Wednesday 23 November 2016

அந்த நாள் இனி வருமா?

சென்ற மாதம் அடுத்தடுத்து சில துக்கங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. அவை எல்லாமே ஒவ்வொரு விதமாய் மனதை மிகவும் பாதித்தது. வாழ்க்கையின் அர்த்தம் நிஜமாகவே புரியாதது போல் மனம் குழம்பியது.

முதலாவது ஒரு பெரியவரின் மரணம். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அதில் இருவர் வெளி நாட்டில். இறந்தவருக்கு வயது 80க்கு மேல். அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை. நிறைய கருத்து வேற்றுமைகள். கடைசி வரை இருவரும் அவர் மாடியிலும் அவர் மனைவி கீழேயும் தனியே வாழ்ந்தார்கள். சாப்பாடு மட்டும் அவருக்கு மாடிக்கு தவறாமல் சென்று விடும்.  அவரின் மனைவி கடைசி மகன் வீட்டுக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்ததால் இறக்கும் தருவாயில் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்க அருகில் யாருமில்லை. அலைபேசியில் மகனை அழைத்து அவர் தண்ணீர் புகட்ட அவர் உயிர் பிரிந்தது. பரிவோடு, அக்கறையோடு, உள்ளன்போடு கவனிக்க யாருமில்லாத வாழ்க்கையின் அர்த்தம் என்ன? வயது ஏற ஏற மனிதர்களுக்கு கொஞ்சம்கூட விவேகம் வராதது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. கண்ணீர் விட்டு அழும் நெருங்கிய உற‌வுகளைப்பார்த்தபோது இன்னுமே ஆச்சரியமாக இருந்தது.




அடுத்தது இன்னொரு பெரியவரின் மரணம். இவரும் வயது எண்பதிற்கு மேல். ஏற்கனவே மனைவி நோயில் விழுந்து அல்லாடிக்கொண்டிருக்க, திடீரென்று இதயத்தாக்குதல் ஏற்பட்டு மருத்துவ மனையில் கொண்டு வந்து சேர்த்தார்க‌ள். இவருக்கு நான்கு பிள்ளைகளும் ஒரு பெண்ணும்! நான்கு பிள்ளைகளும் கவனிக்காத நிலையில் கணவனும் ம‌னைவியும் கடைசி வரை தனியாகவே வாழ்ந்து வந்தனர். உள்ளூரிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் மட்டும் அவ்வப்போது சமைத்துப்போட்டு பார்த்துக்கொண்டார். அவரின் தம்பி மகன் தான் அவருக்குத்தேவையானதெல்லாம் பார்த்துக்கொன்டிருந்தார். இப்போது மரணத்தருவாயில் அருகில் வசிக்கும் ஒரு மகன் மட்டும் வந்து அருகிலேயே இருந்தார். தந்தையை மனைவியின் பேச்சால் கவனிக்காத, தன்னிடம் கொண்டு வந்து வைத்துக்கொள்ளாத‌ குற்ற‌ உணர்ச்சியில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. இரத்த அழுத்தம் சற்று நன்றாக அவர் பிழைக்க கொஞ்சம் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் சொல்ல மகன் மருந்து வாங்க வெளியில் செல்ல, பெண்ணும் வேறு எதற்கோ வெளியில் சென்று விட‌, 'அவர் உயிர் சில விநாடிகளில் பிரிந்து விடும், யாராவது வந்து அவரிடம் பேசுங்கள்' என்று மருத்துவர் திடீரென்று எதிர்பாராத விதமாய் வெளியில் வந்து அழைத்தபோது அவர் பெற்ற பிள்ளைகள் அங்கு யாருமில்லை. அவரின் கடைசி விநாடிகளில் அவரின் தம்பி மகனின் கைகளைப்பிடித்தவாறே கண்ணீர் வழிய அவர் இறந்து போனார். நான்கு ஆண் பிள்ளைகளை பெற்று வளர்த்ததில் என்ன அர்த்தம்? அவரவருக்கு அவரவர் சுய நலம் தானே பெரிதாய்ப்போனது! வயதானவர்கள் வயதாக வயதாக அக்கறையையும் அன்பையும்தானே எதிர்பார்க்கிறார்கள்! நன்றிக்கடனையும் மனசாட்சியையும் மறந்து வெறும் சுமையை நினைத்து மட்டும் பயந்து போகும் இன்றைய இளைய தலைமுறையினர் ஏன் தனக்கும் ஒரு நாள் மூப்பு வருமென்பதை மறந்து போகிறார்கள்?




இன்னொரு மரணம் கொஞ்சம் வித்தியாசமானது. கணவர் இறந்த நிலையில் தன் நான்கு மகன்களிடமும் இரன்டு பெண்களிடமும் இருக்க மறுத்து தன் சொந்த ஊரில் 200 கிலோ மீட்டர் தொலைவில் கான்சரால் குடல் அறுக்கப்பட்டு சிகிச்சை செய்த நிலையில் தனியே வயலில் விவசாயம் பார்த்துக்கொண்டு வாழ்ந்த ஒரு தாயின் கதை இது! திடீரென்று அவர் இறந்து போக, பாசமான மகன் தஞ்சையிலிருந்து அடித்து பிடித்துக்கொண்டு அழுது அரற்றியவாறே சென்றதைப்பார்க்க சகிக்கவில்லை எனக்கு!

