சின்னங்களில் இதுவும் ஒன்று. Saigon Notre Dame Cathedral என்றழைக்கப்படுகிறது.60 அடி உயரமுள்ள இந்த கதீட்ரல் பிரெஞ்சு ரோமானிய கலையழகுடன் ஆறு வெண்கல மணிகளுடன் திகழ்கிறது. மிகப்பெரிய வர்ஜின் மேரி சிலையும் அதற்கு முன்னால் நிறுவப்பட்டிருக்கிறது. 1975ல் இந்த சிலை கண்களிலிருந்து கண்ணீர் வடிந்ததாகச் சொல்லப்படுகிறது.

மாலை சில கடைகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்து வந்தோம். மறு நாள் காலை வியட்நாமிலிருந்து கிளம்பி 2 மணி நேர பயணத்தில் சிங்கப்பூர் சென்று அங்கே 4 நாட்கள் தங்கி பின் திருச்சி சென்ற‌டைந்தோம். சிங்கப்பூரை ஏற்கனவே 2 முறை சுற்றிப்பார்த்திருப்பதால் இந்த முறை அவ்வளவாக சுற்றிப்பார்க்கவில்லை. உறவினர்கள் வீடு சென்று வந்தோம். இந்தப்பயணத்தில் பல மறக்க முடியாத அனுபவங்கள்! 

உறவினர் இல்லத்தில் வற்றல் குழம்பு சாப்பிட்ட பிறகு தான் ஜன்ம‌ம் சாபல்யமானது போலிருந்தது. 

சில நாட்கள் கழித்து பயண அனுபவங்களைப்பகிர்கிறேன்.

Sunday, 12 May 2019

வியட்நாம் பயணம் – இரண்டாம் நாள்!!!


மெக்கோங் டெல்டா நிறைய குட்டி குட்டி தீவுகளும் புதைகுழிகளும் ஆறுகளும் மிதக்கும் வணிகப்படகுகளும் புத்த கோவில்களும் கிராமங்களுமாய் நெற்கதிர்கள் சூழ்ந்திருக்கும் வளமான பகுதியாய் தெற்கு வியட்நாமில் உள்ளது. மெக்கோங் ஆறு திபேத் அருகே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடுவேயுள்ள சீனத்தைச் சார்ந்த இமயமலைப்பகுதியிலிருந்து உருவாகி திபேத், மியன்மார் [ பர்மா ], தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் முதலிய ஐந்து நாடுகளை வளமாக்கி ஆறாவது நாடான வியட்நாமில் நுழைந்து இரண்டாக முதலில் பிரிந்து அதன் பின் பல கிளைகளாகப்பிரிந்து இறுதியில் தெற்கு சைனா கடலில் கலக்கிறது. அதனால் இந்த ஆறு இங்கே  nine dragons என்று அழைக்கப்படுகிறது. 


மெகோங் டெல்டா-கூகிள் மூலம் எடுத்த புகைப்படம்!

இங்கே வியட்நாமிற்குத் தேவையான அரிசி கரும்பு மீன் வகைகள் பழங்கள் தேங்காய் எல்லாமே விளைகின்றன. நாட்டின் உபயோகத்திற்குப் போக் மீதமுள்ளவை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. தேனீ பண்ணைகள் இறால் பண்ணைகள் இங்கே ஏராளமாக இருக்கின்றன. பட்டுப்புழுக்கள் வளர்ப்பு சாக்லேட் தயாரிப்பு தேங்காயில் இனிப்புகள் செய்வது பொம்மைகள் தயாரிப்பு போன்ற குடிசைத்தொழில்கள் இங்கே அதிகம்!

               நானும் எங்கள் வழிகாட்டியும்!!

இந்த மெக்கோங் டெல்டா ஹோ சி மின் நகரிலிருந்து 2 மணி நேர தூரத்தில் உள்ளது. ஒரு சிறு கிராமம். அங்கு நிறைய படகுத்துறைகள்! முன்னரேயே ஏற்பாடு செய்திருந்த மோட்டார் படகில் ஏறி பயணத்தை ஆரம்பித்தோம். படகு ஒரு குட்டித்தீவிற்குச் செல்கிறது!!


ஒரு குட்டித்தீவில் கொடுத்த‌ தேன் கலந்த சர்பத், பதப்படுத்தி சீனிப்பாகில் பிரட்டிய அன்னாசிப்பழத்துண்டங்கள், வாழைப்பழ சிப்ஸ்!!

          தேனடைகளுடன் எங்கள் வியட்நாமீஸ் வழிகாட்டி!!
மலைப்பாம்பை தோளில் போட்டு போஸ் கொடுக்கும் வியட்நாமீஸ் பெண்!!!


தென்னை மரங்கள்!!
தேங்காய்கள் இப்படி இருக்கின்றன! ஆனால் சுவையோ அபாரம்!
சாக்லேட் ஃபாக்டரி


அந்த ஊர் வாழைப்பூ!