Sunday, 26 November 2017

சிதம்பர விலாஸ்!!!

கடந்த மாத இறுதியில் வந்த எங்களின் 43ஆவது திருமண நாளுக்கு, எங்காவது வெளி நாட்டிற்கோ அல்லது வெளிமாநிலத்திற்கோ சுற்றுலா செல்லும்படி என் மகனின் வற்புறுத்தல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவ்வளவு தொலை தூரம் செல்ல விருப்பமில்லாததால் தமிழ் நாட்டிலேயே தேனி அல்லது ஏற்காடு சென்று வரலாமா என்று யோசித்தோம். தஞ்சையிலிருந்து என்று பார்த்தால் அதுவும் தொலை தூரமே. மேலும் தொடர்ந்து ஊரெல்லாம் பரவிக்கொண்டிருந்த டெங்கு ஜுரம், அடர் மழை எல்லாம் மிகவும் யோசிக்க வைத்தது.



யதேச்சையாக  காரைக்குடியில் தங்குவதற்கு சென்ற வருடம் ஹோட்டல்களையெல்லாம் அலசிக்கொண்டிருந்த போது கலை உணர்வும் அழகுமாய் தோற்றம் தந்த ' சிதம்பர விலாஸ்' என்ற மூன்று நட்சத்திர் ஹோட்டல் ஞாபகம் வந்தது. அங்கு சென்று தங்கி சுற்றியுள்ள சில இடங்களுக்கு சுற்றுலா சென்று வரலாம் என்று முடிவு செய்தோம்.

பழைமையான, அழகான இந்த ஹோட்டலில் தங்கியிருந்தது இனிமையான அனுபவமாக இருந்தது. சின்னஞ்சிறு கிராமத்தில் நடுவில் அமைந்திருப்பதால் பெரிய கடைகள் எதுவும் அருகில் கிடையாது. 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ' கானாடு காத்தான்' என்ற சிறு நகரத்திற்குச் செல்ல வேண்டும்.



முகப்புத்தோற்றம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடியாப்பட்டி எனும் மிகச்சிறிய கிராமத்தின், மிகப்பெரிய அடையாளம். ஆம், செட்டிநாட்டுக்கேயுரிய, அரண்மனையையொத்த வீடுகளில் ஒன்றுதான்... இந்த சிதம்பர விலாஸ்! ஒரு காலத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்த இந்த வீடு, இன்றைக்கு நீங்களும் வசிக்கும் ஒரு ஹோட்டலாக வடிவெடுத்து நிற்கிறது!

வேலைப்பாடுகள் நிறைந்த கதவு
1900 முதல் 1907 வரை மொத்தம் ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டு, ஒரு ஏக்கர் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது இந்த வீடு. அப்போதே ஏழு லட்ச ரூபாய் செலவானதாம் இதைக் கட்டி முடிக்க! வீட்டில் இருக்கும் கதவு, ஜன்னல், நாற்காலி உள்ளிட்ட அனைத்து மரவேலைப்பாடுகளுக்கும் பர்மாவிலிருந்து மரங்களை வரவழைத்துச் செய்துள்ளனர். கண்ணாடிகள் பெல்ஜியத்திலிருந்தும், டைல்ஸ்கள் இத்தாலியிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. வீட்டில் ஓர் ஆணிகூட அடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அறைக்கு வெளியே பழங்காலத்து இருக்கைகள்!!
நூறாண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்த வீட்டின் தற்போதைய உரிமையாளர்... கிருஷ்ணப்ப செட்டியார். அதன் பழமை மாறாமல், அதேசமயம் நவீனவசதிகள் பலவற்றையும் தன்னுள் சேர்த்துக்கொண்டிருக்கும் இந்த வீடு, தற்போது 'ஹோட்டல் சங்கம்’ குழுமம் நடத்தி வரும் ஹோட்டல்களில் ஒன்றாக, சுற்றுலா பயணிகளை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. இப்படி ஹோட்டலாக வடிவெடுத்தாலும், ஒரு வீட்டுக்குரிய பாதுகாப்பு தரும் அம்சங்கள் அனைத்தும் மாறாமல்இருப்பது... ஆச்சர்யம். வீட்டில் ஒவ்வோர் இடத்துக்கும்... ஒவ்வோர் பெயர் வைத்துள்ளனர்.