அந்தக்கால கூட்டுக்குடும்பங்கள் நினைவுக்கு வருகின்றன‌. கருத்து வேற்றுமை, பேதங்கள் என்று இருந்தாலும் ஒற்றுமை என்பது வேற்றுமையைக் கடந்து நின்றது. ஒருத்தருக்கு வலி என்றால் குடும்பத்திலுள்ள‌ அத்தனை பேரும் சூழ்ந்து நின்ற காலம் அது!பெரியவர்களுக்கு மனதாலும் உட‌லும் மரியாதை கொடுத்த அந்த நாட்கள் இனி வருமா? உடல்நலமில்லாதவரை ஒருவர் பார்த்துக்கொண்டாரென்றால் இன்னொருவர் வீட்டுப்பொறுப்புகளை கவனமாக பார்த்துக்கொள்வார். மற்றொருவர் குழந்தைகளைப்பார்த்துப் பார்த்து கவனித்துக்கொள்வார். குடும்பம் என்று இழை அறுந்து விடாமல் அன்று எல்லோரும் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் இன்றோ?

சுய கெளரவம் பார்ப்பதையும் வரட்டுத்தனமான பிடிவாதத்தையும் விடாமல் பிடித்துக்கொன்டு பெரியவர்கள் செய்யும் அட்டகாசத்தால் பாசமுள்ள மகன்கள் ஒரு புறம் தவிக்க, மறுபுறம் பாசமும் மனசாட்சியும் அற்றுப்போன மகன்களால் பெற்றவர்கள் பரிதவிக்க, இதற்கு எப்போது விடிவு காலம் வரும்? 

Monday 7 November 2016

முடக்கத்தான் வெங்காய தோசை!!

முடக்கத்தான் கீரையைப்பற்றி அனைவரும் அறிந்திருக்கிறோம். பொதுவாய் மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை அதற்கிருக்கிறது என்பது தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.





கை கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதனால் இக்கீரைக்கு முடக்கு + அற்றான் = முடக்கற்றான் என்ற காரணப் பெயர் வந்தது.

ஆனால் முடக்கத்தான் கீரை எப்படியெல்லாம் பயன்படுகிறது நமக்கு என்பதை அறிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

பொதுவாய் நாம் ரொம்ப நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது இரத்தம் அப்படியே சிறுநீரையும் எடுத்துக்கொன்டு உடலின் எல்லா இடங்களுக்கும் செல்கிறது. நம் மூட்டுக்கள் அசையுமிடத்தில் சிறுநீரிலுள்ள யூரிக் ஆசிட் க்ரிஸ்டல்ஸ் அப்படியே படிந்து போய்விடுகிறது. இந்த வேலை நிறைய நாட்கள் தொடர்ந்து நடக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக நம் மூட்டுக்கள் பாதிப்படைகின்றன. நாம் மூட்டுக்களை அசைக்கும்போது படிப்படியாக வலி அதிகரிக்கிறது. முடக்கத்தான் கீரையிலுள்ள தாலைட்ஸ் நம் மூட்டுக்களில் படர்ந்திருக்கும் யூரிக் அமிலத்தைக் கரைத்து அதை அபப்டியே சிறுநீரகத்திற்கு எடுத்துச் சென்று விடுகிறது. அவ்வாறு சிறுநீர் வெளியேறும்போது பொட்டாசியம், சோடியம் ஆகியவற்றை அப்படியே நம் உடலில் விட்டு விடுவதால் நமக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் முடக்கத்தான் கீரை ஒரு பெரிய மாற்றத்தை நம் உடலில் செய்து பாதுகாக்கிறது. மேலும் ஒரு கைப்பிடி இலையால் வாய்வு, மூச்சுப் பிடிப்பு, மூலம், கபம் சம்பந்தமான இருமல், மலச்சிக்கல் ஆகிய நோய்களும் சரியாகும். முடக்கத்தான் சூப் தொடர்ந்து சாப்பிடும்போது நம் வயிற்றில் சேகரமாகி தங்கியிருக்கும் வாயு வெளியேறுகிறது. வயிறு லேசாவதை நாம் உண‌ர முடியும்.




இந்த முடக்கத்தான் கீரையை நாம் துவையல், சூப், தோசை செய்து சாப்பிடலாம். இந்தக்கீரையை அதிகம் கொதிக்க வைத்தால் அதன் சத்துக்கள் அழிந்து விடும். சூப் செய்தாலும் கொதி வரும்போது தீயை அணைத்து விட வேண்டும்.

முடக்கத்தான் தோசை பலமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. மிகவும் சுவையான முடக்கற்றான் தோசை தயாரிக்கும் விதம் பற்றி இப்போது சொல்லப்போகிறேன். அவசியம் செய்து பாருங்கள். இதற்கு தக்காளி சட்னி அருமையானதொரு பக்கத்துணை!

முடக்கத்தான் வெங்காய தோசை:





தேவையானவை:

பச்சரிசி 1 கப்
இட்லி அரிசி 1 கப்
உளுந்து கால் கப்
துவரம்பருப்பு 1 மேசைக்கரண்டி
வெந்தயம் அரை ஸ்பூன்
நன்கு கழுவி சுத்தம் செய்து அரிந்த முடக்கத்தான் கீரை 2 கப்
தேவையான உப்பு
பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் 1 கப்
பொடியாக அரிந்த கொத்தமல்லி இலை 2 மேசைக்கரண்டி

செய்முறை:

அரிசி வகைகளையும் துவரம்பருப்பு, உளுந்து, வெந்தயம் அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்து மையாக அரைக்கவும்.
பிறகு கீரையையும் சேர்த்து அரைக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கரைத்து இட்லிக்கு பொங்க வைப்பது போல ஏழெட்டு மணி நேரம் பொங்க வைத்து உபயோகிக்கவும்.
தோசை சுடுகையில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து தோசை வழக்கம்போல சுடவும்.