Sunday, 22 February 2015

தளம் ஒன்று, நிகழ்வுகள் மூன்று!

இங்கே தளம் என்பது மரணம்.

வாழ்க்கையில் நாம் அனைவருமே நமக்கு நெருங்கியவர்களுக்கோ, அல்லது நம் உறவினர்களுக்கோ எதிர்பாராத வகையில் மரணம் வந்து தாக்கியதை இதுவரையில் பலமுறை பார்த்திருப்போம்! சில அளவிடமுடியாத வலியையும் துக்கத்தையும் கொடுத்திருக்கும். சில நம்ப முடியாத அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். சிலர் மரணத்தின் பிடியிலிருந்து கடைசி விநாடியில் மீண்டு வந்திருப்பார்கள். அந்த மாதிரியான நிகழ்வுகளை நானும் சமீபத்தில் சந்தித்தேன். அவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு ஆச்சரியமான நிகழ்வு 20 நாட்களுக்கு முன்னால் நடந்தது. அதற்கு முன் 25 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஷார்ஜாவில் எங்கள் உணவகத்தில் தொடர்ந்து சாப்பிடுப‌வர் இவர். ஒரு நாள் அவருக்குப் புதிதாய்ப் பிறந்த குழந்தையின் புகைப்படங்கள் தபாலில் வந்திருக்கிறது. சந்தோஷத்துடன் அந்தப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு துறைமுகத்தில் வேலை செய்யும் தன் சகோதரரிடம் காண்பிக்க பறந்தோடியிருக்கிறார். போன வேகத்தில் ஆர்வமாக படியேறும்போது மேலிருந்து கீழே வேகமாக வந்த கிரேனை கவனிக்கவில்லை. வேகமாக வந்த கிரேன் அவரின் தலையின் ஒருபகுதியை சீவி விட்டுத்தான் நின்றது. பீச்சியடித்த இரத்தத்தை சிலர் வாளியில் பிடித்தார்கள். ஒருவாறு தலையில் பெரிய கட்டு போட்டு, மயங்கியிருந்த அவரை தூக்கிக்கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார்கள். உயிருக்கு ஆபத்தான நிலை என்பதுடன் சிக்கலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையிலிருந்ததால் அவரை ஷார்ஜாவிலிருந்து 160 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருக்கும் அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கருகிலுள்ள‌ ராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள்.  அவர் பிழைப்பது மிக சந்தேகமான நிலையில் அவருக்காக யார் யாரோ பிரார்த்தனை செய்தார்கள். முன் பின் அறியாத ஒருவருக்காக பல பேர் பிரார்த்தனை செய்ததை அப்போது தான் முதன் முதலாகப் பார்த்தேன். மனதளவில் நெகிழ்ந்து போயிருந்த‌ பலர் அத்தனை தூரம் சென்று மருத்துவ மனையில் அவரைப்போய் பார்த்தனர். அத்தனை பேரும் நம்ப முடியாத அளவில் அவர் உயிரோடு பிழைத்து எழுந்தார் ஒரு நாள்.
தலையில் அந்த அளவிற்கு அடிபட்டிருந்ததால் காலை மட்டும் அது பாதித்திருந்தது. சற்று விந்தி விந்தி நடந்தவாறே மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். சில நாட்களில் அவர் தமிழகத்திற்குச் சென்று விட்டதாகச் சொன்னார்கள்.

