Sunday 30 June 2013

வலி!!!-பகுதி-2.

பகுதி-2.

மருத்துவர்கள் எப்போதும் சொல்லும் ‘ அளவான தூக்கம், அளவான உணவு, அளவான ஓய்வு’ எப்போதுமே எல்லா வயதினருக்கும் இன்றிமையாத ஒரு தெய்வ வாக்கு என்பதை உணர வேண்டும். இது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய இளைய தலைமுறைக்குக்கூட மிகத் தேவையான ஒன்று! இன்றைக்கு முப்பது வயதிலேயே ஸ்ட்ரோக் வருகிறது, இதயத்தாக்குதல் வருகிறது. ஆனால் இந்த விதிகளைக் கடைபிடிப்பவர்களுக்குக்கூட, எங்கிருந்து வருகிறது என்று சொல்ல முடியாமல் பிரச்சினைகள் வருகிறன. நடைப்பயிற்சி, அளவான உணவு, நல்ல பழக்க வழக்கங்கள், நிறைய உழைப்பு என்று தினமும் நூல்பிடித்தாற்போல நாட்களைக் கழித்து வரும் என் கணவருக்கும் பிரச்சினைகள் வந்தன!

பொதுவாய் நம் ஜீரண மண்டலத்தில் கல்லீரல், பித்தப்பை, பித்தக்குழாய் முக்கியமான அங்கம் வகிக்கின்றன. கல்லீரல் மிக முக்கியமான சில அமிலங்களை சுரக்கின்றது. இவை கொழுப்புப்பொருள்களை ஜீரணம் செய்ய உதவுகின்றன. இவை பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மையால் நீர்த்துப்போய் பித்தக்குழாய் வழியே சிறு குடலுக்குச் சென்று அங்கே உணவை ஜீரணிப்பதில் உதவுகின்றன. பித்தப்பை சுருங்கி விரியும் தன்மை குறையும்போது அங்கு வரும் ‘ BILE’ என்ற அமிலம் தேங்கி கற்களாக மாறி விடுகின்றன. வலது வயிற்றுப்பக்கம் தீவிர அல்லது மிதமான வயிற்று வலி வரும்போது மருத்துவர்கள் லாப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையை நீக்கி விடுகின்றனர். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் பித்தப்பையில் கல் எடுத்தேனென்று சொன்னபோதெல்லாம் அறுவை சிகிச்சை மூலம் கற்களை எடுத்து விடுகிறார்கள் என்று தான் நினைத்துக்கொண்டேன். அதைப்பற்றி மேலும் அறிய ஆர்வம் இருந்ததில்லை.
அப்படித்தான் சிகிச்சை பெற்றவர்களும்கூட நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது சொந்த அனுபவம் கிடைக்கும்போது தான் புரிந்தது.

உண்மையிலேயே பித்தப்பையில் கற்கள் உருவானால் பித்தப்பையையே அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடுகிறார்கள். ஒரு முறை கற்களை நீக்கினாலும் அதன் பின்னும் கற்கள் உருவாகும் என்பதாலும் பித்தப்பையை எடுத்து விட்டாலும் அதனால் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்பதாலும் தான் பித்தப்பையை நீக்குகிறார்கள். சில சமயங்களில் நோயின் தீவிரத்தைப்பொறுத்து அறுவை சிகிச்சை [ open surgery] மூலம் பித்தப்பையை எடுக்கின்றார்கள். சில சமயங்களில் பித்தக்குழாயிலும் கற்கள் உருவாகுகின்றன. இவற்றை நீக்க, ERCP SURGERY செய்யப்படுகிறது. எண்டோஸ்கோப்பி என்பது போன்ற கருவியை மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளியின் வாய் வழியே உள்ளே செலுத்துகிறார்கள். அதன் நுனியில் இருக்கும் பல்ப் உள்ளே உள்ள நோய்க்குறைபாடுகளை வீடியோ எடுக்க உதவுகிறது. அதனூடே செலுத்தப்படும் DYE எல்லா உறுப்புகளினூடேயும் செல்ல, வெளியே மானிட்டரில் மருத்துவர் எங்கே பிரச்சினை என்று கணித்து சிகிச்சை அளிக்கிறார். பித்தக்குழாய், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற உறுப்புகளில் ஏற்படும் நோய்களை சிகிச்சை செய்ய இந்த ERCP SURGERY மிகவும் பயன்படுகிறது. பித்தக்குழாயில் கற்கள் இருந்தால் உள்ளே பலூன் போன்ற உபகரணத்தை அனுப்பி கற்களை எடுத்து, பின் BILE’ என்ற அமிலம் தடையின்றி ஓடவும் மேற்கொண்டு கற்கள் உருவாகி பித்தப்பையில் விழாமலிருக்கவும் கிட்டத்தட்ட 5 செ.மீ அளவுள்ள பிளாஸ்டிக் அடைப்பு ஒன்றை [ STENT] பொருத்துகிறார்கள். ஒரு மாதம் கழித்து மருத்துவர்கள் அதை அகற்றுகிறார்கள்.



