Monday, 9 February 2015

கங்கைகொண்ட சோழபுரம்!!

அகிலன் அவர்கள் எழுதிய 'வேங்கையின் மைந்தன்' நாவல் அப்போதெல்லாம் [ நான் சொல்வது 40 வருடங்களுக்கு முன் ] இளைஞர்களின் ஆதர்ச நாவலாக இருந்தது.  கொடும்பாளூர் இள‌வரசன் இளங்கோ கதையின் நாயகனாக இருந்த போதிலும் உண்மையிலேயே கதையின் நாய‌கர் ராஜேந்திர சோழர் தான். அவரின் கம்பீரமும் ராஜதந்திரமும் கதை நெடுக நம்மை வ‌சீகரிக்கும். அந்த ராஜேந்திர சோழர் கட்டுவித்த கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலுக்கு சமீபத்தில் நான் சென்றேன்.  சுற்றுச் சுவர்களின் சிற்பங்களின் பேரழகு பிரமிக்க வைத்தது. கோவில் பற்றியும் ஊரைப்பற்றியும் அறிந்த அத்தனையும் நினைவலைகளில் ஆர்ப்பரித்து எழுந்தன!


தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் கங்கைகொண்ட சோழபுரம். குடந்தைக்கு வடக்கே 30 கிலோமீட்டர் சென்றால் இந்த சிறு கிராமத்தை அடையலாம். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. இவ்வூர் புலவர்களால் கங்காபுரி, கங்கைமாநகர், கங்காபுரம் என்றெல்லாம் புகழப்பட்டது. இது திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.இவ்வூரை நிறுவ சுண்ணாம்பினைத் தயாரித்த இடம் சுண்ணாம்புகுழி என்றும், கோட்டை இருந்த பகுதி (உள்கோட்டை) உக்கோட்டை என்றும், ஆயுதச்சாலைகள் இருந்த இடம் ஆயிரக்கலம் என்றும் இன்றும் வழங்கப்படுகின்றன.


ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் இங்கு வாழ்ந்திருந்தார்கள். கலிங்கத்துப்பரணி இங்கிருந்து பாடப்பட்டது. விக்ரமசோழன் உலா, இரண்டாம் குலோத்துங்கன் உலா முதலியனவும் பாடப்பட்டன. சேக்கிழார் பெரிய புராணம் பாடுவதற்குத் தூண்டுகோலாக இருந்த இடம் இது.


கங்கை கொண்ட சோழபுரம் இராசேந்திர சோழர் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயரும் இராஜேந்திர சோழனுக்கு அமைந்தது. கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக  இவ்வூர் அருகே சோழகங்கம் என்ற பேரேரி அமைக்கப்பட்டது.


தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான் ராஜேந்திர சோழன். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான்.


கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது. கோவிலை கட்டுவதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது.


கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் சிங்கத்தின் சிலையை வடித்தான்.


பெரிய வாயிலுக்கு (கிழக்கு வாயில்) நேராகப் பெரிய நந்தியுள்ளது. படிகள் வழியே மேலேறி உட்சென்றால் பிரம்மாண்டபமான மூலமூர்த்தியைத் தரிசிக்கலாம். சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். இருபுறமும் வாயிலில் கருங்கல்லாலான துவாபாலகர்கள் காட்சியளிக்கின்றனர்.


உள்ளே நுழைந்து செல்லும்போது வலப்பால் நவக்கிரக பீடமுள்ளது. இங்குள்ள நவக்கிரக அமைப்பு விந்தையானது. ஒன்பது கிரகங்களும் ஒரே கல்லில் வானசாஸ்திர முறைப்படி செதுக்கப்பட்டுள்ளன.
பீடம் தாமரை வடிவம். நடுவில் சூரியன். சுற்றிலும் ஏழு கிரகங்கள் இதழ்கள் போன்ற அமைப்பில் உள்ளன.


 இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது.


 தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது.


கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இங்கு சரஸ்வதி, லட்சுமி இருவரும் தியானக்கோலத்தில் இருப்பதால், இவர்கள் "ஞான சரஸ்வதி', "ஞான லட்சுமி' என அழைக்கப்படுகின்றனர்.


கோவிலைச்சுற்றிய பிரகாரத்தில் அமைதி நிலவுகிற‌து. சுவர்கள் முழுவதும் பிரமிகக் வைக்கும் அழகில் செதுக்கிய சிற்பங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.  தஞ்சையைப்போன்ற கம்பீரமும்  பிரம்மாண்டமும் இங்கில்லை. ஆனால் அமைதியும் அழகுமாய் கங்கை கொண்ட சோழீச்சரம் நம்மை வசீகரிக்கின்றது!!

43 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கோயிலும் சிற்பங்களும் வரலாறுகளும் மிக அருமையாகக் கொடுத்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

துளசி கோபால் said...

அருமை! இன்னும் போக சந்தர்ப்பம் அமையலை. போகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விடுகின்றன படங்கள்!

Dr B Jambulingam said...

தமிழகத்தில் தஞ்சாவூர் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், திருபுவனம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய நான்கு கோயில்களும் சற்றொப்ப ஒரே மாதிரியான கலை வடிவைக் கொண்டவையாகும். கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பல முறை சென்றுள்ளேன். தாங்கள் மறுபடியும் அழைத்துச்சென்றது மனதிற்கு நிறைவைத் தருகிறது.

துரை செல்வராஜூ said...

பிரம்மாண்டமான வரலாற்றை இனிய தமிழில் கூறியவாறு - எங்களையும் கோயிலுக்குள் அழைத்துச் சென்றிருக்கின்றீர்கள்..

அழகான படங்கள் கண்களைக் கவர்கின்றன. வாழ்க நலம்!..

viyasan said...

தமிழர்களின் இந்த விலைமதிக்க முடியாத சிற்ப, கட்டிடக் கலைப் பொக்கிசத்தையும், அதைக் கட்டிய மாவீரனையும், தமிழர் மத்தியில் வாழ்ந்து கொண்டே சிலர் இழிவு படுத்துகிறார்கள் என்பதை நினைக்கும் போது, நெஞ்சு பொறுக்குதில்லையே!

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு முறை சென்றுள்ளோம்... இன்று இன்னொரு முறை...

Anuradha Prem said...

ஆகா ......அனைத்து படங்களும் அழகு .......செல்ல வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது ..........

ஸ்ரீராம். said...

இங்கு சென்று விட்டு, திரும்பி வரவே மனமில்லை. அவ்வளவு அழகான இடம்.

priyasaki said...

படங்கள் அனைத்தும் அழகு. வரலாற்றையும் தெரிந்துகொண்டேன். கோவிலை சென்று பார்க்கும் ஆவலை
யும் ஏற்படுத்திவிட்டீர்கள்.நன்றி மனோக்கா

கரந்தை ஜெயக்குமார் said...

சில மாதங்களுக்கு முன் சென்று வந்த கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு, இன்று தங்களால் மீண்டும் சென்று வந்த உணர்வு
அருமை சகோதேரியாரே
படங்கள் ஒவ்வொன்றும் அருமை
நன்றி சகோதரியாரே

ரூபன் said...

வணக்கம்
கோயிலின் சிறப்பு பற்றி மிக அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் படங்கள் எல்லாம் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சீனு said...

அரிதாக இரண்டு முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தது.. இரண்டு முறையும் மூன்று மணி நேரங்களுக்கு மேல் இந்தக் கோவிலில் இருந்தோம்...

நந்தியின் மீது பரவி லிங்கத்தின் மீது எதிரொலிக்கும் படி கட்டபட்டிருக்கும் கட்டிடக் கலை நம் வல்லுனர்களின் திறமைக்கு சான்று...

அட்டகாசமான தகவல்கள்...

Ranjani Narayanan said...

இன்றைய வலைச்சரத்தை நீங்கள் அலங்கரிக்கிறீர்கள். நேரம் கிடைக்கும்போது வாருங்கள்.
http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_15.html

Anonymous said...