20 நாட்களுக்கு முன் எங்கள் நிலம் சம்பந்தமான விற்பனைக்காக பேசுவத‌ற்கு பக்கத்து ஊரிலிருந்து ஒருவர் வந்திருந்தார். அவர் கூடவே அவருடைய சொந்தக்காரர்கள். என் கணவரும் நானும் அப்போது தான் வெளியே போய் விட்டு வந்து இறங்கினோம். வீட்டுக்கு வெளியே காத்திருந்தவர்களை  வீட்டுக்குள் அழைத்ததும் அதிலிருந்த ஒருத்தர் ' ஸார், நீங்கள் ஷார்ஜா முதலாளியாயிற்றே!' என்றார்.  அப்புறம் தான் தெரிந்தது, அவர் தான் தலையில் அடிபட்டு பல நாட்கள் உயிருக்குப்போராடி பிழைத்தவர் என்பது! நாங்கள் இருவருமே அசந்து போய் விட்டோம்!   யாரை, எப்போது , எதற்காக, எங்கே சந்திக்கப்போகிறோம் என்பது தான் வாழ்க்கையின் புரியாத புதிர். 25 வருடங்களுக்குப்பின் அவரை எங்கள் வீட்டிலேயே சந்தித்தது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது!!

அடுத்த நிகழ்வு 15 நாட்களுக்கு முன் நடந்தது. எங்கள் வீட்டிற்கு சில தெருக்கள் தள்ளி வசித்து வந்த மருத்துவர் ஒருவர் அருகிலுள்ள திருச்சி செல்லும்போதெல்லாம் காரில் செல்லாமல் பஸ்ஸில் போவதை வழக்கமாக வைத்திருந்தார். இரு வருடங்களுக்கு முன் ஒரு நாள்  திருச்சியிலிருந்து திரும்பி வரும்போது இவர் கடைசி இருக்கையில் அமர்ந்து வந்திருக்கிறார்.  ஒரு ஸ்பீட் ப்ரேக்கில் வண்டி ஏறி இறங்கியபோது இவர் அப்படியே படிகளில் விழுந்து உருண்டு கீழே விழுந்து விட்டார். அவரை உடனேயே மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்று சோதித்ததில் உட்காயங்கள் ஏதுமில்லை என்றும் காலில் மட்டுமே இலேசான எலும்பு முறிவு என்பதையும் கண்டு பிடித்தார்கள். மறுபடியும் 15 நாட்களுக்கு முன் அதே போல பஸ்ஸில் திரும்ப வரும்போது கடைசி இருக்கையில் அமர்ந்திருக்கிறார். மீண்டும் அதே ஸ்பீட் ப்ரேக்கிங்கில் ஏறி இற‌ங்கும்போது அதே போல விழுந்து உருண்டு கீழே விழுந்து விட்டார். ஆனால் இந்த முறை தலையில் பலமாக அடிபட்டு, மருத்துவமனியில் சேர்க்கும்போதே அவர் இறந்து விட்டதாக அறிவித்து விட்டார்கள். எத்தனை விசித்திரமான மரணம் இது! ஏன் அவருக்கு அப்படி நிகழ்ந்தது? இது தான் விதி என்பதா? புரியவில்லை!

சென்ற வாரம் எங்கள் நெருங்கிய உறவினர் சிறுநீரக செயலிழப்புடன் முற்றிய மஞ்சள் காமாலையும் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். டயாலிஸிஸ் செய்து கொண்டிருந்த நிலையிலும் மருத்துவர் நம்பிக்கை இழக்கும்படியாக எதுவும் சொல்லவில்லை. அவர் சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையில் சொத்து சம்பந்தமாக பல வருடங்கள் பேச்சு வார்த்தை முறித்திருந்த அவரின் மூத்த மகன் நாங்கள் யாரும் அருகில் இல்லாத சமயத்தில் வந்து சொத்து சம்பந்தமாக பேசி கடுமையான வாத்தைகளை உபயோகித்திருக்கிறார். அதுவரை அவருக்கு இதயக்கோளாறு எதுவுமில்லை. அவர் எதுவும் அதிகம் பேச முடியாத நிலையில் மகனின் கடுமையான வார்த்தைகள் அவரை எப்படி பாதித்ததோ தெரியவில்லை, மறு நாளிலிருந்து அவர் பேசுவதை நிறுத்தி விட்டார். உணவு எதுவும் உள்ளே போகவில்லை. இரவு அவரின் நாடித்துடிப்பு குறைந்து மறு நாள் அவர் மறைந்து விட்டார். இந்த இறப்பு மனதை மிகவும் பாதித்து விட்டது. பல வருடங்கள் கழித்து முதல் குழந்தை பிறந்த போது அந்த மகனை எப்படியெல்லாம் சீராட்டி வளர்த்தோம் என்று அவர் எங்களிடம் கூறியிருக்கிறார். ஆசை ஆசையாக வளர்த்த பிள்ளை பெற்ற‌வர் நெஞ்சில் கல்லைப்போட்டு அவரை மனரீதியாகக் கொன்றதை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை!