பித்தப்பையிலோ, பித்தக்குழாயிலோ கற்கள் உருவானாலோ, அல்லது அடைப்பு ஏற்பட்டு பித்த நீர் தேங்கினாலோ மஞ்சள் காமாலை உண்டாகிறது. இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் HEPATITIS A, HEPATITIS B அல்ல. மருத்துவ உலகில் இவை இரண்டையும் MEDICAL JAUNDICE என்று கூறுகிறார்கள். ஏனெனில் மருந்துகளால் மட்டுமே இவற்றை குணமாக்க முடியும். OBSTRUCTIVE JAUNDICE என்பது பித்த நீர் சரளமாக குழாய்களில் ஓட முடியாது பித்தக்குழாயில் தேங்கும்போது உண்டாவது. INFECTION, INFLAMMATION, அல்லது எதன் காரணமாக பித்த நீர் தேங்குகிறது அல்லது பித்தக்குழாய் குறுகி அதனால் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடித்து அந்தத் தடையை நீக்கும்போது இந்த மஞ்சள் காமாலை நீங்குகிறது.

கடந்த பிப்ரவரியில் தான் பித்தப்பை, பித்தக்குழாய் என்று கற்களுக்காக என் கணவர் சென்னையில் அப்பல்லோ மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள். உற்சாகமாக எப்போதும் போல வேலைகளில் ஆழ்ந்திருந்தவர்களுக்கு மறுபடியும் இம் மாதம் 5ந்தேதி வலது வயிற்றுப்பக்கம் தீவிரமான பிசைதல் போன்ற உணர்வு ஏற்பட்டது. மறு நாள் இரத்தப்பரிசோதனை மூலமும் ஸ்கான் மூலமும் மருத்துவர் மஞ்சள் காமாலை அதிகமிருப்பதை உறுதி செய்து பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு INFECTION ஏற்பட்டுள்ளதாக தான் சந்தேகிப்பதாகச் சொல்லி, மறுபடியும்  ERCP SURGERY மூலம் மட்டுமே இந்த அடைப்பையும் மற்ற பிரச்சினைக்ளையும் சரி செய்ய முடியுமென்று கூறி உடனேயே துபாயிலுள்ள அரசாங்க மருத்துவ மனையில் EMERGENCY ADMISSION செய்யச் சொன்னார். அதன் படி மறு நாள் காலை என் கணவரைச் சேர்த்து இந்த மாதம் மூன்றாம் முறையாக ICUவில் நுழைய வேண்டியதாயிற்று.