கோயிலும் சிற்பங்களும் வரலாறுகளும் மிக அருமை.
பகிர்வுக்கு நன்றி
Vetha.Langathilakam

Kalayarassy G said...

பல ஆண்டுகளாகச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டும், நிறைவேறாமல் உள்ளது. அழகான படங்களோடு கோவில் பற்றிய விபரங்கள் அருமை. பதிவுக்கு மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி துளசி!

KILLERGEE Devakottai said...


எனது கருத்துரை என்னவாயிற்று ?

Saratha J said...

படங்கள் அணைத்தும் அருமை. கோவிலின் வரலாற்றை அழகா சொல்லியிருக்கீங்க. எனது வலைப்பூவுக்கு வந்து ( சில்லி சப்பாத்தி) கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி அக்கா. நேரம் கிடைக்கும் போது மீண்டும் வாருங்கள் அக்கா.

Jayanthy Kumaran said...

fantastic post Mano...thanks for sharing..

வெங்கட் நாகராஜ் said...

இதுவரை இங்கே செல்லும் வாய்ப்பு அமையவில்லை. அமைத்துக் கொள்ள வேண்டும் - அடுத்த பயணத்தில்......

படங்கள் மிக அருமை.

Menaga Sathia said...

வரலாற்று சிறப்புமிக்க கங்கை கண்ட சோழபுரத்தை தெரிந்துக் கொண்டேன்,படங்கள் அழகு !!

yathavan nambi said...

சகோதரி
நல்வணக்கம்!
தங்களது இந்த பதிவு இன்றைய
"வலைச்சரம்" பகுதியில்
சகோதரி மேனகா சத்யா அவர்களால்,
சிறந்த பதிவு என சிறப்பு தேர்வாகி உள்ளது.
வாழ்த்துக்கள்

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
( சகோதரி "குழலின்னிசை" உறுப்பினராக இணைய வேண்டுகிறேன். நன்றி)

தனிமரம் said...

இன்னும் போகும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அழகான விபரிப்புக்கும் படப்பகிர்வுக்கும் நன்றிகள்.

மனோ சாமிநாதன் said...

திருபுவனம் கோவிலும் மற்ற மூன்று கோவில்களின் சாயலைக்கொண்டிருக்கும் என்று நீங்கள் கூறியுள்ள‌ தகவல் எனக்குப் புதியது சகோதரர் ஜம்புலிங்கம்! அடுத்த முறை திருபுவனம் கோவில் சென்று பார்க்க வேண்டும்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

உங்கள் கருத்துரையைப் ப‌டித்தேன் வியாசன்! எந்த ஒரு நல்ல செயலுக்கும் அல்லது அழகான விஷயத்திற்கும் எதிற்மறை தாக்குதலும் விளக்கங்களும் கொடுக்கவென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களை புறந்தள்ளுங்கள்! அவர்களின் செயலை நினைத்துப்பார்ப்பதே தேவையற்ற விஷயமாகும்!
வருகைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி அனுராதா ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பதிவை ரசித்ததற்கும் இனிய நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சீனு!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வேதா!

மனோ சாமிநாதன் said...

இதற்கு முன்பே ஒரு முறை பின்னூட்டம் அனுப்பியிருந்தீர்களா கில்லர்ஜி? எனக்கு வந்து சேரவில்லையே?

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் இனிய வருகைக்கும் அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் இன்னும் கங்கை கொண்ட சோழபுரம் பார்க்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமான தகவல் வெங்கட்! அவசியம் ஒரு முறை விரைவில் சென்று பார்த்து ரசியுங்கள்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

என் வலைத்தளம் வலைச்சரத்தில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் சொன்னதற்கு அன்பு நன்றி வேலு!

மனோ சாமிநாதன் said...

அவசியம் விரைவில் கங்கை கொண்ட சோழபுரம் சென்று பார்த்து ரசியுங்கள் தனிமரம்! முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice compliment Jayanthi kumaran!

BALA 07 said...

சிவாய நம ஓம்