முகப்பு:

ஹோட்டலின் உள்ளே நுழைந்த உடன் வரும் இடம். கல்லாப் பெட்டியுடன் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அந்தக்கால செட்டியார்கள் கணக்கு பார்க்க பயன்படுத்திய டெஸ்க் வடிவ கல்லாப்பெட்டியை அப்படியே வைத்திருக்கிறார்கள்.

முற்றத்தை மூடியிருக்கும் கம்பிகளின் அழகு!
வளவு:

முகப்பை தாண்டி வந்தால் வருகிறது வளவு. நடுவில் முற்றம்... அதனை சுற்றி அறைகள் இருக்கின்றன.



அவற்றில் எல்லாம் பாரம்பரிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இன்று, விசிட்டர்களின் ரூமாக இருக்கும் இந்த வளவு, அந்தக் காலத்தில் திருமணமான ஆண்கள் ஒவ்வொரு வருக்கும் தனித்தனி அறை என்று பிரித்துக் கொடுக்கப்பட்ட இடம்.

பொம்ம கொட்டகை:



அந்தக் காலத்தில் விருந்தினர்கள் வந்தால் புழங்கும் இடமாகவும், மதிய உணவு உண்ணும் இடமாகவும், பூஜை வழிபாடு மற்றும் கொலு வைக்கும் இடமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்று, லன்ச் ஹாலில் ஒன்றாக இது மாறியிருக்கிறது. கலைப் படைப்புகளை ரசித்துக்கொண்டே உணவு உண்ணலாம்.

விசிறி ஹால்:



அந்தக் காலத்தில் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட விஸ்தாரமான ஹாலாக இருந்த இந்த இடத்தில், சுவர்களில் அழகான சாண்ட்லியர் பொருத்தப்பட்டிருக்கிறது. அந்தத் தன்மையோடு தற்போது வாழை இலை போட்டு பரிமாறப்படும் டைனிங் ஹாலாகவும் இது உருமாற்றப்பட்டிருக்கிறது.

மதிய உணவு எங்கள் இருவருக்கும் 1500 ஆனது. வேறு வித்தியாசமான சாப்பாடென்றால் ' கானாடு காத்தான்' அல்லது புதுக்கோட்டைக்குத்தான் செல்ல வேண்டும்.



டபுள் ரூம், ட்வின் ரூம், சூட் ரூம் என மூன்று ரகங்களில், இங்கு 25 ரூம்கள் உள்ளன. பாரம்பரிய உணவுகள், கூட்ட அரங்கு, நீச்சல்குளம், விளையாட்டு அரங்கு என அனைத்து வசதிகளும் இங்குண்டு. வெளிநாட்டினர் அதிகமாக இங்கே வருகின்றனர்.



அவர்களுக்கெல்லாம்... பாரம்பரிய உணவு வகைகளை சமைக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள். கோலம் போடுவது, பூ கட்டுவது போன்றவற்றையும் கற்றுத்தருகிறார்கள். கூடவே... அருகில்இருக்கும் திருமயம் கோட்டை, சித்தன்னவாசல் குகைகள் என்றெல்லாம் அழைத்துச் சென்று காண்பிக்கிறார்கள்.
இந்த ஓட்டலில் அறைக் கட்டணங்கள் 7,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை .

25 comments:

ராமலக்ஷ்மி said...

படங்களும் விரிவான விவரங்களும் அருமை. செல்ல விரும்புகிறவர்களுக்குப் பயன்படும்.

KILLERGEE Devakottai said...

எனக்கு வியப்பான தகவல்கள்
ஆனால் எங்கள் தேவகோட்டையில் உள்ள வீடுகளும் இப்படித்தான் இருக்கும்.

துரை செல்வராஜூ said...

அழகான படங்கள்..
விவரங்கள் அருமை..
( தலைப்பில் எழுத்துப் பிழை.. திருத்தி விடுங்களேன்..)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிதம்பர விலாஸ் செல்லும் ஆசை வந்துவிட்டது.