இந்த மாதிரி INFECTION ஏற்படும்போது சில சமயங்களில் நோயாளிக்கு திடீரென இரத்த அழுத்தம் வேகமாகக் குறைதல், பிராண வாயு குறைதல் அல்லது சீராக இல்லாமை, பாக்டீரியா வேகமாகப்பரவி இரத்தத்தில் நுழைந்து நுரையீரல் வரை செல்லுதல் என்ற நிலைகள் ஏற்படுமாம். என் கணவருக்கும் இவையெல்லாமே பாதித்தது. இரத்தம் சீக்கிரம் உறையாத தன்மையும் ஏற்பட்டது. அதை சரி செய்ய அதற்கான மருந்துகளுடன் BLODD TRANSFUSION செய்ய வேண்டியதாயிற்று. ஆக்ஸிஜன் மாஸ்க் வைக்கப்பட்டது. பாக்டீரியா இன்னும் அதிகம் பரவி விடாமல் ERCP SURGERY செய்து முடித்தார்கள். அதன் பின்னர் தான் ஒவ்வொரு நிலையும் சீராகத்தொடங்கியது. ICUவில் அவர்கள் இருந்த ஆறு நாட்கள் மிகக் கொடுமையானவை. நானும் என் மகனும் கலக்கத்துடனும் கண்ணீருடனும் கழித்த நாட்கள் அவை. இந்த நாட்டு மருத்துவர்கள்  [அரேபியர், பாலஸ்தீனியர், இந்தியர், பாகிஸ்தானியர், பிலிப்பைன்காரர், ஸ்பெயின்காரர் என்று அனைத்து நாட்டு மருத்துவர்களும் இதில் அடக்கம்]  மிகச்சிறப்பான சிகிச்சை கொடுத்து அவர்களை குணமாக்கினார்கள். அதன் பின் ஆறு நாட்கள் GENERAL WARDக்கு மாற்றப்பட்டு, ஒவ்வொரு குழாயாக நீக்கப்பட்டு, ஒவ்வொரு துறை மருத்துவரும் அந்தந்த பிரச்சினைகள் சரியாகி விட்டது என்று ஓகே செய்து பின் வீட்டிற்கு அழைத்து வந்தோம். தற்போது பழையபடி எங்கள் உணவகத்துக்குச் சென்று வருகிறார்கள்.

அனைத்து மருத்துவர்களிடமும் இதற்கான காரணம் விசாரித்த போது, ‘ பொதுவாய் ERCP SURGERY செய்து கொள்ளுபவர்களுக்கும் பித்தப்பையை நீக்கிக்கொள்பவர்களுக்கும் ரொம்பவும் அபூர்வமாக சிலருக்கு இந்தப் பிரச்சினைகள் ஏற்படலாம்.’ என்று சொல்லுகிறார்கள். சென்னை அப்பல்லோவில் சிகிச்சை செய்த மருத்துவரும் நிரம்பப்படித்தவர். எங்களை மிக அருமையாகவே அனைத்து விளக்கங்களும் கொடுத்து வழி நடத்தினார். அங்கே எந்த எச்சரிக்கையும் எங்களுக்குத் தரப்படவில்லை. இங்கே, டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன் வந்து பரிசோதித்த ஒரு பாலஸ்தீனிய மருத்துவர், ‘ இத்தனை வயது வரை ஒரு சின்ன தவறான பழக்கம் கூட இல்லாத உங்களுக்கு எப்படி இந்தப்பிரச்சினை வந்தது என்று புரியவில்லை’ என்றார்.
 
அதிகம் கொழுப்புப்பொருள்களையோ அல்லது அதிகம் அசைவ உணவையோ சாப்பிடும் வழக்கமில்லாத என் கணவருக்கு எதனால் இந்தப்பிரச்சினை வந்தது என்று இன்னும் புரியவில்லை.

உடல் நலம் சீர் கெட்டு நமது வாழ்க்கையில் பல விபரீதங்களை, மரணங்களை சந்திக்காமலிருக்க நிறைய கதவுகள் நம் எதிரே திறக்கக்காத்திருக்கின்றன. அவற்றை நாம் அடுத்த பதிவில் திறந்து பார்க்கலாம்!

தொடரும்.. .. .. ! 

 

Tuesday 25 June 2013

வலி!!

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் தான்.

 மகிழ்வானதாக அவை இருக்கும்போது உலகிலுள்ள வலிகளை நாம் மறந்து விடுகிறோம். அவற்றை அவ்வப்போது நினனவு படுத்துவதற்குத்தானோ என்னவோ, நமது மனத்திடத்தை நொறுக்கவும் கண்ணீரைக்கொட்டவும் பிறர் கருணையை எண்ணி நெகிழவும் நமக்கு பலவித அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது.