17 comments:

துரை செல்வராஜூ said...

நம்மால் விடை காண முடியாத - விளங்கிக் கொள்ள இயலாத விஷயங்கள் பல்லாயிரம்!..

இன்றைய பதிவு சிந்திக்கச் செய்தது.

ரூபன் said...

வணக்கம்
சொல்லிய நிகழ்வுகளை படிக்கும் போது. மனம் கனத்து விட்டது..ஒருவரை 25 வருடங்களின் பின் சந்திப்பது மகிழ்ச்சிதான்...பகிர்வுக்கு நன்றித.ம 1

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

RAMVI said...

முதல் இரண்டு நிகழ்வுகளும் மிகவும் ஆச்சிரியமான நிகழ்வுகள்.

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.

மூன்றாவது மிகவும் வருந்தத்தக்கது.

ஸ்ரீராம். said...

நம்பமுடியாத நிகழ்வுகள். விதி ஆச்சர்யகரமானது. மூன்றாவது சம்பவம் வேதனையைத் தந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

நிகழ்வுகளை காலம் எப்படித்தான் இணைக்கிறது...!

கோமதி அரசு said...

முதல் நிகழ்வு பிரார்த்தனையின் அற்புதத்தைச் சொல்கிறது.

அடுத்த நிகழ்வு அதேமனிதரை சந்திக்க வைத்த அதியசத்தைச் சொல்கிறது.
மூன்றாவது நிகழவு மரணபடுக்கையில் இருக்கும் போது இரக்கமில்லாமல் கடுமையாக பேசிய மகனின் கொடுஞ்செயலை சொல்லி மனதை கனக்க வைக்கிறது.

Dr B Jambulingam said...

நம்ப முடியாத, ஆனால் நிகழ்கின்ற இவை போன்ற நிகழ்வுகள் நம்மை அதிகம் பாதித்துவிடுகின்றன.

ஹுஸைனம்மா said...

எந்தப் பக்கம் திரும்பினாலும், புதுவிதமாக ஒரு மரணச் செய்தியாவது வந்து தாக்கிவிடுகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

ஆச்சரியம்தான்....வாழ்க்கையே ஆச்சரியங்கள் பல நிறைந்ததுதானே!

இறுதியாகச் சொல்லிய மரணம் மிகவும் வேதனைக்குரியது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி?!!!?! திருவள்ளுவர் இருந்திருந்தால் ஒருவேளை மாற்றி எழுதியிருப்பாரோ?!

மனோ சாமிநாதன் said...

உண்மை தான்! நீங்கள் சொல்வது போல நம்மால் புரிந்து கொள்ள‌ முடியாத விஷயங்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன என்று தான் நான் அந்த மூன்றாவது மரணத்தின் போது நினைத்தேன். வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பார்ந்த நன்றி ராம்வி!

மனோ சாமிநாதன் said...

சில விஷயங்கள் நம்ப முடியாதவை தான் ஸ்ரீராம்! மூன்றாவது சம்பவம் எங்களுக்கு இன்னும் வேதனையைத்தான் தந்து கொண்டிருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் கூறிய மாதிரி வாழ்க்கையே ஆச்சரியங்களும் வேதனைகளும் நிறைந்தது தான் சகோதரர் துளசிதரன்! இருந்தாலும் மூன்றாவது சம்பவம் தந்த வேதனை இன்னும் நீங்கவில்லை! பணம் என்பது எப்படியெல்லாம் மனித உறவுகளையும் உணர்வுகளையும் அழித்து விடுகிறது!