ஸ்ரீராம். said...

43 வது திருமண நாள் வாழ்த்துகள் மேடம்.

அழகு, அழகு, அழகோ அழகு. விவரங்கள் சுவாரஸ்யம். ரசித்தேன்..

Thulasidharan V Thillaiakathu said...

முதலில் தங்களுக்கு 43 வது திருமண நாள் வாழ்த்துகள் சகோதரி/மனோ அக்கா!!!

துளசி: புதிய தகவல் மற்றும் வியப்பு அழகு படங்கள்...ஸ்வாரஸ்யமான தகவல்கள்

கீதா: அக்கா இந்த சிதம்பரவிலாஸ் பற்றி நெட்டில் பார்த்தேன். என்ன அழகு!! செட்டிநாட்டு கலைநயம் மற்றும் பாரம்பரியம் அப்படியே இருக்கும் இடம். பெரும்பாலும் படங்களில் வரும் செட்டிநாட்டு வீடுகளும் இபப்டித்தான் இருக்கின்றன. பல படங்களில் வந்திருக்கின்றனவே...
உங்கள் படங்களும் மிக அழகு...

Anuprem said...

ஆஹா...

அருமையான ..அழகான இடம்...

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

முதலில் திருமணநாள் வாழ்த்துக்கள் மனோ அக்கா.

அந்தக் காலத்து நாச்சார் வீட்டு வடிவமைப்பாக இருக்கு. வெளி அழகு பார்க்க பார்க்க ஆசையாக இருக்கு.. என்ன ஒரு கலை நயம்.. நல்ல அழகான அளவான ஹோட்டல்தான்.

நிலாமகள் said...

43 வது திருமண நாள் கொண்டாட்டம் அருமை. எங்கள் வாழ்த்துக்கள். மானசீகமாக ஆசி வேண்டுகிறேன்.

தகவல்கள் அனைத்தும் வாய் பிளக்க வைத்தன. ஒரு ஆணி கூட இல்லாத சுவர் வெகு அழகு. நாமெல்லாம் ஒரு இடம் விடாமல் ஆணி அடித்து எதையேனும் தொங்க விடுவதை குறைத்துக் கொள்ள வேண்டுமென தோன்றியது.

கரந்தை ஜெயக்குமார் said...

கட்டிடங்கள் வியப்பைத் தருகின்றன
ஒருமுறை அவசியம் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது
நன்றி சகோதரியாரே

Geetha Sambasivam said...

43 வது திருமண நாள் வாழ்த்துகள். நல்லபடியாக ரசனையுடன் கொண்டாடி இருக்கிறீர்கள். தொடர்ந்து இம்மாதிரிக் கொண்டாடி வரப் பிரார்த்தனைகள்.

Bhanumathy Venkateswaran said...

திருமண நாள் வாழ்த்துக்கள். அருமையான வீடு, அதை அழகாக படம் பிடித்திருக்கிறீர்கள். இந்த வீட்டை சினிமாக்களில் பார்த்தது போல இருக்கிறது.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி! சுற்றியுள்ள அத்தனை சிறு நகரங்களிலும் இது போன்ற கலயழகு மிகுந்த வீடுகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். கானாடுகாத்தான் நகரிலும் இது போன்ற எழில் கொஞ்சும் வீடுகளைப்பார்த்தோம். தேவக்கோட்டையும் அருகில்தானே இருக்கிறது! அங்கும் இது போன்ற வீடுக‌ள் இருப்பதில் ஆச்சரியமில்லை!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் பிழை திருத்தம் சொன்னதற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை செல்வராஜ்! பிழையை உடனே சரி செய்து விட்டேன்.

மனோ சாமிநாதன் said...

அவசியம் சிதம்பர விலாஸ் சென்று தங்கி வாருங்கள் சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்களுக்காக சகோதரர் துளசிதரனுக்கும் கீதாவிற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி அநுராதா பிரேம்குமார்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி நிலாமகள்! என் மானசீக வாழ்த்துக்கள் உங்களுக்கு எப்போதுமே உண்டு!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி கீதா சாம்பசிவம்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!!