கடந்து சென்ற 30 நாட்கள் வாழ்க்கையில் திரும்பவும் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்யும் அளவிற்கு மனம் துவளச் செய்தவை. இதில் ஒரு பகுதி, சொந்த அனுபவம் என்ற போதிலும் இதை வெளியிடுவதன் மூலம் தெரிந்தோ தெரியாமலோ தினசரி தவறான உணவுப்பழக்கங்களையும் நடைமுறைகளையும் கடைபிடித்து வரும் எத்தனையோ பேருக்கு எச்சரிக்கையைத் தர நினைத்தே கடந்து சென்ற 30 நாட்களின் அனுபவங்களை இங்கே எழுத ஆரம்பிக்கிறேன்.

வலி என்பது உடலால் அனுபவிக்கும் வலி மட்டுமல்ல. அந்த வலியை நாம் அனுபவிக்கும்போது நமது பிரியத்துக்குரியவர்கள் மனதால் அனுபவிக்கும் வலி அதையும் விட அதிகமானது, கொடுமையானது.

சென்ற மாத இறுதியில், எங்களுக்கு நன்கு பழகிய ஒரு தமிழ் நண்பர் திடீரென உடல் நலக்குறைவுடன் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பதாக செய்தி வந்ததும் உடனே சென்று பார்த்தோம். இரவு தூங்கச் சென்றவர் எழுந்து வாந்தி எடுத்து கீழே மயங்கி விழவே, அவர் மனைவி உடனேயே அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று மருத்துவ மனையில் சேர்த்தார்கள். பரிசோதனை முடிவில் அவருக்கு அதிக இரத்த அழுத்தம் காரணமாக மூளைக்குச் செல்லும் ஒரு இரத்தக்குழாயில் இரத்தக்கசிவாகிக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனேயே அவருக்கு அங்கே அறுவை சிகிச்சை செய்தார்கள். மனைவியும் மகனும் கண்ணீருடன் வெளியில்!

இங்கேயெல்லாம் நோயாளியுடன் யாரும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. அவரின் மனைவி மகனுடன் காலை மாலை என, மருத்துவ மனை அனுமதிக்கும் நேரத்தில் வந்து அவரிடம் புரியும்படி நிறைய பேசி தைரியம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் அவரின் மனைவி உடைந்து போய் அப்படியே அழுதார். நிலைமையின் தீவிரம் புரியும்போது சில சமயங்களில் ஆறுதல் சொல்வது கூட கடினமாகப் போய் விடுகிறது. ஒரு நிமிடம் மனதில் ‘ இந்த அறுவை சிகிச்சையே ஊரில் நடந்திருந்தால் எத்தனை பகீரென்று இருந்திருக்கும்! சுற்றி எத்தனை உறவினர்கள் நின்று கொண்டிருந்திருப்பார்கள்!’ என்ற நினைப்பு வந்து போனது!

அந்த நண்பர் கடின உழைப்பாளி. அதே சமயம் அதிக செலவாளி. வங்கிகளில் செய்த சில குளறுபடிகளால் சிறை தண்டனை வரை போய் இன்னொரு நண்பரின் உதவியால் அதிலிருந்து சமீபத்தில்தான் விடுபட்டு வந்தார். அவரின் பிரச்சினைகளும் அதன் நிர்ப்பந்தகளும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.. அதனாலேயே அவரின் இரத்த அழுத்தம் மிக அதிகமாயிருக்கிறது. அவரும் தன்னை கவனிக்காமலிருந்திருக்கிறார். எல்லாமாகச் சேர்ந்து அவரை இப்படித் தாக்கி விட்டது.

தற்போது ஒரு மாதிரி தேறி வீட்டுக்கு வந்து விட்டார். எழுந்து நடமாடவும் டாய்லட் தனியே செல்லவும் அவரால் முடிகிறது. வருபவர்களை நன்கு புரிந்து கொண்டு பேசுகிறார் என்றாலும் அவர்கள் சென்றதும் ‘ அவர்கள் யார் ’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். மருத்துவர் மெல்ல மெல்ல அவர் முழுவதுமாக குணமாகி விடுவார் என்று உறுதி கூறியிருக்கிறார்.

இன்னொரு நெருங்கிய நண்பர். இவருடன் தான் மேற்சொன்ன நபரைப்பார்த்து வந்தோம். இவருக்கு சமீப காலமாக முதுகெலும்பு பகுதியில் நல்ல வலி. ஆனாலும் அந்த வலியுடன் தொடர்ந்து அதிக வேலைகளிலும் அலைச்சல்களிலும் ஈடுபட்டுக்கொண்டேயிருந்தார். அதிக சர்க்கரை அளவிற்காக இன்சுலின் போட்டுக்கொள்வதும் உயர் இரத்த அழுத்தமுமாக இருந்த அவரின் மனைவி தன் கணவரின் உடல் நிலையை நினைத்துப்புலம்பியவாறே படுத்தவர் காலையில் கண் விழித்துப்பார்க்கவில்லை. சிறிது நேர முயற்சிக்குப்பிறகு கண் விழித்து உட்கார்ந்தவர் தனக்கு ஒன்றுமில்லை, நன்றாகத்தானே இருக்கிறேன் என்றும் பேசியிருக்கிறார். இருப்பினும் அவரது கணவர், டெல்லியில் மருத்துவ இயல் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் தன் மகனுக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார். அவர் தன் அம்மாவைப்பேசச் சொல்லியிருக்கிறார். சிறிது பேசிய பின் தன் தந்தையிடம் ‘ அம்மாவின் குரல் குளறி இருக்கிறது. அம்மாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருக்கிறது என்று சந்தேகப்படுகிறேன். உடனடியாக அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

எங்கள் நண்பரோ பொதுவாகவே தனது, தனது வீட்டினரின் உடல் நிலையைப்பற்றி அதிகம் மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைப்பவர். நோய்கள் பற்றி எத்தனை சொன்னலும் மனதில் வாங்கிக் கொள்ள மாட்டார். மகன் அப்படிச் சொல்லியும் நிதானமாக குளித்து விட்டு, லிஃப்ட் இல்லாத அந்த கட்டிடத்தில் மனைவியை முதல் தளத்திலிருந்து, அத்தனை உயரத்திலிருந்து தானே மெதுவாக இறக்கிக் காரில் ஏற்றி தானே வண்டியை ஓட்டிக்கொண்டு, நான்கு மணி நேரங்கள் டிராபிக் ஜாமில் மாட்டி, கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் துபாய்க்கு வந்து மருத்துவ மனையில் சேர்ப்பதற்குள் அவர் மனைவி மயங்கிச் சரிந்தவர் அதன் பின்னர் எழுந்திருக்கவே இல்லை. இந்த நிமிடம் வரை படுக்கையில் தான் இருக்கிறார். முழித்துக்கொண்டிருக்கிறாரே தவிர, வலது கை, வலது கால் செயல்பாடுகள் இல்லாமல் பேச இயலாமல் யாரையும் அடையாளம் தெரிந்து கொள்ள இயலாமல் இருக்கிறார். தற்போது சென்னையில் அப்பல்லோவில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிகழ்வு முதலாம் நண்பருக்கு உடல் நலம் சரியில்லாது போன அடுத்த வாரத்திலேயே நிகழ்ந்தது.

மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டுவது, என்னால் எப்படி உப்பு, நெய்யில்லாமல் சாப்பிட முடியும் என்பது, போதுமான ஓய்வின்மை, பிரச்சினைகளை தானாகவே இழுத்துப்போட்டுக்கொள்வது, போதுமான செல்வ வளம் இருந்தாலும் இன்னும் மேலே மேலே தேடி அலைவது- இப்படி எத்தனை பேர் மருத்துவ ஆலோசனைகளை உதறித்தள்ளி அலட்சியமாக இருக்கிறார்கள்!

தொடரும்.. ..!

Sunday 2 June 2013

இந்தப்புன்னகை என்ன விலை?

வெகு நாட்களாக, தூரிகைக‌ளைத்தொடவில்லை. திடீரென்று இந்த ஓவியத்திற்கான புகைப்படம் மனதைக் கவர்ந்தது. அந்தப்பார்வையும் புன்னகையும் அடிக்கடி என் பார்வையில் படும்போதெல்லாம் கைகள் நமைச்சலெடுத்துக்கொண்டேயிருந்தன. ஒரு வழியாக வரைந்து விட்டேன்! வெறும் கறுப்பு, வெண்மை நிற வண்ணங்கள் மட்டும் தான்!! இதோ, உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்!!